குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 ஜூலை, 2025

 




                                                               பஷீரின் கடிதம்

 


மலையாளத்தின் சிந்தனையாளரும் பேச்சாளரும் திறனாய்வாளரும் கல்வியாளரும் நித்திய பிரம்மச்சாரியுமான  சுகுமார் அழிக்கோடுக்கு வைக்கம் முகம்மது பஷீர் 1991 இல் எழுதிய கடிதம் இது. கவிஞர் சச்சிதானந்தன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். நன்றி – சச்சி மாஷ்.

 


@

மதிப்புக்குரிய தத்வமஸி

 

தாங்கள் அனுப்பிய குறிப்பைப் படித்துப் புரிந்து கொள்ள எங்களாலும் அண்டை வீட்டாராலும் முடியவில்லை. எனவே வழக்கம்போல மருந்துக் கடையில் கொடுத்தோம். அவர்கள் அதைப் படித்துப் பார்த்து 12 குளிகைகளைத் தந்தார்கள். இரண்டை எடுத்து வலது வாயில் போட முயன்றபோது அசரீரி ஒலித்தது. அந்த மாத்திரைகள் இரண்டும் பேதிக்கானவை. 10 மாத்திரைகள் மூச்சுத் திணறலுக்கானவை. நன்றி.

 

என்னுடைய திவ்விய திருஷ்டியை விய்யூர் நோக்கித் திருப்பினேன். தங்கள் இதயத்தை நன்றாகப் பார்த்தேன். இதயத்திலிருந்து 29 அன்று தாங்கள் என் வீட்டுக்கு சாப்பாட்டுக்கு வருவீர்கள் என்று புரிந்தது. நல்ல உணவைத் தயார் செய்கிறோம். அன்றைய தினம் எம்டியையும் என்பியையும் தங்களுடன் அழைத்து வருக . மலையாளம் எழுதவும் வாசிக்கவும் தெரிந்த்வர்கள் அந்தப் பகுதியில் இருந்தால் எம்டிக்கும் என்பிக்கும் கார்டு போடவும்.

 

தங்களுக்கு மலையாளம் கற்றுத் தருவதற்காக ஒரு பெண்ணைத் தங்கள் வசிப்பிடத்துக்கு அனுப்புகிறேன். பேரழகி. தாங்கள் அவளை மணம்முடிப்பதாக இருந்தால் எனக்கு மாதந்தோறும் 250 ரூ அனுப்பித் தரவேண்டும். தங்களுக்கு அவள் மூலமாகப் பிறக்கும் ஆண் பிள்ளைகளை என்னிடம் ஒப்படைத்து விட வேண்டும். ஒரு தற்கொலைப் படையை அமைப்பதற்காக.

 

இந்தக் கடிதத்தை யாரையாவது வைத்து வாசித்து ஞானி ஆவீர்களாக.

 

மங்களம்

கோழிக்கோடு

14 1 1991

@

தத்வமஸி – சுகுமார் அழிக்கோடு எழுதிய நூல். விய்யூர் -சுகுமார் அழிக்கோடு வசித்த இடம். 

எம்டி – எம்.டி. வாசுதேவன் நாயர். என்பி – என்.பி. முகம்மது – எழுத்தாளர்.

 

கடிதத்தை எழுதியவரும் கடிதத்தைப் பெற்றவரும் அதில் குறிப்பிடப் பட்ட ஆளுமைகளும் இன்று இல்லை. ஆனால் பஷீரின் இலக்கியப் பிரசித்தி பெற்ற குறும்புகள் ( குசும்புகள் ) இன்றும் வாழ்கின்றன.


இன்று ( ஜூலை 5 ) வைக்கம் முகம்மது பஷீரின் நினைவு நாள்.


வெள்ளி, 1 அக்டோபர், 2021

பொன்மான்












 

நேற்றைக்கு முன் தினம். செல்லத் தூறல் விழுந்து கொண்டிருந்தது. ஆனி ஆடியில் பொழிந்திருக்க வேண்டிய சாரல் மழை தாமதமாக வந்து சேர்ந்திருந்தது. மாடியறை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜன்னலுக்கு அப்பால் தெரியும் மின் கம்பிகளில் நீர் மணிகள் திரண்டு தொங்கின. சில துளிகள் உதிர்ந்தபோது பார்வையை நகர்த்தினேன். நீல நிறப் பறவை கம்பியில் அமர்ந்திருந்தது. முதலில் முகத்தை காட்டி உட்கார்ந்திருந்த பறவை சட்டென்று திரும்பி வாலைக்காட்டி அமர்ந்தது. ட்ரூவ் என்று ஒலியெழுப்பினேன். கேட்காத பாவனையில் மழையில் நனைந்து கொண்டிருந்தது. இன்னொரு ட்ரூவுக்குத் தலையை மட்டும் திருப்பி அலட்சியமாகக் கண்களை உருட்டிவிட்டுத் திரும்பவும் மழையில் நனைந்து கொண்டிருந்தது. கைபேசியை ஜன்னலுக்கு வெளியில் நீட்டிப் பிடித்து நாலைந்து படங்கள் எடுக்கும்வரை நீல வாலையும் சிறகையும் காட்டிப் போஸ் கொடுத்தது. மறுபடியும் ஒருதடவை ட்ரூவ் என்று சத்தம் கொடுத்தேன். உனக்கு வேறு வேலை இல்லை என்று வாலைக் குலுக்கிக் கம்பியிலிருந்து எவ்விப் பறந்தது. அதற்குள் மழையும் வலுத்தது. ஜன்னலை அடைத்து விட்டு நகர்ந்தேன்.
அது எங்கள் குடியிருப்புப் பகுதியில் அவ்வப்போது பார்க்கக் கிடைக்கும் பறவைதான். மீன்கொத்தி. முன்பு விளைமண்ணாகக் கிடந்த நிலம் இப்போது குடியிருப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. எனினும் அங்குமிங்குமாக நீரோட்டம் உள்ள பூமி. அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை திருவனந்தபுரத்துக்கும் கொல்லத்துக்கும் நீர்வழிப் போக்குவரத்து நடந்த பார்வதி புத்தனாறு கால்வாய் அருகில் இருக்கிறது. நீர் ஊறும் சதுப்பு. மழை நீரில் சிப்பிகளும் நத்தைகளும் பொடி மீன்களும் நீந்தும். அவற்றை இரை கொள்ள வரும் பறவைகளில் ஒன்றுதான் இந்த மீன்கொத்தி வகையறா.

எடுத்த படங்களை எந்த உத்தேசமும் இல்லாமல்தான் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தேன். நண்பர்கள் அம்பை, சேரன், தியடோர் பாஸ்கரன் மூவரும் பின்னூட்டம் இட்டார்கள். சேரன் அது குக்குறுவான் என்றார். பாஸ்கரன் மீன்கொத்தி என்றார். இரண்டையும் பார்த்ததில் பெயர்க் குழப்பம் ஏற்பட்டது. கேரளத்தின் புகழ் பெற்ற பறவையிலாளரான இந்து சூடனின் ‘ கேரளத்தில் பறவைகள்’, மற்றொரு பறவையியலாளரான சி.ரஹீமின் ‘ தென்னிந்தியப் பறவைகள்’ ஆகிய நூல்கள் சேகரிப்பில் இருக்கின்றன. அவற்றை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். அது மீன் கொத்திதான் என்று உறுதியானது. சிறகும் வாலும் நீல நிறம், வயிற்றுப் பகுதி காவி, மார்புப் பகுதியில் வெள்ளை, காதோரம் செம்பட்டையும் தவிட்டு நிறமும். ஆக நான் பார்த்தது மீன் கொத்தியைத்தான்.

பறவையை இனங்கண்ட மகிழ்ச்சியை விட அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது அதற்குக் கேரளத்தில் வழங்கும் விளிப்பெயர். அந்தப் பெயரைப் பல்லவியில் கொண்ட புகழ்பெற்ற திரைப்பாடலும் நினைவுக்கு வந்தது. வயலார் ராமவர்மா எழுதி சலீல் சௌதுரி இசையமைத்து யேசுதாஸும் மாதுரியும் பாடிய ‘நெல்லு’ படத்தின் பாடல். அதைக் கேட்கும் போதெல்லாம் பாட்டு முன்னிலைப் படுத்துவது இருகால் பறவையையா நாலுகால் விலங்கையா என்று தடுமாற்றம் ஏற்பட்டதுண்டு. ‘ நீலப் பொன்மானே, என்டெ நீலப் பொன்மானே’ என்று பாடலில் குறிப்பிடப்படுவது எது என்று குழம்பியதும் உண்டு. பல்லவியின் வரி அதைத் தெளிவாக்கும். ‘ வெயில் நெய்த புடைவை தருவாயா? என்று நாலு கால் மானிடம் கேட்க முடியாது. ஆகாயத்தில் உலவும் பறவையிடம் கேட்கலாம். ஏனெனில் மலையாளத்தில் மீன்கொத்திக்கு வழங்கும் சாதாரணப் பெயர் ‘பொன்மான்’.

இவையெல்லாம் இரண்டு நாட்களுக்கு முந்தைய சமாச்சாரங்களும் யோசனைகளும். இன்று காலை அறைக்குள் வந்து அமர்ந்தேன். ட்வீக் என்றொரு சத்தம். ஜன்னல் பக்கமாகப் பார்த்தேன். மார்பு வெள்ளை முந்தித் தெரிய நீல வாலைக் குடைந்து கொண்டு திட்டில் உட்கார்ந்திருந்தது ஒரு மீன்கொத்தி. முன்பு பிணக்கத்துடன் வாலைக் காட்டிய பறவை முக தரிசனம் அருளிக் கொண்டு உட்கார்ந்திருந்தது. ‘பொன் மானே’ என்று அழைத்ததும் தலையைக் குலுக்கியது. ‘பார்த்து விட்டாயா, போகட்டுமா?’ என்பதுபோல சின்ன உடலை அசைத்தது. ‘நீலப் பொன்மானே’ என்றதும் சரி என்று பறந்தது. பறந்துபோன பின்புதான் அதைப் படமெடுக்க மறந்தது உணர்வில் தட்டியது.


இன்று வந்தது பழைய பறவையா, இல்லை, புதிய பறவையா? தெரிய வில்லை. அன்று வந்த பறவைதான் இன்றும் வந்தி்ருக்க வேண்டும். அந்தப் பொன்மானுக்குத்தானே என்னை முன்னமே தெரியும்?






செவ்வாய், 28 செப்டம்பர், 2021

தி.ஜானகிராமன் கட்டுரைகள் - ஒரு வேண்டுகோள்

 

காலச்சுவடு பதிப்பகம் 2014  ஆம் ஆண்டு தி.ஜானகிராமன் சிறுகதைகளின் முழுத் தொகுப்பை வெளியிட்டது. இந்த நூலைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோதுதான் அச்சில் வெளிவந்தும் தொகுப்புகளில் இடம் பெறாத கதைகள் பற்றிய விவரங்கள் தெரியவந்தன. இலக்கிய ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், நண்பர்கள், ஜானகிராமன் மீது பற்றுக்கொண்டவர்கள் எனப் பலரது துணையுடன் கதைகள் திரட்டப்பட்டன. அவை ‘கச்சேரி’ என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றன.   

 

தி.ஜானகிராமன் சிறுகதைகள் – முழுத் தொகுப்பு, கச்சேரி – தொகுக்கப்படாத சிறுகதை – ஆகிய இரண்டு நூல்களுக்கான பணிதந்த உற்சாகமும் நிறைவும் தி.ஜானகிராமன் கட்டுரைகளைத் தொகுக்கும் எண்ணத்தை அளித்தன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுரைகளைத் தேடித் திரட்டும் வேலையில் ஈடுபட்டேன். ஜானகிராமனின் நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள், பயணக் கதைகள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டால் கட்டுரைகளின் எண்ணிக்கை குறைவே. அவற்றில் சில ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்ட தி.ஜானகி ராமன் படைப்புகள் – தொகுதி 2 இல் சேர்க்கப்பட்டுள்ளன. இவை தவிரவும் சில கட்டுரைகளை இந்த முயற்சியில் கண்டடைந்தேன். சிறுகதைகளுக்கு உதவியதுபோலவே முன் குறிப்பிட்டவர்கள் கட்டுரைகளைத் தேடவும் துணை புரிந்தார்கள். அரிய சில கட்டுரைகளைக் கண்டெடுத்துக் கொடுத்தார்கள். இவையனைத்தும் தொகுக்கப்பட்டு தி.ஜானகிராமன் கட்டுரைகள் என்ற நூலாக விரைவில் வெளியாக உள்ளது.

 

ஐந்து நூல்களுக்கு தி.ஜானகிராமன் முன்னுரை எழுதியுள்ளார். அவரது வாசிப்பு அனுபவத்தையும் இலக்கியக் கருத்தையும் சொல்பவை என்ற நிலையில் இந்த முன்னுரைகளும் கட்டுரைத் தொகுப்பில் சேர்க்கத் தகுதி பெற்றவை. சேர்க்கப்பட்டும் உள்ளன. எம்.வி. வெங்கட்ராமின் நித்ய கன்னி, ஆர்வியின் செங்கமலவல்லி, இந்திரா பார்த்தசாரதியின் ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன, ஆதவனின் இரவுக்கு முன்புவருவது மாலை, மாலனின் கல்லிற்குக் கீழும் பூக்கள் ஆகிய நூல்களுக்கு தி.ஜானகிராமன் முன்னுரை வழங்கியிருக்கிறார். இலக்கிய சிந்தனை அமைப்பின் சார்பில் வானதி பதிப்பகம் வெளியிட்ட 1978 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பான பசியிலும் அவரது முன்னுரை இடம் பெற்றிருக்கிறது. மாதத்தின் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 கதைகளை மதிப்பிட்டு அவர் வாசித்த விமர்சனக் கட்டுரையே முன்னுரையாக வெளியிடப் பட்டிருக்கிறது.

 

மேற்சொன்ன முன்னுரைகளில் ஐந்து தி.ஜானகிராமன் கட்டுரைகள் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆர்வியின் ‘செங்கமலவல்லி’ நாவலுக்கு தி.ஜானகிராமன் எழுதிய முன்னுரை கிடைக்கவில்லை. வானதி பதிப்பகம் வெளியிட்ட இந்த நாவலின் மூன்றாம் பதிப்பை மட்டுமே பார்வையிட முடிந்தது. அதில் தி.ஜானகிராமன் முன்னுரை இடம் பெறவில்லை. பதிலாக ஆர்வியே முன்னுரை எழுதியிருக்கிறார். நாவலின் முதல் பதிப்பு கலைமகள் காரியாலயம் வெளியீடாக வந்திருக்கலாம். பின்னர் வெளியான வானதி பதிப்புகளில் ஜானகிராமன் முன்னுரை நீக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க வாய்ப்புள்ளது.  

 

தி.ஜானகிராமனின் ‘செங்கமலவல்லி’ முன்னுரை குறித்து அறிந்தவர்கள் தகவல் அளிக்கும்படியும் முன்னுரையுடன் கூடிய நூலின் முதல் பதிப்பை வைத்திருப்பவர்கள் நூலையோ அல்லது முன்னுரையின் நகல் வடிவத்தையோ தந்து உதவுமாறும் அன்புடன் வேண்டுகிறேன். ஜானகிராமன் எழுதிய முன்னுரைகளில் ஒன்று மட்டும் இடம்பெறவில்லை என்ற விட்ட குறையைக் களைய உங்கள் ஒத்துழைப்பு துணைபுரியும்.

 

தி.ஜானகிராமன் எழுதிய கட்டுரைகள் வெளியான இதழ்கள், நூல்களை அளித்தும், அவை பற்றிய விவரங்களைப் பகிர்ந்தும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நூற்றாண்டு காணும் மகத்தான படைப்பாளியை மேலும் அணுக்கமாக உணர இந்த உதவி இன்றியமையாதது. நவீனத் தமிழின் எழுத்துக் கலைஞர்களில் ஒருவரைக் கொண்டாடுவதில் எல்லாருக்கும் பங்கு உண்டு.

 

நன்றி.

 

அன்புடன்

சுகுமாரன்

 

தொடர்புக்கான மின் அஞ்சல்: editor@kalachuvadu.com