புதன், 22 ஜூலை, 2020

ஞானியுடன் நடந்த தூரம்

ருடம் பற்றிய ஞாபகக் குழப்பம். தேதியையும் மாதத்தையும் பற்றிய கலங்கல். இரண்டையும் கடந்து கோவை ஞானி என்ற கி. பழனிச்சாமியை முதலாவதாகச் சந்தித்த ஞாயிற்றுக்கிழமை நினைவின் ஆழத்தில் இன்னும் மின்னுகிறது. கல்லூரி நண்பரும் அன்றைய இலக்கியத் தோழருமான விஸ்வநாதன் (பாதசாரி) காலை யிலிலேயே வீட்டுக்கு வந்து சாயங்காலம் ஞானி நடத்தும் இலக்கியக் கூட்டத்துக்குப் போகலாமென்று சொல்லிவிட்டுப் போயிருந்தார். போக வேண்டுமா வேண்டாமா என்று தடுமாறுகிற விதத்தில் அந்த மாலை நேரத்தை வேறு காரணத்துக்காக ஒதுக்கியிருந்தேன்.


 நாங்கள் வசித்த கோவை ராமநாதபுரம் பகுதியில் பங்கஜா ஆலை இருக்கிறது. நீண்ட காலம் மூடிக்கிடந்த ஆலை அப்போதுதான் மீண்டும் திறக்கப்பட்டு இயங்க ஆரம்பித் திருந்தது.அந்த ஆலைத் தொழிலாளர்களின் குடியிருப்பும் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்தான். நிர்வாகக் குளறுபடிகளால்குடியிருப்புக் கான அடிப்படை வசதிகள் இல்லாமலிருந்தன. குடிநீருக்காக அந்த வீட்டுப்பெண்கள் எங்கள் தெருவில் குழாயுள்ள வீடுகளைத் தான் நம்பியிருந்தார்கள். எங்கள் வீடும் அதில் ஒன்று. மாலையில் தண்ணீர் விநியோகிக்கப்படும்போது வீட்டுப் பொடக்காலியில் பித்தளை, தகரம், எவர்சில்வர் குடங்களும் வெவ்வேறு பருவத்தைச் சேர்ந்த பெண்களுமாகக் குழுமியிருப்பார்கள். அவர்களில் என்னோடு அன்பாகப் பேசும் ரேணுகா அக்காவும் ஒருத்தி. அவர்கள் வீட்டுக்கு எல்லா சனி,ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரும் உறவுக் காரப் பெண் காஞ்சனா தண்ணீர் பிடிக்க ரேணுகாக்காவுடன் வருவாள். ஜெய சுதா என்ற நடிகையின் சாயல் அவளுக்கு இருந்தது. மீசை அரும்பத் தொடங்கிய பள்ளி நாட்களிலிருந்து பார்த்து வந்த அந்தப் பெண் மீதான ஈர்ப்பைச் சொல்லக் காத்திருந்தேன். அப்போது அதற்கான தகுதி எனக்கு வந்துவிட்டிருந்தது. புகுமுக வகுப்பை முடித்திருந்தேன். கல்லூரியில் மாணவர்களுக்காக மாணவர்களால் நடத்தப்பட்ட மாணவர் பத்திரிகையில் கதையும் கவிதைகளும் எழுதியிருந்தேன். உள்ளூர் நாளிதழில் கதை வெளியாகி அதற்கு சன்மானம் வாங்கியிருந்தேன். தாமரையில் இரண்டு கதைகள் வெளியாகி தலையில் முளைக்கத் தொடங்கி யிருந்த இலக்கியக் கொம்பை அவ்வப்போது வருடிக் கொண்டிருந்தேன். வேறு கல்லூரியில் சேருகிற ஆசையில் ஒரு வருடத்தை அர்ப்பணம் செய்து வீட்டில் உட்கார்ந்து இலக்கியம் படித்துக்கொண்டும் படைத்துக்கொண்டுமிருந்தேன்.ஜெயகாந்தன் புத்தகங்களைத் தேடி வாங்கிச் சேமித்திருந்தேன். ஜெயகாந்தன் வாசகரான காஞ்சனாவின் நைனாவுக்குச் சில புத்தகங்களை
இரவல் கொடுத்திருந்தேன். அடுத்த ஜெயகாந்தன் புத்தகத்தைக்
காஞ்சனாவிடம் கொடுக்கும்போது அதன் பக்கங்களுக்குள் என் காதலைச் சொல்லும் கவிதையை எழுதிச் செருகிவைக்க யோசித்திருந்தேன். ஜெயகாந்தனைப் போலவே வாசகர் நைனாவும் புதுக்கவிதையை ஏற்றுக்கொள்ளாதவர் என்பதால் காதல் கவிதையை அறுசீர் விருத்தத்தில் யாப்பதா அல்லது எண்சீர் விருத்தத்தில் யாப்பதா என்ற குழம்பிக்கொண்டிருந்தேன். காதலுக்கு எண்சீர் விருத்தம் தோதானதல்ல என்று இலக்கண அறிவு உறுத்தியது. நவீன உணர்வுள்ளவன் மரபு வடிவத்தை நாடுவது பொருத்தமற்றது என்று புத்திலக்கிய மனம் வலியுறுத்தியது. கடைசியில் காதல் புதுக்கவிதையாக மலர்ந்து கோகிலா என்ன செய்துவிட்டாள்? தொகுப்பில் ஒடுங்கி மணத்தைக் கசிய விட்டுக் கொண்டிருந்தது. அந்த ஞாயிற்றுக்கிழமை மாலையைத்தான் புத்தகத்தை ஒப்படைக்கத் தேர்ந்தெடுத் திருந்தேன். ஆனால் விஸ்வநாதன் வந்து அழைத்தபோது இது எதுவும் நினைவுக்கு வரவேயில்லை. காஞ்சனா தண்ணீர் பிடிக்க வருவதற்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறியிருந்தேன்.வடகோவையில் ஒரு தனிப் பயிற்சிக் கல்லூரியில்தான் கூட்டம்.
இருபதுக்கும் குறைவான எண்ணிக் கையில் ஆட்கள் இருந்தார்கள். ஒரு புத்தக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஜன சுந்தரம் என்பவர் பேசிக்கொண்டிருந்தார். அது ஒரு மலையாளப் புத்தகம். பேராசிரியர் குப்தன் நாயர் எழுதிய இசங்ஙள்க்கு அப்புறம் (இசங்களுக்கு அப்பால்) என்ற கட்டுரைத் தொகுதி. அதிலிருந்த கட்டுரைகளைப் பற்றிய விமர்சனமும் தொடர்ந்து விவாதமுமாகக் கூட்டம் அமைந்திருந்தது. இடையில் ஞானியின் கட்டுரை ஒன்றும் குறிப்பிடப்பட்டது. இ.எம்.எஸ் சின் இலக்கிய விமர்சனக் கோட்பாடு களை விமர்சித்து ஞானி எழுதிய கட்டுரையை அலசிக் காயப் போட்டார்கள். ஞானி பதிலுரை வழங்கினார். நிதானமான குரலில் தன் தரப்புகளை முன்வைத்தார். படைப்பு என்பது ஓர் உற்பத்திப் பொருளல்ல; அது ஒரு மானுடச் செயல்பாடு. அதை ஆணியையும்
திருகையும் போன்ற சரக்காகப் பார்ப்பதே மார்க்சியக்
கண்ணோட்டத்துக்குப் பொருந்தாதது. மார்க்சியம் கேவலம் சோற்றுப் பாட்டுக்கான பிரச்சாரமல்ல; அது ஆகப் பெரிய தத்துவம். 


இந்த வாசகங்களாக அல்ல; ஆனால் இந்த வாசகத்தின் பொருளில் தான் அவருடைய பேச்சு இருந்தது. அதில் இடம்பெற்று இன்றும் நினைவில்தங்கியிருக்கும் மேற்கோள் ‘பட்டுப்பூச்சி என்ன காரணத்துக்காகப் பட்டிழையை உருவாக்குகிறதோ அதே காரணத்துக்காகத்தான் மில்டன் பாரடைஸ் லாஸ்ட்டை எழுதினார்’. படைப்பாற்றல் பற்றிய மார்க்ஸின் கூற்றை முதன்முதலாகக் கேட்டது ஞானி வாயிலாகத்தான். அவர் பேச்சிலும் எழுத்திலும் அடிக்கடிப் பயன்படுத்தும் ஒரு வார்த்தையும் அதன்பிரயோகமும் அன்று மனதில் பதிந்தன. ‘கேவலம்’ என்ற சொல்லை
அவரளவுக்கு யாராவது புழங்கியிருப்பார்களா என்று இப்போதும்
தோன்றுகிறது. நமக்கு அறிமுகமாகியுள்ள எதிர்மறைப் பொருளிலல்ல; வெறும் என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் அதைப் பயன்படுத்தினார். ‘மனிதர்கள் கேவலம் புழுக்களா?’ என்ற கேள்வியில் வரும் தொனியிலான பிரயோகம்.கூட்டம் முடிந்து விவாதச் சலசலப்புக் கலையாமலேயே போய்
எல்லாருடனும் தேநீர் அருந்தியதும் பின்னர் ஞானியுடன் அவர் பேசு
வதைக் கேட்டுக்கொண்டே நடந்து இரண்டோ மூன்றோ கிலோ மீட்டர்தொலைவிலுள்ள காட்டூர் காளீசுவரர் நகரிலிருந்த அவர் வீட்டை அடைந்ததும் இலக்கியப் பயணத்தின் ஆரம்பம். அவர் வீடு வரைக்கும் உடன் வந்த விஸ்வநாதன் எங்கள் வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்த சைக்கிளை எடுக்க வேண்டும் என்னும் எச்சரிக்கை யுணர்வுடன் பஸ் ஏறினார். ‘இது தான் வீடு, எப்போது வேண்டு மானாலும் வரலாம்’ என்று விடை கொடுத்தார் ஞானி. அதன் பிறகு அந்த வீட்டுக்கு எத்தனை முறை போயிருப்பேன் என்பது எண்ணிக் கையில் அடங்காத கணக்கு. வீட்டை அடைய மிச்சமிருந்த தூரத்தை அந்த இரவில் இலக்கியக் கிறக்கத்துடன் நடந்து வந்து சேர்ந்தேன். புத்தகத்துக்குள் வைத்திருந்த கவிதையை ஒரு நொடி ஆதுரத்துடன் படித்துவிட்டுக் கசக்கிப் போட்டேன். அந்தப் பதின் வயதில் இலக்கியம் அவ்வளவு சிக்கலில்லாத ஈர்ப்பாகத் தோன்றியது.  அதை மறைமுகமாகப் பேணியதில் ஞானிக்குப் பங்குண்டு என்று  எண்ணுகிறேன். அதன் பிறகு இணக்கமாகவும் அவ்வப்போது
பிணக்குடனும் அந்த உறவு நீடித்தது, நிரந்தரமாகக் கோயம் புத்தூரை விட்டு வெளியேறும் காலம் வரைக்கும். ஞானியுடன் நான் நடந்த தூரம் ஏறத்தாழப் பத்தாண்டுகள். அந்தக் காலப் பகுதியில் கிடைத்த நட்புகள், மேற்கொண்ட வாசிப்புகள், வாய்த்த அனுபவங்கள், அடைந்த பாதிப்புகள்தாம் இன்றைய நான் என்று நம்புகிறேன். இப்படிச் சொல்லக்கூடிய சிலராவது தமிழிலக்கியச் சூழலில் இருப்பார்கள் என்பது அனுமானம். அவர்கள் எல்லாரும் ஞானிக்குக் கடமைப்பட்டவர்கள்.

oசென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் கோவையில் இயங்கிய இலக்கியச் செயல்பாட்டு மையங்களில் ஒன்றாக இருந்தது ஞானியின் நண்பர் வட்டம். வேறு சிறுசிறு அமைப்புகள் இருந்த போதும் இலக்கியத்தைச் சீரிய பார்வையுடன் அணுகியது இந்த வட்டம்தான். அதன் இலக்கிய ஈர்ப்பு மையமாக ஞானி இருந்தார். இவரது வீடு இலக்கியவாதிகளின் முகாமாகவும் இலக்கிய ஆர்வலர்களின் பயிற்சிக் கூடமாகவும் இருந்தது.


தனி உரையாடல், இலக்கியக் கூட்டங்கள், பத்திரிகை முயற்சிகள் போன்ற செயல்கள் மூலம் கோவையில் இலக்கியச் சூழலுக்குரிய தட்பவெப்ப நிலையை உருவாக்கியிருந்தார். மாதத்தின் எல்லா இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளிலும் வடகோவையிலுள்ள தேசிய தனிப் பயிற்சிக் கல்வியகத்தில் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும். புத்தக அறிமுகங்கள், விமர்சனங்கள், கலந்துரை யாடல்கள், இரங்கல்கள் என்று கூட்டத்தின் போக்கு இருக்கும். இலக்கியத்தின் வாயிலாக நண்பர்களைப் பெற்றது இந்தக் கூட்டங்களில்தான். அன்று நிமல விஸ்வநாதன் என்று
அறியப் பட்டிருந்த பாதசாரி, அறிவன், அமரநாதன். யமுனா புத்திரன், சி.ஆர்.ரவீந்திரன், சூரியகாந்தன், திலீப்குமார், ஆறுமுகம், அக்கினிபுத்திரன், பா.செயப்பிரகாசம், குறிஞ்சி, இளமுருகு, ஜன சுந்தரம், கோவைவாணன் என்ற துரை, யுகசிற்பி என்ற சுரேந்திரன், டால்ஸ்டாய் மொழிபெயர்ப்பாளரான டி.சி. ராமசாமி, மார்க்சிய நூல்களின் மொழிபெயர்ப்பாளரான சிங்கராயர், அபூர்வமாக விஜயா பதிப்பகம் வேலாயுதம், சமயங்களில் ஈரோட்டிலிருந்து ஓடை பொ. துரையரசன், முத்துப்பொருநன் என்று இலக்கிய ஆர்வத்தின் பன்முகங்களைப் பார்த்ததும் பழகியதும் இந்தக் கூட்டங்களில்தாம்.


ஒரு கட்டத்தில் நானும் பேச்சாளானாக உருமாறியிருந்தேன். கணிசமான கூட்டங்களில் எழுதி வாசித்திருக்கிறேன். இரண்டு கூட்டங்கள் இப்போதும் நினைவில் இருக்கின்றன. ஒன்று - ஓ.வி. விஜயனின் தர்மபுராணம் நாவலை அறிமுகப்படுத்திப் பேசிய கூட்டம். அதைச் சீருடை அணியாத ஒரு போலீஸ்காரர் குறிப்பெடுத்தார். மறுநாள் விசாரணைக்கு அழைத்தார்கள். அது நெருக்கடிநிலைக் காலம். இன்னொன்று - தி.ஜானகிராமனின் மறைவையொட்டி நடந்த இரங்கல் கூட்டம். எழுதிவைத்த
பேச்சை அழுகையுடன் வாசித்தேன். இந்த மாதாந்திரக் கூட்டங்கள் அல்லாமல் எல்லா வருடமும் பள்ளி விடுமுறைக் காலத்தையொட்டி ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெறும். இந்தச் சிறப்புக் கூட்டங்களில் தான் சி.சு. செல்லப்பாவையும் சுந்தர ராமசாமியையும் அசோக மித்திரனையும் வண்ணநிலவனையும் முதன் முதலாகப் பார்த்தேன். மலையாளக் கவிஞர்களான அய்யப்ப பணிக்கர், கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் ஆகியவர்களின் வருகையை யொட்டியும் சிறப்புக்
கூட்டங்கள் கூடின.இப்போது தகவல்களாகத் தென்படும் இந்த விவரங்கள் நிகழ்வு களாக நடந்தேறிய தருணங்கள் சொல்லி மாளாத உத்வேகத்தைக் கொடுத்தன. அதே உத்வேகத்தை ஞானியுடனான உரையாடல் களும் அவருடைய சொற்பொழிவுகளும் தந்திருக்கின்றன. சரியாகச் சொன்னால் ஞானி என்ற எழுத்தாளரைவிடவும் ஞானி என்ற பேச்சாளர் கூடுதல் இலக்கியத் தன்மை கொண்டவர். ஒரு படைப்பைப் பற்றிய அவருடைய சிந்தனைகள் பேச்சில் சோபித்த அளவுக்கு எழுத்தில் வரவே இல்லை. ஜே. கிருஷ்ணமூர்த்தியைப்
பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தவை சிந்தனைக்குள் பெரும் கதவுகளை விரியத் திறந்துவைத்தன. ஆனால் அதே பொருள் பற்றி அவர் எழுதிய மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு என்ற நூல் ஜே. கிருஷ்ணமூர்த்திக்கு வெகு அப்பால் இருந்தது. பிரமிள் பற்றிய கட்டுரையும் அதே தன்மையில்தான் அமைந்திருந்தது. பிரமிளின் எளிதில் வசப்படாத சிலகவிதைகளை நேர்ப்பேச்சில் ஞானி விளக்கியபோது அடைந்த அனுபவம் ஓர் அரும்பு கட்டவிழ்ந்து மலராக விரிவதை உணரும் பரவசத்தைத் தந்தது. ஆனால் அந்தக் கவிதைகளைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரை - ‘தர்மூ சிவராமு  கவிதைகளினோடே ஒரு நெடும் பயணம்’ - மணற் சரிவில்
காலிடறிய திகைப்பையே அளித்தது.இலக்கிய வாழ்க்கையின் எல்லாக் கட்டங்களிலும் ஞானி தன் கைவசம் ஒரு சிறு பத்திரிகையை வைத்திருந்திருக்கிறார். காத்திரமான இலக்கிய நடவடிக்கைகளைச் சிற்றேடுகளின் மூலமே மேற்கொள்ள முடியும் என்ற சீரிய அறிவாளர்களின் அல்லது இலக்கியவாதிகளின் மரபணுக்குணம் அது. அறுபதுகளின் இறுதியில் அல்லது எழுபதுகளின் தொடக்கத்தில் ஆதி என்ற புலவர் இராசியண்ணன் துணையுடன் புதிய தலைமுறை என்ற இதழை நடத்தியிருக்கிறார். எஸ்.என். நாகராசனும் எஸ்.வி. ராஜதுரையும்
அதன் பங்கேற்பாளர்கள். இலக்கியம், மாற்றுச் சிந்தனை ஆகியவற்றுக்குக் களமாக இருந்த அந்த இதழ் மரபின் தொடர்ச்சி யாகவே ‘வானம்பாடி’ இயக்கத்தின் தோற்றத்தையும் அந்த விலையிலாகக் கவிமடலின் பரவலையும் கணிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். வானம்பாடி இயக்கத்தின் ஆரம்பகர்த்தர்கள் ஞானியும் முல்லை ஆதவனும்தான். ஆனால் இயக்கம் பிளந்த பின்னர் ஞானி மறக்கப்பட்டார். ‘வெளிச்சங்கள்’ என்ற பெயரில் வெளிவந்த வானம்பாடிக் கவிதைத் தொகுதி அதை ஆவணப் படுத்தியிருக்கிறது. வானம்பாடியின் இழப்பை ஈடுகட்ட வேள்வி
என்ற இதழையும் ஞானி நடத்தினார். வானம்பாடியின் சிறகடிப்பில்
வேள்வியின் கனல் அவிந்துவிட்டது. பின்னர் பரிமாணம். தனிச்
சுற்றிதழாக வெளியான அது சில இதழ்களோடு முடிவடைந்தது.


தொடர்ந்து வெளிவந்த நிகழ்தான் ஞானியால் நீண்ட காலம் நடத்தப்பட்ட பத்திரிகை. அதன் ஆரம்ப காலத் தலைப்பெழுத்தும் முதலிரண்டு இதழ்களின் ஆசிரியத்துவமும் என்னுடையது என்று யோசிக்கும்போது பெருமிதத்தைவிட ஞானியின் பெருந்தன்மை தான் முன்நிற்கிறது. மனுஷ்யபுத்திரன், ஜெயமோகன், சல்மா போன்றோரின் படைப்புகள் நிகழில் வெளியானது கூடுதல் இலக்கியக் கவனத்துக்குத் துணை புரிந்தது. ஞானியின் இந்த முயற்சிகளெல்லாம் ஓர் இலக்கியத் தோழமையின் வெளிப்பாடுகள். ஒரு சாதாரணப் பள்ளித் தமிழாசிரியரான அவரின் இந்தப்
பங்களிப்பு எந்தப் பல்கலைக்கழக இலக்கியத் துறையின்
சாதனையையும்விட அழுத்தமானது. விரிவானது.

oமேற்கத்திய நாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி - ஐம்பதுகளும் அறுபதுகளும் - கொந்தளிப்பும் எழுச்சியுமாக இருந்தது. அதுவரை பேணப்பட்ட கருத்தாக்கங்கள் மறு விசாரணைக்குள்ளாயின. அரசியல் கொதிப்புகளும் கலாச்சார மாற்றங்களும் வாழ்வியல் சிந்தனைகளை உலுக்கின. அந்த உலுக்கல்கள் இந்தியச் சூழலில் கொஞ்சம் தாமதமாக
எழுபதுகளில் அதிர்வுகளை ஏற்படுத்தின. குறிப்பாக மார்க்சிய
வளாகங்களில் பெரும் விவாதங்கள் எழுந்தன. அதன் தமிழ் விளைவுதான் ஞானியின் சிந்தனைகள். அவர் மார்க்சியத்தை வெறும் சமூக அறிவியலாகவோ அரசியல் திட்டமாகவோ பார்க்கவில்லை. அதை முழுமையான தத்துவக் கோட்பாடாக முன்வைத்தார். அதன் முதன்மையான சிக்கல் மார்க்சியத்தை எப்படிப் பார்ப்பது என்பதுதான்.

ஒரு சமூகத்தின் இருப்புக்கும் மேம்பாட்டுக்கும் பொருளாதாரமே
அடிப்படை. பொருளுற்பத்தி, விநியோகம், உற்பத்தி உறவுகள் இவையே ஒரு சமூகத்தை வடிவமைக்கின்றன. அதுவே அடித்தளம். அதன்மீதுதான் பிறமானுடச் செயல்கள் நிகழ்கின்றன. அது மேற்கட்டுமானம். சமூகத்தை முன்னிறுத்தும் ஒரு மார்க்சியர் கவனம் கொள்ள வேண்டியது அடித்தளம் பற்றி மட்டுமே. போராட்டத்தின் மூலம் அடித்தளம் மாற்றப்படுமானால் மேற் கட்டுமானம் தானாகவே மாறிவிடும். இந்த அர்த்தத்திலான
மார்க்சியக் கோட்பாடே முன்வைக்கப்பட்டிருந்தது. தமிழ் இலக்கியத் திறனாய்விலும் இந்தப் போக்கே கடைபிடிக்கப் பட்டிருந்தது. இதன் விளைவு மொழியின் முக்கியமான படைப்பாளுமைகள் விலக்கப்பட்டனர். அல்லது பிற்போக்காளர் களாக ஒதுக்கப்பட்டனர்.மேற்கத்திய மார்க்சியக் கோட்பாடுகளின் அடியொற்றி இங்கும்
கையாளப்பட்ட விமர்சனப் போக்குக்கு எதிரான முனையில் இருந்தவர் ஞானி. மேற்கட்டு மானத்தில் உட்படுத்தப்பட்ட பண்பாடு, மதம் ஆகியவை அடித்தளத்தையும் பாதிக்கும் என்ற சிந்தனை ஐரோப்பிய மார்க்சியர்களில் சிலரிடமிருந்தது. இந்திய மார்க்சியர்களில் கே. தாமோதரன், தேவி பிரசாத் சட்டோ பாத்தியாயா, டி.பி. முகர்ஜி போன்றோர் இந்தச் சிந்தனையைக் கொண்டிருந்தவர்கள். ஞானியை அந்த வரிசையில் வந்தவர் என்று சொல்லலாம். பண்பாட்டுக் கூறுகள் சமூக வடிவத்தில் தொடர்ந்து
நிலைபெற்றிருக்கும் என்றும் கலாச்சாரம் நிரந்தரமானது என்றும் சொன்ன டி.பி. முகர்ஜியுடன் ஞானியை ஒப்பிடவே எனக்கு விருப்பம். டி.பி. முகர்ஜி இந்திய மரபு என்று வரையறுத்தவற்றைத் தமிழ் மரபு என்று ஞானி மறு ஆக்கம் செய்தார். இந்தக் கோணத்தில்தான் அந்நியமாதல் என்ற கருத்தாக்கத்தையும் முன்வைத்தார். மார்க்சின் கருத்துப்படி மனித உழைப்பு ஒரு படைப்புச் செயல். அது அவனை
மகிழ்ச்சியாகவைத்திருப்பது. ஆனால் அந்த உழைப்பு அவனுக்குப்
பயனையோ மகிழ்ச்சியையோ அளிக்காத நிலையை முதலாளியம்
உருவாக்குகிறது. உழைப்பை மட்டும் வழங்குகிற அவன் அதன்
பலனிலிருந்து விலக்கப்படுகிறான். அந்நியப்படுத்தப்படுகிறான். மார்க்சிய ஆய்வுகளிலிருந்து லூயி அல்தூசர் பகுத்தெடுத்த இந்தச் சிந்தனையை ஞானியும் அவரது சகாவான எஸ்.என். நாகராசனும் பரவலான சிந்தனைக்கு விட்டார்கள். அந்நியமாதலின் துக்கத் தையும் அதற்கு எதிரான தனிமனித சமூகக் குறுக்கீடுகளையும் ஆய்வதையே தனது இலக்கியக் கோட்பாடாக ஞானி வகுத்துக் கொண்டார்.மேற்கத்தியச் சிந்தனையாளர்களில் யூகோஸ்லாவிய மார்க்சியரான மிலோவன் ஜிலாசும் இத்தாலிய மார்க்சியரான அந்தோனியோ கிராம்ஷியும் ஞானியின் முன்னோடிகளாக இருக்கலாம் என்று யூகிக்கிறேன். ஜிலாசின் வாழ்க்கையை பற்றி ஒரு மாலை நேரச் சந்திப்பில் ஞானி பேசிக் கொண்டிருந்தது ஒரு செவ்வியல் திரைப்படம்போல இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் சோவியத் ஆதரவாளராகவும் ஸ்டாலினின் தோழராகவும் இருந்த ஜிலாஸ் யூகோஸ்லாவிய தேசியப் பிரச்சினையால் ஸ்டாலினுடன் முரண்பட்டார். யூகோஸ்லாவியா சோவியத் யூனியனின் காலனியாக இருந்தால்போதும் என்ற ஸ்டாலின் நிலைப்பாடுதான் ஜிலாசை எதிர்நிலைக்குத் தள்ளியது
என்று ஞானி குறிப்பிட்டதாக ஞாபகம்.


ஞானியை வழமையான மார்க்சிய விமர்சகராவும் இலக்கியத்
திறனாய்வாளராகவும் மட்டும் சுருக்கிவிட முடியாது. அவரது விமர்சனம் ஒரு பண்பாட்டு ஆய்வாளனுடையது. இலக்கியம் கலை
ஆகியவற்றுக்கான சமூகத் தேவை பற்றியும் மதத்தின் தேவை பற்றியும் அவர் முன்வைத்த சிந்தனைகள் தமிழில் மார்க்சிய அழகியலுக்கான வாசல்கள். ஆனால் அந்த வாசல்களை தேவைக்கும் அதிகமான தத்துவ முட்டுக்கட்டைகள் போட்டு அனுமதி மறுக்கப்பட்ட பிரதேசமாக மாற்றியவரும் அவர் தான் என்று தோன்றுகிறது. ஒரு கலைப்படைப்பு அளிக்கக்கூடிய அனுபவத்தையும் அதிலிருந்து பெறக்கூடிய நுண் விவரங் களையும் அதன் பயனாளன் பெற உதவுவதற்கு மாறாக மார்க்சிய
அடிப்படையில் உருவாக்கிய கருத்துநிலையை முன்வைத்து விடுகிறார் ஞானி.  உதாரணத்துக்கு ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலை அவர் மதிப்பிடுவது. ஹென்றி என்ற மையக் கதாபாத்திரத்தை வைத்துத்தான்,  அவரது விமர்சனக் கருவிகள் செதுக்கிச் செதுக்கி அந்தப் பாத்திரத்துக்கு ஒரு
ரிஷிக்கோலத்தைக் கொடுத்துவிடுகின்றன. அவர் எதிர்பார்க்கும் ஹென்றி அது. ஆனால் அதுவல்ல படைப்புக்குள் நாம் சந்திக்கும் ஹென்றி. ஞானியின் கருத்துக்கிதமான சில அம்சங்கள் உள்ளவன் என்பதனாலேயே ஹென்றி அப்படியாக்கப்படுகிறான். இதே துரதிர்ஷ்டம் ஜோசப் ஜேம்சுக்கும் (ஜே.ஜே: சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி), அழகிரிக்கும் (பிறக - பூமணி) நேர்ந்ததை ஒரு வாசகனாகத் துக்கத்துடன் உணர்ந்திருக்கிறேன். கலையும் படைப்பும் கோட்பாட்டை ஏய்த்துத் தப்பி நிற்கவே விரும்பும்
என்ற பாடத்தை ஞானியின் விமர்சனம் பலமுறையும் எச்சரிக்கையாக உணர்த்தியிருக்கிறது.

o

இங்கே விரிவாகக் குறிப்பிட்டுச் சொன்ன எந்த விமர்சனத்தையும் நான் ஞானியுடனான நாட்களில் முன்வைத்ததில்லை. அவர் கருத்துக்கு மாற்றான கருத்துகளை வாசிப் பின் மூலமும் சிந்தனையின் மூலமும் உருவாக்கி வைத்துக்கொள்வதைத் தவிர விவாதத்தில் ஈடுபட்டதில்லை. வெளிக் காட்டிக்கொள்ளாத ஆசிரியப் பற்று காரணமாக இருக்கலாமோ என்னவோ? தெரியவில்லை. எண்பதுகளின் பிற்பகுதியில் அவருடனான
தொடர்புகள் மெல்லக் கழன்றுபோயின. வாழிடம் மாறியதும் தொடர்புகள் கிட்டத்தட்ட அறுபட்டேபோயின. அதற்குள் சோவியத் யூனியன் உடைந்து போயிருந்தது. மார்க்சியம் காலாவதியாகி விட்டது என்ற முழக்கங்கள் எழத் தொடங்கியிருந்தன. தொண்ணூறுகளில் கோர்ப்பச்சேவ் பெரஸ்த்ரோய்க்கா, கிளாஸ்நாஸ்ட் என்று உச்சரிக்கத் தொடங்கிய போதே அதன் பின் விளைவுகள் இன்னதாக இருக்கும் என்று முன்கூட்டிச் சொன்னவர் ஞானி. அப்படி உருவான வெற்றிடத்தில் அவர் தமிழ்த் தேசியத்தை நிறுவிக் கொண்டார் என்று சொல்லலாம். அதற்காகவே ஒரு
சிற்றிதழையும் - தமிழ் நேயம் - தொடங்கினார். தொண்ணூறு களுக்குப் பிந்தைய அவருடைய சிந்தனைகளையும் எழுத்துக் களையும் என்னால் பின் தொடர முடியவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அவருக்குப் பார்வையில்லை. அது
அவருடைய செயல்பாட்டுக்குத் தடையாகவும் இல்லை. முன்னைவிடஅதிகமாக வாசிக்கிறார். அதைவிட அதிகமாக எழுதுகிறார். இதுவரைக்கும் ஞானி பல லட்சம் பக்கங்களை வாசித்திருக்கிறார். சில ஆயிரம் பக்கங்களைக் கொடுத்திருக் கிறார். இவை தமிழ்ச் சூழலில் என்ன விளைவுகளை ஏற்படுத்தின என்று அறிய ஆர்வமாக இருக்கிறது.


பொய்யான மௌனமோ தந்திரமான புறக்கணிப்போதான் பதிலாக
இருக்குமென்றாலும் ஆசைப்படுவதில் தப்பில்லை. கல்லூரிப்
பருவத்துக்கு வந்த பின்னரும் பள்ளியில் தமிழ் கற்பித்த ஆசிரியருடன் எனக்கு உறவு இருந்தது. அவர் சொன்னார்: ‘பழனிச்சாமிதானே, அவர் தமிழ்ப் பகைவரான தமிழாசிரியர்’. மார்க்சிய ஆதரவாளரான கல்லூரி ஆசிரியர் சொன்னார்: ‘அவர் மார்க்சியத்துக்கு எதிரானவர்’. ஞானியின் இருப்பின் இருமுனைகள் எவையோ அவற்றையே அவர்கள் அசைத்தனர். அவர்கள் மட்டுமல்ல; பண்டிதத் தமிழ் அறிஞர்களும் வறட்டு மார்க்சியர்களும் இதே பொதுப் புகாரை அவர் மேல் சொல்லிக் கேட்டதுண்டு. அந்த அளவுக்கு நவீன மனப்பான்மையுடையவர் ஞானி. தமிழுக்குப் பதிலாக ஆங்கிலத்தில் எழுதியிருப் பாரானால் இன்னும் பெரிய ஆளுமையாகக் கொண்டாடப்பட்டிருப்பார் என்று தோன்றுவ துண்டு. பதின்பருவத்தில் இலக்கிய ஆர்வத்துடன் ததும்பிக் கொண்டிருந்த ஓர் இளைஞனுக்குக் கிடைத்த வழிகாட்டி என்பதே ஞானியின் மீதான என் மரியாதை. அந்த வயதில் அப்படி ஒருவர் வாய்த்தது எனது நல்லூழ். 2009 ஆம் ஆண்டுக்கான இயல் விருது அவருக்கு அளிக்கப்படுகிறது. 

அறியப்பட வேண்டிய முறையில் அறியப்படாமலும் அங்கீகரிக்கப் பட வேண்டிய வகையில் அங்கீகரிக்கப்படாமலும் போன இலக்கிய ஆளுமை கோவை ஞானி என்று எப்போதும் யோசிப்பதுண்டு. அந்தக் குறையை இந்த விருது போக்குகிறது. ஓர் இலக்கிய ஆளுமை கௌரவம் பெறும்போது அவருடைய வாசகனுக்கும் பெருமிதம் ஏற்படும். அதைவிடவும் அதிகமான பெருமிதம் அவரால் ஆற்றுப் படுத்தப்பட்ட இலக்கிய ஆர்வலனுக்கு இருக்கும். எனக்கிருப்பது கூடுதல் பெருமிதம். அந்த உணர்வில் ஞானிக்கு வாழ்த்துகள்.


கனடா தமிழ்த் தோட்டத்தின் வாழ் நாள் சாதனைக்கான இயல் விருது ஞானிக்கு 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதையொட்டி எழுதி, காலச்சுவடு இதழில் வெளிவந்த  கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக