திங்கள், 15 பிப்ரவரி, 2016

ஒரு கவிதை - ஒரு குறிப்பு




காலச்சுவடு பிப்ரவரி 2016 இதழில் என் கவிதைகள் சில வெளி வந்திருக்கின்றன. அவற்றில் ' கடலினும் பெரிது' என்ற கவிதை  பற்றி கவிஞர் ஷாஅ குறிப்பொன்றை எழுதியிருக்கிறார். ஆச்சரியப்படுத்தும் குறிப்பு. கவிதையை அவர் அணுகியிருக்கும் விதத்திலிருந்துதான் இதற்குள் இவ்வளவு நுட்பங்கள் இருக்கின்றன என்று எழுதியவனுக்கே தோன்றியது.


மின் அஞ்சலில் நண்பர் அனுப்பிய அந்தக் குறிப்பை அவர் இசைவுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். மிக்க நன்றி ஷாஅ.

கடலினும் பெரிது, கவிதை: வாசகனின் சாகசம்

அரிதாக வரும் ஒரு கணத்தில் அரிதாகக் கிடைத்தது ஒரு கவிதை. அது ஒரு நீர்ப்பரப்பைக் கண்ணெதிரில் நிற்கவைத்துக் கடல் என்று, அதுவும் ஏழு கடல் என்று சொல்லி சவால் ஒன்றை முன்வைக்கிறது. இந்தச் சவாலை எதிர்கொள்பவன் சாகசக்காரனாக இருக்க வேண்டுமா? ஆமாம். நான் அப்படித்தான் சிறு வயதிலிருந்தே பார்த்து வந்திருக்கிறேன். லைலா தன் சுயரூபம் கொள்ள, சிந்துபாத் ஏழுகடல், ஏழுமலை தாண்டி மந்திரவாதி மூசாவை வெல்ல வேண்டும்: இன்னொரு பாரசீக வீரன் ஹாதிம் தாய் , கல்லாகிப் போன தேவதைக்கு உயிர் பெற்றுத் தர ஏழு விடுகதைகளுக்கு விடை கண்டுபிடிப்பதில் சாகசம் புரிகிறான்: வேறொரு ஆன்மீகப் பயணத்தில் மஹா பிரளயம். உலகில் உயிர் நிலைக்க ஏழு நாட்கள் ஆகின்றன. உலகம் தோற்றுவித்தலும் அதில் சாகசமும் பௌராணிகமும் ஞானமரபும் மெய்மையியல் சுட்டும் பிறவிகளும் இசைக்கூறுகளும் இப்படி ஏழு என்பதன் வழியாக நமக்குக் காட்டியதற்குமேல் இந்தக் கவிதை என்னை எங்கே அழைத்துச் செல்கிறது? இந்த யோசனை ஒன்று இப்போது தோன்றும்பொழுது கவிதைவெளி விரிக்கும் விஸ்தாரத்தில் நான் தன்னந்தனி வாசகனாய் நின்றிருப்பது தெரிகிறது. எனக்கு எதிரில் கடல். அடுத்து ஒரு கடல், அதற்கடுத்து இன்னொரு கடல் என்று வரிசையாக எல்லாக் கடல்களையும் அடுத்தடுத்து நான் தாண்ட வேண்டுமென்ப தில்லை. கிடைப்பரப்பில் இல்லை அவை. நின்ற இடத்தில் நின்றபடி ஏழு கடலையும் கடக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லிய நிபந்தனை யுடன் நகரும் இக்கவிதையை எப்படிக் கவிஞர் முன்வைக்கிறார் என்பதில் வாசகனான எனக்கு சுவாரசியம் கூடி விடுகிறது.

2004 ஆம் வருடம் டிசம்பர் 26 ஆம் நாள் காலையில் கன்னியாகுமரியில் உப்பு நீர் பரவிய ஈர மணலில் நண்பர்களோடு நான், வானம் தொட்ட கடல்சுவர் நம்மை நெருங்கி வருவதைப் பார்த்து வியந்ததும் பயந்து பின்னகர்ந்து ஏறித் தப்பித்ததும் ஒரு கணம் இப்போது மனதில் வந்து போனாலும் மனம் ஒன்றிப் படிக்கும் இக் கவிதையில் கடல் ஆழிப் பேரலையாய் வந்து அழித்திடவில்லை. மாறாக இந்த்கு ஒரு ஒற்றைக் கணத்தில் நிகழும் சாகசம்போல் ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்த ஒருவனின் மீண்டெழல் பதிவாகிறது. அடிப்பாதம் முதல் உச்சந்தலைவரை ஒவ்வொரு கடல் நிகழ்வையும் இவன் எதிர்கொள்கிறான். குதூகலமும் ரசாபாசங்களும் அழுத்தங்களும் சிக்கல்களும் நோய்நொடிகளும் , ஆமாம், எல்லாம் தான் இருக்கின்றன வாழ்க்கையில். இவற்றை, பிரசவம் முதல் மரணம்வரை விரியும் வெவ்வேறு பருவங்களில் பயணிக்கும் வாழ்வை, இங்கு ஒன்றன்மேல் ஒன்றாகப்படியும் கடல்களாகக் காட்டி விடுகிறது கவிதை.

இந்த இடத்தில் தனிக்குறிப்பு ஒன்றையும் அவதானிப்புக்காகச் சொல்லி வைக்கிறேன். காதலியிடம் தன் காதலை வெளிப்படுத்தும் காதலன்போல ' மண்டியிடும் நான்காம் கடலின் செய்கையில் அழகியல் உணர்வை ரசித்துப் பார்த்தபடி மேற்கொண்டு செல்கிறேன்.

முன்பே சொல்லியபடி இந்த ஏழுகடல்களும் கிடைப்பரப்பில் பரவி இருந்தால் ஒரு லீனியர் பார்வையைத்தான் கவிஞன் காட்டுவதாக அமைந்திருக்கும். அது ஒருவேளை வாசகனுக்கு சலிப்பையும் ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் கவிதையில் நான் - லீனியராக, வெர்டிகலாக கடல்கள் ஏழினையும் சந்திக்கும் சாகசம் நிகழ்கிறது. பரவசமாய்ப் படிக்கச் செய்கிறது இந்த யுக்தி. இப்படி கவிதை மேலேறி மௌனமாக வாசக மனதைத் திறந்து விடுகிறது. 'ஆர்ப்பரித்த ஏழாம் கடலைக் கொப்பளித்துத் துப்பியவன் ' என்ன மரணத்தை வென்று விடுகிறானா? உப்பை ருசித்தபடிக் கேட்கிறானே? நான் அறிவேன். Salt is life. அப்போ, வாழ்க்கையை வாழ்ந்தவனின்,  மரணம் வென்றவனின் கேள்வி இப்படி வருகிறது. 'ஏழினும் பெரிய கடல் இல்லையா?' அவன் எட்டாவது கடலைத் தேடியிருந்தால் கவிதை இங்கே படுத்துக் கொள்ளும் துயரம் நிகழ்ந்திருக்கக் கூடும். அடுத்த எண்ணில் கவனம் பதியாமல் பெரிய கடல் தேடும் வினா ஒரு பதிலை உள்ளே வைத்திருக்கிறது. அது ரகசியமாக இருக்கிறது. முதற் கடல் முதல் ஏழாம் கடல்வரை அனைத்துக் கடல்களும் சேர்ந்த ஒரு முழுமைக்குப் பின்னான அடுத்த பெரிய ஒன்றோடு இருத்தலைக் காணும் ரக்சியமாகவும் அது இருக்கலாம். 'இல்லையா' என்ற கவிதையின் கடைசிச் சொல் மீசையை முறுக்கிக் கொள்கிறது என்றாலும் அறியாததின்பால் மனம் ஈர்க்கப்படும் ஒரு தேடலாகவும் குழந்தையைப்போல மீண்டும் துவக்கத்தின் வாசலில் நின்று கொள்கிறது கவிதை.

சாதுரியத்துக்கு இடமளிக்காத வியப்பளிக்கும் ஏழினும் பெரிய கடலின் ஆர்ப்பரிப்பில், அமைதியில், அன்பில் நான் ஒருமுறை உங்களோடு கைகுலுக்கிக் கொள்கிறேன். வணக்கம், சுகுமாரன்!

ஷாஅ
06.02.2016  23:50


















                         கடலினும் பெரிது

  • விரும்பியதை அடைய
  • ஏழுகடல் கடக்க வேண்டும் என்றார்கள்
  •  
  • காலடி மணலில் பிசுபிசுத்த
  • முதல் கடலைத் தாண்டினேன்
  • பாதத்தில் புரண்டு கொண்டிருந்தது
  • இரண்டாம் கடல்
  • கணுக்காலைக் கரண்டிய
  • மூன்றாம் கடலை உதறித் தள்ளியும்
  • முழங்காலில் மண்டியிட்டது
  • நான்காம் கடல்
  • இடுப்பை வருடிய ஐந்தாம் கடலைப்
  • புறக்கணித்து நடந்தேன்
  • கழுத்தை நெரிக்க அலைந்தது  
  • ஆறாம் கடல்
  • தலையை ஆழ மூழ்கடித்து
  • உட்புகுந்து ஆர்ப்பரித்த
  • ஏழாம் கடலைக்
  • கொப்பளித்துத் துப்பியதும்
  • 'வெற்றி உனதே, இனி
  • விரும்பியதை அடையலாம்' என்றார்கள்.
  •  
  • உப்பை ருசித்தபடிக் கேட்டேன்
  • 'ஏழினும் பெரிய கடல் இல்லையா?'



2 கருத்துகள்: