சனி, 4 நவம்பர், 2017

மலையாள அரசியல் படங்கள்

                                     

தென்னிந்திய சினிமாவில் கணிசமான அளவு அரசியல் படங்கள் மலையாளத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம். இது ஒரு ஊகம் மட்டுமே. இந்த ஊகத்தை ஒட்டியே கட்டுரையைத் தொடரலாம். எண்பதுகளில் தெலுங்கில் தொடங்கிய அரசியல் மசாலப் படங்களை விலக்கிப் பார்த்தால் ஊகம் சரிதானென்றே தோன்றுகிறது. 

எல்லாச் செயல்களிலும் ஓர் அரசியல் மறைந்திருகிறது என்ற பிரபலமான வாசகம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ மலையாளிகளுக்குப் பொருந்தும். எங்கும் எதிலும் அரசியல் வாடையை மோப்பம் பிடித்து விடும் அசாதாரணமான நுகர் புலன் மலையாளிகளுக்கு இருக்கிறது. எனவே இதுவரை மலையாளத்தில் வெளிவந்திருக்கும் ஆயிரக் கணக்கான வற்றில்   அரசியல் படங்கள் அதிகம் இருப்பது இயல்பானதுதான். வெகு ஜன சினிமாவில் சுவாரசியமான கதையோட்டத்துக்காகவும் மாற்று சினிமாவில் நிகழ்காலத்தின் மீதான எதிர்வினையாகவும் அரசியல் இடம் பெற்றிருக்கிறது.

கேரளத்தில் ஆட்சி அதிகாரம் இரண்டு துருவங்களுக்கு இடையில்தான். இடதுசாரி ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய இரண்டில் ஒன்றே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகாரத்தைப் பிடிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியும் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியுமே  நிரந்தரப் போட்டியாளர்கள். பிற கட்சிகள் எல்லாமும் இந்த இரு அணிகளில் ஒன்றுக்குள் அடக்கம். எனவே காங்கிரஸ் அரசியலையும் கம்யூனிஸ்ட் அரசியலையும் மையமாக வைத்தே படங்கள் எடுக்கப்படுகின்றன.

அரசியல் சினிமாக்களை மூன்று வகையாகப் பிரித்துப் பேசலாம். ஒன்று: நேரடியான கட்சி அரசியலைப் பேசும் படங்கள். அவை கட்சிக்கு அல்லது இயக்கத்துக்கு ஆதரவாக அமைந்தவை. அல்லது அதன் மீது விமர்சனத்தை வைப்பவை. 1970 இல் வெளிவந்த 'நிங்ஙள் என்னெ கம்யூனிஸ்டாக்கி'  ( இயக்கம்; தோப்பில் பாஸி ) யையும்  1984 இல் வெளியான 'முகாமுகம் ( இயக்கம்: அடூர் கோபாலகிருஷ்ணன் ) படத்தையும் இந்த வகைக்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.  பாஸியின் பிரபலமான நாடகத்தின் திரைவடிவமே முதலில் குறிப்பிட்ட படம். மூலதனத்தைப் படித்துக் கம்யூனிஸ்டுகளோ கம்யூனிச அனுதாபிகளோ ஆனவர்களை விட இந்த நாடகத்தைப் பார்த்துக் கம்யூனிஸ்ட் ஆனவர்களே அதிகம் என்று கேரளத்தில் சொல்லப்படுவது உண்டு. அது ஓரளவு உண்மையும் கூட. தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் வளர்ச்சி அடைந்ததற்கு நாடகங்களும் திரைப் படங்களும் ஒரு காரணம். அதைப் போன்று கேரளத்தில் இடது சாரிச் சிந்தனைகள் பரவ நாடகங்களும் சினிமாக்களும் உதவின. அதில் முதன்மையான பங்கு 'நிங்ஙள் என்னெ கம்யூனிஸ்டாக்கி' நாடகத்தையும்  திரைப்படத்தையும் சேரும். அதே இடதுசாரி இயக்கத்தைக் கடுமையாக விமர்சனம் செய்த படம் அடூரின் 'முகாமுகம்'. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நேர்ந்த பிளவின் காரணமாக எப்படி அந்தக் கோட்பாடே செயலற்றதாக மாறியது என்பதைச் சொன்னது. சமூக அரசியல் சினிமா என்று இவற்றைச் சொல்லலாம்.

                                                                                                     முகாமுகம் 

                                                                                            
                                               நிங்ஙள் என்னே 
                                               கம்யூனிஸ்டாக்கி

இரண்டு : அரசியலை நையாண்டி செய்யும் வகையிலானவையும் மேம்போக்கான குற்றச் சாட்டுகளை அடுக்குபவையாகவும் எடுக்கப் பட்டவை. எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளிலும் ஐ.வி.சசி இயக்கத்தில் வெளியான 'ஈநாடு'  ( 1982 ) முதலான படங்கள் 'மொத்த சிஸ்டமே சரியைல்லை' என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சமகால அரசியலை அலசியவை. இதன் இன்னொரு பக்கமாக அரசியலை கேலிப் பொருளாக்கிய  வரவேல்பு ( 1989 ) போன்ற படங்கள்.  இந்த இரு படங்களிலும் சமகால சம்பவங்களின் அடிப்படை யிலேயே கதையோட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. எர்ணாகுளம் மாவட்டம் வைப்பினில்  அரசு சாராயத்தைக் குடித்த பலர் உயிரிழந்தனர். அது காங்கிரஸ் அரசு நடைபெற்ற காலம். எனவே கம்யூனிஸ்ட் ஆதரவாளரான திரைக்கதை ஆசிரியரான டி. தாமோதரன் காட்சிகளில் கருணாகரன் அரசை விளாசித் தள்ளினார். அதை பரபரப்பான படமாக ஐ.வி சசி மாற்றினார். நடிகர் சீனிவாசன் எழுதி சத்தியன் அந்திக்காடு இயக்கிய படம் 'வரவேல்பு'. வளைகுடா நாடுகளில் வேலை செய்து ஈட்டிய பணத்தை வைத்துப் பிறந்த மண்ணில் சொந்தமாகத் தொழில் தொடங்கும் ஒருவனுக்கு அரசியல்வாதிகளாலும் தொழிற்சங்க வாதிகளாலும் நேரும் கசப்பான அனுபவங் களைக் கேலித் தொனியில் சித்தரித்தது. இந்த இரண்டு படங்களும் வியாபார ரீதியிலும் விமர்சனக் கண்ணோட்டத்திலும் பெரு வெற்றி பெற்றவை. இந்த ஒற்றுமை ஆச்சரியமானதல்ல. மலையாள சினிமா ரசிகளின் பார்வையும் பொது மக்களின் பார்வையும் அந்தந்தக் கட்டத்தில் என்னவாக இருந்தன என்பதையே அது காட்டுகிறது. இந்தப் படங்களை அரசியல் கேளிக்கைப் படங்கள் எனலாம்.

                                                      ஈநாடு

இயக்க அரசியலையோ கட்சி அரசியலையோ வெளிப்படையாக பேசாமல் கேரள வாழ்க்கைக்குள்ளிருக்கும் கலாச்சார அரசியலைப் பேசும் படங்களை மூன்றாவது வகையாகப் பார்க்கலாம். சமகால வாழ்க்கைச் செயல்பாடுகளில் மறைமுகமாக இயங்கும் அரசியலை உள்ளடக்கமாகக் கொண்டவை இவை. அரசியலின் நன்மைகளையும் தீமை களையும் அலசும் நோக்கில் எடுக்கப்பட்ட சீரிய படங்களும் பொழுதுபோக்குப் படங்களும் இவற்றில் அடங்கும். சாதி அரசியலையும் மத அரசியலையும் இந்தப் படங்கள் விவாதித்தன.

லோகிததாஸ் எழுதி சத்தியன் அந்திக் காடு இயக்கிய 'சஸ்நேஹம் ( 1990 ) கிறிஸ்தவ இந்து மத அரசியலை மையமாகக் கொண்டது. கிறிஸ்தவனான தாமஸ்குட்டி இந்து பிராமணப் பெண்ணான சரஸ்வதியைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறான். மதத்தை ஒட்டி இரு குடும்பங்களுக்குள் நடக்கும் சிக்கல்களைப் படம் சித்தரிக்கிறது. இரு தரப்பும் ஒப்புக் கொள்ளும் வகையில், சரியாகச் சொன்னால் வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொள்ளும் நிலையில், கலப்பு மணத் தம்பதிகளுக்குப் பிறந்த பிள்ளை மதமற்ற பிரஜையாக வாழும் என்ற சமரச முடிவைப் படம் காட்டுகிறது. ஒருவிதத்தில் இது கேளிக்கை சினிமாவுக்கு உரிய சுப முடிவு. 

ஆனால் எதார்த்தம் அப்படியல்ல என்பதை அண்மையில் வெளிவந்த கிஸ்மத்  ( 2016 ) படம் எடுத்துக் காட்டியது.  28 வயது அனிதாவுக்கும் 23 வயது இர்பானுக்கும் காதல். வயது ஒரு சிக்கல். அதை விடப் பெரிய சிக்கல் இருவரின் மதம். அதை விடவும் பெரிய தடை அனிதா, தலித் என்பது. இருவரும் அடைக்கலம் தேடுவது போலிஸ் ஸ்டேஷனில். காவல் துறை அதிகாரி சமூக அத்துமீறலை அனுமதிக்க விரும்பாமல் காதலனையும் காதலி யையும் அவரவர் குடும்பத்தினரிடம் திரும்ப ஒப்படைக்கிறார். மதப் பற்று மிகுந்தவர் களான இர்ஃபானின் பெற்றோர் அவனையே இல்லாமல் ஆக்குகிறார்கள். காதலில் தோல்வியடைந்த அனிதா சிறிது காலத் துக்கத்துக்குப் பிறகு வெளிநாட்டில் பணியாற்று கிறாள். ஷாநவாஸ் கே. பாவக்குட்டி எழுதி இயக்கிய இந்தப் படம் எதார்த்ததை அப்படியே பிரதிபலித்தது.

                                                  கிஸ்மத்

மலையாள அரசியல் சினிமாவை மேற்சொன்ன மூன்று வகைகளில் அடக்கி விடலாம். இந்த வகைகளிலேயே சிறு வித்தியாசங்களுடன்தான் மாற்றுப் படங்களும் வணிகப் படங்களும் உருவாகியிருக்கின்றன. அறுபது எழுபதுகளில் பின்பற்றத் தக்கதாகத் தோன்றிய கம்யூனிஸ லட்சியங்கள் எண்பதுகளுக்குப் பின்னர் விமர்சனத்துக்குரியவையாகப் பார்க்கப் பட்டன. அவற்றை படங்கள் காட்டின. அடூரின் முகாமுகம், லெனின் ராஜேந்திரனின் 'மீன மாசத்திலே சூர்யன்', டி.வி.சந்திரனின் 'ஓர்மகள் உண்டாயிரிக்கணம்', ஜான் ஆப்ரஹாமின் 'அம்ம அறியான்', பிரிய நந்தனின் நெய்த்துகாரன் போன்ற படங்கள் இடதுசாரி இயக்கத்தை அனுதாபத்துடன் சித்தரித்தவை. இவற்றில் துணைப் பிரிவாகச் சொல்லப்பட வேண்டிய படங்கள் தலைவர்களின் வாழ்க்கையைக் கதைப் பொருளாகக் கொண்டவை. நெய்த்துகாரன் படம் மறைமுகமாக தோழர் இ.எம்.எஸ்ஸின் வாழ்க்கையைப் பேசியது.ஏழைகளின் தோழரான ஏ,கே.கோபாலனின் வாழ்க்கையும் வரலாற்றுப் படமாக வெளி வந்தது.  முதல் அமைச்சரவையில் பதவி வகித்த ஒரே பெண் அமைச்சரான கே.ஆர். கௌரியம்மாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இரண்டு படங்கள் வெளிவந்தன. 'லால் சலாம்' ( 1990 இயக்கம் வேணு நாகவள்ளி )  என்ற படம் கௌரி அம்மாவுக்கும் அவரது கணவரான  டி.வி. தாமசுக்குமான உறவையும் கட்சிப் பிளவால் நேர்ந்த முறிவையும் காரசாரமான மசாலாவுடன் சொன்னது. 1994 இல் கௌரி அம்மா மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதே ஆண்டு இந்தப் பிரச்சனையை மையமாக வைத்து 'சீஃப் மினிஸ்டர் கே. ஆர். கௌதமி என்ற படம் வெளியானது. காங்கிரஸின் மூத்த தலைவர் கே.கருணா கரனின் புகழைப் பேசும் படமாக 'லீடர்'  வெளிவந்தது. கௌதமிக்கு நேர்ந்த தோல்வியே லீடருக்கும் நேர்ந்தது.

                                                லால் சலாம்

இடதுசாரி ஆதரவும் எதிர்ப்புமான படங்களே அதிகம். காங்கிரஸ்   ஆதரவுப்  படங்கள் அநேகமாக இல்லை. இடதுசாரிகளுக்கு இருப்பது போன்ற கலை இலக்கிய உணர்வு காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு இல்லாததே காரணம். மிக அண்மையில்தான் காங்கிரஸ் சார்ந்த சில படங்களைப் பார்க்கக் கிடைத்தது. 'ஒரு இந்தியன் ப்ரணய கதை'யும், 'வெள்ளி மூங்க'வும். காங்கிரஸ் அணியிலிருக்கும் பிரதான பிராந்தியக் கட்சியான கேரள காங்கிரஸ்  - இதுவே நாலு பிரிவுகள் - பற்றி அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமான படங்கள் வெளிவந்திருக்கின்றன. திலீப் நடித்து வெளிவந்த 'லயன்' என்ற படம் கேரள காங்கிரஸ் - பி. பிரிவின்  தலைவர் ஆர்.பால கிருஷ்ண பிள்ளைக்கும்  மகன் கணேஷ் குமாருக்கும் இடையிலான அதிகாரக் கயிறு இழுக்கும் போட்டியை சொன்னது. கேரள காங்கிரஸின் தாய்ப் பிரிவான மாணி அணி கோட்டயம் மாவட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட எல்லாப் படங்களிலும் இடம் பெற்றது.

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வெளியான படங்களில் அரசியல் வாதிகள் இலட்சியவாதிகள் என்ற இடத்திலிருந்து நீக்கப்பட்டு மாஃபியா கும்பலின் புரவலர்களாகவும் கேங்க்ஸ்டர்களின் மறைமுகத் தலைவர் களாகவும் மாறினார்கள். அவர்கள் அனைவரும் காங்கிரஸ் காரர்களாகச் சித்தரிக்கப்பட்டது தற்செயலானதல்ல. நடுநிலையாளர்கள் என்ற கோணத்தில் சில இயக்குநர்கள் உருவாக்கிய படங்கள் இடதுசாரி அமைப்பை நையாண்டி செய்தன. சத்யன் அந்திக்காடின் சந்தேசம் (திரைக் கதை : சீனிவாசன் ), லால் ஜோசின் 'அரபிக் கத' , அருண்குமார் அரவிந்தின் 'ரைட் லெஃப்ட் ரைட்' , போன்றவை இவற்றுக்கு உதாரணங்கள்.

                                லெஃப்ட் ரைட் லெஃப்ட்

இவை தவிர தேசபக்தியை முன்வைத்த படங்களையும் அரசியல் படங்களாகச் சேர்த்துக் கொள்ளலாம். ஐ.வி சசியின் 1921 மலபார் போராட்டத்தை மையமாகக் கொண்ட கற்பனையிலிருந்து உருவானது. தொடர்ந்து வீர ஜவான்களின் தியாகத்தையும் தீவிரவாதிகளின் அட்டூழியத்தையும் சொல்லும் பல தேச பக்திப் படங்கள் வெளிவந்தன. இவற்றின் மூவண்ணத்தில் காவியின் நிறம் சற்று அடர்த்தியாக இருப்பதை இப்போது பார்க்கும்போது அறிய முடிகிறது. ப்ரியதர்சனின் ' காலாபானி ( 1996 ; தமிழில் சிறைச் சாலை ) தேசபக்தியை மட்டுமல்ல; இந்துவாக இருப்பதன் மேன்மையையும் சொல்லுகிறது என்பதை இப்போது காண முடிகிறது. இதன் நீட்சியாகவே ஷாஜி கைலாசின் படங்களை மேல் சாதிப் பெருமையைப் போற்றிப் பாடும் படங்களாகப் பார்க்கலாம். இந்தப் படங்களின் நாயக பாத்திரங்கள் அநேகமாக பிராமணத் தந்தைக்குப் பிறந்தவர்கள் என்பது இந்த ஊகத்தை வலுப்படுத்துகிறது. 'ஆறாம் தம்புரான் படம் ஓர் உதாரணம்.

அரசியல் என்ற வெளி நடவடிக்கைப் படங்கள் போலவே வாழ்க்கையில் அரசியல் ஒளிந்திருக்கும் விதத்தைச் சொல்லும் படங்களும் முக்கிய மானவை. இன்று பரவலாகப் பேசப் படும் சாதியம், பெண் உரிமை, சுற்றுச் சூழல் ஆகியவையும் நம்மை பாதிக்கும் அரசியல்தன்மை கொண்டவை தானே. மிகச் சமீபத்தில் வெளியான ' தொண்டி முதலும் திருக்சாக்ஷியும்( 2017  இயக்கம்: திலீஷ் போத்தன் ) படம் பொதுவான பார்வையில் நையாண்டியான கதை அமைப்புக் கொண்டது. ஆனால் அதில் நுட்பமான சாதிய அரசியலின் இருள் சுட்டப்படுகிறது. ஆலப்புழையைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். சொந்த ஊரில் வசிக்க முடியாமல் கேரளத்தின் வட மாவட்டத்துக்குப் பிழைப்புத் தேடிப் போகிறார்கள். பஸ்ஸில் பெண்ணின் தாலிச் சங்கிலியைத் திருடன் ஒருவன் பறிக்கிறான். போலீசுக்கு சென்று புகார் கொடுக்கிறார்கள். இதைத் தொடந்த விசாரணைகளும் சிக்கல்களுமே படத்தில் மிக விரிவாகவும் கேலியுடனும் சித்தரிக்கப்படுகின்றன. ஆனால் மையமான சிக்கல் சாதி அரசியலைச் சார்ந்தது என்பது படத்தைக் கவனமாகப் பார்க்கும்போது வெளிப்படுகிறது. காதலன் பிரசாத் ஈழவ வகுப்பைச் சேர்ந்தவன். காதலி ஸ்ரீஜா நாயர் சமூகத்தைச் சேர்ந்தவள். இந்த 'சாதிகெட்ட உறவு' ஊரில் ஏற்றுக் கொள்ளப் படாததே அவர்களை விரட்டுகிறது என்பதைப் படம் அழுத்தமாகவே காட்டுகிறது. டி.வி.சந்திரனின் சூசன்னா என்ற படம் பெண் நிலையிலிருந்து உறவுகளைப் பேசுகிறது. விபச்சாரியான சூசன்னாவை ஆத்மசரீர சுகமளிக்கும் பண்டமாகவே ஆண் உலகம் பார்க்கிறது. ஒழுக்கத்தைத் தாண்டிய பார்வையில் அவளும் ஒரு பெண் என்பதைப் பார்ப்பதில்லை என்ற புகாரைப் படம் அடிக் கோடிடுகிறது. ஆனால் பெண் அப்படியொன்றும் முடங்கிப் போகிறவள் அல்ல; தன்னை விழச் செய்தவனைத் தண்டிக்கும் பலம் கொண்டவள் என்பதை 22 ஃபீமேல் கோட்டயம் ( 2012 ) படம் சித்தரிக்கிறது.

                                                                               தொண்டிமுதலும் திருக்சாக்ஷியும் 

                               22 ஃபீமேல் கோட்டயம்

அரசியல் சினிமா என்பது கட்சி சார்ந்த அரசியலை மட்டுமே குறிப்பிடுவது அல்ல என்ற சிந்தனை விரிவடைந்திருக்கும் காலத்தில் வாழ்கிறோம். நமது மிகப் பெரும் பொழுதுபோக்கும் கலைவடிவமும் ஆன சினிமாவும் ஒற்றைப் படையானது அல்ல என்பதும் நடைமுறையாகி இருக்கிறது. இந்த அர்த்தத்தில் மலையாள சினிமாவின் பார்வையாளன் என்ற தகுதியில் குறிப்பிடத் தகுந்த அரசியல் படங்கள்  என்று பத்துப் படங்களையாவது முன்னிருத்திப் பேச முடியும். இப்படிச் சொல்லும்போதே தமிழ் சினிமாவின் பார்வையாளனாக இப்படி எத்தனைப் படங்களைப் பட்டியலிட முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. இந்தக் கேள்வியும் அரசியல் சார்ந்ததுதான் இல்லையா?

* அந்திமழை அக்டோபர் 2017 இதழில் வெளிவந்த கட்டுரை.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக