ஞாயிறு, 7 ஜனவரி, 2018

ஜெயகாந்தன் கதைகள்ஜெயகாந்தன்எனக்குப் பெயராகவோ ஆளுமையாகவோ மட்டுமல்லாமல்  நினைவேக்கத்தைக் கிளர்த்தும் ஞாபகப் பசுமையாகவே இருக்கிறார். வாசகனாக எனக்கு அறிமுகமான  சமகால இலக்கியம் அவரது எழுத்துகள்தாம் என்பதும் நான் சந்தித்த முதல் எழுத்தாளர் அவரே என்பதும் அதற்குக் காரணங்கள். வெகுசன எழுத்திலிருந்து விலகி  இலக்கிய வாசிப்புக்கு வந்து சேர முகாந்திரமாக இருந்தவரும் அவர்தாம். நான் மட்டுமல்லஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது எழுபதுகளிலும் எண்பதுகளின் பாதிவரையும் வாசிப்பில் ஈடுபட்டிருந்த பெரும்பான்மையினர் ஜெயகாந்தன் வழியாகவே இலக்கியத்தைக் கண்டடைந்தார்கள்.


வெறும் கேளிக்கை எழுத்துக்களிலிருந்து மாறுபட்ட ஆக்கங்களை விரும்பியவர்கள், இலட்சியவாத ஜிகினாக் கனவுகளுக்கு எதிராக எதார்த்தத்தைச் சித்தரிக்கும் கதைகளை நாடியவர்கள், இலக்கியத்தில் முற்போக்குப் பார்வையைக் கண்டவர்கள்கலாச்சாரத் தளைகளிலிருந்து விடுபடப் போராடிய கலகக்காரர்கள் போன்ற எல்லாத் தரப்பினருக்கும் உவப்பான எழுத்தாளராக ஜெயகாந்தன் இருந்தார். ஆரம்ப காலத்தில் சிற்றிதழ்களில் எழுதியவர்.  பின்னர், அன்றைய வாசிப்புக்கு எளிதாகவும் பரவலாகவும் கிடைப்பதாக இருந்த  வணிக இதழ்களிலேயே  அதிகமும் எழுதினார். எனினும் அவரது எழுத்துக்கள் முன் குறிப்பிட்ட அனைத்துப் பிரிவினரையும் ஈர்த்தன. உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் அவை பொருட்படுத்தப்பட்டன. விமர்சிக்கப்பட்டன. வியந்து பாராட்டப் பட்டன. பின் தொடரப்பட்டன. இந்தக் குவிமையம்தான் ஜெயகாந்தன்  தமிழ் இலக்கியத்தில் வகிக்கும் இடம் என்று மதிப்பிட விரும்புகிறேன்.  ஜெயகாந்தன் எழுத்துக்கள் மூலம் அறிமுகமான  இலக்கிய உணர்வுதான் அந்த எழுத்துக்களின் முன்னோடி எழுத்துக்களுக்கும் அவற்றுக்குப் பின் வந்த எழுத்துக்களுக்கும் என்னைக் கொண்டு சென்றது. அந்தக் காலப்பகுதியில் தீவிர  இலக்கியத்தின்மீது நாட்டம் கொண்டிருந்த  இளம் வாசகர்களுக்கு எது இலக்கியம், எது இலக்கியமல்ல என்று வகைப்படுத்திக் கொள்ள அந்த எழுத்துக்கள் உதவின. இதைப்  பொது விதியாகக் கொள்ள  இயலாது. எனினும் வழிகாட்டல் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.  இன்று சீரிய இலக்கியத்தில் நாட்டம் கொள்ளும் இளம் வாசகர் ஜெயகாந்தனை வாசிக்காமலும் அறியாமலும் நவீன இலக்கியத்தை விளங்கிக் கொள்ள முடியும். என்னைப் பொறுத்த மட்டில், ஜெயகாந்தனை வாசிக்கும் வாய்ப்பு தகையாமல் இருந்தால் இன்று  இலக்கிய முன்னோர்கள் என்று நான் போற்றும் பலரைத் தாமதமாக அறிந்திருக்கவோ அல்லது வாசிக்காமல் விட்டிருக்கவோகூடும் என்பது உறுதி. இந்தத் திசை திருப்பத்துக்காக அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். அந்தரங்கமான கடன்தீர்ப்பாகவே  இந்நூலுக்கான  கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்த  பணியைக் கருதுகிறேன். 


காலச்சுவடு பதிப்பகம்  தமிழ் கிளாசிக் சிறுகதைகள் வரிசையில் வெளியிடும்  ஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு
’ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது’ நூலுக்கு எழுதிய முன்னுரையின் பகுதி. 

முகப்புப் படம் : செழியன் 
அட்டை வடிவமைப்பு : கலா முருகன்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக