திங்கள், 14 டிசம்பர், 2009

பலிக்கோழை




@



அபத்தமானவையென்றும்
கொடூரமானவையென்றும்
தெரிந்தும் கூட
உமது ஆணைகளை ஓர் எழுத்துப் பிசகாமல்
நிறைவேற்றியிருக்கிறேன், ஐயா,
அப்போதெல்லாம் நான்
என்னாலேயே அவமதிக்கப் பட்டிருக்கிறேன்.

கொன்றது நாமல்ல எனினும்
சடலங்களைக் காட்டி யாசிக்கச் சொன்னீர்
உமது வாக்கை மறுக்கத் தெரியாமல்
ஒலிபெருக்கிவைத்து
ஒப்பாரி பாடினேன்
அப்போதெல்லாம் என் கண்ணீர்
எனக்கே மூத்திரமாய்க் கரித்தது

விரித்த துண்டில் சிதறிய நாணயங்களை
பொறுக்க நீர் குனிந்தபோது
நிலம் பிளந்து உம்மை விழுங்கட்டுமென்று
விரும்பியிருக்கிறேன்
அதுவோ உம் நிலம்
நீர் சொல்லாமல் இளகுமா?

சிதைத்தது நாமல்ல எனினும்
குலைந்த முலைகளையும் கிழிந்த யோனியையும்
எல்லாரும் காண வெளியரங்கமாக்கச் சொன்னீர்
உமது கட்டளைக்குப் பணிந்து
பேரொளி விளக்கைப் பொருத்தி
ஊர்க் காட்சியாக்கினேன்
அப்போதெல்லாம் என் விந்து
என்னையே அமிலமாகப் பொசுக்கியது

காட்சிக் கட்டணத்தை
வசூலிக்க நீர் நடந்தபோது
மலைசரிந்து நீர் புதையக் கூடாதாவென்று
பிரார்த்தித்திருக்கிறேன்
அதுவோ உம் கடவுள்
நீர் ஆட்டுவிக்காமல் இயங்குமா?

விபத்துக்குக் காரணம் நாமல்ல எனினும்
இறந்து கிடந்தவனின் உடைமையை அபகரிக்கச் சொன்னீர்
உமது சொல்லுக்குப் பணிந்து
தடயமில்லாமல் திருடினேன்
அப்போதெல்லாம் என் குடல்
என் வாய்க்குள் நாகமாய் நெளிந்தது

பறிமுதல் பொருளை
கக்கத்தில் இடுக்கிக்கொண்ட உம்மை
சிறைக்குள் தள்ளிவிடத் துடித்திருக்கிறேன்
அங்கோ உம் அதிகாரம்
நீர் பேசினால் கம்பிகள் நிற்குமா?

இவை உதாரணங்கள் ஐயா,
இதைச் செய்தவர் நீரல்ல
ஆனால் நீர்தான் என்றும்
தெரியும் எனக்கு
இதைச் செய்தவன் நானல்ல
என்மேல் அமர்ந்திருக்கும் நீர்தான் என்றும்
தெரியும் உமக்கு.

எல்லாம் கடந்து
இன்று நீர்
அபகரித்தது என் பொருளை
சிதைத்தது என் குறியை
கொல்லவிருப்பது என்னை

அதைச் செய்பவர் நீரல்ல
ஆனால்
என்னைப்போன்ற இன்னொரு பலிக் கோழையின்
தோளில் வீற்றிருக்கும் நீர்தான்

நீர் அறியாமல்போனீர்
என் அவமானங்களில் கனன்றுகனன்று
இப்போது நான் எரிதழல் -
ஓர் எழுத்துப் பிசகாமல்
உமது ஆணைகளை நிறைவேற்றிய நான்
உமது பாதங்களைத் தொட்டு
ஒருமுறை ஒரே ஒருமுறை
வணங்க விரும்புகிறேன் ஐயா.

1 கருத்து: