வெள்ளி, 25 ஜனவரி, 2019

செவ்வாய்க்கு மறுநாள் ஆனால் புதன்கிழமை அல்ல - முதல் பார்வை

புதிய கவிதைத் தொகுப்புக்கு வந்த முதல் எதிர்வினை இது. நண்பர் சிவராஜ் பாரதிக்கு மிக்க நன்றி.






ளவு என்பது எண்களால் தீர்மானிக்கப்படுவது அல்ல. அளவு என்ற வரையறை விரிவானது, ஆழமானது. கவிஞர் சுகுமாரனின் எழுத்துகளுக்கும் இது பொருந்தும். கவிதை என்பது உணர்வல்ல, அது ஒரு அனுபவம். படைப்புகள் உருவாவதில்லை, அவை வெளிப்படுகின்றன. கவிஞனின் மொழியாளுமையையும் கற்பனாவாதத்தையும் கருவியாகக் கொண்டு படைப்பு தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்கிறது. அதில் கவிஞனுக்கான இருப்பையும் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்கிறது. அப்படியொரு கவிதானுபவம் தான் "செவ்வாய்க்கு மறுநாள் ஆனால் புதன்கிழமை அல்ல".


அன்பிற்கும் மதிப்பிற்கும் மட்டுமல்ல கவிதைக்குமுரிய கவிஞர். சுகுமாரனின் ஏழாவது கவிதைத் தொகுப்பு இது. 46 கவிதைகளின் அரூப கணங்களைச் சுமக்கின்ற சிற்றுரு  நூல். "ஜியார்ஜியா ஓ' கீஃபி"யின் ஓவியம் கொண்ட அட்டை வடிவமைப்பே முழுமையான கவிதானுபவத்திற்கு வரவேற்பாய் அமைகிறது. நூல் முழுதும் கவிஞரின் கவிதாதிகாரம் தான்! ' சொற்கள் சுடர்க!' எனும் முன்னுரைக் கரையிலிருந்து கைப்பிடித்து அழைத்துச் சென்று 'கவிதை'க்குள் கால்நனைத்து, மெல்ல கடலுக்குள் இறக்கி, மூழ்கவைத்து நம்மை தனியே விட்டுவிட்டு அவர் மாயமாய் மறைந்துவிட்ட உணர்வு. நல்ல கவிதைக்கு தொடக்கம் இருக்கலாம், முடிவு இருக்கிறதா என்று தெரியவில்லை. சுகுமாரனின் கவிதைகள் முடிவதில்லை, அது மௌனமாய் (அ) ' செவி துளைக்கும் ஈனப்புலம்பலாய்' நமக்குள் பயணித்துக் கொண்டே இருக்கிறது.


"செவ்வாய்க்கு மறுநாள் ஆனால் புதன்கிழமை அல்ல" என்ற தலைப்பே என்னை பெரும் வியப்பில் ஆழ்த்தியது. முதன்முதலில் தலைப்பை படித்ததும், இதன்மூலம் என்ன சொல்ல வருகிறார் கவிஞர் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். கிழமைகளுக்கு நாம் அந்த பெயர் வைத்துவிட்டோம் என்பதனாலேயே அதை அந்தப் பெயரைக் கொண்டுதான் அழைக்கத் தேவையில்லை  என்று சொல்ல  வருகிறாரா? அல்லது செவ்'வாய்' என்பதைக் குறிக்கிறாரா என்று குமைந்து கொண்டிருந்தேன். கவிதையை படித்ததும் வேறு விதமாக புரிந்து கொண்டேன். மனிதனின் மரணத்துக்குப் பிறகு அவன் சூட்டிய கிழமைகளின் பெயர் என்னவாக இருக்கும் என்று நம்மை சிந்திக்க வைக்கிறார் கவிஞர் என்று தோன்றியது. இது சரியான புரிதலா என்றுகூட தெரியவில்லை. சுகுமாரனின் மொழி என்னை ஏளனமாகப் பார்க்கிறது. உன் அறிவுக்கெல்லாம் என் பொருள் எட்டிவிடும் என்று நீ நினைக்கும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டதா என்று புலம்புவது என் காதில் விழுகிறது.


தாமஸ் டிரான்ஸ்டோமரின் கவிதையை மேற்கோளாக காட்டி தன்னை விளக்க முற்படுகிறார் கவிஞர் சுகுமாரன். ஆனால் சுகுமாரனின் கவிதைகள் அவரை ஒதுக்கவோ வெளியே தள்ளவோ முயலவில்லை. அது அவருக்குள்ளேயே விதைந்து, முளைத்து, நெறித்து, தெறித்து விழுகிறது. வெளியே 'நிகழ்கால' கவிதையாய் விழாமல் உள்ளேயே 'வருங்கால' கவிதைக்கான விதையாய் விழுந்தது தான் அதிகம் என்று தோன்றுகிறது. 'கவிஞர் இசைக்கு' என்ற குறிப்புடன் அவர் எழுதியிருக்கும் கவிதையில், மகாகவி இசை நடைபெயர்ச்சி செய்கிறார், அவரோடு காற்றும் ஒளியும், புல்லும் புழுவும், புள்ளும் நாயும் பூனையும், மனிதர்களும் நடைப்பயிற்சி செல்கின்றன. அவ்வப்போது பிசாசும் கடவுளும் மகாகவி இசையுடன் நடைப்பயிற்சி செல்வதாக எழுதுகிறார். 

"......
வீடு திரும்பும்போது
கூட வந்தது பிசாசென்றால்
மகாகவி கவிதை எழுதுகிறார்
தெய்வமென்றால்
இசை சண்டை போடுகிறார்."

என்று முடிக்கிறார். நான் இதை இப்படியும் புரிந்து கொள்கிறேன். புனைவு என்பது பிசாசின் செயல், நேரடியான விவாதம் (சண்டை) என்பது கடவுளின் செயல். ஒரு கேள்வியும் எழுகிறது. பிசாசும் கடவுளும் அல்லாமல் பூனையுடனோ நாயுடனோ திரும்பி வந்தால், மகாகவி இசை என்ன செய்திருப்பார்? கவிஞர் சுகுமாரனுக்கே வெளிச்சம்! 


"ஹைக்கூ"வின் அழகியலை ஆச்சரியத்தை சுகுமாரன் தான் கட்டமைக்கும் அனைத்து வடிவமைப்புக்குள்ளும் கச்சிதமாக பொருத்துகிறார். அவருடைய கவிதைகள் முடிவதேயில்லை. ஒன்று அது எல்லையற்ற வெளிக்குள் நம்மை உலவவிடும் அல்லது மீண்டும் தொடக்கத்துக்கே அழைத்துவந்து அந்தாதி விளையாட்டு ஆடும். கவிதைகளின் இறுதி வரிகள் இத்தகைய அனுபவத்தைத் தான் தரும்.  'ஒரு சொல் இருந்தால்' என்ற கவிதையை
".....
ஆனால் 
அந்த சொல் இருக்கிறதே
கரைக்குக் கடல் தூரத்தில்..."

என்று முடித்திருக்கிறார். அந்தக் கரைக்கும் கடலுக்குமான தூரத்தில் நான் நெடுநேரம் தத்தளித்துக் கொண்டிருந்தேன். அதேபோல் "ஆழல்" என்ற கவிதையை ' அடையாக் கண்களுடன் ஆழலாம்' என்று முடித்திருப்பார். மொழி இவரது செல்லக் குழந்தையாகி, மிக அழகாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. 'ஆழல்' என்ற சொல்லுக்காகவே சுகுமாரனைக் கொண்டாடலாம். 


படைப்பு தன்னை சாதாரணமாய் வெளிப்படுத்த முனைந்தாலும், சுகுமாரனின் அசாதாரணம் விட்டுவிடவில்லை. "எனினும்" கவிதை எளிமையாக சாதாரணமாக தொடங்குகிற போதே, இப்படி தான் முடியும் என்பதும் ஊகிக்க முடிகிறது. ஆனால் இறுதிவரிக்கு முந்தைய வரியில் வெளிப்படுகிறது சுகுமாரனின் அசாதாரணம். முன்னுரையின் இடையிலும், பின்னட்டைக் குறிப்பின் கடையிலும் வரும் வரிகளோடு, "எனினும்" கவிதையின் இறுதிப்பகுதியை ஒப்பிட்டுப் பார்த்த நொடியில் சுகுமாரனின் அசாதாரண ஒளி பளிச்சிட்டது.


கவிஞரின் மீமெய்மையில் நம்முடைய பல கோட்பாடுகள், புரிதல்கள் எல்லாம் கட்டுடைகின்றன. எல்லா காலத்துக்குமான உண்மை என்ற ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. "வேதாந்திகளின் கைக்குச் சிக்காத கடவுள் போல" உண்மை நம் அறிவுக்கு சிக்காமல் காலத்துக்கேற்ற வடிவத்தை மாற்றிக் கொண்டு அலைகிறது. இதை புரியாதவர்கள் தேங்கிவிடுகிறார்கள், புரிந்தவர்கள் தொடர்ந்து பயணிக்கிறார்கள். "கடக்க முடியாமல் உறைந்தது நான்காம் காலம்", "நாளையை மறந்துவிட்ட நேற்றைய நேற்று", "செவிக்குத்தலின் அரை வெண்மை", "குடலிறக்கத்தின் வெளிர் மஞ்சள்", "திரைக்கடலாகும் குமிழ்", "பாயுமொளியாகும் வான்சுடர்" என பல்வேறு உண்மைகளைத் தேடி தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் சுகுமாரன்.


எல்லா கவிதைகளையும் பற்றிச் சொல்வது நியாயமல்ல. ஒவ்வொருவருக்குமான உண்மைகளை, என் ஒருவனால் கண்டடைய முடியாது. அவரவர் உண்மைகள் அவரவருக்குத் தான் புலப்படும். கவிதை என்பது நேரடி உரையாடல் அல்ல, மனதுக்குப் பிடித்த எதிர்பாலினத்தவரை மறைமுகமாக ரசிக்கும் கலையே கவிதை (என்பது என் கருத்து).

".........
முந்தானைக் குடைநிழலும் தணிக்காத
வெயிலில் துவண்ட இடுப்புச் சிசு..." வை நான் ரசித்தது போன்று வேறு யாரும் மறைமுகமாக ரசித்தார்களா என்பது  எனக்குத் தெரியாது, மேலும் 'ஜகன்மோகினி' என்ற கவிதை காதலும் காமமுமாக வெளிப்படுவதும் எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை! இத்தனைக்கும் அது ராகத்தைப் பற்றிய கவிதை என்ற குறிப்பும் தந்திருக்கிறார் கவிஞர். இப்படி ஒவ்வொருவரும் கவிஞர் சுகுமாரனின் படைப்புலகுக்குள் மூழ்கி திளைக்கும் தருணங்கள் பல உண்டு.


காதல், தத்துவம், தனிமை, பொறுப்பு, தன்னிலை என உணர்வுகளுக்குள் நீந்தவிடும் கவிஞருக்கு என் சொற்களும் என் மொழியும் தக்க மரியாதையைச் செய்துவிடுமா என்றுத் தெரியவில்லை. என்னைவிட சிறந்த மொழியில் பாராட்டுகளும் மதிப்புரைகளும் விமர்சனங்களும் நிறைய அவர் நினைவுப் பைக்குள் நிறைந்திருக்கும், ஆனால் என் மொழியில் இதுவரை வந்திருக்காது என்பது உறுதி! (சமாதானம் செய்து கொள்கிறேன்)


"வாழ்க நீ" என்று கவிஞர், காந்தியைக் கொண்டாடும் போது மெலிதாக எழும் எதிர்நிலைக் குரல், "மரியாளின் சுவிசேஷ'த்தில் சற்று ஆறுதல் அடைகிறது (சபரிமலை சர்ச்சையையும் தொடர்புப்படுத்திக் கொண்டேன்). அவருடைய வரிகளை சற்று மாற்றி இந்த உரையை(!) நிறைவு செய்யலாம் என்று நினைக்கிறேன்,

"சுகுமாரன் 
ஒன்றும் செய்வதில்லை
சரி
சுகுமாரனையும்
ஒன்றும் செய்வதற்கில்லை!"


சிவராஜ் பாரதி  

                                                                      சிவராஜ் பாரதி








புதன், 9 ஜனவரி, 2019

ஒ ரு மு ன் னு ரை




நண்பர் ரவிகுமார் மலையாளத்தில் எழுதியுள்ள  எம்.டி.ராமநாதன் என்ற நீள் கவிதையின் தமிழாக்கம் நூல்வடிவில் வெளியாகிறது. மொழியாக்கம் மா. தக்ஷிணாமூர்த்தி. கேரளத்தின் புகழ்பெற்ற ஓவியரான நம்பூதிரியின் கோட்டோவியங்களும் நவீன ஓவியரான ஷிபு நடேசனின் தைல்வண்ண ஓவியமும் கவிதைத் தருணங்களை மேலும் துலங்கச் செய்பவை. முகப்பு வடிவமைப்பு பி. ஆர். ராஜன்.

நூலுக்கு எழுதிய முன்னுரையை இங்கே பகிர்கிறேன்.







                         சங்கீதம் ராமநாதம்

ர்நாடக இசையுலகில்  தான்தோன்றிக் கலைஞர்கள் சிலர் உண்டு. அவர்களில் ஒருவர் எம்.டி.ராமநாதன். தோற்றத்திலும் பழக்கவழக்கங்களில் வைதீகச்சாயல் கொண்டிருந்தவர். ஆனால் அவரது இசை எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காதது. தனித்த வழியில் உருவானது. அவரது குரல் செவிக்கினியது அல்ல. அவரது பாடல்முறை ஜனரஞ்சகமானது அல்ல. சங்கீதத்தால் வாழ்ந்தவர் அல்லர். சங்கீதத்துக்காக வாழ்ந்தவர். இந்த இயல்புகள்தாம் அவரைப் பாடகர்கள், கலைஞர்கள் நிறைந்த இசையுலகில் மேதையாக உயர்த்தியது.


வாழ்ந்த காலத்தில் ராமநாதன் போற்றப்பட்டதைக் காட்டிலும் விமர்சிக்கப் பட்டதே அதிகம். சங்கீதத்தால் வாழ்ந்தவராக மட்டுமேயிருந்தால் ஒருவேளை அவர் இந்த விமர்சனங்களுக்குச்  செவிசாய்த்திருக்கக் கூடும். சங்கீதத்துக்காக வாழ்ந்தவர்.எனவே விமர்சனங்களை, சரியாகச் சொன்னால் ஏளனங்களை, அவர் ஒருபோதும் பொருட்படுத்தவில்லை. தன்னுடைய கலை என்று நம்பிய ஒன்றை அடைவதற்கான நீண்ட பயணத்திலேயே அவரது சிந்தனையும் செயலும் ஆழ்ந்திருந்தன. பழைமைப் பிசுக்கேறிய சொற்கள் என்று தவிர்க்காமல் சொல்வதானால், அவரது வாழ்க்கை நாத யோகம். அவர் நாத யோகி.


பெரும் இடர்ப்பாடுகளைக் கடந்தே இந்த யோக வாழ்க்கையை ராமநாதன் அடைந்தார். அவரது அசுரக் குரல் இசைக்குப் பொருத்தமில்லாதது என்று இகழப் பட்டது. ' எதுக்குதேவேசா குழந்தையைப் போட்டுக் கஷ்டப் படுத்துறே?  ராமநாதனுக்குச் சாரீரமே வராது' என்று இந்த நீள்கவிதையில் ஓர் இடத்தில் வரும் வரிகள் ராமநாதன் இளமைக் காலத்தில் கேட்டவை. அவை அவரது இறுதிக் காலம்வரையும் பின் தொடர்ந்தன. அவரது முதல் கச்சேரியே 'பாதாளக் குரல்' காரணமாகத் தோல்வி அடைந்தது. 'எந்தக் குரலை இவர்கள் சங்கீத த்துக்கு ஒவ்வாதது என்று சொல்கிறார்களோ அதே குரலின் சங்கீதத்தை ரசிக்கும் காலம் வரும்' என்று தீவிரம் கொண்டதுதான் அவரது சங்கீத வாழ்க்கை. வெறும் மினுமினுப்பான  குரல் அல்ல இசை; அதற்கும் அப்பாற்பட்ட ஒன்றை வெளிக்கொணர்வது என்ற கலையின் மர்மத்தை அவரது இசை நிறுவியது. ராமநாதன் வெறும் பாடகராகவோ கலைஞராகவோ நிலைத்து விடாமல் நாத மேதையாக இன்று கருதப்படுகிறார். இசைத் தீவிரவாதிகளான ஒரு சாராரால் வழிபாட்டுக்குரிய பிம்பமாக (Cult figure ) போற்றப்படுகிறார். இந்தப் போற்றுதலில் ஓரளவுக்கு தன்னை உயர்ந்த ரசிகனாகக் காட்டிக்கொள்ளும் பாவனைக்கு இடமிருக்கிறது.எனினும் ராமநாதனின் மெய்யான ரசிகர்களுக்கு அவர் நிகரற்ற கலைஞர்.  தனித்துவம் மிக்க மேதை. ஒருவகையில் இந்த ரசிகர்களின் ஒருங்குணர்வுதான் இன்று எம்.டி. ராமநாதன் தொடர்ந்து நினைக்கப்படவும் அவரது இசை முன் எப்போதையும் விட இன்று  பரவலாகக் கேட்கப்படவும் சில கலைஞர்களால் பின்தொடரப்படவும் காரணங்கள் எனலாம். ராமநாதனின் இசை ஜனரஞ்சகமானது அல்ல; அவரும்  பெரும் புகழ் தேடியவரல்லர்; விருதுகளை வாங்கிக் குவித்தவரும் அல்லர். எனினும், ஆழங்களைத் தேடும் இசை ரசிகனுக்கு தான் பெற்ற அனுபவத்தை அளிக்கும் என்று அவர் விடாப் பிடியாகக் கொண்டிருந்த நன்னம்பிக்கைதான் அவரது வழிபாட்டுத் தகுதிக்கும் பரவலான ரசிக எண்ணிக்கைக்கும் ஆதாரம். இப்படிச் சொல்லலாம்; ராமநாதனின் இசை காலத்துடன் ஒட்ட ஒழுகியதல்ல; அதை முந்திச் சென்ற ஒன்று. துரதிர்ஷ்டவசமாக அவரது காலத்தில் அது இனங்காணப்படவில்லை.


எம். டி.ராமநாதனின் இசைக்குத் தமிழகத்தில் கிடைத்திருப்பதைவிட அதிக வரவேற்பு கேரளத்தில்தான். கேரளத்தில் பிறந்தவர் என்பதனால் இந்த வரவேற்போ என்று சந்தேகப் பட்டதுண்டு. ஆனால் கேரளக் கலைஞர் களால் அரிதாகவே பாராட்டப் பட்டிருக்கிறார். சில கச்சேரிகளில் அவருக்கு மிருதங்கம் வாசித்தவரான பாலக்காடு  மணி அய்யர் அவரது பாடும்முறையை  கடுமையாக விமர்சித்திருப்பதை இசை விமர்சகர் இந்திரா மேனோன் மேற்கோள் காட்டுகிறார் ( எப்படிப் பாடினாரோ?  பக்கம் 215 ).  இசையில் தோய்ந்தவர்களின் கருத்து இதுவென்றால் இசையைப் பிய்த்து அலசும் விமர்சகர்களின் எண்ணம் என்னவாக இருக்கும் என்பது எளிதில் ஊகிக்கக் கூடியதுதானேஒருவேளை முன் தலைமுறையின் உதாசீனத்தை உணர்ந்து கொண்ட கேரளத்தின் புதிய ரசிகத் தலைமுறை அவரைக் கொண்டாடுகிறதோ என்னவோ? இன்று பழைய நாட்களைச் சேர்ந்த வேறு எந்த இசைக் கலைஞரும் நினைவுகூரப்படுவதை விட அதிகமாக ராமநாதன் நினைவு கூரப்படுகிறார். அன்றைய நட்சத்திரக் கலைஞர்களுக்கு இருப்பதை விட இந்த துருவ நட்சத்திரத்துக்கு இன்று ஒளி அதிகம்.


இலக்கியச் சூழலில் பரவலாகப் பேசப்பட்ட கலைஞர் ராமநாதன் என்பதை வியப்புடன் உணர முடிகிறது. இசை ரசிகனாகவும் இலக்கிய வாசகனாகவும் என்னை மகிழ்வித்த  செயல் இது. 'ராமநாதன் பாடுகிறார்' என்ற சச்சிதானந்தனின் கவிதை, 'கேதாரம்' என்ற கிருஷ்ணமூர்த்தியின் நாவல், எம்.டி. ஆர். என்ற டாக்டர். மது வாசுதேவனின் தொகுப்புஅதன் ஆங்கில வடிவம். இவையெல்லாம் அவரை இலக்கியத்தில் நிறுவியிருப்பவை. அவற்றின் நீட்சியாகவும் அவற்றைக் கடந்த ஒன்றாகவும் உருவானதுதான் பி. ரவிகுமாரின் 'எம்.டி.ராமநாதன் ' நீள் கவிதை. நான் அறிந்த அளவில் ஓர் இசைக் கலைஞரை மையமாக்கி எழுதப்பட்ட கவிதை இதுவாகவே இருக்கலாம். அசோக் வாஜ்பாயின் நீண்ட கவிதை ஒன்றின் பகுதியில் ஹிந்து ஸ்தானி இசைக்கலைஞர் குமார் கந்தர்வாவைப் பற்றிய பகுதி உள்ளது என்பதும் நினைவுக்கு வருகிறது. சௌதாமினி இயக்கிய பித்ருசாயா - முன்னொடிகளின் நிழல்கள்' என்ற ஆவணப்படமும் நினைவில் புரள்கிறது. இந்த அளவுக்குப் பிற துறைகளை ஈர்த்த இன்னொரு இசைக் கலைஞர் ஏறத்தாழ இல்லை என்றே தோன்றுகிறது. இன்னொரு வியப்பையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். எம்.டி.ராமநாதனின்  தீவிர ரசிகர்களில் பலரும் இடதுசாரிச் சிந்தனையைப் பின்பற்றுபவர்கள். அவர்களை ஈர்ப்பது அந்த இசையின் எந்தக் கூறுஒருவேளை இசை சென்று முடியுமிடத்தில் எஞ்சுவது மானுட இணக்கம் என்ற தெய்வீக குணமாக இருக்குமோ?


ரவிகுமார் பத்திரிகையாளர். கவிஞர். நுட்பமான வாசகர். இவையெல்லா வற்றையும் விட முதன்மையானது தேர்ந்த இசை ரசிகர். அதை விட முதன்மையானது எம்.டி. ராமநாதனின் தீவிர ரசிகர். ரவிகுமாரின் இந்த ராமநாதப் பற்றுத்தான் என்னை அவருக்கு நெருக்கமாக்கியது. எம். டி. ராமநாதனைப் பற்றி  நான் எழுதிய கட்டுரை ஒன்றுதான் ரவிகுமார் என்னைப் பொருட்படுத்தக் காரணம். அதுதான் தோழமை யாகவும் இந்த நூலுக்கு முன்னுரை எழுதுவதற்கான தகுதியாகவும் மாறியிருக்கிறது. ராமநாதனின் இசை ரசிகனாக இல்லாமலிருந்தால் இந்த நட்பு ஏற்பட்டிருக்காது என்று உறுதியாகவே நம்புகிறேன். கூடவே எங்களை இணைத்தவர் எம்.டி. ஆர் என்றும் பெருமைகொள்ள விரும்புகிறேன்.


எம்.டி.ராமநாதன் வாழ்க்கைச் சம்பவங்களை மையப் பொருளாகக் கொண்ட இந்த நீள் கவிதை 'கலாகௌமுதி' வார இதழில் தொடராக வெளிவந்தது. கவிதையொன்று தொடராக வார இதழில் வெளிவருவதும் அதை வாசகர்கள் வரவேற்பதும் தமிழ் வாசகனாக எனக்கு அரியதாக மட்டுமல்ல; அதிர்ச்சியளிக்கும் நிகழ்வாகவே தென்பட்டது. பின்னர் அதுவே நூல் வடிவில் வெளியானது அதிர்ச்சியின் அளவைக் கூட்டியது. நிலநடுக்கம் போன்ற அபூர்வ நிகழ்வு என்று ஒதுக்கி விடமுடியாமல் அடுத்தடுத்து வந்த இந்தி , ஆங்கில மொழிபெயர்ப்புகள் திகைப்பை ஏற்படுத்தின. திகைப்பிலிருந்து மீள நான் கண்ட வழி இதன் தமிழாக்கத்தை மேற்கொள்வது என்பதுதான். ஆனால் என்னை விட அதிர்ஷ்டசாலியான மா. தக்ஷிணாமூர்த்தி ஒரே இருப்பில் தமிழாக்கத்தைச் செய்து முடித்தார். அவரே ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்தார்.  'எழுத்து' இதழில் வெளியான கவிதைகள் மூலம் அறிமுகமானவர் மா. தக்ஷிணாமூர்த்தி. அவரது வெளிவந்த ஒரே தொகுப்பான 'திவ்ய தர்சனம்' தமிழின் முதல் அகத்திணைக் கவிதைகள் என்றும் எண்ணுகிறேன். இந்த மொழியாக்கம் மீண்டும் அவர் தமிழ்க் கவிதைக்குள் பேசப்படுவதற்கான வாய்ப்பு.  


மலையாளத்தில் எழுதப்பட்ட கவிதை. இதற்கு உள்ளேயும் வெளியேயும் புலப்படும் தமிழ்த் தொடர்புகள் குறிப்பிடத் தகுந்தவை. ராமநாதன் வாழ்க்கையின் பெரும்பகுதி சென்னையிலும் தமிழ்ச் சூழலிலும் கழிந்தவை. அவரது வீட்டு மொழி தமிழ். வடமொழியிலும் தெலுங்கிலும் கீர்த்தனைகளையும் சங்கீத உருப்படிகளையும் எழுதியிருக்கிறார். எனினும் அவற்றின் உள்ளோட்டத்தில் தமிழ்ப் பாடல்களின் மரபையும் இலக்கணத்தையும் காணமுடியும். 'ஹரியும் ஹரனும் ஒன்றே என்று அறியாதாரும் உளரோ?' என்ற அடாணா ராக சொந்த சாகித்தியத்தில் தமிழ்ப் பாடல்களின் தொடர்ச்சியையும் ' வருகலாமோ அய்யா' என்ற மாஞ்சி ராக நந்தன் சரித்திரக் கீர்த்தனையைப் பாடும் விதத்தில் தமிழின் நெகிழ்வையும் எளிதில் உணரலாம்.


ரவிகுமார் நவீன தமிழ்ப் படைப்பாளிகளை வாசித்து அறிந்திருப்பவர்.  அதற்கு முகாந்திரமாக இருந்தது சக திருவனந்தபுரவாசியான நகுலனின் தொடர்பு என்பது என் அனுமானம். இந்த நீள் கவிதையிலும் நகுலனின் சாயலைக் காண முடியும். தமிழில் எதிர்க் கவிதையை முன்னெடுத்தவர் நகுலன் என்பது என் எண்ணம். கவிதைக்கான சொற்களோ , கவிதையைத் துலக்கிக் காட்டும் அணிகளோ இல்லாமல் எளிய உரைநடையில் கவிதையின் சாத்தியத்தைக் கொண்டுவர முயன்றவர் அவர். 'மழை மரம் காற்று ' என்ற நகுலனின் நீண்ட கவிதையை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். ரவிகுமாரின் கவிதையில் அதன் லேசான பாதிப்பைக் காணமுடிகிறது. இதில் எந்தச் சொல்லும் கவித்துவத்தில் ஊறவைத்து எடுத்தவையல்ல.மறைபொருள் கொண்டவையல்ல. இயல்பான உரையாடலில் புழங்குபவைதாம் கவிதையைக் கட்டமைக்கின்றன. சொற்களைக் கடந்த ஒன்றைக் கவிதைக்குள் தொனிக்கச் செய்கின்றன. ஒருவகையில் ராமநாதனின் இசையைப் போன்றதுதான் இந்தக் கவிதையின் உயிர்க்கூறும். வெறும் ஸ்வர நிரவல்கள் அல்ல; அவற்றின் உள் ஓசைதாம் சங்கீதம் என்பதுபோல. சொற்களின் சேர்க்கையல்ல; அவற்றின் பொருள்முயக்கம்தான் இங்கே கவிதையாகிறது.


இந்த நூலின் மொழியாக்கப் பிரதி ஏறத்தாழப் பத்து ஆண்டுகளாக என் கைசமே இருந்தது. மொழிபெயர்ப்பு முடிந்த கையோடு நூலாக வெளியிட முயற்சித்தேன்.எனினும் வெவ்வேறு காரணங்களால் காரியம் கைகூட வில்லை. இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்து வாசிக்கப்பட்ட பிரதியை தமிழ் வாசகர்கள் முன் வைக்காமலிருப்பது முறையல்ல என்ற ஆதங்கத்தை காலச்சுவடு இப்போது தீர்த்து வைத்திருக்கிறது. அதற்காகக் கண்ணனுக்கு மனமார்ந்த நன்றிகள். கேரளத்தின் புகழ் பெற்ற ஓவியரான நம்பூதிரியின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. முகப்பை பி.ஆர். ராஜன் வடிவமைத்துள்ளார். இரு ஓவியர்களுக்கும் நூலுருவாக்கத்தில் உதவிய கலா முருகன், ஹெமிலா இருவருக்கும் மனமார்ந்த நன்றி.


திருவனந்தபுரம்                                                        சுகுமாரன்
25 டிசம்பர் 2018

ஓவியம் : நம்பூதிரி




                            ஓவியம்: ஷிபு நடேசன்







செவ்வாய், 1 ஜனவரி, 2019

மூன்று நூல்கள்

ஆங்கிலம் வழி ஒன்றும் மலையாளத்திலிருந்து ஒன்றுமாக இரண்டு மொழிபெயர்ப்புகள். ஒரு கவிதைத் தொகுப்பு. ஆக மூன்று நூல்களுடன்  புதிய ஆண்டு தொடங்குகிறது. 


பாதுஷா என்ற கால்நடையாளன் ( மலையாளச் சிறுகதைகள் )
உண்ணி ஆர்.







ண்ணி ஆர் இன் சிறுகதைத் தொகுப்பு' பாதுஷா என்ற கால்நடையாளன் 'ஒரு மறுபதிப்பு. உண்ணியின் 12 கதைகள் கொண்ட தொகுப்பு 'காளி நாடகம்' 2007 இல் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்தது. தமிழ் வாசகர்களால் அதிகம் கவனிக்கப்பட்ட தொகுப்பு என்று அறிய முடிந்தது, எனினும் அதற்கு ஒரு மறுபதிப்பைக் கொண்டுவர இயலவில்லை.  காளி நாடகம் வெளிவந்த பின்னர் உண்ணியின் முக்கியமான சில கதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறேன். அவற்றையும் உள்ளடக்கியது 'பாதுஷா என்ற கால்நடையாளன் ' என்ற இப்போதைய தொகுப்பு. சிறுகதைகளாக வெளிவந்து மலையாள வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற கதையான லீலையும் பாங்கு என்ற கதையும் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. 'லீலை' திரைப் படமாக வெளிவந்தது. 'பாங்கு' வரவிருக்கிறது.

இந்தப் புத்தகம் தொடர்பாகப் பகிர்ந்து கொள்ள  இரண்டு மகிழ்ச்சிகள்  இருக்கின்றன. காளி நாடகத்துக்கு நான் எழுதிய முன்னுரைதான் உண்ணியின்  சிறுகதைகள் பெருந்திரட்டில் ஆய்வுக் கட்டுரையாக வெளியானது. அதன் பகுதிகள்தாம்  பின்னட்டைக் குறிப்பாகவும் கொடுக்கப்பட்டன. தமிழில் எழுதப்பட்ட முன்னுரை ஒரு மலையாளப் புத்தகத்தின் மதிப்பீடாக மாறுவது அபூர்வம். இது முதல் மகிழ்ச்சி. இரண்டாவது மகிழ்ச்சிக்குக் காரணகர்த்தர் புத்தகத்தின் முகப்பை வடிவமைத்த ஜெய்னுல் ஆபித். இன்று மலையாளப் பதிப்புலகில் அதிகம் பாராட்டுப் பெறும் வடிவமைப்பாளர் அவர். கிடைத்தற்கரியவர். ஆபித் வடிவமைக்கும் முதல் தமிழ்ப் புத்தகம் இதுதான்.


ஷா இன் ஷா ( வரலாறு )
ரிஸார்த் காபுஸின்ஸ்கி




காலச்சுவடு நவீன கிளாசிக் வரலாற்று வரிசையில் வெளியாகும் நூல் 'ஷா இன் ஷா'. போலந்தைச் சேர்ந்த கவிஞரும் பத்திரிகையாளருமான ரிஸார்த் காபுஸின்ஸ்கியின்  ஆக்கம். 1936 - 81 வரையான ஆண்டுகளில் உலகில் நடைபெற்ற ஆட்சி மாற்றங்கள், உள் நாட்டுக் கலவரங்கள், புரட்சிகள் எல்லாவற்றிலும் நேரடிச் சாட்சியாகப் பங்கேற்றவர். களத்தில் பெற்ற அனுபவங்களை முன்வைத்து நூல்கள் எழுதியர். அவற்றை வெறும் இதழாளனின் குறிப்புகளாக இல்லாமல் வரலாறு, பண்பாடு ஆகியவற்றின் பின்புலத்தில் இலக்கிய இயல்புடன் எழுதியவர். 1979 - 80 கால அளவில் இரானில் நடைபெற்ற ஷா முஹம்மது ரெஸா பஹ்லவியின் அதிகார வீழ்ச்சியையும் அயதுல்லா கொமெய்னியின் தலைமையிலான இஸ்லாமியப் புரட்சியையும் நேரில் கண்டு எழுதிய நூல் 'ஷா இன் ஷா'.


கவிதைகள், கதைகள்., கட்டுரைகள், நாவல்கள் என்று ஆங்கிலம் வாயிலாகச் சில படைப்பு களை முன்னரே மொழிபெயர்த்திருக்கிறேன். அவை எவற்றிலும் உணராத சிக்கலை இந்த மொழிபெயர்ப்பு ஏற்படுத்தியது. அதற்கு காபுஸின்ஸ்கியின் எழுத்தின் இயல்பே காரணம். இந்நூலில் கையாண்டிருக்கும் நடை (பொதுவாகவே அவரது எல்லா நூல்களிலும் கையாளப்படும் நடையும்) மாறுபட்டது. கவிதையின் பூடகத்தையும் செறிவையும் கொண்டது. ஒன்றைச் சொல்லும்போதே  தொடர்புடைய வேறொன்றைச் சுட்டுவது. இது இதழியலாளனின் நடையோ வரலாற்றாளனின் நடையோ அல்ல. புனைவு எழுத்தின் நடை. பருண்மையான தகவல்களையும் அரூபமான ஒன்றாகவே  காபுஸின்ஸ்கி முன்வைக்கிறார். ஒருவகையில் மாய எதார்த்தவாதமானது அவரது எழுத்துமுறை. இதைத் தமிழாக்குவது பெரும்பாடாக இருந்தது.


போலிஷ் மொழி மூலத்திலிருந்து வில்லியம் ஆர். பிராண்ட், கதார்ஸினா ம்ரோஸ்கோவ்ஸ்கா ஆகியோர் ஆங்கிலத்தில் மேற்கொண்ட ஆக்கமே இந்தத் தமிழ் வடிவத்தின் மூலம். வாசிப்பில் பரவசத்தையும் புதிய உலகைக் கண்டடைந்த பெருமிததையும் அளித்த நூல் இது. ஆனால் தமிழாக்கத்துக்குப் பிடிவாதமாக இணங்க மறுத்த்து. மொழியாக்கத்துக்கு என்று தனிப்பட்ட முறையில் நான் வகுத்துக் கொண்டிருந்த விதிகளை மீறவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களை அடியொற்றிய தமிழாக்கமாக இந்த நூலைக் குறிப்பிட விரும்பவில்லை. தமிழ் வாசகருக்கு புரிந்துகொள்ள இசைவானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சுதந்திரமாக அத்து மீறப்பட்டிருக்கிறது. போலிஷ் சோஷலிஸ்டான ரிஸாத் காபுஸின்ஸ்கியின் ஆன்மா இந்த அத்துமீறலை மன்னிக்கும் என்பது என் மூடநம்பிக்கை.


செவ்வாய்க்கு மறுநாள், ஆனால் புதன்கிழமை அல்ல ( கவிதைகள் )
சுகுமாரன்








ன்னுடைய ஏழாவது கவிதைத் தொகுப்பு .'நீருக்குக் கதவுகள் இல்லை' ( 2011 )  தொகுப்புக்குப் பிறகு எழுதிய கவிதைகள் இவை.


இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் கவிதைகளைத் தொகுத்துக் கொண்டிருந்த போது இத்தனை காலமும் எழாத பல கேள்விகள் எனக்குள்ளேயே எழுந்தன. கவிதை எப்போதும் நிகழ்காலத்தைச் சார்ந்தது. அப்படியிருக்கும்போதே காலத்தை மீறிய ஒன்று அதில் இல்லையா? கவிதையின் பேசுபொருள் அன்றாட நடவடிக்கையின் சித்தரிப்பா, இல்லை, அதைப் பற்றிய விசாரணையா? கவிதை மொழியின் துணைப்பண்டமா, உற்பத்தியின் மூலமா? கவிதையின் மொழி வெளிப்படையானதா, தொனிவேற்றுமை கொண்டதா? கவிதைக்குள் இயங்கும் பார்வை மோஸ்தருக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டுமா? அதைப் புறக்கணிக்கும் ஒன்றாகவிதை செய்திக்கான வாகனமா, தனியான இருப்பா? கவிதை கைப்பழக்கமா, மனக் கனிவாகவிதை என்னவாக இருக்க வேண்டும், கவிதையைப் போலவா அல்லது கவிதையாகவாகவிதை எழுத்துத் தொடங்கிய காலம்முதல் இடைவிடாமல் உறுத்திவந்த கேள்விகள் தாம் இவை. எல்லாக் காலத்திலும் அவற்றுக்கான பதில்களைத் தேடிக் கண்டடைந்திருக்கிறேன். எனினும் இந்தத் தொகுப்பின் தருணத்தில் அவை உரத்த குரலில் முழங்கின.ஒருவேளை கவிதைகள் பல்கிப் பெருகி மலிந்திருக்கும் சூழலில் என்னுடைய கவியிருப்புக் குறித்த பதற்றத்திலிருந்து அவை எழுந்திருக்கலாம். வழக்கம்போலவே அவற்றுக்கான பதில்களைக் கண்டுபிடித்துமிருக் கிறேன். எங்கே எப்படி என்ற பெரும் கேள்விகளுக்கு இங்கே இந்தக் கவிதைகளில்தான் என்பதே பதில்.
                                   ---   *   ---


திங்கள், 31 டிசம்பர், 2018

காலா பூத்



காலா பூத். நினைவில் நெடுங்காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெயர். ஆனால் அது என்னவென்பது சுத்தமாக மறந்து போயிருந்தது. ஆளின் பெயரா, இடத்தின் பெயரா, பொருளின் பெயரா என்று குழப்பமாக இருந்தது. எங்கிருந்து, எப்படி, எவர் மூலம் இந்தப் பெயர் உள்ளே புகுந்தது என்பதும் வசப்படாமல் இருந்தது. இந்தி தெரிந்த நண்பர்களிடம் பெயரைச் சொல்லி விசாரித்தேன். அவர்களும் பெயருக்கு அர்த்தம் சொன்னார்களே தவிர அது இன்னதென்று விளக்கவில்லை.


அஜ்மீர் தர்கா தெருவிலிருக்கும் அத்தர் கடைக்குள்ளே நின்றிருந்தபோது எவர் துணையும் இன்றி பெயரின் மூலம் விளங்கியது.சிறிதும் பெரிதும் பல வண்ணங்கள் கொண்டவை யுமான  ஆயிரக்கணக்கான கண்ணாடிக் குப்பிகள் அடுக்கியிருந்த அலமாரிகளின் இடையில் பொருத்தியிருந்த  பெரிய அளவு ஓவியம் அதை விளக்கியது. அதில் மகுடம் போன்ற வடிவிலான கண்ணாடிக் குப்பியை முகர்ந்து பார்க்கும் பெண்ணின் உருவம் தீட்டப் பட்டிருந்தது. முகமும் கண்களும் மெல்லிய திரைக்குப் பின்னால் தெரியும்படி முகலாயர் பாணியில் தீட்டப்பட்ட ஓவியம்.அதன் வலதுபக்கக் கீழ் ஓரத்தில் ஒரு பளிங்குக் குப்பியின் படம். அடியில் இந்தியிலும் உர்தூவிலும் ஆங்கிலத்திலுமாக 'காலா பூத்' என்று எழுதப் பட்டிருந்தது.


என்ன வேண்டும்?’ என்று கேட்ட கடைப்பணியாளரிடம் ஓவியத்தைச் சுட்டிக் காட்டினேன். சிறுகுப்பியை எடுத்துத் திறந்து புறங்கையை நீட்டச் சொன்னார். நீட்டிய இடது கையில் ஒரு அடர்பழுப்புத் திவலையை வீழ்த்தினார். முகர்ந்துபார்க்கச் சொன்னார். கையை நாசியருகில் உயர்த்தி முகர்ந்தேன். நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு நுகர்ந்த  அந்த வசிய சுகந்தம்  திரும்ப உள்ளே நிறைந்தது.


பீர் என் பள்ளி நண்பன். ஆறாம் வகுப்பு முதல் இருவரும் ஒரே வகுப்பில்  படித்தோம். ஆனால் அப்போதெல்லாம் அவன் என் சக மாணவன் மட்டுமே. ஒன்பதாம் வகுப்பில் முதல் இடைப்பருவத் தேர்வுக்குப் பின்புதான் நண்பர்கள் ஆனோம். அவனுக்குத் திணறலைக் கொடுத்த தமிழ்ப் பாடமும் என்னை எப்போதும் தோற்கடிக்கும் கணக்குப் பாடமும் எங்களை நெருங்கச் செய்தன. வகுப்பில் அவன்தான் கணித மேதை. வகுப்புத் தேர்வுகளிலும் பருவத் தேர்விலும் அவனுக்குத்தான் முதல் மதிப்பெண்கள். பெரும்பாலும் நூற்றுக்கு நூறு. சமயங்களில் ஓரிரண்டு குறையும். என்னால் தேர்ச்சிக்குரியதைவிட  ஒன்றோ இரண்டோ மதிப்பெண்களையே அதிகமாகப் பெற முடிந்தது. ஆனால் அதை ஈடுகட்டத் தமிழ் கைகொடுத்தது. கணக்கு வாத்தியார்போலத் தமிழாசிரியர் பெருந்தன்மை யானவரல்லர். எண்பதிலிருந்து தொண்ணூறுக்குள் தான் மதிப்பெண்களைக் கொடுப்பார். இருந்தும் ஒரு தேர்விலும் கபீரால் என்னை நெருங்க முடியவில்லை. கணக்கில் நான் வாங்கும் மதிப்பெண் களையே அவன் தமிழில் வாங்கினான். முதலாவது பருவத் தேர்வில் நான் கணக்கிலும் கபீர் தமிழிலும் ஒரேபோல மதிப்பெண்கள் எடுத்திருந்தோம். தேர்ச்சி அட்டவணையைக் கொடுத்துவிட்டு வகுப்பு ஆசிரியர் சோமு சார் செய்த அறிவிப்பு எங்கள் இருவரையும் கூசித் தலை குனியச் செய்தது. சாரின் செல்ல மாணவர்களின் பட்டியலில் இருந்துங்கூட எல்லார் முன்னிலையிலும் அவர் எங்களை அம்பலப்படுத்தியது  மிகுந்த அவமானத்தைக் கொடுத்தது. கண்ணீர் உகுக்கச் செய்தது.


அன்று மாலை நாங்கள் இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தம் நெருக்கமான தோழமைக்குக் காரணமானது. கபீருக்கு நான் தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டும். அவன் எனக்குக் கணக்குக் கற்றுத் தர வேண்டும். இது எங்கள் ஒப்பந்தம். எங்கள் வீடு படிப்பதற்குத் தோதான இடமல்ல என்பதால் கபீரின் வீட்டுக்குப் போக ஒப்புக் கொண்டேன். சனி, ஞாயிறுகளிலும் விடுமுறை நாட்களிலும் சேர்ந்து படிப்பதாக முடிவெடுத்தோம். வடகோவை ரயில் நிலையத்துடன் ஒட்டியிருந்த ரயில்வே குவார்ட்டர்சில்தான் கபீரின் வீடு. எங்கள் வீட்டிலிருந்து தொலைவு தான். ஆனால் அவமானத்தைத் துடைத்துக் கொள்ள எவ்வளவு தூரமும் போகத் தயாராக இருந்தேன்.உடனடியாக அதைச் செய்யவும் துடித்தேன்.  'வர்ற சனிக்கிழமைலேர்ந்து சேந்து படிப்போம்டா கபீரு ' என்று நானாகவே சொன்னேன். அவனுக்கும் அதில் மறுப்பு  இல்லை. அவனும் என்னைப்போலவே அவமானத்திலிருந்து விடுபடத் தவித்துக் கொண்டிருந்தான்.


அடுத்த சனிக்கிழமை கபீரின் வீட்டுக்குப் போன கொஞ்ச நேரத்திலேயே இரண்டு விஷயங்கள் உடனடியாகப் பிடிபட்டன. ஒன்று : அவனுக்குத் தமிழ் வராததற்குக் காரணம். அவர்கள் வீட்டு மொழி தமிழல்ல. உருது. அவன் பேச்சிலோ அவன் அக்காவின் பேச்சிலோ அது தெரியவில்லை. ஆனால் அவன் அம்மா ஒவ்வொரு வார்த்தையாக மனதுக்குள் யோசித்து அதைத் தான் தமிழில் ஒப்பித்தார். இரண்டாவது : ரயில்வே குடியிருப்பாக இருந்தாலும் அவர்கள் வீடு விசாலமானதாக இருந்தது. பஷீருக்குத் தனியாக ஓர் அறை இருந்தது. படிப்பு மேஜையும் நாற்காலியும் இருந்தன. மேஜை விளக்கு இருந்தது. புத்தகங்களை வைத்துக்கொள்ள கண்ணாடிபோட்ட அலமாரியும் இருந்தது. அந்த ஆடம்பரம் லேசாகப் பொறாமைத் தந்தது. கூடவே படிப்பதற்கு இதைவிட நல்ல இடம் கிடையாது என்ற ஆறுதலையும் கொடுத்தது.


கபீர், அவன் அக்கா, அம்மா மூன்று பேர்தான் வீட்டில். அவனுக்கு அப்பா இல்லை என்பது பின்னாட்களில் தெரிய வந்தது. ரயில்வே ஊழியரான அவர் சில வருடங்களுக்கு முன்பு அகாலத்தில் மரித்திருந்தார். அவருடைய வேலை அக்காவுக்குக் கிடைக்கும் என்று காத்திருந்தார்கள். நியமனம் தாமதமாகிக் கொண்டிருந்த நிலையில் குவார்ட்டர்ஸைக் காலிசெய்ய வேண்டியிருந்தது. அப்பாவின் சக ஊழியர் ஒருவருக்குத்தான் அது ஒதுக்கப் பட்டிருந்தது. எப்படியும் வேலை கிடைக்கத்தான் போகிறது. கிடைத்தால் குவார்ட்டர்ஸும் ஒதுக்கப்படும். புதிதாக இன்னொரு இடத்துக்கு சட்டி பானைகளைத் தூக்கிக் கொண்டு எதற்காக அலைய வேண்டும். அதனால் வீட்டைக் காலிசெய்ய வேண்டாம் என்று சக ஊழியர் ஒத்துக்கொண்டிருந்தார். அதனால் அதே வீட்டிலேயே குடியிருந்தார்கள். இவை யெல்லாம் நாள்போக்கில் தெரிந்து கொண்டவை. அந்த வீட்டை விட்டு வெளியேறச் சொன்னால் கபீர் குடும்பத்தினர் உயிரையே விட்டிருப்பார்கள். அந்த அளவுக்கு அந்த வீடு அவர்களுக்குள் குடியிருந்தது. அதற்கு முழுக் காரணம் கபீரின் அக்கா ரபீக்கா. வீட்டை அத்தனை துப்புரவாக வைத்திருந்தாள். துலுக்க வீடுகளில் எப்போதும் கவிச்சை வாடை வீசும் என்று சொல்லப்பட்டதற்கு மாறாக அந்த வீட்டுக்குள் சதா காலமும் பன்னீரின் சுகந்தம் படர்ந்திருந்த்து.அரசாங்கக் குடியிருப்புகளில் வசிக்கும் வகுப்புத் தோழர்கள் சிலரது வீடுகளில் தென்பட்ட அசட்டையான மனோபாவத்துக்கு மாறாகக் கபீரின் வீடு ஒழுங்கு குலையாத அழகுடன் இருந்தது. ஜன்னல்களில் மெல்லிய வெண் திரைகள். வாசல் நிலைகளில் பாசி மணிகளால் கோத்த தொங்கட்டான்கள். மேஜை மீது விரிப்புகள். நாற்காலிகளில் உறைபோட்ட குஷன்கள். கூடத்தின் சுவர்களில் பச்சைத் துணியில் ஜரிகை எழுத்துக்கள் பின்னப்பட்ட குரான் வாசகங்கள். சோபா என்ற சொகுசு ஆசனத்தை நான் அங்கேதான் முதலில் பார்த்தேன். அதன் மீதும் உறை போடப்பட்டிருந்தது. 'இதெல்லாம் எங்க அக்காவே தெச்சுப் போட்டதாக்கும்' என்று கபீர் சொன்னான். அவன் அம்மாவால் அதையெல்லாம் செய்திருக்க முடியாது என்று அவர்களைப் பார்த்ததும் புரிந்தது. கனமான சரீரம். அதைச் சுமந்து நடப்பதே கடினமான வேலை என்று அவர் முகத்தைப் பார்த்தாலே தெரியும். வெள்ளைச்சேலை கட்டி தலையில் முக்காடு போட்டிருந்தார். எல்லாவற்றுக்கும் ரபீ ரபீ என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.  ரபீக்கா 'அம்மி அம்மி' என்று பதில் கொடுப்பார். கபீர் அம்மா அடிக்கடி அல்லாஹ் என்று பெரும்மூச்சும் விடுவார்.


ரபீக்காவுக்கும் கபீருக்கும் நாலு வயது வித்தியாசம். இருவரும் கிட்டத்தட்ட ஒரே உயரம். இருவருக்கும் ஒரே மாதிரியான முக அமைப்பு. கபீருக்குப் பெண் வேடம் போட்டால் ரபீக்கா போலவும் அக்காளுக்கு ஆண் வேடம் போட்டால் தம்பி போலவும் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். இருவர் முகத்திலும் பருக்கள் முளைத்திருந்தன. இருவரையும் ஒன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது என் முகத்தில் குறுகுறுத்துக் கொண்டிருந்த முதல் பருவை அனிச்சையாகக் கிள்ளிக் கொண்டிருந்த்து நினைவில் பிசுபிசுக்கிறது. ரபீக்காவின் பெயர் எனக்குப் பிடித்திருந்தது. அந்தப் பெயருக்கு என்ன அர்த்தம் என்றெல்லாம் தெரியாது. அவரை எப்படி அழைப்பது என்று குழம்பியபோது ரபீக்கா என்ற பெயரில் அக்கா இருப்பதால் அப்படியே அழைப்பது எளிதாக இருந்தது. கபீர் அவரை ரபீத்தீ என்று கூப்பிட்டான். ரபீ தீதி என்பதன் சுருக்கமாம். பிற்பாடு விளக்கம் சொன்னான்.


இவையெல்லாம் கபீர் வீட்டுக்குச் சென்று படித்த சில மாதங்களில் அவ்வப் போதாகத் தெரிந்து கொண்டவை. ஆனால் முதல் நாளிலேயே ரபீக்காவும் கபீரம்மாவும் அன்பானவர்கள் என்பது இயல்பாகவே உள்ளிறங்கியது. ரபீக்கா எதாச்சும் சாப்ட்றியா ?’ என்று கேட்டு விட்டு பதிலுக்கு நிற்காமல் பீங்கான் தட்டு நிறையக் குட்டிக் குட்டியான சமூசாக்களைக் கொண்டுவந்து வைத்தார். கொஞ்சம் சங்கோஜமாக இருந்தாலும் தின்னக் கிடைக்காத பதார்த்தம் ஆசையைத் தூண்டியது. சமூசாவெல்லாம் எங்கள் வீட்டுத் தின்பண்டம் இல்லையே. ஆபூர்வமாக்க் கையில் காசு திகையும்போது லக்கி கஃபேயிலோ, ஹோட்டல் தேவியிலோ தின்னக் கூடிய அந்நியப் பண்டம்.


சமூசா ரொம்ப்ப் பிடிச்சிருக்கா?’ என்று ரபீக்கா கேட்டபோதுதான் நான்கைந்தை விழுங்கி யிருந்தது உறைத்தது. லஜ்ஜையுடன் குனிந்து கொண்டேன். வெக்கப் படாத, சாப்டறதுக்குத் தானே வெச்சுது.சாப்டு. ஒங்க வீடா நெனச்சுக்கோ வெக்கம் ஓடிரும். நீயும் எனக்குக் கபீர் மாதிரித்தான். இன்னொரு தம்பிதான். என்னா?’ என்ற ரபீக்காவின் வார்த்தைகள் மிகுந்த ஆறுதலைக் கொடுத்தன.


அநேகமாக எல்லா சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் மற்ற விடுமுறை நாட்களிலும் எங்கள் உடன் படிப்புத் தொடர்ந்தது. திங்கட்கிழமை காலை முதலே சனிக்கிழமை எப்ப வரும்?’ என்று காத்திருக்க ஆரம்பித்தேன். கபீர் இல்லாத நாட்களிலும் அந்த வீட்டுக்குச் சென்று புழங்கும் சுதந்திரம் எனக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. அவன் இருந்தால் கூடத்திலும் அவனுடைய அறையிலுமாக நடைபெறும் படிப்பை அவனில்லாதபோது தனது அறையில் தொடரும் சுவாதீனத்தை ரபீக்கா கொடுத்திருந்தார். அது அம்மாவுக்கும் மகளுக்குமான அறை. ஆனால் ரபீக்காவின் அம்மா அபூர்வமாகவே அந்த அறைக்குள் வந்து போவார். அதிகமும் சமையற்கட்டில் இருப்பார். இல்லையென்றால் முன் திண்ணையில் கம்பிச் சட்டங்களால் அடைத்து உருவாக்கப்பட்டிருந்த அறையில் முக்காட்டை இழுத்து விட்டுக் கொண்டு பச்சைப் பளிங்கு மணி மாலையை உருட்டிக் கொண்டிருப்பார். சில சமயம் குரோஷா ஊசியால் பின்னிக் கொண்டிருப்பார். அறைக்குள் வரும்போது  ‘படிக்றியா, படி படிஎன்றும் வெளியேறும்போது ‘ஜோராப் படிஎன்றும் சொல்வார். முதல் முறை அந்த பிரயோகம் கேட்க விசித்திரமாக இருந்த்து. படிப்பதில் என்ன ஜோர் இருக்கிறது என்று முழித்தபோது ரபீக்காதான் மறுமொழி சொன்னார். ‘அம்மி, அது நல்லாத்தான் படிக்கிது’.


எங்கள் கூட்டுப் படிப்பு ஜோராகத்தான் நடந்த்து. ஜென்மத்துக்கும் வராது என்று நினைத்திருந்த அல்ஜீப்ராக் கணக்குகளுக்கு என்னால் சரியான விடைகளைக் கண்டுபிடிக்க முடிந்தது. சமன்பாடுகளை நெட்டுருப் போடாமல் நினைவில் பதித்துகொள்ள முடிந்த்து. கபீர் பதினைந்து வயதுக் கணித மேதையாகத்தான் இருந்தான். மேதைக்கு சந்தேகம் எழும் கட்டங்களில் ரபீக்கா நிவாரணியாக இருந்தார். பள்ளியிலும் கல்லூரிப் புகுமுக வகுப்பிலும்  அவருடைய விருப்பப் பாடம் கணக்கு என்பது அப்போதுதான் தெரிந்த்து. ‘பின்ன ஏன் நீங்க டிகிரி படிக்கல?என்று கேட்டேன். கைத்த சிரிப்புடன் என் தலையை வருடி விட்டுப் போனார்களே தவிர பதில் சொல்லவில்லை. காலாண்டுத் தேர்வில் கணக்கில் எனக்குச் சரியாகத் தொண்ணூறு மதிப்பெண்கள். கபீர் நூற்றுக்கு நூறு. அவனுடைய நூறு மதிப்பெண்களுக்குக் கிடைத்த பாராட்டை விட என்னுடைய தொண்ணூறைத்தான் ரபீக்கா அதிகம் சிலாகித்தார். பார்றா, நீ சொல்லிக் குடுத்து அது தொண்ணூறு மார்க் வாங்கீருக்குது. அது சொல்லிக் குடுத்தும் நீ தமிள்ல எளுவது மார்க்தான்என்று கபீரைச் சீண்டவும் செய்தார். ஆனால் கபீரையும் என்னையும் பொறுத்தவரை அவை நல்ல மதிப்பெண்கள்தாம். கஞ்சப் பிசினாறியான தமிழ் அய்யா அவனுக்கு எழுபதும் எனக்கு எண்பதும் மதிப்பெண்கள்அளித்திருந்தார். செய்யுளை அலகிட்டு வாய்பாடு கூறுகவை நீ ஒழுங்கா எழுதியிருந்தா என் மார்க்கும் உன் மார்க்கும் ஒண்ணா இருந்திருக்கும்டா கபீருஎன்று அவனைக் குற்றம் சாட்டினேன். ‘ஆமா, நீயும் பத்து அங்குல உயர பிரமிட்டோட சாய்தளமும் பத்து அங்குல உயரம்னு எளுதாம இருந்தா பத்து மார்க்காவது சேந்து கெட்ச்சிருக்கும்என்று குத்திக் காட்டினான். ரபீக்கா இருவரின் சண்டையையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ‘போதும் நிறுத்துங்கடா ரண்டுபேரும் நல்ல மார்க்குதானே வாங்கீருக்கீங்க. அதுக்கு என்னாத்துக்க்கு சண்டைஎன்று சமாதானம் செய்தார். சமாதானப் பேச்சில் அவர் சொன்ன ஒரு வாக்கியம் உள்ளுக்குள் ஆழமாகப் பதிந்த்து. ‘ அது ஒன்னய வுடவும் நீ அதவுடவும் ஜாஸ்தி மார்க்கு வாங்கீட்டும் நீங்க ரெண்டுபேரும் பொறாமப் படலே பாருங்க. அதான் பெருசு’. கேட்டுப் பல ஆண்டுகள் ஆன பின்னும் அந்த வாக்கியம் என் நாளங்களுக்குள் இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் ரபீக்கா.


பீர் வீட்டுக்குள் சங்கோஜமின்றிப் புழங்கலாம் என்று ஆன பின்பு ஒரு நாள் ரபீக்காவிடம் சமூசா தயாரிக்க்க் கற்றுக் கொடுக்கும்படிக் கேட்டேன். ரபீக்கா கைகளைக் கொட்டிச் சிரித்தார். ‘அம்மீ இது என்னா கேட்டுது பாருங்க. பொட்டச்சிங்க வேலயெல்லாம் கத்துக்கணுமாம்என்று அம்மாவிடம் சொன்னார். அவர் உர்தூவில் சொன்னது புரிய வில்லை. ‘லக்கி கஃபேலயும் தேவி ஓட்டல்லயும் பேக்கரிங்கள்லயும் ஆம்புளைங்கதானெ ரபீக்கா சமூசா பண்றாங்க. அதெல்லாம் பொட்டச்சிங்க வேலையாமா?என்றேன். யோசனைக்குப் பிறகு ரபீக்கா சிரித்த சிரிப்பில் சம்மதம் இருந்த்து. அவர் சொல்லிக் கொடுத்து ஒருமுறையும் அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டு ஒருமுறையும் செய்து பார்த்ததில் சமூசா தொழில்நுட்பம் கைவசமானது போலப் பட்டது.


ங்கள் வகுப்பில் பொங்கல் விழாவைக் கொண்டாடத் தீர்மானித்தோம். தலைமை ஆசிரியர் அருட்தந்தை அந்தோணி லாரன்சிடம் அனுமதியும் பெற்றோம். காசு சேர்த்தோம். அதை வைத்துக் கரும்பு மஞ்சள், பூக்கள் என்று பொங்கல் படையலுக்கான பொருட்களை வாங்கினோம். யார் யார் என்னென்ன உணவுப் பண்டங்களைக் கொண்டு வரமுடியும் என்று பட்டியல் போட்டோம். முக்கிய உணவான பொங்கலை எங்கள் பள்ளிக்கு எதிரில் இருக்கும் சீனிவாசா கபேயில் சமைத்துத் தரச் சொல்வது என்று முடிவு செய்தோம். அதன் உரிமையாளரின் மகனான சீனிவாசன் எங்கள் வகுப்பு மாணவன்.. முதலில் தயங்கினாலும் அப்புறம் ஒப்புக் கொண்டான். அவன் அப்பா தன் பங்காக காப்பியோ டீயோ தருவதாக ஏற்றுக் கொண்டார். ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் ஒரு பொருள் அல்லது உணவுப் பதார்த்தம் என்று ஏற்பாடு. என் வீட்டிலிருந்து எதையும் சமைத்துக் கொண்டு வரும் வாய்ப்பு இல்லை. ஓர் ஆணும் இரு பெண்களுமான எங்கள் மூன்று பேருக்குப் பொங்கிப் போடவும் அப்பாவின் தள்ளாட்ட்த்துக்கு ஈடுகொடுக்கவுமே திணறிக் கொண்டிருக்கும் அம்மாவிடம் எதையும் கேட்க மனம் ஒப்பவில்லை. ஆனால் வெறும் கையனாகச் செல்லவும் கூச்சமாக இருந்த்து. அம்மாவே தீர்வையும் சொன்னார். பொடக்காலியில் நிற்கும் தென்னை மரத்திலிருந்து இரண்டு இளநீர்க் குலைகளை எடுத்துப் போகச் சொன்னார். கையுறை இல்லாமல் சபைக்குப் போகவில்லை என்று ஆசுவாசமாக இருந்த்து.


நான் எங்க வீட்லேர்ந்து சமூசா பண்ணி எடுத்துட்டு வர்றேன்என்று கபீர் சொன்னதும் வகுப்பே சிரித்த்து. விழா அமைப்பாளனாக இருந்த இருதய ஜெயபால் உதடுகளைப் பிதுக்கிப் புர்ரென்று ஒலி எழுப்பினான். வகுப்புத் தலைவன் இஸ்மாயில் சிரிப்பையும் சத்த்த்தையும் அடக்க முடியாமல் திண்டாடினான். எங்கள் பெஞ்சு மாதம்பட்டி சண்முக சுந்தரம் ‘கபீரு நாம் கொண்டாடப் போறது ரம்சானில்ல சாமீ. பொங்கலு. பொங்கலோ பொங்கல் ‘ என்று பொங்கினான். பிரச்சனையை சோமு சாரிடம் பஞ்சாயத்துக்குக் கொண்டு போனோம். அதுல என்னடா இருக்கு? பொங்கல் படையல்ல சமூசா வெக்க்க் கூடாதுன்னு சாஸ்தரம் சொல்லியிருக்கா? எல்லாம் வயத்துக்குள்ற போறதுதான, பொங்கலும் சமூசாவும் உள்ளபோனா ஒன்ணு, வெளிய வந்தா பீயி. கபீரு நீ கொண்டுட்டு வாஎன்றார். கபீரின் முகம் சிரித்தது.


வெள்ளிக்கிழமை பிற்பகல் இரண்டாவது மூன்றாவது பிரிவேளைகளில் விழா நடத்த மும்முரமானோம். எங்கள் வகுப்பு ஆசிரியர், எங்களுக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பாடமே எடுக்காதவர்கள் என்று எல்லாரையும் அழைத்தோம். இடையில் கபீரும் நானும் அவன் வீட்டுக்கு ஓடி  சமூசா நிலவரத்தை ஆராய்ந்தோம்.  கூடத்தில் விரித்துப்போட்ட பாய் மீது வட்டமான குட்டிச் சப்பாத்திகள் கிடந்தன. கபீர் அம்மா ‘அல்லாஹ்என்று பெருமூச்சு விட்டபடியே பலகையில் மாவை உருட்டித் தேய்த்துக் கொண்டிருந்தார். ரபீக்கா அவற்றின் மீது மசாலாவை வைத்துச் சின்ன முக்கோணங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தார். பார்க்கக் கண் ஊறும் காட்சியாக இருந்தது. கணக்குப் போட்டுப் பார்த்தேன். ஆனால் எண்ணிக்கையில் பற்றாக்குறை. நாற்பத்தைந்து மாணவர்கள், பதினைந்து ஆசிரியர்களுக்கும் கொசுறாகக் கொஞ்சமும் தேவை. தோராயமாக எழுபது. ஆனால் அதைச் செய்து முடிக்க இரண்டு பேரால் முடியும் என்று தோன்றவில்லை. ‘கபீரு, நான் மசாலா போட்டுப் புடிச்சுத் தர்றேன். ரபீக்கா எண்ணெயில் போட்டு எடுக்கட்டும். நீ டப்பாலே அடுக்கிடுஎன்றேன். ரபீக்காவும் அம்மாவும் தடுத்தும் களத்தில் இறங்கினேன். மருதாணிச் சிவப்பு முன் நகர்ந்து நக வெளுப்புத் தெரியும் ரபீக்காவின் விரல்களில் நாட்டியத்தைப் பார்த்தேன்.


அன்றைக்கு ஆசிரியர்கள் சிலாகித்த உணவு  பொங்கல் அல்ல. சமூசாக்கள்தாம். சமூசாவுக்குக் கலாச்சார விலக்குக் கற்பித்த சக மாணவர்களும் அதன் ருசியைப் பாராட்டினார்கள். ருசி பார்க்கக் கூடக் கிடைக்காமல் போனது கபீருக்கும் என்க்கும்தான்.


அரையாண்டுத் தேர்விலும் எங்கள் பரஸ்பர கல்விக் கொடை பயனளித்த்து. கபீரும் நானும் ரொம்பவே முன்னேறியிருந்தோம். எனக்குக் கணக்கு இனிக்கத் தொடங்கியது. அவனுக்குச் செய்யுள்கள் புரிய ஆரம்பித்திருந்தன.  நாங்கள் எங்கள் ஒப்பந்தத்தை நீட்டித்தோம். பள்ளி இறுதி வகுப்பு முடிக்கும் வரை சேர்ந்து படிப்பது என்று உறுதி மேற்கொண்டோம். எனவே கபீர் வீட்டுக்கு வார இறுதியில் இரு நாட்கள் போவது என்ற அட்டவணைக் காலம்  மூன்று, நான்கு நாட்கள் என்று ஆனது.


கபீர் பள்ளியில் தேசிய மாணவர் படையிலும் இருந்தான். என் சி சி முகாமுக்காக பொள்ளாச்சி போயிருந்த நாள் மாலை அவன் வீட்டுக்குப் போனேன். வீடு களையிழந்து கிடந்த்து. கூடத்தில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ரபீக்காவும் அம்மாவும் எதிரெதிராக உட்கார்ந்து முகத்தைத் தொங்கப் போட்டிருந்தார்கள். என்னை வாவென்று அழைக்கவும் இல்லை. ‘ரபீக்கா என்னாச்சு? என்ற விசாரிப்புக்குப் பதிலும் கிடைக்க வில்லை. இருவரும் நிமிர்ந்து பார்த்தார்களே தவிர பேசவில்லை. பத்ற்றமாக இருந்தது எனக்கு. வரக் கூடாத வேளையில் வந்துவிட்டேனா? திரும்பிப் போய் விடலாமா? என்று யோசித்தேன். எப்போதும் மலர்ச்சியுடன் பார்த்த இரண்டு ஜென்மங்கள் வாடி உட்கார்ந்திருக்கும்போது அப்படிப் போவது சரியா என்று கேள்வியும் எழுந்தது. யாரும் ஒரு வார்த்தை கூடப் பேசத் தயாராகாத இடத்தில் நிற்பது சரியும் மணல்மேல் நிற்பது போலிருந்தது.


‘சரிங்க ரபீக்கா, நான் போயிட்டு அப்புறமா வர்றேன்என்றதும் ரபீக்கா எழுந்தார். ‘அவ்ளோ தூரத்திலேர்ந்து வந்தது ஒடனே போய்டறதுக்கா, உக்காருஎன்று பின்கட்டுப் பக்கம் போனார். நான் வெகுநாட்களுக்குப் பிறகு தயக்கத்துடன் நகர்ந்து கபீரின் அறைக்குள் போய் உட்கார்ந்தேன். தோள் பையிலிருந்து புத்தகங்களை எடுக்கத் தோன்றவில்லை. கபீரின் மேஜை மீதிருந்த உலோகத் தாஜ்மகாலையே பார்த்துக் கொண்டிருந்தேன். முகத்தைத் துடைத்தபடி அறை வாசலுக்கு வந்த ரபீக்கா ‘இரு டீ கொண்டு வர்றேன் என்று நடந்தார். அம்மி எளுந்திரிங்க, மூஞ்சியைக் களுவிட்டு வாங்க. டீ போடறேன்என்ற குரலும் கபீர் அம்மாவின்அல்லாஹ்பெருமூச்சும் கேட்டன.


மேஜை மீது தேநீர்க் கோப்பைகளை வைத்து விட்டு கபீரின் கட்டிலில் உட்கார்ந்தார் ரபீக்கா. ‘கபீரு நாளான்னிக்குத்தான் வருமில்லஎன்றார். தலையை ஆட்டினேன். டீயக் குடிஎன்றார். எடுத்துக் குடித்தேன். இரண்டு மிடறு தொண்டைக்குள் இறங்கியதும் செருமிக் கொண்டு ‘என்னாச்சு ரபீக்கா?என்று மீண்டும் கேட்டேன். ‘ஒண்ணுமில்லஎன்றார்.அதுவே ஏதோ இருக்கிறது என்றது. ரபீக்கா வழக்கமான உடையில் இல்லை. வெளியே போகும்போது அணியும் ஜரிகை மின்னும் சல்வார் கமீசில் இருந்தார். என்னவென்று திரும்பக் கேட்கத் தயக்கமாக இருந்த்து. கேட்டு என்ன செய்ய? எதுவாக இருந்தாலும் பதினாலு வயசுப் பையனால் தீர்க்க முடியாது. நிமிர்ந்து பார்த்தபோது ரபீக்கா சிரிக்க முயன்றார். தயக்கத்தை விட்டு ‘ரபீக்கா என்னாச்சு?என்று கேட்டேன். கட்டிலை விட்டு எழுந்து பக்கத்தில் வந்து நின்று ‘ஒண்ணுமில்ல தெரிஞ்சாலும் ஒண்ணும் பண்ண முடியாதுஎன்று என் தலையை வருடி இடையோடு சேர்த்துக் கொண்டார். அவருடைய கமீசிலிருந்து அத்தரின் வாசனை நாசிக்குள் புகுந்தது. என் பார்வை பரவ்சமான வெளிச்சத்துக்குள் இருண்டது. ரபீக்காவின் கைகள் என் முடியை அளைந்து கொண்டிருந்தன. ‘ ரபீஎன்ற கபீர் அம்மாவின் அழைப்பு நெருங்கி வந்த்து. ரபீக்கா ‘கீ  அம்மி?என்று கைகளை விலக்கிக் கொண்டார். வெளியே போனார். அவரும் அம்மாவும் உர்துவில் கிசுகிசுப்பாகப் பேசிக் கொள்வதைக் கேட்டேன்.


ஏழு மாதங்களில் கபீரின் வீட்டிலிருந்து நான் சீக்கிரமாக்க் கிளம்பியது அன்றுதான்.


இரண்டு நாட்களுக்குப் பின் திங்கட்கிழமை முகாமிலிருந்து திரும்பிய கபீர் பள்ளிக்கு வந்தான். வகுப்புகள் தொடங்கியிருக்கவில்லை. என் இருப்பிடம் அருகில் வந்தவனின் முகம் சுண்ணாம்புக் கல்போல இருந்த்து. நான் எதுவும் பேசுவதற்கு முன்பே சொன்னான் ‘ நாம இனுமெ சேந்து படிக்க வேண்டாண்டா. நீ எங்க வீட்டுக்கு வர வேண்டா. அம்மி சொல்லச் சொன்னாங்க’. வழக்கமாக என் அருகில் உட்கார்கிறவன் வேறு பெஞ்சுக்குப் போய் உட்கார்ந்து கொண்டான். அந்த ஆண்டு முடியும்வரை  என் பெஞ்சுக்கு வரவில்லை. என்னுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை.மூன்றாவது இடைப் பருவத் தேர்வில் நான் கணக்கில் தோல்வியடைந்தேன். கபீர் தமிழில் நல்ல மதிப்பெண்களை வாங்கியிருந்தான். என்னை விடவும் அதிக மதிப்பெண்கள். ஆனால் ஆண்டிறுதித் தேர்வில் அவனுடையதை நெருங்கும் மதிப்பெண்களை எப்படி நான் வாங்கினேன் என்று இன்றுவரை விளங்க வில்லை. மனசு ஒரு பிடிவாதக்காரக் குரங்கு என்பதனாலாக இருக்கலாம்.


பத்தாம் வகுப்பில் நாங்கள் விருப்பப் பாடமாக ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதையொட்டித்தான் வகுப்புகள் பிரிக்கப்படும். நான் பௌதிகத்தைத் தேர்ந்தெடுத்தேன். கணித மேதைகள் வேறு அதைத் தேர்ந்தெடுப்பார்கள்? கபீர் கணக்கை விரும்பினான். எங்கள் வகுப்புகள் வேறுவேறு ஆயின. நான் பத்தாவது சி. அவன் பத்தாவது ஏ. ஒரே வளாகத்திலிருந்தாலும் இரண்டு ஆண்டுகளில் அவனை ஒன்றோ இரண்டோ முறைதான் பார்க்க முடிந்த்து. பள்ளி இறுதி வகுப்பு முடிந்து பொதுத் தேர்வில் வெற்றி பெற்றோம். கபீர் என்னைவிட மிக அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தான்.கணக்கு வாத்தியார்களின் வள்ளண்மையையும் தமிழாசிரியர்களின் கருமித்தனத்தையும் சபித்தேன். தனியார் கல்லூரியில் புகுமுக வகுப்பில் இயற்கை அறிவியல் பிரிவில் சேர்ந்தேன். கல்லூரி வகுப்புகள் தொடங்கிச் சில நாட்களுக்குப் பிறகு அரசுக் கலைக் கல்லூரியிலிருந்து பாதியில் வந்து எங்கள் கல்லூரியில் சேர்ந்த வெங்கடேசன் சம்பிரதாயமான அறிமுகத்துக்குப் பிறகு கபீரைப் பற்றிச் சொன்னான். நீ செகண்ட் குரூப்பாச்சே, கபீர் மாத்ஸில் நெறய மார்க்கு வாங்கினவன். அவனை உனக்கு எப்படித் தெரியும்?என்று அவனிடம் சந்தேகம் எழுப்பினேன். ‘அவனும் செகண்ட் குரூப்தாண்டா, அப்பத்தான எம் பி பி எஸ் போக முடியும்என்றான். அந்தச் செய்தி எனக்கு வியப்பாகத்தான் இருந்த்து.


சில மாதங்களுக்குப் பிறகு கல்லூரியில் காலை வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அலுவலகக் கடைநிலை ஊழியர் வந்து கல்லூரி முதல்வர் அழைப்பதாகத் தெரிவித்தார். முதல்வர் அறைக்குப் போனேன். ‘இவங்க உன்னப் பாக்க வந்திருக்காங்க. பாத்துப் பேசீட்டு சீக்கிரம் கிளாசுக்குப் போஎன்றார் முதல்வர். அவர்களைப் பார்த்தேன். கபீரும் ரபீக்காவும். முதல்வர் அறையிலிருந்து வெளியே வந்த்தும் கபீர் சொன்னான். அவன் முதலில் எங்கள் கல்லூரியில் தான் புகுமுக வகுப்பில் சேர்ந்திருக்கிறான். அரசுக் கல்லூரியில் இடம் கிடைத்ததும் இதை விட்டிருக்கிறான். மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்காக் இப்போது வந்திருக்கிறான். ரபீக்காவும் அதே பகுதியில் இருக்கும் பெண்கள் கல்லூரியில் படித்தவர். பட்ட வகுப்பில் மீண்டும் சேர்வதற்காக வந்திருக்கிறார்.  இருவரையும் பார்த்துப் புன்னகைத்தேன். கபீர் முகத்தில் என் முகத்தைவிட அதிகமான பருக்கள் இருந்தன. என் மீசையுடன் ஒப்பிட்டால் அவனுக்கு ரோமமே இல்லாத கரிமீசை முளைத்திருந்த்து. ரபீக்காவின் கண்களில் புன்னகை மினுங்கியது. சல்வார் கமீசில் சம்கிகள் மங்கியிருந்தன. முக்காடு நரைத்திருந்த்து. பார்த்து எத்தினி நாளாச்சுஎன்றார்.


இரண்டு வருடங்கள். இரண்டு வருடங்களில் என்ன நடந்திருக்கும்? கபீர் அம்மா எப்படி இருப்பார்கள்? ரபீக்கா இன்னும் தனியாகத்தான் இருக்கிறாரா? வேலை கிடைக்க வில்லையா? கல்யாணம் ஆகவில்லையா? இரண்டும் இருக்காது.. இல்லையென்றால் வெகுகாலம் கழித்துக் கல்லூரிக்கு வருவாரா? கபீர் என்னை ஏன் வீட்டுக்கு வர வேண்டாம் என்று சொன்னான்? அது ரபீக்காவுக்குத் தெரியுமா? இப்போதும் குவார்ட்டர்ஸில்தான் குடியிருக்கிறார்களா? கேள்விகள் செவிக்குள் இரைந்தன. ஆனால் கேட்கத் தயக்கமாக இருந்த்து. ‘எப்டி இருக்கீங்க ரபீக்கா?என்று மட்டுமே கேட்க முடிந்த்து. ‘தம்பி, ஆபிசில கூப்டறாங்க?என்று ஊழியர் வந்து கபீரை அழைத்துப் போனார்.


‘ ஆளே மாறிட்டடா, பெரிய ஆம்புள ஆயிட்ட. மீச தாடியெல்லாம் வந்திருச்சு. என்னாச்சு ஏன் வீட்டுக்கே வரல.கபீரு கூட சண்டையா?என்று கேட்டார். என்னிடம் பதில் இல்லை. ரபீக்காவை நேருக்கு நேர் பார்க்க வெட்கப்பட்டு நின்றேன். அவர் முதன்முதலாக ‘அடாஎன்று சொன்னது உள்ளுக்குள்ளே இனித்த்து. கொஞ்சம் பக்கத்தில் வந்தார். கைப் பையைத் திறந்து உள்ளே துழாவி எதையோ எடுத்து என் சட்டைப் பையில் போட்டார். கபீர் அருகில் வந்து ‘ரபீத்தி, போலாம் சர்டிபிகேட் வாங்கிட்டேன்’ என்றான். என்னைப் பார்த்து ‘வர்றோம்’  என்றான். நான் தலையசைத்தேன். இருவரும் படியிறங்கி மறைவதைப் பார்த்து நின்றேன். திரும்பி வகுப்பை நோக்கி நடந்தபோது சட்டைப் பையிலிருந்த வஸ்துவை எடுத்தேன். கறுப்பு நிறமான சின்னஞ் சிறு அட்டைப் பெட்டி. மூடியைத் திறக்காமலேயே மெல்லிய அத்தர் வாசனை கசிந்த்து. அதன் மேல் பொன்னிற எழுத்துக்களில் பெயர்  அச்சிடப் பட்டிருந்தது ‘காலா பூத்என.



தை எடுத்துக் கொள்கிறீர்களா? என்று அத்தர் கடைப் பணியாளர் கேட்டார். இசைவாகத் தலையாட்டினேன். ‘இத்தனையையும் எடுக்கிறீர்களா?அவர் கேட்டபோதுதான் மூன்று காலா பூத் குப்பிகளை ஒதுக்கி வைத்திருந்த்து தெரிந்தது. ‘ஆமாம்என்றேன். காலா பூத் , காலா பூத், காலா பூத் என்று வேகமாக உச்சரித்தபோது சொற்கள் மயங்கி பூத் காலா என்று பொருள் பட்டதை  உணர்ந்தேன். பூத காலம். இறந்த காலம். கடந்த காலம். சென்ற காலம். என்று சொற்களை உருட்டிக் கொண்டிருந்தேன். கடைக்காரர் வேறு ரக அத்தர் குப்பிகளையும் எடுத்துக் காட்டி வேண்டுமா என்றார். ‘ நை சாஹியேஎன்று நிராகரித்தேன். அவற்றுகெல்லாம் நினைவின் வாசனை இல்லை என்பதை இந்தியில் எப்படிச் சொல்வது ?

காலம் ( கனடா ) இதழில் வெளியானது. ஓவியம் : இரானிய ஓவியர் இமான் மலேகி.