சனி, 26 ஜூலை, 2014

கண் மறந்த புதையல்

                                                        காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்                காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்  அபிமானத்துக்குரிய எழுத்தாளராக மாறிய எழுபதுகளின் இறுதி, எண்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில்  அவர் எழுதிய எல்லாப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளையும் அவரைப் பற்றி எழுதப் பட்டவற்றையும் அவரது நேர்காணல்கள் இடம் பெற்ற இதழ்களையும் தேடித் தேடிச் சேர்த்து வைத்தேன். புத்தகங்களில்  இரவல் போன எதுவும் திரும்பக் கைக்குக் கிடைக்கவில்லை. நேர்காணல்கள் வெளிவந்த இதழ்களும் காணாமற் போயின. காபோ அளித்தவற்றில்  குறிப்பாக இரண்டு நேர்காணல் கள் அந்த நாளில் மிகவும் முக்கியமானவையாகத் தோன்றின.  இன்றும் தோன்றுகின்றன. சில இதழ்கள் மட்டுமே வந்து நின்று போன  'பாயிண்ட் கவுண்டர் பாயிண்ட்' என்ற இதழில் வெளியானது ஒன்று. ' ஜேர்னல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் ஐடியாஸ்' காலாண்டு இதழில் வெளிவந்த நேர்காணல் மற்றொன்று. தொண்ணூறுகளில் மார்க்கேஸ் சிறப்பிதழ் வெளியிடுவதில் ஈடுபட்டிருந்த நண்பர் கோணங்கியிடம் நேர்காணல்கள் வெளியான அந்த இதழ்களைக் கொடுத்தது நினைவில் இருக்கிறது. ஆனால் இவற்றுக்கு நகல் எடுத்து வைத்துக் கொண்டதாக ஞாபகமில்லை. அப்படியே இருந்தாலும் இடமாற்றங்கள் காரணமாகக் காணாமல் போயிருக்கலாமென்றும் திருவனந்தபுரத்துக்கு இடம்மாறி வந்து பதினான்கு ஆண்டுகளான பின்னும் பிரிக்கப் படாமல் கட்டிக் கிடந்த பெட்டிகளுக்குள்ளே இருக்கலாமென்றும் எண்ணியிருந்தேன்.

ஏதோ புத்தகத்தை எடுப்பதற்காக அண்மையில் அந்தப் பெட்டிகளைப் பிரித்துப் பார்த்தபோது காணாமற் போனவை என்று நம்பியிருந்த பல பொக்கிஷங்கள் மீண்டும் தென்பட்டன. புத்தகங்கள், சிற்றிதழ்கள், பத்திரிகை நறுக்குகள் , அரைகுறையாக விட்ட கவிதை, கட்டுரைப் பிரதிகள், ஒளிநகல்கள் இவற்றுக்கிடையில் ' ஜேர்னல்  ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் ஐடியாஸ்' இதழ் மார்க்கேஸ் பேட்டியின் நகலும் கிடைத்தது. அந்த இதழின்  ஜனவரி - மார்ச் 1983 காலாண்டு எண்ணில் 'எழுத்தாளரின் சமையலறை' (Writer's Kitchen) என்ற
தலைப்பில் அமைந்த நேர்காணல். ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குச் செய்யப்பட்ட மொழியாக்கம். மொழிபெயர்ப்பாளர் கல்பனா சாஹ்னி.


                                                               
                                                             டாக்டர் கல்பனா சாஹ்னி

கண் மறந்த புதையல் கைவசமான மகிழ்ச்சியில் கல்பனா சாஹ்னி யார்? இணையம் வாயிலாகத்து துப்புத் துலக்கினேன். அது இன்னுமொரு ஆச்சரியத்தை அளித்தது. கல்பனா சாஹ்னி ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மாஸ்கோவில் வசித்து ரஷ்ய மொழியைக் கற்றுப் பட்டம் பெற்றவர். ரஷ்ய மொழியிலிருந்து குறிப்பிடத் தகுந்த மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். சிங்கிஸ் ஐத்மாத்தவுடனும்  நேர்காணல் நடத்தியிருக்கிறார். ரஷ்ய மொழியில் வெளிவந்திருக்கும் பேட்டியை கல்பனா சாஹ்னியே எடுத்திருக்க வேண்டும். இதை விடவும் ஆச்சரியமாகத் தென்பட்டது அவரது பின்னணி. இந்திய சினிமாவின்  நடிப்பாளுமைகளில் ஒருவரான பால்ராஜ் சாஹ்னியின் சகோதரரின் மகள். அதாவது நடிகரும் இந்தி எழுத்தாளர்களில் மிக முக்கியமானவருமான பீஷம் சாஹ்னியின் மகள். (பீஷம் சாஹ்னியின் நாவல் 'தமஸ்' வெங்கட் சாமிநாதன் மொழி பெயர்ப்பில் தமிழில் வெளி வந்திருக்கிறது ).

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் இருபது பக்க நேர்காணல் மிகச் சுவாரசிய மானது. எழுத்தின் அக உலகைப் பகிரங்கப்படுத்துவது. முதல்  பதிலிலேயே படிப்பவனை ஈர்த்து  விடுகிறார் காபோ.

ஒருமுறை ஜெனீவாவுக்கு ரயிலில் பயணம் செய்து  கொண்டிருந்தேன். பன்னிரண்டு மணி நேரப் பயணம். நண்பர்கள் சிலருக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த ' தனிமையின் நூறு ஆண்டுகள்' ( One Hundred Years of Solitude ) நாவலின் பிரதி ஒன்றைத் தவிர வாசிப்பதற்கு என்னிடம் வேறு எதுவும் இருக்கவில்லை. எனவே என்னுடைய நாவலையே நான் வாசிக்கத் தொடங்கினேன். என்னால் மூன்று நான்கு அத்தியாயங்களைத் தவிர முழுவதும் படித்து முடிக்க முடியவில்லை.

அது உங்களுக்குப் பிடித்திருந்ததா?

வெளிப்படையாகச் சொல்வதானால் இல்லை. அதை எழுதிக் கொண்டிருந்த போது உலகத்திலேயே சிறந்த புத்தகம் என்று நிச்சயம் கொண்டிருந்தேன். ஜெனீவாவுக்குப் போகும் வழியில்  படித்ததும் மிகவும் வெட்கமடைந்தேன். அதை ஒழுங்காக எழுத எனக்குப் போதுமான கால அவகாசம் கிடைத்திருக்க வில்லை என்பதை உணர்ந்தேன். அதில் நான் செய்திருப்பது கேட்ட கதை களைத் திரும்பச் சொன்னதுதான்.

இலட்சக் கணக்கான வாசகர்களைப் பித்துப் பிடிக்க வைத்த நாவலைப் பற்றி அதன் ஆசிரியர் இப்படியா சொல்லுவார்? ஆனால் வேறு எப்படி சொல்லுவார், காபோ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக