திங்கள், 14 டிசம்பர், 2009

பதில் சொல்ல முடியாத கேள்விகள்


திருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்லத் தயாராக நின்றிருந்த ரயிலில் எங்கள் பெட்டியில் அம்மாவுடன் ஏறியதுமே அந்தச் சிறுமி எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தாள். மூன்றோ நாலோ வயது இருக்கும்.மாநிறம். கழுத்துவரை வெட்டிய சுருட்டை முடி. அதை மறைக்கும் குட்டி முக்காடு.திராட்சைக் குண்டுபோலக் கண்கள். இருக்கையை அடையாளம் கண்டதும் உட்கார்ந்து எல்லாரையும் ஒருமுறை பார்த்தாள்.எழுந்து அம்மாவின் கையிலிருந்த ராட்சசப் பெட்டியை வாங்கி சிரமப்பட்டு இழுத்து இருக்கைக்கு அடியில் தள்ளிவிட்டாள். மலையாளித் தனமான தோள் குலுக்கலுடன் எல்லாருக்கும் 'சலாம் அலைக்கும்' சொன்னாள். அந்த ஒற்றை நொடியில் எல்லாருக்கும் அவளைப் பிடித்துப் போயிற்று.

திரோந்திரத்திலிருந்து எர்ணாகுளத்துக்கு உம்மாவுடன் போகிறாள். அவளுக்கு அதுதான் முதல் ரயில் பயணம். பெட்டியில் இருந்த எல்லாரிடமும் அவளே பிரகடனப் படுத்திக் கொண்டாள். அவளுடைய உப்பா வளைகுடா நாட்டில் வேலை செய்கிறார். அங்கே நடந்த விபத்தில் அவருக்குக் காயம்பட்டிருக்கிறது.அதனால் அவர் வேலைபார்க்கும் கம்பெனி அவரை விமானத்தில் திருப்பி அனுப்புகிறது. அன்று இரவு விமானம் நெடும்பாசேரி விமானதளத்துக்கு வரும்.அங்கிருந்து உப்பாவை அமிர்தா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவார்கள். உம்மாவும் அவளும் உப்பாவைப் பார்த்துக்கொள்வார்கள். குழந்தை பேசுவதை அதன் தாய் அதட்டித் தடை செய்யப்பார்த்துத் தோற்றுப் போய்க்கொண்டிருந்தாள். தோல்வியை மறைக்க எல்லாரையும் பார்த்து வெளிச்சமில்லாத சிரிப்பை உதிர்த்தாள்.

என்னுடைய இருக்கைக்கு எதிரில் அம்மாவுக்கும் பெண்ணுக்கு இருக்கை. ''அங்கிள் என்னை ஜன்னலருகில் விடுவீங்களா?'' என்று மலையாளத்தில் கேட்டாள்.நான் நகர்ந்துஉட்கார்ந்தேன். அம்மவை விட்டு வந்து ஜன்னலருகில் உட்கார்ந்து கொண்டாள்.அவளுடைய சின்ன உடம்பிலிருந்து அத்தரின் கனத்த நெடி எழுந்து கொண்டிருந்தது.எல்ல முகங்களையும் பரிச்சயம் செய்துகொள்ளும் பாவத்தில் ஒருமுறை பார்த்தாள். பிறகு நோட்டம் ஜன்னலில் பதிந்தது. காட்சிகள் சுவாரசியமில்லாமல் போன நொடியில் அவளிடமிருந்து கேள்விகள் வந்து விழுந்தன. எல்லாருக்குமான கேள்விகள் அவளிடமிருந்தன.

என்னுடைய மீசை ஏன் வெள்ளையாக இருக்கிறது. அவளுடைய உப்பாப்பாவின் மீசை கருகருவென்று இருக்கும். அவர் பல் துலக்கும் பிரஷ்ஷால் கறுப்புப் பேஸ்ட் போட்டு மீசையையும் துலக்குவார். முன்னிருக்கையில் ஜன்னலுக்குப் பக்கமாக உட்கார்ந்திருக்கும் மாமி ஏன் அவ்வளவு பெரிய கம்மலை மூக்கில்போட்டிருக்கிறாள்.இது கம்மல் இல்லை குழந்தை. மூக்குத்தி என்றார் மாமி. அப்படியானால் வலிக்காதா? அவளுடைய வலியம்மாவுக்குக் காது நிறைய அலுக்கு. பெரிய கம்மல்.அதைப் போட்டுப் போட்டு காதே அறுந்து விட்டது. மாமியின் மூக்கு அறுந்து போகாதா? உப்பா வரும் விமானம் எத்தனை மணிக்கு நெடும்பாசேரிக்கு வரும்? அதற்குள் ரயில் அங்கே போய்ச் சேர்ந்து விடுமா? சேர்ந்து விடும் என்றாள் அம்மா. அடிபட்ட உப்பா எப்படி வருவார்?
நடந்து வருவாரா? சக்கர நாற்காலியில் உட்கார்ந்து வருவாரா? படுக்கையில் படுத்துக்கொண்டே வருவாரா? இந்த முறை உப்பா அவளையும் உம்மாவையும்
விமானத்தில் கொண்டு போவாரா? இது என்ன ஸ்டேஷன்? வர்க்கலை. அப்படியென்றால்? அது ஒரு பெயர். என் பெயர் ஜீனத். உங்கள் பெயர்? மாமி பெயர்?
அந்த அங்கிள் பெயர்? அங்கிள் பக்கத்திலிருக்கிற ஆன்ட்டி பெயர்? அந்த குழந்தையின் பெயர்? பெயர்களைத் தெரிந்து கொண்ட பிறகு கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள் அவள்.அம்மா கொடுத்த பதார்த்தத்தை யாருக்காவது வேண்டுமா என்று கேட்டு 'குழந்தையே தின்று கொள்ளலாம்' என்றதும் சாப்பிடத் தொடங்கினாள்.முடித்து விட்டு ஜன்னல் வழியாகப் பார்க்கத் தொடங்கினாள். மறுபடியும் கேள்விகள் கேட்பாளோ என்று பயமாக இருந்தது. பயந்தது போலவே மறுபடியும் கேள்விகள் ஆரம்பமாயின. அவளுடைய அம்மாவைத் தவிர எல்லாரும் தூங்குவதுபோல நடித்துக்கொண்டிருந்தார்கள். அம்மா அவளைப் பக்கத்தில் வந்து உட்கார அழைத்தாள்."இல்ல, நான் இங்கேயே இருக்கேன்" என்று ஏதோ கேட்கத் தொடங்கினாள்.

''குழந்தைக்குத் தூக்கம் வரவில்லையா?'' என்று கேட்டேன். இப்போது வரவில்லை. கொஞ்சம் கழித்ததும் வரும். அங்கிளுக்குத் தெரியுமா? தூக்கம் எங்கேயிருந்து வருகிறது? 'தெரியாது'' என்றேன். பதில் சொல்லச் சிரமமான கேள்விகளையே பெரும்பாலும் குழந்தைகள் கேட்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் ஒரு புது உலகம் கிடக்கிறது.அதன் திசைகளைத் திறந்து உள்ளே நுழைவதற்காக அவர்கள் உபயோகிக்கும் திறவுகோல்களாக இருக்கலாம் இந்தக் கேள்விகள்.

''காலுக்கு அடியிலேருந்துதான் தூக்கம் வருது.. நாம தூங்கறதுக்குப் படுத்ததும் கால்தான் முதல்லே தூங்கும்'' என்றாள் ஜீனத். நான் யோசிக்க ஆரம்பித்தேன்.

எர்ணாகுளம் சந்திப்பில் ஜீனத்தும் அம்மாவும் இறங்கினார்கள். விடைபெறும் முன்பு அவள் எல்லாரையும் தொட்டுத் தொட்டு நகர்ந்தாள். 'சிலிர்ப்பு' கதையில் ஜானகிராமன் எழுதியது போல இருந்தது. சைதன்னியமே ஒருமுறை ஸ்பரிசித்து விலகியதுபோல இருந்தது. அந்தக் குழந்தை இறங்கிப்போன பிறகு சில நிமிடங்கள் பெட்டியில் இருண்ட அமைதி கவ்வியிருந்தது.

@

ஷுன் டாரோ தனிக்காவா ஜப்பானின் பிரபலமான கவிஞராகக் கருதப்படுபவர். புகழ் பெற்ற தத்துவவாதியின் மகனாகப் பிறந்தவர்.கல்லூரிக்குப் போவதை
விடக் கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகரித்துப் படிப்பைப் பாதியில் விட்டவர். பத்தொன்பதாம் வயதிலேயே கவிஞராகப் பெரும் புகழ் பெற்றார்.

அவர் எழுதத் தொடங்கிய காலத்தில் ஜப்பானியக் கவிதையில் மேற்குப் பகுதியின் செல்வாக்கு அபரிமிதமாக இருந்தது.தனிக்காவாவுக்கு அந்தக் கவிதைகள் இரண்டாம் உலகப் போரால் ஜப்பானிய தேசத்துக்கும் கலாச்சாரத்துக்கும் நேர்ந்த தீங்குகளைப் பற்றிய புலம்பல்களாகத் தெரிந்தன . போருக்குப் பிந்திய தலைமுறையைச் சேர்ந்த இளங்கவிஞராக இருந்த தனிக்காவா யுத்தத் தோல்விக்குக்குப் பிறகு தன்னுடையதென்று ஜப்பான் கடைப்பிடித்திருந்த எல்லா
விழுமியங்களும் அழிந்து விட்டதாக நம்பினார்.அவருடைய பார்வை மேற்கத்தியகவிதைகளை நாடியது. பிரபஞ்சம் தழுவிய பிரக்ஞை என்ற கருத்தாக்கம் அவர் மனதில் பதிந்தது. நேற்றையும் நாளையையும் கடந்த ஒரு மனம். கலாச்சாரப் பாகுபாடுகளால் வகைப்படுத்தப் படாத மனம்.கவிதையில் சட்டகங்களைத் தாண்டிய மனம்.அப்படியான மனநிலையில்தான் கவிதை உருவாகும் என்று எண்ணினார். அதைக் கவிதையில் நடைமுறைப்படுத்தவும் செய்தார்.

''என்னுடைய கவிதைகளில் துன்பியலுக்கு இடமில்லை. மிகையான உணர்வுகளுக்கு இடமில்லை. மிகையான உனர்வுகளைக் கூட வெகுளித்தனமாக எழுதவே முய்ன்றிருக்கிறேன். அந்த மனம் குழந்தைகளிடம் தான் இருக்கிறது. அவர்களுடைய உலகம் புறவயமானது. குதூகலமானது. பதில் சொல்ல முடியாத கேள்விகளால் நிரம்பியது'' என்று குறிப்பிட்டார் தனிக்காவா. அவருடைய எழுத்துக்களில் பெரும்பாலானவை குழந்தைத் தனமாகவும்
குழந்தைகளுக்காகவும் எழுதப்பட்டவையாக ஆனது இயல்பானது.

@

நதி
----

அம்மா,
நதி ஏன் சிரித்துக்கொண்டிருக்கிறது?

ஏனென்றால்
சூரியன் அதைக் கிச்சுகிச்சு மூட்டுவதனால்.

அம்மா,
நதி ஏன் பாடிக்கொண்டிருக்கிறது?

ஏனென்றால்
வானம்பாடி அதன் பாட்டைப் புகழ்வதனால்.

அம்மா,
நதி ஏன் குளிர்ந்திருக்கிறது?

முன்பொரு காலத்தில் பனியால் நேசிக்கப்பட்டதை நினைப்பதால்.

அம்மா.
நதிக்கு எவ்வளவு வயதாகிரது?

வசந்தத்தின் அதே வயதுதான் நதிக்கும்

அம்மா,
நதி ஏன் ஓய்வெடுப்பதேயில்லை.

அது வீடு திரும்பவேண்டுமென்று
கடலம்மா காத்துக்கொண்டிருப்பதால்.

@


தனிக்காவாவின் இந்தக் கவிதையைப் பலமுறை வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஒரு பிஞ்சு முகம் கேள்விகளுடன் உள்ளுக்குள் துலங்கும். மேற்சொன்ன பயணத்துக்கு முன்பு வரையிலும் அந்தக் குழந்தை அநாமதேயம்.அதன் பின்னர் அந்த முகத்துக்கு ஜீனத் என்று பெயரிட்டேன்.

@

The Vintage Book of Contemporary Word Poetry.





/

4 கருத்துகள்:

  1. "தூக்கம் எங்கிருந்து வருகிறது?"

    நதி எங்கிருந்து வருகிறது? பேருந்து எங்கிருந்து வருகிறது? எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறோம். நம்மோடே இருக்கும் தூக்கம் எங்கிருந்து வருகிறதென்பதைத் தெரிந்துகொள்ளவில்லை பாருங்கள். அந்தக் கேள்வியைப் படித்தவுடன் முதலில் சிரிப்பாக இருந்தது. பிறகு... பெரியவர்களை(வயதால்) நினைத்துச் சிரிப்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  2. குழந்தைகள் பேசுவது கேள்விகள் கேட்பது சில சமயம் வியப்பாகவும், அதிகப்பிரசங்கித்தனமாகவும் இருப்பது போல தோன்றினாலும் அவர்களுடன் நாமும் குழந்தையாக மாறி பேசுகையில் ஒரு தனி இன்பம் ஏற்படுகிறது.

    அவர்களின் அப்பாவித்தனமான கேள்விகளில் பல மிகவும் அறிவுப்பூர்வமானவை.

    உங்களின் இனிய அனுபவத்திற்கும் கவிதைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. விதூஷ் கொடுத்திருந்த சுட்டியைச் சொடுக்கி இங்கே வந்தேன். சுகுமாரனுக்கு ஒரு வலைத்தளம் உள்ளதைக் கண்டு இனிதுணர்ந்தேன். விதூஷுக்கு நன்றி.

    நல்லதொரு கவிதையை எங்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறீர்கள். இவ்வளவு எளிமையாய் எப்படி எழுதுவது என்று ஏக்கம் தொற்றிக்கொண்டது.

    தொடர்வண்டி ஜீனத் சித்திரம் அழகோ அழகு. கவிதைக்கு எத்துணைப் பொருத்தமான உரைக்கதை!

    பதிலளிநீக்கு
  4. //பதில் சொல்லச் சிரமமான கேள்விகளையே பெரும்பாலும் குழந்தைகள் கேட்கிறார்கள்.//
    உண்மை. ஆனால் அர்த்தமில்லாத கேள்விகள் என்று ஒதுக்கிவிடவும் முடியாமல் இருக்கும். சில சமயம் எப்படி விளக்குவது என்று பேராசிரியர் அளவிற்கு மண்டையை பிக்க செய்யும். ஆனாலும் அந்த உலகம் அழகான உலகம். கேள்விகளுக்கு விடை கிடைக்காமலே போனாலும் கவலைப்படாத, சட்டென்று எதையும் மன்னித்து விடக்கூடிய, மறந்து விடக்கூடிய உலகம். நல்ல பதிவு. மிக நன்றாய் எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு