வெள்ளி, 26 செப்டம்பர், 2014

இருப்பும் இன்மையும்


சர்வோத்தமன் சடகோபனை நேரில் சந்தித்ததாக நினைவில்லை. மின் அஞ்சல் தொடர்பு மூலம் அறிமுகமானவர். கடந்த ஆறேழு ஆண்டுகளாக அவ்வப்போது மின் அஞ்சல் மூலம் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருக்கிறோம். சில சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். ஒரு குறும்படமும் எடுத்திருக்கிறார். கவிதைகள் பற்றி சில மொழிபெயர்ப்புகள் பற்றி மின் அஞ்சலில் எழுதியிருக்கிறார்.அவை எல்லாம் மகிழ்ச்சி அளித்தன. நேற்றைய மின் அஞ்சலில் அவர் எழுதியிருந்தது இது.


Hi Mr.Sukumaran,

I read the book The strange case of billy biswas. I remember you mentioning about this book in uyirmmai some years back.i think you also added  that you tried to meet him Delhi once but was not able to meet.I remembered the Growing stone short story of Albert Camus when I read this novel.When I started reading I thought may be this book is just a romantic view of tribal life.But it was not so.Arun joshi is too honest.The tone of the book also was similar to Camus tone.I liked the book very much.More than Biswas it was the helpless tone of Romi which parallels with the tone of the engineer in Growing stone that makes this novel an important one.Had you not mentioned about this book may be I would have never read this.

Thanks
Sarwothaman.

அவருடைய கடிதம் தந்த உற்சாகம் அருண்ஜோஷி பற்றிய இந்தக் கட்டுரையைப் பதிவேற்றத் தூண்டியது. உயிர்மையில் வெளிவந்த இந்தக் கட்டுரை, பின்னர் ’வெளிச்சம் தனிமையானது’ என்ற கட்டுரைத் தொகுப்பிலும் சேர்க்கப்பட்டது. அதிகம் யாரும் கவனிக்காத எழுத்தாளரான அருண்ஜோஷியைப் பற்றிய கட்டுரையையும் யாரும் அதிகம் கவனிக்கவில்லை என்ற ஆதங்கம் இருந்து வந்தது. அதைப் பொய்யாக்கி இருக்கிறார் நண்பர் சர்வோத்தமன். அதை விட முக்கியம் ஜோஷியின் நூலைத் தேடிப் படித்திருக்கிறார். எந்த வகையில் சர்வோத்தமனுக்கு நன்றி சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். 
               அருண்ஜோஷி

                

'உன் இயல்பே உன்னுடைய விதி'('Your character is your fate') - என்ற ஒற்றை வாக்கியத்தின் மூலம் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய விருப்பத்துக்குரிய எழுத்தாளரானவர் அருண்ஜோஷி.'பில்லி பிஸ்வாசின் விநோத வழக்கு' என்ற ஜோஷியின் நாவலில் வரும் இந்த வாசகம் இன்றும் பொருள் பொதிந்ததாகவே தொடர்கிறது.

இலக்கிய வேட்கை தீவிரமாக இருந்த பருவத்தில் வாசித்துத் தள்ளிய ஏராளமான புத்தகங்களில் ஆங்கிலத்தில் எழுதும் இந்தியஎழுத்தாளர்களின் ஆக்கங்களும்  இருந்தன. காகித அட்டைப் பதிப்புகளாக இந்தியப் பதிப்பகங்கள் வெளியிட்ட புனைகதைகளின் மீது உடனடி விருப்பம் விழுந்தது. ராஜாராவ், முல்க்ராஜ் ஆனந்த்,ஆர்.கே.நாராயண்,நயனதாரா சகால், கமலாமார்க்கண்டேயா, அனிதா தேசாய்.ஆர்.பி.ஜப்வாலா,குஷ்வந்த் சிங் என்று பிரபலமாக இருந்த எல்லா எழுத்தாளர்களின் ஒவ்வொரு புத்தகத்தையாவது வாசித்துப் பார்த்திருப்பேன்.இந்த வாசிப்பு பெரும்பாலும் மனச்சோர்வையே தந்தது. இந்தியத் துரைமார் களை விட,தமிழ் போன்ற தேசிய மொழிகளில் எழுதும் எழுத்தாளர்கள் ஆழமான படைப்பு களைத் தந்திருக்கிறார்கள் என்ற உண்மை பிடிபட்டபோது இந்தநூல்களிடமிருந்து விலகினேன்.இந்திய வாழ்க்கையை ஆங்கில வாசகனின் ருசிக்கேற்பப் பரிமாறுவதுதான் இந்தவகை எழுத்தின் நோக்கமென்று கருதினேன்.அந்த கருத்துக்கு மாறாகவும் படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்ற நம்பிக்கையை இரண்டு எழுத்தாளர்கள் கொடுத்தார்கள்.சஷ்தி பிரதாவும் அருண்ஜோஷியும்.இருவரும் சமகாலத்தினர்.சம வயதினர்.

சஷ்தி பிரதாவின் கதை கவிதைகளை விட அவரது சுய சரிதையான'என் கடவுள் இளமையிலேயே இறந்து போனார்' (My God died young)என்ற நூல் என்னை வெகுவாகக் கவர்ந்தது.கல்கத்தாவில் பிறந்தவர்.கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஐரோப்பிய நாடுகளுக்கு வேலைதேடிப் போய் கழிப்பறைத் துப்புரவாளர், சமையலறை பணியாளர், மது விடுதியில் ஊழியர்,தபால்காரர் என்று பல்வேறு வேலைகளைச் செய்து கடைசியில் பத்திரிகையாள ரானவர்.  இருபத்தியெட்டாம் வயதில் தன்னுடைய சரிதையை புத்தகமாக எழுதினார்.  தன்னுடைய அவமானங்கள்வலிகள்,காதல்,காமம் எல்லாவற்றையும் அப்பட்டமாக எழுதினார்.அதுவரை இந்தோ ஆங்கில ஆக்கங்களில் காண முடியாமலிருந்த வெளிப்படையான எழுத்துமுறை. அதை மேலும் ருசிகரமானதாக்குவதற்காக சஷ்தி பிரதா பயன்படுத்தியிருந்த பாலியல் சித்தரிப்புகள் - இவை வாசகனை ஈர்த்தனஅதிர்ச்சி 
யளிக்கவும் செய்தன. இவ்விரு அம்சங்கள்தாம் சஷ்தி பிரதாவை பிரபலமாக்கியவை.ஒரு வாசகனாக அந்தப் புத்தகத்தை நெருங்க என்னைத் தூண்டியவையும் இதே அம்சங்களே.

அருண்ஜோஷியின் படைப்புகளுடன் நேர்ந்த அறிமுகம் சஷ்தி பிரதாவின்  ஈர்ப்பு வட்டத்திலிருந்து என்னை வெளியே கொண்டு வந்தது. வாழ்க்கை பற்றி இந்த இரு எழுத்தாளர்களும் கொண்டிருந்த பார்வைகள் அதற்குக் காரணம் என்று இப்போது வகைப்படுத்த முடிகிறது.பிரதாவின் பார்வை மரபுநெறிகளை மீறுவதாக இருந்தது.அவரது பிற கதைமாந்தர்கள் கூட அவருடைய பொஹீமியன் அணுகுமுறையின் சாயல்களையே  கொண்டிருந்தார்கள். வாழ்வின் கேள்விகளைப் புறக்கணித்து நகர்பவர்களாக இருந்தார்கள்.

அருண்ஜோஷியின் பின்னணி பாதுகாப்பானது.இந்தியாவிலும் அமெரிக்காவிலுமாக கல்வி பெற்றார்.ஒரு தொழிலதிபராக வாழ்ந்தார். எனவே மரபெதிர்ப்பான ஒரு வாழ்க்கைமுறை இயல்பாகவே அவருடைய தேர்வாக இருக்கவில்லை.மாறாக பொருளியல் வாழ்வின் வெற்றிகள் மனிதர்களை வெறுமையாக்குவதைப் பற்றிய சிந்தனைகளைத் தேர்ந்து கொண்டார்.இந்த உலகில் மனித இருப்பின் அர்த்தம் என்ன என்ற கேள்வியால் தடுமாறும் கதை மாந்தர்கள் அவருடையவர்கள். பெரும்பாலும் அவர்கள் அந்நியமானவர்கள். மானுடச் சூழலின் அபத்தம் அவருடைய படைப்புகளின் அடியோட்டம்.'மனிதமனம் என்ற புதிரான கீழுலகை ஆராய்வதே என் விருப்பம்' என்று தனது இலக்கிய நோக்கம் பற்றி அருண்ஜோஷி குறிப்பிட்டார்.

எழுத்தின் இந்த இயல்பு சார்ந்து அருண்ஜோஷியை எக்சிஸ்டென்ஷியலிச எழுத்தாளர் என்று இனங்கண்டு கொள்வது எனக்கு உவப்பாக இருந்தது. இருத்தலியல் கோட்பாட்டின் ஆகச் சிறந்த இந்திய உதாரணம் அருண்ஜோஷி என்று இப்போதும் எண்ணுகிறேன். இந்த எண்ணம்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு தில்லி சென்றபோது அருண்ஜோஷியைச் சந்திக்கும் ஆர்வத்தைக் கிளறி விட்டது.

அது ஒரு டிசம்பர் மாதம்.சாகித்திய அக்காதெமியும் இந்திய கவிதை அமைப்பும் (Poetry Society of India) இணைந்து ஏற்பாடு செய்திருந்த கவிதை மொழிபெயர்ப்புப் பட்டறையின் உறுப்பினனாக தொடர்ந்து நான்கைந்து நாட்கள் தங்கியிருந்தேன்.தமிழில் நான் எழுதியுள்ள கவிதைகளிருந்து தேர்ந்தெடுத்த சிலவற்றை ஹிந்தியில் மொழிபெயர்ப்பது பட்டறையின் பணி.ஒவ்வொரு மொழியிலிருந்தும் ஒரு கவிஞர் என்று தேர்ந்தெடுக்கப் பட்டுக் கலந்து கொண்டிருந்தார்கள். என்னுடைய தமிழ்க் கவிதையை தமிழும் ஹிந்தியும் தெரிந்த பாலசுப்ரமணியம் தோராயமான ஹிந்தி வடிவத்துக்கு மொழிபெயர்ப்பார்.ஹிந்திக் கவிஞரான விமல்குமார் திருத்தமான ஹிந்தி வடிவத்துக்கு அதை மாற்றுவார்.பட்டறையின் மொழிபெயர்ப்பு முறையில் கவிஞனாக என்னுடைய பங்கு மொழிபெயர்ப்பில் கவிதை பொருள் மாறாமலும் தொனி பிசகாமலும் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறதா என்று மேற் பார்வை செய்வது மட்டுமே. எனவே நிறைய நேரம் மிச்சமிருந்தது. விமல்குமார் பத்திரிகையாளராகவும்  இருந்தார். மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு இடையிடையே அலுலகத்தை எட்டிப்பார்க்க ஓடுபவராக இருந்தார்.ஆக, வேறு ஏதாவது செய்ய நேரமிருந்தது. அந்த நான்கைந்து நாட்களும் அருண்ஜோஷியைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன்.சாகித்திய அக்காதெமியில் பணியாற்றும் நண்பர்களிடம் தொடர்ந்து விசாரித்தேன் உற்சாகம் தரக்கூடிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.இத்தனைக்கும் அருண்ஜோஷி சாகித்திய அக்காதெமி விருது பெற்றவர்.அவருடைய 'லாஸ்ட் லேபிரிந்த்' (The Last labyrinth -கடைசி சுழல்வழி) நாவல் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறந்த படைப்புக்கான 1982 ஆம் ஆண்டின் விருதைப் பெற்றிருந்தது.இந்த விவரம் தவிர அக்காதெமி நண்பர்கள் மூலம் அறிய முடிந்த தகவல்கள் எதுவுமில்லை.

அருண்ஜோஷியின் வீட்டு முகவரியோ அலுவலக முகவரியோ தொலைபேசி எண்ணோ எதுவும் கிடைக்கவில்லை.தில்லி இலக்கிய வட்டத்திலும் அவர் அபூர்வமாகவே காணப்பட்டிருக்கிறார்.அந்த நான்கைந்து நாட்களில் தில்லியில் அறிமுகமான எழுத்தாளர்களில் ஒருவரும் ஆங்கிலப்  பேராசிரியரும் கவிஞருமான மகரந்த் பராஞ்பே மட்டுமேஅருண்ஜோஷியைச் சந்தித்திருப் பதாகச் சொன்னார். அவருக்கும் ஜோஷியின் தற்போதைய முகவரி தெரியவில்லை.தில்லியிலிருந்து நொய்டா தொழிற்சாலை வளாகத்துக்குச் செல்லும் வழியில் ஜோஷியின் தொழிற்சாலை இருப்பதாகத் தெரிவித்தார். மறுநாள் மாலை தில்லிக் குளிரைப் பொருட்படுத்தாமல் அருண்ஜோஷியைத் தேடிக் கிளம்பினேன்.அரைகுறையான ஹிந்தி மொழியறிவும் வழிகள் பற்றிய குழப்பமும் தேடலை விரயமாக்கின.

சாகித்திய அக்காதெமி விருது பெற்ற ஓர் எழுத்தாளர்,அதுவும் உயர்தட்டு மொழியாகக் கருதப்படும் ஆங்கிலத்தில் எழுதியவர் ஒருபோதும் புகழின் வெளிச்சத்தில் வந்து நின்றதில்லை என்பது வியப்பளித்தது.புதிராகவும் இருந்தது.அவருடைய நாவல் பாத்திரங்கள்போலவே அவரும் அந்நியமான வராகவே இருந்திருக்கிறார்.'அருண்ஜோஷியின் விநோத வழக்கு' - The Strange case of Arun Joshi - என்று ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.

தில்லியிலிருந்து திரும்பிய சில நாட்களுக்குப் பின்னர் மகரந்த் பராஞ்பேயோ சாகித்திய அக்காதெமி வெளியீடான 'இந்தியன் லிட்டரேச்சர்' இதழின் துணையாசிரியரான(இன்று அதன் ஆசிரியர்) தாமசோ,யாரென்று இப்போது நினைவில்லை, தகவல் தெரிவித்தார்கள்.நான் 
அருண்ஜோஷியைத் தேடிப் போன நாட்களுக்கு வெகு முன்பே அவர் காலமாகி இருந்திருக்கிறார்.


புகழ்பெற்ற தாவரவியலாளரும் கல்வியாளருமான தந்தைக்கு 1939 இல் வாரணாசியில் பிறந்தார். அருண்ஜோஷி.ஏழு வயதுவரை காசி வாழ்க்கை.அதன் பின்னர் லாகூரில் இளமைப் பருவத்தைக் கழித்தார்.தேசப் பிரிவினையைத் தொடர்ந்து பஞ்சாபுக்குத் திரும்பினார்.படிப்பில்முன்னணியில் இருந்தவர்.அந்த அடிப்படையில் அமெரிக்காவிலுள்ள கான்சாஸ் பல்கலைக் கழகத்தில் முழுமையான உதவித்தொகை பெற்று பொறியியலிலும் தொழிற் சாலை மேலாண்மையிலும் பட்டப் படிப்பை முடித்தார்.பின்னர் எம்.ஐ.டி.யில் முதுகலைப் பட்டம் பெற்றார்.பல்கலைக் கல்வியின்போது அவருக்குக் கிடைத்த அனுபவம் தான் எழுத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. அருண்ஜோஷியின் உறவினர் ஒருவர் மனநல மருத்துவராக இருந்தார். தன்னுடைய கைச் செலவுகளுக்காக அவருடைய மருத்துவ விடுதியில் பகுதி நேரப்பணியாளராக இருந்தார் அருண்ஜோஷி. மனச் சிதைவுக்கு ஆளான மனிதர்கள் இடையே பணியாற்றிய அந்த அனுபவம் அவருக்குள் ஆழமாகப் பதிந்தது.அந்தப் பதிவுதான் அவரை இலக்கியத்துறைக்குள் நுழையச் செய்தது.

கல்விப் பருவம் முடிந்து இந்தியா திரும்பிய அருண்ஜோஷி முதலில் ஒரு கம்பெனியில் மேலாண்மைப் பிரிவில் பணியாற்றினார்.சிறிது காலத்துக்குப் பிறகு சொந்தமாகத் தொழிற்சாலை தொடங்கி டீசல் எஞ்சின்கள்,வார்ப்பக உதிரிப் பாகங்கள் போன்ற இரும்பு வாடை உற்பத்திகளைத் தயாரித்தார். வெற்றிகரமான தொழிலதிபராக ஆதாயம் ஈட்டினார். இதற்கிடையில் மனசின் அழைப்புக்குச் செவி சாய்த்து எழுத ஆரம்பித்தார்.1968 முதல் இருபத்தைந்து ஆண்டுக் காலம் அவருடைய படைப்பாக்கப் பருவம்.1968 இல் வெளிவந்த அருண்ஜோஷியின் முதல் படைப்பான 'அந்நியன்' (The Foreiginer) நாவலை வாசகர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் குஷ்வந்த் சிங்.

முதல் நாவல் பெற்ற வாசக,விமர்சக வரவேற்பு அருண்ஜோஷியைத் தொடர்ந்து எழுதச் செய்தது.எனினும் அந்த எழுத்து வாசக ருசிக்கான தீனியாக அல்ல; ஓர் எழுத்தாளன் அனுபவிக்கும் ஆன்மீகப் பதற்றத்தின் அடையாளங்களாக இருந்தது.தொழிற்சாலை அதிபராக,செல்வந்தராக இருந்தும் தனி மனிதனாக இருப்பின் அர்த்தம் பற்றிய கேள்வி களால் வதைபடுபவராக இருந்தார் அருண்ஜோஷி என்பதை அவருடைய எல்லா நாவல்களும் பகிரங்கப்படுத்துகின்றன.அவர் நிர்வகித்து வந்த அறக் கட்டளையின் முதன்மையான நோக்கம் தொழிற்கூடங்களில் மனித அம்சத்தை மேம்படுத்துவதாக இருந்தது. ஒரே சமயத்தில்  எதிரெதிரான இரண்டு உலகங்களில் அவர் உழன்றது முரண்போலவும் தோன்றுகிறது.

இருபத்தைந்து ஆண்டுகள் எழுத்து வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும் அருண்ஜோஷி எழுதியவை ஐந்து நாவல்களும்.ஒரு சிறுகதைத் தொகுதியும் மட்டுமே.அபூர்வமான ஒன்றோ இரண்டோ நேர்காணல்களைத் தவிர எல்லாக் காலத்திலும் ஊடகங்களிருந்து விலகியே நின்றிருந்திருக்கிறார். தன்னுடைய படைப்புகளை முன்வைத்துப் பிரசித்தி தேடிக்கொள்ளவோ அல்லது தன்னுடைய பொருளாதார வெற்றிகளைக் காட்டி இலக்கிய விளம்பரத்தை உருவாக்கிக் கொள்ளவோ அவர் முனைந்ததில்லை. புத்தககங்களின் பின் அட்டையில் கூட அவருடைய புகைப்படம் அச்சானதில்லை.அது அவருடைய இயல்பாக இருந்திருக்கிறது.அந்த இயல்புதான் அவரை இலக்கிய உலகின் மறதிக்குள் வெகு எளிதாக தள்ளிவிட்டிருக்கிறது.அல்லது புதியது மட்டுமே மகத்தானது என்று இலக்கிய உலகம் பின் பற்றும் மாயை காரணமாக இருக்கலாம்.

1993 இல் பருவ மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பான வறண்ட நாட்கள். வாழ்நாள் முழுவதும் உடனிருந்து கொன்றுகொண்டிருந்த ஆஸ்துமா திடீரென்று முற்றி அருண் ஜோஷியை முழுமையாகக் கொன்று தீர்த்தது.

@

அருண்ஜோஷியின் நாவல்களில் நான் முதலில் வாசித்தது அவரது இரண்டாவது நாவலான 'பில்லி பிஸ்வாசின் விநோத வழக்'கை.அவரது நாவல்களில் மிகச் சுவாரசிய மானதும் பிரபலமானதும் அதுதான்.அவருடைய நாயகர்களில் கலகக்காரனும் பில்லி பிஸ்வாஸ்தான்.சிரத்தையாக வாசித்த எல்லா நாவல்களிலும் வரும் நாயகர்களைப்போல ஆக ஆசைப்பட்ட இருபதின் பருவத்தில் சற்றுக் கூடுதலாகவே என்னைக் கவர்ந்தான் பில்லி. தவிர இருத்தலியல் சிந்தனை மனதைக் கவ்விப் பிடித்திருந்த காலம் அது.
ஐரோப்பிய மொழிகளிலிருந்து ஆங்கிலம்வழி வாசிக்கக் கிடைத்த நாவல்கள் கலாச்சார இடைவெளி காரணமாக மெல்லிய விலகலை தோற்றுவித்திருந்தன.அந்த இடைவெளியை இந்திய அனுபவங்களால் நிரப்பியவராக அருண்ஜோஷி தெரிந்தார்.

உலகப்போர்களும் தொழில்மயமாக்கமும் ஐரோப்பிய கலாச்சாரத்தில் அந்நியமாதலையும் மனித இருப்பைப் பற்றிய கேள்விகளையும் ஏற்படுத்தின.சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசியல் சமூகக் கோளாறுகளும் பொருளாதார வெற்றிகளுக்காக இந்தியர்கள்ஆன்மாவைத் தொலைக்கும் சூழலும் இருப்பைப் பற்றிய சிந்தனைகளை எழுப்பின.அதைப் படைப்பாக் கங்களில் தேர்ச்சியுடன் விவாதித்தவர் அருண்ஜோஷி. இந்த வகைப்பாட்டை பின்வரும் உருவகமாக மனதில் பதிந்து வைத்திருந்தேன். மேற்கத்திய 
எக்சிஸ்டென்ஷியலிசம் கண்ணாடிக் குப்பிக்குள் இருப்பது.இந்திய எக்சிஸ்டென்ஷியலிசம் 
மண்கலத்தில் வைக்கப்பட்டிருப்பது.அதன் சாரம் மண்கலத்தின் நுண்துளைகள் வழியாகக் கசிந்து கொண்டிருக்கும். அருண்ஜோஷியின் மண்கலம் பொருத்தமாகக் கசிவதை
அவருடைய படைப்புகளிலிருந்து ஊகித்தேன்.

பிமல் பிஸ்வாஸ் என்கிற பில்லி பிஸ்வாஸ் இருத்தலியல் கேள்விகளால்
தன்னுடைய வாழ்க்கையை ஆராய முயல்கிறான்.அது அவனை சமூகத்தின் பொது மரபுக்கு அந்நியனாக்குகிறது.பில்லி நியூயார்க் பல்கலைக் கழகத்தில் மானுடவியல்துறை மாணவன். அதே பல்கலைக் கழகத்தில் படிக்கவரும் ரோமியைத் தன்னுடன் தங்க அனுமதிக்கிறான். ரோமியின் கூற்றாகத்தான் நாவல் நிகழ்கிறது.சொந்த மண்ணைப் பிரிந்த புகலிடவாசியாக ஏக்கத்துடன் தன்னை உணரும் ரோமிக்கு பில்லி ஓர் ஆச்சரியமாகவே தென்படுகிறான்.
பில்லிக்கு யாதும் ஊரே.யாவரும் கேளிர்.அவன் வசிக்கத் தேர்ந்தெடுத்த இடம் கூட அமெரிக்காவின் இருட்பகுதி என்று சொல்லப்படும் ஹார்லெம் சேரிப்புறம்.அவனுடைய தோழமை சேரிவாசிகளான முன்னாள் குற்றவாளிகளுடன் என்பதெல்லாம் ரோமியை தர்மசங்கடப்படுத்துக்குள்ளாக்குகின்றன.சேரிவாசிகளுடன் பில்லிக்கு இருந்த அதே தோழமை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மனநல மருத்துவரான துல்லாவுடனும்
இருக்கிறது. ரோமியை விட பில்லியை சரியாகக் கணிப்பவள் துல்லாதான். "பில்லி தனக்குள்ளே எதையோ உணர்கிறான்.அவனுக்கே அது நிச்சயமில்லை. ஒரு பூர்வகுடி மனோபாவம் அவனிடமிருக்கிறது.அதை அடக்கிவைக்கப் பார்க்கிறான்.ஆனால் அது அவனை மீறி ஒரு நாள் வெடிக்கும்.எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும்" என்று அவள் சொல்லும் வாசகங்கள்தாம் நாவலின் போக்கைத் தீர்மானிக்கின்றன.

இந்தியாவுக்குத் திரும்பும் பில்லி தில்லிப் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் பணியாற்றுகிறான்.சராசரி நடுத்தர வர்க்கத்தின் அட்டவணை வாழ்க்கை அவனை சலிப்படையச் செய்கிறது.மனைவி மீனாவுடன் அன்றாடம் நடக்கும் சச்சரவுகள் எல்லா உறவுகளையும் வெறுக்கச் செய்கின்றன.அதில் ரோமியின் நட்பும் அடங்கும்.இந்த வாழ்க்கை ,இந்த உறவுகள் இவற்றுகெல்லாம் என்ன அர்த்தம் என்று குமைகிறான் பில்லி
பிஸ்வாஸ்.மனக் கொந்தளிப்பு உச்சமான ஒரு கட்டத்தில் காணாமற் போகிறான். அவனைத் தேட முயற்சிகள் செய்யப்படுகின்றன.பயனில்லை. காவல்துறை பில்லி பிஸ்வாஸ் வழக்கின் கோப்பை மூடிவிடுகிறது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு.ரோமி மாவட்ட ஆட்சியராகிருக்கிறான்.மத்திய இந்தியாவில் நிலவும் வறட்சியைப் பார்வையிடுவதற்காக ஒரு காட்டுப் பகுதிக்குச் செல்கிறான்.வழியில் பழங்குடியினரின் கூட்டம் ஒன்று அவனுடைய ஜீப்பை மறிக்கிறது.அரை நிர்வாணமான ஒருவன் ஜீப்பை மறித்து "பையாஉன்னால் என்னை அடையாளம் காண முடியாது. முடிகிறதா? "என்கிறான். ரோமி ஆச்சரியத்துடன் தெரிந்துகொள்ளுகிறான்."பில்லி".

கல்லூரிப் பணிக்காலத்தில் தன்னுடன் நெருக்கமாக இருந்த பிலாசியாவின் ஆதிக் காமம் பில்லியை ஈர்த்தது.அவளுடைய உறவுதான் சாலமரக் காடுகள் அடர்ந்த மைக்காலாக் குன்றுகளில் வாழும் பழங்குடிகளிடையே அவனைக் கொண்டுவந்து சேர்த்தது.அந்த வாழ்க்கைதான் அவனுடைய கேள்விகளுக்குப் பதிலாக அமைந்தது. அங்கே இருந்தது பில்லியின் விடுதலை.

ரோமி - பில்லி ரகசிய சந்திப்பைப் பற்றித் தெரிந்துகொள்ளும் பில்லியின் தந்தை மகனை மீண்டும் தேடுகிறார்.மூர்க்கமான அந்த வேட்டையில் ஒரு போலீஸ்காரனால் சுடப் படுகிறான் பில்லி பிஸ்வாஸ்.ரோமியின் கையில் கிடந்து உயிர் விடும் முன்பு "வேசி மகன்களே" என்ற கத்துகிறான்.அது தனக்கான வசை மட்டுமல்ல என்று புரிகிறது ரோமிக்கு.

பில்லி பிஸ்வாசின் விநோத வழக்கில் அருண்ஜோஷியின் வாழ்க்கைச்
சம்பவங்களும் விரவிக் கிடக்கின்றன.அவருடைய அமெரிக்கக் கல்விப்புல நினைவுகள், மனநல விடுதி அனுபவங்கள் நாவலைக் கட்டமைக்கின்றன. 

சுய சரிதைத்தன்மையுள்ளகுறிப்புகள் இடம்பெறும் எழுத்துமுறை அருண்ஜோஷியின் எல்லா நாவல்களிலும் காணப்படுகிறது.அவருடைய முதல் நாவலான 'அந்நியனி'ல் வரும் முதன்மைப் பாத்திரம் சிந்தி ஓபராயும் பில்லியைப் போலவே ஆஸ்துமா நோயாளி. அமெரிக்கக் கல்வி பெற்றவன். இவர்கள் மட்டுமல்லாமல் அவரது மூன்றாவது நாவல் 'அப்ரெண்டிஸி'ல் வரும் ரத்தனும் ஆஸ்துமா நோயாளி.அருண்ஜோஷி தன்னுடைய
சுயத்தை நோய் உட்பட, தனக்கிருக்கும் எல்லா குணங்களையும் கதை மாந்தர்களுக்கு வழங்கியிருக்கிறார்.

அருண்ஜோஷியின் முதல் நாவல் 'அந்நியன்' சிக்கலான பின்னல்களையும் அநேக பாத்திரங்களையும் கொண்டது.சிந்தி ஓபராயின் கதையை சராசரியான முக்கோணக் காதல் கதையாக இறங்கி விடாமல் செய்வது ஆசிரியர் மேற்கொள்ளும் வாழ்க்கை பற்றிய விசாரணை.

கென்ய- இந்தியத் தந்தைக்கும் ஆங்கிலேயத் தாய்க்கும் பிறந்த சிந்தி ஓபராய் நான்கு வயதில் ஒரு விமான விபத்தில் பெற்றோர்களை இழந்து கென்யத் தெருக்களில் அநாதையாக விடப்படுகிறான்.உறவினர் ஒருவர் ஆதரவில் வளர்கிறான்.பிள்ளைப் பருவத்தின் அநாதைத்தனம் அவனுடைய குணத்தில் இயல்பாகவே ஓர் அந்நியத் தன்மையை ஏற்படுத்துகிறது.உறவுகளுடனோ இடங்களுடனோ அவனுக்கு எந்தவிதமான உணர்வு நெருக்கமும் இல்லை. எந்த பந்தத்திலும் சிக்கிக் கொள்ளாத முகமூடியாகவும் விலகலாகவும் இந்த குணத்தைப் பராமரிக்கிறான் சிந்தி.கல்லூரியில் அவனைக் கவர்கிற ஜூன் பிளைட் என்ற பெண்ணுடனான நெருக்கத்திலிருந்து முதலில் விலகவே
விரும்புகிறான்.சிந்தியின் ஆஸ்துமாத் திணறலைப் பார்த்துப் பரிதாபப்படும் ஜூன் அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள்.எல்லாம் சுபமாக முன்னேறும் தருணம்.தில்லியிலிருந்து படிப்பதற்காக அமெரிக்கா வரும் பாபு கெம்கா என்ற பணக்கார வீட்டுப் பையன் அறிமுகமாகிறான்.பாபுவுக்கு அந்தச் சூழல் அந்நியமானது.நிலைகொள்ளாமல் தடுமாறுகிறான்.அவனுக்கு உதவும் சிந்தி ஓபராய் ஜூனுக்கும் அறிமுகம் செய்து வைக்கிறான்.அறிமுகம் பின்னர் காதலாக மலர்கிறது.திருமணமும் நிச்சயயிக்கப் படுகிறது.ஆனால் குழப்பங்களால் ஆட்டுவிக்கப் படும் பாபு தனக்குப் பொருத்தமானவனல்ல
என்று உணர்ந்து மறுபடியும் சிந்தியிடம் நெருக்கமாகிறாள்.பாபு ஓடும் காரின் முன் விழுந்து தற்கொலைசெய்துகொள்கிறான்.நொறுங்கிப் போகிறாள் ஜீன். ஓபராயின் இறுக்க முகமூடி தளர்கிற முதல் கட்டம்.ஜூனை மணந்து கொள்ளத் தீர்மானிக்கிறான் ஓபராய். தீர்மானம் செயலாவதற்குள் பாபு மூலம் தரித்த கருவைச் சிதைக்க முயற்சிக்கும் ஜூன் இறந்துவிடுகிறாள். 'வேதனைகளுக்கு முடிவே கிடையாது.நன்மைக்கும் தீமைக்குமான
போராட்டத்துக்கு முடிவே கிடையாது' என்று யோசிக்கிறான்.சிந்தி ஓபராய்
வாழ்க்கைச் சூழலுடன் மிக அந்நியமானவனாக உணர்கிற இந்தத் தருணங்களுடன் நாவலின் முதல் பகுதி நிறைவடைகிறது.தன்னை ஒரு வெளியாளாக அல்லது அநந்நியனாகவே கருதும் ஓபராய் வேர்களைத் தேடி இந்தியாவுக்கு வருவது இரண்டாம் பகுதி.இங்கும் அவன் ஓர் அந்நியன். 'என்னுடைய அந்நியத்தன்மை என்னுடனேயே தொடர்ந்து வருகிறது.நான் எங்கே போனாலும் அதைக் களைய முடிவதில்லை' என்பதுதான் அவனுடைய ஆளுமைச் சிக்கல். இந்த அந்நியத்தன்மையிலிருந்து அவன் விடுபடும் மையத்தை நோக்கி நகர்கிறது நாவல்.பாபுவின் தகப்பனாரான கெம்காவின் தொழில் சாம்ராஜ்ஜியம் வருமான வரிச் சிக்கல் காரணமாகத் தள்ளாடுகிறது.கெம்கா பொருளாதார முறைகேடுகளுக்காகச் சிறையிலடைக்கப் படுகிறார்.வீழ்ச்சியடைந்த அந்த தொழில் சாம்ராஜ்ஜியத்தை இரண்டு நோக்கங்களுக்காக காப்பாற்றி நிமிர்ந்துகிறான் ஓபராய்.ஒன்று:
தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது.இரண்டு:பாபுவின் சகோதரி ஷீலாவின் அன்புக்கு இணங்குவது.இவற்றின் மூலம் தன்னுடைய அந்நியத்துவத்திலிருந்து மீள முயற்சிக்கிறான்.நாவல் முடிந்த பின்னும் தொடர்வது அதன் கதையல்ல;புகலிட வாழ்க்கையின் அந்நியத்தன்மை.அது தரும் கலாச்சார அதிர்ச்சிகள்.சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்திய வாழ்வின் இந்த அம்சங்களை முதலில் படைப்புக்குப் மையமாக அருண்ஜோஷி யோசித்திருந்தார் என்பதுதான் வாசகனைக் கவர்கிறது.

ஜோஷியின் மூன்றாவது நாவல் அப்ரெண்டிஸ் அவரது முதலிரண்டு நாவல்களின் தொடர்ச்சியும் விலகலும் கூட.முந்தைய இரு நாவல்களில் முதன்மைப் பாத்திரங்கள் தங்கள் இருப்பை பாவ மன்றாட்டுத் தொனியில் (Confession)அணுகியவர்கள்.அப்ரெண்டிசின் மையப்பாத்திரமான ரத்தன் ரதோட் பாவப் பரிகாரத்தில் ஈடுபட்டு இருப்புக்கு நியாயம் தேடுகிறான்.

வேலை தேடி தில்லிக்கு வருகிறான் ரத்தன்.அலைகிறான்.ஒன்றும் கிடைப்பதில்லை.தீவிர அலைச்சலுக்குப் பிறகு ராணுவத் துறையின் பிரிவில் தற்காலிகக் குமாஸ்தா வேலை கிடைக்கிறது.அதை நிரந்தரப்படுத்திக் கொள்வதற்காக மேலதிகாரியின் மகளைத் திருமணம் செய்துகொள்ளுகிறான். உத்தியோகத்தில் உயர்வதற்காக எந்த சமரசத்துக்கும் அவன் தயார்.நிழல் உலக வியாபாரியான ஹிம்மத் சிங்கிடமிருந்து கையூட்டி வாங்கிக் கொண்டு
தரம் குறைந்த ஆயுதங்களை கொள்முதல் செய்யவும் அனுமதிக்கிறான். (போஃபோர்ஸ் பீரங்கி ஊழல் புதியதல்ல;பழைய மரபின் தொடர்ச்சிதான் போலிருக்கிறது). இந்திய சீனப் போரில் அந்தத் தளவாடங்கள் பயன்படுத்தப் பட்டு ஏராளமான இந்தியச் சிப்பாய்கள் இறக்கிறார்கள்.பொது மக்கள் விசாரணை கோருகின்றனர்.அரசியல் கட்சிகள் ரத்தனைக் கைகழுவி விடுகின்றன.அவன் பலியாடாகிறான்.விசாரனையில் முறைகேட்டை ருசுப் படுத்தும் ஆதாரங்கள் இல்லை என்பதால் விடுதலை அடைகிறான். போர் முனையிலிருந்து திரும்பும் ரத்தனின் பால்ய நண்பரான பிரிகேடியர் இந்த முறைகேட்டினால் ராணுவத்திலிருந்து நீக்கப்படுகிறார்.அவர்தான் அந்தத் தளவாடங்களைப் பயன்படுத்தியவர். அவருக்கு அவை காயலான்கடைச் சரக்கு என்று புரியாமல்போனதுதான் குற்றம். தவறை ஒப்புக்கொள்ள ரத்தன் முன்வந்தால் பிரிகேடியர் காப்பாற்றப்படலாம்.அப்படிச் செய்வது தன்னுடைய அந்தஸ்தைக் கவிழ்த்து விடுமென்று தயங்குகிறான் ரத்தன்.அதற்குள் பிரிகேடியர் தற்கொலை செய்துகொள்கிறார்.பாவச் சுமை தாளாமல் குமையும் ரத்தன் கோவில் வாசலில் பக்தர்களின் காலணிகளைத் துடைக்க அமர்கிறான்.கர்மவினை
தீர்க்க கடவுளின் பயிற்சிப் பணியாளன்- அப்ரெண்டிஸ்- ஆகிறான்.

அருண்ஜோஷியின் நாவல்களில் இந்தியமனம் அதன் கலாச்சார அடையாளங்களுடன் வெளிப்படும் நாவல் அப்ரெண்டிஸ்.பகவத் கீதையின் உபதேசங்கள் தீவிரமாகவும் நையாண்டியாகவும் அலசப்படுகின்றன.ஆசிரியர் கீதையைப் போற்றுகிறாரா விமர்சிக்கிறாரா என்று கண்டுபிடிப்பது சுவாரசியமான ஆட்டம்.

'கடைசிச் சுழல்வழி'நாவலில் அருண்ஜோஷி கூடுதலான இந்தியக் குறிப்பீடுகளுக்கு இடமளிக்கிறார்.கதாநாயகன் சோம் பாஸ்கர்.சூரியனும் சந்திரனும் இணைந்த பெயர்.நாயகி அனுராதா.இந்திய மரபுப்படி ஒரு நட்சத்திரம்.கதைப்படி ஒரு சினிமா நட்சத்திரம்.

தந்தையை இழந்த சோமுக்கு அவரது சொத்துக்கள் கிடைக்கின்றன. அவனுக்கு மனைவியும் இருக்கிறாள்.கீதா.(பகவத் கீதை?).முன்னால் சினிமா நட்சத்திரமான அனுராதா அவனைக் கவர்கிறாள்.'அவள் ஒரு சமுத்திரம் போல.அவளுடைய ஆழத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது' என்கிறான்.அந்த ஆழத்தைக் கண்டுபிடிக்க ஆசைப்படுகிறான்.
அவளும் கணவன் அஃப்தாபும் வசிக்கும் சுழல்வழிகளுள்ள வீடு இருப்பின் பொறியாகவே சோமுக்குப் படுகிறது.அனுராதாவின் வசீகரமும் ஈர்ப்பும் சோமைப் பித்துக்கொள்ளச் செய்கின்றன.பித்து முற்றி மாரடைப்பில் விழுகிறான் சோம்.அவ்வளவுதான் கதை தீர்ந்தது என்று குடும்ப டாக்டர்.கே. கைவிரித்த பிறகும் ஆச்சரியகரமாக மீள்கிறான் சோம். அனுராதா எந்த தடயமும் இல்லாமல் காணாமற் போகிறாள்.அவளைத் தேடுவதற்காக
சோம் கொடுக்கும் விலை முட்டாள்தனமாக அதிகம்.அஃப்தாபின் நொடித்துப் போன வியாபாரப் பங்குகளை வாங்குகிறான்.கடைசியில் ஒரு மலைக் கோவிலில் அவளைப் பார்க்கிறான்.'நீ உயிருடன் இருக்கவேண்டும் என்பதற்காக உன் காதலைத் துறந்துவிட்டேன்' என்று அனுராதா சொல்லுவதை எரிச்சலுடன் பெருமிதத்துடனும் ஏற்றுக்கொள்கிறான்.
மீண்டும் அவள் காணாமற் போகிறாள்.அவளைத் தேடி சுழல்வழிகளுள்ள அவள் வீட்டை அடைகிறான்.அந்த புதிர் வழியின் மையத்தில் அனுராதாவின் சடலம் கிடக்கிறது. தற்கொலையா?கொலையா? தன்னுடைய கேள்விகளையும் அவளைப் பற்றிய நினைவு களையும் ஒரு பிரார்த்தனைபோல சொல்லிக் கொண்டு நிற்கிறான் சோம் பாஸ்கர்.

அருண்ஜோஷியின் நாவல்களில் சிக்கலான வடிவமுடைய நாவல் இது. காமம்,  வேட்கை,மனமுறிவு,வன்மம் என்று  உணர்வின் முடிவற்ற சுழல்வழிகளில்
மனிதர்கள் உழல்வதனால் இந்த வடிவமும் இருளும் வாய்த்திருக்கலாம்.ஒரு வகையில் உருவகத்தன்மை கொண்ட படைப்பு கூட.ஜோஷியின் அடுத்த நாவலான 'நகரமும் நதியும்'வாசிக்க நேர்ந்தபோது 'கடைசி சுழல்வழி'யில் அதன் வடிவ ஒத்திகை தென்பட்டது. நெருக்கடிநிலைக் காலத்தைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டஅருண்ஜோஷியின் நாவல் 'நகரமும் நதியும்'.சல்மான் ரஷ்திக்கு முற்பட்டகாலப்பகுதியில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்திய நாவல்களில் இந்த நாவலுக்கு பரீட்சார்த்தமான இடமுண்டு.சரியான பொருளில் புதிய புனைவெழுத்தின் சாயல்கள் அருண்ஜோஷி விட்ட இடத்திலிருந்து ஆரம்பமாயின என்பது பொருந்தும்.

நகரமும் நதியும் நாவலில் இடம் பெறுவது நமக்குத் தெரிந்த எல்லா நகரங்களுந்தான். நதியும் நாமறிந்த நதிகள்தாம்.நகரத்தின் அதிபதியான மகா அதிகாரி (Great Master) வம்சாவழியாக நகரத்தை ஆட்சி செய்யும் உரிமை பெற்றவர்.ஒரு நாள் அதிகாலை கெட்ட கனவு கண்டு எழுகிறார். ஆஸ்தான ஜோதிடர்கள்,முகஸ்துதி பாடும் அமைச்சர்கள் எல்லாரையும் வரவழைத்து ஆலோசனை நடத்துகிறார்.அவருடைய ஆட்சியை பலப்படுத்த
ஒரே வழி நகரத்தின் இன்னொரு துருவமான ஏழைப் படகோட்டிகளின் அனுதாபத்தைப் பெறுவது. அவர்களை குஷிப்படுத்தப் பார்க்கிறார் மகா அதிகாரி. படகோடிகள் அவருடைய பசப்பலுக்கு மயங்க மறுக்கிறார்கள்.அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர கடும் தண்டனைகள் விதிக்கப் படுகின்றன.படகோட்டிகள் கூட்டம் கூட்டமாக சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.வன்முறைக் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.மொத்தமும் நாசமாகின்றன.கொந்தளித்து எழும் நதியும் ஒரு வார காலம் ஓயாது பெய்யும் மழையும் நகரத்தை மூழ்கடிக்கின்றன. அந்தப் புராதன நகரத்தில் இனி எதுவும் மிச்சமில்லை.அந்தச் சிதிலங்களின் மீது புதிய நகரம் நிர்மாணிக்கப்படும்.அதுவும் பழையதுபோலவே புதிய பெயர்கொண்ட புதிய மகா அதிகாரிகளுக்கு ஆட்சிப் பொருளாகலாம் என்ற அங்கதத்துடன் நாவல் நிறைவு பெறுகிறது.அழிந்து போன நகரத்தில் உயிரோடு எஞ்சிய அநாமதேயன் மட்டும் புதிய தொடக்கத்தின் பிரதிநிதியாக நதியில் மிதந்துவரும் தெப்பத்தில் ஏறுகிறான். மனித இனத்தின் பயணம் தொடர்கிறது.

நவீன யுகத்தின் நையாண்டி;அரசியல் மோகத்தின் உருவகம்; வரலாற்றின் மீதான ஓர் எழுத்தாளனின் பதிவு என்று பல முகங்களை இந்த நாவலில் காணலாம்.மகா அதிகாரி என்ற பாத்திரம் அதிகாரத்தை நிலை நிறுத்த விரும்பும் ஏகாதிபத்தியமோநாஜிசமோ,  எதுவாகவும் இருக்கலாம். ஸ்டாலினோ, ஹிட்லரோ, இந்திரா காந்தியோ எவராகவும் இருக்கலாம்.

அருண்ஜோஷியின் பிற நாவல்களிருந்து கதை மையத்தில் வேறுபட்ட நாவல் 'நகரமும் நதியும்' .மற்ற நாவல்கள் தனி மனித இருப்பைப் பற்றிய விசாரணையாக அமைந்தவை. இந்த நாவல் ஒரு குடியுரிமைச் சமூகத்தின் இருப்பைப் பற்றியது.அதற்கு நேரும் அபாயங்கள் பற்றியது.சல்மான் ரஷ்திக்கு 'மிட் நைட் சில்ட்ரன்' நாவல் மூலம் கிடைத்த பிரபலம் அருண்ஜோஷியின் இந்த நாவலுக்குக் கிடைத்திருக்க வேண்டிய கவனத்தை
பறித்தது என்றும் கருதப்படுகிறது. தன்னுடைய எழுத்துக்களையோ எழுத்தாளன் என்ற தகுதியில் தன்னையோ முன்னிருத்திக்கொள்ள விரும்பாத அருண்ஜோஷியின் சுபாவம் காரணமாக இருக்கலாம்.

@

இலக்கிய வாசிப்பு தீவிரமாகத் தொடங்கிய கால அளவில் அறிமுகமான அருண் ஜோஷியின் படைப்புகளை  ஆர்வத்துடன் வாசித்திருக்கிறேன். அநேகமாக அவருடைய எல்லா நாவல்களையும் பத்து கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பையும்.கால் நூற்றாண்டுகளுக்கு முந்தைய அந்த வாசிப்பில் ஓர் இனம் புரியாத ஈர்ப்பை மட்டுமே பெற்றிருந்திருக்கிறேன். வாசிப்பின் வழிகள் வேறு திசைகளுக்குத் திரும்பியபோது அந்த ஈர்ப்பு மறைந்து போனது.அருண்ஜோஷி என்ற எழுத்தாளரை நானும் மறந்தேன்.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்திய நாவல்கள் சிலவற்றை வாசிக்க விரும்பினேன். சில நாவல்கள்  நான் இதுவரை கொண்டிருக்கும் கருத்தை மெய்ப்பித்தன.ஆங்கிலத்தை விடவும் தரமும் ஆழமுமான படைப்புகள் மாநில மொழிகளில்தான் உருவாகின்றன என்ற பாரபட்சமான
அபிப்பிராயம் மேலும் வலுவானது.அப்படி வாசிக்கத் திரட்டிய நாவல்களில் அருண் ஜோஷியின் நாவல்களும் இருந்தன.மறு வாசிப்பில் அவை புதிய பொருள்கொண்டு துலங்கியது ஓர் இலக்கிய அனுபவம்.ஒவ்வொரு நாவலும் ஒன்றுக்கொன்று வேறு பட்டதாகத் தெரிந்ததும் அதன் இன்னொரு அம்சம்.

அருண்ஜோஷியின் ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு கூறல்முறையில் அமைந்தவை. முதல் நாவலான 'அந்நியன்' மையப்பாத்திரமான சிந்தி ஓபராயின் தன்மைக்கூற்றாக எழுதப்பட்டது.பில்லி பிஸ்வாசின் விநோத வழக்கு நாவல் பில்லியின் நண்பன் ரோமியின் விவரிப்பாக அமைகிறது.மூன்றாவது நாவல் 'அப்ரெண்டிஸ்' ஒரு தனி மொழியின்
வடிவம் கொண்டது.முதன்மைப் பாத்திரமான ரத்தன் ராதோர் யாரென்று வெளிப்படுத்தப் படாத ஒருவரிடம் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மொழியில் தன்னுடைய வாழ்க்கைச் சம்பவங்களை விவரிக்கிறான்.கடைசி சுழல்வழி மையப்பாத்திரத்தின் கூற்றாக இருந்தாலும் ஓர் உருவகத்தன்மையின் புதிர் மொழியில் சொல்லப்படுகிறது.'நகரமும் நதியும்' நாவலின் கதையாடல் அநாமதேயன் என்ற பாத்திரத்துக்கு அவனுடைய குரு மகா யோகேஸ்வரர்
சொல்லுவதான வடிவம் கொண்டது.இவை எழுதப்பட்ட காலப் பகுதியை யோசிக்கும் போது ஓர் எழுத்தாளர் இத்தனை வகைகளைக் கையாண்டிருப்பது ஒரு சவாலாகவே தெரிகிறது.

கதைச் சட்டகத்தில் பொருத்திஅருண்ஜோஷியின் நாவல்களை இங்கே முன் வைத்திருப்பது அநீதி என்று புரிகிறது.ஏனெனில் நாவல் கதையல்லவே.அருண்ஜோஷியின் நாவல்களில் கதையம்சம் ஒரு தோராய வடிவம் மட்டுமே. மனித இருப்பின் கேள்விகளை விசாரிப்பதுதான் அவற்றின் நோக்கம். மேற்கத்திய எக்சிஸ்டென்ஷியலிச எழுத்தாளர்கள் எழுப்பிய கேள்விகளை அருண்ஜோஷி இந்தியப் பின்னணியில் எழுப்பியிருக்கிறார். மனிதனின் இருப்புக்கு என்ன பொருள்?உறவுகளின் அர்த்தம் என்ன?பொருட்களின்
பின்னால் மனிதன் நடத்தும் வேட்டையின் விளைவு என்ன?அதிகாரம்மனிதனை என்னவாக மாற்றுகிறது? - காலங்காலமாக நிமிரும் இந்த அடிப்படையான கேள்விகள்தாம் அவருடைய அக்கறைகள்.மனிதனின் விதி பற்றிய அவருடைய விசாரங்கள்தாம் படைப்புகளின் மையம்.இவற்றுக்கு ஓர் இந்திய மனம் கண்டடைகிற பதில்களை அருண்ஜோஷியிடம்
பார்க்க முடிகிறது.அந்த பதில்கள் மேற்கத்திய எக்சிஸ்டென்ஷியலிசஎழுத்தாளர்களிடமிருந்து அவரை வேறுபடுத்துகின்றன.அவர்களைப் பொருத்தவரை மனித இருப்பு ஓர் அபத்தம். அர்த்தமில்லாதது.ஜோஷிக்கோ அது ஓர் தேடல்.தன்னை அறிந்து கொள்ள மனிதன் மேற்கொள்ளும் ஆன்மீகப் பயணம்.இந்தக் கருத்தாக்கங்களின் அடிப்படையில் அருண்ஜோஷி இந்து தத்துவங்களை வலியுறுத்தியவராகக் கருதப்படுகிறார்.ஓரளவுக்கு அது உண்மையாகவும் இருக்கலாம்.ஆனால் அவருடைய முதன்மையான பிரச்சனை மனிதனின் இருப்பையும் இருப்பின் அறத்தையும் சார்ந்தது.'' மனிதனின் செயல் அவனையும் அவனைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்,எனவே ஒருவர் பொறுப்பற்ற இருப்பைத் தொடரமுடியாது.ஏதாவது ஒரு புள்ளியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள  வேண்டியிருக்கிறது'' என்பது அவருடைய பார்வை.

பதிற்றாண்டுகளின் இடைவெளிக்குப் பின்பு அருண்ஜோஷியின் நாவல்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தியபோது அவை வாசிப்புக்கு உகந்தவையாகவே இருந்தன.அவர் மையப்ப டுத்தி யிருந்த சில கேள்விகள் இன்றும் பொருந்தக் கூடியவை.உலகமயமாக்கலின் விளைவாக நாம் இழந்துகொண்டிருக்கும் மானுட குணங்களைப் பற்றிய விவாதங்களின் சாயலை, பாலியல் உறவுகளின் சிக்கல்களை, சுற்றுச் சூழல் நசிவை,ஆன்மீக வறுமையை,
அரசியல் பகடையாட்டங்களை இன்றைய அர்த்தத்தில் இந்தப் படைப்புகளில் காண முடிகிறது.கேள்விகள் நிரந்தரமானவை.பதில்கள் காலத்துக்குக் காலம் மாறுபவை. கேள்விகளின் நிரந்தத்தன்மைதான் காலம் கழிந்தும் அருண்ஜோஷியை நிகழ்காலத் தேவையுள்ளவராக எனக்குத் தோன்றச்
செய்திருக்கிறது.@

புதன், 10 செப்டம்பர், 2014

ஒவ்வொன்றாய் எண்ணி எண்ணி...

ண்பர் நெய்தல் கிருஷ்ணன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவில் கோட்டாரில் நடை பெற்ற நாராயண குருவின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் உரையாற்றச் செய்தார். இலக்கியம் தவிர பிற மேடைகளில் அரிதாகவே பங்கேற்றிருந்த எனக்கு அது புதிய அனுபவமாகவே இருந்தது. ஓரளவுக்கு நல்ல உரையை அன்று நிகழ்த்தியதாகவே தோன்றியது. அது நல்ல உரைதான் என்று விழா அமைப்பாளர்களும் நினைத்திருக்க வேண்டும். இந்த ஆண்டும் அழைப்பு வந்தது. அழைக்கச் செய்தவர்  பேரா. அ.கா. பெருமாள். அழைத்தவர் பேரா. சரவணை. 

கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற நாராயண குருவின் 160 ஆவது பிறந்த நாள் விழாவில் பேசக் கிடைத்தது பெருமைக்குரிய வாய்ப்பு. விழாவை ஒட்டி நடந்த போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்ளுக்குப் பரிசளித்தது இனிய அனுபவம். இந்தப் பெருமைக்கும் இனிமைக்கும் இடையில் ஒவ்வாத ஒரு அனுபவமும் இருந்தது. நிகழ்ச்சி நடந்த திருமண மண்டபத்தில் வைத்திருந்த ஆளுயர அளவுள்ள நாராயண குருவின் உருவப்படத்துக்கு பிராமணப் புரோகிதர்கள் நடத்திய சடங்கு. எதற்கு எதிராகக் குருதேவர் குரல் எழுப்பினாரோ, எந்த மனப் பான்மைக்கு எதிராகப் போராடினாரோ அந்த வைதீக மரபுக்குள் அவரைத் தள்ளி விட்டிருந்ததைப் பார்க்க மனம் நொந்தது. 

மகான்களின் வழியை அடைப்பதற்கு உத்தமமான உபாயம் அவர்களைப் பீடத்திலேற்றி வைத்து வழிபடுவதுதான்போல.


எல்லாருக்கும் வணக்கம். சரியாக  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாராயண குருவின் பிறந்த தினத்தன்று இதே மேடையில் பேசி இருக்கிறேன். இன்று அதே நாளில் அதே மேடையில் அதே குருவைப் பற்றி மறுபடியும் பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. இதற்காக விழாக் குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

இன்று நாம் குருவின் 160வது பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டிருக் கிறோம்.  இதே செப்டம்பர் மாதத்தில்தான் அவரது சமாதி தினமும் வருகிறது.  அவர் நம்மிடையே வாழ்ந்தது எழுபத்தி இரண்டு ஆண்டுகள். இந்த எழுபத்திரண்டு ஆண்டு வாழ்க்கையில் அவர் செய்த காரியங்கள் இன்றும் நினைக்கப் படுகின்றன. அவர் சொன்ன கருத்துகள் இன்றும் தேவையாக இருக்கின்றன. அவரது செயல்களும் கருத்துகளும் இன்றும் பேசப்படுகின்றன; நடைமுறைப் படுத்தப் படுகின்றன. நாராயண குருவுக்கு முன்னாலும் பின்னாலும் பல  மகான்கள் தோன்றியிருக்கிறார்கள். மனித வாழ்க்கைபற்றிக் கவலைப்பட்டிருக்கிறார்கள். உபதேசங்கள் கொடுத்திருக் கிறார்கள். சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறார்கள். அவை எல்லாம் ஒரு காலத்தில் முக்கியமானவையாக இருந்து பின்பு மறக்கப்பட்டு விட்டன. அன்று பெரும் செல்வாக்குச் செலுத்திய பல மகான்கள் பின்னர் மறக்கப் பட்டு விட்டார்கள்.
ஆனால் எந்தக் காலத்துக்கும் பொருத்தமானவராகவும் எந்தக் காலத்திலும் மறக்கப்படக் கூடாதவர்களாகவும் இருக்கும் பெருமக்களில் ஒருவராக இருந்து வருபவர் நாராயண  குரு.

அவர் ஒரு துறவி. ஆனால் துறவறத்தை எல்லாருக்கும் கட்டாயமான தாகச் சொன்னதில்லை. அவருடைய அணுக்கத் தொண்டரும் சின்ன சாமி என்று அழைக்கப்பட்டவருமான  மகா கவி குமாரன் ஆசான் குடும்பஸ்தர். அவர் ஆன்மீகவாதி. ஆனால் எஸ் என் டி பி.யின் செயல் திட்டங்களை உருவாக்கிய டாக்டர். பல்பு அறிவியல் பார்வையை முன்னிருத்தியவர். அவர் தெய்வ ஆராதனையை ஏற்றுக் கொண்டவர். ஆனால் அவரது சீடர்களில் ஒருவராக இருந்த சகோதரன் அய்யப்பன் நாத்திகர். இப்படிப் பல சிந்தனைகளுடைய ஆட்களைத் தனது கருத்துக்களாலும் செயல் பாடுகளாலும் ஈர்த்தவர் நாராயண குரு. அப்படி ஈர்க்கக் காரணம் நாராயண குரு நடைமுறை சார்ந்த வாழ்க்கையிலேயே மனிதர்கள் மேம்பட  முடியும் என்று காட்டியதுதான்.அவருடைய கருத்துகளோ போதனைகளோ நாளைய வாழ்க்கையைப் பற்றியதல்ல;  செத்த பிறகு கிடைக்கக் கூடிய சொர்க்கம் பற்றியதோ  அல்ல. இன்றைய வாழ்க்கையை பற்றியது. இந்த உலகத்தில் வாழ்வதைப் பற்றியது. இன்றைக்கு மனிதன் வாழ்வதைப் பற்றிய கவலையிலிருந்து பிறந்த கருத்துகள் அவை. இந்த வாழ்க்கையை எப்படி மேம்படுத்திக்கொள்வது என்ற அக்கறையிலிருந்து பிறந்த செயல்கள் அவருடையவை. அதனாலேயே அவை இன்றும் தேவை யானவையாக இருக்கின்றன.

நாராயண குருவுக்குச் சமமாகப் பேசப்பட்ட பல மகத்தான மனிதர்களும் அவருக்கு முன்னும் பின்னும் இருந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எல்லாம் காலப் போக்கில் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. நாராயண குரு பிறந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின் பிறந்தவர் சுவாமி விவேகானந்தர். குருவுக்கு பதின்மூன்று ஆண்டுகள் இளையவர் மகாத்மா காந்தி. காந்திக்கும் பின்னால் பிறந்த பெரியார் ஈ வே ரா, நாராயண குருவை விட சுமார் இருபது ஆண்டுகள் இளையவர். இங்கே குறிப்பிட்ட இந்தப் பெரு மக்கள்தாம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இந்திய வாழ்க்கையில் சீர்திருத்தங்களைச் செய்தவர்கள். இவர்கள் எல்லாரும் பிற்காலத்தில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்கள். விவேகானந்தர்  வெறும் இந்து மதவாதியாகச் சொல்லப் பட்டார். காந்தி தலித்துகளுக்கு எதிரானவர் என்று டாக்டர் அம்பேத்கரால் அவர் காலத்திலேயே விமர்சிக்கப்பட்டார். பெரியார், பிராமணர் அல்லாத  சாதி இந்துகளுக்கு ஆதரவானவர் என்று குறை சொல்லப்பட்டார். இன்றுவரை விமர்சனங் களுக்கு அப்பாற்பட்டவராகவே இருந்திருக்கிறார் நாராயண குரு. அவரது காலத்தில் அவருக்கு எதிராகச் சின்ன முணுமுணுப்புகள்தாம் எழுந்திருக் கின்றன, என்பதைத் தவிர அவர் மீதான பெரிய விமர்சனங்கள் சொல்லப்
பட்டதில்லை. அதற்குக் காரணம் அவரது வாழ்க்கை. தான் சொன்னதற்கும் செய்ததற்கும் இடைவெளி இல்லாத வாழ்க்கை அவருடையது.

அவர் ஒரு ஆன்மீகவாதி. அத்வைத தத்துவத்தைக் கடைப் பிடித்தவர். பலப்பலவாகத் தெரியும் எல்லாம் ஒன்றே என்பதுதான் அத்வைதத்தின் அடிப்படை. எல்லா உயிர்களும் ஒன்று. நம்முடைய மாயையால்தான் அவை வெவ்வேறாகத் தெரிகின்றன. இந்த மாயை கலைந்து விட்டால் வேற்றுமைகள் இல்லாமல் போய்விடும் என்பது அத்வைதத்தின் விளக்கம். இதை உபதேசமாகச் சொன்னவர்களே அதிகம். ஆதி சங்கரர் முதல் இன்றைய கார்ப்பொரேட் சாமியார்கள் வரை. ஆனால் இதை நடை முறையில் செய்து காட்டியவர் என்ற பெருமை நாராயண குருவுக்கு உரியது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் எந்த வேற்றுமையும் இல்லை என்று சொன்னது மட்டுமல்லாமல் அதைச் செயலிலும் காட்டியவர். மனிதர்கள் எல்லாரிடமும் மனம் திறந்து பேசியவராக இருந்தார் நாராயண குரு. எல்லா வகையான மனிதர்களிடமும் பேசியவர். மகாத்மா காந்தி, ரவீந்திர நாத் தாகூர் போன்ற பெரும் மனிதர்களிடம் மட்டுமல்ல. கடைநிலையில் இருந்தவர் களிடமும் பேசியவர். கொஞ்சம் அதிகப்படியாகச் சொன்னால் குட்டிச் சாத்தானிடம் கூடப் பேசியவர்.

நாராயண குருவின் வாழ்க்கையில் நடந்த இந்தச் சம்பவத்தைப் பற்றி வாசிக்கும்போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இவ்வளவு நகைச்சுவையுணர்வு உள்ள குரு, ஏன்  அவர் காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் கூடச் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கவில்லை என்று ஆச்சரியமாக இருக்கும். 

சிவகிரி ஆசிரமத்தில் நாராயண குரு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது வெகு தொலைவிலிருந்து இரண்டு பேர் அவரைப் பார்க்க வருகிறார்கள். இரண்டு பேர் காத்துக்  கொண்டிருக்கிறார்கள் என்று குருவிடம் சீடர்கள் தெரிவிக்கிறார்கள். '' அவர்களை ஏன் காக்க வைக்க வேண்டும்? அழைத்துக் கொண்டு வரலாமே'' என்கிறார். அவர்களை அழைத்துக் கொண்டு போகிறார்கள். '' நம்மைப் பார்க்க வந்தீர்களாக இருக்கும். நல்லது'' என்கிறார் குரு. ''பார்க்க மட்டுமில்லை. உங்களிடம் ஒரு சங்கடத்தைச் சொல்ல வந்தே ¡ம்'' என்கிறார்கள் வந்தவர்கள். ''நம்மிடமா, என்ன சங்கடம் சொல்லுங்கள்'' இது குரு. ''ரொம்ப நாட்களாக வீட்டில் குட்டிச் சாத்தானின் தொல்லை தாங்க முடியவில்லை.  என்னென்னவோ கர்மங்களெல்லாம் செய்து பார்த்து விட்டோம்.ஒரு பலனுமில்லை. சுவாமிகள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்'' என்கிறார்கள். '' தொல்லை தருவது யார்  என்று சொன்னீர்கள். குட்டிச்சாத்தானா? பரவாயில்லையே. சரி, நீங்கள் அதைப் பார்த்தீர்களா?'' பார்த்தோம் சுவாமி. வீட்டு வளவில் கறுப்பாகக் கரி மூட்டைபோல நிற்பதை அடியவர்கள் பார்த்தோம். எப்போஒதும் தொந்தரவுதான். விடாமல் கல்லை எறிந்து கொண்டிருக்கிறது'' '' அது சரி அந்தக் குட்டிச் சாத்தான் நாம் சொன்னால் கேட்குமா?'' ஆமாம் சாமி. சாமி சொன்னால் கேட்கும். ''ஆனால் அந்தக் குட்டிச் சாத்தானுக்கும் நமக்கும் பழக்கமில்லையே '' இதைக் கேட்டு வந்தவர்கள் முகம் வாடி நிற்கிறார்கள். '' ஆகட்டும் குட்டிச் சாத்தானுக்கு நாம் ஒரு கடிதம் எழுதினால் போதுமா?'' என்று கேட்டு விட்டு ஒரு பக்தனிடம் சிரிப்பை அடக்கிக் கொண்டு தான் சொல்வதை எழுதிக் கொள்ளும்படிச் சொல்கிறார். அந்தக் கடிதம் இப்படி. 

’’திரு குட்டிச்சாத்தான் அறிந்து கொள்வதற்காக, இந்தக் கடிதத்தைக் கொண்டு வரும் பெரேராவின்  வீட்டில் இனிமெல் எந்தத் தொந்தரவும் செய்யக் கூடாது. இப்படிக்கு நாராயண குரு.''

இந்தச் சம்பவத்தை வெவ்வேறு வகையில் வியாக்கியானம் செய்யலாம். தன்னைத் தேடி வந்தவர்கர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காகக் குரு செய்த உபாயம் என்று சொல்லலாம். அவர் நடத்திய சித்து விளையாட்டு என்று சொல்லலாம். அறிவுத் திறன் குறைந்தவர்களுக்கு அறிவின் முக்கியத் துவத்தை எடுத்துச் சொன்னதாகப் பார்க்கலாம். எல்லாரும் ஒன்று  என்று நம்பும் ஒரு அத்வைதி சாத்தானையும் கடவுளின் தோற்றம் என்று சொல்லாமல் சொன்னதாக எடுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் விட மாபெரும் கருணை நிரம்பிய  ஞானி சக மனிதர்கள் மீது காட்டிய கரிசனம் என்பதுதான் பொருத்தம். அப்படிப் பார்க்கவே நான் விரும்புகிறேன். குருவே அப்படித்தான் எண்ணியிருக்கிறார் என்று அவரது வார் த்தைகளை வைத்தே சொல்ல முடியும். '' அவனவன் ஆத்மசுகத்தினு ஆசரிக்குன்னது அபரன்டெ சுகத்தினாய் வரேணம்'' என்றுசொல்லியிருக்கிறார். எனக்கு நன்மை ஏற்படுவதற்காகக் கடைப் பிடிக்கும் ஒன்று அடுத்தவனுக்கும் நன்மையளிப்பதாக வர வேண்டும்.

இந்த வாசகத்தை நாராயண குரு தனது வாழ்க்கை மூலம் நிரூபித்தார். அவர் செயல் பட்டது தான் பிறந்து வளர்ந்த சமூகத்தின் இடையில். அன்றைக்கு மிகத் தாழ்ந்த நிலையில் இருந்த அந்தச் சமூகத்தை முன்னிருத்தியே அவர் பேசினார். செயல்பட்டார். ஆனால் அவரது பெரிய சிந்தனை, பெருந் தன்மையான செயல்கள் சொந்தச் சமுதாயத்தை முன்னேற்ற  மட்டுமல்ல; பிற சமுதாயங்கள் மேம்படவும்  உதவின. அந்த வகையில் ஒரே சமயம் அவர் தத்துவஞானியாகவும் சீர்திருத்தக் காரராகவும் விளங்கினார். அவருக்கு முன்பும் அவரது  காலத்திலும் தத்துவவாதிகளும் சீர்திருத்தக் காரர்களும் இருந்தார்கள். ஆனால் தத்துவக்காரர்கள் அநேகமாக சாதாரண வாழ்க்கைக் காரியங்களில் கவனம் செலுத்தாத உபதேசிகளாக இருந்தார்கள்.  சீர்திருத்தக் காரர்கள்  வாழ்க்கைக் காரியங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தார்களே தவிர, மனிதனின் ஆன்மீகத் தேவைகளைப் புறக்கணித்தார்கள். இந்த  இரண்டையும் சரி சமமாகப் பார்த்தவர்; செயல்பட்டவர் என்பதே நாராயண குருவின் பெருமை.

'' அவனவன் ஆத்மசுகத்தினு ஆசரிக்குன்னது அபரன்டெ சுகத்தினாய் வரேணம்'' என்று சொன்னதை அவர் எப்படிச் செயலில் காட்டினார் என்பதைச் சரியாக எடுத்துச் சொன்னவர் கம்யூனிஸ்டான இ.எம்.எஸ்.
அவர் சொல்கிறார். '' சுவாமிகள் கோவில்களுக்கும் மடங்களுக்குமான அஸ்திவாரங்களைத்தான் உருவாக்கினார். ஆனால் அவற்றின் மேலே  சமுதாய  நல்லிணக்கம் என்ற கட்டடம் கட்டப்பட்டது. அவர் விதைத்தது ஆன்மீக சிந்தனையின் விதைகளை. ஆனால் அவற்றிலிருந்தே சமூக, அரசியல் உரிமைகள் முளைத்தன. வேத கால  இந்தியாவின் கருத்துக் களைத்தான் குரு பிரச்சாரம் செய்தார். ஆனால் அது கேட்பவர்களின் காதுகளில் சுதந்திரம் சமத்துவம் ககோதரத்துவம் என்ற மேற்கத்திய சிந்தனைகளாகவே  பதிந்தது.'' என்கிறார் இ எம் எஸ். 

நாராயண குருவின் முக்கியத்துவத்தையும் வரலாற்றில் அவருக்குள்ள பாத்திரத்தையும் இதைக் காட்டிலும் துல்லியமாக வேறு யாராலும் மதிப்பிட்டு விட முடியும் என்று தோன்றவில்லை.

தனது சமூகத்துக்காக குரு மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மொத்தக் கேரள சமூகத்தையும் பாதித்தது. ஒரு புதிய மறுமலர்ச்சியை உருவாக்கியது. சரியாகச் சொன்னால்  நாராயண  குருவே. இன்றைய கேரளத்தின் மறு மலர்ச்சியின் நாயகன் . வேறு எந்த அத்வைதிக்கும் ஞானிக்கும் இந்தப் பாத்திரம் வாய்க்கவில்லை. தனது சமூகத்தை நோக்கி அவர் பேசியவை எல்லாச் சமூகங்களையும் மாற்றியது. அந்த வகையில் பெரும் பொது நன்மையின் மையமாகவே அவரைச் சொல்ல வேண்டும். ஒரு அத்வைதி என்ற நிலையில் அவர் யாரிடமும்  பேதம் காட்டியதில்லை. அதனாலேயே அவர் விமர்சனத்துக்கு அப்பாற் பட்டவராக எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டார். ஈழவர்களை மட்டுமல்ல; இன்று தலித்துகள் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்ட பிரிவினரையும் குரு தனது கருணையால் அரவணைத்துக் கொண்டார். திருவனந்தபுரம் நகரத்தின் முதல் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என். குஞ்ஞிராமன் என்ற தலித் சமூகத்தவர். 1960 ஆம் ஆண்டு வாக்கில் குஞ்ஞிராமன் காலமானதாகச் சொல்லப்படுகிறது. அவரை மேயர் பதவிக்கு தகுதியானவராக ஆக்கியவர் நாராயண குரு. இதை குஞ்ஞிராமனே தனது பதவியேற்பின் போது குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் இன்று பெரியாரை தலித்துகளுக்கு ஆதரவானவர் அல்ல  என்று விமர்சிப்பதைபோல நாராயண குருவை விமர்சிக்க முடியாமற் போனதன் காரணம் இதுதான். 

நாராயண குரு பின் பற்றிய அத்வைதம் இந்து மதத்தில் அடங்கியது என்று சொல்லப் படுகிறது. அதை குருவும் மறுத்ததில்லை. அவர் பிரதிஷ்டை செய்ததெல்லாம் இந்துக் கடவுள்கள் என்பதிலிருந்தே இது புரியும். ஆனால் உண்மையில் குரு வெறும் இந்து மத சாமியாராக இருக்கவில்லை. இதை எடுத்துச் சொன்னவர் மகா கவி பாரதி. தனது கட்டுரைகளில் இதைச் சொல்கிறார். சரியாகச் சொன்னால் கேரளம் மட்டுமே அறிந்திருந்த ஸ்ரீ நாராயண குருவை பாரதியே  தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தினார். கேரளத்தைப் பற்றி பாரதி ஆறு கட்டுரைகளில் குறிப்பிடுகிறார். அதில் ஒன்றில்தான் குருவை ஸ்ரீ நாராயண ஸ்வாமி என்று குறிப்பிடுகிறார். அதில் ஒரு கட்டுரையில் அவர் தெரிவிக்கும் விவரம் நாராயண குரு இந்து மதத்தைக் கடந்து சென்றிருப்பதைச் சொல்கிறது. ஆலுவா கல்லூரியில் முஸ்லிம் மாணவன் ஒருவன் சமஸ்கிருதம் கற்பதைப் பற்றி எழுதுகிறார் பாரதி. அதற்குக் காரண கர்த்தா ஸ்ரீ நாராயண ஸ்வாமி என்றும் பாராட்டுகிறார்.

ஒரு ஆன்மீகவாதி. சீர்திருத்தக் காரர். கவிஞர். என்றெல்லாம் நாராயண குருவைச் சிறபிக்கலாம். அவை எல்லாவர்ரையும் விட அவர் பெற்றிருந்த இடம் விசாலமானது. நடைமுறையும் தத்துவமும் ஒன்றிணைந்த சங்கமம் அவர். பழைய சடங்குகளிலிருந்து சமுதாயத்தை மீட்டவர். புதிய கருத்து களைச் சொல்லி வேற்றுமைகளை இல்லாமலாக்கியவர். கல்வியை யையும் அதன் மூலம் பெறும் அறிவையும் முதன்மைப் படுத்தியவர். தொழில் செய்து முன்னேறத் தூண்டியவர். மதத்தைத் தாண்டி மனிதர்களைப் பார்த்தவர். அந்தப் பார்வையில்தான் மதம் எதுவானாலும் மனிதன் நன்மை அடைந்தால் போதும் என்றார். சாதிகளுக்கு அப்பாற்பட்ட மனித நன்மையை வலியுறுத்தியவர். அதனால்தான் அவரால் சாதியைக் கேட்காதே; சாதியை சொல்லாதே' என்று அறிவிக்க முடிந்தது. வெவ்வேறாக இருக்கும் மனிதர்களை ஏற்றுக் கொண்ட நடைமுறைவாதி.  அதே சமயம் அவர்கள் எல்லாரும் ஒன்று என்று திடமாகச் சொன்ன ஆன்மீகவாதி.

குரு எழுதிய பல நூல்களில் ஒன்று தெய்வதசகம். இந்த நூலை அவர் 1814 ஆம் ஆண்டு எழுதினார் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் இது நாராயண குருவின் தெய்வ தசகத்தின் நூற்றாண்டு. பத்துக் கண்ணிகள் உள்ள இந்தச் சிறு நூலை குருவின் தத்துவ அறிக்கை என்று சொல்லலாம். மிக எளிய பிரார்த்தனை வரிகளுடன் தொடங்குகிறது இந்தத்  தசகம். ’தெய்வமே, காத்து கொள்க அங்கு/ கைவிடாதிங்ஙு ஞங்ஙளே' என்ற முதல் வரியிலேயே கடவுளுடன் நேரடியான உரையாடல் தொடங்கி விடுகிறது. இது ஒரு வழக்கமான பக்திப் பிரார்த்தனை அல்ல என்று இப்போது வாசிக்கும்போது தோன்றியது. தெய்வம் தன்னைத்தான் காத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்பதாகவும் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுவதாகவும் புதிய அர்த்தங்களைச் சொல்லத் தோன்றுகிறது.

ஏனெனில் அப்படிப்பட்ட காலத்தில்தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று மனிதர்கள் சாதி அடிப்படையிலும் மதத்தின் அடிப்படையிலும் பார்க்கப் படுகிறார்கள். மனிதர்கள் வெவ்வேறான நம்பிக்கைகளும் குணங்களும் கொண்டவர்கள் என்பதை மறுத்து எல்லாருக்கும் ஒரே அடையாளம் போடுகிற முயற்சிகள் நடக்கின்றன. வெவ்வேறு கடவுள்களை மீண்டும் பெரிது படுத்தும் காரியங்கள் நடக்கின்றன. இவை நாராயண குரு போன்ற மாமனிதர்கள் நமக்குக் கற்பித்த மேலான நம்பிக்கைகளுக்கு எதிரானவை.

நாராயண குரு முன்வைத்த கடவுள் அறியப்பட முடியாத ஒன்று. அதை அறிவதே வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் என்பது அவரது நம்பிக்கை. தெய்வ தசகத்தின் இரண்டாவது செய்யுள் அதைத்தான் சொல்கிறது. 'ஒன்னொன்னாய் எண்ணித் தொட்டு/ எண்ணும் பொருள் ஒடுங்ங்கியால் நின்னிடும் த்ருக்கு போலுள்ள நின்னில் ஆ ஸ்பந்தமாகணம்'.

'ஒவ்வொன்றாய் எண்ணித் எண்ணித் தொட்டு
எண்ணிய பொருள் முடிந்ததும்
மிஞ்சும் ஒளியாய் நிற்கும் 
உனக்குள்ளே அந்தத் துடிப்பாக வேண்டும் '

நாராயண குருவின் கடவுள் பற்றிய சிந்தனை வெளிப்படுவது இதில்தான். நமக்குத் தெரிந்த பொருட்களை தொட்டு எண்ணிப் பார்க்கிறோம். எண்ணி எண்ணி அவை எல்லாம் தீர்ந்ததும் ஒரு பார்வை, ஒரு எண்ணம், ஒரு வெளிச்சம் மிஞ்சும். அதை நம்மால் விளக்க முடியாது. ஆனால் உணர முடியும். அந்த நிலைதான் கடவுள் என்கிறார் குரு. இதை வேறு விஷயங்களுக்கும் பொருத்தலாம். சாதியைப் பேசுகிறோம் பேசிக் கொண்டே போனால் சாதியே இல்லாத ஒரு புள்ளிக்குப் போய்ச் சேர்வோம். மதத்தைப் பர்றிப் பேசிகிறோம். ஆராயந்து ஆராயந்து மதமே இல்லாத ஒரு இடத்துக்கு வந்து சேருவோம். கடவுளைப் பற்றிப் பேசிப் பேசி கடவுள் என்ற ஒன்று விளங்காத முனையை அடைவோம். இந்தப் புள்ளியை, இந்த இட்த்தை, இந்த முனையைக் கண்டவர் நாராயண குரு. அதுவே அவரது மகத்துவம். அதுதான் இந்த நாளிலும் அவரைப் பொருத்தமுடையவராக ஆக்குகிறது. கடவுள் எவ்வளவு உயர்ந்தவர் என்பதையல்ல; மனிதன் எவ்வளவு மகத்தானவன் என்பதையே நாராயண குரு அழுத்தமாகச் சொன்னார் என்று அவரது கருத்துகளிலிருந்து செயல்களிலிருந்து நாம் கண்டு அடைய முடியும்.இன்று அப்படிக் கண்டு அடைவது மிகவும் தேவை.

இந்தக் கருத்துகளை குருதேவரின் பிறந்த நாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த விழாக் குழுவினருக்கு வந்தனம். உங்கள் அனைவருக்கும் நன்றி.