சனி, 19 அக்டோபர், 2013

மதத்தின் கூண்டுகள்
                                                                                எம்.டி.

            
மலையாள எழுத்தாளரான  எம்.டி. வாசுதேவன் நாயரின்  நாவல் 'அசுர வித்து' 1962 இல் வெளி வந்தது. சென்ற ஆண்டு நாவலின் பொன் விழா ஆண்டு. அதையொட்டி நாவலின் புதிய பதிப்பும் வெளியிடப் பட்டது. ஒரு புதிய நாவலுக்குக் கிடைக்கும் வாசக வரவேற்புடன் பொன்விழாப் பதிப்பும் விற்றுத் தீர்ந்தது. ஒரு நாவல் ஐம்பது ஆண்டுகளாக வாசக கவனத்தில் நீங்காமல் இருக்கிறது என்பதும் இன்றும் வாசிக்கப்படுகிறது என்பதும் எந்த இலக்கிய ஆர்வலனுக்கும் மகிழ்ச்சியளிக்கும். அதே சமயம், நாவல் கையாண்டிருக்கும் மையப் பிரச்சனை நிகழ்காலத்துக்கும் பொருந்துவதாக இருப்பது அவ்வளவு உற்சாகமூட்டக் கூடியதல்ல.'அசுர வித்து' நாவல் முன் வைக்கும் மானுடச் சிக்கல் இன்றும் தீராத ஒன்றாக இருப்பது துயரத்தையே தருகிறது.

'அசுர வித்து' நாவலின் மையப் பாத்திரம் கோவிந்தன் குட்டி. ஒரு நாயர் குடும்பத்தின் இரண்டாவது வாரிசு. அண்ணன் குமாரன் தன்னுடைய திருமணத்துக்குப் பிறகு மனைவி வீட்டோடு போய்ச் சேர்ந்ததோடு அல்லாமல் குடும்ப நிலத்தை அடகு வைத்துக் கடன்படச் செய்வதில்குடும்பம் வீழ்ச்சி யடையத் தொடங்குகிறது. விதவையான மூத்த சகோதரிதிருமணத்துக்குக் காத்திருக்கும் இன்னொரு சகோதரி, தங்களது அவல நிலையை ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கும் அம்மா - இவர்களுக்கிடையில் அன்றாட வாழ்க்கையை நகர்த்திச் செல்லத் திணறுகிறான் கோவிந்தன் குட்டி. அந்தத் திணறலுக்கு இடையில் அவனுக்கு வாய்க்கும் ஒரே ஆறுதல் அவனுடைய நண்பன் குஞ்ஞரைக்கார் மட்டுமே. முஸ்லிம்களைக் கண்டாலே வெறுப்பில் பிதுங்கும் சேகரன் நாயர் கோவிந்த  குட்டியின் இளைய சகோதரியை மணந்து கொள்கிறார். தன்னுடைய செல்வத்தையும் செல்வாக்கையும் பாதுகாக்க அவர் கடைப்பிடிக்கும் உபாயங்களில் ஒன்று சொந்த  சாதிக்காரர்களைத் தன்னுடன் அணிவகுத்து நிறுத்திக் கொள்வது. அதன் மூலம் கிராமத்தில் முளைவிடும் முஸ்லிம் செல்வாக்கைக் கிள்ளி எறிவது. கோவிந்தன் குட்டி இதை எதிர்க்கிறான். இந்த எதிர்ப்பு சேகரன் நாயரிடம்  அவன் மீதான பகையாக வடிவெடுக்கிறது. சேகரன் நாயர் வீட்டில் குற்றேவல்கள் செய்யும் மீனாட்சியை மணந்து கொள்கிறான் கோவிந்தன் குட்டி. மண நாள் இரவில் அவள் கர்ப்பிணியாக இருப்பது தெரியவருகிறது. சேகரன் நாயரின் மகனே அதற்குக் காரணம் என்று தெரிந்து கொள்ளும் கோவிந்தன் குட்டி அவனைத் தாக்குகிறான். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்லாம் மதத்தைத் தழுவுகிறான்.சேகரன் நாயர் பதிலுக்கு ஆட்களை வைத்து அவனைப் பழி வாங்குகிறார். ஒரு இந்து நாயரை அடிக்கத் தயங்கிய சேகரன் நாயருக்கு இப்போது முஸ்லிமை அடித்து  விரட்டுவது நியாயமானதாகப் படுகிறது. நண்பனாக குஞ்ஞரைக்காரும் ஒரு புதிய முஸல்மானைக் காப்பாற்றத் தயங்குகிறார்.உயிர் தப்ப ஓடும் கோவிந்தன் குட்டி கரை  புரண்டு ஓடும் ஆற்றில் குதிக்கிறான். பெரு வெள்ளத்தில் விழுந்தவன் இறந்து விட்டதாக ஊர் முடிவு கட்டுகிறது.

வேறொரு கிராமத்தில் கரை மீளும் கோவிந்தன் குட்டி அங்கே அகதியாக வாழ்கிறான். சொந்த துக்கங்கள் அவனைக் குடிகாரனாக்குகிறது. இரண்டு மதப் பிரிவுகளாலும்  கைவிடப்பட்ட அப்துல்லா என்ற கோவிந்தன் குட்டி மீண்டும் தனது சொந்த கிராமமான கிழக்கேமுறிக்கே திரும்புகிறான். பிளேக் பரவி கிராமம் முழுவதும் ஆட்கள் பலியாகிறார்கள். இறுதிச் சடங்கு செய்யக் கூட ஆளில்லாமல் குவிந்து கிடக்கும் சடலங்களை அப்புறப்படுத்த உதவுகிறான். பிணக் குவியலில் அவன் கண்டெடுக்கும் ஒரு சடலம் மனைவி மீனாட்சியுடையது. அருகில் அநாதையாக அழுது நிற்கும் குழந்தை. தான் கோவிந்தன் குட்டி நாயரா இல்லை அப்துல்லாவா என்று குழம்புகிறான் அவன்.தான் இந்துவா முஸ்லிமா என்று தடுமாறுகிறான். இரண்டும் இல்லாத இடத்துக்குப் போக அந்த ஊரை விட்டுப் புறப்படுகிறான். '' திரும்ப வருதற்கான யாத்திரை'' என்று  மனதுக்குள் சொல்லிக் கொள்கிறான்.
முந்நூற்று ஐம்பது பக்க நாவலை இரண்டு பத்திகளில் சொல்வது கடினம். அதை விடவும் கதையாகச் சொல்வது கடினம். அதுவும் நாவல் வெறும் கதை சொல்லும் சாதனமல்ல; அது வாழ்க்கைப் பார்வையை முன்வைக்கும் ஊடகம் என்று நம்பும் ஓர் எழுத்தாளின் படைப்பைச் சுருக்கிச் சொல்வது இன்னும் கடினம். எம். டி.யின் நாவல்கள் நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியல்ல;  வாழ்க்கை நிகழ்வை முன்வைத்து பாத்திரங்கள் மேற்கொள்ளும் உளவியல் நடவடிக்கைகள் அவை. அசுரவித்து நாவலின் 'கதை'யும் அது போன்றதே.
இந்து மதப் பின்னணியில் பிறந்த ஒருவன், தனது வாழ்க்கை ஆபத்துக் குள்ளாகும் போது இஸ்லாமிய மார்க்கத்தில் அடைக்கலம் தேடுகிறான். அங்கும் அவன் கைவிடப் படுகிறான். எனில், மதம் என்பது மனிதனின் எந்தத் தேவையை நிறைவேற்றுகிறது என்ற கேள்வியைத்தான் இந்தக் கதை எழுப்புகிறது.

இரண்டு காரணங்களுக்காக இந்த நாவல் இன்றும் விரும்பி வாசிக்கப் படுகிறது. பழைய கால பாலக்காடு, பொன்னானி வட்டாரங்களின் மொழியையும் சமூக நடைமுறைகளையும் மிக இயல்பாகச் சித்தரிக்கிறது நாவல். நாயர் சமூகத்தின் மொழியும் முஸ்லிம் சமூகத்தின் மொழியும் இவ்வளவு கச்சிதமாகக்  கையாளப்பட்ட வேறு மலையாள நாவல் இது என்பது முதல் காரணம். இரண்டாவது காரணம்: நாவலின் மையம் தொட்டுக் காட்டும் மதம் சார்ந்த மனிதச் சிக்கல் இன்றும் நிலவுகிறது என்பது.
அசுரவித்து நாவலின் பொன்விழாப் பதிப்பு வெளியீட்டின்போது எம். டி. குறிப்பிட்டார் '' என்னுடைய முப்பதுக்கும் குறைவான வயதில் இந்த நாவலை எழுதினேன். இப்போது எண்பது வயதை நெருங்குகிறேன். ஐம்பது ஆண்டுகளாக இந்த நாவல் வாசிக்கப்படுகிறது என்பது எழுத்தாளனாக எனக்குப் பெருமை. ஆனால் ஐம்பது ஆண்டுகளாக , இந்துவும் முஸ்லிமுமல்லாத மனிதர்களின் இடத்தைத் தேடும் கோவிந்தன் குட்டியின் யாத்திரை முடியாமலே இருக்கிறது என்பது என்னுடைய அந்தரங்க துக்கம்''. வாசித்து முடிக்கும்போது கோவிந்தன் குட்டியின் எதிர்பார்ப்பும் எம்.டியின் துக்கமும் வாசகனின் ஆசையும் வருத்தமுமாக மாறுகிறது என்பதே 'அசுரவித்'தின் மேன்மை.


அசுர வித்து ( மலையாள நாவல் - பொன் விழாப் பதிப்பு 2012)

எம். டி. வாசுதேவன் நாயர்
 டிஸி புக்ஸ், கோட்டயம்.

தி இந்து நாளிதழில் வெளியானது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக