செவ்வாய், 14 மார்ச், 2017

க நா சு வின் மதிப்புரை


கோடை காலக் குறிப்புகள் என்ற என் முதல் கவிதைத் தொகுப்பு 1985 மார்ச்சில் வெளியானது.சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன்,வல்லிக் கண்ணன், தி.க.சி., ஆகியோர் சுருக்கமாகவும் விரிவாகவும் தங்கள் கருத்துக்களை எழுதி யிருந்தனர். ஓர் இளங்கவிஞனுக்கு பெரும் ஊக்கத்தை அளித்தவை அந்தக் கருத்துக்கள். தன்னம்பிக்கையையும் கொஞ்சூண்டு கர்வத்தையும் அவை அளித்தன. தொகுப்பு வெளியாகிச் சரியாக ஓராண்டுக்குப் பிறகு வெளியான மதிப்புரை மேலும் மகிழ்ச்சி அளித்தது. தில்லியிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்திருந்த க.நா.சுப்ரமண்யன் சிறப்பாசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்ட 'ஞானரதம்' இதழில்  அந்த மதிப்புரையை எழுதியிருந்தார். மதிப்புரை வெளியான இதழ் இட மாற்றங்களால் கைநழுவிப் போனது.க.நா.சு. நூற்றாண்டை ஒட்டி காலச்சுவடு வெளியிட்ட சிறப்பிதழில் ( ஜனவரி 2012 ) எழுதிய ‘ க. நா.சு.வின் எழுத்து மேஜை ‘ கட்டுரையிலும் இந்த இழப்புப் பற்றிப் பின்வருமாறு எழுதி யிருந்தேன்.

வர்  ( க.நா. சுப்ரமண்யன் ) பயன்படுத்திய மேஜை இன்னும் ( என்னிடம் ) இருக்கிறது. ஈட்டி மரத்தில் செய்த மேஜை. வலது பக்கம் மேலே இழுப்பறையும் அதற்குக் கீழே ஓர் அறையும் கொண்ட மேஜை. இடது பக்கம் கால்களை நுழைத்து உட்கார வசதியான அமைப்பு. அதைக் கொண்டு வந்தபோது இழுப்பறைக்குள் காலியாகத்தான் இருந்தது. ஏதோ ஒரு நாள் அந்த இழுப்பறையை முழுவதுமாகக் கழற்றி எடுத்தேன். இரண்டு அறைகளுக் கும் இடையில் பத்திரிகைத் தாள்களிலொன்று பதுங்கி ஒட்டியிருந்தது.எடுத்துப் பார்த்தேன். க. நா. சு. ஆசிரியராக இருந்து நடத்திய ஞானரதம் பத்திரிகைப் பின்னட்டைப் பக்கத்தின் கிழிசல். கீழே க. நா. சுவின் பெயர். தமிழ்நாடு மேப்பைப் போலிருந்த கிழிசலில் படிக்க முடிந்த சில அரை, கால் வரிகளில் என் பெயர். என் முதல் தொகுப்பான கோடைகாலக் குறிப்புகளுக்கு அவர் எழுதிய மதிப்புரை அது. முழுப்பிரதி எங்கோ காணாமற்போனதில் ஏற்கனவே துக்கப்பட்டுக்கொண்டிருந்தேன். கிழிசல் துக்கத்தை அதிகமாக்கியது.


சென்னையில் க. நா. சு.வைச் சந்திக்கப் போனதே அந்த மதிப்புரைக்கு நன்றி தெரிவிக்கத்தான். புத்தகம் வெளியான சமயத்தில் மூத்த எழுத்தாளர்களுக்கும் நண்பர் களுக்கும் பிரதிகளை அனுப்பியிருந்தேன். நான் அனுப்பாதவர்களில் ஒருவர் க. நா. சு. அனுப்பாத சிற்றிதழ் ஞானரதம். ஆனால் அதில்தான் மதிப்புரை வெளிவந்தது. அதற்கு நன்றி பாராட்டுவது நாகரிகம். ஆனால் க.நா.சுவை நேரில் சந்தித்தபோது சங்கோஜத்திலும் தயக்கத்திலும் அதைச் சொல்ல முடியவில்லை. பின்னர் வெகுகாலம் வரை அந்தத் துண்டுத்தாளைப் பாதுகாத்து வைத்திருந்தேன். வீடும் ஊரும் மாறியதில் அந்தப் பொக்கிஷம் காணாமற்போனது. அந்த ஞானரதம் இதழை இப்போதும் தேடிக் கொண்டிருக்கிறேன். எனக்கும் எல்லாத் தமிழ் எழுத்தாளர்களும் ஒரு காலத்தில் தவித்தது போன்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. நானும் தமிழ் இலக்கியக் காரனல்லவா? தேடிக் கண்டு பிடித்துப் பார்க்க வேண்டும்.

என்னைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார், க.நா.சு.?’


















                                                ஞானரதம் பிப்ரவரி 1986

வெவ்வேறு தேவைகளுக்காக கடந்த சில ஆண்டுகளில் ரோஜாமுத்தையா நினைவு நூலகம், கன்னிமரா பொது நூலகம் ஆகியவற்றில் தேடியபோது கூடவே 1986 பிப்ரவரி மாத ஞானரதம் இதழையும் தேடிக்கொண்டிருந்தேன். அகப்படவில்லை. சுந்தர ராமசாமி நூலகத்தில் ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ்களின் பைண்டு வால்யூம்கள்தாம் எப்போதும் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தன. க.நா.சுவின் ஞானரதம் தென்படவே இல்லை. இன்று தற்செயலாக சுரா நூலகத்தில் துளாவியபோது உதிரியாக வைத்திருப் பவற்றில் ஞானரதம் இதழ்களைப் பார்த்தேன். க நா சு சிறப்பாசிரியராக இருந்து கொண்டு வந்தவை எல்லா இதழ்களும். அவற்றுள் நான் தேடிய இதழும் கிடைத்தது.

















                                                    க நா சு  மதிப்புரை


மதிப்புரை வெளிவந்த ஞானரதம் இதழை சென்னை மயிலாப்பூர் லஸ் முனைக் கடையிலிருந்து வாங்கினேன். அதைப் பிரித்து மதிப்புரை வெளிவந்திருந்த கடைசிப் பக்கத்தை வாசித்தபோது மயிலாப்பூர் வான வீதியில் கந்தர்வர்கள் பாடிக் கொண்டும் கின்னரர்கள் இசைத்துக் கொண்டும் அரம்பையர்கள் ஆடிக் கொண்டும் போனார்கள். நாகர்கோவில் ஆகாயத்தில் இன்றும் அவர்களே போனதைப் பார்த்தேன். முப்பத்தியோரு ஆண்டுகளுக்குப் பிறகும் அதே இளமையுடன் இருந்தார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக