செவ்வாய், 16 மார்ச், 2021

குலசேகரன் கதைகள்

சமகால எழுத்தாளர்களில் நம்பிக்கைக்கு உரியவர்களாக நான் காணும் சிலரில் மு.குலசேகரனும் ஒருவர். வெளிவரவிருக்கும் அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ‘புலி உலவும் தட’த்துக்கு எழுதிய முன்னுரை இது.  


 

                                   தனிவழித்  தடம்


ற்றுக்கொண்டிருக்கும் இலக்கிய வடிவம் பற்றிய பிரக்ஞை, எதை எழுத வேண்டும் என்ற நோக்கு, எப்படி எழுத வேண்டும் என்ற தெளீவு, தளுக்கோ சிடுக்கோ இல்லாத இயல்பான நடை, தன்னுடையதான கூறுமுறை – இவை அனைத்தையும் மு.குலசேகரன் கதைகளில் காண முடிகிறது. எனினும் இந்தக் கதைகள் அதிகம் பேசப்படுவதில்லை. அவரும் அதிகம் பேசப்படுவ தில்லை. அவரது கதைகளை வாசிக்கும்போதெல்லாம்  இந்த ஆதங்கம் ஏற்படுவதுண்டு. அவரது கதைகள் இதழ்களில் வெளியாகும்போது அவை  பொருட்படுத்திப் பேசப்படுவதையும் கண்டதுண்டு. ஆனால் அந்தக் குறிப்புரைகள் கதைகளுக்கும் கதாசிரியருக்கும் தகுந்த விகிதத்திலான நியாயமளிப்பவையல்ல என்ற எண்ணம் ஏற்படுவதுண்டு. இன்றைய எழுத்தாளர்களில் இலக்கியத்தைத் தீவிரமாகக் கருதும் ஒருவரும் அவருடைய தரமான கதைகளும் கவனிக்கப்படாமற் போவது ஏன் என்ற கேள்வியும் எழுவதுண்டு.

 

மு.குலசேகரனும் அவரது கதைகளும் பரவலான கவனத்தைப் பெறாததற்குக்  காரணம் அவரே என்று தோன்றுகிறது. நிகழ்கால இலக்கிய உலகத்தின் ஆர்ப்பாட்ட நடைமுறை களுக்கு ஆட்படாமல்  தனித்து நடப்பதுதான் அவரை விலக்கி நிறுத்துகிறது. இன்றைய மோஸ்தருக்குத் தோதாக அல்லாமல் எழுதப்படும் கதைகள்தாம் எடுத்து உயர்த்த எளிதாக இல்லாமல் கைவிடக் காரணமாகின்றன. ‘நான் ஒரு கதை எழுதி இருக்கிறேன்’ என்று அவரும் இணைய வெளியிலும் பிற பரப்பிலும் கொட்டி முழக்குவதில்லை. ‘வாசித்து உய்வடையுங்கள்’ என்று அந்தக் கதைகளும் வாசகனை வற்புறுத்துவதில்லை. ‘ஒரு படைப்பு அதற்குரிய முழுமையுடன் இங்கே இருக்கிறது. கொள்ள விரும்புவோர் கொள்க’  என்ற தற்சார்பற்ற நிலையிலேயே குலசேகரன் தமது கதைகளை முன்வைக்கிறார். கதைகளும் தம்மை ஏற்கும் வாசகர்களுக்காகக் காத்திருக்கின்றன.

 

குலசேகரனின் இந்த இயல்பு சில இலக்கிய அடிப்படைகளைச் சுட்டிக் காட்டுகிறது. படைப்புத்தான் முதன்மையானது. அதன் வாயிலாகவே படைப்பாளி அறியப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. படைப்புச் செயல் வடிவம் பெற்றதும் படைப்பாளியிடமிருந்து விலகித் தனித்து நிலைகொள்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. படைப்பாளியின் குறுக்கீடுகளையும் பொழிப்புரைகளையும் மீறி வாசிப்புக்காகத் திறந்து கொடுக்கிறது. குலசேகரன் கதைகளின் தனித்துவமான அம்சம் இது. கதையில் ஆசிரியர் எதையும் வற்புறுத்திச் சொல்வதில்லை. வாசக கவனத்தை ஈர்ப்பதற்கான பிரத்தியேகக் கோணங்களை ஒதுக்குவதில்லை. மாறாக கதையில் தொடக்கம் முதல் இறுதிவரையான எல்லா வரிகளையும் செறிவானதாக அமைக்கிறார். அதன் வழியாக அனுபவத்தின் பரப்பை விரிவாக்குகிறார். முழுமையான உலகைப் புனைந்து காட்டுகிறார்.

 

‘தலை கீழ்ப் பாதை’ ஓர் உதாரணம். நகலகம் நடத்தி வரும் சுப்பிரமணிக்கு இனி தனது வாழ்க்கை பழையதுபோல வசதியாக இராது என்று தெரிகிறது. அவனுடைய கடையின் முன்னால் நிமிர்ந்து நிற்கும் மேம்பாலம் பிழைப்புக்கு தடையாகிறது. அவனுக்கு மட்டுமல்ல, அவனைப் போன்ற பல சாதாரணர் களுக்கும் பிழைப்புப் பறிபோகும் நிலை. ஆனால் பாலம் கட்டப்பட்டுத் திறப்பு விழாவுக்கு ஆயத்தமாகிறது. பாலமிருக்கும் பகுதியைச் சேர்ந்தவர் களுக்கு அது தேவையே இல்லை.ஆனால் யாருக்கோ வேண்டியிருக்கிறது. அதிகாரத்தின் மூலம் தங்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றை மறுப்பின்றிச் சுமக்க நேரிடுகிறது. அந்த எளியவர்களின் பிரதிநிதியாகக் கருதப்படும் சுப்பிரமணியால் கற்பனையாகத்தான் பழி வாங்க முடிகிறது. பாலம் தொடர்பான ஆவணங்களின் ஒரு தாளை நகலெடுக்காமல் மறைத்து வைப்பதன்  ஊடே தனது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறான். கதையின் இந்தக் கோணத்தை இயல்பாக முன்வைக்கிறார். முதல் வரியிலிருந்து எந்தத் துருத்தலும் இல்லாமல், அலுப்பேற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தை உருவாக்கக் கூடிய நிதானத்துடன் செறிவைக் கூட்டி முடிவை எட்டுகிறார். கதையின் எந்த வரியை விலக்கினாலும் கட்டுக்கோப்புக் குலைந்து விடக் கூடிய முறையில் அமைகிறது கதை. இந்த இயல்பு நவிற்சியை குலசேகரனின் கதையடையாளம் எனலாம்.

 

இதே அடையாளம் கொண்டவையாகத்  தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஆதியில் காட்டாறு ஓடியது,  புலி உலவும் தடம், கடைசி விதைப்பாடு, நெடுநாளைய புண் ஆகிய கதைகளைக் காணலாம். இயல்பாகவும் செறிவாகவும் இழைக்கப்பட்ட கதைகள். நிதானமான கூறலில் முன்னேறிச் சென்று உச்சத்தில் வெடிக்கின்றன. . காலப் போக்கில் தூர்ந்து சாக்கடையாக மாறிய நதியைப் பற்றிய சுந்தர மூர்த்தியின் ஆவலாதியும் புலி வரும் தடத்தில் காத்திருக்கும் சிவபாலன், காதர் பாட்சாவின் சினமும் கடைசியாக மண்ணில் தளிர்விட்டிருக்கும் நிலக் கடலைத் தளிர்களில் தங்கவேலு கொள்ளும் நம்பிக்கையும் தகப்பனின் மரணத்தை அறிவிக்க அத்தாட்சியை எதிர்பார்த்திருக்கும் மகனின் கையறு நிலையும் இயல்பான நிகழ்வுகளாகச் சொல்லப்பட்டு இறுதியில் தீவிரத்தை அடைகின்றன. பாலம் நிரந்தரமாகி விட்டது என்றும் சாக்கடை நதியாக இனி மாறாது என்றும் புலி வந்தால் காப்பாற்ற ஆதரவு கிடைக்காது என்றும் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ஒருபோதும் உரிமையில்லை என்றும் தொற்று நோயால் அப்பா சாகவில்லை என்று சொல்வது சந்தேகம் என்றும் அந்தப் பாத்திரங்களுக்குத் தெளிவாகவே தெரிகிறது. எனினும் தங்கள் இருப்புக்கான நியாயங்களாக அவற்றைப் பற்றியிருக்கிறார்கள். அவை பறிபோகக் கூடியவை என்று வாசிப்பவர் உணர்கிறார். அப்படி உணர்த்துவதையே குலசேகரன் தனது கதையாக்க நடவடிக்கையாகக் கருதுகிறார் என்று எண்ணலாம். அதை மீறிய நிலையும்  கதைகளில் இடம் பெறுகிறது. அதுவே அவரது கதைகளுக்கு நிகழ்காலப் பொருத்தப்பாட்டையும் அளிக்கிறது.

 

நிகழ்ச்சி, கதையாக்கம், படைப்பியல் பார்வை ஆகிய கட்டங்களாகக் கதையைப் பகுக்க முடியுமானால் குலசேகரன் கதைகள் முன்னணியில் நிற்பது அவற்றில் வெளிப்படும் பார்வையால் எனலாம். எளியவர்களின் சார்பில் அதிகாரத்தை விசாரிக்கும் பார்வையை அவை கொண்டிருக்கின்றன. இதை அரசியல் என்று ‘அருகில் வந்த கடல்’ தொகுப்பின் முன்னுரையில் தேவிபாரதி குறிப்பிடுகிறார். சரியான மதிப்பீடுதான். இந்த அரசியல் வெற்று முழக்கமாகவோ ஆவேச உந்துதலாகவோ இல்லாமல் மானுட இருப்பின் கோரிக்கையாகவே வெளிப்படுகிறது. இதையும் குலசேகரனின் தனி அடையாளமாகக் காணலாம். முந்தைய  ‘அருகில் வந்த கடல்’ , தற்போதைய   ‘புலி வந்த தடம் ‘ ஆகிய இரு தொகுப்புகளிலும் அரசியல் பார்வை தெரியும் கணிசமான கதைகள் உள்ளன. அவற்றை முன்னிருத்தி அரசியல் கதைகளை எழுதியவராகச் சொல்லி விடவும் முடியாது. ஏனெனில் அவை வலிந்து தயாரிக்கப்பட்ட அரசியல் கதைகள் அல்ல. கோட்பாட்டுச் சூத்திரங்களுக்கு விளக்கவுரை அளிப்பவை அல்ல. அரசியல் கோணத்திலிருந்து வாழ்க்கையைச் சித்தரிப்பவை அல்ல.; மாறாக வாழ்வனுபவங்களிலிருந்து திரளும் உண்மைகளை அரசியலாக முன்வைப்பவை. குலசேகரனின் கதைகளில் உள்ளோட்டமாக அமையும் இந்த அம்சம் அவரது தனித்துவத்தின் பகுதி என்று எண்ணுகிறேன்.

 

கதைகளில் அரசியலை ‘மறைப்பது’ போலவே பின்புலங்களையும் ஒளித்து வைக்கிறார் குலசேகரன். கதை நிகழிடங்களைப் பெயர், அடையாளங்களைக் குறிப்பிடாமலேயே சித்தரிக்கிறார். ஆனால் கதைக்குள் இடம் பெறும் குறிப்புகளைக் கொண்டு வாசகர் அந்த இடத்தை எளிதில் ஊகித்து விட முடிகிறது. ஒரு தனி நிகழ்வை எல்லாரும் தம்மோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளக் கூடிய பொது நிகழ்வாக மாற்றவோ, வாசகரையும் படைப்புக்குள் பங்கேற்பவனாக உணரச் செய்யவோ அவரால் அநாயாசமாக முடிகிறது.

 

இந்தத் தொகுப்பிலுள்ள பத்துக் கதைகளை இரண்டு வகையாகப் பிரிக்க முடியுமென்று தோன்றுகிறது. வாசிப்பு வேளையில் தற்செயலாகப் புலப்பட்டது இந்தப் பிரிவு. கதாசிரியர் பிரக்ஞைபூர்வமாகவே அதைச் செய்திருக்கவும் கூடும். இயல்புவாதமென்றோ நடப்பியல் சார்ந்தவை என்றோ வகைப்படுத்தக் கூடிய கதைகள் ஒரு பிரிவாகவும் நடப்பியல் சார்ந்து உருவான உலகுக்குள்  அதீதங்களைக் கட்டிஎழுப்பும் கதைகள் மற்றொரு பிரிவாகவும் காணப்படுகின்றன. தலைகீழ்ப் பாதை, ஆதியில் காட்டாறு ஓடியது, புலி உலவும் தடம், கடைசி விதைப்பாடு, நெடு நாளைய புண் ஆகியவை நடப்பியல் முறையிலான கதைகள். இவற்றில் புறச் செயல்களும் தகவல்களும் முதன்மை பெறுகின்றன. கதைகள் அவற்றின் தன்மையில் வெளிப்படையாகவே துலங்குகின்றன. பருப்பொருளாகவே இடம் பெறுகின்றன. மறைந்து தோன்றும் கதவு, பிடித்த பாத்திரத்தின் பெயர், முடிவற்ற தேடல், வெளியில் பூட்டிய வீடு, மீண்டும் ஒருமுறை ஆகிய கதைகள் நடப்பியலைக் கடந்து விரிகின்றன. இந்தக் கதைகளில் புறக் காட்சிகளும் தகவல்களும் உளநிலையின் மங்கலான வரி வடிவங்களாகவே இடம் பெறுகின்றன. மனதின் விசித்திரச் சேட்டைகளே கதைப் பொருளாகின்றன. குலசேகரனின் படைப்பூக்கம் உச்சம் காண்பது இந்தக் கதைகளில்தான் என்பது என் எண்ணம். இயல்பு நவிற்சி கொண்ட கதைகளில் வாசகரைப் பார்வையாளராக அழைத்துச் செல்லும் ஆசிரியர் இந்தக் கனவு நிலைக் கதைகளில் பங்கேற்பாளராக மாற்றுகிறார். கதைகளின் முடிவை வாசகரின் சிந்தனைக்கும் உணர்வுக்கும் விடுகிறார். ஒருவேளை நவீன சிறுகதைக் கலைக்குக் குலசேகரனின் பங்களிப்பு படைப்பூக்கம் திரண்ட இந்தக் கதையாடலாக இருக்கலாம்.

 

தொகுப்பில் உள்ள கதைகளை வாசித்த வேளையில் உருவான பொதுவான கருத்தோட்டம் இது. நூலின் முன்னுரையாக இது அமைவதை விடவும் மு.குலசேகரன் கதைகளை மதிப்பிடும் விமர்சனப் பார்வைக்கு முன்னுரையாகக் கருதப்பட வேண்டும் என்பது விருப்பம். அப்படிச் செய்பவர்கள் தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் புதிய தடத்தைக் கண்டடைபவர்கள் ஆவார்கள். இந்தத் தொகுப்பு அதற்குத் தகுதியான அழுத்தமான சான்று.

 

திருவனந்தபுரம்                                              சுகுமாரன்

14 பிப்ரவரி 2021

 

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக