செவ்வாய், 7 ஜனவரி, 2014

அப்பாஸ் கியரோஸ்தமியின் கவிதைகள்


1

நான் தனியாக வந்தேன்
தனியாகக் குடித்தேன்
தனியாகச் சிரித்தேன்
தனியாக அழுதேன்
தனியாகவே போய்க்கொண்டிருக்கிறேன்.

2
மிக அதிகம் யோசிக்கையில்
மிகக் குறைவே புரிந்து கொள்கிறேன்
மரணத்தை அவ்வளவு அதிகம் அஞ்சுவதற்கான
காரணத்தை.

3
கர்ப்பிணிப் பெண்
மௌனமாக அழுகிறாள்
உறங்கும் ஆணின் படுக்கையில்.

4
எவ்வளவு கருணை நிரம்பியது
சிறு பறவையின் அநாயாசப் பறத்தலை
அந்த ஆமை பார்க்கவில்லை என்பது.

5

கோடையின் முதல் நாள்
காற்றுடன் சேர்ந்தே வந்தேன் நான்
இலையுதிர் காலக் கடைசி நாளில்
காற்று என்னைச் சுமந்து செல்லும்.

------------------------------------------------------------------------------------------------------------


இரானிய இயக்குநர் அப்பாஸ் கியரோஸ்தமி கவிஞரும் கூட.  திரைப் படங்களில் இடம் பெறுபவையும் தனி வெளியீட்டுக்காக எழுதியவையுமான அவரது கவிதைகள் ‘காற்றுடன் நடத்தல்என்ற பெயரில் பெர்ஷிய – ஆங்கில இருமொழிப் பதிப்பாக வெளிவந்துள்ளது. காலச்சுவடு 2014 ஜனவரி இதழில் வெளியான சினிமா சிறப்புப் பகுதியில் சேர்ப்பதற்காகத் தமிழாக்கம் செய்யப் பட்டவை இங்குள்ள கவிதைகள். இதழில் பக்க நெருக்கடியால் சேர்க்க முடியாமற் போனது.

Walking with the Wind (Voices and Visions in Film): English translation by Ahmad Karimi-Hakkak and Michael C. Beard, Harvard Film Archive; Bilingual edition 2002) 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக