திங்கள், 20 ஏப்ரல், 2015

கதையின் கதை

காபோ, காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், எப்போதும் செய்திகளில் இருந்துகொண்டிருந்தார்; இறந்தபின்னும் இருந்து கொண்டேயிருக்கிறார். இருந்தபோதைவிடவும் இறந்தபின்னர் மிக அதிகமாகச் செய்திகளில் விவாதிக்கப்படுகிறார். ஆளுமையாக அவரது இயல்புகள் பேசப்படுகின்றன. படைப்பாளியாக அவரது எழுத்துகள் வெவ்வேறு கோணங்களில் விவாதிக்கப்படுகின்றன. அவர் பெயரில் இருக்கும் இணையதளத்தில் காபோ தொடர்பாக ஏதாவது புதுத்தகவல் வாரத்துக்கு ஒருமுறையாவது பதிவேற்றம் செய்யப்படுகிறது. அவரது படைப்புகள் பற்றிய சொல்லப்படாத செய்திகள், அவரது செயல்களைப் பற்றிய விவரங்கள் என்று கண்டுபிடிப்பின் சுவாரசியத்துடன் ஏதாவது ஒன்று பகிர்ந்துகொள்ளப்படுகிறது. லத்தீன் அமெரிக்க இதழ்களிலும் அவற்றின் இணையப் பதிப்புகளிலும் காபோ முன்னர் சொன்ன கருத்துகள் இன்று புதிய வெளிச்சத்துடன் புரிந்துகொள்ளப்படுகின்றன. வாழ்ந்த காலத்தில் வெளியானதைவிட அதிக எண்ணிக்கையில் அவரது நூல்கள் பதிப்பிக்கப்படுகின்றன.
மார்க்கேஸின் மறைவுக்குப் பின்னர் பலர் ஒரு சுவாரசியமான ரகசியத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். அவரது கதைகளில் இடம்பெறும் கதை மாந்தர்களின் நிழல் வடிவம் தாங்கள்தாம் என்று உரிமை பாராட்டத் தொடங்கினார்கள். புகழ்பெற்ற மனிதரின் கவனத்துக்குரியவர்களாகத் தாங்கள் இருந்தோம் என்ற தற்பெருமைக்காகச் சொல்லப்பட்டவையே பலதும் என்று மார்க்கேஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜெரால்ட் மார்ட்டின் அவற்றை ஒதுக்கிவிடுகிறார். ஏனெனில் காபோ அப்படிப்பட்ட சம்பவங்களைப் பகிரங்கப்படுத்த விரும்பாதவர். ‘ஒவ்வொருவருக்கும் மூன்று வாழ்க்கைகள் இருக்கின்றன. பொது வாழ்க்கை, தனி வாழ்க்கை, ரகசிய வாழ்க்கை’ என்று மார்ட்டினிடம் குறிப்பிட்டிருக்கிறார் காபோ. ‘அதை வெளிப்படுத்துவீர்களா?’ என்ற கேள்விக்கு காபோவின் பதில் ‘ஒருபோதும் இல்லை’. ஆனால் காபோவின் அந்த வாழ்க்கையை நாம் அவரது படைப்புகளிலிருந்து ஊகித்துவிட முடியும். படைப்புகளிலிருந்து கண்டுபிடிக்கமுடியாத ஒன்றை ஒரு நிழல் பாத்திரம் வெளிப்படுத்தியது.
சென்ற ஆண்டு ஏப்ரல் 17 அன்று காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் மறைந்தார். அந்த ஆண்டுக் கோடைக்காலத்தில் பிரித்தானிய எழுத்தாளரும் மார்க்கேஸின் தீவிர வாசகரும் அபிமானியுமான நிக்கோலஸ் ஷேக்ஸ்பியருக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. எழுதியவர் லண்டனில் வசிக்கும் ஒரு பெண். மார்க்கேஸின் ‘காலராக் காலத்தில் காதல்’ (Love in the time of Cholera ) நாவலின் பிரித்தானியப் பதிப்புக்குத் தான் எழுதியிருக்கும் முன்னுரையை முகாந்திரமாக வைத்தே அந்தப் பெண் தனக்குக் கடிதம் எழுதியதாகக் குறிப்பிடுகிறார் நிக்கோலஸ். “நீங்கள் முன்னுரை எழுதியிருக்கும் அந்த கொலம்பிய எழுத்தாளருடன் எனக்குச் சின்னத் தொடர்பு இருக்கிறது. என்னை வைத்துத்தான் அவர் ஒரு கதையை எழுதியிருக்கிறார். 1990 இல் பாரிஸிலுள்ள ‘சார்ள்ஸ் தி கால்’ விமான நிலையத்தில் அவரைச் சந்தித்தேன்” என்பது கடித வாசகம்.
அந்தக் கதை மார்க்கேஸின் ‘விந்தையான புனிதப் பயணிகள்’ ( The strange pilgrims ) தொகுப்பில் இடம் பெற்றிருப்பது. ‘உறங்கும் அழகியும் விமானமும்’ என்ற கதை. நமது சுயத்தின் அறியப்படாத இன்னொரு சுயத்தை மையக் கருவாகவைத்து எழுதப்பட்ட கதைகள்கொண்ட ஒரு தொகுப்பை மார்க்கேஸ் பதினெட்டு ஆண்டுகளாகத் திட்டமிட்டு வந்தார். கதைக்கான குறிப்புகளை ஒரு குறிப்பேட்டில் கிறுக்கி வைத்திருந்தார். அதில் ஒரு கதைக்கான வரி முதல் பார்வையிலேயே தோன்றும் காதலைப் பற்றியது. உறங்கும் அழகியும் விமானமும் கதையும் கண்டதும் காதல் கொள்வது பற்றியதுதான்.
1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ‘சார்ள்ஸ் தி கால்’ விமான நிலையத்தில் நியூயார்க் செல்லும் விமானத்துக்காகக் காத்திருக்கும்போது பிரேசிலைச் சேர்ந்த ஒரு பெண்ணைச் சந்திக்கிறார்.பெயர் சில்வானா தே ஃபாரியா. காலை ஒன்பதுமணிக்குப் புறப்படவேண்டிய விமானம் பருவநிலைக் கோளாறு காரணமாக மாலை நான்கு மணிக்குத்தான் கிளம்புகிறது. அதுவரை எல்லாரும் காத்திருக்கிறார்கள். பயணிகள் அறையில் மார்க்கேஸின் பக்கத்து இருக்கையில் வந்து உட்காருகிறார் சில்வானா. அவளுடன் உரையாடுகிறார் மார்க்கேஸ். அவள் எழுந்துபோகும் இடைவெளியில் இருக்கையையும் அவளது லக்கேஜுகளையும் பார்த்துக் கொள்கிறார். சில்வானா நம்பிக்கையுடன் தன்னைப்பற்றிய எல்லாவற்றையும் சொல்கிறாள். ஒரு நடிகையாக பாரிசில் வாழ்ந்த வாழ்க்கையை, பிரெஞ்சு இயக்குநரான கில்ஸ் பீட்டை முதலில் பார்த்தவுடன் காதல் கொண்டதை (நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்தோம் உடனேயே காதல் கொண்டோம் கண்டதும் காதல்) , ஒரு குழந்தைபெற்றதும் காதல் முறிந்துபோனதை, பின்னர் விலைமகளாகப் பிழைக்கநேர்ந்ததை, சில படங்களில் துண்டுவேடங்களில் நடித்ததை, மார்க்கேஸ் என்பவர் எழுதிய சிறுகதையை ஆதாரமாகவைத்து உருவாக்கப்பட்ட சினிமாவின் படப்பிடிப்பைப் பார்த்ததை, உடலின் சகல உபாதைகளுக்கும் நிவாரணிகளாகப் பல வண்ண மாத்திரைகளை வைத்திருப்பதை, வாழ்க்கையின் வேதனையை -எல்லாவற்றையும் மார்க்கேஸிடம் சொல்லுகிறார்: கேட்டுக் கொண்டிருப்பவர் ஓர் எழுத்தாளர் என்பதை அறியாமலே. ‘உனது வாயிலிருந்து வெளிப்படும் உண்மையுணர்வு என்னை ஆச்சரியப்படுத்துகிறது’ என்று மட்டுமே எதிர்வினையாற்றுகிறார் மார்க்கேஸ். அந்தப் பதிலில் விழித்துக்கொள்கிற சில்வானா ‘நீங்கள் யார்?’ என்று கேட்கிறாள். ‘நான் ஒரு பத்திரிகையாளன்’. எந்தப் பத்திரிகைக்கு? ‘நான் பத்திரிகைகளுக்கு எழுதுவதில்லை’ என்று மார்க்கேஸ் சொன்னதும், தான் பேசிக்கொண்டிருப்பது தனது அம்மா மும்முரமாக வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தில் இந்த நபரின் படத்தைப் பார்த்திருக்கிறோம் என்று அவளுக்குத் தெரிகிறது. தனது அடையாளத்தை லத்தீன் அமெரிக்கப் பெண் ஒருத்தியால் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும் என்ற தன்னுடைய நம்பிக்கை பலித்த சந்தோஷத்தில் மார்க்கேஸ் தனது முகவரியை எழுதி அவளிடம் கொடுக்கிறார். கடிதம் எழுது என்கிறார். ஆனால் சில்வானா தே ஃபாரியா ஒருபோதும் காபோவுக்குக் கடிதம் எழுதவில்லை.
இந்த உண்மை விவரங்கள்தாம் ‘உறங்கும் அழகியும் விமானமும்’ கதையின் கூறுகள். இந்த விவரங்களையெல்லாம் நேர்ச்சந்திப்பில் நிக்கோலஸ் ஷேக்ஸ்பியரிடம் எடுத்துச் சொல்கிறார் சில்வானா. இப்போது அவர் லண்டன்வாசி. ஐம்பதுவயதுப் பாட்டி. மார்க்கேசின் மரணச் செய்தி அறிந்தபின்னர் அவரது ‘விந்தையான புனிதப் பயணிகள்’ தொகுப்பை வாசித்ததாகவும் அதில் மூன்றாவதாக இடம் பெற்றிருக்கும் உறங்கும் அழகி கதையின் சம்பவங்கள் காப்ரியேல் கார்சியா மார்க்கேசை விமான நிலையத்தில் முதலில் சந்தித்தபோது தான் சொன்னவை என்பதும் சில்வானாவின் தரப்பு. சில விஷயங்கள் எழுத்தாளரின் கைச்சரக்கு என்றும் திருத்தம் சொல்லுகிறார். தான் அன்று விமானத்தில் பயணம் செய்யவில்லை. பாரிசில் தான் மகிழ்ச்சியாக இருக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்ட கணவர் பீட் தனக்கு ஆறுதல் சொல்வதற்காக பிரேசிலிலிருக்கும் சில்வானாவின் பெற்றோருக்கு விமான டிக்கெட் அனுப்பி பாரீசுக்கு வரவழைத்ததாகவும் அவர்களை வரவேற்கப் போனபோதுதான் மார்க்கேஸைச் சந்தித்ததாகவும் சொல்லுகிறார். இன்னொரு முக்கியமான திருத்தத்தையும் சில்வானா குறிப்பிடுகிறார். “நான் இதுவரை பார்த்தவர்களிலேயே மிக அழகான பெண் இவள்தான் என்று கதையில் மார்க்கேஸ் குறிப்பிடுகிறாரே அது எழுத்தாளரின் பொய்”.
கதையில் அப்பட்டமான உண்மைக்கு இடமில்லை. நிஜமான பொய்க்குத்தானே படைப்பில் வேலை. காபோவே சொல்லுகிறாரே ‘ஒரு கதைக்கு தொடக்கம் இல்லை; முடிவும் இல்லை. ஒன்று அது செயலாற்றுகிறது. அல்லது சும்மா இருக்கிறது’ என்று.
நன்றி: Newsweek, July 24 2014
http://www.kalachuvadu.com/issue-184/page62.asp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக