செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

வெண்ணிற வெப்பம்


@

வெண்ணிற வெப்பத்தில் ஓர் ஆன்மாவைப் பார்க்கவும்
பார்த்தபின் கதவருகே பணியவும் உனக்குத் துணிவுண்டா ?
நெருப்பின் பொதுநிறம் சிவப்பு ; ஆனால்
ஜுவாலையின் நிபந்தனைகளுக்கு உலோகத்தாது இணங்கும்போது
தைலம் பூசப்படாத நிறமற்ற சுடராக ஒளிரும்.
நேர்த்தியான உருமாற்றத்தின் அடையாளமான
கிராமத்துக் கொல்லனின் உலைக்கூடம் இரைச்சலிடும்.
பொறுமையற்ற தாதுக்களை
சம்மட்டியாலும் ஜுவாலையாலும் சுத்திகரிக்கும் -
நியமிக்கப்பட்ட ஒளி உருமாற்றத்தை நிராகரிக்கும் வரை.

- எமிலி டிக்கின்சன்.@


பிறமொழிக் கவிதைகளை வாசிப்பதில் ஆர்வமுண்டு. அவற்றைப் பின் தொடர்ந்து செல்வதுமுண்டு. இந்தச் செயல்பாடு என்னுடைய எல்லைகளை விரிவு படுத்திக் கொள்வதற்காக. எனினும் ஆங்கிலம் வழியாகக் கிடைக்கும் பிற மொழிக் கவிதைகளை வாசிப்பதில் காட்டும் அக்கறையை அசலான ஆங்கிலக் கவிதைகளை வாசிப்பதில் காட்டியதில்லை. பெரும்பாலான ஆங்கிலக் கவிதைகள் பாடத் திட்டப் பொருட்களாக அறிமுகமானவை; அவற்றைப் பயிற்றுவித்தவர்கள் தேர்வில் மதிப்பெண் பெறும் உபாயங்களைச் சொல்லித்தந்தார்களே தவிர கவிதையின் ஜீவனை உணரும் வழியைக்
கற்றுத் தரவில்லை. ஆங்கிலக் கவிதை மீதான அக்கறையின்மைக்கு இவை காரணங்களாக இருக்கலாம். கவிதை எழுத்தில் ஈடுபாடு முற்றியபோதும் அறிந்துகொள்ளும் விருப்பத்தில் வாசித்த கவிதைகளும் சொற்பம். டி.எஸ். இலியட், எஸ்ரா பவுண்ட், ஸ்டீபன் ஸ்பெண்டர், சில்வியா பிளாத் இவர்களைத் தாண்டி எவரையும் வாசிக்க முடிந்ததில்லை. விதிவிலக்கு - எமிலி டிக்கின்சன்.

எமிலியின் கவிதைகளின் முழுத் தொகுப்பு நீண்ட காலம் கைவசமிருந்தது. ஆயிரத்திச் சொச்சம் பக்கங்கள் உள்ள புத்தகம். அதை இலக்கிய நண்பர் ஒருவர் 'நீயே வெச்சிக்கோ' என்று கொடுத்திருந்தார்.அமெரிக்க இதழான 'ஸ்பா'னுக்கு ஆண்டுச் சந்தா செலுத்துபவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நூல் அது.அதை அவர் கொடுத்த சூழ்நிலையும் வித்தியாசமானது. தற்கொலை செய்துகொள்வதற்காக சவரப் பிளேடால் கழுத்தை வெட்டிக்கொண்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் நண்பர். மருத்துவமனையில் அவரைப் பார்க்கப் போனபோது தலைமாட்டில் இருந்த அலமாரி மீது எமிலி டிக்கின்சனின் முழுக் கவிதைத் தொகுப்பு உட்கார்ந்திருந்தது. தற்கொலைக்கு முயற்சி செய்து தப்பித்தவர் மருத்துவமனைக்கு வரும்போது எதற்காகப் புத்தகத்தைக் கொண்டு வந்தார்? அதுவும் எமிலி டிக்கின்சனின் கவிதைத் தொகுப்பை? என்று அப்போது எழுந்த கேள்வி விடுபடாப் புதிராக இன்றும்மனதில் இருக்கிறது. மருத்துமனையிலிருந்து திரும்பி வந்த சில நாட்களுக்குப் பின்னர் நண்பர் எமிலியை என்னிடமிருந்து மீட்டுக்கொண்டு போனார். வருத்தமாக இருந்தது.குண்டு எமிலி போன துக்கத்தை மாற்றிக்கொள்ள பென்குவின் வெளியீடாக வந்த நடுத்தரப் பருமனுள்ள எமிலியைக் கண்டுபிடித்தேன். அவ்வப்போது வாசித்தேன்.

எமிலி டிக்கின்சனின் கவிதைகள் எளிதில் புரிபடாதவை. அவற்றில் பயிலும் மொழி எளிமையானது. எனினும் அது வெளிப்படுத்தும் அர்த்தம் பூடகமானது;கலாச்சார வேரோட்டமுள்ளது. விவிலியத்தின் எதிரொலிகள் கொண்டது. பழைய ஏற்பாட்டில் வரும் 'யோபுவின் புத்தகம்' எமிலியின் கவிதைகள் மீது செல்வாக்குச் செலுத்தியிருக்கலாம் என்று ஒவ்வொரு வாசிப்பிலும் தோன்றுவதுண்டு. அந்த அளவுக்கு அந்தரங்கமானவை எமிலியின் கவிதைகள். அவை பிடிகொடுக்காமல் விலகி நிற்பதன் காரணமும் இந்தத் தனித்துவம்தான்.

@

மலையாள எழுத்தாள நண்பர் உண்ணியின் அழைப்பு எமிலி டிக்கின்சனைப் பற்றி யோசிக்கத் தூண்டியது. அவர் அழைத்தது சமீபத்திய நியூயார்க்கர் இதழைப் பார்க்கச் சொல்லுவதற்காக. அதில் எங்கள் இருவருக்கும் பிடித்தமான சிலி எழுத்தாளர் ராபர்ட்டோ பொலானோவின் கதை இருக்கிறது. அந்த இதழை வாங்கச் சொல்லவே அவர் அழைத்திருந்தார். வாங்கினேன். பொலானோவைன் கதையைத் தாண்டி என்னை ஈர்த்தது இதழில் வெளியாகியிருக்கும் இன்னொரு கட்டுரை. அது எமிலி டிக்கின்சனைப் பற்றி ஜுடித் துர்மான் எழுதியது. எமிலிக்கும் அவரது நண்பரான தாமஸ் வெண்ட்வொர்த் ஹிக்கின்சனுக்கும் இடையில்
நிலவிய இலக்கிய உறவு பற்றியது ஜூடித்தின் கட்டுரை.

ஹிக்கின்சன் இலக்கிய ஆர்வலர். அடிமைமுறை எதிர்ப்பாளர். பெண்ணுரிமை கருத்துப் பரப்புநர். கூடவே பூக்களைப் பற்றையும் இயற்கையைப் பற்றியும் கட்டுரைகள் எழுதும் இயற்கை நேசர். அவர் எழுதிய 'இளம் படைப்பாளருக்கு ஒரு கடிதம்' என்ற கட்டுரையும் அதன் பின்விளைவுகளும்தான் எமிலி டிக்கின்சன் என்ற கவிஞரை உலகத்துக்கு அறிமுகப் படுத்துகிறது. இலக்கிய உலகுக்கு அறிமுகமாகும் இளம் எழுத்தாளர்களை முன்னிருத்தி அவர் எழுதிய கட்டுரையின் ஒற்றை வரி எமிலியைத் தூண்டி விட்டது. 'ஒரு சொல்லுக்குள் ஏராளமான வேட்கைகளின் ஆண்டுகள் இருக்கலாம்; ஒரு வாக்கியத்தில்
பாதி வாழ்க்கையே இருக்கலாம் ' என்ற கட்டுரை வரி அவரை உசுப்பியது. இதைத்தானே தன்னுடைய கவிதையும் செய்கிறது என்று எமிலிக்குத் தோன்றியது.தன்னுடைய நான்கு கவிதைகளின் படியையும் கூடவே ஒரு கடிதத்தையும் ஹிக்கின்சுக்கு அனுப்பினார்.
’ என்னுடைய கவிதை உயிருள்ளதா என்று சொல்ல முடியுமா?'என்ற வேண்டுகோள் கடிதத்தில் இருந்தது.' என்னை ஏமாற்றிவிட வேண்டாம்' என்ற வாசகத்துடன் கையொப்பமிடாமல் கடிதத்தை முடித்திருந்தார் எமிலி.

எமிலி டிக்கின்சன் சுமாரான வசதியும் செல்வாக்குமுள்ள குடும்பத்தில் பிறந்தவர். உயர் தரமான கல்வி பெற்றிருந்தார். சிறுவயது ஆர்வம் கவிதையெழுத்தை அவரது தீராத வேட்கையாக மாற்றியிருந்தது. ஆரம்பத்தில் எழுதிய கவிதைகளில் சில குடும்ப நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் பிரபலமான பத்திரிகையில் எமிலியின் பெயரில்லாமலேயே வெளியானது. அவருக்குத் தன்னுடைய கவிதைகளை சுய மதிப்பு ச்செய்ய முடியவைல்லை. எழுதிய கவிதைகளையெல்லாம் காகிதச் சுருள்களாகச் சுருட்டி மேஜை அலமாரியில் பதுக்கி வைத்திருந்தார். மிக நெருக்கமான நண்பர்களுக்கு மட்டுமே அவரது கவிதைகள் அறிமுக மாகியிருந்தன.

'தன்னை ஏமாற்றிவிட வேண்டாம்' என்று எமிலி கடித்தத்தில் குறிப்பிட்டதற்குக் காரணமிருந்தது.எமிலியின் கவிதைகள் அதீதப் படிமங்களால் நிறைக்கப்பட்டவை என்று அவருடைய நண்பரும் பெரும் அறிஞருமான செவால் கருத்துச்சொல்லி அவரை 'ஏமாற்றி'யிருந்தார். ஹிக்கின்சன் நல்லவேளை எமிலியை ஏமாற்றவில்லை. மாறாக ஆக்கபூர்வமான சில விமர்சனங்களை முன்வித்திருந்தார். அதை 'அறுவைச் சிகிச்சை' என்று ஏற்றுக்கொண்டார் எமிலி. அவர் தந்த உற்சாகமும் ஆலோசனைகளும் எமிலியின் கவிதையெழுத்தைத் தீவிரப்படுத்தின. இறப்புக்கு முன்வரை கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு கவிதைகளை எழுதியிருந்தார் எமிலி. ஹிக்கின்சன் என்ற நன்பர் இல்லாமலிருந்தால் ஒருவேளை எமிலியின் கவிதைகள் புதையுண்டு போயிருக்கலாம்.
இத்தனைக்கும் இரு நண்பர்களும் முகத்துக்கு முகம் சந்தித்துக்கொண்டது இரண்டே முறைதான். ஆனால் இருவருக்குமிடையில் வாழ்நாள் முழுவதும் கடிதத் தொடர்பு இருந்து வந்தது. எமிலி யின் மறைவுக்குப் பிறகு சகோதரி லாவினியா எல்லாக் கவிதைகளையும் தொகுத்து வெளியிட முனைந்தார். அலமாரிகளில் சுருட்டி வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான காகிதச் சுருள்களில் இருந்த கவிதைகளை வகைப்படுத்துவதும் அவற்றின் கரட்டு வடிவங்களை நீக்கி முழுமையான வடிவங்களைக் கண்டடைவதும் சிரமமாக இருந்தன. தொகுப்பாளரான மேபெல் லூமிஸ் டோடுக்கு உடன் நினைவு வந்த பெயர் ஹிக்கின்சன். தன்னுடைய தோழியின் கவிதைகளை வகைப்படுத்தும் பொறுப்பை ஹிக்கின்சன் ஏற்றுக் கொண்டார். அந்தக் கவிதையின் உள்ளோட்டங்களை அவரால் மட்டுமே பின்தொடர முடிந்தது என்பதற்குக் காரணம் இருவருக்குமிடையே நிலவிய நட்பு. அதைச் சார்ந்த கடிதப் போக்கு வரத்து.

மரணத்தையும் தனிமையையும் ஒரு பெண் உணரும் கோணத்தில் வெளிப்படுத்தியவை எமிலியின் கவிதைகள். சொந்த அனுபவங்களிலிருந்தே அவற்றை அவர் கவிதைக்கு இடம்பெயர்த்தார். ஆனால் விவிலியக் குறிப்பீடுகளும் நடையும் அவற்றை இன்னொரு தளத்துக்கு மாற்றின. அதே சமயம் அவருடைய தனி வாழ்வின் அடையாளங்களை இனங்காண முடியாத பூடகத்தன்மையையும் கொடுத்திருந்தன. அந்த மர்மம்தான் எமிலி டிக்கின்சன் கவிதையை இன்றுவரை நிலைநிறுத்துகிறது என்றும் கருதலாம்.

வெண்ட்வொர்த் ஹிக்கின்சன் - எமிலி டிக்கின்சன் நட்பைப் பற்றி விரிவாக நூலில் எழுதப்பட்டுள்ளது. பிரெண்டா வைன் ஆப்பிள் எழுதியுள்ள 'வைட் ஹீட்'என்ற புத்தகம் கவிஞர்களின் உளவியலையும் கவிதையின் மர்மங்களையும் பற்றிப் பேசுகிறது. சரியாகச் சொன்னால் 'நியூயார்க்கர்' இதழ்க் கட்டுரையின் நோக்கம் அந்தப் புத்தகம் தரும் வெளிச்சத்தில் எமிலி டிக்கின்சனின் கவிதைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்துவதுதான். தனிமையில் அடைக்கலம் தேடும் மனங்கள், இடையீட்டின் மூலம் நீதி தேடும் உத்வேகமும் எமிலியின் கவிதையில் இருப்பதாக ஜூடித் வரையறுக்கிறார். புதிய அமெரிக்க வாசகர்களிடம்
மீண்டும் இந்தக் குணங்கள் மீண்டெழுந்திருக்கின்றன. அதனால் எமிலி டிக்கின்சன் இன்றைய கவிஞராகிறார் என்று குறிப்பிடுகிறார்.

இதெல்லாம் இலக்கிய விவகாரம். மேற்சொன்ன கட்டுரையையும் புத்தகத்தையும் வாசித்துக் கொண்டிருந்தபோது ஒரு புதிர் மனதுக்குள் விழுந்தது. வாசிப்பு முடிந்ததும் புதிரின் மர்மம் இரண்டு மடிப்புகளாக அவிழ்ந்தது.

வெண்ட்வொர்த்தின் மனதிலலிருந்த துணைவிப் பிம்பம் எமிலி டிக்கின்சனுக்குப் பொருத்தமாக இருந்திருக்கிறது. ஹிக்கின்சனின் கருத்துப்படி ' பெண் ஒன்று அடிமை; அல்லது சமமானவள். இரண்டையும் தவிர இடைப்பட்ட இடமில்லை' .ஹிக்கின்சனின் மனைவியான மேரி சானிங் நோயாளி. எனவே அடிமை. எமிலியோ அறிவிலும் படைப்பூக்கத்திலும் இணையானவர். இது முதல் மடிப்பு. வெண்ட் வொர்த் ஹிக்கின்சனுக்கு ஒரு கனவு இருந்தது. ஒரு பெருங்கவிஞனாக வேண்டும். தான் பெரும் மதிப்பு வைத்திருக்கும் எமர்சனிடம் தன்னுடைய ஆரம்பகாலக் கவிதைகளைச் சமர்ப்பித்தார். அவை எமர்சனால் நிராகரிக்கப் பட்டன.இது இரண்டாவது மடிப்பு. அதன் பின்னர் ஹிக்கின்ஸ் கவிதை எழுதவில்லை. கட்டுரையாளரானார். ஒருவேளை அவர் கவிஞராக அங்கீகரிக்கப் பட்டிருந்தால்
எமிலி டிக்கின்சனைப் பொருட்படுத்தியிருக்க மாட்டார்.ஒருவேளை எமிலி டிக்கின்சன் என்ற கவிஞர் அறியப்படாமல் போயிருக்கலாம்.

@

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக