புதன், 1 செப்டம்பர், 2021

ஒரு மொழி பெயர்ப்பும் முன் பின் நினைவுகளும்

 

கனலி – இலக்கிய இணையதளத்தின் அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் வெளியாகியுள்ள புகழ்பெற்ற கடிதமொன்று கவனத்தை ஈர்த்தது. 


செவ்விந்தியத் தலைவர் ஸியட்டில் அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் பியர்ஸுக்கு எழுதிய கடிதம். சூழியல் ஒரு பேசுபொருளாகக் உருவாகிக் கொண்டிருந்த 1980களின் தொடக்கத்தில் சிற்றிதழ்களிலும் இடதுசாரி இதழ்களிலும் ஸியட்டிலின் இந்தக் கடிதம் வெவ்வேறு மொழியாக்கங்களாக வெளிவந்தது. எஸ்.வி.ராஜதுரை ஆசிரியராக இருந்து வெளியிட்ட இனி இதழில் கவிஞர் புவியரசு ஒரு மொழியாக்கத்தை வெளியிட்டிருந்தார். ஏறத்தாழ அதே மாதத்தில் மீட்சி (இதழ் 15 / பிப்ரவரி - மார்ச் 1985 ) இதழில் நான் மேற்கொண்ட தமிழாக்கம் வெளியானது. இதற்குப் பின்னரும் ஸியட்டில் கடிதம் வெவ்வேறு மொழிபெயர்ப்புகளைக் கண்டிருக்கிறது. 2009 இல் புதிய கலாச்சாரம் இதழ் புதூர் ராசவேலின் மொழியாக்கம் வெளி வந்தது. இதற்குப் பிறகும் சில மொழிபெயர்ப்புகள் வெளியாகி இருக்கலாம். என் கவனத்துக்கு வரவில்லை.

 


சூழியல் அமைப்பு ஒன்று நான் மொழியாக்கம் செய்த ஸியட்டிலின் கடிதத்துடன் என்னுடைய கவிதை ஒன்றையும் ( இந்த நூற்றாண்டு – மூன்று காட்சிகள் ) சேர்த்து எட்டுப் பக்க வெளியீட்டைக் கொண்டு வந்தது. அது யார் என்றும் அமைப்பின் பெயர் என்னவென்றும் இப்போது நினைவில் இல்லை. கிறித்துவச் சார்பு நிறுவனம் என்பது மட்டும் தேசலாக நினைவில் தங்கியிருக்கிறது. குறிப்பிட்ட கவிதை 2018 இல் இந்திய மொழி நூல்களின் ஜெர்மன் மொழிபெயர்ப்புகளை வெளியிடும் திரௌபதி வெர்லாக் பதிப்பகத்தின் இந்தியக் கவிதைகளின் தொகுப்பில் இடம் பெற்றது. மறைந்த முன்னாள் நீதிமன்ற நடுவர் எம்.எஸ். ராமசாமியின் ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து மாற்றப்பட்ட கவிதையை 2016 இல் இந்திய ஜெர்மன் கவிதை முகாமில் சக பங்காளராக இருந்த ஜெர்மானியக் கவிஞர் உல்ஃப் ஸ்டோல்டர்ஃபாட் தமிழிலிருந்து நேரடியாக ஜெர்மன் மொழிக்குப் பெயர்த்தார். அப்போது தொகுத்துக் கொண்டிருந்த சூழலியல் கவிதைகள் தொகுப்புக்காக அதைச் செய்தார். அந்த ஆக்கம் வெளியானதா என்று தெரியவில்லை.

 

சியாட்டிலின் கடித மொழிபெயர்ப்பை நானே மறந்து விட்டிருந்த நிலையில் எழுத்தாளர் தாஜ் அதை ஆபிதீனுக்கு நினைவூட்ட பின்னவர் அதைத் தனது வலைத்தளம் ‘ஆபிதீன் பக்கங்க'ளில் பதிவேற்றினார். காலச்சுவடு பதிப்பகம் 2019 இல் தாஜின் ‘தங்ஙள் அமீர் ‘ தொகுப்பை வெளியிட்டது. நூலாக்கம் தொடர்பான முதற்கட்ட தொலைபேசி உரையாடலின்போது நலம் விசாரிப்பு முடிந்ததும் 'ஸியட்டில் மொழிபெயர்ப்பை ஏன் உங்களுடைய ஏதாவது கட்டுரைத் தொகுப்பில் சேர்க்கக் கூடாது?’ என்றுதான் தாஜ் பேச்சையே தொடங்கினார். ‘மொழிபெயர்ப்புக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றைத் திட்டமிட்டால் அது பற்றி யோசிக்கலாம். ஆனால் அப்படி ஒன்றைச் செய்வதில் ஆர்வமில்லை’ என்று பதில் சொன்னேன். அசட்டையான அந்த பதில் அவருக்கு உவப்பாக இருக்கவில்லை. நேரில் வரும்போது அது பற்றிப் பேசுகிறேன் என்றார். அவர் நேரில் வந்தபோது சந்திக்க வாய்க்க வில்லை. சந்திக்க முடியாமலேயே மறைந்தும் போனார்.

 

கனலியில் வெளியாகி இருக்கும் ஸியட்டில் கடிதம் இத்தனை நினைவுகளைக் கிளறி விட்டிருப்பது வியப்பளிக்கிறது. ஞாபகங்களை மீட்க உதவிய கனலிக்கு நன்றி.


கீழே இருப்பது ஆபிதீன் பக்கங்களிருந்து எடுத்த பதிவு. நன்றி ஆபிதீன்.


புனிதமானது பூமி – ஸியட்டில்

29/08/2009 இல் 07:40 (சுகுமாரன்பிரம்மராஜன்மீட்சி)

செவ்வியந்தியத் தலைவன் ஸியட்டில் (Chief Seattle ) எழுதியதாக கூறப்படும் இந்த பதில் , பிரம்மராஜனின்மீட்சியில் வெளிவந்தது –  சுகுமாரனின் மொழிபெயர்ப்பில். ஆங்கில வடிவம் (Original ?) இங்கே. என்னிடமுள்ள திசைகளும் தடங்களும்’ நூலில் ஏனோ இது இடம் பெறவில்லை. அவருடைய மற்ற தொகுப்புகளில் சேர்க்கப்பட்டிருக்கலாம்; தெரியவில்லை. ‘சமீபத்தில் படித்து வியந்த அருமையான ஆக்கம் இது. வார்த்தைகளில் நின்று அர்த்தத்தில் தாவும் இந்த கலைப் பூரணத்தை நான் மட்டும் ரசிக்க மனம் இடம் தரவில்லை. அதனாலேயே உனக்கு அனுப்புகிறேன். ‘மீட்சியால் கிடைத்த கொடைஎனும் குறிப்புடன் கவிஞர் தாஜ் தன் நண்பர் ஒருவருக்குஇருபது வருடங்களுக்கு முன்புஅனுப்பிவைத்தது, நல்வாய்ப்பாக  இன்று என் கையில் சிக்கியது. இடுகிறேன். புகழ்பெற்ற இந்த பதில்புதூர் இராசவேலின் மொழிபெயர்ப்பில் – புதிய கலாச்சாரம் இதழிலும் இப்போது கிடைக்கிறது. கூகுள் தயவில் மற்ற தளங்களிலும் இருக்கலாம். தேடுங்கள். ‘மீட்சிக்காக எங்கும் அலையலாம் ; தவறில்லை!

‘1854-இல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ·ப்ராங்க்லின் பியர்ஸ், பரந்த செவ்விந்திய நிலப்பகுதி ஒன்றை விலைக்கு வாங்கும் உத்தேசத்தை செவ்வியந்தியத் தலைவனான ஸியட்டிலின் முன் வைத்தார். ஸியட்டில், ஜனாதிபதிக்கு வழங்கிய பதிலின் மொழிபெயர்ப்பு இது.  வருடங்கள் கடந்து விட்டன. இயற்கையிடமிருந்து ஒவ்வொரு நாளும் மனிதன் துண்டிக்கப்பட்டு வரும் நமது நிகழ்காலத்துக்கு ஸியட்டிலின் சொற்கள் முன்னைவிட வெகுவாகப் பொருந்துகின்றனஎன்கிறார் சுகுமாரன்.

**


புனிதமானது பூமி

ஸியட்டில்

மொழிபெயர்ப்பு : சுகுமாரன்

**

உங்களால் ஆகாயத்தையும், மண்ணின் வெதுவெதுப்பையும் எப்படி வாங்கவும், விற்கவும் முடியும்? இந்த எண்னமே எங்களுக்கு விரோதமானது.

காற்றின் புத்துணர்வும், நீரின் பிரகாசமும் எங்களுக்கு உரிமையானதல்ல என்னும்போது உங்களால் எப்படி அவற்றை வாங்க முடியும்?

இந்த பூமியின் ஒவ்வொரு இடமும் என்னுடைய மக்களுக்குப் புனிதமானது. மின்னுகிற ஒவ்வொரு பைன் மர ஊசியிலையும் ஒவ்வொரு மணற்கரையும், இருண்ட வனங்களில் விழும் மூடுபனியின் ஒவ்வொரு துளியும், தெளிவாகக் கீச்சிடும் ஒவ்வொரு பூச்சியும் என்னுடைய மக்களின் நினைவிலும், அனுபவத்திலும் புனிதமானவை. மரங்களின் வளர்ச்சியில் ஊறும் உயிர்ச்சாரத்தில் சிவப்பு மனிதனின் நினைவுகள் கரைந்திருக்கின்றன.

நட்சந்திரங்களுக்கு இடையில் நடந்து போகும் பொழுது வெள்ளைக்காரனின் முன்னோர்கள், தங்களுடைய பிறந்த மண்ணை மறந்து போகிறார்கள். எங்களுடைய மூதாதையர்கள் இந்த அழகான பூமியை ஒருபோதும் மறப்பதில்லை. ஏனெனில், சிவப்பு மனிதனுக்கு பூமியே தாய். நாங்கள் பூமியின் ஒரு பகுதி; பூமி எங்களுடைய ஒரு பகுதி. வாசனைப்பூக்கள் எங்களுடைய சகோதரிகள்; மானும், குதிரையும், பருந்தும் எங்களுடைய சகோதரர்கள். பாறைச் சிகரங்களும், புல்வெளிகளில் ஊற்றெடுக்கும் சுனைகளும், குதிரையின் உடல் வெப்பமும், மனிதனும்எல்லாம் ஒரே குடும்பம்.

எனவே, வாஷிங்டன் பேரதிகாரி எங்களுடைய நிலத்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தபோது, அவர் எங்களிடம் அதிகப்படியாகக் கோருகிறார். நாங்கள் வசதியாக வாழ எங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் பேரதிகாரியால் அறிவிக்கப்பட்டது. அப்படியென்றால் அவர் எங்கள் தந்தையும், நாங்கள் அவருடைய பிள்ளைகளும் ஆவோம். எனவே நிலத்தை வாங்குவதற்கான உங்கள் யோசனையை நாங்கள் கவனிக்கலம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் இந்த நிலம் எங்களுக்குப் புனிதானது.

நதிகள் எங்களுடைய சகோதரர்கள். அவை எங்கள் தாகத்தைத் தணிக்கின்றன. நதிகள் எங்களுடைய படகுகளைச் சுமக்கின்றன. எங்களுடைய குழந்தைகளை ஊட்டி வளர்க்கின்றன. நாங்கள் உங்களுக்கு நிலத்தை விற்க நேர்ந்தால், நீங்கள் நினைவு கொள்ள வேண்டும்; உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். நதிகள் எங்களுடைய மற்றும் உங்களுடைய சகோதரர்கள். எந்த ஒரு சகோதரனுக்கும் வழங்கும் கருணையை நீங்கள் நதிகளுக்கும் வழங்கியே தீரவேண்டும்.

வெள்ளைக்காரர்களுக்கு எங்களுடைய வழிகள் புரியாது என்று எங்களுக்குத் தெரியும். அவனுக்கு ஒரு நிலப்பகுதி வேறு எந்தப்பொருளையும் போலத்தான்.ஏனெனின் இரவில் வந்து நிலத்திலிருந்து தனக்கு வேண்டியவற்றை எடுத்துப் போகிறவன் அவன். அவனுக்கு நிலம் சகோதரனல்ல; எதிரி. வெற்றி கொண்டதும் அதைக் கைவிட்டுப் போகிறான். தகப்பனின் இடுகாட்டை அவன் பின்னொதுக்கிவிட்டுப் போகிறான். அதைப்பற்றி அவன் கவலை கொள்வதில்லை. தனது குழந்தைகளிடமிருந்து நிலத்தைத் தட்டிப் பறிக்கிறான். அதைப்பற்றி அவன் கவலை கொள்வதில்லை. தகப்பனின் இடுகாடும் பிள்ளைகளின் பிறப்புரிமையும் மறக்கப்படுகின்றன. அழகிய முத்துக்களைப் போலவோ, செம்மறி ஆட்டைப்போலவோ வாங்கவும், பறித்துக்கொள்ளவும் கூடிய பொருட்களாகத்தான் அவன் தன்னுடைய தாயையும், நிலத்தையும், சகோதரனையும், ஆகாயத்தையும் கருதுகிறான். அவனுடைய வேட்கை பூமியின் ஈரம் முழுவதையும் உறிஞ்சிவிட்டு அதைப் பாலைவனமாக விட்டெறிகிறது.

எனக்குத் தெரியாது. எங்களுடைய வழிகள் உங்கள் வழிகளிலிருந்து வேறானவை. உங்கள் நகரங்களின் தோற்றம் சிவப்பு மனிதனின் கண்களை நோகச் செய்கிறது. ஏனெனில் சிவப்பு மனிதன் காட்டுமனிதனாக இருப்பதால் புரிந்து கொள்வதில்லை.

வெள்ளைக்காரர்களின் நகரங்களில் அமைதியான இடங்களே இல்லை. வசந்தகாலத்தின் இலைகள் கீழே விழும் முணுமுணுப்பு அல்லது வண்டின் சிறகொலியோ இல்லை. ஒரு காட்டுமனிதன் என்பதால் எனக்கு இது புரியவில்லை. குளம்படி ஓசைகள் காதுகளை அவமானப்படுத்துகின்றன. இரவில் குளக்கரைகளில் சுவர்க்கோழிகளின் புலம்பலோ, தவளைகளின் விவாதமோ கேட்காமலிருந்தால் அங்கே வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்? நான் ஒரு சிவப்பு மனிதன். எனக்கு இது புரியவில்லை. குளத்தின் முகத்தில் வீசும் காற்றின் மெல்லிய ஓசையும், மத்தியான மழையில் கழுவப்பட்டு வரும் அதன் வாசனையும், பைன் மரங்களிடமிருந்து பெற்ற நறுமணமுமே ஒரு செவ்வியந்தியனுக்குப் பிரியமானவை.

சிவப்புமனிதனுக்கு காற்று விலைமதிப்பில்லாதது. எல்லாப் பொருட்களும் அதைப் பங்கிட்டுக் கொள்கின்றன. மிருகமும், மரமும், மனிதனும் ஒரே காற்றைப் பங்கிட்டுக் கொள்கின்றனர். வெள்ளை மனிதன் தான் சுவாசிக்கும் காற்றைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. நீண்டகாலமாகச் செத்துக்கொண்டிருக்கிற ஒரு மனிதனைப்போல துர்நாற்றத்தைப் பரப்பி அவன் அதிலேயே மரத்துப் போகிறான். உங்களுக்கு எங்களுடைய நிலத்தை விற்க நேர்ந்தால் நீங்கள் நினைவு கொள்ள வேண்டும் : காற்று விலைமதிப்பில்லாதது. ஏனெனில் தன்னைச் சார்ந்திருக்கிற எல்லாவற்றுக்கும் தனது ஆன்மாவைப் பங்கிட்டுத் தருகிறது. சுவாசிக்க முதல் மூச்சைத் தந்த காற்றிலிருந்துதான் எங்களுடைய மூதாதை கடைசிப் பெருமூச்சையும் உள்ளிழுத்தார். உங்களுக்கு நாங்கள் இந்த நிலத்தை விற்க நேர்ந்தால், இதை எப்பொழுதும் பரிசுத்தமானதாக நீங்கள் காப்பாற்ற வேண்டும். எங்கோ புல்வெளிகளில் மலர்ந்த பூக்களால் நறுமணமாக்கப்பட்ட காற்றை; வெள்ளைக்காரனும் அனுபவிக்கப் போகும் அந்த நிலத்தை.

அப்படியென்றால், எங்களுடைய நிலத்தை வாங்கும் உங்கள் விருப்பத்தை நாங்கள் பரிசீலனை செய்கிறோம். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள நேர்ந்தால், நான் ஒரு நிபந்தனை விதிப்பேன். வெள்ளை மனிதன் தன்னுடைய சகோதரர்களைக் காப்பாற்றுவதுபோல இந்த நிலத்திலுள்ள விலங்குகளையும் காப்பாற்ற வேண்டும்.

நான் ஒரு காட்டுமனிதன்; என்னால் வேறு வகையில் புரிந்துகொள்ள முடியவில்லை. புல்வெளிகளில் செத்து அழுகும் ஆயிரக்கணக்கான எருமைகளை நான் பார்த்திருக்கிறேன். பாய்ந்து ஓடும் ரயிலிருந்து வெள்ளைக்காரனால் சுட்டுக்கொல்லப்பட்டவை உயிர் வாழ்வதற்காக மட்டுமே நாங்கள் கொல்லும் எருமைகளை விட, புகை கக்கும் இரும்புக் குதிரைகள் எப்படி முக்கியமானவை என்று எனக்குப் புரியவில்லை. நான் ஒரு காட்டு மனிதன்.

விலங்குகள் இல்லாமல் என்ன மனிதன்? எல்லா விலங்குகளும் இந்த பூமியிலிருந்து போய்விடுமானால், பிசாசுத் தனிமையில் மனிதன் இறந்து போவான். விலங்குகளுக்கு நேர்வதுயாவும் தாமதமின்றி மனிதனுக்கும் நேரிடும். எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை.

எங்கள் காலடியில் உள்ள நிலம் எங்களுடைய மூதாதையரின் சாம்பல் என்பதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். எனில் அவர்கள் நிலத்தை மதிப்பார்கள். எங்களுடைய உடன்பிறந்தவர்களின் வாழ்க்கையால் வளமாக்கப்பட்டது இந்த பூமி என்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். இந்த பூமி எங்கள் தாய் என்று எங்களுடைய குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்திருந்தோம் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். பூமிக்கு எது நேர்ந்தாலும், அது பூமியின் பிள்ளைகளுக்கும் நேரிடும். நிலத்தின் மீது துப்பும்போது மனிதன் தனது உடம்பின் மீதே துப்பிக் கொள்கிறான்.

எங்களுக்குத் தெரியும் இது: பூமி மனிதனுக்கு உரிமையானதல்ல; மனிதன் பூமிக்கு உரிமையானவன். எங்களுக்குத் தெரியும் இது : ரத்தம் ஒரு குடும்பத்தை ஐக்கியப் படுத்துவதுபோல எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. பூமிக்கு எது நேர்ந்தாலும் அது பூமியின் பிள்ளைகளுக்கு நேரிடும். வாழ்க்கை வலையை நெய்தவன் மனிதனல்ல. அவன் அதில் வெறும் கண்ணி. வலைக்குச் செய்வது எதுவாயினும் அவன் தனக்கே செய்து கொள்கிறான்.

நண்பனைப்போல உரையாடிக்கொண்டு கடவுளுடன் கூட நடக்கும் வெள்ளை மனிதனும் இந்தப் பொது நியதில்லை விலக்கானவல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக நாம் எல்லோரும் சகோதரர்களே. நாம் சந்திப்போம். எங்களுக்குத் தெரியும் : நமது கடவுள் ஒரே கடவுள் என்பதை வெள்ளை மனிதனும் ஒரு நாள் கண்டடைவான். நீங்கள் நினைவுகொள்ள வேண்டும்: எங்களுடைய நிலத்தைச் சொந்தமாக்க விரும்புவதுபோலத்தான் கடவுளையும் சொந்தமாக்கிக் கொண்டீர்கள். ஆனால் அது உங்களால் முடியாது. அவர் மனிதனின் கடவுள். அவருடைய கருணை சிவப்பு மனிதனுக்கும் வெள்ளையனுக்கும் சமத்துவமானது. இந்த பூமி கடவுளுக்கு விலை மதிப்பில்லாதது. பூமியை நோகச் செய்வது அதைப் படைத்தவரின் மீது கொட்டும் நிந்தனை. வெள்ளை மனிதனும் இந்த பூமியில் இல்லாமற் போவான். ஒருவேளை வேறு எந்த இனத்துக்கும் முன்பாகவே , உங்களுடைய படுக்கையும் மலினமாகும். உங்களுடைய குப்பையில் கிடந்து நீங்களும் ஒருநாள் மூச்சுத் திணறுவீர்கள்.

இந்த நிலத்தின் மீதும், சிவப்பு மனிதன் மீதும் உங்களுக்கு அதிகாரம் வழங்கிய, ஏதோ பிரத்தியேக காரணங்களால் உங்களை இந்த நிலத்திற்கு கொண்டு வந்தவரின் வலிமையால் , வெந்து சாம்பலாகும்போதும் நீங்கள் பிரகாசிக்கலாம். எல்லா எருமைகளும் கசாப்புச் செய்யப்பட்டதும், காட்டுக்குதிரைகள் அடக்கப்பட்டதும், கானகத்தின் ரகசிய மூலைகள் மனிதனின் பிரவேசத்தால் கனத்ததும், வளமான குன்றுகளின் காட்சி பேசும் கம்பிகளால் மூடப்பட்டதும் எப்போது என்று எங்களுக்குத் தெரியாது, ஏனெனில் அந்த நியதி எங்களுக்குப் புதிரானது. அடர்ந்த காடுகள் எங்கே? அழிந்து போயின. கழுகுகள் எங்கே? அழிந்து போயின. வாழ்தலின் முடிவு, பிழைத்திருத்தலின் ஆரம்பம்.

**

நன்றிசுகுமாரன்பிரம்மராஜன் (மீட்சி)

 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக