வெள்ளி, 30 ஏப்ரல், 2010

என்ன வேண்டும் உங்களுக்கு?
உங்கள்
அன்றாடக் கடன்களுக்குத் தேவையானவையெல்லாம்
இந்த மூலையில் இருக்கின்றன

கழிப்பிடம், நீர்க்குழாய்,சவர்க்காரம்,துவாலை,
வாசனைத் திரவியங்கள்,ஒப்பனைப் பொருட்கள்
முகம் மூடும் கவசங்கள்

நீங்கள்
பசியாறுவதற்கானவையெல்லாம்
இந்த உணவு மேஜையில் இருக்கின்றன

அவித்தவை, பொரித்தவை, வதக்கியவை,
காய்கள்,பழங்கள், உலர் கனிகள்,
பித்தம் கசியும் எட்டிக்காய்.

உங்கள்
தாகம் தணிப்பதற்கான பானங்களெல்லாம்
இந்தக் குவளைகளில் இருக்கின்றன

பால், குடிநீர், தேநீர், பழச்சாறு,
கண்ணாடிக் கோப்பையில் கலப்படமற்ற நஞ்சு.

நீங்கள்
இளைப்பாறவும் புத்துணர்வுபெறவுமானவையெல்லாம்
இந்த அறையில் இருக்கின்றன

படுக்கை, நாற்காலி, குடிநீர்ப் பானை,
சங்கீதம், புத்தகம்,
அவமதிப்பின் கனத்த சுவர்கள்.

தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள்
என்னதான் உங்கள் தேவை?

6 கருத்துகள்:

 1. சங்கர்

  இது உங்கள் கவிதையா? மொழிபெயர்ப்பா? அழகிய கவிதை. அருண் கொட்லாகர் குறித்த குறிப்பும் அருமை.

  ஷங்கர்ராமசுப்ரமணியன்

  பதிலளிநீக்கு
 2. ஒவ்வொரு பத்தியின் இறுதி வரியிலும் மிளிர்கிறது கவிதையும் வாழ்வின் நிதர்சனமும்.
  சில நேரங்களில் - பல நேரங்களில் கூட நான் தேர்ந்தெடுப்பது என்னை தேர்ந்தெடுப்பதும் இவ்வாறாக ஆகிவிடுகிறது
  //முகம் மூடும் கவசங்கள் // //பித்தம் கசியும் எட்டிக்காய்// // கலப்படமற்ற நஞ்சு// //அவமதிப்பின் கனத்த சுவர்கள்//

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. சங்கர், இந்தக் கவிதை நான் எழுதியதுதான், நான் எழுதியதுதான், நான் எழுதியதுதான்.

  உங்களுக்கும் வேல்கண்ணனுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 5. உயிர்மையில் படித்தேனோ...?!

  பதிலளிநீக்கு