ஞாயிறு, 27 ஜூலை, 2014

அய்யாவின் மிதிவண்டி


                      அ ய் யா வி ன்   மி தி வ ண் டி


முந்தின நாள் கிருஷ்ணா தியேட்டரில் இரண்டாம் ஆட்டம் பார்க்கப் போயிருந்தேன். விளைவு? மறுநாள் காலை சீக்கிரம் எழுந்திருக்க முடியவில்லை. வழக்கத்தைவிடப் பதினைந்து நிமிடம் தாமதமாகத் தான் நடவரசு அய்யா வீட்டுக்குப் போய்ச் சேர முடிந்தது. அதற்குள் குட்டைக் கிருட்டிணன் முந்திக்கொண்டிருந்தான். வீட்டு வாசலில் அய்யாவின் சைக்கிளை நிறுத்தித் துடைத்துக்கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் அவன் முகத்தில் வெற்றிப் புன்னகை படர்ந்தது. முகத்தை இறுக்கிப் போடா குள்ளப் பண்ணிஎன்று அவனுக்குக் கேட்காத குரலில் முணுமுணுத்து உதடுகளைப் பிதுக்கிப் பழிப்புக் காட்டி விட்டுத் திண்ணைமேல் ஏறினேன்.

குட்டைக் கிருட்டிணன் சைக்கிளின் பெடலை வேகமாகச் சுழற்றித் துடைத்துக்கொண்டிருந்த துணியைச் சுருட்டிப் பின் சக்கரத்தின் ரிம்மில் வைத்து அழுத்திப் பிடித்தான். பெடலை விட்டுவிட்டுப் பல்லைக் கடித்துக்கொண்டு துணியால் ரிம்மை விட்டுவிட்டு அழுத்தினான். சக்கரம் மெதுவாக வேகம் குறைந்து நின்றது. அய்யாவின் சைக்கிளைத் துடைக்கிற எல்லாரும் கடைசியாகச் செய்கிற சடங்கு. சைக்கிளைத் துடைத்து முடித்தாகிவிட்டது என்ற முத்தாய்ப்பு. 

சைக்கிள் தயாராகிவிட்டது என்று அய்யாவுக்குத் தெரிவிப்பதற்காக ஒரு தடவை மணியையும் அடிப்போம். மணியோசை தேய்வதற்குள் அய்யா புத்தகக் கட்டுடன் வாசல் நிலையில் தோன்றுவார் . . . என்ன தோழர்களே, புறப்படலாமா?’ என்று கேட்பார். நிரந்தரமாக ஜலதோஷம் பிடித்திருப்பது போன்ற அந்தக் குரல் எங்கள் எல்லாருக்கும் பிடிக்கும். எல்லாரையும்விட எனக்கு அதன்மேல் அலாதியான மோகம் இருந்தது. அய்யா வகுப்புக்கு வரத் தாமதமாகும் நேரங்களில் - மிக அரிதாகத் தான் அவர் வகுப்புக்கு வரத் தாமதிப்பார் - அவரைப் போலவே அடிக்குரலில் என்ன தோழர்களே, இது வகுப்பா? மாட்டுச் சந்தையா? உங்களால் அமைதியாக இருக்க முடியாதா?’ என்று ஆரம்பித்துக் கோபம் வரும்போது அவர் பயன்படுத்தும் ஒரே வசைச் சொல்லான சாணிப் பயல்களா?’ என்பதையும் சொன்னால் போதும் வகுப்பு தற்காலிகமாக அடங்கும். 

புறப்படலாம் அய்யாஎன்று கூட்டுக் குரலில் நாங்கள் பதில் சொன்னதும் அய்யா திண்ணையிலிருந்து இறங்குவார். நானோ குட்டைக் கிருட்டிணனோ அவர் கையிலிருக்கும் புத்தகக் கட்டை வாங்கி சைக்கிள் கேரியரில் வைப்போம். எங்கள் புத்தகக் கட்டுகளைக் கேரியருக்கும் சீட்டுக்கும் இடையில் கீழே விழாதபடி திணித்துவைப்போம். சாப்பாட்டுப் பாத்திரம் வைத்த பிளாஸ்டிக் ஒயர் கூடையை வலது ஹாண்டில் பார் வழியாக எடுத்து நடுவில் மாட்டுவோம். புத்தகத்தை வாங்கி வைக்காதவன் ஸ்டாண்டை எடுத்துவிடுவான். அய்யா வேட்டியின் நுனியைப் பிடித்து உயர்த்தியபடி காலை வீசிப் போட்டுச் சீட்டில் உட்கார்ந்து ஹாண்டில் பாரைப் பிடித்துக்கொள்ளுவார். எங்களில் எவனாவது ஒருவன் அய்யா உட்கார்ந்திருக்கும் சீட்டை வலதுகையாலும் ஹாண்டில் பாரை இடது கையாலும் பிடித்துக்கொள்ளுவோம். இன்னொருவன் பின்னாலிருந்து சைக்கிளைத் தள்ளத் தொடங்குவான்.பெரும்பாலும் ஸ்டாண்டை எடுத்துவிடுபவன்தான் சைக்கிளைத் தள்ள வேண்டியிருக்கும். அய்யாவின் மெல்ல மெல்லஎன்ற அடுக்குத் தொடருடன் எங்களுடைய பயணம் தொடங்கும். இரண்டு கால்களையும் சமமாகப் பெடலில் வைத்துக்கொள்வதைத் தவிர அய்யா வேறு எந்த அசைவையும் காட்டமாட்டார். 

சைக்கிள் நகர ஆரம்பித்ததும் அய்யா பேச ஆரம்பிப்பார். பேச்சு பெரும்பாலும் பாடப் புத்தகத்திலிருக்கும் செய்யுள் பகுதியைப் பற்றியோ புலவர்களின் சாதுரியத்தைப் பற்றியோதான் இருக்கும். வெகு அபூர்வமாக ரெயின்போ தியேட்டரில் பார்த்த ஆங்கிலப் படங்களின் கதையைச் சொல்லிக்கொண்டு வருவார். வீட்டில் பயணம் தொடங்கியவுடன் ஆரம்பிக்கும் கதை முடிவதற்கு இரண்டு மூன்று நாட்களாவது ஆகும். அந்த நாட்களில் சீட்டைப் பிடித்துக்கொண்டு நடப்பது யார் என்று எங்களுக்குள் சண்டை நடக்கும். அதைக் கண்டும் காணாதது போல அய்யா ரசிப்பார்.

முந்தின வாரம்வரைக்கும் நெட்டைக் கொக்கு டேவிட் இருந்தான். அவனுடன் சண்டை போட எனக்குப் பயமாக இருந்தது. நாங்கள் எட்டாம் வகுப்பில் தேறி ஒன்பதாம் வகுப்புக்கு வந்தபோது டேவிட் மூன்றாம் வருடமாக அதே வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். அதற்காக ஸ்பெஷல் பீசும் கட்டியிருந்தான். எனக்கிருந்த பூனைமயிர் மீசையுடன் மல்லுக் கட்டுவதுபோல அவனுக்கு அடர்த்தியான செம்பட்டைநிற மீசை இருந்தது. தாடியும் இருந்தது. இரண்டு வருட சீனியாரிட்டி காரணமாக அவனுடன் மோதுவது உடல் நலனுக்கு நல்லதல்ல எனத் தோன்றியது.

டேவிட் இருந்தவரை அவன்தான் நடவரசு அய்யாவின் பள்ளிக்கூட விவகாரங்களைக் கவனித்துக்கொண்டிருந்தான். காலையில் சீக்கிரமாகவே அய்யா வீட்டுக்குப் போய் சைக்கிளைத் துடைத்து வைப்பது, காலை இடைவேளையின்போது காளியப்பன் கடைக்குப் போய் அய்யாவுக்காக எடுத்து வைத்திருக்கும் முரசொலி, தென்னகம், சமநீதி பத்திரிகை களை வாங்கி வருவது, பகல் உணவு இடைவேளையில் அதே காளியப்பன் கடையிலிருந்து வெற்றிலையும் அசோகா பாக்கும் வாங்கிவருவது, கட்டுரை ஏடுகளை ஸ்டாஃப் ரூமிலிருந்து எடுத்துவருவது, திரும்பக்கொண்டு வைப்பது, பள்ளி முடிந்ததும் அய்யாவின் சைக்கிளை ஸ்டாண்டிலிருந்து உருட்டிக்கொண்டு வந்து கேட் அருகில் நிறுத்துவது என எல்லா வேலைகளையும் அவன் மட்டுமே செய்தான். அவன் இருந்த வரை அய்யாவின் பயணத்தில் சைக்கிளைப் பின்னாலிருந்து தள்ளுகிற வேலை மட்டுமே எனக்குக் கிடைத்தது. அதை நினைத்துப் பள்ளிக்கூடக் கழிப்பறையில் நின்று பல நாட்கள் அழுதிருக்கிறேன். இத்தனைக்கும் டேவிட்டைவிட நான் சிறந்த மாணாக்கன் என்றும் அவர் சொல்லித் தருவதை முழுமையாகப் புரிந்துகொள்ளுவதில் கற்பூரமென்றும் வகுப்பிலிருக்கும் நல்ல பயல்களில் ஒருவன் என்றும் அய்யாவே சொல்லியிருந்தார். அப்படியும் சைக்கிள் சீட்டைப் பிடித்துக்கொண்டு நடக்கிற நல்லூழ் வாய்க்கவே இல்லை. இந்த வருடம் அரை ஆண்டுத் தேர்வு விடு முறைக்குப் பிறகு டேவிட் பள்ளிக் கூடத்துக்கு வராமல் போனான். கடைசியாக அவன் வந்தது வெள்ளிக் கிழமை. இனி வரவேமாட்டான் என்று ஏனோ நினைத்தேன். அவன் வந்துவிடக் கூடாது என்று விரும்பியதனாலேயே அப்படி நினைத்தேன்.

திங்கட்கிழமை காலை சீக்கிரமாகக் கிளம்பி அய்யா வீட்டுக்குப் போனேன். இனிமேல் சைக்கிளின் பின்சீட்டு என் கைப்பிடியில் இருக்கும் என்று உற்சாகமாகப் போனவன் திண்ணையில் குட்டைக் கிருட்டிணன் இளித்துக்கொண்டே நிற்பதைப் பார்த்ததும் அமுங்கிப் போனேன். அவன் கையில் சைக்கிள் சாவி இருந்ததைப் பார்த்ததும் ஆத்திரமாக வந்தது. துடைத்து முடித்த பின்னர் சைக்கிளை வாசலில் ஸ்டாண்டு போட்டு நிறுத்த வேண்டுமே தவிரப் பூட்டக் கூடாது. அதுதான் வழக்கம். குள்ளப் பன்றி வழக்கத்தை மீறியிருந்தான். போதாததற்கு இளிப்பு வேறு. எரிச்சலுடன் சைக்கிள் டியூப் வளையம் போட்ட புத்தகக் கட்டைத் திண்ணைமேல் வீசினேன். கிருட்டிணனை எட்டிப் பிடித்துச் சாவியிருந்த வலது கையைப் பின்பக்கமாக வளைத்து முறுக்கி அதை விழவைக்கப் பார்த்தேன். சாவி வளையத்தை விரலில் மாட்டிக் கையைச் சுருட்டி வைத்திருந்தான். ஒவ்வொரு விரலாகப் பிரிக்கப் பார்த்தேன். முடியவில்லை. எல்லா விரல்களையும் சேர்த்து அழுத்தினேன். கிருட்டிணன் கத்த ஆரம்பித்தான். அய்யா, இங்க வாங்க இவன் என்னியப் போட்டு நொக்குறான்என்று ஒப்பாரிவைக்கத் தொடங்கினான்.

குள்ளப் பண்ணி சாவியக் குட்றா?’ என்று அவன் கையை நெரித்தேன்.

போடா, நாயி குடுக்கமாட்டன்வலியைப் பொறுத்துக்கொண்டு சொன்னான்.

இத்தினி நாளு அந்த நெட்டக் கொக்கன் பண்ணாட்டுப் பண்ணுனான். இப்ப நீயாக்கும்? பண்ணி சாவியைக் குட்றா. பள்ளிக்கூடம் தொறந்த மொத நாளுலேர்ந்து அய்யாகூட நாங்க வருவோம். எங்கேருந்தோ பாதில வந்துட்டு நீங்க சைக்கிளைப் புடுங்குவீங்க ளாக்கும்?’ அவனுடைய கையை இன்னும் நெரித்துக்கொண்டே சொன்னேன். வலி பொறுக்க முடியாமல் அவன் விரல்கள் பிரிந்து சாவி கீழே விழுந்தது. அதே நேரத்தில் நடவரசு அய்யா உள்ளேயிருந்து ஓடிவந்து எங்களைப் பிடித்து விலக்கினார்.

சாணிப் பயல்களா? என்ன செய்கிறீர்கள்? எதற்காக அடித்துக்கொள்ளுகிறீர்கள்?’ என்று இரண்டு கைகளாலும் எங்கள் இரண்டு பேரின் சட்டையையும் உலுக்கினார். தண்ணீர் தெளித்த பூமாலையை உலுக்குவது போன்ற மென்மையான உலுக்கல். இருந்தும் இருவரும் தலை கவிழ்ந்து நின்றோம்.

அய்யா பெண்டாட்டி கதவுப் பக்கமிருந்து எட்டிப் பார்த்தார். புள்ளைங்களா இதுங்க? தெல்ல வாரிக் கூட்டமா இருக்கு. ரண்டு போடு போடாம நீ வேற கொஞ்சிகிட்டு நிக்கற.

அய்யா திரும்பி அவரை ஏறிட்டார். பயல்ககிட்ட நாம் பேசிக்கிறேன். நீ உள்ள போறியா?’ என்றார்.

அய்யா பெண்டாட்டி எல்லா நீ குடுக்கிற எடந்தான். எல்லாம் தலைமேல ஏறிகிட்டு ஆடுதுஎன்று முனகிக்கொண்டே உள்ளே மறைந்தார்.

பயல்களா, இங்கே பாருங்கள். என்ன உங்களுக்குள் சண்டை?’

அய்யா கேட்டும் நாங்கள் பேசாமலிருந்தோம். கிருட்டிணன் என்ன நினைத்துக் கொண்டிருந்தான் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அய்யா எங்களிடம் பேசுகிற செந்தமிழையும் மனைவியிடம் பேசுகிற கொச்சை மொழியையும் பற்றி நான் யோசித்துக் கொண்டிருந்தேன். மொழி மாறும் அந்த வேகம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

என்னடா உங்களுக்குள்?’ மறுபடியும் அய்யா கேட்டார்.

இவந்தாய்யா சைக்கிள் சாவியப் புடுங்கறதுக்காகச் சண்டைக்கு வந்தான்என்றான் குள்ளப் பன்றி.

எதற்காகத் திறவுகோலை அவனிடமிருந்து பிடுங்கப் பார்த்தாய்?’

வாயை இறுக்கிக்கொண்டு தலைகுனிந்து நின்றிருந்தேன். இவரிடம் கதை கேட்டுக்கொண்டு நடந்துவர எனக்குப் பிடிக்கும். அதற்காகவே போன வருடத்திலிருந்து காத்துக் கொண்டி
ருக்கிறேன் என்று இவருக்குத் தெரியாதா? அப்படி நினைத்தபோதே எனக்கு அழுகை வந்தது. உதடுகளைக் கடித்து அடக்கிக்கொண்டேன்.

சைக்கிளைத் துடைத்து வைப்பதற்காக நேரத்திலேயே வந்ததையும் அதைப் பொறுக்காத நான் அவனை அடித்துச் சாவியைப் பிடுங்கப் பார்த்ததையும் தர மறுத்த அவனைப் பாதியிலே வந்தவன் என்று திட்டியதையும் சிணுங்கிக்கொண்டே சொல்லித் தீர்த்தான் குட்டை. அதைச் சொன்னபோது அவனுடைய உடம்பு ஸ்பிரிங்குபோலத் துள்ளியதாகத் தோன்றியது. அதை நினைத்ததும் சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டேன் ஆனால் என் கண்ணுக்குள் தெரிந்த குறும்புத் துள்ளல் அய்யாவின் பார்வையில் பட்டுவிட்டது. என்னை உற்றுப் பார்த்தார். அவருக்கும் சிரிப்பு பொத்துக்கொண்டது.

சாணிப் பயல்களா, இதற்காகவா சண்டை? மாலவா, அவன் பக்கத்தில் நில். அடேய் நற்குமரா நெருங்கி நில்என்றார். அவர் சொன்னது எங்களைத்தான். என்னை நற்குமரனாகவும் கிருஷ்ணனை மாலவனாகவும் மாற்றியிருந்தார். அவர் பெயர்கூட அவராகவே மாற்றிவைத்துக்கொண்டது தான். தலைமை ஆசிரியர் அருட் தந்தை யூஜின் லாரன்ஸ் அடிகளார் மட்டுந்தான் அய்யாவை இன்னும் நடராஜன் என்று கூப்பிடுகிறார்.

கொஞ்சம் கூச்சத்துடன் நானும் அதே அளவு எரிச்சலுடன் குண்டுப் பன்றியும் நெருங்கினோம். இடைவெளி விட்டுத்தான் நின்றோம். சேர்ந்து நில்லுங்களடாஎன்றார் அய்யா. விறைப்புடன் நகர்ந்தபோது இருவரும் இடித்துக்கொண்டோம். நான் பலமாக இடித்திருக்க வேண்டும். உஸ் . . . அய்யா இவன் வேணும்னே இடிக்கிறான்யாஎன்று கத்தினான் கிருட்டிணன். இல்லை அய்யா, தெரியாம இடிச்சுதுங்கஎன்றேன். அய்யா இருவரையும் பொருட்படுத்தவில்லை.

இருவரும் அமைதியாகச் சேர்ந்து நின்றோம். கிருட்டிணன் எனக்கு இடது பக்கமாக நின்றிருந்தான். அவன் முகத்துக்குள்ளிருந்து எழுந்த ஏப்பத்தில் புளிச் சோற்றின் வாடை வீசியது.

அடே மாலவா, நீ உன்னுடைய வலது கையை நற்குமரனின் தோளில் போடு. நற்குமரா, நீயும் அதுபோல உன்னுடைய இடது கையை மாலவனின் தோள்மீது வைஎன்றார் அய்யா. அவர் சொன்னபடி செய்தோம். 

அய்யா கொஞ்சம் எட்டி நின்று மனப்பாடப் பகுதிச் செய்யுளைக் கரும் பலகையில் எழுதிப் போட்டு ரசிப்பதுபோல எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

இப்படிப் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது, பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் போல. அதை விடுத்து இரண்டு பயல்களும் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறீர்களே? இனி உங்களுக்குள் சண்டை வந்தால் என்னிடம் பேச வேண்டாம் இந்த வீட்டுப் பக்கம் வரவும் வேண்டாம்என்று திடமான குரலில் சொன்னார். அய்யா சொன்னால் சொன்னது போலவே செய்வார் என்று எங்களுக்குத் தெரியும். அவ்வளவு உறுதியானவர். 

இரு நிறக் கரைபோட்ட மேல் துண்டை அணிந்து வரக் கூடாது என்று பள்ளி நிர்வாகம் சொன்னது. அய்யா அப்படி வருவது தன்னுடைய உரிமை என்றார். அப்படித்தான் வர முடியும். நிர்வாகத்துக்கு விருப்பமில்லையென்றால் அதை எழுத்துமூலம் தெரிவிக்கலாம். அதுவே முறை. ஆனால் தன்னுடைய விருப்பம்போலத்தான் உடுத்த முடியும் என்று பதில் சொன்னார். எனினும் கீழ்ப்படிதலுள்ள ஊழியனாக மறுநாள் முதல் மேல்துண்டில்லாமல் வருவதாக வாக்களித்தார். 

எங்கள் எல்லாருக்கும் அய்யா மேலிருந்த மரியாதை ஆட்டங்கண்டது. இப்படி ஏமாற்றிவிட்டாரே என்று அங்கலாய்ப்பாக இருந்தது. அடுத்த நாள் புறநானூற்றுப் புத்தகத்திலிருந்து இறங்கி வந்தவர்போல எங்கள் கண்ணுக்குத் தெரிந்தார் அய்யா. ஒன்றரை அங்குல அகலத்துக்கு இரட்டைக்கரை போட்ட புதுவேட்டி கட்டியிருந்தார். 

அய்யா மிகவும் பிடிவாதமானவர் என்று நாங்கள் தெரிந்துகொண்டது அன்றைக்குத்தான். இனிப் பேசமாட்டேன்என்று அவர் சொன்னதும் எனக்கு வயிறு வலித்தது. ஆறுதலுக்காகக் கிருட்டிணன் தோள்மேல் போட்டிருந்த கையை இறுக்கினேன். அவனுக்கும் அப்படியே இருந்திருக்கும்போல. அவன் தோள்மேலிருந்த என் இடது கையைத் தன் இடது கையால் பாசமாக இழுத்துப் பொத்தினாற்போலப் பிடித்துக்கொண்டான். அய்யாவின் முகத்தில் நிறைவான சிரிப்பு புரண்டது. 

சிரிப்பு மங்கியதும் அய்யாவே ஒரு உடன்படிக்கையைச் சொன்னார். திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் நானும் செவ்வாய், வியாழன் கிழமைகளில் கிருட்டிணனும் சைக்கிளைத் துடைக்கலாம். சீட்டைப் பிடித்தபடி வரலாம். ஆனால் கிருட்டிணனுக்கு அதில் சம்மதமில்லை. அவனுக்கு மூன்று நாட்கள், எனக்கு மட்டும் இரண்டு நாட்களா?’ என்று சிணுங்கினான். வகுப்புகள் நடைபெறும் எல்லாச் சனிக்கிழமைகளும் அவனுக்கே என்று திருத்தம் சொன்னார். அவனுக்கு மனம் ஒப்பவில்லை. அது முகத்தில் தெரிந்தது. நான் பள்ளிக்கூடம் வராத நாட்களும் அவனுக்கே என்றார். குண்டன் மெல்லச் சிரித்தான்.

நேரமாகிவிட்டது, புறப்படுவோம்அய்யா சொன்னதும் நான் சைக்கிளை ஸ்டாண்டிலிருந்து விடுவித்தேன். அய்யா காலை வீசி ஏறி உட்கார்ந்தார். நகர ஆரம்பித்தோம்.

அய்யா வீட்டு மதில் சுவரைத் தாண்டும் முன்பு மனதுக்குள்ளேயே சில தீர்மானங்களை எடுத்துக்கொண்டேன். அதில் ஒன்று இந்த வருடத்தில் மிச்சமிருக்கும் நாட்களில் ஒரு நாள்கூட விடுப்பு எடுக்கக் கூடாது. கூடவே எங்கள் தெரு சித்தி விநாயகரிடம் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தாமலிருக்கும் நல்ல புத்தியை எங்கள் தலைமை ஆசிரியர் அருட் தந்தை யூஜின் லாரன்ஸ் அடிகளாருக்குக் கொடுத்தால் அருகம்புல் மாலை சார்த்தி நாலணா கோபால் கற்பூரம் ஏற்றிவைப்பதாகவும் வேண்டிக்கொண்டேன்.

பொங்கல் விடுமுறைக்கு இரண்டு நாட்கள் இருந்தன. புதன்கிழமை போகி தொடங்கி ஐந்து நாட்கள் விடுமுறை என்பதை நினைக்கவே கொண்டாட்டமாக இருந்தது. போகி அன்றைக்குக் காலையில் வெல்லிங்டனுக்குப் பஸ் ஏறினால் பத்தரை பதினோரு மணிக்கு முன்பாக அத்தை வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம். ஞாயிற்றுக்கிழமை மத்தியானத்துக்குப் பிறகு பஸ் பிடித்தால் மாலைக்குள் வீட்டுக்கு வந்துவிடலாம். மனதுக்குள் திட்டம்போட்டு அம்மாவிடம் சொல்லிக் காசையும் வாங்கி வைத்திருந்தேன். செவ்வாய்க்கிழமை மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பிச் சட்டை, துணிகளையெல்லாம் எடுத்துவைத்துவிட்டு அய்யாவிடம் சொல்லிக்கொள்ள ஓடினேன். அவர் வெளியே போயிருக்கக் கூடாது என்று மனம் அடித்துக்கொண்டது. பொதுவாக மாலை நேரங்களில் எங்கும் போகமாட்டார். படித்துக்கொண்டிருப்பார் அல்லது எழுதிக்கொண்டிருப்பார். அவர் எழுதும் துணை நூல்களுக்குப் பெரிய வரவேற்பு இருந்தது. சில நாட்கள் மைய நூலகத்துக்கோ ரெயின்போ தியேட்டருக்கோ போவார். பேருந்தில்தான் போவார். சைக்கிளை எடுக்கமாட்டார்.

அய்யாவின் வீட்டை நெருங்கியபோது வீட்டுக்குள்ளிருந்து அய்யா பெண்டாட்டியின் கத்தல் கேட்டது. எட்டு ஊருக்குக் கேட்கிற குரல். கேட்டைத் திறந்து உள்ளே போகலாமா வேண்டாமா என்று யோசித்தேன். அய்யா பெண்டாட்டியின் கத்தலில் அதுவரைக்கும் கேட்டிராத ரகத்தில் தினுசு தினுசான கெட்ட வார்த்தைகள் இருந்தன. அந்த வார்த்தைகள் உள்ளே போகிற எண்ணத்தை முறியடித்துச் சுவரோடு ஒண்டி நிற்கச் செய்தன. அய்யா வீட்டுக் காம்பவுண்டுச் சுவர் என்னைவிட ஒரு முழம் அதிக உயரம். முன்னங்கால்களில் நின்று எக்கிப் பார்த்தாலோ செங்கல்லையோ கட்டையையோ போட்டு ஏறி நின்று பார்த்தாலோதான் உள்ளே தெரியும். எட்டிப் பார்க்கக்கால் விரல்களை ஊன்றினேன். தாயோளி, பலபட்டற சாதிதான நீ? வாத்தியாருன்னு சொல்லிப் போட்டு வெள்ளையுஞ் சொள்ளையுமா மாட்டிகிட்டுத் திரிஞ்சாலும் புத்தி மாறிப் போகுமாக்கும்?’ என்ற அய்யா பெண்டாட்டியின் வார்த்தைகள் மண்டைமேல் வந்து விழுந்ததில் தடுமாறிச் சுவரை யொட்டி ஒடுங்கினேன். 

எங்கள் தெருவில் பெண்கள் சண்டைபோடுவதைப் பார்த்திருக்கிறேன். உக்கிரமான சண்டையில்கூட இந்த வார்த்தைகளை அதுவரை கேட்டதில்லை. அதுவும் ஆண் பிள்ளைகள் திட்டுகிற வார்த்தைகளைப் பொம்பிளைகள் சொல்லிக் கேட்டதில்லை. அய்யா பெண்டாட்டியின் வாயிலிருந்து திட்டுகள் மம்மானியமாகக் கொட்டிக் கொண்டிருந்தன. அய்யா உள்ளேதான் இருந்தார். அவரைத்தான் பெண்டாட்டி திட்டிக்கொண்டிருந்தார். புரிந்தது. ஆனால் அய்யா ஏன் மறுபேச்சுப் பேசாமல் சொல்லாமல் இருந்தார் என்றுதான் புரியவில்லை. 

மறுபடியும் கால்களால் எக்கி மதில் சுவரில் தாடை உராய எட்டிப் பார்த்தேன். திண்ணைச் சன்னலுக்கு மறுபக்கம் வெள்ளைச் சட்டை தெரிந்தது. அய்யாதான். உட்கார்ந்திருந்தார். கண்களை இன்னும் இடுக்கிப் பார்த்தபோது தலை குனிந்திருப்பதுபோலவோ புத்தகம் வாசிப்பதுபோலவோ தெரிந்தது. அய்யா பெண்டாட்டி தென்படவில்லை. ஆனால் அவருடைய ஆங்காரக் கூச்சல் மட்டும் விட்டுவிட்டுக் கேட்டது. சுவரின் சொரசொரப்பில் உராய்ந்து தாவாங்கட்டை எரிந்தது. 

ஆருடாது, ஒடக்கான் மாரி செவுத்துல தொத்திகிட்டுஎன்ற விரட்டல் முதுகை அறைந்தது. சன்னல் பக்கம் அய்யா தலைநிமிர்ந்ததும் நான் தரையில் விழுந்ததும் ஒரே விநாடியில் நடந்தன. அய்யா பெண்டாட்டியின் அப்பாதான் விரட்டியவர் என்பதை மல்லாந்து கிடந்து பார்த்தேன். இங்கென்றா எட்டிப் பாத்துட்டுடிருக்கே? என்று கேட்டுக்கொண்டே கையை நீட்டினார். அதைப் பற்றிக்கொண்டு எழுந்து நின்றேன். கறுப்புநிறக் கார் எனக்குக் கொஞ்ச தூரம் தள்ளி நின்றிருந்தது. யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே அய்யாவப் பாக்க வந்தனுங்கஎன்றேன்.

பாக்க வந்தவன் எட்டிப் பாத்து கிட்டா நிப்ப. உள்ற போக வேண்டியதுதான?’ என்றார்.
இல்லீங்க, உள்ள என்னமோ சண்டையாட்டம் இருக்குதுங்க. அதான்

சண்டையா?’ என்று கேட்டவர் என் கையை உதறிவிட்டு வேகமாக உள்ளே போனார். அவருடைய கோபத்தில் இரும்பு கேட் கிறீச் சிட்டுக்கொண்டு சுவரில் மோதிய சத்தம் பெரிதாகக் கேட்டது. நான் காதைப் பொத்திக்கொண்டு நின்றேன். காதுக்குள் இரும்புக் குரல் ஙொய்என்று விம்மி அடங்கியது. கதவைத் திறந்து நகரத் தொடங்கியபோது அய்யா பெண்டாட்டியின் அப்பா பெருங்குரலில் கத்தியது சுவருக்கு இந்தப் பக்கமாகக் கேட்டது.

மறுநாள் பேருந்தில் ஏறி ஊருக்குப் போய்ச் சேரும்வரை அய்யாவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். யோசிக்க யோசிக்க ஆத்திரமும் வருத்தமுமாக முட்டிக்கொண்டு வந்தது. அய்யாவுக்கு ஊர் தஞ்சாவூர்ப் பக்கமாம். அப்படியென்றால் சோழநாட்டுக்காரர். இருந்தாலும் அய்யாவைத் தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனாகத்தான் கற்பனை செய்து வைத்திருந்தேன். செய்யுள் பாடத்தில் புறநானூற்றுப் பாடலை அய்யா நடத்திய விதம் அப்படிக் கற்பனை செய்யத் தூண்டியிருந்தது. பதினாறு வயசுப் பொடியன் என்று இளக்காரமாக நினைத்துச் சேர, சோழ மன்னர்களும் குறுநில மன்னர்கள் ஐந்து பேரும் கூட்டணி அமைத்துப் பாண்டியன்மீது போர் தொடுக்கத் தயாராகிறார்கள். அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்வதாகவும் அப்படி நடவாது போனால் தன்னுடைய குடிமக்கள் தன்னைக் கொடுங்கோலன் என்று பழிக்கட்டும். புலவர்கள் தன்னைப் புகழ்ந்து பாடாமல் போகட்டும் என்று சபதம் செய்கிறான். இந்தப் பாடலை அய்யா நடத்தியபோது வகுப்பே தூசு விழுந்தால் கேட்குமளவு அமைதியாக இருந்தது. அய்யா பதினாறு வயதுப் பாண்டியனாகவே மாறியிருந்தார். முகம் உப்பியிருந்தது. கன்னத்துச் சதை இறுகியிருந்தது. கண்களில் சிவப்பு கலங்கியிருந்தது. வகுப்பிலிருந்த எங்கள் ஐம்பத்தி இரண்டு பேரையும் சிறுசொல் சொல்லிய சினம்கெழு வேந்தர்களின் கூட்டணியாக நினைத்துப் பற்களை நறநறத்து அறைகூவல் விடுத்தார். எல்லாருக்குமே பள்ளியில் இருக்கிறோமா தலையானங்கானத்தில் கைகள் நடுங்க வாளையும் வேலையும் பிடித்துக்கொண்டு நிற்கிறோமா என்று சந்தேகமாகவே இருந்தது. அய்யா எவ்வளவு வீரமானவர் என்று மெய்சிலிர்த்தது எனக்கு. மூன்றாவது வரிசையில் உட்கார்ந்திருந்த டேவிட்டைச் சாடையால் அழைத்துக் குண்டூசித் தலைகள்போலச் சருமம் பொரிந்திருந்த கைகளையும் சிலுப்பி நின்ற ரோமங்களையும் காட்டினேன். அவன் முகம் சிரித்து விரிந்தது. அவ்வளவு வீரரான அய்யா ஏன் ஒரு பொட்டச்சியின் வார்த்தை களுக்குப் பதில் பேசாமலிருந்தார். இல்லை நான் வந்த பிறகு பேசியிருப்பாரோ என யோசித்துக் குழம்பினேன். அந்த அசதியிலேயே தூங்கியிருந்தேன். வெல்லிங்டன் எறங்குறது இருக்கா?’ என்ற நடத்து நரின் குரல் கேட்டு விழித்துத்தான் பேருந்திலிருந்து இறங்கினேன். தைல வாசனையுடன் முகத்தில் அடித்த காற்றில் அய்யாவை மறந்து போனேன்.

விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறந்த நாள் காலையில் வழக்கம் போல அய்யா வீட்டுக்கு ஓடினேன். குட்டைக் கிருட்டிணன் வந்திருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டு தான் ஓடினேன். அய்யா வீட்டு இரும்பு கேட் மூடியிருந்தது. உள்ளே சைக்கிள் அதன் வழக்கமான இடத்தில் இல்லாமல் பெரிய திண்ணையில் சன்னலையொட்டி நிறுத்தப்பட்டிருந்தது. அய்யா இன்று விடுப்பு எடுத்திருப்பாரோ? கேட்டைத் திறந்து உள்ளே போனேன். வாசல் சாத்தியிருந்தது. குழப்பத்துடன் திண்ணையேறிக் கதவைத் தட்டினேன். உள்ளேயிருந்து அய்யா பெண்டாட்டியின் குரல் கேட்டது 

ஆரு?’

அய்யா இல்லீங்களா?’ என்று எச்சிலை விழுங்கிக்கொண்டே கேட்டேன்.

கதவு திறந்து அய்யா பெண்டாட்டி நிலைப்படியில் வந்து நின்றார். நீயா? அது நேரத்துலயே பள்ளிக்கோடம் போயிருச்சுஎன்றார்.

நம்பிக்கை வராமல் அய்யாவோட சைக்கிளு இங்க நிக்குதுங்களே? என்றேன். 

அது அங்கதான நிக்கிது. ஒன்ற தலமேல நிக்கிறமாரிச் சொல்றே? ஏன் ஒங்க அய்யா சைக்கிளு இல்லாமப் பள்ளிக் கோடத்துக்குப் போகாதாக்கும்? இனிமே அது அதோட பேருக்கேத்தமாரிதான்என்றார்.

அவர் சொன்னது முதலில் புரியவில்லை. புரிந்ததும் மனசுக்குள் குமட்டியது. அய்யா இனி நடராஜா சர்வீசில்தான் பள்ளிக்கு வருவாரா? சைக்கிள் கிடையாதா? கதைகள் கிடையாதா? என யோசித்துக்கொண்டிருந்தபோது அய்யா பெண்டாட்டி வந்தது வந்தே இந்த சோத்துப் போசியக் கொண்டுட்டுப் போஎன்றார். சொல்லிவிட்டு உள்ளே போனார். நான் சைக்கிளைப் பார்த்தேன். பூட்டியிருந்தது. அதுமட்டுமல்ல. ஹாரிசாண்டல்பாரைச் சுற்றிச் சங்கிலி போட்டுத் திண்ணைச் சன்னல் கம்பியில் கோர்த்து ஒரு பூட்டு தொங்கியது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் போர்ப் புரவி சிறைப்படுத்தப்பட்டதுபோலத் தோன்றியது. ஹாண்டில் பாரைத் தொட்டேன். அது என் பக்கமாகத் தலையைத் திருப்பியது. மேற்கொண்டு யோசிப்பதற்குள் இந்தா இதக் கொண்டு போஎன்று அய்யா பெண்டாட்டி சாப்பாட்டுப் பாத்திரம் வைத்த பிளாஸ்டிக் ஒயர்க் கூடையை நீட்டினார். வாங்கினேன். இறங்கி நடந்தேன். அய்யா உட்கார்ந்திருக்க சைக்கிளைத் தள்ளிக் கொண்டுபோனபோது கொஞ்சமாகத் தெரிந்த தூரம் தனியாக நடந்தபோது மிகத் தொலைவாகப் பட்டது.

மணியடித்து வகுப்புகள் தொடங்கிப் பத்து நிமிடங்களுக்குப் பிறகுதான் பள்ளிக்கூடம் போய்ச் சேர முடிந்தது. அய்யாவின் சாப்பாட்டை ஸ்டாஃப் ரூமில் வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு வகுப்புக்கு வந்தேன். ஆங்கில ஆசிரியர் ஸ்டீபன்சார் பொங்கல் தின்ன மதமதப்பு இன்னும் தீரலையா கவிஞரய்யா? வாங்க வந்து உக்காருங்கஎன்று கேலியாகச் சொல்லி வரவேற்றார். என் இடத்தில் உட்கார்ந்தேன். ஆனால் நான்காவது பீரியட்டுக்கு அய்யா வரும்வரைக்கும் எதிலும் மனம் ஒட்டவில்லை. அய்யாவின் பிரிவேளையில் நடத்தப்பட்ட இலக்கணமும் காதில் ஏறவில்லை. உணவு இடைவேளை மணியடித்தது. அய்யா புத்தகங்களை எடுத்துக்கொண்டு வகுப்பைவிட்டு வெளியேறத் தொடங்கியபோது பக்கத்தில் போய்ச் சாப்பாடு எடுத்து வந்ததைச் சொன்னேன்.

வீட்டுக்குப் போயிருந்தாயா?’ என்றார். தலையாட்டினேன். குட்டைக் கிருட்டிணன் எங்கள் அருகில் வந்து நின்று இவன் இன்னிக்கு லேட்டாத்தான் வந்தாங்யாஎன்றான். நான் அவனை முறைத்தேன். அய்யா நடந்தார். கூடவே நாங்களும் நடந்தோம். படியிறங்கி வராந்தாவுக்கு வந்ததும் சரி, போய்ச் சாப்பிடப் பாருங்கள்என்று நடந்தார். ஆனால் அவர் ஸ்டாஃப் ரூம் பக்கமாகப் போகாமல் மெயின் கேட்டை நோக்கிப் போனதை இருவரும் கவனித்தோம்.

அய்யா இனுமே சைக்கிள்ல வர மாட்டாராண்டா. காலேல கூட நடந்துதான் வந்தம்என்றான் கிருட்டிணன்.

இந்தக் குள்ளப் பன்றி எனக்கு முன்பே அய்யா வீட்டுக்குப் போயிருந்தான் என்பது எரிச்சலைக் கொடுத்தாலும் காட்டிக்கொள்ளாமல் ஏண்டா, சைக்கிள் நல்லாத்தான இருக்கு. நாம் பாத்தனே, பஞ்ச ரொண்ணுமில்லியே?’ என்றேன்.

அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. என்னமோ அய்யாதான் இனுமே சைக்கிள எடுக்க வேண்டா முன்னாருஎன்றான்.

அந்த நாளுக்குப் பிறகு அய்யாவுடனான எங்கள் உறவு பள்ளி வளாகத்துக்குள் மட்டுமாகச் சுருங்கிப்போனது. அய்யா நடந்தே வந்தார். நடந்தே போனார். சைக்கிள் காலத்தில் பள்ளி ஆரம்பிக்கப் பத்து மணித் துளிகளுக்கு முன்பாக வருவது, பள்ளி முடிந்து பதினைந்து மணித்துளிகளுக்குப் பின் புறப்படுவது என்றிருந்த அய்யாவின் நிகழ்ச்சி நிரல் சட்டென்று மாறியது. எல்லாருக்கும் முன்னால் வந்து எல்லாரும் போன பின்னும் இருந்தார். நூலகத்தில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்துவிட்டுப் பொழுது இருட்டத் தொடங்கியதும் புறப்பட்டுப் போனார். அந்த ஆண்டு முழுத் தேர்வுக்கு முன்பு அய்யா விடுப்பில் போனார். நாங்கள் பத்தாம் வகுப்புக்கு தேர்ச்சிபெற்ற பிறகு அவரை ஒரே ஒரு நாள்தான் பள்ளியில் பார்த்தேன். வராந்தாவில் ஆசையுடன் ஓடிப் போய் அவர் பக்கத்தில் நின்றேன். அவரும் இதமாகத் தோளில் கைவத்து எப்படி இருக்கிறாய்? நன்றாகப் படிஎன்றார். அதைச் சொன்னபோது அவர் விரல்கள் தோளில் வலுவாக அழுந்தின. அந்த அழுத்தம் எதையோ சொல்வதுபோல இருந்தது. அது என்னவென்று யோசிப்பதற்குள் மணி ஒலித்து வகுப்புக்கு விரட்டியது. அய்யா முதுகில் தட்டி அனுப்பி விட்டுத் தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்தார். 

அன்றுதான் அவரைக் கடைசியாகப் பார்த்தேன். கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நிர்வாகத்தில் இருக்கும் பள்ளி எங்களுடையது. அதே நிர்வாகத்தின் கீழ்அதே மறைமாவட்டத்தைச் சேர்ந்த முப்பத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பள்ளிக்கு நடவரசு அய்யா இடமாறுதல் வாங்கிப் போனார் என்று சொன்னார்கள். அது சரிதானா என்று தெரிந்துகொள்வதற்காகக் குட்டைக் கிருட்டிணனும் நானும் அய்யா வீட்டைத் தேடிப் போனோம். மூடிய இரும்பு கேட்டில் விடு வாடகைகு விட படும்என்று மேலே தமிழிலும் கீழே TO LETஎன்று ஆங்கிலத்திலும் எழுதிய அட்டை தொங்கியதைப் பார்த்தோம். 

அய்யா இருந்தா வருத்தப்படுவாருடாஎன்றேன்.

எதுக்குடா?’ என்றான் கிருட்டிணன்.

தமிழ இப்டித் தப்பா எழுதியிருக்காங்களே, அதப் பாத்து.
இரண்டு பேரும் வேறுசந்தர்ப்பமாக இருந்திருந்தால் சிரித்திருப்போம். ஆனால் அப்போது சிரிக்கவில்லை. கிருட்டிணன் கேட் அருகில் போய் நின்று பேனாவை எடுத்து வுக்கும் எல்லுக்கும் நடுவில் ஒரு கோட்டைப் போட்டுவிட்டு வந்தான். படித்தேன். அப்போதும் சிரிப்பு வரவில்லை.

கல்லூரி விடுமுறை நாளில் எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த கிருஷ்ணா திரையங்கில் மாலைக் காட்சிப் படம் பார்க்கப் போயிருந்தேன். கடைசி இருக்கைக்கு முந்தின வரிசையில் உட்கார்ந்திருந்தேன். ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே சொத்தையான படம் என்று புரிந்தது. இருப்பு கொள்ளாமல் சுற்றிலும் பார்த்தேன். சேர் போட்டிருந்த அந்த முதல் வகுப்பில் என்னைச் சேர்த்துப் பத்துப்பேர்கூட இல்லை. அரை மணிநேரத்துக்குப் பின்பு வெளியே போய்விடத் தீர்மானித்து எழுந்தேன். இருட்டில் தடுமாறி வெளியில் வந்து நின்றதும் முதுகில் ஒரு கை பதிந்தது. திரும்பிப் பார்த்தேன். டேவிட். நெட்டைக் கொக்கு டேவிட்.

நீ வந்து ஒக்காந்ததுமே பாத்தேண்டா. ஒனக்குப் பின்னாடி சீட்டுலதான் ஒக்காந்திருந்தேன். செரி இண்டர்வெல்லுல பேசிக்கலாம்னு இருந்தேன். ஏன் எந்திரிச்சு வந்திட்ட, படம் புடிக்கலியா?’ என்றான். புன்னகையுடன் ஒத்துக்கொண்டேன். நீ நல்லாருக்கியா நான் நல்லாருக்கேன் என்ற விசாரிப்புகளுக்கு அப்புறம் பேச எதுவுமில்லாதது போலப் பட்டது.கொஞ்ச நேரம் பேசாமலேயே இருந்தோம்.

இரண்டு பேரும் ஒரே ஞாபகத்தின் இரு கரைகளில் நின்றிருந்தது போலத் தோன்றியது. இருவருக்கும் இடையில் நேற்றைய நதி ஓடியது. அதில் பழைய காட்சிகள் மினுங்கி நகர்ந்தன. பள்ளிக்கூடம். வழிகள். நடவரசு அய்யா. அவர் சொன்ன கதைகளின் காட்சிகள். அவருடையராலே சைக்கிள். எல்லாம் மினுங்கின. நான் கரைந்துபோய்க் கடைசியாக அய்யாவைப் பார்த்த நாளின் சம்பவத்தைச் சொல்லிக்கொண்டிருந்தேன். டேவிட் உம்கொட்டிக்கொண்டிருந்தான். அந்தச் சண்டைக்கு அப்புறம் அய்யா நடந்தே வந்து போனதைச் சொன்னேன். 

நடக்காம என்ன பண்ணுவாரு, அந்த ராங்கிக்காரி சொன்னதக் கேட்டா சூடு சொரண இருக்குறவங்க அதத்தான் பண்ணுவாங்க. இது எங்க அப்பாரு வாங்கிக் குடுத்த வண்டி. அதயேன் தொடறே? சின்ன சாதிப் பொச்சுக்கு சைக்கிளு கேக்குதாமில்ல சைக்கிளுன்னு அதப் பூட்டி வெச்சிட்டா. அதான் நடந்தாருஎன்றான்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அய்யா ஏன் அப்படி இருந்தார்? அந்தப் பெண் பிள்ளையை ரெண்டு சாத்துச் சாத்தவில்லை? அய்யா வீரமானவரா? அப்பிராணியா? அவ்வளவு சம்பளம் வாங்கியவர், வசதி இல்லாத பையன்களுக்குக் கணக்குப் பார்க்காமல் செலவு செய்தவர். அவரால் புதிதாக ஒரு சைக்கிளை வாங்கியிருக்க முடியாதா?

செரிதான். நீ சொல்றாப்புல புது சைக்கிளு வாங்கறதொண்ணும் அவருக்குக் கஷ்டமில்ல. வாங்கி என்ன பண்றது? ஓட்டத் தெரியோணுமே?’ என்றான் டேவிட்.

காலச்சுவடு மார்ச் 2013


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக