ஆற்றூர் ரவிவர்மா (1930 – 2019)
மலையாளக் கவிதையில் ஆற்றூர் ரவிவர்மா எல்லா வகையிலும் அபூர்வமானவர்.
ஏறத்தாழ அரைநூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகக் கவிதையாக்கத்தில் ஈடுபட்டிருந்தார்.
எனினும் மிக அரிதாகவே எழுதினார். அவ்வாறு எழுதப்பட்டவற்றில் பெரும்பான்மையும் அவற்றின்
அருமை கருதி தனித்துப் பேசப்பட்டன. கேரளத்தின் பண்பாட்டுத் தலைமையகமான திருச்சூரில்
நீண்ட காலம் வாழ்ந்தவர். இருந்தும் அபூர்வமாகவே
இலக்கியக் கூட்டங்களிலும் கவியரங்கங்களிலும் பங்கேற்றார். அந்தப் பங்கேற்பை என்றென்றும்
நினைவில் நிற்கும் ஒன்றாக மாற்றும் கலைத் தகுதி அவருக்கு இருந்தது. மிக மெல்லிய குரலில்
அவர் வெளிப்படுத்தும் கருத்துக்களும் புதிய சொற்தெறிப்புகளும் இதமான புன்னகையும் அதைச்
சாதித்தன. அவருடைய சமகாலக் கவிஞர்கள் கைப்பழக்கம் காரணமாக கவிதைகளாகக் குவித்துத்தள்ளிய
போதும் ரவிவர்மா நிதானமாகத் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டு தனித்து நடந்தார்.
எனவே அவரது ஒவ்வொரு கவிதையும் புதுமையின் மெருகுடனேயே வெளிவந்தது. ‘தனித்து நடக்கிறேன் நான், காலி வீடுகள்கொண்டு
நீளும் நிசப்தத் தெருவொன்றில்’ என்ற கவிதை
வரியில் வெளிப்படுவது அவரது தனித்துவமும் கவிதையின்
தனித்துவமும்தான்.
1960 களையொட்டிய காலப்பகுதியில் மலையாளக் கவிதையில் நவீனத்துவம்
நுழைந்தது. இந்த நுழைவுக்குக் காரணமாக இருந்தவர்களில் ஆற்றூர் ரவிவர்மாவும் ஒருவர்.
அதுவரை மலையாளக் கவிதை இறுகப் பற்றிக் கொண்டிருந்த கருத்துகளையும் காட்சிகளையும் நவீன
கவிதை கைவிட்டது. சமகால வாழ்வை அதன் சிக்கல்களுடனும் மொழியுடனும் முன்வைக்கத் தொடங்கியது.
கவிதையின் வடிவில் புதுமையைக் கைக்கொள்ளத் தொடங்கியது. அந்த மாற்றத்துக்குத் துணை நின்றவர்களில்
ஆற்றூர் முக்கியமானவர். அவரது புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்றான ‘கான்ஸர்’ அதன் தொடக்கவரி
காரணமாகவே அதிர்ச்சியை ஊட்டியது. ‘கல்லூரிக்கு
இரண்டு வாசல்கள், வாயும் மலத்துவாரமும்போல’ என்ற வரியைத் தொடந்து வந்த கவிதை அன்றுவரையிலான மலையாளக் கவிதையுணர்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதன் நவீனத்தொனி வாசகனை உலுக்கியது. இந்த உலுக்கல் மேலோட்டமானதல்ல என்பதை தொடர்ந்து
வெளிவந்த ரவிவர்மாக் கவிதைகள் மெய்ப்பித்தன. வடமொழியிலும் மலையாள மரபுக்கவிதையிலும்
அவர் பெற்றிருந்த ஆழ்ந்த புலமை அதற்குத் துணைசெய்தன. ஒவ்வொரு கவிதையும் புதுமையிலிருந்து
மேலும் புதுமையை நோக்கி முன் செல்பவையாகவே இருந்தன. தனது ஒரு கவிதைபோல இன்னொன்றை ஆற்றூர்
எழுத முற்பட்டதில்லை.
மலையாளக் கவிதை மரபின் விரிவான ஞானம் கொண்டிருந்தவர். எனினும்
சமகாலத்தின் துடிப்புகளைக் கவிதையில் கொண்டுவந்தவர் ஆற்றூர். தனது கவிதைக்குத் தேர்ந்தெடுத்த
பொருளிலும் அதை வெளிப்படுத்தும் சொற்களிலும் இயங்கும் வரிகளிலும் மிகக் கவனமாக இருந்தவர்.
தேவையில்லாத சொல்லோ அநாவசியமான காட்சியோ இடம்பெற வாய்ப்பில்லாமல் கச்சிதமான மொழியில்
கவிதைகளை உருவாக்கினார். கிட்டத்தட்ட அரட்டையின் இயல்பும் தேவையை மீறிய நீளமும் அழுத்தமும்
கொண்டிருந்த மலையாளக் கவிதையில் சிற்பச் செதுக்கலுக்கு இணையான சொற்செதுக்கலைக் கொண்டவை
ரவிவர்மாக் கவிதைகள். அவரது கவிதைகளை முன்னிருத்தியே ‘ ஆற்றிக் குறுக்கிய கவிதை’ (
குறுகத் தரித்த கவிதை ) என்ற பிரயோகம் நவீன மலையாளக் கவிதையில் புழக்கத்துக்கு வந்தது.
இன்று பின்பற்றப்படும் கவிதையாக்க முறைகளில் ஒன்றாகவும் நிலைத்திருக்கிறது. பிந்தைய
தலைமுறைக் கவிஞர்களான கல்பற்றா நாராயணன், பி.ராமன். அனிதா தம்பி ஆகியோரின் கவிதைகளை
ஆற்றூரின் கச்சிதமுறைக் கவிதைகளுக்கு உதாரணங்களாகக் காணலாம்.
மரபின் ஆணிவேரில் கிளைத்த விருட்சம் என்று ஆற்றூரின் ஆளுமையைச்
சொல்லலாம். அதில் காலமாற்றத்தின் அடையாளங்கள் துலக்கமாகத் தென்படுகின்றன. மலையாளத்தின்
தந்தையான எழுத்தச்சனை முன்னிருத்தும் ஆற்றூர் கவிதை ‘ துஞ்சத்து எழுத்தச்சனுக்கும்
எனக்குமிடையில் மூன்று நான்கு நூற்றாண்டு தூரம்’ என்று தன் காலத்தைச் சொல்லுகிறது கேரள
வரலாற்றையும் கலைகளையும் பண்பாட்டையும் பகட்டின்றிப் பேசுகிற குரல் அவருடையது. அந்தப்
பண்பாட்டின் ஏற்கத் தகுந்த கூறுகளை வியக்கும் அதே குரல் காலத்தின் தூண்டுதலை ஏற்று
விமர்சிக்கவும் செய்கிறது. ‘உதாத்தம்’ ( மகத்துவம் ) என்ற கவிதையில் மலையாள மொழியின்
பக்திக் கவிஞர்களான பூந்தானமும் மேல்பத்தூரும் காந்தியுகக் கவிஞரான வள்ளத்தோளும் பாரம்பரியத்தின்
பால் பாயசம் அருந்தும்போது வெளியில் கஞ்சிக் கலயத்துடன் நிற்கும் சிறுவன் ஒருவனைப்
பற்றிப் பேசுகிறார். அவனுக்குப் பாயசம் மிச்சம் வைக்காத வெண்கல பானையைத் தூக்கியெறியச்
சொல்லி முடிகிறது கவிதை. ஆற்றூர் கவிதைகளில் உள்ளூர இயங்கும் மானுடச் சார்பின் எடுத்துக்காட்டு
இது. அவருடைய கவிதைகளின் மையமும் இதுவே.
ஆற்றூர் ரவிவர்மா 1930 ஆம் ஆண்டு திருச்சூர் மாவட்டம் ஆற்றூரில்
பிறந்தார். பிரசித்தி பெற்ற நம்பூதிரிக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ‘ ஆனால் வாழ்க்கையில்
ஒருபோதும் நம்பூதிரியாக இருந்ததில்லை’ என்று ஒருமுறை குறிப்பிட்டார். மறுமலர்ச்சிக்
காலகட்டத்தில் நம்பூதிரிகளில் போராளிகளாக இருந்த வி டி. பட்டதிரிப்பாடு, ஈ எம் எஸ்
நம்பூதிரிப்பாடு போன்றவர்கள் உருவாக்கிய சீர்திருத்தவாதத்தின் நிழலில் வளர்ந்தவர்.
மலையாள இலக்கியத்தில் முதுகலை பயின்று வெவ்வேறு கல்லூரிகளில் ஆசிரியப் பணிபுரிந்தார்.
தலைச்சேரி பிரண்ணன் கல்லூரியில் அவரிடம் பயின்ற மாணவர்களில் ஒருவர் இன்றைய கேரள முதல்வர்
பிணராயி விஜயன்.
சென்னையில் சில காலம் வாழ்ந்தவர் ரவிவர்மா. அந்தக் காலத்தில்
முளைவிட்ட இசைப்பித்து அவரைத் தமிழ் கற்றுக்கொள்ளத் தூண்டியது. ‘திருவையாறு தியாகராஜ
உற்சவத்துக்குப் போக விரும்பும் நீங்கள் பேருந்தில் போட்டிருக்கும் ஊர்ப் பெயர் கூடத்
தெரியாமல் எப்படி அங்கே போக முடியும்? என்ற சிந்தனையாளர் எம்.கோவிந்தனின் கேள்வியால்
உசுப்பப்பட்டுத் தமிழ் கற்றுக் கொண்டார். அது தமிழுக்கு ஒரு கொடையாக மாறியது. சுந்தர
ராமசாமியின் ‘ஜே ஜே சில குறிப்புகள்’, ‘ஒரு புளியமரத்தின் கதை’, ஜி. நாகராஜனின் ‘நாளை
மற்றுமொரு நாளே’, சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ ஆகிய நாவல்களை மலையாளத்தில்
மொழியாக்கம் செய்தார். அவை வெறும் மொழியாக்கப் பணியாக நின்று விடவில்லை. மலையாளத்துக்கும்
தமிழுக்குமான நெடுஞ்சாலையைத் திறந்துவிட்ட செயலாக அமைந்தது. அகிலனும் ஜெயகாந்தனும்
சிவசங்கரியும் வாசந்தியும்தான் நவீன தமிழ் எழுத்தாளர்கள் என்று நம்பிக்கொண்டிருந்த
மலையாள இலக்கிய உலகின் பார்வையை தமிழின் அசலான நவீன முயற்சிகளை நோக்கித் திருப்பிவிட்டார்.
மகாகவி பாரதி முதல் மகுடேசுவரன்வரை – ஈழக் கவிஞர்கள் சிலரையும் உள்ளடக்கிய – தமிழ்ப்
புதுக் கவிஞர்களின் திரட்டொன்றை மொழியாக்கம் செய்து வெளியிட்டார். மலையாளக் கவிஞர்களிடையே
தமிழ்க் கவிதையைப் பற்றிய வலுவான அறிமுகமாக அமைந்தது ‘புது நானூறு’ என்ற அந்தத் தொகுப்பு.
தமிழ் பக்தி இலக்கியத்தைப் பற்றிய அ.அ. மணவாளனின் நூலுக்கு ஆற்றூர் மேற்கொண்ட மலையாள
மொழியாக்கம் நுட்பமும் நேர்த்தியும் கொண்டது. அது தந்த உந்துதலில் கம்பராமாயண மொழியாக்கத்தில்
ஈடுபட்டிருந்தார். ஆனால் காலம் அவரை முடக்கிப் போட்டு இப்போது பறித்துக் கொண்டு விட்டது.
ஈழப் பிரச்சனையின் தீவிரமும் பாதிப்பும் சராசரி மலையாளிக்குப்
பிடிபடாத ஒன்று. இதற்கு மலையாள இலக்கியவாதிகளும் விலக்கல்ல. ஈழச் சிக்கலைப் பொருளாக்கி
மலையாளத்தில் எழுதப்பட்ட முதல் கவிதை ஆற்றூர் ரவிவர்மாவின் ‘மறுவிளி’ என்ற கவிதைதான்.
இந்தப் புரிந்துணர்வு ஒன்றுக்காகவே ரவிவர்மாவைத் தமிழ் இலக்கிய உலகம் மறவாமலிருக்குமாக.
தனது முன்னோடியாக ஆற்றூர் கருதியது பி.குஞ்ஞிராமன்
நாயரை. ‘மேகரூபன்’ என்ற கவிதையில் அவரைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார். ‘ சஹ்யனைவிடத் தலைநிமிர்வு; நிளாவை விட ஆழ்கருணை’. அந்தப் புகழ்மொழி எழுத்துப் பிசகாமல் ஆற்றூர்
ரவிவர்மாவுக்கும் பொருந்தும். அவரது கவியாளுமை மேற்குத் தொடர்ச்சி மலையைக் காட்டிலும்
உயரமானது; நிளா நதியை விடவும் ஆழமானது.
(இந்து தமிழ் திசை 29 ஜூலை 2019 யில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்.
நன்றி: இந்து தமிழ் திசை ஓவியம்: நன்றி மாத்ருபூமி நாளிதழ்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக