திங்கள், 29 ஜூலை, 2013

ஒரு மீள் பதிவு - கலாப்ரியாவின் ’ நான் நீ மீன்’ தொகுப்பு வெளியீடு


















ல்லாருக்கும் வணக்கம்.
நண்பர் கலாப்ரியாவின் புதிய கவிதைத் தொகுப்பை வெளியிட்டுப் பேசும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கும் உயிர்மை பதிப்பகத்துக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே வெளியிடப்பட்ட 'நான் நீ மீன்' தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதைகளில் எனக்குப் பிடித்த ஒரு கவிதையை வாசித்து என்னுடைய பேச்சைத் தொடர விரும்புகிறேன். 'மந்திரச் சிமிழ்' என்ற கவிதை எனக்குப் பிடித்துப் போக முதல் காரணம் - அது கவிதையாக இருக்கிறது. கவிதையல்லாத நிறைய சமாச்சாரங்களுக்கு இடையில் ஒரு கவிதையை வாசிக்கக் கிடைத்த மகிழ்ச்சியால் பிடித்துப் போனது. இரண்டாவது காரணமும் இருக்கிறது. சுய நலமான காரணம். அது என்னவென்பதைக் கவிதையை வாசித்து முடிப்பதற்குள் நீங்களே புரிந்து கொள்வீர்கள். இனி கவிதை.

இதை
வாசிக்கத் தொடங்கி விட்டீர்களா,
எனில் நீங்கள்தான்
ஏழு கடல்தாண்டி
ஏழுமலைதாண்டி
மந்திரவாதியின் உயிர் இருக்கும்
சிமிழ் தேடிப் போகும் இளவரசன்.

முதல் கடலின் கரையில்
நம்பிக்கையளிக்கும் விதமாய்
'
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது' என்கிறது
பிரமிளின் வண்ணத்துப் பூச்சி

மலையேறி இறங்கிக்
கடலேகும் முன் கழிமுகத்தில்
அள்ளிப் பருகிய நீரில்
சுகுமாரன் கை கவிழ்த்த நீரும்
கலந்திருக்கிறது

கானகமொன்றின் இசை
உங்கள் முகம் கை கழுத்தைத்
தழுவி உவகையுறுகிறது
நகுலனின் அம்மா என
'
நண்பா, அவள் 
எந்தச் சுவரில் 
எந்தச் சித்திரத்தைத் தேடுகிறாள்' என
அவர் காதில் விழும் குரலை
நீங்களும் செவியுறுகிறீர்கள்
அது அவரது அம்மாவா
கொல்லிப் பாவைகளா

தீவை விட்டுத் தெப்பத்தை
அலையுள் சரிக்கும்பொழுது
கரையில் வேறெதுவும்
செய்ய முடியாமல்
ஒதுங்கப் பாடை நிழலுமின்றிப்
பார்த்துக் கொண்டிருக்கிறது
ஞானக்கூத்தனின் நாய்

தெப்பம் சிதையக்
கடலுக்குக் கீழ் 
ஓட்டமும் நடையுமாய்
அலைந்து கொண்டிருக்கின்றன 
தேவதச்சனின் அன்பின் சிப்பிகள்

பொன்னிலைகள் ஆபரணமாய் உதிர்ந்து கிடக்கும்
மரத்தின் கழுத்தைக் காலடி எனக் கற்பித்து
இளைப்பாறியதை நினைக்கக்
கவ்விக்கொள்ளும் தேவதேவனின் வெட்கம்

கண்டு கொள்கிறீர்கள்
பைய அருகிருந்து
குருடனின் சுயமைதுனம் பார்க்கும்
ஜோடிக் கண்களென 
இரண்டு வண்டுகளைச் சிமிழுக்குள்
எதில் மந்திரவாதியின் உயிர்

படைப்பின் மகத்துவம் புரிந்த
வாசகன் நீங்கள்
கொல்ல மனமின்றி
இரண்டையும் தப்பவிட்டு
மறுபடியும் தேடத் துவங்குகிறீர்கள்
இம்முறை என்னோடு.



ண்பர்களே, இன்று இங்கே தங்களுடைய புதிய தொகுப்புகளை வெளியிட்ட இரண்டு கவிஞர்களுடனும் எனக்குத் தொடர்பும் உறவும் இருக்கிறது. கலாப்ரியா, அய்யப்ப மாதவன் இரண்டு பேருடைய தலா ஒரு தொகுப்புக்கு முன்னுரை எழுதியிருக்கிறேன். அந்த அடிப்படையில் இந்த மேடையில் நிற்பது மகிழ்ச்சியளிக்கிறது. பொதுவாகவே கவிதை பற்றிப் பேசுவதில் எனக்கு மகிழ்ச்சி உண்டு. கவிதை ஆர்வலனாக நான் வாசிக்கிற சிந்திக்கிற யோசிக்கிற மொழியில் கவிதை என்னவாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி. கவிஞனாக நானும் அதே மொழியில் எழுதுகிறவன். அதனால் கவிதையைப் பற்றிய பேச்சு நான் எங்கே இருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ளுகிற மகிழ்ச்சி. ஆனால் எல்லா சமயத்திலும் கவிதையைப் பற்றி மகிழ்ச்சியாகவே பேசிவிட முடிவதில்லை. 

தமிழில் இன்று ஏராளமான கவிதைகள் இருக்கின்றன. அதை விட அதிக எண்ணிக்கையில் கவிஞர்களும் இருக்கிறார்கள்.எல்லாக் கவிதைகளையும் எல்லாக் கவிஞர்களையும் பற்றிப் பேசப் பேராசை இருக்கிறது. ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை. சில கவிதைகளைப் பற்றிப் பேசலாம். அது நம்முடைய இலக்கிய அறிவுக்கு நல்லது. சில கவிஞர் களைப் பற்றிப் பேசலாம். அது நம்முடைய இலக்கிய வளர்ச்சிக்கு உதவும். சில கவிதைகளையும் சில கவிஞர்களையும் பற்றிப் பேசாமலிருக்கலாம். அது நம்முடைய உடல் நலத்துக்கும் மனநலத்துக்கும் நல்லது. அண்மையில் கவிஞர் ஒருவர் தொலைபேசியில் அழைத்திருந்தார். அவருடைய வெளிவரவிருக்கும் தொகுப்புக்கு முன்னுரை எழுதித் தரச் சொல்லிக் கேட்டார். ஏற்கனவே முன்னுரைக் கவிஞன் என்ற நற்பெயரைப் பெற்று விட்டேன். அதனால் இனிமேல் யாருக்கும் முன்னுரை எழுதுவதாக இல்லை. மன்னிக்கவும் என்றேன். மறுமுனையிலிருந்து வசவுமழை பெய்யத் தொடங்கியது. இதுவரை நான் முன்னுரை எழுதிய கவிதைப் புத்தகங்களின் ஆசிரியர்களின் பெயரைக் குறிப்பிட்டு அதையெல்லாம் விட மோசமான கவிதையைத் தான் எழுதவில்லை என்று ஆர்ப்பாட்டம் செய்து விட்டார். அவர் பேசியது வெளிநாட்டிலிருந்து என்பதால் தப்பித்தேன். உள்ளூராக இருந்தால் அவர் பேச்சில் தெரிந்த ஆவேசத்துக்கு என்னை தேக உபத்திரவம் செய்திருந்தாலும் ஆச்சரியமில்லை. அதிலிருந்து ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டேன்.கவிஞன் என்று அறியப்பட கவிதை மட்டும் எழுதினால் போதாது காட்டுக் கூச்சல் போடவும் தெரிந்திருக்க வேண்டும். தன்னுடைய கவிதைகள் மூலமாகவே தன்னை நிறுவிக் கொண்டவர் கலாப்ரியா. எழுத வந்த நாள் முதல் இன்றுவரை அவரைப் பின் தொடர்பவனாகவே இருக்கிறேன். அதிகம் பேச வாய்ப்புத்தரும் கவிதைகளை எழுதியிருப்பவர். கவிதைகளைப் பற்றி விரிவாக ஒரு முன்னுரையிலும் சுருக்கமாக இரண்டு மேடைகளிலும் பேசியிருக்கிறேன். இங்கே பேசக் கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. அதற்குக் காரணமும் அவர்தான். நினைவின் தாழ்வாரங்கள் என்ற அவருடைய புத்தகத்தின் முன்னுரையில் ஒரு வாசகம் இருக்கிறது. 'பாராட்டை மட்டுமே விரும்புகிற சாதாரணனாகிய நான்' என்று ஒரு வாசகம். அந்த வாசகத்தைப் படித்த பிறகு அவரைப் பற்றிப் பேச ஒருவிதமான தயக்கம் வந்து விட்டது. யோசித்துப் பார்த்தால் எழுதுகிற எல்லாரும் பாராட்டை மட்டுமே விரும்புகி றவர்கள்தான். அதை அவர்கள் அவ்வளவு வெளிப் படையாகச் சொல்லு வதில்லை. கலாப்ரியா சொல்கிறார். அந்தப் பாசாங்கு இல்லாத தன்மைதான் அவருடைய இயல்பு. அவரது கவிதைகளின் இயல்பு.

நவீனக் கவிஞர்களில் தீர்க்கதரிசி கலாப்ரியா என்று நினைக்கிறேன். இன்றைக்கு எழுதப்படும் கவிதைகளைப் பற்றி மிக நீண்ட காலத்துக்கு முன்பே ஆருடம் எழுதியவர் .

'
படிம 
உருவக 
குறியீட்டு இடையீடில்லாத
நிர்வாணக் கவித்துவம் வேண்டி
நீ
எப்போது தியானிக்கப் போகிறாய்? என்பது அவர் கவிதை. இன்று எழுதும் புதியவர்கள் இந்த தியானத்தைத்தான் கவிதையில் மேற்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு எழுதப்படுகிற பெரும்பாலான கவிதைகள் 'திறந்த கவிதைகளாக' plain poetry ஆக இருப்பவை. கலாப்ரியாவைப் படித்துத்தான் இதைச் செய்தார்கள் என்று சொல்ல வரவில்லை.கவிதை ஆக்கத்தில் நிகழும் தொடர்ச்சியாக இதைச் சொல்லலாம். அதற்கு உந்துதல் கொடுத்த கவிஞர்களில் ஒருவர் கலாப்ரியா.

கலாப்ரியா கவிதைகளில் நான் முக்கியமானதாகக் கருதுவது மூன்று அம்சங்களை.

ஒன்று; காட்சிப்படுத்துதல்.நான்கைந்து காட்சிகளை ஒன்றின் பின் ஒன்றாகவோ பக்கம் பக்கமாகவோ முன்னும் பின்னுமாகவோ அடுக்கி வைத்து விட்டுக் கவிதை என்கிறார். வாசிக்கவும் வாசித்ததும் இதைப் போல நாமும் எழுதி விட முடியுமே என்று சுலபமாக எண்ணவைக்கிற கவிதையாக்கம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. அந்தக் காட்சிகளின் தேர்வில் அவர் காட்டுகிற கவனமும் அவை ஒன்று சேரும்போது பொருள்தருவதாக அமைவதும்தான் கவிதையாக மாறுகிறது. 

இரண்டாவது: நவீன கவிதையில் ஒரு இடத்தின் சித்திரமும் அங்கே வாழ்பவர்களின் சூழலையும் சித்தரித்தவர் கலாப்ரியா. ஒரு சமூகத்தின் அகப் பிரச்சனைகளை அவர் அதிகம் ஆராயவில்லை. புறத் தோற்றங்களைச் சார்ந்து அந்த சமூகத்தின் அந்த மனிதர்களின் இருப்பைப் பற்றிச் சொல்லி யிருக்கிறார். இந்தத் தொகுப்பிலும் அந்த மாதிரியான ஒரு கவிதை இருக்கிறது. வீடுகளையொட்டிய வாய்க்காலில் நல்ல நீர் ஓடியபோது அதை எல்லாரும் பயன்படுத்துகிறார்கள். குழந்தைகள் வாழைமட்டையில் தெப்பம் செய்து விளையாடுகிறார்கள். காலப்போக்கில் வாய்க்கால் சாக்கடையாக மாறுகிறது. நீர் தேங்குகிறது. அதில் பிணம் மிதக்கிறது. இப்போதும் எல்லாரும் கழியுடன் சாக்கடையை நெருங்குகிறார்கள். மிதக்கிற பிணம் தங்கள் வீட்டு எல்லைக்குள் வந்து விடக் கூடாது என்று கழியால் தள்ளி விடுகிறார்கள். 'வளர்ச்சி' என்ற கவிதை இது. இந்தச் சித்திரமும் அதற்குள் இருக்கும் கதைத்தன்மையும் தான் கவிதை ஆகின்றன. இது அவர் கவிதைகளில் முக்கியமான அம்சம். கலாப்ரியா சிறுகதைகள் எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் எழுதாமல் விட்ட பல சிறுகதைகள்தாம் அவரிடம் கவிதையாகியிருக்கின்றன.

மூன்றாவது: தமிழ்க் கவிஞர்களில் வாசகர்களின் பங்களிப்பை அதிகம் கேட்கிற கவிஞர் கலாப்ரியா. வாசகனை சக கவிஞனாக்குபவை அவரது கவிதைகள். நான்கைந்து காட்சிகளை முன்னால் வைத்து விட்டு நகர்ந்து விடுகிறார். அவற்றை இணைக்கிற வேலை வாசகனுடையது. அவன் அதைச் செய்கிறபோதுதான் கவிதை முழுமையடைகிறது.

இப்படி நிறையப் பேச இடமளிப்பவை கலாப்ரியாவின் கவிதைகள். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக எழுதி வருபவர். அவருடைய கவிதைகளின் மொத்தத் தொகுப்பு 2000 ஆவது ஆண்டில் தமிழினி வெளியீடாக வந்தது. அதற்குப் பிறகும் இரண்டு தொகுப்புகள் வந்திருக்கின்றன. post complete collection வரிசையில் இந்த 'நான் நீ மீன்'மூன்றாவது தொகுப்பு. மூன்று தலை முறைகளைத் தாண்டியும் பேசப்படும் பெயராகக் கலாப்ரியா இருப்பது அவருடைய வாசகனாக எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. 'பெயர்களின் நிழலை அழிய விடுவதில்லை ஒளி' என்று இந்தத் தொகுப்பில் ஒரு கவிதையில் அவரே குறிப்பிடுகிறார்.

பெயர்களைப் பற்றிச் சொல்லும்போது ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. கலாப்ரியா சம்பந்தப்பட்டதுதான்.அவருடைய 'வனம் புகுதல்' தொகுப்புக்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன். முன்னுரையை எழுதி அவருக்கு அனுப்பிய பிறகு அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. 'இந்த முன்னுரையில் 37 இடங்களில் 'கலாப்ரியா' என்று என் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். படிக்க சந்தோஷமாக இருக்கிறது' என்று எழுதியிருந்தார். படித்ததும் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. என்னடா இது, ஒருவன் கிட்டத்தட்ட ஒரு மாதம் இந்த ஆளின் கவிதைகளை வாசித்து, அரை மாதம் குறிப்பெடுத்து, ஐந்தாறு நாள் வார்த்தை வார்த்தையாகத் திரட்டி பத்து பக்கங்களுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அந்த ஆள் இத்தனை இடத்திலே என் பேர் வந்திருக்கு என்று பதில் எழுதிறாரே என்று இருந்தது. யோசித்துப் பார்த்த போது இந்த 'சௌந்தர்யக் கிறுக்குதானே கவிதைக்கு அடிப்படை' என்ற ஞானம் வந்தது. சிரித்துக் கொண்டேன். இந்தப் பேச்சிலும் 'கலாப்ரியா' என்ற பெயரை 15 முறை மனநிறைவுடன் குறிப்பிட்டிருக்கிறேன் என்ற அறிவிப்புடன் என் பேச்சை நிறைவு செய்கிறேன். எல்லாருக்கும் வணக்கம். நன்றி.
இடுகையிட்டது சுகுமாரன் நேரம் 10:27 AM http://img2.blogblog.com/img/icon18_edit_allbkg.gif 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக