சனி, 29 அக்டோபர், 2011

திருவுடை மன்னரைக் காணில்...ஊடகங்கள் மூலம் பரபரப்புக்குள்ளாகியிருக்கும் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி ஆலயம் தொடர்பான செய்திகளைப் படிக்கும், பார்க்கும், கேட்கும் போதெல்லாம் பின்வரும் காட்சி நினைவில் ஓடிக் கொண்டிருக்கும்.

கருவூல ரகசியம் வெளியாவதற்குச் சில மாதங்கள் முன்பு பத்மநாப சுவாமி கோவிலுக்குப் போயிருந்தேன். ஊரிலிருந்த வந்திருந்த தங்கையும் அவள் குழந்தையும் சுவாமி தரிசனம் செய்ய ஆசைப்பட்டிருந்தார்கள். தரிசனம் முடிந்ததும் ஆலய வளாகத்துக்குள்ளிருக்கும் குதிரை மாளிகை அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றேன். திருவிதாங்கூர் மன்னராட்சியின் பெருமைகளைச் சொல்லும் அருங் காட்சியகம். வரலாற்றுச் சின்னங்களும் பண்பாட்டு அடையாளங்களும் கலைப் பொருட்களும் நேர்த்தியாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான அறைகள். பழங்காலக் கட்டக் கலையும் சிற்பக் கலையும் இணைந்த குதிரை மாளிகை அரண்மனை இன்றைய பார்வையில் ஓர் அற்புதம். அதன் மேல் தளத்திலிருக்கும் மாடத்திலிருந்து பார்த்தால் ஆலயத்தின் கோபுரம் தென்படும். அந்த மாடத்தில் அமர்ந்துதான் இசை விற்பன்னரான மகாராஜா சுவாதித் திருநாள் கீர்த்தனைகளை இயற்றி இருக்கிறார். நுழைவுக் கட்டணம் செலுத்திக் காத்திருந்த பார்வையாளர்களான எங்களை வழிகாட்டியான ஒரு பெண்மணி ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்றார். ஒவ்வொரு காட்சிப் பொருளின் முன்னாலும் நின்று அவற்றின் வரலாற்றையும் பண்பாட்டு முக்கியத்துவத்தையும் விளக்கினார். ஞானத்தின் பெருமிதம் ததும்பும் குரலில் பல மொழிகளில் விளக்கங்களைச் சொன்னார். துல்லியமான ஆங்கிலம். தெளிவான இந்தி, தீர்க்கமான மலையாளம், கொச்சைத் தமிழ் ஆகிய இந்திய மொழிகளிலும் கூட்டத்திலிருந்த சில வெளிநாட்டுப் பயணிகளுக்காக ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளிலும் அநாயாசமாக விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.

மூன்று ஆண்டுக் காலம் பத்மநாப சுவாமியின் அண்டை வீட்டுக்காரனாகக் குடியிருந்திருக்கிறேன். அவ்வப்போது உறவினர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் ஆலயப் பிரவேசம் செய்து வழிகாட்டியாகச் சுற்றிக் காட்டி விளக்கியிருக்கிறேன். அதற்காக படித்தும் கேட்டும் விவரங்கள் சேகரித்திருந்திருக்கிறேன். அந்தத் தகவல்களை விடவும் விரிவான அறிவை வழிகாட்டிப் பெண் அளித்தார். திருவிதாங்கூர் மன்னர்களோ அல்லது மகாராணிகளோ கூட அவரளவுக்கு அந்த வரலாற்றை விளக்கிச் சொல்ல முடியாது என்ற பிரமிப்பு ஏற்பட்டது. எல்லாம் முடிந்து பார்வையாளர் கூட்டம் வாசலுக்கு வந்தபோது வழிகாட்டி ஓர் அறிவிப்பைச் செய்தார். 'இந்த அருங்காட்சியகம் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. அதற்குப் பெரிய நிதி ஆதாரங்கள் இல்லை. எனவே என் போன்ற கைடுகளுக்குச் சொற்பத் தொகையே சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. நீங்கள் அளிக்கும் சிறு தொகை கூட எனக்குப் பேருதவியாக இருக்கும். உங்களால் உதவ முடியுமா? ' இதை அவர் ஆங்கிலத்தில் கேட்டார். அதனால் கௌரவக் குறைச்சலாகத் தோன்றவில்லை. பார்வையாளர்கள் எங்களால் முடிந்ததை அளித்தோம். அந்தத் தொகை நிச்சயமாக அறக்கட்டளை அவருக்கு அளிக்கும் ஊதியத்தை விடக் குறைவானதல்ல.

இந்தியாவிலேயே மிகப் பெரும் பணக்காரக் கடவுள் திருவனந்தபுரத்தில் வீற்றிருக்கும் அனந்த பத்மநாபசுவாமிதான் என்ற தகவல் தெரிய வந்தபோது மேற்சொன்ன காட்சி இன்னும் தெளிவாக மனதில் படர்ந்தது. இரண்டுக்கும் இடையிலுள்ள முரணைப் பற்றி யோசிக்கத் தூண்டியது.

த்மநாபசுவாமியின் சொத்து மதிப்பு இப்போது உலகம் அறிந்த ரகசியம். நூற்றி முப்பத்து ஆறு ஆண்டுகளாகத் திறக்கப்படாமலிருந்த ஆறு கருவூலங்கள் உச்ச நீதி மன்றத்தின்ஆணைப்படி திறக்கப்பட்டதும் வெளியான இந்த ரகசியம் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திருக்கிறது. மிகப் பெரிய செல்வந்தரைத் தரிசிக்கும் ஆர்வத்தில் பக்தர்களும் பயணிகளும் ஆலய வாசலில் வரிசையில் காத்து நிற்கிறார்கள். இன்றைய கணக்கில் இந்தப் பொக்கிஷங்களின் மதிப்பு தோராயமாக ஒருலட்சம்கோடி ரூபாய். இவை எல்லாம் நூற்றாண்டுகளின் பழைமை வாய்ந்தவை. தொல்லியல் மதிப்பை வைத்துப் பார்த்தால் இவற்றின் உண்மையான மதிப்பு பல மடங்கு அதிகம்.

நூற்றாண்டுகளாகத் திரட்டப்பட்ட இந்தச் செல்வம் பத்மநாபசுவாமிக்கு மன்னர்களாலும் சாதாரணக் குடிமக்களாலும் அளிக்கப் பட்டவை. திருவிதாங்கூர் அரசு விரிவாக்கம் செய்யப்பட்டபோது அதற்குள் அடக்கப்பட்ட சிற்றரசர்களிடமிருந்து பறிமுதல் செய்யப் பட்டவை. திருவிதாங்கூர் அரசின் வரி விதிப்பால் குடிமக்களிட மிருந்து வசூலிக்கப்பட்டவை. கேரளத்துடன் குறிப்பாக, திருவிதாங்கூருடன் வாணிபத் தொடர்பிலிருந்த வெளிநாட்டு வணிகர்களிடமிருந்து கப்பமாகவும் பொருட்கள் மீதான சுங்கமாகவும் பெறப்பட்டவை. இப்படிச் சொல்வது வியப்பை ஏற்படுத்தலாம். கோவிலுக்குக் காணிக்கைகளும் தட்சணைகளும்தானே அளிக்கப்படும்? வரியும், சுங்கமும் எப்படி ஆலயத்துக்கு அளிக்கப்பட முடியும் என்ற கேள்விகள் எழும். விடை திருவிதாங்கூர் வரலாற்றில் இருக்கிறது. புராணங்களில் திருவனந்தபுரத்தைப் பற்றிச் சொல்லப்படும் குறிப்புகள் நம்பிக்கைக் கதைகள். ஆதார வலுவில்லாதவை. ஆகவே, அவற்றை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்க்கலாம்.

கேரளத்தின் தெற்குப் பகுதியில் இருந்த சிற்றரசுகளில் அளவில் பெரிய நாடு வேணாடு. சேரமான் பெருமாளின் பரம்பரை என்று சொல்லப்படும் மன்னர்களின் ஆட்சி நடந்து வந்தது. வேணாட்டின் முக்கிய நகரமாகத் திருவனந்தபுரமும் இதயமாக அனந்தபத்மநாபசுவாமி ஆலயமும் கருதப்பட்டன.

சங்க இலக்கிய நூலான 'பதிற்றுப் பத்'தில் இடம் பெறும் குறிப்பே திருவனந்த புரத்தைப் பற்றிய முதல் வரலாற்றுச் சான்று. பின்னர் சிலப்பதிகாரத்தில் அனந்தபத்ம நாப சுவாமி ஆலயம் குறிப்பிடப்படுகிறது. கோவலன் படுகொலை செய்யப்பட்ட சீற்றத்தில் கண்ணகி மதுரையை எரிக்கிறாள். நகரம் அழிகிறது. கோவலனுக்கும் கண்ணகிக்கும் அடைக்கலம் கொடுத்த இடையர் குலப்பெண் மாதரி தங்களது குல தெய்வம் திருமாலிருக்கும் இடமான அனந்தன் காட்டுக்கு வருகிறாள் என்பது முதல் குறிப்பு. கனக விசயர்களுடன் போர் தொடுக்க ஆயத்தமாகும் சேரன் செங்குட்டுவன் படையெடுப்புக்கு முன்பு எல்லா ஆலயங்களிலிருந்தும் பிரசாதம் பெறுகிறான். அனந்தன் காட்டிலிருக்கும் திருமாலின் பிரசாதமும் அதில் ஒன்று என்பது இரண்டாவது குறிப்பு. இவை இரண்டையும் கடந்த சான்றுகள் பக்தி இயக்கக் காலத்தில் முன்வைக்கப்பட்டவை. நம்மாழ்வாரின் பாசுரங்களில் பத்மநாப சுவாமியைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. ஏறத்தாழ இந்தக் காலப் பகுதியில்தான் திருவனந்தபுரம் வைணவ சம்பிரதாயத்தில் போற்றப்படும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருகிறது. திவ்ய பிரபந்தத்தின் பதினோரு பாசுரங்களில் திருவனந்தபுரமும் பத்மநாபனும் இடம் பெறுகிறார்கள். சேர மன்னர்கள் மட்டுமல்லாமல் சோழ, பாண்டிய மன்னர்களும் இந்த ஆலயத்தின் உருவாக்கத்தில் பங்கு வகித்திருக்கிறார்கள்.

வெவ்வேறு மன்னர்களின் ஆட்சிக்காலங்களில் சிறுசிறு நாடுகளாக இருந்த பகுதிகளை பதினாறாம் நூற்றாண்டில் வேணாடு அரசராகப் பதவியேற்ற மார்த்தாண்ட வர்மா ஒன்றிணைத்தார். சிற்றரசர்களையும் ’நாடுவாழிகள்’ என்று அழைக்கப்பட்ட நில உடைமையளார்களையும் வீழ்த்தி அந்தப் பகுதிகளைக் கைப்பற்றினார். தெற்கே கன்னியாகுமரியையும் வடக்கே பரவூரையும் எல்லைகளாகக் கொண்ட நாடாக திருவிதாங்கூர் உருவானது. எல்லா முடியரசையும் போலவே திருவிதாங்கூரும் ரத்தச் சகதியிலிருந்து எழுந்த பூமிதான். அங்கிருந்தே திருவிதாங்கூர் என்ற நாட்டின் வரலாறும் பத்மநாப சுவாமி ஆலயத்தின் நவீன வரலாறும் ஆரம்பமாகின்றன.

மாமாவான ராம வர்மா மகாராஜா 'நாடு நீங்கி'யதைத் தொடர்ந்து மருமகனான அனிழம் திருநாள் வீரபால மார்த்தாண்ட வர்மா தன்னுடைய இருபத்து நான்காவது வயதில் அரியணையேறினார். தாய்வழிச் சமூகத்தில் மகன்களுக்கு அதிகாரமும் உரிமையும் இல்லை. மருமக்கள்தாய சம்பிரதாயத்தின்படி மருமகன்களே வாரிசுரிமை கொண்டவர்கள். இந்த மரபுக்கு விரோதமாக மறைந்த மன்னரின் மகன்கள் இருவர் ஆட்சிக்கு உரிமை கோரினர். அவர்களை அடக்கினார். முன்னர் ஆண்ட அரசருக்கு எதிராக உள்ளிருந்தே கலகம் செய்து வந்த அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த எட்டரை யோகம் போற்றிகளையும் எட்டு வீட்டுப் பிள்ளைமாரையும் அதிகார பீடங்களிருந்து நீக்கினார். அரியணையேறி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்புதான் தனக்கெதிராகச் சதியில் ஈடுபட்டவர்களை அழித்தொழித்து மார்த்தாண்ட வர்மா முழு அதிகாரத்தைப் பெற முடிந்தது. அதுவரை வேணாட்டின் தலைநகரமாக பத்மநாபபுரம் இருந்து வந்தது. அதையும் திருவனந்தபுரத்துக்கு மாற்றினார். இந்தச் சமயத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கையை திருவிதாங்கூர் வரலாறு ஆன்மீகமானது என்றும் தியாகம் பொருந்தியது என்றும் சிலாகிக்கிறது. உண்மையில் அது ராஜதந்திரமானது. பத்மநாப சுவாமியின் பக்தரான மார்த்தாண்ட வர்மான தமது அதிகார அடையாளங்களான உடைவாளையும் கேடயத்தையும் பத்மநாப சுவாமி சன்னதியின் படிக்கட்டில் வைத்தார். நாட்டைக் கடவுளுக்குச் சமர்ப்பித்ததன் குறியீடு அது. அன்று முதல் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் ஆட்சி கடவுளான பத்மநாபருக்கு உரிமையானது. இந்தச் சடங்குக்கு திருப்படித் தானம் என்று பெயர். பத்மநாப சுவாமிக்கு மூன்று பாத்திரங்களைக் கொடுத்த பெருமை மார்த்தாண்ட வர்மாவுக்கு உரியது. பத்ம நாபனைக் குலதெய்வம், காவல் தெய்வம், ராஜ்ஜியத்துக்கே அதிபதி என்று மூன்று பாத்திரங்களில் இயங்க வைத்தார். அவரது பிரதிநிதியாகவே தாம் ஆட்சியேற்பதாக அறிவித்தார். அந்த வகையில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முதல் மன்னர் பிரதிநிதியாக பத்மநாப தாசன் என்ற பணிவான அடையாளத்துடன் ஆட்சியை நடத்தத் தொடங்கினார். ஆக, திருவிதாங்கூரின் உண்மையான அரசர் சாட்சாத் ஸ்ரீ பத்மநாபன். அவரது ஆலயமே அதிகார மையம். அதற்கு ஏற்பவே கோட்டையும் காவலும் ஏற்படுத்தப்பட்டன. இன்றும் பத்மநாப சுவாமி கோவிலின் பிரதான உற்சவமான பங்குனி ஆறாட்டின்போது குதிரைப் படைகளும் சிப்பாய்களும் ஊர்வலத்தில் அணிவகுப்பது இந்த மரபின் தொடர்ச்சிதான்.

மார்த்தாண்ட வர்மாவைச் சிறந்த நிர்வாகி என்றும் திறமான ஆட்சியாளர் என்றும் தீரமான போர் வீரர் என்றும் தீவிரமான பக்தர் என்றும் வரலாறு சொல்கிறது. உண்மை. அவற்றையெல்லாம் விட அவர் தேர்ந்த ராஜ தந்திரி. ஆட்சிக்கு இடையூறு ஏற்பட்டு விடக் கூடாது என்ற எச்சரிக்கையில் ஆங்கிலேயர்களுடன் ஒத்துப் போனார். அதனால் ஆத்திர மடைந்த டச்சு படைத்தளபதி யூஷ்டாஷியஸ் டி லென்னாய் திருவிதாங்கூரின் மீது படையெடுத்தார். அவரை மார்த்தாண்ட வர்மா தோற்கடித்துச் சரணடையச் செய்தார். பின்னர் நண்பரும் ஆலோசகருமாக்கிக் கொண்டார்.

திருவிதாங்கூர் வரலாற்றில் நாட்டைக் காப்பதற்காக நடந்த போர் இதுமட்டுமே. மற்றவை மண்ணைக் கைப்பற்றுவதற்காகச் செய்யப்பட்டவை. பெரும்பான்மையான ஆக்கிரமிப்புகள் அமைதி உடன்படிக்கைகளில் முடிந்தன. மார்த்தாண்ட வர்மா காலம் முதல் இந்திய விடுதலை வரையிலான ஆண்டுகளில் திருவிதாங்கூர் அரச வம்சத்தின் எட்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். அண்டை மாநிலமான தமிழகத்திலும் இந்தியா முழுவதிலும் அரசியல் போராட்டங் களும் குறு நில மன்னர்கள், ஜமீந்தார்கள் இடையிலான சண்டைகளும் நடந்திருக் கின்றன. வெளிநாட்டு ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.அவ்வளவு கொந்தளிப்பான காலத்திலும் திருவிதாங்கூர் ராஜ்யம் ஆட்டம் காணாமல் நின்றதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று; நாட்டின் பாதுகாப்புக் கருதி மன்னர்கள் மேற்கொண்ட சமரசப் போக்கு. உண்மையில் அது அதிகாரத்தை இழந்துவிடாமலிருக்கச் செய்த தற்காப்பு ஏற்பாடு. பிரிட்டிஷ்காரர்களுக்குக் கப்பம் கட்டுவதற்காகவே குடிமக்கள் மீது வரி சுமத்தப்பட்டது. மிகவும்கீழ் நிலையிலிருந்த மக்களிடமிருந்து தலைக்கும் முலைக்கும் வரி வசூலிக்கப்பட்டது. இவையெல்லாம் பத்மநாப சுவாமியின் பெயராலேயே நடத்தப்பட்டன. இரண்டாவது காரணமும் கடவுளை மையப்படுத்தியதுத்தான்.நாட்டின் உண்மையான அரசர் பத்மநாப சுவாமியே என்றால் கடவுளுக்கு எதிராக யார் படை யெடுக்க முடியும்? இந்த இரண்டு காரணங்களுமே ஆட்சியைத் தொடர உதவியவை.

பதவிக்கு வந்த காலம் முதலே பத்மநாப சுவாமி ஆலயத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்ற சிந்தனை மார்த்தாண்ட வர்மாவுக்கு இருந்தது. அவர் பதவிக்கு வருவதற்குப் பல ஆண்டுகள் முன்னர் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஆலயத்தின் பல பகுதிகள்

எரிந்து போயிருந்தன. அவற்றின் சுவடுகள் எஞ்சியிருந்தன. அவை பக்தரான மார்த்தாண்ட வர்மாவின் மனதில் பெரும் துயரத்தை ஏற்படுத்தின. அரியணை ஏறியதும் ஆலயத்தைச் செப்பமிடுவதற்கான பணிகளை முடுக்கி விட்டார். அவரது கற்பனையின் விரிவுதான் இன்று காணும் பத்மநாப சுவாமி ஆலயம். அவருக்குப் பின் வந்த மகாராஜாக்களும் மகாராணிகளும் பத்மநாபதாசன் என்றும் பத்மநாப சேவினி என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களது கைங்கரியங்களும் தொடர்ந்தன. திருவிதாங்கூர் ராஜ வம்சம் கடைப்பிடித்த சமரசப் போக்கு அந்நியப் படையெடுப் புகளைத் தடுத்தது. அவர்கள் வலியுறுத்திய தெய்வ நம்பிக்கை மக்களை இடையூறில் லாமல் ஆட்சி செய்யத் துணை புரிந்தது. கடவுளின் மீது வைத்த நம்பிக்கையின் சாயலில்தான் திருவிதாங்கூர் பிரஜைகள் மகாராஜாக்களைப் பார்த்திருந்தார்கள். 'திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன் என்னும்' நம்மாழ்வார் பாசுர வரிகளை விசுவாசத்துடன் பின்பற்றிய சாதாரண மக்கள்தாம் எல்லாப் படையெடுப்பு களிலிருந்தும் கடவுளையும் அரச பரம்பரையையும் பாதுகாத்தவர்கள்.

காலங்காலமாக இந்தப் பிரஜைகள் மன்னருக்குச் செலுத்திய வரியும் தெய்வத்துக்குச் சமர்ப்பித்த காணிக்கைகளும் நூற்றாண்டுகளாகத் திரண்டுதான் அனந்த பத்மநாபனின் அளப்பரிய செல்வத்தை உண்டாக்கியிருக்கிறது. அவை மட்டுமே இந்த அளவு செல்வத்தை உருவாக்கியிருக்குமா? இல்லை. விதேச வாணிபத்தின் மூலம் ஈட்டப் பட்ட நிதி. சிற்றரசுகளை முற்றுகையிட்டுப் பறிமுதல் செய்த திரவியங்கள், வியாபார நிமித்தம் கேரளக் கடல் பகுதிகளில் வந்தேறிய அந்நியர்கள் சுங்கமாகச் செலுத்திய வைர,வைடூரியங்கள், கேரளத்தில் விளைந்த நறுமணப் பொருட்களைப் பண்ட மாற்றுச் செய்து சேகரித்த தங்க நாணயங்கள் இவை அனைத்தும் சேர்ந்தே கருவூலத்தை நிரப்பியிருக்கின்றன. இவை தவிர திருவிதாங்கூர் அரச வம்சத்தினர் அவ்வப்போது செலுத்திய காணிக்கைப் பொருட்கள். மன்னரின் முன்னால் பிரதிநிதி அன்றாடம் ஆஜராக வேண்டும் என்ற அரச கட்டளையை திருவிதாங்கூர் வம்சம் கறாராகப் பின்பற்றி யிருக்கிறது. ஒருநாள் ஆலயம் சென்று வழிபடத் தவறினால் குறிப்பிட்ட தொகை அபராதமாகச் செலுத்தப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டின் மூலம் சேர்ந்த தொகைகள். குடிமக்களில் தவறு செய்தவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டங்கள், மன்னரும் மக்களுமே செலுத்திய பிராயச்சித்த தண்டங்கள், திருநெல் வேலி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களில் பரவிக் கிடந்த பண்டாரபூமி மூலம் கிடைத்த முப்பது சதவீத வருமானம். இந்த மொத்த வருமானங் கள்தாம் உலகின் பணக்காரக் கடவுளாக பத்மநாப சுவாமியை இன்று காட்டுகின்றன.

இந்த மொத்த நிதியும் ஆறு நிலவறைகளில் சேமித்து வைக்கப்பட்டன. இவற்றுக்குத் துல்லியமான கணக்கு வைக்கப்பட்டது என்பது திருவிதாங்கூர் ராஜ வம்சத்தைப் பாராட்டுவதற்கான வாய்ப்பு. மார்த்தாண்ட வர்மா காலம் முதல் இன்றுவரை கோவிலுக்கு வந்து சேரும் எல்லா காணிக்கைகளுக்கும் நடை வரவுக்கும் கணக்குகள் உள்ளன. இந்தக் கணக்குகள் குறிக்கப்பட்ட ஓலைச் சுவடிகள் சுருள்களாகச் சேமிக்கப் பட்டன. அவற்றின் எண்ணிக்கை முப்பது லட்சம் என்று சொல்லப் படுகிறது. ஆலயத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பல சுவடிகள் சாம்பலாயின. மிஞ்சிய ஓலைச் சுவடிகளிருந்து மதிலகம் ரேகைகள் என்ற பதிவுகள் தயாரிக்கப் பட்டன. ஆலயத்துக்கு வரும் பொருள் வரவுகள் கணக்கு வைக்கப்பட்டதே தவிர அவற்றின் எண்ணிக்கை ஒருபோதும் சரிபார்க்கப் படவில்லை. சேரமான் பெருமாள் மூன்றாம் பாஸ்கர ரவிவர்மா முதல் திருவிதாங்கூரின் கடைசி மன்னரான சித்திரைத் திருநாள் ராமவர்மா காலம் வரையிலும் குவிந்த செல்வம். இது அளவற்றது என்று பொதுவாகத் தெரியும். இந்தப் பொக்கிஷங்கள் சேமிக்கப்பட்டிருக்கும் நிலவறைகளில் இரண்டு மட்டுமே அன்றாட வழிபாட்டுச் சடங்குகளுக்காகவும் உற்சவ கால அலங்காரங்களூக்காகவும் திறக்கப்பட்டு வந்தன. இந்தப் பொக்கிஷங்களின் அளவு சொல்லப்படாத காரணத்தால் இதிலிருந்து என்ன எடுக்கப்பட்டாலும் தெரியாது. சோற்று மலையிலிருந்து ஒரு பருக்கையை எடுத்தால் தெரியாது; குறையாது என்று நினைப்பது போன்ற எண்ணமே இது. ஆனால் ஒரு பருக்கை குறைந்தாலும் அது தவறு; குறைவு என்று நம்பிய பத்மநாபசுவாமியின் பரம பக்தரான டி.பி. சுந்தரராஜன் என்ற வழக்கறிஞர் தொடுத்த வழக்கே இந்த ரகசியக் கருவூலத்தைத் திறக்கிற சாவியாக மாறியது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நிலவறைகளைத் திறந்து உருப்படிகளின் எண்ணிக்கையைப் பட்டியல் போடத்தான் ஆணையிட்டது. பட்டியல் தயாரிப்புக்கு இடையில்தான் அந்தப் பொருட்களின் மதிப்பும் வெளிவந்தது. உலகம் ஆச்சரியத்தில் கண்களை அகலமாக முழித்துப் பார்க்க நேர்ந்தது.

பொற் சிம்மாசனங்கள், பொற்கிரீடங்கள், தங்க விக்கிரகங்கள், பொன் நாணயங்கள், பொற்கயிறுகள், பதினெட்ட்டி நீளமுள்ள சரப்பொளி மாலைகள், தங்கக் கிண்டிகள், பொன் விக்கிரகங்கள், வெள்ளி ராசிகள், தங்க அங்கிகள்,தங்க மாலைகள், தங்கக் கட்டிகள், நவரத்தினக் கற்கள் போன்ற காலத்தால் அழியாத பொருட்கள்தாம்

கருவூலத்தில் காணப்பட்டவை. இவற்றின் நிகழ்கால சந்தை மதிப்புத்தான் இதுவரை

சொல்லப்பட்டிருக்கிறது. 1972 ஆம் ஆண்டு தொல்பொருட்கள், கலைப் பொருட்கள் பாதுகாப்புச் சட்டத்தின்படி இவற்றியெல்லாம் தொல்பொருட்களாகவே எண்ண வேண்டும். அதே ஆண்டு யுனெஸ்கோ பாரீசில் நடத்திய உலகப் பண்பாட்டு, இயற்கை மரபுச் செல்வங்கள் பாதுகாப்பு மாநாடு நூறு ஆண்டுகளைக் கடந்த எந்தக் கலைப் பொருளும் கட்டடமும் மரபுச் சின்னங்களாகக் காணப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. அதன்படி இவை எல்லாம் தொல்பொருட்கள்.இவற்றுக்கு தனிநபர் உரிமை கொண்டாட முடியாது. இந்த இடத்தில்தான் பத்மநாபசுவாமியின் செல்வம் பிரச்சனைக்குரியதாகிறது. இது திருவிதாங்கூர் ராஜ குடும்பத்துக்குச் சொந்தமானதா? முடியாட்சியே ஒழிக்கப்பட்ட பின் மன்னர் குடும்பத்துக்கு எப்படி உரிமை இருக்கும்? சரியாகப் பார்த்தால் ஜனநாயக அரசு அமைந்த பின்னர் பத்மநாப சுவாமியின் மன்னர் பதவியே பறி போயிருக்கிறதே?. ஆலயமே இந்தச் சொத்தின் உடைமையா? வைதீக மரபுப்படி பத்மநாப சுவாமி ஆலயத்துக்குள் செல்லவும்

வழிபடவும் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி. ஆனால் மன்னர் என்ற நிலையில் பத்மநாப சுவாமிக்கு வரி செலுத்தியவர்கள் இந்துக்கள் மட்டும்ல்ல; பிறமதத்தினரும் கூட. அவர்கள் அளித்த செல்வமும் இதில் இருக்கிறதே? அதை எப்படி வகைப் படுத்துவது? மன்னராட்சி இல்லாத நிலையில் இந்தச் சொத்துக்கள் பொதுவானவை.மக்களுடையவை. ஆனால் இதுவரையான ஜனநாயக அரசுகள் பொதுச் சொத்தில் நடத்தியிருக்கும் முறைகேடுகள் இந்தச் செல்வத்தின் மீதும் தொடராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

பத்மநாப சுவாமியின் சொத்து முன்வைத்திருக்கும் கேள்விகள் பதில் காணச் சிரமமானவை. காலங்காலமாகத் திரண்ட செல்வவளம் மன்னர்களின் பங்களிப்பு மட்டுமல்ல. மக்களின் நன்கொடையும்தான். அதை மக்கள் நலத்துக்காகச் செலவிடு வதுதான் உசிதம் என்பது ஒரு வாதம். இவை பக்தியால் அளிக்கப்பட்டவை. அதனால் தெய்வ சம்மதமில்லாமல் தொடக் கூடாது என்பது மறு தரப்பின் வாதம். இவை இரண்டையும் மீறி இந்தச் சொத்துக்கு வேறு மதிப்புகளும் இருக்கின்றன. அதன் பழைமை சார்ந்த மதிப்பு. பண்பாட்டு மதிப்பு. கலை மதிப்பு. வரலாற்று மதிப்பு. இந்தச் செல்வத்தில் காணப்படும் நாணயங்கள் மூலம் அந்தக் கால வெளிநாட்டுத் தொடர்புகள் புலனாகின்றன. கலைப்பொருட்கள் மூலம் ஒரு கால கட்டத்தின் கலை ஞானம் தெரியவருகிறது. அணிகலன்கள், ஆபரணங்களிலிருந்து கலாச்சாரப் போக்குகள் தென்படுகின்றன. சில பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்து வதன் மூலம் பழைமையையும் வரலாற்றையும் அறிய முடியும். இது வருங்காலத் தலைமுறைக்கு உதவும்.

பத்மநாபசுவாமி சொத்தின் கலாச்சார மதிப்பை முன்னிருத்தி அதை இரண்டாகப் பிரிக்கலாம் என்பது மூன்றாவது தரப்பு. தொன்மையானவையும் கலாச்சாரம் தொடர்பானவையுமான பொருட்களை வகைப்படுத்தி அவற்றை ஓர் அருங்காட்சியகம் அமைத்துப் பாதுகாப்பது. எஞ்சியுள்ள சொத்தை கேரள மக்களின் மேம்பாட்டுக்காகச் செலவு செய்வது. ஆலோசனை சரியானது. மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் இதன் மூலம் ’’’மகேசன் குரலே மக்கள் குரல்’’ என்று அமைதியடையலாம். உண்மையான பக்தர்கள் ‘ஆமாம், கடவுள் உலகியல் செல்வங்களுக்கு அப்பாற் பட்டவர்’’’ என்று ஆன்மீகமாகச் சிந்திக்கலாம். ஆனால் இதை நடைமுறைப்படுத்துவது எளிதல்ல.

அபரிமிதமான செல்வம் நிம்மதியைக் குலைக்கும் என்பது மனிதர்களுக்குமட்டுமல்ல; கடவுளுக்கும் பொருந்தும்.


நன்றி: டைம்ஸ் இன்று தீபாவளி மலர் 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக