சனி, 7 ஜூன், 2014

எல்லா நாவல்களும் யாரோ சிலரது வரலாறுகள்தான்

புதிய புத்தகம் பேசுது இதழின் ‘ஒரு புத்தகம் - 10 கேள்விகள்’ பகுதிக்காக ’வெல்லிங்டன் ‘ நாவலை முன்வைத்துக் கேட்கப் பட்ட கேள்விகளும் அளித்த பதில்களும் இவை. நன்றி: ’புதிய புத்தகம் பேசுது’ ஜூன் 2014 இதழ், கீரனூர் ஜாகீர்ராஜா.   






       







 1. தமிழில் பெரிதும் அறியப்பட்ட கவிஞராகிய நீங்கள் எழுதிய வேழாம்பல் குறிப்புகள்' வாசித்த போது உங்கள் உரைநடையின் செறிவையும் சிறப்பையும்  உணர முடிந்தது. இப்போது வெல்லிங்டன் நாவலில் நீலகிரி மலையின் ஒரு காலகட்ட வரலாற்றை எழுதியிருக்கிறீர்கள். ஒரு கவிஞராக இந்த உரைநடை அனுபவத்தை எவ்வாறு உணர்கிறீர்கள்?

விஞனாக அறியப்படவே விரும்பியிருக்கிறேன்; விரும்புகிறேன். கவிதைச் செயல்பாட்டின் விரிவாக்கமாகவே உரைநடையையும் பார்க்கிறேன். எழுத வந்த காலம் முதலே கவிதையையும் உரைநடையையும் இணையாகவே கையாண்டிருக்கிறேன்.

நவீன யுகம், உரைநடையின் யுகம் என்பது என் எண்ணம். புதிய கவிதைகள் உரைநடையில் எழுதப்படுபவைதாம் என்பதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள். உரைநடைக்குப் புறக் கருவிகளும் தெளிவும் துலக்கமும் தேவைப்படுகின்றன.  கவிதைக்கு  அகத் தகவல்களும் நுட்பமும் பூடமும் அவசியமாக இருக்கின்றன. இந்த இரண்டு இயல்புகள்தாம்   அவற்றைப் பிரித்துக் காட்டு கின்றன. உரைநடை உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில்லை; கவிதை புறமொன்று வைத்து உள்ளே வேறொன்றைப் பேசுகிறது. ஆனால் சாரத்தில் இரண்டும் மொழியின் இரண்டு சாத்தியங்களைச் சொல்பவை. உரைநடையைக் கொஞ்சம் இறுக்கினால் கவிதையின் சாயலைக் கொண்டுவர முடியும் என்று முயன்றதன் விளைவுதான் 'வேழாம்பல் குறிப்புகள்' உள்ளிட்ட எனது உரைநடை ஆக்கங்கள். அது ஒரு பயிற்சி. பயிற்சி முழுமையாகப் பயன் கண்டது இந்த நாவலில்தான். இதுவரையிலான எனது உரைநடையில் , மனம் விரும்பியதைக் கை செய்து முடித்தது என்று மிகவும் உணர்ந்தது இந்த நாவலின் ஆக்கத்தில்தான். குறுகிய தூர ஓட்ட நிபுணன் நெடுந்தூரப் பந்தயத்திலும்  ஓடிய அனுபவம்.

இந்த நாவலில் ஒரு உரைநடையல்ல மூன்று உரைநடைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. சல்லிவனின் கதையையும் வெல்லிங்டன் உருவாக்கத்தையும் பற்றிச் சொல்லும் பகுதியில்  நூற்றாண்டுகளுக்கு முந்தையதாகத் தெரியும் பழைய  உரைநடை. கதையின் மையப் பாத்திரமான பாபுவின் நுழைவுக்கு முந்தைய காலகட்டத்தைச் சொல்லும்  பகுதியில் ஐம்பது அறுபதுகளின் நடை. பாபுவின் பார்வையில் விரியும் மீதிப் பகுதியில் சமகால நடை. இந்தப் பகுப்பு திட்டமிட்டுச் செய்யப்பட்டதல்ல; படைப்பின் போக்கு முன்வைத்த கோரிக்கை அது. அதற்கு உடன்பட்டிருக்கிறேன்.



          2.  தனது ஆட்சியதிகாரத்தின் கீழிருந்தபோதும் திப்பு சுல்தானால் நீலமலையின் மகிமையை உணர்ந்து கொள்ள முடியாமல் போனதன் காரணம் என்னவாக இருக்கும்? நீங்கள் நாவலில் குறிப்பிடுவது போல மனிதர்களை வெல்வது சுலபமாகவும் இயற்கையை வெல்வது கடினமாகவும் இருக்குமென திப்பு நினைத்திருக்க கூடுமா?

ங்கிலேயரின் ஆக்கிரமிப்புக்கு முன்னரே நீலகிரிப் பகுதி திப்பு சுல்தானின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்றும் மைசூர், கேரளம் வழியாகப் படை நடத்தி சென்றிருக்கிறார் என்றும்  வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. பவானி ஆற்றின் வட கரையில் கட்டப்பட்ட தேவநாய்க்கன் கோட்டை திப்புவின் படைத்தளமாக இருந்ததாகவும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. நீலமலையை வெல்வது திப்புவின் திட்டங்களில் இருந்ததா இல்லையா என்று வரலாறு திட்டவட்டமாகச் சொல்வதில்லை. இயற்கையை வெல்வது அவர் நோக்கமாக இருந்திருக்குமா என்பதும் சொல்லப்படவில்லை.  அதை ஊகிப்பதில்  படைப்பாளனாக எனக்கு ஆர்வமுமில்லை. 'மனிதர்களை வெல்வது சுலபமாகவும் இயற்கையை வெல்வது கடினமாகவும் இருக்குமென திப்பு நினைத்திருக்க கூடுமா?' என்ற வாசகம் ஒரு படைப்புக் கற்பனை மட்டுமே.



         3. 2008ல் மலையாளக் கவிஞர்களுக்கு ஊர்சுற்றிக் காண்பித்தபோது வெல்லிங்டன் நாவல் கருக்கொண்டதாக குறிப்பிட்டிருந்தீர்கள். வாழ்ந்து பழகிய ஊரை எழுத்தில் முன்வைக்கையில் உருவாகும் பதற்றம் கலந்த பரவசத்தை எழுதும் போது அனுபவித்திருப்பீர்கள்.

நாவல் எழுத்தில் ஈடுவேன் என்றெல்லாம் ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனால் என்றாவது அப்படி ஒன்றைச் செய்ய நேர்ந்தால்   அதன் களம் வெல்லிங்டனாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயமாக இருந்தது. நண்பர்களை அழைத்துச் சென்றது ஒரு தூண்டுதல் மட்டுமே. நாவலின் பின்னுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல  மனதில் இளம் பருவத்திலேயே பதிந்த நிலப்படம் அந்த  ஊரினுடையது.  எப்போதும் நினைவிலேயே இருந்த ஊர் அது. மறக்கவியலாதவர்களாக இருந்தவர்களும் அந்த ஊரின் மனிதர்களே. திரும்பத் திரும்ப யோசித்ததும் அந்த இடத்தையும் அங்கே வாழ்ந்த மனிதர்களையும் குறித்த கதைகளையே. மனதுக்குள் சுரந்து  ததும்பிக் கொண்டிருந்த  அந்த ஞாபக ஊற்று நண்பர்களுக்கு ஊரைச் சுற்றிக் காண்பித்தபோது  தன்னிச்சையாகத்  திறந்து  கொண்டது. அவ்வளவே.

எல்லா எழுத்துகளும் ஏதோ ஒருவகையில் பதற்றத்தையும் பரவசத்தையும் தருகின்றன. சரியாகச் சொன்னால் அந்தப் பதற்றத்தையும் பரவசத்தையும் மீண்டும் மீண்டும் அனுபவிக்கவே ஒரு படைப்பாளி படைப்பாக்கத்தில் ஈடுபடுகிறான். இந்த நாவலில் இந்த இரண்டு உணர்வுகளும் மற்ற தருணங்களை விட அதிகமாக இருந்தன. நாவலின் பரப்பும் விரிவும் வெவ்வேறு பாத்திரங்களின் மனநிலைக்கு ஆட்பட வேண்டியிருந்ததும் அதற்குக் காரணமாக இருக்கலாம். நினைவுகளில் மட்டுமே இருக்கும் இடத்தையும் காலத்தையும் மனிதர்களையும் மீண்டும் உயிரும் ஒளியுமாக உருவாக்க முடிந்ததே பேரனுபவம்.


          4. ஜான்சலிவன் நாவலிலிருந்து மறைந்ததும் ஒரு வெற்றிடம் உருவானதாக உணர்ந்தேன். இது அந்த கதாபாத்திரம் உருவாக்கிய தாக்கம். மற்ற எல்லா பாத்திரங்களைவிடவும் ஜான் சலிவன் தன் மொத்த ஆகிருதியுடன் வெளிப்பட்டிருப்பதாகக் கருதுகிறேன்.

வெல்லிங்டன் நாவலில் கிட்டத்தட்ட நானூறு பாத்திரங்கள் வருவதாக நூலை வெளியிட்டுப் பேசிய நண்பர் பார்த்திபன் கணக்குச் சொல்லியிருந்தார். நான் கணக்கிட்டுப் பார்க்கவில்லை. சிறிதும் பெரிதுமான எந்தப் பாத்திரமும் அதற்குரிய ஆகிருதியுடன் உருவாகியிருப்பதாகவே தோன்றுகிறது. உண்மையில் இதில் வரும் பாத்திரங்களில் மிகப்  பருமனான இரண்டு பாத்திரங்களில் ஒன்று சர்.ஜான் சல்லிவன். ( மற்றது பெயர் குறிப்பிடப்படாமல் இடம் பெறும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் - ஜெகஜீவன்ராம் ). அதனால் மொத்த ஆகிருதியுடன் வெளிப்பட்டிருப்பதாக உங்களுக்குத் தென்பட்டிருக்கலாம்.

உண்மையில் ஜான் சல்லிவனுக்கு நாவலில் அளிக்க விரும்பிய இடம் மிகச் சிறியது.  ஒரு பத்தி, ஒரு பக்கம், ஒரு அத்தியாயத்தில் முடிக்கவேண்டும் என்று தீர்மானம். ஆனால் எழுத்தின் போக்கில் அவர் முதன்மையான பாத்திரமாக பேருருவம் கொண்டு விட்டார். அதை அப்படியே ஏற்றுக் கொண்டேன். சல்லிவன் இல்லாமல் உதகமண்டலமோ உதகமண்டலம் இல்லாமல் வெல்லிங்டனோ  உருவாக வாய்ப்பில்லை. எனவே நீண்ட யோசனைக்குப் பிறகு, அவரது வரலாற்றுப் பங்குக்கு மதிப்பளிப்பதாக இருக்கட்டுமே என்று அந்தப் பகுதிகளை நீக்காமல் விட்டேன். அந்தப் பகுதிகளை நாவலை எழுதத் தொடங்கிய 2008 ஆம் ஆண்டு வாக்கிலேயே முடித்திருந்தேன். அவற்றை வைத்துக்  கொள்ளலாமா வேண்டாமா என்ற குழப்பம் இருந்தது. 2012 ஜனவரி 14 நாளின் 'தினமணி' தலையங்கம் மறை முகமாக வைத்துக் கொள்ளலாம் என்ற தெளிவான முடிவை எடுக்கச்  செய்தது. 'தேசியத் தலைகுனிவு' என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்தத் தலையங்கத்தில் ' இன்றைய உதகையை நிர்மாணிக்க, இருநூறு ஆண்டு களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் சலைவன் (ஏதோ புலி, சிங்கங் களை வேட்டையாடியதைப்போல) எத்தனை பழங்குடி மக்களைக் கொன்றார் என்ற விவரங்கள் பதிவுகளாக உள்ளன' என்ற வரிகள்  இருந்தன.
நாவலை எழுதுவதற்காக நான் நடத்திய ஆய்வில் அப்படியான எந்தப் பதிவையும் பார்க்கவில்லை. மாறாக சல்லிவன் 'உள்ளூர் அடிமைக'ளுக்கு ஆதரவாக இருந்தார் என்றுதான் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருந்தது. தினமணி தலையங்க வாசகங்கள் மேம்போக்கானவை என்று அறிய முடிந்தது.

சல்லிவன் ஆங்கிலேய அரசின் அதிகாரத்தைச் செயல்படுத்த அனுப்பப்பட்டவர்தான். ஆங்கில ஆட்சியின் சுரண்டல்களுக்குத் துணை நின்றவர்தான். ஆனால் அதையும் மீறி ஒரு புரோட்டஸ்டெண்ட் கிறித்துவ எதிர்ப்புணர்வும் தோட்டக் கலையில் ஆர்வமும் கொண்டிருந்தவர். சுதேசிப் பிரஜைகளின் மீது கரிசனம் கொண்டிருந்தவர். அவர்களுக்காகத் தனது வரையறைக்குள் நின்று வாதாடியவர் என்ற தகவல்கள் எல்லாம் இன்றும் வாசிக்கக் கிடைப்பவை. அதை ஆராய்ந்து வாசிக்கும் எவருக்கும் தினமணி தலையங்க வாசகங்கள் அபத்தமாகப்படும். உண்மைக்கு மாறானவை என்று விளங்கும். வெள்ளையர் என்றாலே கொடியவர்கள் என்று கற்பிதம் செய்யும் பாமர தேசபக்தி புலப்படும். எனவே  ஜான் சல்லிவனைப் பற்றிய சரியான சித்திரம் என்று ஆய்வுகளின் வலுவில்  கண்ட ஒன்றை அந்த விமர்சனத் துக்கு எதிராக முன்னிருத்த ஆசைப்பட்டிருக்கலாம். நாவலாக்கத்தின் போதோ அதற்குப் பிந்தைய தருணங்களிலோ இந்த எண்ணம் உருவாகவில்லை. உங்கள் கேள்வியைத் தொடர்ந்து யோசிக்கும்போது இந்தக் காரணமும் ஆழ்மனதில் இருந்திருக்கலாம் என்று படுகிறது. படைப்பாளனாக எனது சாய்வு ‘அஜண்டா நாட்டுப்பற்றின் மீது அல்ல; உண்மையின் மீது.

          5. ஹெத்தே மனையின் பரம்பரைப் பூசாரி மாதேகவுடர் சொல்வதாக விரியும் கதை நீங்கள் குறிப்பிட்ட ஸ்ரீ ஹெத்தயம்மாள் சரித்திரம் நூலின் தாக்கத்தில் உருவானதா?


                                                     ஹெத்தெயம்மன் ஆலயம் - ஜகதளா


முற்றிலும் அந்த நூலின் தாக்கத்தில் உருவானதல்ல. அதையும் சார்ந்து கற்பனை கலந்து உருவாக்கப்பட்டது. சிறு வயதில் படக இனத்தைச் சேர்ந்தவர் சொல்லிக் கேட்ட பல கதைகளில் ஒன்றையே பயன் படுத்தியிருக்கிறேன்.

ஹெத்தே என்ற பெண் தெய்வத்தை மையமாக வைத்து படகர்களுக்கு மத்தியிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகள் நிலவுகின்றன. படகர்களைப் பற்றி ஆய்வு நடத்திய மானுடவியல் ஆய்வாளர் பால் ஹாக்கிங்க்ஸ், குறைந்த பட்சம் பதினோரு படக கிராமங்களில் ஹெத்தெ வழிபாடு நடைபெறுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பதினோரு கிராமங்களிலும் பதினோரு வித்தியாசமான ஹெத்தெ கதைகள் புழக்கத்திலிருந்தன என்றும் பதிவு செய்திருக்கிறார். பதினொன்றும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கதைகள். அவை அனைத்திலும் பொதுவாக உள்ள மையம் ஒரு மானுடப் பெண், கடவுள் நிலைக்கு உயர்த்தப்படுகிறாள் என்பதே. ஒரு கதையில் கணவனின் சாவில் பரிதவித்துப்போன பெண் அவனுடன் உடன் கட்டை ஏறுகிறாள். இன்னொரு கதையில் வய்ல் வெளி தீப்பிடித்து எரியும் போது கணவன் ஒரு செட்டிப் பெண்ணுடன் சல்லாபத்தில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து மனமுடைந்த பெண் தன்னை தீக்கிரையாக்கிக் கொள்கிறாள். பொருந்தாத் திருமணம் செய்து மகன் கொண்டு வந்த மருமகள் மாமிசம் உண்பவள் என்று தெரியவந்ததும் தாய் ஹெத்தே தற்கொலை செய்து கொள்கிறாள். இன்னொரு கதையில் பருவமடைந்தால் உடலுறவுக்கு வற்புறுத்தப்படுவோம் என்று அஞ்சிய பெண் பூப்பெய்தியதும் உயிரை மாத்துக் கொள்கிறாள். இப்படிப் பல ஹெத்தெ கதைகள் சொல்லப்படுகின்றன. இவை பற்றி மானுடவியல் அடிப்படையிலும் சமூகவியல் அடிப்படையிலும் வழிபாட்டு ரீதியிலும் விளக்கங்களும் அளிக்கப் படுகின்றன. நாவலாசிரியனாக என் தேர்வு அவை சார்ந்ததல்ல. ஒரு பழங் கதையை நினைவு படுத்துவது மட்டுமே. நான் கேட்டு மனதில் பதிந்திருந்த கதையை என் மொழியில் சொல்லியிருப்பது மட்டுமே.

     6. கதை கோயமுத்தூரில் நிகழும்போது அப்போதைய சென்ட்ரல் ஸ்டூடியோ, நடிகர் ராம்சந்தர், நடுவகிட்டுக்கார தட்சிணாமூர்த்தி, ஐயரின் ரப்பர் கம்பெனி, வேலாண்டிபாளையம் எல்லாம் இடம் பெறுகின்றன. பெருமளவு கோவை நகரப் பரிச்சயமும் உள்ள நீங்கள் எதிர்காலத்தில் கோவையைக் களமாகக் கொண்டும் ஒரு நாவல் எழுதுவீர்களா?

ப்படியான திட்டங்கள் எதுவும் தற்போது இல்லை. வெல்லிங்டன் நாவலில் சித்தரிக்கப்படும் காலத்துக்கு ஏதுவாகவே கோவை நகரத்தின் இடங்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அது தேவையானதாகவும் நாவலுக்கு உண்மையின் சாயலைக் கொடுப்பதாகவும் அமைந்தது. கோவை நகரத்துடன் எனக்குப் பரிச்சயம் இருப்பது உண்மை. அந்தப் பரிச்சயத்தைப் பின்புலமாகக் கொள்ளக் கூடிய கதை எதுவும் இப்போது மனதில் இல்லை. உங்கள் கேள்வி அப்படி ஏதாவது கதையை மனதின் களஞ்சியத்திலிருந்து தேடிக் கண்டு பிடிக்க முடியுமா என்ற குறுகுறுப்பைக் கொடுக்கிறது. பார்க்கலாம். இந்தக் குறுகுறுப்பைக் கிளறி விட்டதற்காக நன்றி.


     7. பொதுவாக இதுபோன்ற ஊர்வரலாற்றை நாவலாக எழுதுகிறவர்கள் ஊரின் வரைபடத்தையும், ஜான்சலிவன் போன்றோரின் நிழற்படங்களையும் நாவலில் இணைத்திருப்பார்கள். நீங்கள் அந்த சம்பிரதாயத்தை தவிர்த்திருக்கிறீர்கள்.

தை சம்பிரதாயம் என்று நீங்களே சொல்கிறீர்களே, அதனால்தான் தவிர்த்திருக்கிறேன். எழுத்தில் சம்பிரதாயங்களுக்கு இடமளிப்பதில் எனக்கு விருப்பமில்லை. அது தவிர இது வரலாற்று ஆய்வேடு அல்ல; ஆய்வுத் தகவல்களுக்கு ஆதாரமாக வரைபடத்தையோ உருவப் படத்தையோ கொடுக்க. இது ஒரு புனைவு. உண்மையின் மீது உருவாக்கப்பட்ட புனைவு. இங்கே தகவல்களின் துல்லியத்துக்கு அல்ல; அவை தரக்கூடிய உணர்வு களுக்கே முதன்மை. வெல்லிங்டனின் வரைபடம் என்று நான் கொடுக்கும் வரைபடத்தை மீறிய ஒன்றையேசல்லிவனின் புகைப்படம் என்று நான் காட்டும் படத்தை மீறிய ஒன்றையே வாசிப்பு வேளையில் வாசகன் தனது கற்பனையில் உருவாக்கிக் கொள்கிறான். நான் கொடுக்கும் படங்கள் அவனுடைய கற்பனையைக் கலைக்கும் என்று தோன்றியது. அதுமட்டுமல்ல, நான் கொடுக்கும் சித்திரங்களே கூடக் கற்பனையை முழுமையாக்கத்தானே? அதைவிடவும் அவனையே முழுமையாகக் கற்பனை செய்து கொள்ள விடுவதே நல்லது என்று பட்டது.

     8. நாவலுக்குள் நீங்கள் பிரவேசிக்கையில் அது தன்வரலாறாக மாறிவிடுகிறது. பிறகு கடைசிவரை சுயசரிதைத் தன்மையுடனேயே நகர்ந்து முடிகிறது. சலிவனை அல்லது படகர் இன மக்களின் தொன்மக் கதைகளை அல்லது இரண்டையுமே ஆங்காங்கே இணைத்திருப்பின் சுயசரிதைத் தன்மை மிகுந்து இழையோடுவதைத் தவிர்த்து இருக்கலாம் என்று தோன்றுகிறது...

ங்களுக்கு என்னைப் பற்றிய ஏதோ தகவல்கள் தெரிந்து இருக்கின்றன என்று ஊகிக்கிறேன். அதனால் பாபுவின் பிரவேசத்தை என்னுடைய நுழைவாகவும் நாவல் தன் வரலாறாகவும் உங்களுக்குத் தோன்றியிருக் கலாம். என்னைப் பற்றிய எந்த விவரமும் தெரியாத ஒரு வாசகனுக்கு இது நாவலாக மட்டுமே தென்படும் என்று நம்புகிறேன். சல்லிவன் பற்றிய வரலாறு அந்த இடத்தின் உருவாக்கத்தையும் படகர் இனத் தொன்மங்கள் அந்த இடத்தில் வாழ்ந்தவர்களின் அல்லது வாழ்பவர்களின் இருப்பைச் சொல்லவுமே எடுத்தாளப் பட்டவை. இது தன் வரலாற்று நாவல் அல்ல என்று  அடுத்த கேள்வியில் நீங்களே சான்றளிக்கிறீர்கள்.

இந்த நாவலில் சுய சரிதைத்தன்மை இழையோடக் காரணம் அதன் வடிவம். யாரும் அதிகம் கவனிக்காத ஒரு ஊரைப் பற்றியும் அங்கிருந்த மனிதர் களைப் பற்றியும் சொல்லவே விரும்பினேன். அதைச் சொல்வது ஒரு சிறுவனின் பார்வையில். சிறுவனின் ஆறு முதல் பதினேழு வயது வரையிலான வாழ்க்கையிலிருந்து கதைக்கான சம்பவங்களைத் தொகுத்திருக்கிறேன். சிறுவனின் மனப் பக்குவத்தை மீறிய எதையும் சொல்லி விட முடியாது. அவனுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிப் பேச முடியாது. அவனுடைய அறிவை மீறிய வர்ணனைகளையோ சித்திரிப்பு களையோ கையாள முடியாது. எனவேதான் அந்தப் பகுதிகள் நீண்டு தெரிகின்றன. பாபுவின் நுழைவுக்குப் பிறகு கதையை அவனுடைய அனுபவ எல்லைக்கு மீறியதாக எழுத விரும்பவில்லை. ஆசிரியர் கூற்றாகவும் கதையை முன் நடத்திச் செல்ல விரும்பவில்லை. ஒரு ஊர் எவ்வாறு உருவாகிறது என்று சொல்லும் பகுதியிலும் - சல்லிவன் வரலாறு, அந்த ஊருக்கு மனிதர்கள் சென்று சேர்வதைப் பேசும் பகுதியிலும் - வெல்லிங்டனுக்குக் கண்ணன் சென்று குடியேறுவது, ஆசிரியர் கூற்றாகச் சொல்லப்படும் நாவல் பாபுவின் வருகைக்குப் பின்பு அவனுடைய கோணத்தில் மட்டுமே முன் நகர்கிறது. இது இயல்பாக நிகழ்ந்தது. வலிந்து அதை மாற்ற விரும்பவில்லை. அலங்காரமாகச் சொன்னால் எல்லா நாவல்களும் யாரோ சிலரது வரலாறுகள் தானே?

     9. 'காலம் பின்நகர்த்திய வாழ்வையும், மனிதர்களையும் நடைமுறையில் திரும்பப் பெறமுடியாது. ஆனால் எழுத்தின் மூலம் முடியும்' என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். 300பக்கங்கள் கொண்ட நாவலை; ஊர்வரலாறு, தன்வரலாறு, ஒரு குறிப்பிட்ட இன மக்களின் வாழ்வியல் பண்பாடு, கலாச்சாரம், தொன்மம் யாவும் பிணைந்த ஒரு பிரதியாக மாற்றியிருக்கிறீர்கள். உங்கள் அளவில் இது திருப்தி அளித்திருக்கிறதா?

ல்லை. நான் எழுத நினைத்த நாவல் இது அல்ல. அந்த வகையில் இந்த நாவல் திருப்தி அளிக்கவில்லை. ஆனால் நான் எழுத நினைத்த நாவலின் சகல கூறுகளும் இந்த நாவலில் எழுதப்பட்டு விட்டன . அந்த வகையில் ஓரளவுக்கு மனநிறைவைத் தந்திருக்கிறது. நான் திட்டமிட்ட நாவலில் சல்லிவன் வரலாறு வெறும் குறிப்பு - ரெஃப்ரன்ஸ் - மட்டுமே.படகர் தொன்மங்கள் வெறும் கதை மட்டுமே. ஆனால் இப்போதைய நாவலில் இரண்டும் கதையின் உள்ளோட்டங்களாகவே மாறியிருக்கின்றன. பாபுவும் அவன் நண்பர்களும் புழங்கும் உலகத்தை சல்லிவன் உருவாக்கிய ஊரின் உருவாக்கக் கதையுடன் ஒப்பிட்டும்  சக்குவின் கதையை ஹெத்தெ கதையின் மறு படைப்பாகவும் பார்க்க முடியுமானால் நாவல் இன்னொரு பரிமாணத்தில் புலப்படலாம்.  சல்லிவனும் ஒரு புதிய உலகைக் கண்டு பிடிக்கிறார். பாபுவுக்கும் அவன் பார்க்கும் இடங்களிலிருந்து ஒரு புதிய உலகம் எழுகிறது. சக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் மைதானத்து மாரியம்மனுடன் ஒப்பிடப் படுகிறாள். ஒரு வாசகனாக இப்போது வாசிக்கும் போது இந்த இணைப்புகள் தென்படுகின்றன. எழுத்தில் இது தற்செயலாக நிகழ்ந்தது. அதைத்தான் 'இது என்னால் எழுதப்பட்டது என்பது மிகை; என்னால் எழுதப்பட்டது என்பதே சரி' என்று பின்னுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். ஒரு கதை தன்னை எழுதிக் கொள்ள என்னைத் தேர்ந்தெடுத்தது என்பதும் திருப்தி அளிப்பதுதான்.

     10. சுற்றுலாத் தலமாக மட்டுமே மாறிவிட்ட இன்றைய நீலகிரியின் வெறுமை சூழ்ந்த நிலையை உங்கள் வார்த்தைகளில் ஒரு குறுங்கவிதையாகச் சொல்லுங்கள்...

ன்னுடைய முதல் கவிதைத் தொகுப்பில் 'உதக மண்டலம்' என்ற தலைப்பில் ஒரு கவிதை உள்ளது. அந்தக் கவிதையின் விரிவாக்கமே இந்த நாவல் என்றும் சொல்லலாம். நாவலில் கௌரி என்ற பெயரில் குறிப்பிடப்படும் பாத்திரத்தின் அசல் நபருக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும்  கவிதையின் இறுதி வரிகள் இவை:

'எளிமையானது உன் அன்பு
நடு ஆற்றில் அள்ளிய தண்ணீர்போல.

நாவலை எழுதி முடிக்கும் தறுவாயில் மீண்டும் அந்த இடங்களை நேரில் சென்று பார்த்தேன். பலவும் மாறியிருந்தன. சில மாறாமலே இருந்தன. அந்த மாற்றங்களுக்கும் மாற்றமின்மைகளுக்கும் நடுவில் நான் உணர்ந்தது மேற்சொன்ன வரிகள் மாற வேண்டியவையாக இல்லை என்பதை. ஏனெனில் நீங்கள் சொல்லும் அதிகாரபூர்வமான சுற்றுலாத்தலமல்ல நான் பார்க்கும் நீலகிரி. அது இன்றும் பசுமையானது; இன்றும் இளமையானது; இன்றும் கற்பனையைத் தூண்டுவது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக