புதன், 23 ஜூன், 2010

அக்ஞேயா கவிதைகள்



















இந்தப் பதிவிலுள்ள அக்ஞேயா கவிதைகளின் மொழியாக்கம் இருபது ஆண்டுகளுக்குப் பின்பான மறு வருகை அல்லது மீட்டெடுப்பு.

நண்பர் கோணங்கியின் 'கல்குதிரை' ஆறாம் இதழில் வெளியானவை இந்தக் கவிதைகள். இதழில் அக்ஞேயாவின் 'அர்த்தமும் அர்த்தமினமையும்' நாவலும் 'முகமூடிக் கோயில்' கட்டுரையும் வெளியாகியுள்ளன. இரண்டையும் தமிழாக்கம் செய்தவர்: சா.தேவதாஸ்.

உண்மையில், கோணங்கி இந்த இரண்டு மொழியாக்கங்களுடன்தான் இதழைக் கொண்டுவரும் எண்ணத்திலிருந்தார்.நண்பர் சி.மோகன் நடத்திவந்த மிதிலா அச்சகத்தில் வைத்து இதழ் அச்சுக்குப் போகவிருந்த வேளையில்,தயக்கத்துடன் கோணங்கியிடம் அக்ஞேயாவின் சில கவிதைகளை மொழிபெயர்த்து வைத்திருப்பதைச் சொன்னேன். 'ஏ, சரியான ஆளாருக்கியேப்பா, ஒடனே அதைக் குடு' என்றார். வீட்டிலிருக்கிறது, மறுநாள் எடுத்து வருகிறேன் என்றேன். கோணங்கி அதற்குள் படியிறங்கி அச்சக வாசலில் நின்று , 'வா வா, வீட்டுக்குப் போய் எடுத்து வரலாம்' என்று செருப்பை மாட்டிக் கொண்டு நகர ஆரம்பித்தார். ஆடி மாத வெயிலில் மயிலாப்பூரிலிருந்து மந்தைவெளிவரை வியர்வை வழிய நடந்து போய் வீட்டிலிருந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொடுத்தேன். மொழியாக்கம் எழுதிய பக்கங்களைக் கொத்தாகப் பிய்த்தெடுத்துக் கொண்டு கோணங்கி சொன்னார்: ' அக்ஞேயா சிறப்பிதழ்னு போட்ருவம்யா'.

எண்பத்தியெட்டு பக்கங்களுடன் வெளிவந்த கல்குதிரை இதழில் 'நம் காலத்தின் குரல்' என்ற மணிமேகலை (யார் அது?)யின் கட்டுரையைத் தவிர ஏனைய பக்கங்கள் அக்ஞேயாவுக்கு.

கவிதைகளின் மொழியாக்கத்தில் ஈடுபட்டதும் தற்செயலானது. மொழிபெயர்ப்புக்குச் சில வருடங்கள் முன்பு மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனைப் பார்க்க அவருடைய ஊரான இரிஞ்ஞாலக்குடா சென்றிருந்தேன். 'சமகால ஹிந்திக் கவிதைகள்' என்ற மலையாள மொழியாக்கத் தொகுப்பின் இறுதி வரைவில் மும்முரமாக இருந்தார் சச்சி மாஷ். அவர் வீட்டு வரவேற்பறை டீபாய்மேல் கவிழ்ந்து கிடந்த 'அக்ஞேயாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள்' இந்தித் தொகுப்பைப் புரட்டிப் புரட்டி வாசித்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த மாஷ் 'ஹிந்தி படிக்கத் தெரியுமா?' என்று கேட்டார். 'ஓரளவுக்குப்
படிக்க முடியும்' என்றேன். அப்போது அவர் சொன்ன யோசனைதான் அக்ஞேயா மொழிபெயர்ப்புக்குத் தூண்டுதலாக இருந்தது. பிடித்த கவிதைகளைத் தமிழில் தோராயமாக மொழிபெயர்ப்பது. பின்னர் சச்சி மாஷ் அதன் சரியான அமைப்பையும் பொருளையும் சொல்லுவார். அதையொட்டித் திருத்தங்கள் செய்து செம்மைப்படுத்துவது என்பது யோசனை. இரண்டு மணி நேரத்தில் ஐந்து இந்திக் கவிதைகள் தமிழ் வடிவம் பூண்டன. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் 'கல்குதிரை'யில் அச்சேறின.


@

அக்ஞேயா என்ற எஸ்.எச்.வாத்ஸ்யாயா என்ற சச்சிதானந்த ஹீரானந்த வாத்ஸ்யாயா 1911 இல் பிறந்தார். கவிஞர், நாவலாசிரியர், சிறுகதையாளர், விமர்சகர், விடுதலைப் போராட்ட வீரர், உலகம் சுற்றி.

நவீன இந்திக் கவிதையின் மூன்று தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்தவர். அவர் தொகுத்து வெளியிட்ட 'தார் சப்தக்' என்ற நூலே இந்திக் கவிதையின் திசை மாற்றத்துக்குத் தயாராக சிறகுக¨ளைக் கோதிக் கொடுத்தது. இந்தப் புதிய கவிதைகளின் கண்ணோட்டம், புதிய உருவகங்கள், படிமங்கள் ஆகியவை விமர்சக வட்டத்தில் பெரும் எதிர்ப்பைப் பெற்றன. கருத்தளவில் இவை மேற்கத்தியச் சாய்லைக் கொண்டவை; தனிநபர் வாதத் தன்மையுள்ளவை; புதியாதவை என்பவையே முக்கியக் குற்றச் சாட்டுகள். இத் தொகுதி மூலம் அக்ஞேயாவும் முக்திபோதும் புதிய இந்திக் கவிதையின் முன்னோடிகளாகத் தெரிய வந்தனர். 1951 இல் அக்ஞேயா தொகுத்த இரண்டாவது தொகுப்பும் வெளிவந்தது. இந்திக் கவிதை புதிய திசையில் சிறகுகளை வீசிப் பறக்கத் தொடங்கியது. தொடர்ந்து வந்த வருடங்களில் அக்ஞேயா மானுட இருப்பின் பிரச்சனைக்குரிய உள் உலகங்களில் சஞ்சரிக்கத் தொடங்கினார்.

1964 இல் சாகித்திய அக்காதெமிப் பரிசும் 78 இல் பாரதிய ஞானபீடப் பரிசும் அக்ஞேயாவுக்கு வழங்கப் பட்டன. இதய நோய் பாதிப்பால் 1987 இல் மறைந்தார்.


@

வீடுகள்

1

இரண்டு கதவுகளை ஒன்றிணைக்கும்
அறை என் வீடு
இரண்டு கதவுகளுக்கு இடையேயிருக்கும்
காலியிடம் என் வீடு

எப்படிப் பார்த்தாலும்
நீங்கள் வீட்டைக் கடந்து பார்க்கலாம்
மறு பக்கத்துக் காட்சியைப் பார்க்கலாம்
ஆனால் வீட்டைப் பார்க்க முடியாது

நான் தான் என் வீடு
என் வீட்டில் எவரும் வசிக்கவில்லை
என் வீட்டில் நான் வசிக்கிறேனா?
எப்படிப் பார்த்தாலும்...

2

உங்கள் வீடு
அங்கே சாலைமுடியுமிடத்தில்

ஆனால் நான் எப்போதும் போய்க்கொண்டேயிருக்க வேண்டும்
அப்படியானால் சாலை எங்கே முடிகிறது?
உங்கள் வீடு...

3

மற்றவர்களின் வீடுகள்
உள்நோக்கித் திறக்கின்றன
அவை வெளியிட முடியாத ரகசியங்களுக்குள் திறக்கின்றன
மற்றவர்களின் வீடுகள் நகரங்களில்
நகரங்கள் மற்றவர்களின் வீடுகளில்...

4

வீடுகள், நாம் செல்லும் வீடுகள் எங்கே?
வீடுகளைப் பற்றிய எல்லாப் பேச்சுக்களும்
வீடுகளைப் பொறுத்தவரை புதிர்கள்தாம்
பிறரிடம் நாம்
வீடுகளைப் பற்றிப் பேசுவதில்லை
பிறரிடம் நாம் பேசுவது
வீடுகளைப் பற்றியுமல்ல.

@

திசைகள்

என்றும் காலையில் கொஞ்ச நேரம்
நான் இறந்த காலத்தில் வாழ்கிறேன்
ஏனெனில்
என்றும் மாலையில் கொஞ்ச நேரம்
நான் எதிர் காலத்தில் சாகிறேன்.

@

தேநீரை உறிஞ்சிக்கொண்டே...

தேநீரை உறிஞ்சிக்கொண்டே
நான் அப்பாவைப் பற்றி யோசிக்கிறேன்
நீங்களும் தேநீரை உறிஞ்சிக்கொண்டே
உங்கள் அப்பாவைப் பற்றி யோசிப்பதுண்டா?

அப்பாவைப் பற்றிய இந்தச் சிந்தனை
நல்லதற்கல்ல
நாம் வேறு எவரோவாக ஆகியிருக்கலாம்
ஆனால் அத்தோடு
நமது அசல் குணம் வெளியே வந்து விடும்
நாம் வேறு எவரோவாகியிருக்கலாம்
வேறு எவரோவாக முடிந்திருந்தால்
நாம் அப்பாவை நெருங்கியிருப்போம்
ஏறத்தாழ அப்பாவைப் போலாகியிருப்போம்
இதைக் கண்டுபிடித்து விடுகிறோம்
யோசனையின் கோளாறு இதுதான்

அப்பாவைப் போலாக வேண்டுமென்றால்
அப்பாவிடமிருந்து எவ்வளவோ விலகிப் போகவேண்டும்

அப்பாவும் காலையில் தேநீர் அருந்துவார்
அப்போது
அவரும் அவருடைய அப்பாவைப் பற்றி யோசித்திருப்பாரா?
அது
அப்பாவுக்குப் பக்கத்திலிருந்தா அல்லது
அப்பாவிடமிருந்து விலகியா?

@

எல்லைப் புறத்தில் சோதனை

முகங்கள் திருத்தமானவை
எந்திரங்களைப்போல மென்மையானவை
அவை வெளிப்பூச்சில் மின்னுபவை
அவை மறைத்து வைப்பதற்காகவே பேசுபவை
கைகள் மட்டும் இப்போதும் இணக்கமற்றவை
அவற்றின் தழும்புகள் மௌனமாக
உண்மையைச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றன
சிலசமயம், சிலசமயம் மட்டுமே
கண்ணீர்த் துளிகளும்...

அவை மட்டுமே இப்போதும் பாடுகின்றன

@

ஹிரோஷிமா

இன்று ஒரு சூரியன் உதித்தெழுந்தது
இல்லை
தொடுவானத்துக்கு மேலாக மெல்லமெல்ல உதித்தெழவில்லை

நகரத்தின் மத்தியில்
ஒரு வெளிச்சவாணம் தெறித்துச் சிதறியதில்
இன்றைய சூரியன் உதித்தெழுந்தது
இல்லை
ஆகாயத்திலிருந்தல்ல
வெடித்துப் பிளந்த பூமியிலிருந்து

எல்லாத் திசைகளிலும்
பேதலிப்பின் நிழல்கள்
இழப்பின் நிழல்கள்
மனித நிழல்கள்

இல்லை
கிழக்கிலிருந்து எழுந்து வரவில்லை

மரணத்தின் அதிவேக சூரிய ரதத்திலிருந்து
கழன்று சுழன்று
ஒரு பெருஞ்சக்கரம் கீழே விழுந்தது
நகரத்தின் இதயத்தில் விழுந்து உடைந்தது
எங்கும் சிதறியது

ஒரே நொடியில்
ஒரு சூரியன் உதித்து மறைந்தது
குறுகிய உச்சிவேளிஅயின்
கண்பிடுங்கும் ஒளிப் பிரவாகம்.

பிறகு
நீண்டு வந்ததும் வெளிறி இறந்ததும்
மனித நிழல்களல்ல
மனிதர்கள்
ஒற்றை நொடியில் மூடுபனியாகி மறைந்தனர்
நிழல்கள் மட்டும் மிஞ்சின

பாறைகளில்
காலியான இந்தத் தெருக் கற்களில்
எரிந்து கருகிய நிழல்கள்

மனிதர்கள் உருவாகிய சூரியன்
மனிதர்களையே துகள்களாக்கியது
சூனியமாக்கியது

கறுத்த பாறைகளில் கையொப்பமிட்ட வெள்ளை நிழல்கள்
குற்றப் பத்திரிகை வாசிக்கின்றன -
மனிதர்களுக்கு எதிராக.



நன்றி: கல்குதிரை - ஜூன் ஜூலை ஆகஸ்ட் இதழ் (1990)

5 கருத்துகள்:

  1. நீண்ட இடைவெளிக்குப் பின்னான பதிவு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வீடுகளும் திசைகளும் மிக அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
  3. மிக சிறந்த பகிர்வுக்கு நன்றி. இவைகளில் 'திசைகள்' மிக மிக அருமை .

    பதிலளிநீக்கு
  4. //அப்பாவும் காலையில் தேநீர் அருந்துவார்
    அப்போது
    அவரும் அவருடைய அப்பாவைப் பற்றி யோசித்திருப்பாரா?
    அது
    அப்பாவுக்குப் பக்கத்திலிருந்தா அல்லது
    அப்பாவிடமிருந்து விலகியா?// மிகவும் ரசித்தேன். அத்தனைக் கவிதைகளும் அருமை. நன்றி சுகுமாரன்.

    பதிலளிநீக்கு