வெள்ளி, 21 அக்டோபர், 2011

சமுத்திர ரகசியங்கள் ததும்பும் அகன்ற விழிகள்’த சண்டே இந்தியன் ‘ பத்திரிகை தீபாவளிச் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளது.ரசிகர்களாக ஆண் ஆளுமைகள் தங்களுக்குப் பிடித்த திரைநாயகிகளைப் பற்றி எழுதிய கட்டுரைகள் கொண்டது ஒரு புத்தகம். அதில் நான் எழுதிய கட்டுரை இது.
நண்பரும் மலையாளக் கவிஞருமான பாலசந்திரன் சுள்ளிக்காடு 'சௌந்தர்ய லஹரி' என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். 'தேவ சபை நர்த்தகியான நீ சாபத்தினால் பூமிக்கு வந்தாய்' என்று தொடங்கும் அந்தக் கவிதை, நடிகை ஸ்ரீவித்யாவுக்கு சமர்ப்பணம் செய்யப் பட்டது. வாசகர் களுக்கிடையில் அந்தக் கவிதை வெகுவாகப் பாராட்டப் பட்டது. இலக்கிய வட்டாரங்களில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. கவிதைக்கான முகாந்திரம் என்ன என்று கேட்ட போது ' இன்றைக்கு நாற்பத்தைந்து ஐம்பது வயதை எட்டியிருக்கும் சிலருக்காவது அவர்களுடைய பதின் பருவத்தில் ஸ்ரீவித்யா கனவுப் பதுமையாக இருந்திருப்பார். எனக்கு இருந்தார். நீயும் என் வயதுதானே? ஏன் உனக்கு இல்லையா?' என்று எதிர்க் கேள்விகளை எழுப்பினார். உண்மையை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியிருக்க வில்லை.

பாலன் சொன்ன சிலரைப்போல என் விடலைப் பருவக் கனவுகளிலும் இருந்த பெண் பிம்பங்களில் ஒன்று ஸ்ரீ வித்யா. பள்ளிக் கூடத்துக்கு மட்டம் போட்டுப் பார்த்த திரைப்படங்களில் ஒன்று ஸ்ரீவித்யா நடித்த 'நூற்றுக்கு நூறு'. அதே வயதில் வீட்டு ஜன்னல் கதவின் உள் பக்கத்தில் சினிமாப் பத்திரிகை யிலிருந்து வெட்டியெடுத்த படம் ஒன்றை சோற்றுப் பருக்கையைத் தேய்த்து ஒட்டி வைத்திருந்தேன். கவுன் அணிந்த பெண்ணின் மார்பளவுப் புகைப்படம். வலப் பக்கமாகத் தலையைச் சாய்த்துக் கைகளை இறுகக் கட்டி மோனலிசாப் புன்னகையுடன் நிற்கும் ஸ்ரீவித்யாவின் படம். அதுபோன்ற இளமைத் தோற்றத்தில் ஸ்ரீவித்யாவின் படத்தைப் பின்னர் பார்க்கவில்லை. சில படங்களுக்குள்ளேயே அவருடைய உருவத்தில் வயதுக்கு மீறிய முதிர்ச்சி தென்பட்டது. என்னுடைய ஜன்னல் படம் எழுபத்தி ஒன்றிலோ எழுபத்தி இரண்டிலோ பத்திரிகையில் வெளியானது. அப்போது ஸ்ரீவித்யாவின் வயது பதினெட்டு அல்லது பத்தொன்பது. நான்கு வருடங்கள் பிந்தி வந்த 'அபூர்வ ராகங்கள்' (1975) படத்தில் அவரை விடச் சில வருடங்களே இளையவரான ஜெயசுதாவுக்கு அம்மாவாகப் பாத்திரம் ஏற்றிருந்தார். மத்திய வயதுப் பாடகியான எம்.ஆர்.பைரவி பாத்திரத்தில் பொருந்தி நடிப்பதற்கு அன்று அவரளவு திறமைசாலிகள் இல்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். அவரது தோற்றம் அதைவிட முக்கியமான காரணம் என்று தோன்றியது. திரை உலகில் பெண்களுக்குத்தானே சீக்கிரம் வயதாகிறது. அதன் வெளிப்படையான உதாரணங்களில் ஒருவர் ஸ்ரீவித்யா.

கல்லூரி மாணவியாக 'நூற்றுக்கு நூறு' (1971) படத்தில் அறிமுகமான ஸ்ரீவித்யாவுக்குக் கிடைத்த இளமையான நாயகி பாத்திரங்கள் குறைவு. 'சொல்லத்தான் நினைக்கிறேன்' (1973), 'ஆறு புஷ்பங்கள் (1977)' போன்ற ஒரு சில படங்களில்தான் அவருடைய வயதும் பாத்திரத்தின் வயதும் ஒத்துப் போயின. பின்னர் அவர் ஏற்று நடித்த பாத்திரங்கள் பெரும்பான்மையும் அவரது வயதுக்கு மீறியவை. அக்கா, அண்ணி, அம்மா, பாட்டி, மாமியார், பாத்திரங்கள்தாம் அவருக்காகத் தமிழில் காத்திருந்தன. கொஞ்சம் முயன்றிருந்தால் சினிமா வணிகத்துக்குத் தேவையான தகுதிகளுடன் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்க முடியும். பொலிவான தோற்றத்தை பராமரித்திருந் திருக்க முடியும். மேலும் சில ஆண்டுகள் இளம் நாயகியாகத் தொடர்ந்திருக்க முடியும். அதை அவர் விரும்பவில்லைபோல. எப்படி இருக்கிறாரோ அப்படியான தோற்றத்தில் நடிப்பதையே தேர்ந்தெடுத்தார். இளம் நாயகியாக இருப்பதால் திரையுலகில் சந்திக்க நேரும் தொல்லை களையும் எப்போது நட்சத்திர ஜொலிப்பு மங்கி விடுமோ என்ற பயத்தையும் சமாளிக்கவே மேற்சொன்ன பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தார் என்றும் தோன்றுகிறது. சோகத்தின் அத்தர் லேசாகப் பூசிய வட்ட முகம், சமுத்திர ரகசியங்கள் ததும்பும் அகன்ற விழிகள், நடனத்தில் பயின்ற உடலசைவுகள். இவை அவருடைய நடிப்புக் கருவிகளாயின.ஸ்ரீவித்யா நடிப்பின் நுட்பங் களைக் கற்றுக் கொண்டது நாட்டியத்திலிருந்து என்று யூகிக்கலாம்..

கவிஞன் இல்லாமல் கவிதையை வாசித்து விடமுடியும். ஓவியன் இல்லாமல் ஓவியத்தைப் பார்த்து விட முடியும். பாடகன் இல்லாமல் இசையைக் கேட்டு விட முடியும். ஆனால் ஆடுபவர் இல்லாமல் நடனத்தையோ நடிப்பவர் இல்லாமல் நடிப்பையோ பார்க்க முடியாது. இந்த நுட்பத்திலிருந்துதான் ஸ்ரீவித்யாவின் நடிப்பை அணுக முடியும்.நாட்டியத்தில் ஆடுபவரின் தோற்றம் மறைந்து ஆட்டம் மட்டுமே புலனாகிறது. இந்த ரகசியம் வெளிப்படுவதை ஸ்ரீவித்யாவின் நடிப்பில் காண முடியும். அப்படிக் காண உதவும் பாத்திரங்கள் தமிழில் அவருக்கு அரிதாகவே வாய்த்தன. அவற்றையும் நாட்டியப் பயிற்சியில் பெற்ற பாடங்கள் மூலம் செழுமைப் படுத்தினார். சின்ன அசைவுகள் மூலம் குறிப்பிட்ட சூழ்நிலையில் குறிப்பிட்ட பாத்திரம் என்ன செய்ய வேண்டுமோ அதை வெளிப்படுத்தினார்.

பாசில் இயக்கத்தில் வெளிவந்த 'காதலுக்கு மரியாதை' படத்தில் ஸ்ரீவித்யாவுக்கு அம்மா வேடம். படம் முழுவதும் பாசமுள்ள தாயாக வந்து உருகுவதைத் தவிர எதுவும் செய்யத் தேவையில்லை. ஆனால் உச்ச கட்டக் காட்சியில் மகன் காதலித்த பெண்ணை அவளுடைய பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டுத் திரும்பும்போது பெண்ணின் தாய் மகளிடம் சொல்லிக் கொண்டு போகச் சொல்லுவார். 'அவளை என் கிட்ட கொடுத்துடுங்க. கண்ணுக்கு கண்ணா வெச்சுப் பார்த்துக்கிறேன்' என்று பதில் சொல்வார் அம்மாவான ஸ்ரீவித்யா. வசனத்தை விட அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும் அவருடைய உடல்மொழியும் விழியசைவுகளும். கவனமாகப் பார்த்தால் அந்தக் காட்சியில் அதிகமான குளோஸ் அப் ஷாட்டுகள் வைக்கப் பட்டிருப்பதும் அவருக்குத்தான் என்பது புரியும். நாட்டியத்தில் சிறு அபிநயத்தின் மூலம் பாத்திரத் தின் இயல்பை வெளிப்படுத்துகிற இந்த நுட்பத்தை ஸ்ரீவித்யா திரைநடிப்பில் தனதாக்கிக் கொண்டார்.

அபூர்வராகங்களின் இந்தி வடிவம் 'ஏக் நை பஹேலி' (1984) என்று வெளியானது. தமிழில் ஸ்ரீவித்யா ஏற்றிருந்த பைரவி பாத்திரத்தில் ஹேமமாலினி நடித்திருந்தார். படத்தில் ஒரு காட்சி. தீவிரவாதி இளைஞன் பிரசன்னாவை (கமலஹாசன்) மனம் மாறச் செய்வதற்காகத் தன் வீட்டிலேயே அடைக்கலம் கொடுக்கிறாள் பைரவி. இசை உலவும் அந்த வீட்டில் பிரசன்னா மெல்லமெல்ல மனம் மாறுகிறான். ஒரு மிருதங்கத்தை எடுத்து லய சுத்தமாக வாசிக்கிறான். குளியல் அறையில் நீராடிக் கொண்டிருக்கும் பைரவி அவன் வாசிக்கும் தாளத் கட்டுக்குப் பொருத்தமாக ஸ்வரங்களை ஆலாபனை செய்கிறாள். இலக்கணம் பிசகாத வாசிப்பால் ஈர்க்கப்பட்டு ஈர உடையுடன் வந்து ஆச்சரியப்படுகிறாள். பின்னர் உடை மாற்றி வந்து அவனைப் பாராட்டுவாள். இரண்டு படங்கள். இரண்டிலும் அதே காட்சி. அதே இயக்குநர். கே.பாலசந்தர். அதே கதாநாயகன் .கமலஹாசன். இரண்டிலும் பைரவியாக நடித்தவர்கள் நாட்டியம் தெரிந்தவர்கள். ஸ்ரீவித்யாவும் ஹேமமாலினியும். எனினும் தமிழ்ப் படக் காட்சியிலிருந்த தீவிரம் இந்தியில் குறைவாகவே தென்பட்டது. காரணம், ஸ்ரீவித்யா என்று தோன்றுகிறது. இந்த நுட்பம்தான் ஸ்ரீவித்யாவைத் தமிழ்ச் சினிமாவில் புறக்கணிக்க முடியாத நடிகையாக்கியது. நீண்ட காலம் நிலைத்திருக்கவும் உதவியது. அதை இப்படிச் சொல்லலாம்: ஸ்ரீ வித்யா ஒரு ஸ்டார் அல்ல; பெர்ஃபார்மர். குறைந்தபட்ச சலனம் மூலம் பாத்திரத்தை முழுக்கவும் வெளிப்படுத்தும் திறமையைக் காட்டக் கூடிய தமிழ் வாய்ப்புகள் சொற்ப மாகவே இருந்திருக்கின்றன. தமிழில் நூற்றுச் சொச்சம் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை இரு கை விரலளவு கூடத் தேறாது. பதிலாக தனது திறமையை வெளிக்காட்ட இசைவானதாக மலையாளத் திரையுலகை ஸ்ரீவித்யா தேர்ந்தெடுத்தார். மொத்தம் நடித்த கிட்டத்தட்ட முந்நூறு படங்களில் சரிபாதிக்குமேல் மலையாளப் படங்கள் என்பது அவரது தேர்வை நியாயப்படுத்துகின்றன.

ஸ்ரீவித்யாவின் திரையுலக வாழ்க்கையை நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம். இந்த நான்கு கட்டங்களும் அவருடைய தனி வாழ்க்கையு டனும் தொடர்பு கொண்டவை.சரியாகச் சொன்னால் அவரது தனி வாழ்க்கைப் பிரச்சனைகள் தாம் இந்தக் கட்டங்களையே உருவாக்கின. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் கட்டம். கதாநாயகியாக இரண்டாம் கட்டம். குணச் சித்திர நடிகையாக மூன்றாம் கட்டம். தொலைக் காட்சி நடிப்பில் ஈடுபட்ட நான்காம் கட்டம்.

புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எல்.வசந்த குமாரியின் மகளாகப் பிறந்தவர் மீனாட்சி. குழந்தையைப் பார்த்த ஸ்ரீவித்யா உபாசகர் ஒருவர் அழைத்த பெயர்தான் பின்னர் அவருடைய அடையாளமானது. தந்தை விகடம் கிருஷ்ண மூர்த்தி அந்தக் கால ஹாஸ்ய நடிகர். ஸ்ரீவித்யாவின் குழந்தைப் பருவத்திலேயே நோய் காரணமாக வீட்டுக்குள் ஒடுங்கி யவர். குடும்பத்தைச் சுமக்கும் பொறுப்பு எம்.எல்.விக்கு வந்து சேர்ந்தது. பகலில் ரிக்கார்டிங். மாலையில் கச்சேரி என்று சக்கரச் சுழற்சியாக வாழ்ந்தார். ஸ்ரீவித்யாவும் சகோதரர் சங்கரராமனும் தாத்தாவின் பராமரிப்பில் விடப்பட்டனர். பத்தா வது வயதில் தாத்தா மறைந்தார். தனிமையில் விடப்பட்டார். அந்த தனிமை அவரை மரணம்வரை பின்தொடர்ந்தது. குடும்பத்தில் நிலவிய நிதிப் பிரச்சனைகள் பெற்றோரின் உறவில் விரிசலை ஏற்படுத்தின. ஸ்ரீவித்யாவின் இளம் பருவம் பயத்தில் கழிந்தது. இசையும் நாட்டியமும் கற்றுக் கொண்டது தான் பயத்தை விரட்ட உதவின.

பதின் மூன்றாம் வயதில் குழந்தை நட்சத்திரமாக 'திருவருட் செல்வர்' (1966) படத்தில் அறிமுகமானார். ஏறத்தாழ அதை யொட்டியே மலையாளத்திலும் குழந்தை நட்சத்திரமாக நுழைந்தார்.படம் - 'குமார சம்பவம்' (1969). இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கே.பாலசந்தரின் அறிமுக நாயகியாக 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில் நடித்தார். ஆனால் அவரது ஆர்வம் நடிப்பில் அல்ல; நடனத்தில்தான்.அந்தக் கட்டத்தில் திருமண வாய்ப்பும் தகைந்தது. அமெரிக்கா வாழ் விஞ்ஞானி ஒருவர் அவரை மணந்து கொள்ள விரும்பினார். குடும்பச் சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டிருந்த எம்.எல்.வி. மூன்று ஆண்டுக ளுக்குப் பிறகே திருமணம் என்று சொன்னதில் அந்த வாய்ப்பு தட்டிப் போனது. 'நடிக்க மாட்டேன்' என்று பிடிவாதம் செய்த மகள் முன்னால் வீட்டுக் கடன் பத்திரங்களைப் போட்டார் எம்.எல்.வி. காமிரா முன் நிற்கத் தயாரானார் ஸ்ரீவித்யா. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் வாய்ப்புகள் வந்தன. 1973 இல் ஏ.வின்சென்ட் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'செண்ட' மூலம் மலையாளத் திலும் 'அபூர்வ ராகங்கள்' மூலம் தமிழிலும் முன்னணிக் கதாநாயகியானார். தனி வாழ்க்கையிலும் 'அபூர்வ ராகங்கள்' அவருக்கு முக்கியமானதாக இருந்தது. அதன் கதா நாயகனும் நாயகியும் பரஸ்பரம் காதலித்ததாகச் சொல்லப்படுகிறது. நாயகன் நாயகி இருவரது குடும்பமும் சம்மதமும் தெரிவித்தன. நாயகனுக்குத் தன்னிடம் இருந்தது போலவே வேறொரு பெண் மீதும் காதல் இருப்பது தெரிந்ததும் சோர்ந்து போனார். அவரே இடக்கரடக்கல் நிமித்தம் ஆங்கிலத்தில் சொன்ன வாக்கியத்தை இப்படி மொழிபெயர்க்கலாம்: ' இன்னொரு பெண்ணுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை'

காதல் நிறைவேறாத ஆற்றாமையில் வாழ்க்கையில் பெருந் தவறைச் செய்ததாகப் பின்னர் குறிப்பிட்டார் ஸ்ரீவித்யா. 'தீக்கனல்' (1976) மலையாளப் படத்தில் நடிக்கும்போது அதன் துணைத் தயாரிப்பாளரும் துணை இயக்குநருமான ஜார்ஜ் தாமசைக் காதலிக்கத் தொடங்கினார். கிறித்துவ மதத்துக்கு மாறும் அளவுக்குத் தீவிரமாக இருந்த காதல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமணத்தில் முடிந்தது. அவர் விரும்பியது அமைதியான குடும்ப வாழ்க்கையை. ஆனால் கணவரின் பணத்தாசை அதைத் தடை செய்தது. உறவில் பூசல்கள் தொடங்கி ஒன்பதாவது ஆண்டு விவாகரத்தில் முற்றுப் பெற்றது. அதுவரை சம்பாதித்த எல்லாவற்றையும் ஸ்ரீவித்யா இழந்தார். வீடு, வங்கிக் கையிருப்பு, சொத்துகள் எல்லாம் பறிபோயின. அவற்றை மீட்கப் போராடியதில் அவருடைய தனி வாழ்க்கை நரகமானது. இயக்குநர் ஆர்.சி.சக்தியும் மறைந்த நடிகர் செந்தாமரையும் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து மீள அவருக்குத் துணையாக இருந்ததாகச் சொல்லப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் புதிய தலைமுறைக் கதாநாயகிகள் அறிமுக மானார்கள். ஸ்ரீவித்யா குணச் சித்திரப் பாத்திரங்க ளுக்கு மாறினார். தமிழில் அவருக்குக் கிடைத்த குணச்சித்திரப் பாத்திரங்கள் ஒரே வார்ப்பில் அமைந்தவை. இந்தப் பாத்திரங்களை அவரைத் தவிர வேறு யாரும் செய்திருக்கக் கூடும். அவற்றுக்குத் தொழில்முறை நியாயத்தைச் செய்தார். நடிகையாக வாழ்ந்த காலம் முழுவதும் அவர் மட்டுமே செய்திருக்க முடியும் என்று தமிழ்த் திரையுலகில் அமைந்த பாத்திரங்களாக சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வராகங்கள், மதுரகீதம் (1977), புன்னகை மன்னன்(1986), தளபதி (1991), கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் (2000) படங்களைத்தான் சொல்ல முடியும்.

தனது திறமைக்கான இடம் மலையாள சினிமாவில் இருப்பதை ஸ்ரீவித்யா இந்த மூன்றாம் கட்டத்தில் உணர்ந்தார். எண்பதுகளில் மலையாளத்தில் உருவான இடைநிலைப் படங்கள் அவருக்கான வாய்ப்பை விசாலமாக்கின. எம்.டி.வாசுதேவன் நாயர் போன்றோரது திரைக்கதையிலும் (இடவழியிலே பூச்ச மிண்டா பூச்ச 1979, வில்கானுண்டு ஸ்வப்னங்ங்கள் (1980) அன்றைய முக்கிய இயக்குநர்களின் படங்களிலும் ஸ்ரீவித்யா தவிர்க்க இயலாத வரானார். ஸ்ரீவித்யா என்ற பெர்ஃபார்மர் முழுப் பிரகாசத்துடன் தெரியவந்தது மலையாளப் படங்களில்தான்.'காற்றத்தே கிளிக் கூடு' ( 1983 - பரதன்), ஆதாமின்டெ வாரியெல்லு (1983), இரைகள் (1985 - கே.ஜி.ஜார்ஜ்), திங்களாழ்ச்ச நல்ல திவசம் ( 1985 - பத்மராஜன்) , ஸ்வாதி திருநாள் (1987), தெய்வத்தின்டெ விக்ருதிகள் (1992 - லெனின் ராஜேந்திரன்), ரசனா ( 1983 - மோகன்), கஸல், என்டெ சூர்ய புத்ரிக்கு ( கமல்) பவித்ரம் (1994 - டி.கே.ராஜீவ் குமார்) ஆகிய படங்களில் ஸ்ரீவித்யாவின் நடிப்பு பரவசப் படுத்துவது. தமிழ்ப் படங்களில் கொஞ்சம் உரத்த நடிப்பை வெளிப் படுத்திய அவரே இந்த மலையாளப் படங்களில் இயல்பான நடிப்பைக் கொடுத்திருந்தார். வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியில் அமைந்த பாத்திரங்களை தன் நடிப்பால் ஜீவனுள்ளதாக மாற்றினார். 'இரைகளில் கிறித்தவப் பெண், கஸலில் முஸ்லிம், பவித்ரத்தில் திருமண வயதில் மகனிருக்க கர்ப்பிணியாகும் தாய், ஆதாமின் வாரியெல்லில் பணக்காரக் கணவனிடமிருந்து மணவிலக்குப் பெறப் போராடித் தற்கொலை செய்து கொள்ளும் மனைவி ஆகிய பாத்திரங்களில் அவரைத் தவிர வேறு யாரும் சோபித்திருக்க முடியாது என்பது என் ரசிக விசுவாசம்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் எம்.எல்.வி. காலமானார். ஸ்ரீவித்யாவுக்கு இருந்த ஒரே அடைக்கலமும் போனது. அந்தக் கட்டத்தில் அவருக்கு ஆறுதலாக அமைந்தது நீண்ட காலமாக நடைபெற்று வந்த விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்ததுதான். உச்சநீதி மன்றம் அவருடைய சொத்துக் களை மீட்டுக் கொடுத்தது. தொண்ணூறுகளின் இறுதியில் வாய்ப்புகள் குறையத் தொடங்கின. முன்னாள் கனவுக் கன்னிகளாக இருந்த நடிகைகள் பலரும் அம்மாக்க ளாகவும் அண்ணிகளாகவும் மறு பிறவியெடுத்தபோது ஸ்ரீவித்யா தொலைக் காட்சிக்குத் திரும்பினார். அழைக்கப்பட்ட சினிமா வாய்ப்புகளை மட்டுமே ஒப்புக் கொண்டார். அவற்றில் பெயர் சொல்லும் படியானவை குறைவு.

புதிய நூற்றாண்டில் ஸ்ரீவித்யா சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்குக் குடிபெயர்ந்திருந்தார். மலையாளப் படங்களிலும் தொலைக் காட்சித் தொடர்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். தெலுங்கு நடிகை சாரதாவுக்குப் பிறகு மலையாளக் கலாச்சார உலகம் சொந்தம் பாராட்டியது தமிழ் நடிகை ஸ்ரீவித்யாவிடம்தான் என்று படுகிறது. ஒரு நடிகையாக அவரை மதிப்பிட அவர் நடித்த மலையாளப் படங்கள்தான் துணைவரக் கூடும். தமிழில் செய்ததை விட வித்தியாசமான பாத்திரங்கள் அவற்றில்தான் கிடைத்தன. இரண்டு முறை மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் மூன்று முறை சிறந்த குணச்சித்திர நடிகைகான விருதையும் பெற்றார். எல்லா வற்றுக்கும் மேலாக அவருடைய இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது.

ஸ்ரீவித்யாவை ஓரிரு முறை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தது. பணியாற்றிக் கொண்டிருந்த வார இதழின் ஆசிரியர் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டபோது நான் பேட்டி காண விரும்பிய பிரபலங்களில் ஸ்ரீவித்யாவும் ஒருவர். தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மேலிருந்த 'நல்லெண்ணம்' காரணமாக அவர் ஒப்புக் கொள்ள மறுத்துக் கொண்டே இருந்தார். அவருக்கு நெருங்கிய திரைப் பிரமுகர் ஒருவரின் சிபாரிசுக்கு இசைந்து அரை மனதுடன் சம்மதித்தார். ஆழ்வார் பேட்டையில் அவரது இல்லத்தில் சந்தித்த முதல் பத்து நிமிடங்கள் ஒரு காலத்திய கனவு தேவதையை நேரில் பார்ப்பதில் விடலைத்தனமான அசட்டுணர்ச்சிக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையில் இருந்தேன். எப்படியாவது என்னை சீக்கிரம் வழியனுப்பி வைத்துவிடும் எண்ணத்தில் அவர் இருந்தார். சம்பிரதாயமான கேள்விகளுக்குப் பிறகு அவர் நடித்த படங்களைப் பற்றி. குறிப்பாக மலையாளப் படங்களைப் பற்றிப் பேசத் தொடங்கியதும் அந்தப் பெரிய கண்களில் தோழமை சிரித்தது. முக்கால் மணி நேர உரையாடலில் அவருடைய மனம் கிட்டத்தட்டக் கொட்டப்பட்டிருந்தது. தண்டாயுத பாணிப் பிள்ளையிடம் நாட்டியம் கற்றுக் கொண்ட நாட்கள், முறையாகப் பயிலா விட்டாலும் ரத்தத்தில் இசை ஓடுவதை உணர்ந்த கணம், முதல் காதல், இரண்டாவது அவசரக் காதல், அதன் விபரீதங்கள். அம்மா எம்.எல்வியின் பாட்டு, மலையாள சினிமா, தமிழ் சினிமா, சொந்த வாழ்வு என்று எல்லாவற்றையும் பற்றிப் பேசினார். விடை பெற்ற போது பெருமிதமாக இருந்தது. பத்திரிகையாளனின் வெற்றிப் பூரிப்பு இருந்தது. இவ்வளவு பட்டவர்த்தனமான நேர்காணலை வெளியிட முடியுமா என்ற தயக்கமும் இருந்தது. மறுநாள் நேர்காணலைத் தாளில் எழுதத் தொடங்கிய சற்று நேரத்தில் தொலைபேசி அழைப்பு. எதிர்பார்த்தது போலவே ஸ்ரீவித்யா. நேர்காணலை வெளியிட வேண்டா மென்று கேட்டுக் கொண்டார். அது வெளியானால் பலரும் தர்மசங்கடப்படுவார்கள் என்றார். தேவதையின் வேண்டுகோளை எப்படி மீற? பேட்டி வெளியாகவில்லை. சில வருடங் களுக்குப் பிறகு அதே தகவல்களை வேறொரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொல்லியிருந்தார். சொந்த வாழ்க்கையின் கசப்புகளை புன்னகையுடனும் சிரிப்புடனும் யாரையும் குற்றம் சாட்டாமல் சொன்ன விதம் அவரை மேலும் மதிப்புக்குரியவராக்கியது.

மலையாளத் தொலைக்காட்சியின் தலைமைச் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய நாட்களில் ஸ்ரீவித்யாவை மீண்டும் சந்திக்க வாய்த்தது. பத்திரிகையாளர் யூனியன் நடத்தும் கருத்தரங்கத்துக்கு அழைப்பதற்காகச் சென்றிருந்தோம். அறிமுகப்படுத்திக் கொண்டபோது பழைய பேட்டியை நினைவுபடுத்தினேன். என்னை வெளியிட வேண்டாம் என்று தடுத்த அதே தகவல்களை தொலைக்காட்சி நேர்காணலில் சொல்லியிருப்பதை ஆதங்கத்துடன் சொன்னேன். 'அன்றைக்கு வேண்டாமென்று தோன்றியது. இப்போது பேசலாம் என்று பட்டது. அன்றைக்கு இருந்ததை விட இன்றைக்குப் பக்குவம் கூடியிருக்கிறதில்லையா? ஒவ்வொரு அனுபவத் திலிருந்தும் பக்குவமடையவில்லை என்றால் அப்புறம் நாமென்ன மனிதர்கள்?' என்றார். அந்த பதில் என்னை வெட்கமடையச் செய்தது. வருவதாக ஒப்புக் கொண்டிருந்தும் அவர் கருத்தரங்கத்துக்கு வரவில்லை. காரணம் உடல் நலமின்மை என்று தெரிவிக்கப் பட்டது. உண்மையில் அந்தச் சமயத்தில்தான் அவருக்கு மார்பகப் புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் கடைசிவரைஅதை ரகசியமாகவே வைத்திருந்தார். உருவக் குலைவு ஏற்படாமலிருக்கச் சிகிச்சைகள் மேற்கொண்டார். கடைசி வரை அந்த அகன்ற விழிகளின் உயிர்ப்பையும் முகத்தின் பிரகாசத்தையும் மருந்துவம் காப்பாற்றியது. மரணம் நெருங்குவது தெரிந்ததனாலோ என்னவோ தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார். படங்கள், தொடர்கள் என்று தன்னை மறந்து நடிப்பில் ஈடுபட்டார். மேடையேறிக் கச்சேரிகள் செய்தார். சாயிபாபாவின் பக்தராகியிருந்தார்.

கடைசியாக அவரைச் சந்தித்தது 'வேனல் மழ' என்ற தொலைக்காட்சித் தொடரின் பூஜை வேளையில். நான் பணியாற்றிய தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகவிருந்த தொடர். அதில் மையப் பாத்திரம் ஸ்ரீவித்யா. அந்தத் தொலைக்காட்சியில் அதுவரை ஒளிபரப்பான தொடர்களில் அசட்டுத் தனமில்லாத தொடர் அதுதான். நலம் விசாரிப்புடன் முடிந்த அந்தச் சந்திப்புக்குப் பிறகு அவரைப் பார்த்தது திருவனந்தபுரம் வி.ஜே. டி.ஹாலின் மையத்தில் திரளான மக்கள் கூட்டத்தின் நடுவில் உயரமான மேடைமேல் வைத்திருந்த கண்ணாடிப் பேழைக்குள். யாரோ ஒருவர் கூடையிலிருந்து ரோஜா இதழ்களை அள்ளிக் கையில் திணித்தார். அதைப் பேழைமேல் தூவியபோது எந்த நொடியும் 'ஷாட் ஓகே' என்ற குரல் வரும். விளக்குகள் மங்கும். பேழைக்குள்ளிருந்து எழுந்து வருவார் என்று தோன்றியது.

***


இணைப்பு: www.thesundayindian.com

7 கருத்துகள்:

 1. பகிர்வுக்கு நன்றி ..
  மறக்க முடியாத விழிகள்

  பதிலளிநீக்கு
 2. வாசித்துக் கலங்கினேன்.

  தூத்துக்குடி ஸ்பிக் நகரில் அவரது பரத்நாட்டிய நிகழ்ச்சிக்கு இடையில், சிறப்பு விருந்தினராகி அவர் கொடுக்க, ஒரு பரிசு வாங்கி இருக்கிறேன் - நான் வரைந்த ஓவியம் ஒன்றிற்காக.

  பதிலளிநீக்கு
 3. யாருக்கோ டிக்கெட் எடுத்துவிட்டு போக, வேறு சிலருடைய அருமையான நடிப்பை பார்த்துவிட்டு வருவோம். அதில் ஸ்ரீவித்யாவும் ஒருவர். நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
 4. வேல் கண்ணன், ராஜ சுந்தரராஜன்,ரத்னவேல்,குருத்து,
  வாசுதேவன் - அனைவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 5. ஸ்ரீவித்யாவைப் பற்றி சரியாகப் புரிந்து கொண்டு இதுவரை அவரைப் பற்றி இவ்வளவு சிறப்பாக எவரும் எழுதியதில்லை மிகச் சிறந்த பதிவு நன்றி

  பதிலளிநீக்கு