வியாழன், 1 மே, 2014

விக்ரமாதித்தியனும் நானும்

இது ஒரு பழைய கட்டுரை. ஏறத்தாழ ஒரு வெள்ளி விழாக்காலத்துக்கு முன்பு எழுதப்பட்டது. கவிதை பற்றி நான் எழுதிய ஆரம்பக் காலக் கட்டுரைகளில் ஒன்று. கவிஞர் விக்ரமாதித்தியனின் மூன்றாவது தொகுதியான 'உள் வாங்கும் உலகம்வெளியீட்டுக் கூட்டத்தில் பேசுவதற்காக எழுதப் பட்ட கட்டுரை. சென்னை தேவநேயப் பாவாணர் நூலக  அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறிய கூட்டம். நண்பர்கள் சி.மோகன், (தமிழினி) வசந்தகுமார் ,பஷீர் தவிர வேறு யார் வந்தார்கள் என்பதோ கூட்டத்தில் வேறு யார் பேசினார்கள் என்பதோ நினைவில்லை. கட்டுரையின் முடிவில் தேதியைக் குறித்து வைத்திருந்தேன் - 1.2.1988. எனவே அந்த நாள் நினைவுக்கு வருகிறது.


ராபர்ட் - ஆரோக்கியம் அறக்கட்டளையின் சார்பில் வழங்கப் படும் 'சாரல் விருது' இந்த ஆண்டு விக்ரமாதித்தியனுக்கு வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் பேச ஒப்புக் கொண்ட பின்னர் தற் செயலாக இந்தக் கட்டுரை கைக்குக் கிடைத்தது. நோட்டுப் புத்தகத் தாளில் பென்சிலால் எட்டுப் பக்கங்களுக்கு எழுதிய இந்தக் கட்டுரையின் கருத்துகளில் சிலவற்றுடன் இன்று அதிக உடன்பாடு இல்லை. ஆனால் அடிப்படையான பார்வை அதிகம் மாறிவிடவும் இல்லை.  


                               சாரல் விருது 2014


                      விக்ரமாதித்யனின் குரல்ண்பதுகளை ஒட்டி வெளியான கவிதைகளில் ஒரு மாறுதலான அம்சத்தைக் காணலாம். அனுபவங்களை இறுக்கமான மொழியிலும் பின்னலான அமைப்பிலும் வெளிப்படுத்தி வந்த போக்கு, தளர்ந்து கவிதை எளிமையான வெளிப்பாட்டு முறைக்குத் திரும்பியது. இந்த மாறுதல் எழுபதுகளின் இறுதியில் தொடங்கி எண்பதுகளில் தொடர்ந்தது. அதன் விளைவாக அதுவரை பொருட்படுத்தப்படாமலிருந்த சில கவிக்குரல்கள் நமது கவனத்துக்கு இலக்காயின. அந்தக் குரல்களில் ஒன்று விக்ரமாதித் தியனுடையது. நகலெடுப்புகளின் சந்தடிக்கும் அனுபவசாரமற்ற வார்த்தைப் பந்தயத்துக்கும் நடுவே வாழும் காலத்தின் மீதான சகிப்பின்மையால் எழுந்த வேதனையுடன் இவரது குரல் வெளிப்பட்டது. இந்தக் குரலில் அதிக பட்சமான உண்மையுணர்வு இருந்தது. கவி மனத்தின் ரீங்காரம் இருந்தது. ஒரு தெளிவான குரலாகத் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள இந்த இயல்புகள் தகுதிகளாக அமைந்தன இவருக்கு.

இதுவரை வெளியான மூன்று கவிதைத் தொகுதிகளில் ஒலிக்கும் குரலில் சில பொதுத்தன்மைகள் புலப்படுகின்றன. வெளிப்பாட்டில் நேரடித்தன்மை. எளிமை. அனுபவங்கள் நேர்ந்த அதே தளத்தில் கவிதையாக உருவாக்கப்படுதல் ஆகியவை.

எளிமையை வரித்துக் கொண்ட கவிதைகள் வாசக உணர்வில் வேர் கொள்ள தொனியை இயல்பாகக் கொள்கின்றன. இறுக்கமான கட்டமைப்புக் கொண்ட கவிதைகள் படிமத்தையும் காட்சிப்படுத்தலையும் சார்ந்திருந்தது போல. படிமம் சார்ந்த கவிதைகள் மொழியும் அனுபவமும் இணைந்த தர்க்க இழையிலிருந்து விலகுவதன் மூலம் புரியாமல் போகின்றன. எளிமையான கவிதைகள் படைப்பாளனின் அனுபவத்தை இடம் பெயர்க்கும் தொனியின் தெளிவின்மை மூலம் சாதாரண வாக்கு மூலங்களாகச் சுருங்கி விடுகின்றன. அல்லது அவற்றை ஏதோ மகத்தான ஒன்றை அர்த்தப்படுத்துவது போலத் தொற்றமளிக்கச் செய்கின்றன. இந்த வரிகளில் அனுப்வம் வெற்றாகத் தேங்குகிறது. விக்ரமாதித்யனின் சில வரிக் கவிதைகள் இந்த உணர்வைத் தருகின்றன.

விக்ரமாதித்யனின் கவி மனம் எளிமையானது. நிம்மதியையும் எளிய இன்பங்க¨ளையும் விரும்புவது. வாழ்க்கையின் நிகழ்வுகள் இந்த மன இருப்பைக் குலைப்பதால் விளையும் துக்கமே இவற்றின் அடியோட்டாம். உண்மையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மனித வாழ்க்கை பெரும் சிக்கல்கள் கொண்டிருக்கிறது.இந்நிலையின் சாயல் மட்டுமே விக்ரமாதித் திய னிடம் வெளிப்படுகிறது.ஏனெனில் அடிப்படையில் இந்த மனம் லௌகீக தளத்தில் வேரூன்றியது. லௌகீக தளத்திலேயே சிக்கல்களை எதிர் கொள்கிறது. முரண்படுகிறது. வாழ்க்கை பல தளங்களில் இயக்கத் தையும் புரிந்து கொள்ளப்படுவதன் தேவையையும் கொண்டிருப்பது
போலவே கவிதையும் கலையும் வெவ்வேறு தளங்களிலான செயல் பாடுகளைக் கோருபவை. விக்ரமாதித்தியன் தனது கவிதையாக்கத்தில் இவற்றைத் தவிர்த்துக் கொள்கிறார். தனது மனதைப் பதிவு செய்தல் என்ற உணர்வுப்பூர்வமான செயலையே கவிதைகளில் நிறைவேற்றுகிறார்.

புற உலகுடனான இவரது உறவு சுமுகமற்றது.புற எதார்த்தங்களீன் தோற்றத்திலும் விகரமாதித்தியனுக்குத் தன் முகமே தென்படுகிறது. புற எதார்த்தத்தை உள் வாங்கித் தனதாக வெளியேற்றுவதன் மூலமாக அமைந்ததல்ல இது; தனது அக உணர்வுகளுக்கு, சிக்கல்களுக்குச் சாட்சியாகவே இவர் புற உலகை அங்கீகரிக்க்கிறார்.விக்ரமாதித்தியனின் கவிப் பிரதேசத்தில் இயங்கும் நபர் அவர் மட்டுமே. வாழ்க்கை  இவரை வாழ அனுமதிக்காமலும்ம் துக்கங்களைதத் தந்தும் வதைக்கிற சலிப்பையே இந்தப் பிரதேசத்தில் பார்க்க முடிகிறது; கேட்க முடிகிறது. வாசகனுடனான இவரின் பரிமாற்றக் குரல் ஒன்று இந்தச் சோர்வைச் சொல்லுகிறது அல்லது தன் நிலை பற்றிய பரிதாபத்தைச் சொல்லுகிறது.

தன்னிரக்க உணர்வினால் பீடிக்கப்பட்டது இஇவரது கவிமனம். இந்தச் சுய நிந்தனையும் சுயபரிதாபமும் வாழ்க்கையின் வேறுதிசைகளைக் காணவோ கவிதைப் பொருளின் வேறு வகைகளைத் தேர்ந்து கொள்ளவோ விக்ரமாதித்தியனுக்குத் த்டையாக அமைகின்றன. இது இவருக்கு எதிர்மறையான மகிழ்வைத் தருகிறதோ என்றும் சந்தேகப்படத் தோன்றுகிறது. சமீப காலமாக 'என்ற கவிதை இந்தச் சந்தேகத்தை எழுப்புகிறது (பக்: 52). தனது நிலை பற்றி விளக்கும் வரிகளால் முன் நகர்கிறது கவிதை. இந்தத் தன்னிலை விளக்கங்கள் அனைத்தும் உடன்பாட்டு ரீதியில் அடுக்கப்படுகின்றன. ஓர் ஆசுவாசத்தை அனுபவிக்கும் விடுபட்ட தொனி இந்த அடுக்குகளின் ஊடே செல்கிறது. ஆனால் கடைசி அடுக்கு இவற்றுக்கெல்லாம் எதிர்மறையாகத் திரும்புகிறது. இது வலியப் புகுத்தப்பட்டது. இல்லையெனில் தன் வாழ்க்கை, அமைதியின் கணங்களைக் கொண்டிருக்கும்போதிலும் மனித வாழ்க்கையைப் பற்றிக் கவிமனம் விசாரம் கொண்டு வருத்திக் கொள்வதை சுட்டும் ஏதுக்கள், காரணக்கள் சுட்டப்பட்டிருக்க வேண்டும்.

அனுபவ உலகின் விரிவின்மை காரணமாக விக்ரமாதித்தியனின் பாடு பொருட்கள் வரையறுக்கப்பட்டு விடுகின்றன. ஒரே அனுபவம் வேறுவேறு சொற்களைப் புனைந்து கொண்டு அணிவகுக்கிறது. இவரது கவிதை மனம் மரபின் ஆரோக்கியமான கூறுகளைக் குறித்த ஏக்கம் கொண்டவையாகத் தோன்றுகிறது. அனுவங்கள் வறட்சி காணத் தொடங்கும்போது இந்த மரபின் சில அம்சங்களை வரவேற்று உடனிருத்திக் கொள்ள இவரால் முடிகிறது. நவீனத் தமிழ்க் கவிதையில் இது அபூர்வமானது. ஆனால் விக்ரமாதித்தி யனிடம் இந்த மரபுணர்வு அவரது நிகழ்கால ஸ்திதி பற்றிய விசாரமாகவே முடிந்து விடுகிறது.  இவரது கவிதைகளைப் பக்தி இலக்கிய உணர்வு நிலையும் கவிதைக் கட்டமைப்பும் பாதித்திருக்கின்றன என்றும் தோன்றுகிறது. ஓர் அனுபவம் அந்த அனுபவத்தைச் சொல்ல எத்தனிக்கும் படிமங்கள், உருவகங்கள், குறியீடுகள் ஆகியவை இழைந்த உணர்வுத் தளங்கள் - இவற்றைப் பக்தி மரபுக் கவிதைகளின் இயல்பாகக் கருதலாம். இவை தன்னியக்கத்துடன், எழுச்சியுடன் நகர்ந்து வெளிப்
படுத்தப்பட வேண்டிய அனுபவ வட்டத்தில் கலக்கின்றன. இந்தக் கட்டமைப்பை விக்ரமாதித்தியனின் பல கவிதைகளில் காணலாம். ( பக்: 36, 40, 41, 49, 53, 54,58 ). ஆனால் இந்த அம்சங்கள் தன்னெழுச்சியுடன் முன்னேறாமல் அனுவம் சார்ந்த வரிகளை ஊன்றி நிறுத்த மட்டுமே இவரிடம் பயன்படுகின்றன என்றும் தோன்றுகிறது. அனுபவமும் அதன் ரீங்காரமும்'மனசுக்குள் கடல்' என்ற தனி வரியில் அடங்கியிருக்க, பிற தட்டையான வரிகள் அதைக் காபந்து செய்து கவிதையாக உயர்த்த வியர்த்தமாகப் பாடுபடுகின்றன.

புற உலக எதார்த்தங்கள் விக்ரமாதித்தியனுக்கு முகம் பார்க்கப் பயன் படுவது போல, மனித உறவுகளும் ஒரே கோணத்திலேயே பார்க்கப் படுகின்றன. உறவின் தள வேறுபாடுகளை இவரது கவிதை மனம் கவனத்தில் கொள்வ தில்லை. ஒரு கலைஞனாகத் தன்னை வரித்துக் கொள்ளும்முன்னிலைப் படுத்திக் கொள்ளும் இவர் இதே முகத்துடன் மட்டுமே அங்கீகரிக்கப்படவும் விரும்புகிறார். இந்த அங்கீகாரம் சிதைக்கப்படும் வேளையில் பீறிடும் ஆங்காரமும் கசப்பும் கவிதையிலும் எதிரொலிக்கின்றன. கலைஞன் என்பதால் கைவிடப் படுவதாகக் குமுறுகிறார். ஆனால் கலைஞன் என்பதால் ஒருவனுக்கு வாழ்க்கை விசேஷச் சலுகைக்களை வழங்குகிறதா என்ன?

இதுவரை வெளிவந்திருக்கும் விக்ரமாதித்தியனின் மூன்று தொகுதி களிலுள்ள கவிதைகளும் அடிப்படையில் ஒரே அனுபவத் தளத்தையும் ஒரே குரலையும் கொண்டவை என்று தோன்றுகிறது. இந்த அனுபவத்தளம் மாற்றமில்லாதது. எனினும் உண்மையானது. இந்தக் குரல் சுருதி பேதம் கூடாதது. எனினும் பாசாங்கற்றது. ஆனால் மகத்தான உண்மைகூட திரும்பத் திரும்பத் திணிக்கப் பட்டால் எதிர்மறை விளைவுகளையே காண நேர்வது காலத்தின் விசித்திர விதி. மந்தர ஸ்தாயியில் மீட்டப்படும் வீணையின் சுருதிக்க்கு மனதைக் கவ்வும் ஈர்ப்பு உண்டுதான். ஆனால் வீணையில் அநேக ஸ்வர ஸ்தானங்களும் காற்றில் ஏராளமான இசையும் இருக்கின்றனவே? விக்ரமாதித்தியனின் ஒர்றைப் பரிமாணமுள்ள குரல் அதன் சாதகமான இயல்புகளைத் தாண்டி ஓர் ஆயாசத்தை வாசக உணர்வில் சரித்து விடுமோ என்ற கேள்வியை அல்லது சந்தேகத்தை ' உள் வாங்கும் உலகம்' எனக்குள் உருவாக்கியிருக்கிறது.

1 பிப்ரவரி 1988.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக