புதன், 20 ஏப்ரல், 2016

அறிதலின் தீ













                                   கவிஞர்கள் அ.ரோஸ்லின், லாவண்யா சுந்தரராஜன் ஆகியோருடன்




ண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

லாவண்யா சுந்தரராஜனின் 'அறிதலின் தீ' கவிதைத் தொகுப்பைப் பெற்றுக் கொண்டு பேசும் வாய்ப்பை அளித்த கவிஞருக்கும் புனைவு அமைப்பின் சர்வமுமான நண்பர் செந்திக்கும் முதலில்  எனது நன்றிகள். லாவண்யாவின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. முதல் தொகுப்பு 'நீர்க்கோல வாழ்வை நச்சி'  2010 இலும் இரண்டாவதுதொகுப்பு 'இரவைப் பருகும் பறவை' 2011 இலும் வெளிவந்தவை. மூன்றாவது தொகுப்பு இன்று இங்கே வெளியாகிறது.

இந்த மூன்று தொகுப்புகளையும் ஒருசேரப் பார்த்ததில் லாவண்யாவின் வளர்ச்சி தென்படுகிறது. முதல் தொகுப்பில் 56 கவிதைகள். 64 பக்கங்கள். இரண்டாவதில் 60 கவிதைகள்  80 பக்கங்கள். மூன்றாவதில் 68 கவிதைகள். 96 பக்கங்கள். அளவு ரீதியில் இது படிப்படியான வளர்ச்சிதான். ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 184 கவிதைகள் என்பது என்னைப் போன்ற வெளிப்பாட்டுக் கஞ்சனுக்குப் பொறாமை ஏற்படுத்தக் கூடியது. இந்தக் கவிதைகள் குணரீதியாக எப்படிவளர்ந்திருக்கின்றன , எந்த அளவு முன்னேறி இருக்கின்றன என்ற விஷயத்துக்குப் பிறகு வரலாம்.  பக்க எண்ணிக்கை யையும் கவிதை எண்ணிக்கையையும்  குறிப்பிட்டுச் சொல்லக் காரணம் லாவண்யா தொடர்ச்சியாகக் கவிதை எழுத்தின் மீது காட்டும் ஈடுபாடு; பெரும்பான்மைப் பொழுதுகளைக் கவிதையின் வரவுக்காகத் திறந்து வைத்திருக்கும் மனநிலை. இவை இரண்டையும் சுட்டிக் காட்டுவதற்காகவே இதைச் சொல்கிறேன். இந்த ஈடுபாடும் , மனநிலையும்தான் அவரைக் கவிதையாக்கத்துக்குத் தூண்டுகின்றன என நினைக்கிறேன். சரளமாகக் கவிதைகள் எழுதக் காரணம் என்று நினைக்கிறேன். அந்தச் சரளம்தான் அதிக எண்ணிக்கையில் எழுதவும் உத்வேகம் கொடுக்கின்றன. இந்தச் சரளமும் எண்ணிக்கைப் பெருக்கமும் தான் அவருடைய பலமும் பலவீனமும்.



லாவண்யாவுக்கு எல்லாமும் கவிதைக்கான பாடுபொருட்களாகின்றன. குளியறையில் நெளியும் மண்புழுவைப் பார்த்தாலும் கணினிப் பெட்டியில் கவிந்திருக்கும் கடிதங்களைப் பார்த்தாலும் பயணத்துக்காகக் காத்திருக்கும் குடும்பத்தைப் பார்த்தாலும் லாவண்யாவின் கவிதை ஊற்று மடை திறந்து பொங்கி விடுகிறது. அதை அந்தப் பொழுதின் உடனடி எதிர்வினைகளுடன் கவிதையாக்கி விடுகிறார். கவிதைகளின் இருப்பில் ஒரு எண்ணிக்கை கூடி விடுகிறது. இதில் மறைந்திருக்கும் பலமும் பலவீனங்களும் பற்றித் தான்  சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஏனெனில் இது லாவண்யா என்ற ஒரு கவிஞரின் பிரச்சனை மட்டுமல்ல; இன்று எழுதப் படும் பெரும் பாலான கவிதைகளின் சிக்கலும் கூட.

மிக அதிகமான எண்ணிக்கையில் கவிதைகள் எழுதப்படும் காலம் இது. இந்தத் தொகுப்புக்கான முன்னுரையில் நாஞ்சில்நாடன் கொஞ்சம் வருத்தத்துடன்  குறிப்பிடுகிறார். 'தமிழில் எழுத ஆளற்றுப் போய்க் கொண்டிருக்கிறது சிறுகதை. நாவல் வரத்து வறண்டு கொண்டிருக்கிறது' என்று. அவர் சொல்ல வரும் பின்  புலம் வேறு. நல்ல படைப்புகளை வகைப்படுத்தி தலித்தியம் பெண்ணியம் முற்போக்கு என்று காரணங்கள் தேடுவதைப் பற்றிய ஆதங்கத்தில் அதைச்  சொல்ல வருகிறார். அப்படி யெல்லாம் வகைப்படுத்தி லேபிள் ஒட்டிக் கொண்டு யாரும் எழுத வந்து விட முடியாதுதான். ஆனால் காலத்தையொட்டிக் கவிதையில் நிகழும் மாற்றங்கள்தாம் இந்த வகைமைகளை முன்வைக்கின்றன. அதையொட்டிய சிந்தனைகள்தான் புதிய முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கின்றன.

தொண்ணூறு களின் இறுதியில் தொடங்கிப் பெரும் வீச்சை ஏற்படுத்தியவற்றில் பெண்ணெழுத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அப்படி ஒரு வீச்சு உருவாகாமல் இருந்தால், அந்த வகையில் சேர்க்கப்பட்ட கவிதைகள்  விவாதிக்கப்படாமல் இருந்தால் கவிதைப் பரப்பு இவ்வளவு விரிவாக ஆகியிருக்காது. கொஞ்சம் அதிகப்படியாகச்  சொன்னால் பெண்ணெழுத்துக்கு இவ்வளவு முதன்மை கற்பிக்கப்படாமல் இருந்திருந்தால் ஒருவேளை  லாவண்யாவும் ரோஸ்லினும்  கவிதையாக்கத்துக்கு வராமலே இருந்திருக்கக் கூடும். இந்தச் சூழல் திறப்புதான் புதிய போக்குகளை நிகழ்த்தியிருக்கிறது. தலித்தியம் சார்ந்தும்  இந்த விஷயத்தை பொருத்திப் பார்க்கலாம்.

இந்தப் பரப்புத்தான் தற்காலக் கவிதையின் வலு என்று நினைக்கிறேன். அந்த வலுவை நிலை நிறுத்துவதுதான் தொடர்ந்து வரும் கவிஞர்களின் வேலையாக அமையும். இந்த வேலையை ஏற்கனவே உருவாக்கப்பட்ட போக்கிலேயே தொடர்வது, புதிய அம்சங்களுடன் தொடர்வது என்ற இரண்டு நிலைகளாகப் பார்க்கலாம். துரதிருஷ்டவசமாக தமிழில் முதலாவது நிலையே தொடர்கிறது. அது ஒரு புதிய கவிஞருக்கு எளிதாகவும் சௌகரியமாகவும் இருக்கிறது. தொண்ணூறுகளில் பெரும் வீச்சைக் காட்டிய பெண்நிலைக் கவிதைகளும் தலித்தியக் கவிதைகளும் இன்று தேக்கமடைந்து நிற்பது இதனால்தான். இது மொத்தக் கவிதை இயக்கத்தையும் தேங்கி நிற்கச் செய்கிறது. இதுதான் நமது கவிதையின் இன்றைய நிலை என்று நினைக்கிறேன். வெறும் டெம்ப்ளேட் கவிதைகள் தாம் இன்று நம்மிடையே அதிகம். இந்தச் சூழலில்தான் லாவண்யாவின் கவிதைகளைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. லாவண்யாவின் முதல் இரண்டு தொகுப்புகளுக்கும் ஒரு பொது இயல்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். அந்தக் கவிதைகளின் மையமான பொருள் அன்பைத் தேடுவது. அல்லது அன்பைப் பற்றி வியப்பது. அன்பின்மை கண்டு வருந்துவது. இதை இரண்டாவது தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் சொல்லவும் செய்திருந்தேன். அன்பு, பிரியம் என்ற வார்த்தைகள் இல்லாமல் அவரால் கவிதை எழுதவே வராதோ என்று கூடத் தோன்றியிருந்தது. அதில் ஒரு கவிதையின் தலைப்பு பிரியங்களின் பிரியம் என்று இருந்தது என்றும் நினைவு. 'பெருங்கருணையோடிருக்கும்  பிரியங்களுக்கும் / ப்ரியத்தைத் தவிர / காரணிகள் வேறு எப்போதும் இல்லை/' என்று முந்தைய தொகுப்பில் இட்ம் பெற்ற கவிதை வரிகளையே லாவண்யாவின் பார்வையாகச் சொல்லலாம். இந்தத் தொகுப்புக் கவிதைகளில் பிரியம் இருக்கிறது. கூடவே பிரியத்தைப் பின்புலமாகக் கொண்டு வேறு பலவற்றை அறிந்து கொள்ளும் எத்தனம் இருக்கிறது. லாவண்யாவின் மூன்றாம் தொகுப்புக் கவிதைகள் முன்னேறியிருப்பது அல்லது வளர்ச்சியடைந்திருப்பது இந்த வகையில்தான்.

இரண்டு கவிதைகள் ஒப்பிட்டுச் சொல்வதன் மூலம் இந்த வித்தியாசத்தைச் சுட்டிக் காட்ட முடியும் என்று நினைக்கிறேன். 'நிராகரிப்பின் ரணத்தை' என்ற கவிதை முதல் தொகுப்பில் இடம் பெற்றிருப்பது.

அளவில்லாத அன்பு
ஆழமான பாசம்
நெஞ்சம் நிறைக்கும் நட்பு
தோட்டத்தில்
நிறைந்து பூக்கும் ரோஜா மல்லிகை
இன்ன பிறவென எல்லாம் கிடைத்தும்

எதைக் கொண்டும்
நிரப்ப முடிவதில்லை
யாரோவாகிப் போன
நீ தந்த நிராகரிப்பின் ரணத்தை.

இந்தக் கவிதையில் இருக்கும் தொனிக்கு முற்றிலும் மாறான அல்லது எதிரான தொனியில் எழுதப்பட்டிருக்கிறது புதிய தொகுப்பின் கவிதை 
 'அடையாளமற்றுப் போனவள்'  ( பக் 60 அறிதலின் தீ )


லாவண்யா சரளமாகக் கவிதை எழுதுகிறார். அதனாலேயே பல கவிதைகளில் கவிதையாக்கத்துக்குரிய நிதானம் கைவராமல் போகிறது. எடுத்துக் கொண்ட பாடுபொருள் பற்றி இன்னும் சிறிது சிந்தித்திருந்தால் மிகச் செறிவாக அமைந்திருக்கக் கூடிய பல கவிதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. அப்படிச் செய்வதை அவரது மனநிலை அல்லது கவிதை அவசரம் தடை செய்து விடுகிறது என்று தோன்றுகிறது. அவசரம் என்ற தலைப்பில் உள்ள கவிதையைப் பார்ப்போம். பக். 71. ஆனால் லாவண்யாவின் மொத்தக் கவிதை இயல்பு என்று இதுவல்ல. ஏனெனில் மிகுந்த நிதானமாகவும் சொற் தேர்ச்சியுடனும் அமைந்த கவிதைகளும் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. அவைதான் அவரைக் கவனத்துக்கு உரியவராக ஆக்குகின்றன.

முன்பே சொன்னதுபோல லாவண்யாவுக்கு எல்லாம் கவிதைக்கு உரியவைதான். கிணறு, மலை, பழைய புத்தகம், தாமதமாக வரும் பஸ் ... எல்லாமும் அவருக்குக் கவிதைக்குரிய பொருட்கள்தாம். கிணற்றுக்கும் அவருக்கும் ஏற்படும் மன நெருக்கம்  உடனடியாகக் கவிதையாகி விடுகிறது. இது கவிதை ஆகுமா? எப்படி ஆகும்? என்ற கேள்விகள் எதுவும் அவரிடம் எழுவதில்லை. அந்த மனநிலையை அப்படியே வார்த்தைகளில் இறக்கி வைத்து விடுவதுதான் அவர் செய்யும் வேலை. அந்த மன நிலையின் இயல்பான எழுச்சி குலையாமல் வேறு தளத்துக்குக் கவிதையை மேலேற்ற அவர் தயாராவதில்லை. 'மலையோடே இருக்கும் மலை' என்ற தலைப்பில் உள்ள கவிதை இன்னும் கொஞ்சம் சிந்திக்கப் பட்டிருந்தால் இப்போது இருப்பதை விட நேர்த்தியான கவிதையாக மாறியிருக்கும் என்று  தோன்றுகிறது.

இது லாவண்யாவின் சிக்கல் மட்டுமல்ல; இன்று எழுதப்படும் பல கவிதைகளின் சிக்கலும் கூட. இப்படிச் சொல்வதன்  அர்த்தம் கவிதையை  உட்கார்ந்து ராவி மினுக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல; கவிதையின் வரிகளை நமக்குள் உணர்ந்து பார்க்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால் கவிதை எளிமையாகத் தெரியும் மகா சிக்கலான வடிவம். சமகாலத்திய கவிதைகள் பழைய கவிதைக் கூறுகளிலிருந்து விடுபட்டு எளிமையான கூறுதலையே முதனமையாகக் கொண்டிருக்கின்றன. அதனாலேயே மிக அதிகமான கவிதைகள் எழுதப்படவும் செய்கின்றன. அதனாலேயே விரைவில் எந்தச் சுவடும் இல்லாமல் மறைந்தும் போகின்றன. அந்த ஆபத்திலிருந்து விடுபட்டிருப்பவை லாவண்யாவின் கவிதைகள் . இவை பெரும்பாலும் எளிமையானவை.  எளிமையை மீறி இன்னொரு தளத்தில் பொருள்படும் தொனியைக் கொண்டிருப்பவையும் கூட. முன்பே சொன்ன மலைக் கவிதையைப் பார்க்கலாம். இதில் இடம் பெறும் சொற்கள் இன்னும் வலுவானவையாக இருந்திருக்கலாம் என்ற குறையை மீறி இந்தக் கவிதையில் இன்னொரு பொருள் மிகவும் இயல்பாக உருவாகிறது. சொல்லப் பட்டதைக் கடந்த ஒன்றைச் சுட்டிக் காட்டுவதுதானே கவிதை? 2 X 2 = 4 என்பது  உண்மை. அதைச் சொல்வது வாய்ப்பாடு. ஆனால் 2 X 2 எப்படி நான்காகிறது என்பதைச் சொல்லத்தானே கவிதை? வீடு திரும்பும்போது உடன் வராத மலை மட்டும் அங்கேயே இருக்கக் கூடும்? ஏன் என்று வாசிப்பவனை யோசிக்க வைப்பதில்தான் இந்த வரிகள் கவிதையாகின்றன.

லாவண்யாவின் கவிதைகளில் அறைகூவல்களோ, வலியுறுத்தல்களோ இல்லை. பொதுவாகப் பெண்ணெழுத்துகளில் வெளிப்படும் முழக்கங்களோ பெண்ணிய சார்புகளோ அநேகமாக இல்லை. ‘பெண்ணிற்கான அடையாளம் எதையும் என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம்என்ற எச்சரிக்கையை தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒரு கவிதை முன்வைக்கிறது. தான் கவிதைக்குள் உருவாக்கும் உலகம் பொதுவானது என்ற எண்ணமே கவிதைகளின் மையமாக அமைகிறது. வியப்புக்குரிய வகையில் இந்த எண்ணத்தை மீறி எழுதப்பட்ட கவிதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன.

பெண் தனது நிலையிலிருந்து பார்க்கும் உலகை, அல்லது பெண் தனது உலகைச் சொல்வதன் மூலம் விரிவடையும் பொது உலகைக் காட்டும் கவிதைகள்தாம் இந்தத் தொகுப்பின் சிறந்த கவிதைகளாக ஆகின்றன. ‘அடையாளம் துறக்கும் நேரம், இருளின் நிழல், பிரிவு, சமையல், ஆயுதக் காதல் போன்ற கவிதைகளை ஓர் ஆண் மனம் யோசிப்பது சாத்தியமில்லை.

பெண் நிலையிலிருந்தும் அதைக் கடந்தும் கவிதைகளை யோசிக்கிறார் என்பதே லாவண்யா சுந்தரராஜனின் பிரத்தியேகத் தன்மை என்று நினைக்கிறேன். பெண்நிலையிலிருந்து எழுதப்படுவனவற்றை பிடிவாதம் இல்லாமலும் மற்றவற்றை தற்பெருமை இல்லாமலும் கவிதை யாக்குவதுதான் அவரைக் கவனத்துக்குரியவராக்குகிறது. அவரது கவிதைகள் பலவற்றையும் முதலில் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இந்த்த் தொகுப்பில் உட்படுத்தப்படாமல் இன்னொரு தொகுப்புக்கான கவிதைகள் அவரிடம் இருக்கின்றன. அது புத்தகமாக வெளிவரும் நிலையில் அதை பற்றி நானே பேச நேரிடலாம் என்பதை எச்சரிக்கையாகவும் விருப்பமாகவும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி. வணக்கம்.

( மதுரையில் 30 ஆகஸ்ட் 2015 அன்று புனைவு இலக்கிய அமைப்பின் சார்பில் நடைபெற்ற நூல் அறிமுக நிகழ்ச்சியில் பேசியது)














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக