செவ்வாய், 7 ஜனவரி, 2014

அழகிய ராகம்... அபஸ்ருதி ராகம்...












''நோயாளிகளின் மரணத்தில் டாக்டர்களான எங்களுக்கு வருத்தம் ஏற்படுவதில்லை. ஆனால், இந்த நோயாளி மரணமடைந்தபோது எங்களுக்கு ஏற்பட்ட துக்கம் எந்த நோயாளி யின் சாவிலும் ஏற்பட்டதில்லை. அவர் பழகிய விதமும் அவருடைய வசியப் படுத்தும் பேச்சும் ஒவ்வொரு அசைவிலும் அழகு ததும்பும் உடல்மொழியும் பிற மனிதர்களிடம் காட்டிய இரக்கமும் பரிவும் மனிதநேயமும் எங்களை அவருடைய ஆராதகர் களாக்கியிருந்தன. ஆனால் கடவுள் தனது அரண்மனைக்கு இந்த அழகியை வெகு சீக்கிரமே அழைக்கத்  தீர்மானித்திருந்தார். புலம்பி என்ன பயன்?''

இப்படிச் சொல்லியிருப்பவர் டாக்டர். எம். கிருஷ்ணன் நாயர். இந்தியா விலுள்ள மிகச் சிறந்த புற்றுநோய்ச் சிகிச்சை மருத்துவர்களில் ஒருவர். திருவனந்தபுரத்தில் ஆர்.சி.சி. ( ரீஜனல் கேன்சர் சென்டர்) என்று அழைக்கப் படும் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையை உருவாக்கியவர். அதன் இயக்குநராக நீண்ட காலம் சேவை செய்தவர்.

ஏறத்தாழ அரைநூற்றாண்டுக் காலம் தான்  மேற்கொண்டிருந்த மருத்துவப் பணியில் பெற்ற அனுபவங்களை டாக்டர். கிருஷ்ணன் நாயர் புத்தகமாக எழுதியிருக்கிறார். இந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் பெரும் பங்கு புற்று நோய்ச் சிகிச்சையில் கழித்திருக்கிறார். அதுவும்,  அவரே கனவு கண்டு, நிஜமாக்கிய ஆர்சிசியிலேயே. கழிந்திருக்கிறது. எனவே, கேன்சர் நோயுடன் கூட நடந்த டாக்டர்தனது அனுபவங்களுக்கு 'நானும் ஆர்சிசியும்'  ( வெளியீடு: டிஸி புக்ஸ் கோட்டயம். அக்டோபர் 2013)  என்றே தலைப்பிட்டிருக்கிறார். நூற்றெண்பது பக்கங்களுள்ள இந்தப் புத்தகத்தை வாசிக்கக்  கொஞ்சம் மனத்திடம் வேண்டியிருந்தது. தன்னைப் பற்றிய தகவல்களை முதன்மைப் படுத்தாமல் புற்று நோயாளி களின் துயரம், சிகிச்சை, மரணம், வேதனை,மருத்துவத்துறை  முன்னேற்றங்கள் என்று பிற செய்திக ளையே  தனது வாழ்க்கை அனுபவ நூலில் பகிர்ந்து கொள்ளுகிறார். அவை சுவாரசியமளிக்காதவை. ஆனால் உண்மைகள். சோர்வடையச்  செய்யும் மருந்து வாசனை கொண்ட உண்மைகள்; மரணத்தின் நிழல் படிந்த உண்மைகள். அதில் மிகவும் கசப்பான உண்மையை வாசித்தபோது மனம் குமுறியது.

வாசகனாகவும் பத்திரிகையாளனாகவும்  ரசிகனாகவும் என்னைப் பிடித்து நிறுத்திய பகுதியிலிருந்துதான் கட்டுரைத் தொடக்கத்தில் இடம்பெறும் மேற்கோள்.  புத்தகத்தின் எல்லாப் பக்கங்களிலும் தென்படும் காரியார்த்தமான இறுக்கத்துக்கு மாறான நெகிழ்வு இந்தப் பகுதியில்தான் தெரிகிறது. டாக்டர் குறிப்பிடும் நோயாளியும் அப்படியான நெகிழ்வை ஏற்படுத்தக் கூடியவரே. நடிகை ஸ்ரீவித்யா.

புற்றுநோயால் மரணமடைந்தார் ஸ்ரீவித்யா என்பது வெளிப்படையான தகவல். இரண்டு காரணங்களால் அந்த மரணத்தைத் தடுக்கவோ ஒத்தி வைக்கவோ முடிந்திருக்கும் என்று தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார் டாக்டர் கிருஷ்ணன் நாயர். ஒன்று - புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்திருந்தால். இரண்டாவது - மேம்பட்ட சிகிச்சைக்கான பண  வசதி அவரிடம் இருந்திருந்தால். இந்த இரண்டு காரணங்களையும் பற்றி புத்தகம் விரிவாகவே சொல்லுகிறது. டாக்டர் கிருஷ்ணன் நாயரின் வார்த்தைகளிலேயே அதைப்பார்க்கலாம்.

''  நமது நாட்டில் நோயாளிகள் பெரும்பாலும் சிகிச்சை பயன் தராத கட்டத்தையே  எட்டுகிறார்கள். அதற்கு முக்கியக் காரணம் கீழ் மட்டத்திலுள்ள நோயாளிகளின் அறியாமை. இந்த அறியாமை மேல் மட்டத்தில் வசிப்பவர்கள் இடையிலும் நடுத்தர வர்க்கத்தினர் இடையிலும் கூட ஓரளவாவது மாறியிருக்கிறது. ஆனால் வேறு சில காரணங்களால்இந்த விவரம் பரவலாகக் காணப்படுவதில்லை. உதாரணத்துக்குப் பிரபலமான ஒரு நடிகையின் விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம். தனக்கு மார்பகப் புற்று நோய் வந்திருக்கிறது என்று அவருக்குத் தெரிந்திருந்தது. பொருளாதாரச் சிக்கல்கள், குடும்பப் பிரச்சனைகள் ஆகியவை உடனடியாகச் சிகிச்சை மேற்கொள்ள அவருக்குத் தடையாக இருந்திருக்கின்றன. கைவசமிருந்த பணம் கூட வேறு சிலரது  கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற நிலையில் அவர் கைபிசைந்து நின்றார்.

ஸ்ரீவித்யா சிகிச்சைக்கு வரமாலிருந்ததற்கு வேறு சில காரணங்களும் இருந்தன. சிகிச்சை மேற்கொண்டால் உடல்குலைந்து போகும் என்ற தவறான எண்ணம் அதில் ஒன்று. இந்த விவரங்களை அவர் தனது சக பணியாளர் களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் தெரிந்து கொண்டாரே தவிர முறையான மருத்துவ ஆலோசனை பெற முயற்சி செய்யவே இல்லை.

சினிமா - சீரியல் நடிகரான பூஜைப்புரை ராதாகிருஷ்ணனுடன் அவரது மாருதி காரில் என்னிடம் ஆலோசனை பெற ஸ்ரீவித்யா முதன் முதலாக வந்தார். நைட்டி மட்டும் அணிந்தி ருந்தார். மருத்துவ பரிசோதனைக்கு வசதியாக இருக்கும் என்று ஒருவேளை அவர் அந்த உடையிலேயே வந்திருக்கலாம். நான் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக என் வீட்டில்  நோயாளிகளைப் பரிசோதிப்பது இல்லை. குறிப்பான காரணங்கள் எதுவுமில்லை. மாலை நேரங்களில் வாசித்துக் கொண்டும் டீவி பார்த்துக் கொண்டும் இருக்கலாமே என்ற எண்ணம். அன்று என் மனைவி வத்சலாவும் உடனிருந்தார். நோய்க்கான காரணங்கள் பற்றி அறிந்து கொள்ள விருப்பமில்லாமல் அவர் உள்ளே போனார். நான் விவரங்களைக்  கேட்டுத் தெரிந்து  கொண்டேன்.

சின்ன மூச்சுத் திணறலைத் தொடர்ந்து பிரபல கார்டியாலஜிஸ்ட் டைனி நாயரைப் போய்ப் பார்த்திருக்கிறார்.அவர் எடுத்த மார்பு எக்ஸ்ரேயைப் பார்த்த இதய நோய் மருத்துவர் நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர். கேசவன் நாயரைப் போய்ப் பார்க்கச் சொல்லியிருக்கிறார். கூடவே மார்பில் முளைத்திருக்கும் கட்டியை முழுமையாகப் பரிசோதனை செய்வதற்காக என்னைப் பார்க்கவும் சொல்லியிருக்கிறார். டாக்டர். கேசவன் நாயர் செய்த பரிசோதனையில் இரண்டு நுரையீரல்களிலும் கான்சரின் அடையாளங்கள் தென்பட்டிருக்கின்றன. அதையொட்டித்தான் என்னைப் பார்க்க வந்திருப்பதாகச் சொன்னார்.

நான் சி.டி. ஸ்கேனைப் பார்த்தேன். உண்மைதான். இரண்டு நுரையீரல் களிலும் புற்றுநோயின் பாதிப்புகள் இருக்கின்றன. படுக்க வைத்துப் பரிசோதிக்க என் அறையில் வசதியில்லை. எனவே எங்கள் படுக்கையறை யிலேயே அவரைப் படுக்கவைத்துச் சோதனை செய்தேன். வலது மார்பகம் கான்சர் முற்றிய நிலையில் கருமையேறிச் சிதைந்திருந்தது.அக்குளில் நாலைந்து நாளங்கள் வீங்கியிருந்தன. மார்பிலிருந்த புற்று நோய் சருமத்திலும் பிற இடங்களிலும் பரவி இருந்தன. எனவே உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய முடியாது. நோய் இந்த அளவுக்குப் பரவி யிருப்பதால் மார்பகத்தை அறுவை செய்த்து நீக்குவதும் பயன் தராது. பின்னர் நடத்திய ஐசோடோப் ஸ்கேனில் நோய் முதுகுத் தண்டைப்  பாதித்திருப்பதாகத் தெரியவந்தது. ஒரு பயாப்ஸி மூலம் ஸ்ரீவித்யா புற்று நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறார் என்று உறுதிப்பட்டது''.

பின்னர் நடத்தப்பட்ட சிகிச்சைகள் மூலம் ஸ்ரீவித்யாவின் உடல் நிலை ஓரளவு தேறியது. மூச்சுத் திணறல் குணமானது. மார்புக் கட்டிகள் மூன்றில் ஒரு பங்காகச் சுருங்கின. வல்து மார்பில்  நடத்தப்பட்ட சிறிய அறுவைச் சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து சில படங்களிலும் சீரியல்களிலும் நடித்தார் ஸ்ரீ வித்யா. மருத்துவக் கண் காணிப்பிலும் இருந்தார்.பாடகியுமான அவருக்கு இருந்த முக்கியமான ஆசை பாலக்காட்டில் முழு நேர இசைக் கச்சேரி ஒன்றை நடத்துவது என்பது. முதுகுத் தண்டில் வலியுடன் இரண்டு மணி நேரம் உட்கார்ந்து கச்சேரி நடத்த முடியுமா என்ர டாக்டர்களின் சந்தேகத்தைத் தனது மனவலிமையால் தோற்கடித்தார் அவர். அந்தக் கச்சேரி பெரும் ஹிட். ஆனால் அவருக்குள் பதுங்கியிருந்த நோய் தொடர்ந்து ஹிட்டுகளை அனுமதிக்கவில்லை. வயிற்றில் ஏற்பட்ட வலிக்காக மீண்டும் டாகடரிடம் போனபோதுதான் நோய் ஈரலுக்குக் குடிமாறி இருந்தது தெரியவந்தது. அபூர்வமாக மது அருந்துவதன் பக்கவிளைவாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில்தான் அது வெளிப் பட்டது. பொதுவாகக் க ¡ன்சருக்குக் கொடுக்கப்படும் எல்லா மருந்துகளும் கல்லீரலைப் பாதிப்பவை. எனவே ஸ்ரீவித்யாவின் வேதனையைப் போக்க என்ன மருந்தைக் கொடுப்பது என்று மருத்துவர்கள்  ஆலோசனை நடத்தினார்கள்.

'' அப்போதுதான் காலிக்ஸ் என்ற புதிய மருந்து சந்தைக்கு வந்திருப்பதைத் தெரிந்து கொண்டோம். இந்த மருந்தால் கல்லீரலுக்குப் பக்க விளைவுகள இல்லை. எனவே அதை  அவருக்குக் கொடுக்க முடிவெடுத்தோம். மிகவும் விலை உயர்ந்த மருந்து. ஒரு டோசுக்கு ஒரு லட்சம் ரூபாய்வரை ஆகும். ஸ்ரீவித்யாவால் முடியுமா? அப்போதுதான் அவருடைய  சொத்துக்கள் முழுவதையும் ஒரு டிரஸ்டுக்குக் கொடுத்து விட்டதாகவும் இனி டிரஸ்ட்தான் அவருடைய சிகிச்சைச் செலவுகளை ஏற்க வேண்டியிருக்கும் என்று தெரிந்தது. டிரஸ்டின்  உறுப்பினர்களில் ஒருவரிடம் பேசுமாறு நான் என் சக ஊழியரான டாகடர் சாபுவிடம் சொன்னேன். நான் பேசுவது சரியாக இருக்காது என்று நினைத்தேன். டிரஸ்ட் உறுப்பினர் சொன்ன பதில்,அவ்வளவு பெரிய செலவை டிரஸ்ட் தாங்காது. வேறு சாதாரண மருந்து கொடுத்தால் போதும்.''

ஆனால் ஸ்ரீவித்யா போன்ற நடிகைக்கு மருந்தை மாபெரும் தள்ளுபடி விலையில் தரக் கம்பெனி முன்வந்தது. அதற்குள் மரணம் அவரை நெருங்கியிருந்தது.



டாக்டர் கிருஷ்ணன் நாயர் தனது நூலில் புற்று நோய்த் தடுப்பை, குறிப்பாக மார்பகப் புற்று நோய்த் தடுப்பை வலியுறுத்தி எழுதியுள்ள பகுதியில் வரும் முன் காப்பது அவசியம் என்பதைச் சுட்டிக் காட்டவே ஸ்ரீவித்யாவைப் பற்றி எழுதியிருக்கிறார். அந்த மருத்துவ நோக்கத்தை மீறியும் கேள்விகள் எழுகின்றன. நடிகையின் வாழ்க்கை பற்றி... பிரபலமானவராக இருந்தும் பெண்ணாகப் பட்ட துயரங்கள் பற்றி... நம்பிக்கைத் துரோகங்கள் பற்றி... அவர் நம்பிய கடவுளின் பாரமுகம் பற்றி... அந்தக் கேள்விகள் தொந்தரவு செய்பவை.

@

நன்றி: ‘அந்திமழை’ மாத இதழ் டிசம்பர் 2013 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக