வியாழன், 1 ஏப்ரல், 2021

கதவுகள் இல்லாத நீர்

                                              


                                               கதவுகள் இல்லாத நீர்

                                                                      பி. ராமன்

                                                               தமிழில்: நிர்மால்யா

 




 

பேரறிஞராகவும் திகழ்ந்த கவிஞர் உள்ளூர் எஸ்.பரமேஸ்வர அய்யர் தாம் எழுதிய இலக்கிய வரலாற்று நூலுக்குக் கேரள சாஹித்ய சரித்திரம் என்றே பெயரிட்டார். மலையாள இலக்கியத்திற்கு மட்டுமல்லதமிழ், சமஸ்கிருத மொழி இலக்கியங்களுக்கும் கேரளத்தவர்கள் கொடை வழங்கியுள்ளனர்  என்ற அடிப்படைப் பார்வையைக் கொண்டிருந்தமையாலேயே  தது நூலுக்குக்கு கேரள இலக்கிய வரலாறு என்று பெயர் சூட்டியிருந்தார். மலையாள என்னும் மொழி மட்டுமல்ல கேரளம் என்ற அறிவார்ந்த பார்வையின் அடையாளம் அத் தலைப்பில் இருந்தது. தமிழ் சமஸ்கிருதம், துளு, ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன்  முதுவான், இருளர், மாவிலான், ரவுலா, முதுவர், பணியர், மலைவேடர், முள்ளுக்குறும்பர், பெட்டகுறும்பர், காடர் முதலிய பழங்குடி கோத்திர மொழிகளிலும் இன்று கேரள எழுத்தாளர்கள் இலக்கிய ஆக்கங்களைப் படைக்கிறார்கள். அவற்றையும் உட்படுத்தாமல் நமது இலக்கியப் பரப்பின் எல்லை முழுமை பெறாது.

 

ஆனால், கேரளத்தில் வாழ்ந்துகொண்டே பிற மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களை கேரள பொதுச் சமூகம் தக்கவண்ணம் இனம் காண்பதோ ஏற்றுக்கொள்வதோ இல்லை என்பதே உண்மை. அண்மையில் மறைந்த தமிழ் எழுத்தாளர் ஆ. மாதவன் திருவனந்தபுரத்தின் சாலைக் கம்போளத்தைப் பின்புலமாக்கி தனது கதையுலகைக் கட்டியெழுப்பினார். இத்தனை நீண்ட காலம் இந்த ஒற்றைத் தெருவின் வாழ்வனுபவங்களை முன்வைத்து எழுதப்பட்ட அவரது படைப்பு உலகைத் தமிழ் வாசகர்கள் மரியாதையுடன் காண்கிறார்கள். ஆனால், அந்தத் திருவனந்தபுரக் கதைகள் கேரளத்தில் விவாதிக்கப்படுவதில்லை.

 

சமகால தமிழ்க் கவிதையுலகின் மூத்த எழுத்தாளர் சுகுமாரன். தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.அவரது குடும்ப வேர்கள் ஷொர்ணூரின் அருகில். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் இயல்பாகவே தமிழில் எழுதத் தொடங்கினார். 1974 முதல் எழுதி வருகிறார். எழுபதுகளின் இறுதியில் வெளிவந்த இளமையின் ஆவேசம் பூண்ட மலையாளக் கவிதைகளின் உணர்வுநிலையுடன் பலவிதத்தில் இயைந்து நிற்பவை சுகுமாரனின் தொடக்கக் காலக் கவிதைகள். அழுத்தி வைக்கப்பட்ட உணர்ச்சித் தீநாளங்களின் வெம்மையும், நிறமும், கருமையும் பாரித்தவைதாம்  கோடைகாலக் குறிப்புகள் என்னும் முதல் தொகுப்பிலுள்ள கவிதைகள் அனைத்தும்.அவரது பிற்கால கவிதைகளில் பலவித மாற்றங்களும், பரவல்களும் உருவாயின. கோடைகாலக் குறிப்புகள் (1985), பயணியின் சங்கீதம் (1991), சிலைகளின் காலம் (2000), வாழ்நிலம் (2002), பூமியை வாசிக்கும் சிறுமி(2007), நீருக்கு கதவுகள் இல்லை (2011), செவ்வாய்க்கு மறுநாள் ஆனால் புதன்கிழமை அல்ல (2019), சுகுமாரன் கவிதைகள் (2020) என்பவை அவரது கவிதைத் தொகுப்புகள். சுகுமாரனின் கவிதையுலகின் அனைத்துச் சிறப்பு அம்சங்களையும் எடுத்துக்காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக மலையாளியாக, தற்போது கேரளத்தில் வாழ்ந்துவரும் ஒரு தமிழ்க் கவிஞனின் கவிதையுலகம் மலையாள கவிதை உணர்வுநிலையுடனும் கருத்துச்சூழலுடனும் எப்படி ஒட்டி நிற்கிறது; விலகிச் செல்கிறது என்பதை வியப்புடன் காண்பதுதான்.


தனிமனித, சமூகம் சார்ந்த அனுபவங்களின் நெருப்பையும் தகிப்பையும் வலுவுடன்  உணர்த்தும் கோடைக்கால குறிப்புகள் அதே காலகட்டத்தில் சச்சிதானந்தன், கே.ஜி.சங்கரப் பிள்ளை, பாலசந்திரன் சுள்ளிக்காடு போன்ற மலையாளக் கவிஞர்கள் பங்கிட்ட சமூக, அரசியல் எதிர் பார்ப்புகளுடனும் உணர்ச்சிகரமான ஆற்றாமைகளுடனும் இணங்கிச் செல்கிறது. குடும்பத்தையும் சமூகத்தையும் அரசியலையும்  தரிசாக்கிய ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக இளைஞர்களுக்கே உரிய மூர்க்கத்துடன் எதிர்வினையாற்றும் போதும் கூட மிகை உணர்ச்சியோ மிகுந்த அறிவுஜீவித்தனமோ உரத்த குரலோ தீண்டாமல் படிம மொழியை இக் கவிஞர் பயன்படுத்துகிறார். வீட்டோடு கலகம் செய்து வெளியில்  அலையும் இளமையை  பாலசந்திரன் சுள்ளிக்காடின் தொடக்கக்கால கவிதைகளில் காண்பதைப்போலவே சுகுமாரனின் அக்காலக் கவிதைகளிலும் காண முடியும். அப்பாவா கொலையாளியா?’ என்ற கேள்வியைப் பாலசந்திரன் எழுப்பினா ரென்றால்  ‘என் சிறகுகளை வெட்ட வாளேந்தியவன் நீ‘ என்றும் ‘என் சங்கீதத்தின் ஊற்றை அடைத்தவன் நீ‘ என்றும் சுகுமாரன் அப்பாவைப் பற்றி உறுதியாகச் சொல்கிறார்.


குடும்ப அதிகாரத்திற்கெதிராக இளமையின் எதிர்ப்பு தமிழ், மலையாள பேதமின்றி அந்தத் தலைமுறையின் பொது மனநிலையின் அங்கமாக இருப்பதைக் காண்கிறோம். நாம் வாழும் காலம் சிதிலங்களின் மைதானம்’ என்றும், எல்லா வழிகளிலும் குரோத முனைகளைக் கொண்ட கற்கள் பரப்பப்பட்டிருப்பதாகவும்சென்று சேரும் கிராமத்தின் நதி வறண்டு போய்விட்டதாகவும் சுகுமாரன் எழுதும்போது எழுபதுகளின் இறுதியில் மலையாளத்தின் இளம் கவிதையில் கேட்ட சீற்றமும் ஏமாற்றமும் பதற்றமும் கலந்த குரல்களை நாம் இணையாக  நினைவுகூர்வது இயல்புதான். தனிமனித மனதின் ஊடாக அந்தக் கற்பனைகள் ஒளிர்ந்த போதிலும் இந்திய இளைஞர்களின் அரசியல் பதற்றங்களே அக் கவிதைகளின் ஆழத்தில் கனலாக ஜொலிக்கின்றன  என்பது  விளங்கும். கோடைக்காலக் குறிப்புகளின் கடைசி பத்தியில் தற்கொலை செய்து கொண்ட மலையாளக் கவிஞர் சனல்தாஸை பற்றிய நேரடி குறிப்பைக் காணலாம். மரணத்தின் பீடபூமியை நோக்கிப் போவதற்காக அம்மாவிடமும் சிநேகிதியிடமும் விடைபெற்றவனின் கவிதை‘ என்கிற வரியின் அடிக் குறிப்பில் சனல்தாஸின் பெயரை எடுத்துரைக்கிறார்.


தோழமையென்றும் அன்பென்றும் அழைக்கக் கூடியவையும்,  பெயரிட்டு அழைக்க இயலாதவையுமான உறவுகளின்  தொடர் ஓட்டத்தை சுகுமாரனின் முதல் கவிதைத் தொகுப்பிலிருந்தேகாணலாம். ‘உதகமண்டலம்‘ என்கிற கவிதையில்  ஊட்டி சுற்றுலா பயணிகளின் சொர்க்க நகரமல்ல. மலையாளிகளிடம் அறிமுகமாகியிருக்கும்  ஊட்டி அல்ல இது. கவிஞரின் பால்ய, இளமைப் பருவங்கள் நடந்து தேய்ந்த வழிகளின் நகரம்.

சரணாலயத்திற்கு வரும் பறவைபோல

இந்த மலைநகரத்திற்குத் திரும்பத் திரும்ப வருகிறேன்

 பரு வெடித்த மனித முகமாய்

மாறியிருக்கிறது இந்த நகரம்


எனினும்

தைல வாசனையுள்ள காற்றுகளில்

கலந்திருக்கிறது என் இளமை நினைவுகள்

 

வலுவற்றது

ஆயிரம் வருடக் களிம்பேறிய என் கைமொழி

உன் பிரியத்தைச் சொல்ல


ஊதாநிற மேமலர்கள் சிதறிய வழிகளில்

கதைகள் சொல்லி நடந்த நீ

நீர் கசியும் பாறைகளின் இடையே நீளும்

இருப்புப்பாதைகளில் மனிதர்களைச் சொன்ன நீ

இங்கே இல்லை

 

பறக்கும் கழுகின் கால்களில் சிக்கிய

துடிக்கும் இதயம் நான்

 

முலைகள் தொய்ந்த நீ-

புழுக்களின் எச்சம் மட்கிய  அரசாங்கக் காகிதங்கள்

விளிம்புகள் ஒடுங்கிய கரிப்பாத்திரங்கள் அல்லது

உன் குழந்தையின் மூத்திரத்துணிகளுடன்

 

எளிமையானது உன் அன்பு

நடு ஆற்றில் அள்ளிய தண்ணீர் போல

தன் மனதுக்கு நெருக்கமான  மலைநகரம் பின்பு எப்படி மாறியது என்கிற பழைய நினைவுகளில் அமிழ்ந்து வெளிப்படுத்துகிறார் இக் கவிதையில். தனது பால்ய நாட்களையும் இளமைக் காலத்தையும் கழித்த ஊட்டி நகரத்துடனான முரண் உறவை இக் கவிதையில் மிகையின்றி  வெளிப்படுத்துகிறார். பிரச்சாரமின்மை, உரத்துச் சொல்லாமல் இருத்தல், சிக்கலான உணர்வுகளைப் படிமங்களின் ஊடாகத் தொனிக்க செய்தல் என்பவை சுகுமாரனின் கவிதையாக்கத்தின் சில சிறப்பு கூறுகள். இந்த வெளிப்பாட்டு அம்சத்தின் சிறப்புகள் அனைத்தும் தெளிவாகத் தெரியும் தொடக்கக் காலக் கவிதை ‘பின்மனம்‘


சில சமயம்

பெருங்காற்றுக்கும் பயப்படாமல் ஒரு இலையுதிர்கால மரம் போல 

(கிளைகளில் சொற்களாய்த் தளிர்த்து மிரள்வேன் பின்பு)


சிலசமயம்

வரும் போகும் கால்களில் மிதிபட

டீக்கடைக்காரன் உலரப் போட்ட ஈரச்சாக்கு போல

(பரிவற்று வறண்டும் போவேன் பின்பு)

 

சிலசமயம் 

பிரயாணநோக்கங்கள் துறந்த இலவஞ் சிறகுபோல

(மூலைச் சிலந்திவலையின் தனிமையில் தவிப்பேன் பின்பு)


சிலசமயம்

சகல துக்கங்களையும் இறைக்கும் சங்கீதம் போல

(தற்கொலையில் தோற்றவனின் மெளனமாவேன் பின்பு)


சிலசமயம் 

கண்ணாடியில்  காத்திருக்கும் என் புன்னகை

(கால்கள் விழுங்கிய விலங்கின் வாயிலிருந்து

கையுதறி அலறும் குழந்தைமுகம் பின்பு எனக்கு )


கருத்து நிலையிலும் உணர்வு நிலையிலும் மலையாள கவிதையுடன் இணங்கி நின்ற போதிலும்  வெளிப்பாட்டு முறையில் தமிழ்க்கவிதை மரபுடன் மிகுந்த நெருக்கத்தைப் பேணுவதை இக் கவிதை காட்டுகிறது. உரத்த குரலில் தொண்டைகிழிய பாடும் மலையாளத் தன்மை இங்கு இல்லை. இருப்பினும் அமைதியின்மையின் உச்ச ஸ்தாயி மூலம் வாசகனை எட்டுகிறது. வாசகர்களிடம் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்ற கவிதை இது. முழுவதுமாகத் தன்னை வெளிப்படுத்தல்  என்பது, பொதுவாக மலையாள மனப்பாங்கின் வெளிப்பாட்டு உத்தி.  தன்னுடைய முழுத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளைக் காட்டிலும் இரண்டரை மடங்குக் கவிதைகளை எழுதியிருப்பதாகச் சொல்லுகிறார். அவை போராட்ட ஊர்வலங்களில் முழங்கின. சில சுவரொட்டிகளில் அறைகூவல் விடுத்தன. சில பாடப்பட்டன. அவையெல்லாம் கவிதைகள் அல்ல; செய்யுள்கள் மட்டுமே என்கிறார் சுகுமாரன். மரபு ரீதியிலான கவிதைக் கோட்பாடுகளைப் பின்பற்றி எழுதப்படும் கவிதைகள், எந்த அளவுக்கு ஜனரஞ்சகத்தை எட்டினாலும் அவற்றை கவிதை என்று அழைக்க முடியாது என்பதுதான் அவரது நிலைப்பாடு. கவிதையை மலினப் பண்டமாகக் கருத இயலாது என்பதிலும், அனுபவத்தை தைத்துச் சேர்க்காமல் ஒரு வரியைக் கூட எழுதஇயலாது என்பதிலும், உண்மைக்குப் புறம்பானவற்றைக் கூறக் கூடாது என்பதிலும் கவிஞர் உறுதியாக இருக்கிறார். ( தன்மொழி - சுகுமாரன் கவிதைகள் ) இந்த கூடாதுகளின் ஊடாக வடிகட்டப்பட்டு எஞ்சியவைதான் சுகுமாரனின் கவிதைகள். இவ்வாறு எழுபதுகளின் அரசியல் கலாச்சார நிலைமைகளைப் பகிரும்போதும் வெளிப்பாட்டு உத்தியில் மலையாளத்தின் பொதுத்தன்மைகளுடன் முரண்படுகிறது சுகுமாரனின் கவிதை.


தானொரு மலையாளியா தமிழனா என்கிற சிக்கல் அவரை அலைக் கழிக்கிறது. சொந்த ஊர் எது  என்கிற நிச்சயமற்றவனின் மோதலை ‘ஊர் துறத்தல்’  என்ற கவிதையில் காணலாம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ என்றெழுதிய சங்ககால கவிஞன் கணியன் பூங்குன்றனாரை நினைவு படுத்தி அக்கவிதை நிறைவடைகிறது. சுகுமாரனின்  பல கவிதைகள் பெருகி வரும் அரசியல் பார்வையின் பிற்கால அனுபவங்களை நுட்பமாக முன்கூட்டி உரைக்கின்றன. என் நாடு என்று எதை அழைக்கலாம் என்கிற கேள்வி அரசியல் விருப்பங்களுடனும் அபிப்பிராயங்களுடனும் இன்றைய வாசிப்பில் ஒலிக்கிறது. உள்ளங்காலில் எந்த மண் ஒட்டுகிறதோ அந்த மண்ணை என் ஊர் என்றழைக்கலாம்.அப்படியானால், நாடோடியின் உள்ளங்காலில் எந்த மண் படிகிறது என்கிற மறு கேள்வி எழுகிறது. குடியுரிமைப் பிரச்சினை களின் சமகாலச் சூழலில் மீண்டும் வாசிக்க வேண்டிய கவிதை ஊர் துறத்தல். 2007-ல் பதிப்பிக்கப்பட்ட பூமியை வாசிக்கும் சிறுமி தொகுப்பிலுள்ள  கவிதை 'மிச்சம்‘.

எப்போது கடல்

அபகரித்துச் சென்றதோ தெரியவில்லை

கொண்டு வந்து கரை சேர்த்த

பிஞ்சுச் சடலத்தின் கைகள் 

மூடியிருந்தன

பலவந்தமாய்ப் பிரித்துப் பார்த்தபோது

கண்டேன்

கொஞ்சம் மண்ணையும்

அதில் துளிர்விட்டிருந்த

ஏதோ சிறுசெடியையும்

2007 க்கு முன்பு எழுதப்பட்ட இக்கவிதையை இன்று வாசிக்கும்போது 2015 செப்டம்பர்  2 மத்திய தரைக் கடலில் மூழ்கி இறந்து கரையொதுங்கிய அலன் குர்தி என்ற அகதிச் சிறுவனின் சித்திரம் மனதில் எழாமல் இல்லை. கடல்கடந்து ஐரோப்பாவுக்குத் தப்புவதற்காகப் போர்மூண்ட சிரியாவிலிருந்து ஓடிய குடும்பத்தின் மூன்றரை வயது குழந்தை, குர்த் இனத்தைச் சேர்ந்த அலன் குர்தி. குடியேறிய நாட்டின் சிறிது மண்ணில் படர முயற்சிக்கும் அகதி சமூகத்தின் முதலும் கடைசியுமான அவலத்தைத் தீர்க்கமாக ஒலிக்க வைக்கும் கவிதையே ‘மிச்சம்‘. ஒரு ஜனத்திரள் அனுபவித்த சகிப்புத் தன்மைகளையும் வழங்கிய பலிகளையும் தப்பிப்பிழைத்ததற்கான சிறிதளவு பசுமையையும்  உணர்த்துகிறது இக் கவிதை. 'ஊர் துறத்தல்' ,' மிச்சம்' போன்ற கவிதைகளின் தீர்க்கதரிசனம் தமிழையும் மலையாளத்தையும் கடந்து உலகளாவிய கண்ணோட்டத்தைப் பெறுகிறது. மனித அவலங்களைச் சொல்லக் கூடிய உலகின் எந்த மூலையில் நிகழும்  அவலங்களுடனும் சுகுமாரனின் கவிதை உறவாடுகிறது.  மலையாளக் கவிதைகளைப்போல ஓங்கிய குரலில் தொண்டை கிழியக் கத்துவதோ, மிகையுணர்வோ  புத்தி சாதுரியமோ அதீதக் கற்பனையோ புனைவோ இன்றி அறம்சார்ந்த எச்சரிக்கையுடன் உலகைக் காண இக்கவிதையால் முடிகிறது.


கோவிட் 19 ஐ முன்னிட்டு நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அவ் வேளையில் தில்லியிலிருந்தும், நாட்டின் பிற நகரங்களிலிருந்தும் சொந்த ஊர்களை நோக்கி நூற்றுக் கணக்கான கிலோமீட்டர்கள் கால்நடையாகப் பயணித்த பல்லாயிர மனிதர்களின் சகிப்புத் தன்மையே ‘தில்லி-அஜ்மீர்: 390 கி.மீ.‘ என்கிற கவிதை. அத்துடன் குடியுரிமைச் சட்டத் திருத்தங்களுடன் தொடர்புடைய எதிர்பார்ப்புகள், இந்திய முஸ்லீம் சமுதாயம் எதிர்கொள்கிற பாதுகாப்பின்மை, பீதி என்பனவற்றின்  புரிதலின்றி இக் கவிதையை வாசிப்பது சிரமம். இப்புரிதல் மலையாளக் கவிதையையும் சுகுமாரன் கவிதையையும் ஒருசேரப் பங்கிடுகிறது. ஆனால் வெறும் அறிக்கை களாகவோ பதிவுகளாகவோ பிரசங்கமாகவோ இல்லாமல் தனி மனித நிஜத்தின் வேதனையூட்டும் குரலாக சுகுமாரனின் கவிதை ஒலிக்கிறது. ‘அநீதியை எங்கு காணநேர்ந்தாலும் கண்டனம் தெரிவித்தே தீருவேன் என்று பிடிவாதம் பண்ணும் என்னை நீங்கள் காணவில்லையா?‘  என்று மார்தட்டி நிற்கவில்லை இக் கவிதை. கவிஞன் எல்லாத் தகுதிகளையும் பெற்றவன்  என்கிற பிம்பத்தை உருவாக்குவதல்ல  கவிதையின் குறிக்கோள்.


கேரளத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர் என்ற காரணத்தால் இங்குள்ள இடங்கள், மனிதர்கள், வரலாறு, பண்பாடு, தொன்மங்கள் போன்றவை சுகுமாரனின் கவிதைகளில் இயல்பாகவே  தென்படுகின்றன. ‘தேவி மகாத்மியம்‘ கவிதை  செங்ஙன்னூர் பகவதியுடன் தொடர்புடைய தொன்மத்தின் வெளிப்பாடு.

தெய்வமானாலும் பெண் என்பதால்                                                             

செங்ஙன்னூர் பகவதி                                                                                                   

எல்லா மாதமும்  தீண்டாரி ஆகிறாள்.

என்று தொடங்கும் கவிதை, வட்டாரத்  தொர்புடைய  தொன்மத்தைச் சார்ந்து பூமியைப் பாதுகாத்து வரும் பெண்மையின் வலிமையை நோக்கிப் படர்கிறது.

 

கண்ணூர் பைய்யாம்பலம் கடற்கரையின் பின்னணியில் எழுதப்பட்ட கவிதை ‘பய்யாம்பலம்‘.  பய்யாம்பலத்தின் கடலும் அந்தக் கடல்வந்தணையும் கரைக்கும் நடுவில் எழும் ‘நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய்‘ என்கிற கேள்வியின் தொடக்கமும் முடிவுமான முழக்கம், காற்று, வெயில், இருள் இவற்றையும்  உணர வைக்கிறது பைய்யாம்பலம் என்னும் கவிதை.

 

மலையாளக் கவிஞர்களான சங்ஙம்புழ, இடப்பள்ளி ஆகியோர் மட்டுமல்ல, நவீன தமிழ்க் கவிஞர் சுந்தர ராமசாமியின் நினைவுகளும் நிறைந்த கவிதை தான்‘ தனுவச்சபுரம் - இரண்டாவது (திருத்திய) பதிப்பு‘. கேரள தமிழ எல்லை யிலுள்ள ரயில் நிலையம் தனுவச்சபுரம். தமிழ் மலையாள எல்லையில் ரயில் வண்டியின் எதிரில் பாய்ந்து இறந்துபோன சந்திரிகாவைப் பற்றி கேள்விப் பட்டதும்  சட்டென்று சங்ஙம்புழயின் ரமணனும் சந்திரிகாவும் மலையாளியான தமிழ்க் கவிஞனின் மனதில் இடம் பெறுகிறார்கள். ‘ சந்திரிகாவைக்  கொலைக்குக் கொடுத்தவன் ரமணனா?‘ என்கிற எதிர்க் கேள்வி அப்போது அங்கு ஒலிக்கிறது. மலையாளத்தின் கற்பனாவாத மனப்போக்கிலும், தமிழின் கற்பனா வாதத்திற்கு எதிரான மனப்போக்கிலும் நின்றிருந்த போதிலும் மனதறிந்து எட்டிப் பார்க்கும் கவிதையாக கூட இதை வாசிக்கலாம். தமிழின் கற்பனாவாதத்திற்கு எதிரான மனப்போக்கின் அடையாளமாக பசுவய்யாவின் ‘தனுவச்சபுரம்‘ கவிதையின் குறிப்பு இங்கு வருகிறது.


பாரதப்புழைக் கரையிலுள்ள சொர்ணூருக்கு அருகிலுள்ள கிராமத்திலிருந்து கோயம்புத்தூருக்குக் குடியேறிய குடும்பத்தில் பிறந்தவர் சுகுமாரன். பாரதப்பழையைப் பற்றிய எந்த நேரடி கவிதையையும் அவர் எழுதியதில்லை. இருப்பினும் அவரது கவிதைகளில் எப்போதும் நதிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. மலையாளக் கவிஞர்களுக்கு நதிகளுடனான பிரியத்தை நினைவூட்டுபவை சுகுமாரனின் கவிதைகளில் நதிகளின் சாந்நித்தியம்.

அவள் வீடு திரும்பியபோது                                                                    

ஓடாமலிருந்தது ஆறு                                                                                                             ஓடிக் கொண்டிருக்கிறாள்   அவள் மட்டும் 

ஆற்றுடன் பேசிக்கொண்டே.                                                                 


இவ்வாறாக நதியுடன் பேசிக் கொண்டிருக்கும் பெண்களும் கரையுடன் சேர்த்துக் கட்டப்பட்டு  அசையும் படகுகளுக்குள் எஞ்சிய மழைநீரில், பூமிக்கு வெளிச்சம் தந்த கருணையில் ஒளிரும் நிலவும், எல்லாம் சேர்ந்த நதியோட்டங்கள் மலையாளிக்குப் பிடித்தமானவை. வானவெளியில் பறக்கும் பறவைகள்தான் தமிழ்க் கவிதையில் பொதுவாக மீண்டும் மீண்டும் வரும் முக்கியப் படிமமாக இருந்தபோதிலும், சுகுமாரனின் கவிதையில்  நதியும் நீரும் முக்கியத்துவம் பெறுவது தற்செயல் அல்ல. சுகுமாரனின் ஒரு கவிதைத் தொகுப்பின்  தலைப்பே ‘நீருக்குக் கதவுகள்  இல்லை‘ என்பதாகும். மீனுக்கும் நீர்வாழ் உயிர்களுக்கும் தன்னிச்சையாக வந்துபோக சுதந்திரம் அளிக்கும் நீரை பெண்மையுடன் சேர்த்தெழுதிய ‘நீராலானது‘ என்ற கவிதையின் கடைசி வரியே இந்தக் கட்டுரையின் தலைப்பு. மொழியுடன் அடங்கிய தடைகளற்ற பரஸ்பரத்தைப் பற்றிய உணர்வு இந்தக் கவிதையில் அடியோட்டமாக உள்ளது.





கற்பனாவாதம் முதல் பின்நவீனத்துவம்வரை நீண்டு செல்லும் நமது உணர்வுநிலை சாய்வுகளுடன் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் சகோதர மொழிக் கவிஞர்தான் மலையாளியான சுகுமாரன்.  மலையாளத்தின் முக்கியமான கவிஞர்களின் கவிதைகளை
த் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சமீபத்தில் சுகதகுமாரியை நினைவுகூர்ந்து  எழுதிய அஞ்சலிக்குறிப்பில்  சுகதகுமாரி கவிதைகளின் தமிழாக்கத்தை நேரில் வாசித்துக் காட்டிய அனுபவத்தை  எழுதியுள்ளார். மலையாளக் கவிஞர் ஆற்றூர் மறைந்தபோது அவரை நினைவு கூரும் முதல் நூல் மலையாளத்தில் வெளிவரவில்லை. தமிழில்தான் வெளியானது. தொகுப்பாசிரியர் சுகுமாரன் என்பதையும் நாம் நன்றியுடன் நினைவில் கொள்ள வேண்டும். ‘ஆற்றூர் ரவிவர்மா –கவிமொழிமனமொழிமறுமொழி‘ என்பது தமிழ் நூலின் பெயர். ஈழத்துக் கவிஞரான சேரனின் ‘காற்றில் எழுதல்‘என்ற கவிதைத்தொகுப்பை மலையாளத்தில் பதிப்பித்தபோது அதனுடைய தொகுப்பாசிரியராகவும் சுகுமாரன் செயல்பட்டார். மட்டுல்ல, அனிதா தம்பிஅன்வர் அலிபி.பி. ராமச்சந்திரன்வி.எம். கிரிஜா போன்ற மலையாளக் கவிஞர்களைக் கொண்டு தமிழிலிருந்து நேரடியாக மொழியாக்கம் செய்யவும் துணைநின்றார். இவ்வாறு தமிழ் மலையாள மொழி இலக்கியங்களைத் தனது கவிதைகளாலும் இலக்கியச் செயல் பாடுகளாலும் ஒன்றிணைக்கும் பெரும்பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறார் திருவனந்தபுரத்தில் வசிக்கும் தமிழின் மூத்த எழுத்தாளர்.

 


 

செவ்வாய், 16 மார்ச், 2021

குலசேகரன் கதைகள்

சமகால எழுத்தாளர்களில் நம்பிக்கைக்கு உரியவர்களாக நான் காணும் சிலரில் மு.குலசேகரனும் ஒருவர். வெளிவரவிருக்கும் அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ‘புலி உலவும் தட’த்துக்கு எழுதிய முன்னுரை இது.  


 

                                   தனிவழித்  தடம்


ற்றுக்கொண்டிருக்கும் இலக்கிய வடிவம் பற்றிய பிரக்ஞை, எதை எழுத வேண்டும் என்ற நோக்கு, எப்படி எழுத வேண்டும் என்ற தெளீவு, தளுக்கோ சிடுக்கோ இல்லாத இயல்பான நடை, தன்னுடையதான கூறுமுறை – இவை அனைத்தையும் மு.குலசேகரன் கதைகளில் காண முடிகிறது. எனினும் இந்தக் கதைகள் அதிகம் பேசப்படுவதில்லை. அவரும் அதிகம் பேசப்படுவ தில்லை. அவரது கதைகளை வாசிக்கும்போதெல்லாம்  இந்த ஆதங்கம் ஏற்படுவதுண்டு. அவரது கதைகள் இதழ்களில் வெளியாகும்போது அவை  பொருட்படுத்திப் பேசப்படுவதையும் கண்டதுண்டு. ஆனால் அந்தக் குறிப்புரைகள் கதைகளுக்கும் கதாசிரியருக்கும் தகுந்த விகிதத்திலான நியாயமளிப்பவையல்ல என்ற எண்ணம் ஏற்படுவதுண்டு. இன்றைய எழுத்தாளர்களில் இலக்கியத்தைத் தீவிரமாகக் கருதும் ஒருவரும் அவருடைய தரமான கதைகளும் கவனிக்கப்படாமற் போவது ஏன் என்ற கேள்வியும் எழுவதுண்டு.

 

மு.குலசேகரனும் அவரது கதைகளும் பரவலான கவனத்தைப் பெறாததற்குக்  காரணம் அவரே என்று தோன்றுகிறது. நிகழ்கால இலக்கிய உலகத்தின் ஆர்ப்பாட்ட நடைமுறை களுக்கு ஆட்படாமல்  தனித்து நடப்பதுதான் அவரை விலக்கி நிறுத்துகிறது. இன்றைய மோஸ்தருக்குத் தோதாக அல்லாமல் எழுதப்படும் கதைகள்தாம் எடுத்து உயர்த்த எளிதாக இல்லாமல் கைவிடக் காரணமாகின்றன. ‘நான் ஒரு கதை எழுதி இருக்கிறேன்’ என்று அவரும் இணைய வெளியிலும் பிற பரப்பிலும் கொட்டி முழக்குவதில்லை. ‘வாசித்து உய்வடையுங்கள்’ என்று அந்தக் கதைகளும் வாசகனை வற்புறுத்துவதில்லை. ‘ஒரு படைப்பு அதற்குரிய முழுமையுடன் இங்கே இருக்கிறது. கொள்ள விரும்புவோர் கொள்க’  என்ற தற்சார்பற்ற நிலையிலேயே குலசேகரன் தமது கதைகளை முன்வைக்கிறார். கதைகளும் தம்மை ஏற்கும் வாசகர்களுக்காகக் காத்திருக்கின்றன.

 

குலசேகரனின் இந்த இயல்பு சில இலக்கிய அடிப்படைகளைச் சுட்டிக் காட்டுகிறது. படைப்புத்தான் முதன்மையானது. அதன் வாயிலாகவே படைப்பாளி அறியப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. படைப்புச் செயல் வடிவம் பெற்றதும் படைப்பாளியிடமிருந்து விலகித் தனித்து நிலைகொள்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. படைப்பாளியின் குறுக்கீடுகளையும் பொழிப்புரைகளையும் மீறி வாசிப்புக்காகத் திறந்து கொடுக்கிறது. குலசேகரன் கதைகளின் தனித்துவமான அம்சம் இது. கதையில் ஆசிரியர் எதையும் வற்புறுத்திச் சொல்வதில்லை. வாசக கவனத்தை ஈர்ப்பதற்கான பிரத்தியேகக் கோணங்களை ஒதுக்குவதில்லை. மாறாக கதையில் தொடக்கம் முதல் இறுதிவரையான எல்லா வரிகளையும் செறிவானதாக அமைக்கிறார். அதன் வழியாக அனுபவத்தின் பரப்பை விரிவாக்குகிறார். முழுமையான உலகைப் புனைந்து காட்டுகிறார்.

 

‘தலை கீழ்ப் பாதை’ ஓர் உதாரணம். நகலகம் நடத்தி வரும் சுப்பிரமணிக்கு இனி தனது வாழ்க்கை பழையதுபோல வசதியாக இராது என்று தெரிகிறது. அவனுடைய கடையின் முன்னால் நிமிர்ந்து நிற்கும் மேம்பாலம் பிழைப்புக்கு தடையாகிறது. அவனுக்கு மட்டுமல்ல, அவனைப் போன்ற பல சாதாரணர் களுக்கும் பிழைப்புப் பறிபோகும் நிலை. ஆனால் பாலம் கட்டப்பட்டுத் திறப்பு விழாவுக்கு ஆயத்தமாகிறது. பாலமிருக்கும் பகுதியைச் சேர்ந்தவர் களுக்கு அது தேவையே இல்லை.ஆனால் யாருக்கோ வேண்டியிருக்கிறது. அதிகாரத்தின் மூலம் தங்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றை மறுப்பின்றிச் சுமக்க நேரிடுகிறது. அந்த எளியவர்களின் பிரதிநிதியாகக் கருதப்படும் சுப்பிரமணியால் கற்பனையாகத்தான் பழி வாங்க முடிகிறது. பாலம் தொடர்பான ஆவணங்களின் ஒரு தாளை நகலெடுக்காமல் மறைத்து வைப்பதன்  ஊடே தனது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறான். கதையின் இந்தக் கோணத்தை இயல்பாக முன்வைக்கிறார். முதல் வரியிலிருந்து எந்தத் துருத்தலும் இல்லாமல், அலுப்பேற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தை உருவாக்கக் கூடிய நிதானத்துடன் செறிவைக் கூட்டி முடிவை எட்டுகிறார். கதையின் எந்த வரியை விலக்கினாலும் கட்டுக்கோப்புக் குலைந்து விடக் கூடிய முறையில் அமைகிறது கதை. இந்த இயல்பு நவிற்சியை குலசேகரனின் கதையடையாளம் எனலாம்.

 

இதே அடையாளம் கொண்டவையாகத்  தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஆதியில் காட்டாறு ஓடியது,  புலி உலவும் தடம், கடைசி விதைப்பாடு, நெடுநாளைய புண் ஆகிய கதைகளைக் காணலாம். இயல்பாகவும் செறிவாகவும் இழைக்கப்பட்ட கதைகள். நிதானமான கூறலில் முன்னேறிச் சென்று உச்சத்தில் வெடிக்கின்றன. . காலப் போக்கில் தூர்ந்து சாக்கடையாக மாறிய நதியைப் பற்றிய சுந்தர மூர்த்தியின் ஆவலாதியும் புலி வரும் தடத்தில் காத்திருக்கும் சிவபாலன், காதர் பாட்சாவின் சினமும் கடைசியாக மண்ணில் தளிர்விட்டிருக்கும் நிலக் கடலைத் தளிர்களில் தங்கவேலு கொள்ளும் நம்பிக்கையும் தகப்பனின் மரணத்தை அறிவிக்க அத்தாட்சியை எதிர்பார்த்திருக்கும் மகனின் கையறு நிலையும் இயல்பான நிகழ்வுகளாகச் சொல்லப்பட்டு இறுதியில் தீவிரத்தை அடைகின்றன. பாலம் நிரந்தரமாகி விட்டது என்றும் சாக்கடை நதியாக இனி மாறாது என்றும் புலி வந்தால் காப்பாற்ற ஆதரவு கிடைக்காது என்றும் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ஒருபோதும் உரிமையில்லை என்றும் தொற்று நோயால் அப்பா சாகவில்லை என்று சொல்வது சந்தேகம் என்றும் அந்தப் பாத்திரங்களுக்குத் தெளிவாகவே தெரிகிறது. எனினும் தங்கள் இருப்புக்கான நியாயங்களாக அவற்றைப் பற்றியிருக்கிறார்கள். அவை பறிபோகக் கூடியவை என்று வாசிப்பவர் உணர்கிறார். அப்படி உணர்த்துவதையே குலசேகரன் தனது கதையாக்க நடவடிக்கையாகக் கருதுகிறார் என்று எண்ணலாம். அதை மீறிய நிலையும்  கதைகளில் இடம் பெறுகிறது. அதுவே அவரது கதைகளுக்கு நிகழ்காலப் பொருத்தப்பாட்டையும் அளிக்கிறது.

 

நிகழ்ச்சி, கதையாக்கம், படைப்பியல் பார்வை ஆகிய கட்டங்களாகக் கதையைப் பகுக்க முடியுமானால் குலசேகரன் கதைகள் முன்னணியில் நிற்பது அவற்றில் வெளிப்படும் பார்வையால் எனலாம். எளியவர்களின் சார்பில் அதிகாரத்தை விசாரிக்கும் பார்வையை அவை கொண்டிருக்கின்றன. இதை அரசியல் என்று ‘அருகில் வந்த கடல்’ தொகுப்பின் முன்னுரையில் தேவிபாரதி குறிப்பிடுகிறார். சரியான மதிப்பீடுதான். இந்த அரசியல் வெற்று முழக்கமாகவோ ஆவேச உந்துதலாகவோ இல்லாமல் மானுட இருப்பின் கோரிக்கையாகவே வெளிப்படுகிறது. இதையும் குலசேகரனின் தனி அடையாளமாகக் காணலாம். முந்தைய  ‘அருகில் வந்த கடல்’ , தற்போதைய   ‘புலி வந்த தடம் ‘ ஆகிய இரு தொகுப்புகளிலும் அரசியல் பார்வை தெரியும் கணிசமான கதைகள் உள்ளன. அவற்றை முன்னிருத்தி அரசியல் கதைகளை எழுதியவராகச் சொல்லி விடவும் முடியாது. ஏனெனில் அவை வலிந்து தயாரிக்கப்பட்ட அரசியல் கதைகள் அல்ல. கோட்பாட்டுச் சூத்திரங்களுக்கு விளக்கவுரை அளிப்பவை அல்ல. அரசியல் கோணத்திலிருந்து வாழ்க்கையைச் சித்தரிப்பவை அல்ல.; மாறாக வாழ்வனுபவங்களிலிருந்து திரளும் உண்மைகளை அரசியலாக முன்வைப்பவை. குலசேகரனின் கதைகளில் உள்ளோட்டமாக அமையும் இந்த அம்சம் அவரது தனித்துவத்தின் பகுதி என்று எண்ணுகிறேன்.

 

கதைகளில் அரசியலை ‘மறைப்பது’ போலவே பின்புலங்களையும் ஒளித்து வைக்கிறார் குலசேகரன். கதை நிகழிடங்களைப் பெயர், அடையாளங்களைக் குறிப்பிடாமலேயே சித்தரிக்கிறார். ஆனால் கதைக்குள் இடம் பெறும் குறிப்புகளைக் கொண்டு வாசகர் அந்த இடத்தை எளிதில் ஊகித்து விட முடிகிறது. ஒரு தனி நிகழ்வை எல்லாரும் தம்மோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளக் கூடிய பொது நிகழ்வாக மாற்றவோ, வாசகரையும் படைப்புக்குள் பங்கேற்பவனாக உணரச் செய்யவோ அவரால் அநாயாசமாக முடிகிறது.

 

இந்தத் தொகுப்பிலுள்ள பத்துக் கதைகளை இரண்டு வகையாகப் பிரிக்க முடியுமென்று தோன்றுகிறது. வாசிப்பு வேளையில் தற்செயலாகப் புலப்பட்டது இந்தப் பிரிவு. கதாசிரியர் பிரக்ஞைபூர்வமாகவே அதைச் செய்திருக்கவும் கூடும். இயல்புவாதமென்றோ நடப்பியல் சார்ந்தவை என்றோ வகைப்படுத்தக் கூடிய கதைகள் ஒரு பிரிவாகவும் நடப்பியல் சார்ந்து உருவான உலகுக்குள்  அதீதங்களைக் கட்டிஎழுப்பும் கதைகள் மற்றொரு பிரிவாகவும் காணப்படுகின்றன. தலைகீழ்ப் பாதை, ஆதியில் காட்டாறு ஓடியது, புலி உலவும் தடம், கடைசி விதைப்பாடு, நெடு நாளைய புண் ஆகியவை நடப்பியல் முறையிலான கதைகள். இவற்றில் புறச் செயல்களும் தகவல்களும் முதன்மை பெறுகின்றன. கதைகள் அவற்றின் தன்மையில் வெளிப்படையாகவே துலங்குகின்றன. பருப்பொருளாகவே இடம் பெறுகின்றன. மறைந்து தோன்றும் கதவு, பிடித்த பாத்திரத்தின் பெயர், முடிவற்ற தேடல், வெளியில் பூட்டிய வீடு, மீண்டும் ஒருமுறை ஆகிய கதைகள் நடப்பியலைக் கடந்து விரிகின்றன. இந்தக் கதைகளில் புறக் காட்சிகளும் தகவல்களும் உளநிலையின் மங்கலான வரி வடிவங்களாகவே இடம் பெறுகின்றன. மனதின் விசித்திரச் சேட்டைகளே கதைப் பொருளாகின்றன. குலசேகரனின் படைப்பூக்கம் உச்சம் காண்பது இந்தக் கதைகளில்தான் என்பது என் எண்ணம். இயல்பு நவிற்சி கொண்ட கதைகளில் வாசகரைப் பார்வையாளராக அழைத்துச் செல்லும் ஆசிரியர் இந்தக் கனவு நிலைக் கதைகளில் பங்கேற்பாளராக மாற்றுகிறார். கதைகளின் முடிவை வாசகரின் சிந்தனைக்கும் உணர்வுக்கும் விடுகிறார். ஒருவேளை நவீன சிறுகதைக் கலைக்குக் குலசேகரனின் பங்களிப்பு படைப்பூக்கம் திரண்ட இந்தக் கதையாடலாக இருக்கலாம்.

 

தொகுப்பில் உள்ள கதைகளை வாசித்த வேளையில் உருவான பொதுவான கருத்தோட்டம் இது. நூலின் முன்னுரையாக இது அமைவதை விடவும் மு.குலசேகரன் கதைகளை மதிப்பிடும் விமர்சனப் பார்வைக்கு முன்னுரையாகக் கருதப்பட வேண்டும் என்பது விருப்பம். அப்படிச் செய்பவர்கள் தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் புதிய தடத்தைக் கண்டடைபவர்கள் ஆவார்கள். இந்தத் தொகுப்பு அதற்குத் தகுதியான அழுத்தமான சான்று.

 

திருவனந்தபுரம்                                              சுகுமாரன்

14 பிப்ரவரி 2021

 

 




ஞாயிறு, 7 மார்ச், 2021

வாப்பா - வங்கச் சிறுகதை

 

                        வாப்பா

                                     நபரூண் பட்டாச்சார்யா 

 





2002 குஜராத் கலவரத்தின் பின்புலத்தில் நபரூண் பட்டாச்சார்யா எழுதிய கதை இது. பத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்து தொகுத்து நூலாக வெளியிடும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது இந்தத் தமிழாக்கம். வங்க மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குச் செய்யப்பட்ட ஆக்கத்தை அடிப்படையாக வைத்துத் தமிழாக்கம் உருவானது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வி.ராமசாமியுடனான கலந்துரையாடலில் தமிழாக்கப் பிரதி இறுதி வடிவம் பெற்றது.

                         

  

லவரத்தில் நேரடியாகப் பங்கேற்ற கும்பலில் சதாசிவ்வும் இருந்தான் என்று சொல்வது சரியில்லைதான். ஆனால் அவன் அந்தக் கும்பலில் இல்லை என்றும் எப்படிச் சொல்ல? அலுவலகம் செல்லும் பாபுக்களும் அவர்களது மனைவியரும்கூடக் காரில் வந்து கடைகளில் கொள்ளையடித்தார்கள்தானே? போலீசும் அந்தத் தீவைப்பில் சம்பந்தப்படாமல் இருந்தார்களா என்ன? சிக்கல் அங்கேதான். சுருக்கமாகச் சொன்னால் கலவரத்தில் பங்கெடுத்தவர்கள், பங்கெடுக்காதவர்கள் என்று பிரித்துப் பார்ப்பது கடினம். கலவரக்காரர்களில் ஒருவனாகச் சதாசிவ்வைச் சேர்த்தாலும் அவன் அவ்வளவு முக்கியமானவன் அல்ல என்றும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு அவன் அயல்வாசிகளைப்போல ஒரு திரிசூலத்தைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது  அம்மா கேட்டாள்.

 

 

-    இதை வெச்சு என்ன செய்வே?

-    சண்டை வரப்போகுது. எலிகளைச் சாகடிக்க எல்லாரும் கூட்டமாப் போவாங்க.

-    சரி, நீ என்ன செய்வே?

-    நானும் போவேன்.

 

சதாசிவ் அம்மா இன்னும் சொல்லியிருப்பாள். அது கிட்டத்தட்ட அவள் உதடுவரைக்கும் வந்திருந்தது. ஆனால் அவன் எவ்வளவு கள்ளச் சாராயம் குடித்திருந்தான் என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. சதாசிவ்வின் அப்பா இறந்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தன. அவரும் முட்டமுட்டச் சாராயத்தைக் குடித்திருந்தார். ஆனால் அது அன்றைய வேலை முடிந்த பிறகுதான். சென்ற வருடமே மில் மூடப்பட்டிருந்தது. அதன் பிறகே அவர் கள்ளச் சாராயம் குடிக்க ஆரம்பித்திருந்தார். ஆட்கள் கள்ளச் சாராயத்தை விடவும் மிகவும் அபாயகரமான எரிசாராயங்களைக் குடித்தார்கள். அதைக் குடித்துச் செத்தார்கள். சதாசிவ்வின் அப்பா ஒரு பெயிண்ட் பாக்டரியிலிருந்து திருடிய ஐசோப்ரொஃஐல் ஆல்கஹாலை அருந்தியிருந்தார். சதாசிவ்வின் அப்பா வேலைக்காக அணிந்துவந்த காக்கி டிரவுசரும் கழுத்துப்பட்டி நைந்த கருநீலச் சட்டையும் அந்த அறைக்குள்ளே கொடியில் தொங்கிக்கொண்டிருந்தன. சதாசிவ்வின் கால்களில் ஒன்று சூம்பிக் கோணலாக இருந்தது. அவனை ஒடிசலானவன் குட்டையானவன் என்று சொல்லலாம். அவனுடைய இடதுகால் ஏடாகூடமாக நீட்டிக் கொண்டிருப்பதால் மேலும் குட்டையாகவும் விகாரமாவும் தோன்றினான். அது அப்படியே இருக்கட்டும். சதாசிவ் நீரில் முக்கி  ரொட்டிகளைத் தின்றுவிட்டுப் படுக்கப் போனதும் அவன் அம்மா அந்தத் திரிசூலத்தை எடுத்துப் பரிசோதித்தாள். ஒன்றுக்கும் பயன்படாதது. வார்ப்பிரும்புக் கழிவிலிருந்து செய்தது. ஒருவர் அதைக் கழிவுப் பொருளாக விற்றால்  சின்னக் கிண்ணத்தின் விலைகூடப் படியாது. சதாசிவ் அம்மா அவன் தூங்கிக் கொண்டிருக்கும்போதே அவனுடைய சட்டைப்பையிருந்து தீப்பெட்டியை எடுத்தாள். சில குச்சிகளைத் தவிர தீப்பெட்டிக்குள் இரண்டு பீடிகளும் பாதிபுகைத்த பீடியும் இருந்தன. சதாசிவ் அம்மா ஒரு பீடியை எடுத்துப் பற்றவைத்தாள். அதைப் புகைத்துக் கொண்டிருக்கும்போதே அவளால் எதிர்ப்பக்கத்து அறையிலிருந்து காஞ்சியும் அவன் மனைவியும் சண்டையிடுவதை உற்றுக் கேட்க முடிந்தது. காஞ்சியின் மனைவி போன வருடம் அவனுடைய சகோதரனுடன் சூரத்துக்கு ஓடிப் போனாள். பிறகு அவளாகவே திரும்பி வந்தாள். அவர்கள் தினமும் சண்டை போட்டார்கள். ஆனால் ஒத்துப் போகவும் செய்தார்கள். சமாதானமானதும் கேசட் ரிக்கார்டரைப் போட்டார்கள். அந்தத் திரிசூலம் அறையின் மூலையில் சுவரோடு சார்த்தி வைக்கப்பட்டிருந்தது. சதாசிவ் அறையின் வாசல் நிலைக்குக் கதவு இல்லை. மாவு மூட்டைக்கு உபயோகிக்கும் பெரிய பிளாஸ்டிக் பைகளைச் சேர்த்துத் தைத்த திரை தொங்கவிடப்பட்டிருந்தது. டீசலும் சமையலும் கலந்த வாடை அந்த அறையை மூச்சுத் திணறும் இடமாக்கியிருந்தது. ஆனால் அவ்வப்போது நீண்ட இடைவேளை விட்டு வீசிய திடீர்க் காற்று வாடையை ஊதி வெளியே தள்ளியது.

 

 

தொழிலாளர் காலனியின் சந்துகளுக்கும் இடைவழிகளுக்கும் நடுவில் சாலை இடுங்கியோ காணாமலோ போயிருந்தது. மீண்டும் புழுங்கத் தொடங்கியது. புழுக்கத்தின் முன்னால் வீசிய  காற்று தோல்வியடைந்தன. சதாசிவ் அம்மாவால் தூங்க முடியவில்லை. அவள் அரைகுறையாக உட்கார்ந்து  பாதித் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தாள். அரைத் தூக்கத்திலிருந்து விழித்ததும் ஒரு தகர மாவு டப்பாவின் பக்கத்தைத் தட்டிச் சத்தம் எழுப்பினாள். சுண்டெலியை விரட்டி ஓட வைப்பதற்காக அந்தச் சத்தம். தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையில் வட்டமடித்துக் கொண்டிருந்த அவள் வெகு தூரத்திலிருந்திலிருந்து வந்த வேறு ஒரு சத்தத்தையும் கேட்டாள்.  இந்தப் பின் நேரத்திலும் எங்கோ ஓர் இடத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. யாரோ ஒருவர் சொற்பொழிவு ஆற்றுவதாக உரக்கக் கத்திக் கொண்டிருந்தார். இவ்வளவு பின் இரவுப் பொழுதில் யாராவது எப்போதாவது பொதுக் கூட்டம் நடத்தியிருக்கிறார்களா? இந்த நேரத்தில் யாராவது அதற்குப் போயிருப்பார்களா? உண்மையில் அது கூட்டமல்ல. வெள்ளை அம்பாசிடர் கார் ஒன்று நாற்சந்தியில் நின்றிருந்தது. விரியத் திறந்து போட்டிருந்த அதன் பின்பக்கக் கதவுகளுக்கு வெளியில் இரண்டு பெரிய ஒலிபெருக்கிகள் நீட்டிக் கொண்டிருந்தன. ஒரு கேசட் ரிக்கார்டரிலிருந்து அந்தப் பேச்சு ஒலித்துக் கொண்டிருந்தது. அதை ஒலிக்க விட்டவர்கள் சாலையில் நின்று தமக்குள் அடங்கிய குரலில் பேசிக்கொண்டும் பான்மசாலாவை மென்றுகொண்டும் இருந்தார்கள். ஒருவர் சந்தனநிற சபாரி சூட் போட்டிருந்தார். எஞ்சிய மூன்று பேர் புதிதாகச் சலவை செய்த வெள்ளைநிறக் குர்த்தாவும் பைஜாமாவும் அணிந்திருந்தார்கள். டிரைவர் நடை பாதையில் குந்தி உட்கார்ந்திருந்தான். இதற்கு முன்பு அண்டையில் மூன்று இடங்களில் காரை இதுபோல நிறுத்த வேண்டியிருந்தது. அதனால் அவன் களைத்திருந்தான். அந்த மூன்று இடங்களிலும் அதே காஸட் அரைமணி, அரைமணி நேரமாகப் போடப்பட்டிருந்தது. இன்னும் இரண்டு இடங்களில் அவன் காரை நிறுத்தி ஒவ்வொரு அரைமணி நேரமாக, அதாவது இன்னும் ஒரு மணி நேரத்துக்கு அதே காசட்டை ஒலிக்கவிட வேண்டும். அந்தக் காசட் தேர்ந்த தொழில்திறனுடன் ஒரு ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டிருந்தது. சில பகுதிகளில், உணர்ச்சியைத் தூண்டி விடுவதற்காக, ஜாத்ரா நிகழ்ச்சிப் பாணியில் இசை சேர்க்கப்பட்டிருந்தது. சில சமயங்களில் துயரப்படுபவர்களுக்கு ஆறுதலாக இருந்தாலும் அதன் மற்ற பகுதிகளில் ஏளனமான உரத்த சிரிப்புகளே நிறைந்திருந்தன. தொலைக்காட்சியில் நகைச்சுவைத் தொடர்களைப் பார்த்தவர்களுக்கு அந்தச் சிரிப்பு பழக்கமானது. தொலைக்காட்சி நேரலையில் பங்கேற்கும் பார்வையாளர்கள் பொருத்தமான விநாடியில் சிரிக்க மறந்துபோனால் இதுபோலச் சிரிக்கக் கற்றுக் கொடுப்பார்கள். அது என்னவாக இருந்தாலும், பேச்சு ஒலித்துக் கொண்டிருந்தபோது ஒரு போலீஸ் வேன் வந்து அந்த இடத்தை வட்டமிட்டது. சபாரி ஆசாமி அண்ணாந்து வாயை முழுக்கத் திறந்து பான்மசாலாப் பாக்கெட்டில் மிச்சமிருந்ததைக் கொட்டிக் கொண்டார்.

 

 

அநீதிக்கு எதிராகப் போராடும் ரத்த தாகமுள்ள படை வீரர்களாக அந்தக் கலவரக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கருதப்பட்டால் சதாசிவ்வையும் அவர்களில் ஒருவனாகச் சேர்க்கலாம்.  ஒவ்வொரு நபருக்கும் ஒதுக்கிய  சாராயக் குப்பியையும் முன்னூறு ரூபாய் பணத்தையும் ஏற்கனவே வாங்கியிருந்தான். படுகொலைகள்  முடிந்து பிணங்கள் தெருக்களில் கிடந்தபோது அவற்றை அப்புறப்படுத்த ஒருவர் கூட வரவில்லை. நரிக்கூட்டமொன்று வந்தது. பட்டினி கிடந்த நாய்களும் தாவும் வல்லூறுகளும் வந்தன. அதன் பிறகு எலிகளுடனும் ஈக்களுடனும் எறும்புகளுடனும்  வந்த அணியில்தான் சதாசிவ் இருந்தான். சாராயத்தை அனுபவித்துக் குடித்து மகிழலாம் என்று நினைத்தான். வீட்டில் உட்கார்ந்தே பாதிக் குப்பியைக் காலி செய்திருந்தான். ஆனாலும் போதை ஏறியிருக்கவில்லை. ஐம்பது ரூபாயை அம்மாவிடம் கொடுத்தான். மிச்சம் இருநூற்று ஐம்பது ரூபாயைத் தனக்காகக வைத்துக் கொண்டான். இன்னும் சில நாட்களுக்கு, இல்லை பல நாட்களுக்கு அந்தத் தொகை அவனைப் பார்த்துக் கொள்ளும். எனவே போகவேண்டாம் என்றுதான் நினைத்தான். ஆனால் சங்கரும் காஞ்சியும் போஜாவும் கூட்டமாக வந்து சதாசிவ்வை வெளியே இழுத்து வந்தார்கள். ரிக்யால் நகரில் கொடூரமான தாக்குதல் நடந்திருந்தது. சாலையோரத்திலிருந்தே தீப்பிழம்புகள் தென்பட்டன. கும்பல்கள் லாரிகளில் வந்து சேர்ந்திருந்தன. கேஸ்சிலிண்டர்களை அடுக்கிக்கொண்டு வந்திருந்தார்கள்.  வாள்களையும் இரும்புத்தடிகளையும் கத்திகளையும் கபாப்குத்தி வைக்கும் கம்பிகளையும் அமிலத்தையும் பெட்ரோல் குண்டுகளையும் வைத்திருந்தார்கள். இப்போது அவனால் அங்கே போய்ச் சேர முடிந்தால் சூறையாட ஏதாவது சரக்கு நிச்சயம் இருக்கும். ஆனால் அவன் சீக்கிரம் அங்கே போயாக வேண்டும். அண்டை அயல் பக்கங்களிலிருந்து ஆட்கள் இதற்குள் வந்து சேர்ந்திருப்பார்கள். சதாசிவ் நொண்டியபடி கும்பலுடன் சேர்ந்து கொண்டான். அறையின் மூலையில் சுவரோடு சார்த்தி வைத்திருந்த திரிசூலத்தை எடுத்துக் கொண்டான். அழுக்குப் பைஜாமாவின் நாடாவை இறுகக் கட்டினான். அதன் பிறகு கால்பக்கத்தை மேலே சுருட்டிவிட்டான். இந்த ஆயத்தங்களுக்கு உயிரூட்டிக் கொண்டிருப்பதற்கு இடையில் அவன் ஒரு வார்த்தையும் உச்சரிக்கவில்லை; எதுவும் பேசவில்லை. போதையின் பிடியில் அர்த்தமில்லாத கூச்சலை மட்டுமே வெளிப் படுத்தினான். தொற்றிக்கொள்ளக் கூடியது அந்த மனநிலை. மற்றவர்களும் அவனைப் போலத்தான் இருந்தார்கள். ஒல்லிப் பிச்சான்களாகவும் வீணர்களாகவும் அலட்டல் காட்டுபவர்களாகவுமே அவர்களும் இருந்தார்கள். அவர்கள் போக்கில் அவர்களும் கூச்சலிட்டார்கள். மில்தொழிலாளர் காலனியின் இடுங்கிய சந்துவழியாக நடந்தார்கள். விசாலமான சந்தைக் கடந்து சாலையை அடைந்தபோது, பற்றி எரிந்து கொண்டிருந்த ரிக்யால்நகரிலிருந்து எழுந்த புகைமேகங்களின் வெளிச்சத்தைப் பார்த்தார்கள். ஒரு சிறு பகுதி காற்றின் வீச்சால் சிதறடிக்கப்பட்டாலும் புகை மேல்நோக்கி உயர்ந்தது. இடது பக்கத்தில் கட்டுப்பாடற்ற கும்பல் ஊர்வலம் போனது. முழுச் சாலையையும் ஆக்கிரமித்துக்கொண்டு அவர்கள் ஆனந்தமாக நடனமாடினார்கள். அவர்களுக்கு எதுவும் நேரவில்லை. அவர்களால் மற்றவர்களுக்கும். புதிதாகக் கட்டி முடித்திருந்த சிவன் அப்பார்ட்மெண்ட்ஸுக்கு முன்னால் மாட்டீஸும் மாருதியும் சாண்ட்ரோவும் உற்சாக எந்திரமான ஃபோர்டு ஐகான் கார்களும் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தன. சதாசிவ்வின் குழுவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அப்போது தங்களை ஒரு உற்சாக எந்திரமாகவே உணர்ந்தார்கள். ஆனந்தக் கும்பல் சற்று முன்னேறியது. சந்தியில் வலது பக்கமாகக் கும்பல்  திரும்பியும் அவர்கள் தயங்கி நின்றார்கள்.

 

 

அநேகமாக அது அவனுடைய சைக்கிளாகவே இருக்கும். அதை மார்பில் சுமந்தபடி  செத்துக் கிடந்தான். அழுக்கான டி ஷர்ட்டும் வெளுத்துப்போன கோடுகள் உள்ள வெண்ணிற டிராக் சூட் காலுடையும் அணிந்திருந்தான். அவன் முகம் கிழித்தெடுக்கப்பட்ட சினிமா போஸ்டரால் மூடியிருந்தது. அதன் மேல் ஒரு செங்கல் வைக்கப்பட்டிருந்தது. காற்றின் வீச்சில் போஸ்டர் பறந்து போனாலும் சிதைந்த  முகம் வெளியே தெரியாமல் இருக்கும் இல்லையா? போஜா இறந்து கிடந்தவனின் சட்டைப்பைக்குள் கையைவிட்டு கைக்குட்டையையோ மெல்லிய கிழிசலையோ வெளியே எடுத்தான். அதைத் தூர எறிந்தான். சற்று நேரம் அங்கே அமைதியாக இருந்தது.  பிறகு மறுபடியும் நடக்கத் தொடங்கினார்கள். முடவனான சதாசிவ் குழுவிடமிருந்து பின் தங்கியிருந்தான். எதிர்த் திசையிலிருந்து ஒரு லாரி வந்தது. டிரைவரின் கேபினுக்கு மேலிருந்த மாடத்தில் உட்கார்ந்திருந்த சிலர் வாள்களையும் ஈட்டிகளையும் அரிவாள்களையும் வீசிக் கொண்டிருந்தார்கள். பழி வாங்குவதைப் பற்றிய முழக்கங்களைத் தாளம் பிசகாமல் எழுப்பினார்கள். லாரியில் அலமாரிகள், தட்டு அடுக்குகள், தலைகீழாக நிறுத்திய ரெஃப்ரிட்ஜெரேட்டர்கள், டி.வி.செட்கள், சூட்கேஸுகள், சமையல் பாத்திரங்கள், திரைகள், ஸ்கூட்டர்கள், கண்ணாடிகள், தேனிரும்பு நாற்காலிகள் எல்லாம் திணிக்கப்பட்டிருந்தன. லாரி அவர்களை நோக்கி முன்னால் நகர்ந்தபோது சாலை ஓரமாக ஒதுங்கி வழிவிட்டார்கள். லாரி வேகமெடுத்தது. லாரியின் பின்பக்கம், அதன் கொக்கியில் தற்செயலாக ஒட்டிக்கொண்ட அல்லது வேண்டுமென்றே அங்கே சிக்கவைத்த ஆகாய நீல நிறமுள்ள செயற்கை இழைத் துப்பட்டா காற்றில் படபடத்தது. சதாசிவ்வின் குழு இப்போது வெற்றி முழக்கங்களை உரக்கப் பாடினார்கள். ஓடத் தொடங்கினார்கள். சதாசிவ்வால் ஓட முடியாததால் இன்னும் பின்னால் விடப்பட்டான். அவன் திரிசூலத்தைக் கைத்தடியாக உபயோகித்தான். அதன் கணகண சத்தம் சாலையில் ஒலித்தது.

 

அவர்களைப் பின்தொடர்ந்து ரிக்யாலின் மெயின் கேட்டை சதாசிவ் அடைந்த போது அவர்கள் எல்லாரும் வெளியில் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தான். அந்த இடத்துக்குத் தீவைத்த, ஆட்களைக் கொன்ற, பெண்களை வன்புணர்ந்த அதே நபர்கள்தாம் மதில் சுவரால் வளைக்கப்பட்ட இரண்டு கட்டடங்களையும்  நெருப்பு சூழ்ந்திருந்ததால் இந்த உதிரிவர்க்கத் திருடர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தார்கள். உள்ளே தீயின் சரசரப்பை மீறிப் பொருட்கள் உடைந்து நொறுங்கும் ஓசையும் கேட்டது. கதவுகள் விழுந்து கொண்டிருந்தன. சட்டங்கள் தீப்பிடித்ததில் ஜன்னல் கிராதிகள் கழன்று தொங்கின. சதாசிவ் சற்று நேரம் தீச்சுவாலைகளின் கோர தாண்டவத்தையும் புகைப்படலத்தையும் பார்த்துக்கொண்டு நின்றான். காம்பவுண்டுக்குள் நிறுத்தியிருந்த கார் ஒன்றும் எரிந்து கொண்டிருந்தது. இந்த அப்பார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸுக்கு சதாசிவ் ஒருமுறை வந்திருக்கிறான். பின் பக்கத்தில் கொஞ்சம் காலி நிலம் இருந்தது. அங்கே களைபறிக்கும் வேலைக்கு பாக்யேஷ் வந்திருந்தான். சதாசிவ்வும் பாக்யேஷுடன் வந்திருந்தான். பின்பக்கத்தில் ஒரு கேட் இருந்தது. பின்பக்க மதிலை ஒட்டி ஆஸ்பெஸ்டாஸ் கூரைபோட்ட மூன்று ஷெட்கள் இருந்தன. அவை பணியாளருக்கான குடியிருப்புகள். ஒருவேளை அவற்றில் கொள்ளை நடந்திருக்காது. யாரும் கவனிக்காமல் பின்பக்கக் கேட் வழியாக உள்ளே நுழைந்தால் தன்னால் எதையாவது கண்டெடுக்க முடியுமா?

 

 

சதாசிவ்வின் நினைப்புத் தவறானது. பின்பக்கத்திலும் எரிந்து கருகும் சதையின் வாடை கவிந்திருந்தது. அங்கும் சூறையாடப்பட்டிருந்தது. இறந்த உடல்கள் எரியும் டயர்களைப் பயன்படுத்திச் சிதை மூட்டப்பட்டிருந்தன. செருப்புகள் குப்புறக் கிடந்தன. கதவு திறந்து கிடந்தது. ஒருவேளை சிலர் இந்தப் பக்கமாகத் தப்பிப் போயிருக்கலாம். நொறுங்கிய பீங்கான் பண்டங்கள். பழைய துருப்பிடித்த குழந்தைகளுக்கான தள்ளுவண்டி ஒன்று தலைகீழாகக் கிடந்தது. ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் வேய்ந்த ஷெட்களும் தப்பவில்லை. அறைகளுக்குள் தீ எரிந்து கொண்டிருந்தது. ஓர் அறையில் பாதி எரிந்த காலண்டர் தென்பட்டது. சதாசிவ் வாசலில் நின்று உள்ளே எட்டிப்பார்த்தான். உள்ளே தகித்த வெப்பம் பெருவெடிப்புப் போல அவனைத் தாக்கியது. கதவு பெயர்ந்து வந்தது. அதன் கீழே ஒரு கை தெரிந்தது. உள்ளே போய்த் தேடியிருந்தால் அவன் எதையாவது பார்த்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்வதற்கான வலிமையைத் திரட்டிக்கொள்ள சதாசிவ்வால் முடியவில்லை. அப்போது  முனகலோ பயத்தைக் கட்டுப்படுத்த மூச்சை இழுத்துப் பிடிக்கும் ஓசையோ போன்ற அசாதாரணமான சத்தத்தைக்  கேட்டு சதாசிவ் திடுக்கிட்டான்; சுற்றிலும் திரும்பிப் பார்த்தான். அங்கே யாரும் இல்லை. கொழுந்து விட்டு எரியும் சுவாலைகளின் ஓசை மட்டுமே. எல்லா நாளையும்போல அந்தி வெளிச்சம் மங்கிக் கொண்டிருந்தது.  அத்துடன் எரிசுவாலையின் ஓசையும் குறைந்து கொண்டிருந்தது. ஒருவேளை மேலும் எரிக்க அங்கே எதுவும் இல்லையோ?  சத்தம் கேட்டதாக சதாசிவ் நினைத்தது தவறா? அவன் கொஞ்சம் பயந்தான். அதனால்தான் திரிசூலத்தை ஆர்ப்பாட்டமாக உயர்த்திக் கத்தினான்போல.

 

 

      -  யாரு அங்கே?

பதில் இல்லை

-   அங்கே யாராவது இருக்கீங்களா?

அதற்கும் பதில் இல்லை.

 

 

இங்கே அறைகளுக்குள் நிச்சயமாக யாரும் இல்லையா? சதாசிவ்வுக்கு நிராதரவான உணர்வு ஏற்பட்டது. திரிசூலத்தை இறுகப் பற்றிக்கொண்டான். விலங்குகள் பிற விலங்குகளின் இருப்பை உணர்வது இப்படித்தான்; மனிதர்கள் பிற மனிதர்களின் இருப்பை உணர்வதும் இப்படித்தான். தான் எதையும் கேட்கவில்லை என்றும் சதாசிவ்வுக்கு ஒரு நொடி தோன்றியது. அது சரிதானா? கதவுக்குக் கீழே தெரிந்த கைக்கு உரிய மனிதன் செத்திருக்கவில்லையா? அது அவனுடைய முனகலா? விழுந்த கதவைத் தள்ளும் வலிமை அவனுக்கு இல்லாமலிருந்ததா?

 

 

-    ஜாக்கிரதை, என் கையில் திரிசூலம் இருக்கு. அதால உன்னைக் குத்துவேன்.

 

இந்த முறையும் எதிர்வினை இல்லை.

 

 

அந்தி வெளிச்சம் மறைந்து கொண்டிருக்கும் அந்தப் பகலின் கடைசி நேரத்தில் எல்லாமும் அசாதாரணமாக உயிர் பெற்றிருப்பதை சதாசிவ் கவனித்தான். இருளில் மூழ்குவதற்கு முன்பாக எல்லாமும் ஒருமுறை சுழல்கின்றனவா? அல்லது அவை பயத்தில் திடுக்கிடுகின்றனவா? ஆனால் அங்கே எதுவும் இல்லை. சிறிது தூரத்துக்கு அப்பால், நீண்டிருந்த தரையில் ஒரு தண்ணீர்த்தொட்டி கட்டிவிடப்பட்டிருந்தது. அது ஏன் அங்கே இருக்கிறது என்று சதாசிவ்வுக்குத் தெரியும். அது  கட்டட வேலைக்காகச் செங்கற்களை ஊற வைக்கும் தொட்டி. அங்கே ஒருபுறத்தில் மரப்பலகைகள் அடுக்கப் பட்டிருந்தன. ஒதுக்கமாக இருந்ததால் யாரும் அதற்குத் தீவைக்கவில்லை. ஆனால் தண்ணீர்த் தொட்டிக்குள்? இங்கேயிருந்து அது சரியாகத் தெரியவில்லை. சதாசிவ் திரிசூலத்தை ஈட்டிபோல ஓங்கிப் பிடித்தான். தண்ணீர்த்தொட்டியை நோக்கி நடந்தான். பாசிக் கறை. வண்டல் படிந்த அடிப்பகுதியில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. அதன் மூலையில் சுவரோடு முதுகைச் சாய்த்து அவன் உட்கார்ந்திருந்தான். உள்ளாடை மட்டும் அணிந்த சிறுவன். அவன் தலை மொட்டையாக இருந்தது. தலையில் சிரங்குப்புண் இருந்தது. சதாசிவ்வைப் பார்த்ததும் சிறுவன் எழுந்து நின்றான். சதாசிவ் திரிசூலத்தை வீசப்போவதுபோல ஓங்கினான். குழந்தை அமைதியாக இருந்தான். ஆனால் அவன் வாய் திறந்திருந்தது. சில நொடிகளுக்குப் பிறகு சதாசிவ் கையை இறக்கினான். பகல் வெளிச்சம் மறைந்து கொண்டிருந்ததில் எல்லாம் மங்கலாயின. சதாசிவ் தன்னைக் கொல்ல மாட்டான் என்பது சிறுவனுக்குத் தெரிந்தது. அப்படியே செய்வதானாலும் அதை இங்கே செய்ய மாட்டான். அவன் மறுபடியும் உட்கார்ந்தான். அவனுடைய உள்ளாடை ஈரமாகி இருந்தது. தன்னால் அந்தக் குழந்தையைக் கொல்ல முடியாது என்று சதாசிவ்வும் உணர்ந்தான். வெகு முன்பாகவே அவனுடைய போதை கலைந்து போயிருந்தது. சதாசிவ் திரிசூலத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு சூம்பிய காலை ஒரு பக்கமாக நீட்டியபடி உட்கார்ந்தான். அவர்கள் இருவரும் உட்கார்ந்திருந்தார்கள். சதாசிவ் தொட்டியின் விளிம்பிலும் குழந்தை தொட்டிக்கு உள்ளேயும். சதாசிவ் ஒரு பீடியைப் பற்றவைத்தான். அந்த பீடியைப் புகைத்துவிட்டுப் போய்விடலாம் என்று தீர்மானித்தான். சிறுவனைக் கொல்லாவிட்டாலும் எரிகிற பீடித்துண்டை அவன் உட்கார்ந்திருக்கும் தண்ணீருக்குள் சுண்டி விடத்தான் போகிறான். ஆனால் பீடியைப் புகைத்து முடிப்பதற்கு முன்பே தன்னுடைய யோசனைகளுக்குள் அந்தக் குழந்தை  புகுந்திருப்பதை சதாசிவ் புரிந்துகொண்டான். அந்தக் குழந்தையைப் பற்றிய யோசிக்க எனக்கு என்ன அவசியம்? ஏராளமான ஆட்கள் செத்துப் போயிருக்கிறார்கள். இதோ முன்னால் கதவுக்கு அடியில் சிக்கிக்கொண்ட கை கிடக்கிறது. ஒருவேளை உள்ளே இன்னும் ஆட்கள் எரிந்து கொண்டிருக்கலாம். ஒருவேளை தப்பி ஓடியவர்கள் துரத்தப்பட்டு கடைசியில் பக்கத்துத் தெருக்களில் பிடிபட்டிருக்கலாம். மறுபடியும் சதாசிவ் இக்கட்டுக்குள் அகப்பட்டான். செத்துப் போனவர்களில் ஒருவனாக அந்தக் குழந்தையைச் சேர்க்க முடியவில்லை. அவன் அமைதியாக நடந்து போயிருக்கலாம். கையில் திரிசூலத்தைத் தூக்கிக்கொண்டு நொண்டி நடந்து போயிருந்தால் யாரும் எதுவும் சொல்ல முடியாது. அவர்கள் எல்லாரும் பிரதான வாசலில் இருந்தார்கள். சதாசிவ் போன பின்பு, முழுக்க இருட்டிய பிறகும் செங்கற்களை ஊறவைக்கும் தொட்டிக்குள் அந்தச் சிறுவன் உட்கார்ந்து கொண்டே இருக்கலாம். ஆனால் எவ்வளவு நேரம்? இல்லை, எழுந்து வெளியில் வருவானா? என்ன நடக்கும் என்று சதாசிவ்வால் யூகிக்க முடியவில்லை. ஆனால் ஒரு விஷயத்தில் நிச்சயமாக இருந்தான். வெளியில் காத்திருப்பவர்களால் அவனைக் கண்டுபிடிக்க முடியாது. பகல் வெளிச்சம் மறைந்தது. தொட்டிக்குள்ளும் இருட்டாக இருந்தது. அடியில் கொஞ்சம் அழுக்கு நீர் இருந்தது. அதற்குள்ளே ஒரு மூலையில்  சிறிய உள்ளாடை அணிந்து தலையில் சிரங்குடன் அவன் உட்கார்ந்திருந்தான்.

 

ஏய், எந்திரிச்சு வெளியே வா.

இருட்டுக்குள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை.

நான் ஒண்ணும் செய்யமாட்டேன். பயப்படாதே. எந்திரிச்சு வா.

கலங்கிய நீரில் ஏதோ அசைவு. 

என் கையைப் பிடிச்சு ஏறி வா.

 

பிஞ்சுக் கைகள் சதாசிவ்வின் கையைப் பற்றின. சதாசிவ் தன் கைகளால் அவனை மேலே இழுத்தான். தன்னுடைய கையைப் பையனின் கழுத்து, முதுகு, மெலிந்த மார்பு, இடுப்பு, புட்டங்கள், கால்கள் எல்லாவற்றின் மேலும் ஓடவிட்டான். அவனுடைய உள்ளாடை தொப்பலாகிக் கால்வழியாகத் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. குழந்தை குளிர்காற்றில் விறைத்துப் போயிருந்திருந்தான். நடுங்கிக் கொண்டிருந்தான். சின்னப் பற்கள் கிடுகிடுக்கும் ஓசை சதாசிவ்வுக்குக் கேட்டது. சதாசிவ் குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டான். தன்னுடைய சூடான கையால் குழந்தைக்குக் கதகதப்பு ஏற்ற முதுகை வருடினான். குழந்தையை மார்போடு சேர்த்துக்கொண்டு இருளின் பகுதியாக அங்கேயே உட்கார்ந்தான். அவனுடைய இதயம் வேகமாகத் துடித்தது. குழந்தை வேகமாக மூச்சுவிட்டான்.  சதா சிவ்வை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான். சதாசிவ் குட்டி விரல்களையும் நகங்களையும் உணர்ந்தான். குழந்தை அவனைப் பிறாண்டிக் கொண்டிருந்தான். பிறகு நிச்சலனமாக ஓய்வெடுக்கத் தொடங்கினான்.

 

சதாசிவ் பின்பக்கத்து  வழியாக இருட்டிலேயே வெளியேறினான். அவனுடைய இடது கால் மெலிந்து சூம்பியது. அதனால் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையைத் தனது வலது தோளில் போட்டுக்கொண்டான். கூர்விளிம்புகள் மேல்நோக்கியிருக்கும்படித் திரிசூலத்தை இடது கையில் எடுத்துக் கொண்டான்.

 

வெளியே சாலைக்கு வந்ததும் வலப்புறமாக நடந்தான். மெயின்கேட் அருகில் இன்னொரு லாரி வந்து நின்றது. அவர்கள் எல்லாரும் கும்பலாகக் காத்திருந்தார்கள். ஒருவேளை இன்னும் பொருட்களைச் சூறையாடியிருக்கலாம். அல்லது மனித உடல்களைக் குவித்திருக்கலாம். கழுத்து அறுக்கப்பட்ட நிர்வாணப் பெண்கள், மரணத்தை அணைத்துக் கொண்ட ஆண்கள். ஒருவேளை அவர்கள் சதாசிவ்வையும் கவனித்திருக்கலாம். அப்படியே இருந்தாலும் அவர்கள் அதைப் பற்றி யோசிக்க வில்லை. ஒருவேளை அவர்கள் கவனித்தது அந்தத் திரிசூலத்தை மட்டுமாக இருக்கலாம்.

 

அந்தக் கட்டடங்களுக்குள்ளே எரிந்துகொண்டிருந்த நெருப்பு சற்று முன்புதான் அணைந்திருந்தது. ஆனால் தரைத்தளத்திலோ அல்லது அதே தளத்திலிருந்த சமையலறையிலோ  கேஸ்சிலிண்டர் திடீரென்று பெருஞ்சத்தத்துடன் வெடித்தது. அவர்கள் அதிர்ந்தார்கள். சதாசிவ்வும் அதிர்ந்தான். குழந்தை திடுக்கிட்டு விழித்தான். புதிதாக எழுந்த நெருப்பு வெளிச்சத்தை அச்சத்துடன் பார்த்தான். கூக்குரலிட்டு அழுதான்.

    வாப்பா

அந்த அலறலை அவர்களும் கேட்டார்கள்.

                                      

                    ----- 0 -----



 



                            நபரூண் பட்டாச்சாரியா ( 1948 – 2014 )

 

வீன வங்க இலக்கியத்தில் புரட்சிகர அழகியலின் நடைமுறையாளர்களில் ஒருவர். இந்திய மக்கள் நாடகக்குழு ( இப்டா )வைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரும் நடிகரும் நாடக ஆசிரியருமான பிஜோன் பட்டாச்சார்யா, 2012 இல் நோபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பட்டவரும் மகத்தான எழுத்தாளரும் செயல்பாட்டாளருமான மஹாஸ்வேதா தேவி இணையரின் ஒரே பிள்ளை. கல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். கவிஞராகவும் எழுத்தாளராகவும் செயலாற்றினார். ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் வாழ்க்கையை எழுதினார். அவர்களுக்கான செயல் பாடுகளில் முன்னின்றார். சாகித்திய அக்காதெமி விருது உள்ளிட்ட பல பெருமைகளும் பெற்றவர். எனினும் அதிகாரத்துக்கு எதிரானவராகவே இயங்கியவர். 2007 இல் தனக்கு அளிக்கப்பட்ட வங்க இலக்கியத்தின் மிக உயர்ந்த விருதான பங்கிம் விருதை அன்றைய இடதுசாரி அரசின் நந்திகிராம் வன்முறைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மறுத்தவர். நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் ஆகிய எல்லாத் துறைகளிலும் பங்களித்தார். திரைப்படத் துறையிலும் கணிசமாகப் பங்காற்றினார். புற்றுநோயுடன் நீண்ட நாட்கள் போராடி 2014 இல் மறைந்தார்.


நன்றி : நீலம் - பிப்ரவரி 2021