புதன், 24 ஜூலை, 2013

அப்பாவின் வாசனை


அப்பா காலமானபோது எனக்கு வயது நாற்பத்து மூன்று. அவருக்கு அறுபத்து ஐந்து தாண்டியிருக்கலாம்.உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஒன்றிண்டு வயது குறைவாகவும் இருக்கலாம். அப்பாவின் வயதை நிர்ணயிக்க உதவும் ஆதாரம் எதுமில்லை. அவருக்கு ஜாதகம் எழுதப்பட்டிருக்கவில்லை. அலுவலகப் பதிவேட்டில் கொடுத்திருந்த வயதும் சரியானதல்ல. வேலைக்குச் சேர்ந்த போது  தோற்றம் சின்னப் பையனுடையதாக  இருந்ததால் வயதைக் கூட்டிச் சொன்னார்களாம். அதனால் நிர்ணயிக்கப் பட்டதற்கு ஓரிரு வருடங்கள் முன்பே பணிலிருந்து ஓய்வு பெற வேண்டியிருக்குமே என்ற ஆதங்கம் வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்தே அப்பாவுக்கு இருந்திருக்கிறது.

அப்பாவின் ஆயுளில் நாற்பத்து மூன்று வருடங்கள் எங்கள் இருவருக்கும் பொது. அப்படியும் சொல்ல முடியாது. பிறந்த ஓராண்டுக்குள் அப்பாவின் சகோதரியால் எடுத்துச் செல்லப்பட்டு எட்டு வயதுவரை அவர்கள் பராமரிப்பில் வளர்ந்தேன்.அந்த எட்டு வருடங்களைக் கழித்தால் அப்பாவுக்கும் எனக்கும் இருந்த அணுக்கத்தின் வயது முப்பத்தைந்து மட்டுமே.

இந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் ஐந்து அல்லது ஆறு முறை, இல்லை யில்லை சரியாக ஆறு தடவைகள் அவரைத் தொட்டிருக்கிறேன். தற்செயலாகப் பட்டுக்கொண்டதோ  அவர்  சுய நினைவுடன்  இல்லாதபோது ஸ்பரிசிக்க நேர்ந்ததோ அடிக்க வந்தபோது தடுத்துக் கொண்டதோ மனம் ஒப்பித் தொட்டது ஆகாதே. 'சின்னக் குழந்தையாக இருந்தபோது கூட அவர் என்னைத் தொட்டது இல்லையா?' என்று அம்மாவிடம் ஒருமுறை கேட்டிருக்கிறேன். 'இல்லை, அவருக்குச் சின்னக் குழந்தையை எப்படித் தூக்குவது என்று தெரியாது' என்றாள் அம்மா. என்னுடைய பத்தொன்பதாவது வயதில் ஒரு புத்தாண்டு நள்ளிரவில் எனக்குத்  தம்பி பிறந்தான். அம்மாவுக்குத் துணையாக மருத்துவமனைக்கு வந்திருந்த ராஜம்மாவின் கையிலிருந்து அழுக்குப் பஞ்சில் செய்த பூப்போலிருந்த குட்டி ஜீவனை நூறு பிரசவங்கள் பார்த்த தாதியின் லாகவத்துடன் கைகளில் வாங்கினேன். எட்ட நின்றிருந்த அப்பா கிணற்றுக்குள் பார்ப்பதுபோல அதை எட்டிப் பார்த்தார். அமுதக் கலசத்தை அலுங்காமல் கையில் வைத்திருக்கும் கர்வத்துடன் அப்பாவின் முகத்தையும் பார்த்தேன். என்னைத் தீண்ட மறந்ததைச் சுட்டிக் காட்டும் இனிய பழிவாங்கல் அந்தப் பார்வை.

முதல்முறையாக அப்பாவைத் தொட்டது எந்த வயதில் என்பது ஞாபக மில்லை. ஆனால் அந்த நாளின் காட்சியும் வாசனையும் இன்றும் நினைவில் இருக்கின்றன.

அன்றைக்கு அத்தை வீட்டிலிருந்து வந்திருக்கிறேன். அப்பா வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். வாசலில்சைக்கிளுக்கு ஸ்டாண்ட் போடும் ஓசை கேட்டதும் ஓடிப் போய்ப் படியேறி வரும் அப்பாவைக் கட்டிக் கொள்கிறேன். அவர் உதறிப் போட்ட செருப்புகளில் கால்களை நுழைந்துக் கொள்கிறேன். டயர் அடிப்பாகமுள்ள காலணிகளை இழுத்துக்கொண்டு நடந்து என் முகத்தை அவருடைய வயிற்றில் பதித்துக் கொள்கிறேன். இரண்டு கைகளாலும் அவருடைய இடுப்பை வளைத்துக் கட்டிக் கொள்கிறேன். அப்பா  அரை டிரவுசர்போட்டிருக்கிறார். அப்போதெல்லாம் ஒயர்மென்னின் சீருடை காக்கிச் சட்டை; காக்கி அரை டிரவுசர். பின் இடுப்புப் பக்கத்தில் பெல்ட்டில் சொருகி யிருக்கிற கட்டிங் ப்ளையர் கையில் நெருடுகிறது.  அதன் வெளியே துருத்தி யிருக்கும் பிடியை ஒருமுறை அழுத்துகிறேன்.டிரவுசருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு பிடி அப்பாவின் உடம்பை அழுத்தியிருக்க வேண்டும். அவர் அதை உருவி எடுத்து வலது கையில் பிடித்துக் கொள்கிறார். இடது கையால் அவருடைய இடுப்பில் கோர்த்திருக்கும் என் கைகைகளைப் பிரித்து என்னைத் திருப்பி நிறுத்துகிறார். நான் அவர் கையை விடாமலிருந்தேனா அல்லது அவர் என் வலது கையைப் பிடித்திருந்தாரா? தெரியவில்லை. தூக்கிய கையுடன் கால்களை அகட்டி வைத்துப் பெரிய செருப்புகளை இழுத்தபடி 'தத்தக்கா புத்தக்கா' என்று நடந்து வீட்டுக்குள் நுழைகிறேன்.

அந்த முதல் நெருக்கத்தில் அப்பாவிடமிருந்து வெவ்வேறு வாசனைகள் வீசியதை முகர்ந்தேன். சற்று முன்புதான் சலூனுக்குப்போய்ச் சவரம் செய்திருப்பார்போல. அவர்மேல் படிக்காரமும் மரிக் கொழுந்தும் கலந்த மணம் தங்கியிருந்தது. வியர்வையின் இளநீர் வாடையும் காக்கி உடைகளின் துவர்ப்பான கஞ்சி வாடையும் இருந்தன.கட்டிங் ப்ளையரை வைத்திருந்ததால் இரும்பின் நெடி இருந்தது. எல்லாவற்றையும் மிஞ்சி  சிகரெட் வாசனையும் இருந்தது. அந்த வாசனைக் கூட்டணி எனக்குப் பிடித்திருந்தது. அப்பாவையும் பிடித்திருந்தது. எல்லா அப்பாக்களும் இது போன்ற கலவைவாசனையுடன் தான் இருப்பார்கள் என்பது பிள்ளைப்பருவ ஞானமாக இருந்தது. அப்பாவுக்குச் சுயமாகச் சவரம் செய்து கொள்ளத் தெரியாது என்பது அந்த ஞானத்தில் வாய்த்த இன்னொரு தகவல். அப்பாவுடனிருந்த நாட்களில் ஒருநாள்கூட அவராக முகம் மழித்துக் கொள்வதைப் பார்த்ததில்லை. நான் வயதுக்கு வந்த பிறகுதான் ஷேவிங் செட் உருப்படிகள் வீட்டுக்கு வந்தன. ஒருமுறையாவது அப்பாவுக்கு முகம் மழித்து விடவேண்டும் என்பது கனவாக இருந்தது. அவர் முகத்திலிருந்து யூடிகொலேனோ டெட்டாலோ வாசனையடிப்பதாகப் பல நாட்கள் கற்பனை செய்திருக்கிறேன்.

இனி அத்தை வீட்டிலிருப்பதில்லை என்ற முடிவுடன் பிறந்த வீட்டுக்கே வந்தபோது அப்பா நெருக்கமாக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி அமையவில்லை. அப்பாவின் உலகத்துக்கு வெளியில்தான் எனக்கு இடமிருந்தது. அந்த உலகத்தின் வாசலில் எப்போதாவது எட்டிப் பார்க்கும் போது ''என்னடா, என்ன வேணும்?'' என்று கேட்பதைத் தவிர அவருக்கு என்னுடன் பேச எதுவும் இல்லாமலிருந்தது. எனக்குப் பின்னால் பிறந்த உடன்பிறப்புகள் உல்லாசமாக நடமாடிய அந்த உலகம் எனக்கு மட்டும் அடைக்கப்பட்டதாக இருந்தது. அதற்குள் நுழைய எனக்குக் கடைசிவரை அனுமதி  கிடைக்கவே இல்லை.

சம்பள நாளில் அப்பாவின் வாசனை வேறாக இருக்கும். அந்த மணமுள்ள அப்பாவுக்காகக் காத்திருப்பது ஆனந்தமாக இருக்கும். வரும்போதே நகரத்தின் பிரசித்தி பெற்ற அசைவ உணவகத்திலிருந்து பிரியாணிப் பொட்டலங்களை வாங்கி வருவார். சைக்கிளின் ஹாண்டில்பாரில் மாட்டியிருக்கும் பையை எடுத்துக் கொண்டு உள்ளே வந்ததும் வீடேமசாலா வாசனையை முகர்ந்து  விடைத்துக் கொள்ளும். ஒவ்வொரு பொட்டலமாக எடுத்துப் பிரித்து பரப்பி வைப்பார்.எல்லாரும் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்குவோம். அப்பா தன் பங்கு பிரியாணியிலிருந்து இறைச்சித் துண்டுகளைத் தேடி எடுத்து தங்கைக்கு ஊட்டுவார். அவள் அதை மென்று விழுங்கும்வரை அவருடைய கை அவள் முகத்துக்கு அருகிலேயே இருக்கும். அப்பாவுக்கு நீளமான விரல்கள். அதில் ஆள் காட்டி விரல் நகம் மட்டும் பறவையின் அலகுபோலக் கூர்ந்து நீண்டிருக்கும். வேலை செய்யும்போது ஏற்பட்ட சின்ன விபத்தில் அடிபட்டு அந்த விரல் பறவையாகிருந்தது. கை நீண்டிருக்கும்போது குஞ்சுக்கு உணவூட்டும் பறவையின் தலைபோல இருக்கும். நானும் வாயைப் பிளந்து கொண்டிருப்பேன். அடுத்த ஊட்டல் எனக்குத்தான் என்று நாக்கில் எச்சில் சுரந்து கொண்டிருக்கும். ஆனால் ஒருபோதும் பறவைத்தலை என்னை நோக்கித் திரும்பியதில்லை. எச்சிலை விழிங்கிக் கொண்டு தின்று தீர்ப்பேன்.
ஒருமுறை பிரியாணி தினத்தில் தங்கையை நோக்கி நீண்ட அப்பாவின் கையை வலிந்து என் பக்கமாகத் திருப்பி இறைச்சித் துண்டைக் கவ்விக் கொண்டேன். அந்தத் துண்டுக்கு என்னுடைய இலையில் இருந்த 'சீஞ்சிக் காயை' விட அலாதியான ருசியும் மணமும் இருந்தது. அப்பா அதிர்ந்துபோய் முறைத்துப் பார்த்தார். கையை உதறினார். 'ஏன் நீயாக எடுத்துச் சாப்பிட மாட்டியா?'' என்று கேட்டார். அதுதான் இரண்டாம் முறையாக அவரைத் தொட்ட ஞாபகம்.

ஒன்றிரண்டு சம்பள நாள்களுக்குப் பிறகு அசைவ உணவைச் சாப்பிட மாட்டேன் என்று விரதமிருக்கத்தொடங்கினேன். தொடர்ந்து சில வருடங்கள் சாக பட்சணியாகவே இருந்தேன். அப்பாவின் வாசனையே இல்லாம லிருந்தேன். அதுபோன்ற ஏதோ ஒரு தருணத்தில்தான் அப்பாவிடமிருந்து விலகத் தொடங்கினேன். அவர் இருக்குமிடத்தில் நான் இல்லாமலிருக்கும் படிப் பார்த்துக் கொண்டேன். அவர் முன்னறையில் இருந்தால் நான் புழக்கடையில். அவர் வீட்டிலிருந்தால் நான் வெளியில்.

1970 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முப்பதாம் தேதிக்குப் பிறகு அப்பாவின் வாசனை மாறத் தொடங்கியது. தமிழ் நாட்டில் மது விலக்கு நீக்கப்பட்டது அன்றிலிருந்துதான்.

ஆரம்பத்தில் ஆறு மாதத்துக்கு ஒரு தடவையோ வருடத்துக்கு ஒரு தடவையோ அப்பாவிடமிருந்து நொதித்த பழங்களின் வாடை வீசத் தொடங்கியது. 'அது வேறொன்றுமில்லை, வயிற்று வலிக்காகச் சாப்பிடுகிற கஷாயம்' என்று விளக்கம் சொன்னாள் அம்மா.  சில வருடங்களுக்குப் பிறகு அந்த வாசனை வீடு முழுக்கத் தேங்கி நின்றது. அதே வாசனையுடன் பள்ளிக் கூடத்துக்கு எஸ் எஸ் எல் சி புத்தகத்தில் கையெழுத்துப்போட அப்பா வந்தார். பள்ளி அலுவலக அறைக்குள் அப்பாவின் வாடை பரவியது. நடுங்கும் கையால் அப்பா கையெழுத்துப் போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த என்னிடம் அப்பாவின் நண்பரும் பள்ளியின் எலெக்ட்ரீஷியனும் பியூனுமானவர் கேட்டார் '' ஒங்க அப்பா எப்போடா கருணாநிதி கட்சியிலே சேர்ந்தார்?'முதலில் புரியவில்லை. அப்பா கம்யூனிஸ்ட் கட்சியாச்சே,  அவர் எப்போது திமுகவில் சேர்ந்தார் என்று குழம்பினேன். அப்பா இனிஷியலில்லாமல்தான் கையெழுத்துப் போட்டார். இனிஷியலையும் போடச் சொன்னேன். அவருடைய விரல்கள் அவருடைய இனிஷியலை மறந்திருந்தன. உதவித் தலைமை ஆசிரியரோ அலுவலகப் பணியாளர்களோ கவனிக்காத நொடியில் அவர் போட்ட கையொப்பத்துக்கு முன்னால் நானே அப்பாவின் இனிஷியலைப் போட்டேன்.

சைக்கிள் ஸ்டாண்டிலிருந்து சைக்கிளை வெளியே எடுக்க அப்பா தடுமாறினார்.  உதவி செய்யத் தோன்றாமல் பக்கத்திலேயே நின்றிருந்தேன். அவருடைய நிலையை பள்ளித் தோழர்கள் பார்த்து விடக் கூடாது என்று பயமாக இருந்தது.சைக்கிளை எடுத்து வாசலை நோக்கித் தள்ளத் தொடங்கிய போது மெதுவாகச் சொன்னேன் '' நீங்க இப்பிடி வந்திருக்க வேண்டாம்'' அப்பா  உணர்ச்சியற்ற குரலில் '' எப்பிடி வந்தாலும் நான் உன் தகப்பன் தானே'' என்றார். இடது ஹாண்டில் பாரைப் பிடித்திருந்த அவர் கையை  உணர்ச்சி ததும்பத் தொட்டேன். சில நொடிகளுக்குப் பிறகு அழுகையை அடக்கிக் கொண்டு வகுப்பறையை நோக்கி ஓடினேன்.

பள்ளிப் படிப்பு முடிந்தது. கல்லூரிக் காலத்தில் ஒருநாள் முன்னாள் ஆசிரியரைப் பார்க்கப் போனேன். பார்த்துப் பேசி முடித்து வெளியே வரும் போது அப்பாவின் நண்பர் தென்பட்டார். பார்த்ததும் விசாரித்தார்-'"அழ்ப்பா சவுழ்க்கியமாழா '' . அவரும் கருணாநிதியின் வலையில் வீழ்ந்திருந்தார் என்பதை வன்மத்தோடு ரசித்தேன். சிறப்பு 'ழ' கரம் வழக்கொழிந்து போய் விடாமலிருக்கவும்தான் மதுவிலக்கு ரத்துச் செய்யப்பட்டது என்ற உண்மை அன்று புலப்பட்டது.

அப்பாவுக்கு நகராட்சி மின்சாரத் துறையில் கம்பியாளர் வேலை. அவருக்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதியில் பணியாற்றினால் போதும். ஆனால் அப்பாவுக்கு வேறு பணிகளும் இருந்தன. அவர் தேர்ந்த கேபிள் ஜாயிண்டர். தலைக்கு மேலே போகும் கம்பிகளல்லாமல் மண்ணுக்குள்ளே போகும் கம்பி வடங்களை இணைப்பதில் நிபுணர். நகரத்தில் எங்காவது கேபிள் ஜாயிண்ட் பழுதுபட்டால் அப்பாவுக்கு அழைப்பு வரும். போனால் இரண்டு மூன்று நாட்கள் வீட்டுக்கு வரமாட்டார். ஒருமுறை அப்படிப் போனவர் நாலைந்து நாட்களுக்கு மேலாகியும் வீடு திரும்பவே  இல்லை. இரண்டு நாள் பொறுத்த அம்மா மூன்றாம் நாளிருந்து அலுவலகத்தில் விசாரித்து எங்கே என்று போய்ப் பார்க்கச் சொல்லிக் கொண்டிருந்தாள். வந்து விடுவார் என்று சமாதானப்படுத்தி இரண்டு நாட்களைக் கடத்தினேன். பிறகு அம்மாவின் நச்சரிப்புத் தாங்க முடியவில்லை. அரை மனசுடன் சம்மதித்தேன். அலுவலகத்தில் விசாரித்து இடத்தைத் தெரிந்து கொண்டேன். அரை அடி உயரத் தூக்குப் போசியில் சோற்றையும் மீன் குழம்பையும் அடைத்துக் கொடுத்தாள் அம்மா. அதை எடுத்துக் கொண்டு பேருந்தில் ஏற வெட்கமாக இருந்தது. நடந்தே போனேன்.  வீட்டிலிருந்து ஐந்தாறு கிலோ மீட்டர் தாண்டியிருக்கும் இடத்தில் பெரிய டிரான்ஸ்பார்மர் அருகில் அப்பாவின் குழு கூடாரம் போட்டிருந்தது. அருகிலேயே இன்னும் ஒன்றிரண்டு கூடாரங்கள். பார்த்ததும் தெரிந்தது கூடை, முறம் பின்னுகிறவர்களின் தற்காலிக ஜாகை. அப்பாவின் சைக்கிள் கூடாரத்தை இழுத்துக் கட்டிய கயிற்றையொட்டி நின்றிருந்தது. ஆடி மாதக் காற்று பாயந்து கூடாரம் ஆடியதில் கயிறும் சேர்ந்து ஆடி சைக்கிளின் ஹாண்டில்பாரை அசைத்தது. நானும் குரங்குப் பெடல் அடிக்கக் கற்றுக் கொள்ள உதவிய சைக்கிள் ஆச்சே. என்னை வரவேற்கத் தான் அந்தத் தலையாட்டல்.

அப்பாவுக்குத்தான் வரவேற்கத் தோன்றவில்லை. ''வேலைக்காக வந்திருக்கிறேன். முடிந்ததும் வரமாட்டேனா? அதற்குள் ஏன் தேடி வந்தாய்?'' என்றார். நான் மௌனமாக இருந்தேன். கூடாரத்துக்குள் பார்த்தேன். வேலை எல்லாம் முடிந்து ஏறக் கட்டி வைத்திருந்தது. கொண்டு போன சாப்பாட்டை அப்பா பாதி சாப்பிட்டார். மிச்சத்தை கூடைமுடையும் பெண் ஒருத்தியிடம் எடுத்துப் போகச் சொன்னார். அவள் வந்து 'இது யாரு ஒங்க பையனா?' என்று  என் நெற்றி முடியைக் கலைத்து விட்டுப் போனாள். 'தே கண்ணு இங்க பாரு ஒரு அண்ணன் வந்திருக்கு' என்ற குரல் கூடாரத்துக்குளிருந்து வெளியேறும் முன் அழுக்குப் பாவாடை மட்டும் அணிந்த  மூன்று வயது மாநிறக் குழந்தை அருகில் வந்தது. நெருங்கி நின்று பார்த்தது. அதன் உடம்பிலிருந்து மரிக்கொழுந்து வாசனை துளைப்பதுபோல வீசியது. எப்படி வந்தேன் என்று கேட்டார் அப்பா. நடந்து வந்ததைச் சொன்னேன். 'இந்த வேகாத வெயிலில் ஏன் நடந்து வந்தாய்? பஸ்ஸில் வருவதற்கென்ன?' நான் தலை குனிந்து உட்கார்ந்திருந்தேன். அப்பா லேசாகச் சிரித்தார். 'பாத்திரத்தை நான் கொண்டு வருகிறேன். நீ பஸ்ஸிலேயே போ. சாயங்காலம் வந்து விடுவேன்' என்றார். வலது கையில் சோற்று மிச்சம் காய்ந்து கொண்டிருக்க இடது கையால் பனியனுக்குள் துளாவி முதலில் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்தார். 'அம்மாவிடம் கொடுத்து விடு' என்று நீட்டினார். யோசித்து மறுபடியும் பனியனுக்குள் கைவிட்டு பத்து ரூபாய் நோட்டுகள் இரண்டை எடுத்து நீட்டினார். இதை பஸ்ஸுக்கு வைத்துக் கொள்'. அது பேருந்துக் கட்டணத்தை விடப் பத்து மடங்கு அதிகம். ரூபாய்த் தாள்களை வாங்கிச் சட்டைப்பைக்குள் வைத்தபோது அவற்றிலும் மரிக் கொழுந்து வாசமடித்தது.

வீட்டில் அம்மா இல்லாத ஒரு நாள். நானும் பெரிய தங்கையும் இருந்தோம். வேலைக்குப் போயிருந்த அப்பா அரை நாளிலேயே திரும்பி வந்தார். நடையில் தள்ளாட்டமிருந்தது. வழக்கமானதுதான் என்று விட்டேற்றியாக உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். பின் பக்கமிருந்து ஓக்காளமும் 'அப்பா என்னாச்சு?' என்ற தங்கையின் குரலும் கேட்டன. கவலைப்படாமல் புத்தகத்தில் புதைந்திருந்தேன். பின்கட்டு சந்தடி வாசிப்பை முறித்தது. அலுத்துக் கொண்டு எழுந்து போய்ப் பார்த்தேன். அப்பா வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் கண்களிலிருந்தும் மூக்கிலிருந்தும் நீர் கொட்டிக் கொண்டிருந்தது. தங்கை விழித்துக் கொண்டு நின்றிருந்தாள். தரையில் வாந்திக் கசடு சிந்தியிருந்தது. டிச்சுக் குழியைத் தோண்டி விட்டதுபோன்ற நாற்றம். நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அப்பா மறுபடியும் ஓக்காளத்துடன்  குனிந்து வாந்தி யெடுத்தார். அஜீரண வஸ்துக்கள் வாயிலிருந்து வழிந்து  சட்டையின் மார்பிலும் கைகளிலும் கால்களிலும் ஒட்டிக் கிடந்தன. அருவெருப்பாக இருந்தது. தங்கை மூக்கைச் சுருக்கிக் கொண்டு நின்றாள். சில விநாடிகளில் என்னுடைய அருவெருப்புக் கலைந்து இரக்கம் ஊறியது. தங்கையை உள்ளே போகச் சொல்லி விட்டு அப்பாவைக் கைத்தாங்கலாகக் குளியல் அறைக்குள் கொண்டு போனேன். அவர் உடைகளைக் களைந்து தண்ணீரை மொண்டு ஊற்றிச் சுத்தப்படுத்தினேன். சமர்த்துக் குழந்தையாக அம்மணக் கோலத்தில் என் முன்னால் உட்கார்ந்திருந்தார் அப்பா. தலையைத் துவட்டிய துவாலையை அவருடைய இருப்பில் சுற்றி விடக் குனிந்தபோது என் இடது தோள்மேல் அப்பாவின் ஈரக் கை பதிந்தது. நிமிர்ந்து பார்த்தேன். அப்போது அவர் கண்களில் மின்னிய கனிவை அதற்கு முன்போ பின்போ கண்டதில்லை.தகப்பனுக்கு அப்பாவாக நான் உணர்ந்த அபூர்வ விநாடி அது. அவரை அணைத்துப் பிடித்துத் திரும்ப வீட்டுக்குள் அழைத்துப் போனபோது வெயிலில் வதங்கிய வெற்றிலையின் மணத்துடன் இருந்தார் அப்பா. ஒருவேளை அதுதான் அப்பாவின் இயற்கை வாசனையா? தெரியவில்லை.

காலமாவதற்குச் சில மாதங்கள் முன்னால் படுக்கையில் கிடந்த அப்பாவைப் பார்க்கப் போயிருந்தேன். தீராத வயிற்று நோவால் உடம்பு ஒடுங்கியிருந்தது. மல்லாந்தோ சாய்ந்தோ படுக்க முடியாமல் கால்களை மடக்கி வைத்துக் குழந்தைபோலக் குப்புறப்படுத்திருந்தார். அவரிடமிருந்த நல்ல வாசனைகளும் துர் வாசனைகளும் காணாமற் போயிருந்தன. மருந்துகளின் மொச்சை வாடை மிஞ்சியிருந்தது. நானும் அவருமாகத் தனித்து விடப்பட்ட நேரத்தில் கேட்டார். 'நான் ஒனக்கு வேணுங்கிறதப் பண்ணலேன்னு தோணுதாடா?' குழப்பமாக அவரைப் பார்த்தேன். ஏன் அப்படிக் கேட்கிறார். 'இல்ல, ஒம் புஸ்தகத்துல எளுதீருக்கியே அதான். ஒனக்குத்தான் எம் மேல அன்புமில்ல விரோதமு மில்லயே' என்றார். அப்பாவின் வார்த்தைகள் என்னைச் சுட்டன; குத்திக் குதறின. குற்ற உணர்வுடன் தலைகுனியச் செய்தன. அவர் சொன்னது நான் எழுதிய கவிதை வரியின் ஞாபகச் சாயல். சரியான வரிகள் இவை. 'அப்பா, எனக்கு உன்மேல் அன்பில்லை;  பகையைப் போலவே'. அந்த வரிகளை யோசித்த மூளையைப் பிடுங்கி எறியலாம் என்றும் எழுதிய விரல்களை நசுக்கி முறித்து விடவும் தோன்றியது. மகிழ்ச்சிக்கும் வேதனைக்கும் இடையில் ஊசலாடினேன். நான் எழுதியிருப்பதை அப்பா வாசித்திருக்கிறார். நாளிதழ் தவிர வேறு வாசிப்பு வாசனையில்லாதவர் என் கவிதையை எப்போது படித்தார்? தெரியவில்லை. ஆனால் மகிழ்ச்சியாக இருந்தது. தன்னைக் குற்றம் சாட்டும் அந்தக் கவிதையை அவரை எவ்வளவு நோகச் செய்திருக்கும் என்பதில் வேதனையாக இருந்தது. மனதுக்குள் குமைச்சலாக இருந்தது. மனிதர்களைக் காயப்படுத்தி என்ன இலக்கியம்? என்று வெறுப்பாகவும் இருந்தது. ஆனால் எழுதியது எழுதியதுதானே.எழுதும்போது இருந்த அப்பாவின் நிலையும் எழுதிய என் மனநிலையும் வாஸ்தவமானவை. இப்போது அப்பா காட்டும் பெருந்தன்மையும் என்னைத் தவிக்க வைக்கும் குற்ற உணர்வும் கூட வாஸ்தவமானவை.

எல்லா சராசரித் தகப்பன்களைப் போலத்தான் அப்பாவும். ஐந்து பிள்ளைக ளைப் பெற்றார். அவர்கள் வளர்வதைப் பார்த்தார். தன்னுடைய கடமையை நிறைவேற்றி விட்டதாக நம்பினார். எல்லா சராசரித் தகப்பன்களின்  நன்மை களும் கெடுதிகளும் அப்பாவிடமும் இருந்திருக்கின்றன. இல்லாமலிருந்தது தன்னுடைய மனசைப் பகிர்ந்து கொள்கிற விருப்பம். என்றைக்காவது மனம் திறந்து பேசியிருந்தால் எங்கள் இருவருக்கும் நடுவில் நிகழ்ந்த குளிர்ப் போர் நடக்காமலே இருந்திருக்கலாமோ என்னவோ? ஆனால் நான் நெருங்கியபோது அப்பா விலகிப் போனார். விலக விலக அவரை விரோதியாக நினைத்தேன். அப்பாவின் உலகமும் யோசனைகளும் என்னவென்று அறிந்து கொள்ள அந்தப் போலிப் பகை தடையாக இருந்ததை அவரில்லாத இப்போது உணர முடிகிறது. இழந்த பின்பு வருவதுதானே ஞானம்.

அப்பாவின் உடம்பு கிடத்தப் பட்டிருந்தது. நோயில் குலைந்த உடம்பு என்பதால் ஆடைகளை மட்டும் அகற்றி மாற்றுத் துணியை அணிவித்தார்கள். மாலை போட்டார்கள்.  உடம்பு வேனுக்குள்  ஏற்றப்பட்டது.  நானும் தம்பியும் உறவினர்களும் ஏறிக் கொண்டோம். மயானத்துக்குப் போகும் பாதையின் குண்டு குழிகளில் வண்டி ஏறி இறங்கியபோது ஸ்ட் ரெச்சரிலிருந்து அப்பா விசுந்து விடக் கூடாது என்று உடம்பைப் பிடித்துக் கொண்டேன். உயிர் வெளியேறிய அப்பாவின் பாதி திறந்த கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். உடம்பில் சார்த்தியிருந்த செவ்வந்தியும் ரோஜாவும் தழைகளும் வாடிய மரிக்கொழுந்தும் சேர்த்துக் கட்டப்பட்ட மாலையைப் பார்த்துக் கொண்டி ருந்தேன். வண்டி குழியில் குதித்தபோது கையோடு ஒட்டிக் கொண்ட மரிக் கொழுந்தைத் திரும்பவும் மாலைக்குள் சொருகினேன்.அப்பா எரிந்து கொண்டிருக்கத் திரும்பி நடந்தோம். வியர்வையைக் கையால் துடைத்தபோது மரிக்கொழுந்தின் வாசனை நாசிக்குள் புகுந்தது. 'நானும் நீங்களும் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக இருந்திருக்கலாம். பரஸ்பரம் புரிந்து கொள்ள முயன்றிருக்கலாம். உங்களுக்கு என்னை விட்டாலும் பிரியத்தைக் கொட்ட நான்கு பிள்ளைகள். எனக்கு ஒரு  அப்பாதானே?' என்று அந்த வாசனையிடம் அரற்றிக் கொண்டிருந்தேன்.

@

அந்திமழை இதழில் வெளிவந்தது.


























திங்கள், 22 ஜூலை, 2013

தன் நெஞ்சு அறிவது




அலுவல் நிமித்தமாக விசாகபட்டினத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் தங்க நேர்ந்தது. சென்னையிலிருந்து அனுப்பிய  சரக்கை அந்த ஊர்  விநியோகஸ்தர்  எடுக்காமல் விட்டிருந்தார். வங்கி மூலம் அனுப்பப்பட்ட சரக்கு. அதை எடுப்பதற்கான  கெடு முடிந்து விட்டதால் நிறுவனத்தின் பிரதிநிதியாகப் போக வேண்டிருந்தது. வங்கியிலிருந்து தஸ்தாவேஜுகளை வாங்கித் தந்தால் சரக்கை எடுப்பதாக விநியோகஸ்தர் சொல்லியிருந்தார். வங்கியிலிருந்து அவற்றைத் திரும்பப்  பெற்றுக் கையில் வைத்துக் கொண்டிருந்தபோது விநியோகஸ்தர் கையை மலர்த்தினார். நிதிநெருக்கடி. திடீரென்று வந்து  சொன்னால் ஆயிரக்கணக்கான ரூபாயைப் புரட்ட முடியுமா  என்று எதிர்க் கேள்வி கேட்டார்.  நிறுவனமோ அந்த பில்லைக் கிளியர் செய்யாமல் சென்னைக்குத் திரும்பாதே என்று கறாராகச் சொல்லியிருந்தது.

கையைப் பிசைந்துவிழிப்பதைப் பார்த்த விநியோகஸ்தர் பரிதாபப்பட்டு மாற்றுத் திட்டத்தைச் சொன்னார். 'இரண்டு நாட்களுக்குள் பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். அதுவரைக்கும் இங்கேயே இருங்கள். இன்றைக்குப் புதன். சனிக் கிழமை வங்கி மூடுவதற்குள் பில்லைக் கிளியர் பண்ணி விடுகிறேன். காசைக் கையோடு வாங்கிக் கொண்டு இரவு ரயிலேறி விடலாம்'. வேறு வழியில்லை. ஒப்புக்கொண்டேன். மத்தியானம்வரை அந்த அலுவலகத்தில் பராக்குப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். உணவு இடை வேளையின்போது விநியோகஸ்தரே பணியாளர் ஒருவரை அழைத்து எனக்குத்  தங்குமிடத்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். கடற்கரைச் சாலையில் ஷிப்யார்டுக்குப் பக்கத்தில்  இடுங்கிய ஒரு தெருவில் நெரிசலான ஒரு சந்தில் மிகச் சுமாரான ஒரு லாட்ஜுக்கு , பெயர் - சர்தாம் லாட்ஜ் -  அழைத்துப் போனார்  பணியாளர் .

வைசாக மன்னன் காலத்தில் சத்திரமாக இருந்திருக்கும் என்று நினைக்க வைத்த புராதனக் கட்டடம். இரண்டு தளம்.விசாலமான அறைகள் பிளைவுட் தடுப்புகளால் பிரித்து அமைக்கப்பட்டிருந்த எட்டுக்கு எட்டு அளவு அறைகள்.  துருப்பிடித்த கட்டில். அழுக்கு மெத்தை. அலுமினியத் தண்ணீர்க் குவளை. அந்த விடுதியில் நவீனமாகத் தென்பட்ட ஒரே  சாதனம்  வரவேற்பறையில் வைத்திருந்த சாலிடேர்  வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி மட்டுமே. இந்த ஆதிவாசிக் குகையில் தங்குவதை விட ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ஒண்டுவது  சௌகரியமானது என்று பட்டது. ஆனால்  நாலு நாட்கள் பிளாட்பாரத்தில் குடியிருக்க முடியாது. இதை விடக் கொஞ்சம் வசதியான விடுதி கிடைக்குமா என்று உடன் வந்தவரிடம் அரைகுறைத் தெலுங்கில் விசாரித்தேன்.

'' ஏண்ட்டி சார், இதி ஒத்தா? சாலா மஞ்சி லாட்ஜ் சார். அரவாடு அன்னி இங்கடெனெ ஒஸ்தாரு சார். மதராஸ் மீல்ஸ் தொரக்கிந்தி சார்'' என்று விடுதி மகாத்மியம் சொன்னார்.

கேட்டுக் கொண்டிருந்த வரவேற்பாளர் '' சாரு தமிழா? நம்பாளுங்கல்லாம் இங்கதான் வருவாங்க சார். வளக்கமா ரூம் கெடக்காது. ஒங்க லக்கு இன்னிக் குன்னு  ரூம் காலியா இருக்கு. உள்ளயே ரெஸ்டாரெண்டே இருக்கு. நம்ப ஊர் சாப்பாடு.  இங்க வர அல்லா கம்பெனி ரெப்செண்டீவும் நம்ம கஸ்டமர் தான். நம்ம லாட்ஜ்தான் சார் சீப் அண்ட் பெஸ்ட்'' என்று நீளமாகப் பேசினார்.

கையிருப்புக் குறைவு. கம்பெனி அளக்கிற தினப்படியில் பெரிய இடங்களில் தங்குவது முடியாத காரியம். விநியோகஸ்தர் சனிக்கிழமை ரொக்கமாகவே கொடுப்பார் என்ற நம்பிக்கையில் செலவு செய்யலாம். ஆனால் ஊர் திரும்பி அதைச்  சரிக்கட்டுவது மேலும் சிரமம். நிதிநிலைமையை மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்தேன். இதே லாட்ஜில் தங்கினால் சென்னை  திரும்பி ஒரு வாரம்வரைக்கும் தட்டுப்பாடில்லாமல் செலவு செய்யத் தேவையான பணம் மிஞ்சும். சரி சொல்லி விடலாம்  என்ற எண்ணம் ஓடியது. கூடவே வரவேற்பாளரின் வார்த்தைகளும் ஓடின. அவர் தலைக்கு மேலாகச் சுவரில் பதித்திருந்த  சாவிப் பலகையைப் பார்த்தேன்.பதினாறு அறைகள். விசிட்டிங் கார்டு செருகிவைக்கும் சின்னச் சட்டங்களில் இரண்டைத்  தவிரப் பெரும் பான்மை யும் காலியாக இருந்தன.ஆட்களே வராத விடுதியா, இல்லை விவகாரமான தங்குமிடமா என்று  குழம்பினேன். யோசித்துக் கொண்டே இருந்தால் முடிவே இருக்காது என்று தோன்றிய அடுத்த நொடி ''ஃப்ர்ஸ்ட் ஃப்ளோர்ல ரூமிருக்கா?''  என்று கேட்டேன். வரவேற்பாளர் எழுந்து பலகையிலிருந்து 108 ஆம் எண் சாவியை எடுத்தார்.'' லக்கி நம்பர் சார், நைன். கார்னர் ரூம், வா சார்'' என்று கௌண்டரை விட்டு வெளியே வந்து எனது லக்கேஜை எடுத்துக்  கொண்டு படியேறினார். விநியோகஸ்தரின் ஆள் கடமை முடிந்த திருப்தியில் ''ஒஸ்தானு சார்'' என்று படியிறங்கினார்.

இந்தப் பாடாவதி அறையில் நான்கு நாட்களை எப்படிக் கழிப்பது என்று யோசித்தேன். முடிக்க வேண்டிய வேலை எதுவும் இல்லை. விநியோகஸ் தரை சரக்கு எடுக்கச் செய்வது மட்டுமே எனக்கிருக்கும் பொறுப்பு .அதைச் சனிக்கிழமை  செய்து தருவதாக உறுதி கொடுத்திருக்கிறாரே, சனிக் கிழமை வேலையைச் சனிக்கிழமை பார்த்துக் கொள்ளலாம்.அதுவரை? சுற்றுலாப் பயணியாக ஊரைச் சுற்றலாம். வரவேற்பாளரிடம் விசாரித்தேன். வழிகாட்டி யின் தேர்ச்சியுடன்  ஊரை வர்ணித்தார். பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றிச் சொன்னார். அதற்கிடையில் தன்னுடைய சுயசரிதையையும் கலந்து விட்டார்.

பெயர் ரமேஷ். இல்லை ரமேஸ். ஊர் பொன்னேரி. வேலை தேடி விசாகப் பட்டினம் கப்பல் தளத்துக்கு வந்தவர் அங்கும்  இங்கும் அல்லாடி சர்தாம் லாட்ஜில் ரூம் பாயாக வேலை பார்த்துப் பத்து வருடங்களில் மானேஜர் ஆகி விட்டார். நன்றாக நடந்த லாட்ஜ்தானாம். உரிமையாளர்களுக் கிடையிலான சொத்துத் தகராறில் இந்த நிலைமைக்கு வந்து விட்டிருக்கிறது.''கேஸ் நடக்குது சார். நம்ம ஓனர் கெலிச்சிடுவாரு'' என்று நம்பிக்கையுடன் சொன்னார். அவரே போய் சலவை விரிப்பை எடுத்து வந்தார். '' ஒரு பாய் இருக்கான் சார். அவுனுக்கா தோணினா வருவான். மத்தபடி மேனேஜ் மெண்ட், ரூம் சர்வீஸ் அல்லாம் நாம்பதான். ரெஸ்டாரெண்ட் இருக்கு. ஒரு வேலூர்க்காரரு லீசுக்கு எடுத்து நடத்திகினுருக்காரு. இன்னா ஓணுமோ நம்ப கைல சொல்லு சார். பண்றேன். இன்னா ஓணும்னாலும் சொல்லு'' என்று  கடைசி வாக்கியத் துக்கு அழுத்தம் கொடுத்தார். '' சரி'' என்று முனகினேன். அது அவருக்கு உற்சாகக் குறைவைக் கொடுத்திருக்க வேண்டும். ''சர்தான் சார், நீ ரெஸ்ட் எடு'' என்று நகர்ந்தார்.

வெள்ளாவி வாடை மாறாத படுக்கை விரிப்பில் சரிந்தது நினைவிருந்தது. எழுந்து பார்த்தபோது எட்டு மணி இரவின்  இருள் கவிந்திருந்தது. கடற் காற்றின் கவிச்சை வாடையும் இரும்பு உருகும் வாசனையும் கலந்த காற்று அறைக்குள்  சுழன்றது. மத்தியானத்திலிருந்து தூங்கி விட்ட குற்ற உணர்ச்சியுடன் எழுந்தேன். அதை ஈடு கட்டுவதுபோலப்  பரபரப்பாகத் தயாராகி அறையை விட்டு வெளியேறினேன். வரவேற்பறையில் '' இன்னா சார் நல்லா ரெஸ்ட் எடுத்தியா?'' என்று ரமேஸ் கேட்டபோது ஏனோ வெட்கமாக இருந்தது. அங்கேயே உட்கார்ந்து அன்றைய ஆங்கில நாளிதழில் திரைப்படக் கொட்டகைகளைத் தேடினேன். காப்பி வரவழைத்துக் குடித்தேன். உண்மையிலேயே பேஷான  காப்பி. சித்ராலயா தியேட்டர்.படம் ’தோஃபா’. இந்தி. ஜிதேந்திரா,ஸ்ரீதேவி,ஜெயப்ரதா என்று கண்ணில் விவரங்கள் தட்டுப் பட்டன. ரமேசிடம் கேட்டேன்.

'' சித்ராலயாவா சார், அது இங்கேர்ந்து இன்னா ஒரு ஒண்ணரைக் கிலோ மீட்டர் இருக்கும்.ஜகதம்பா ஜங்சன்னு கேளு. ரிக்சால பத்து ரூவா''

அப்போதுதான் லாட்ஜ் வாசலில் வந்து நின்ற ரிக்ஷாவை விட்டு இறங்கிய  பெண்ணைப் பார்த்தேன்.பழக்கப்பட்டஇடத்தில் புழங்கும் சுவாதீனத்துடன் உள்ளே வந்துகொண்டிருந்தாள். நானிருந்ததற்கு அடுத்த நாற்காலியில் உட்கார்ந்தா ள். நான் சட்டென்று எழுந்தேன். ''பரவாலேது, மீரு கூச்சோண்டி'' என்று சிரித்து விட்டு ரமேசிடம் திரும்பினாள். அவரிடம் தெலுங்கில் கேட்டது தோரயாமாக விளங்கியது. 'இன்று வேலை ஏதாவது இருக்கிறதா? நான் இருக்கவா, வேறு இடத்துக்குப் போகவா?'. அவளுக்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக என்னிடம் சொன்னார்.'' சார், அதா நிக்குற ரிக்சால ஓணும்னா போயிரு சார். நம்பாளுதான்''. சற்றுத் தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது. வந்து சேர்ந்திருப்பது ஏடாகூடமான இடம்தான் என்பது தெளிவாகத் தெரிந்தது. அறையைக் காட்டியபோது 'இன்னா ஓணும்னாலும் சொல்லு  சார்' என்று ரமேஸ் வலியுறுத்திச் சொன்னதன் அர்த்தம் புரிவதுபோல இருந்தது. மாட்டிக் கொண்டேன் என்ற நினைப்பில் வயிறு கனத்தது. முகம் வியர்த்தது. மொழி புரியாத இடத்தில் அசந்தர்ப்ப மான வேளையில் இன்னொரு தங்கு மிடத்தைத் தேட முடியாது என்ற உண்மை கால்களை நடுங்க வைத்தது. விநியோகஸ்தரைத் தொடர்பு கொள்வதும் காலையில்தான் சாத்தியம். உள்ளுக்குள் உதறிக் கொண்டி ருந்தது. அப்போதைக்கு அந்த இடத்தை விட்டுப் போய் விட வேண்டும். நிதானமாக யோசிக்க வேண்டும். எழுந்தேன். அறைச் சாவியை ரமேசிடம் கொடுக்காமல்பாக்கெட்டிலேயே  வைத்துக் கொண்டேன். பதற்றத்தைக் காட்டிக் கொள்ளாமல் '' சினிமா முடிஞ்சு வரும்போது கதவு தெறந்திருக்குமில்ல?'' என்று அவரிடம் கேட்டேன். '' பதினோரு மணிவரிக்கும் தெறந்துதான் இருக்கும் சார். அதுக்கப்புறம் தோ அந்த சைடு டோர் தெறந்து வரலாம்''. வெளியே நகரும் முன்பு அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தேன். எங்கேயோ பார்த்தது போன்ற முகம். மாநிறம். திருத்தமாக வாரிய தலை. சூடிய மல்லிகைச் சரத்தின் ஒரு இணுக்கு மட்டும் இடது முன் தோளில் விழுந்திருந்தது. பார்வையில் அப்பாவித்தனமும் தந்திரமும் கலந்திருப்பது போல இருந்தது. ஒருவேளை என்  யூகம்தான்  தவறோ? இந்தப் பெண் நான் கற்பனை செய்கிற காரணத்துக்காக அல்லாமல் வேறு காரியத்துக்காக வந்தவளாக இருக்கலாமோ?

வாசலைத் தாண்டும்போது '' அரவாடா. அன்னா?'' என்று அந்தப் பெண் ரமேசிடம் கேட்பது தெரிந்தது. ரிக்ஷாவைக் கண்டுகொள்ளாமல் நடந்தேன். மெயின் ரோட்டை அடைந்து வழி விசாரித்தேன். காட்டப்பட்ட திசையில் வேகமாக நடந்தேன். பாதி தூரம் போன பின்பு என்னை முந்திக் கொண்டு ரிக்ஷா போனது. என்னைத் தாண்டி சில அடிகள் போனதும் அதன் பின் பக்கச் சதுரத் திரை உயர்ந்தது. ரிக்ஷாவில் உட்கார்ந்திருந்த அந்தப் பெண் எட்டிப் பார்த்தாள்.

'' ஒஸ்தாரா மீரு?'' என்று கேட்டாள். ஒரு நொடி தடுமாறிய பின்பு '' லேது ரா லேது'' என்றேன். திரை மூடியது. ரிக்ஷா வெகுதூரம் நகர்ந்ததும்தான் மூச்சு சீரானது. நடையை மெதுவாக்கினேன். காரணமில்லாமல் எதற்காகப் பயப்பட வேண்டும்? நாமாக விரும்பாவிட்டால் எது நம்மை என்ன செய்ய முடியும்? அப்படியே விரும்பினாலும் தப்பில்லை. இந்த வயசுக்குச் சபலப்படாவிட்டால் எப்படி? எதுவானாலும் வருகிறபோது பார்த்துக் கொள்ளலாம். கேள்விகளும் பதில்களுமாக யோசித்துக் கொண்டே போனதில் தன்னிச்சையாகவே ஜன சந்தடியான சந்திப்புக்கு வந்திருந்தேன். மறுபடியும் விசாரித்து சித்ராலயா வைக் கண்டு பிடித்தேன். அருகிலிருந்த ஓட்டலில் முழுச் சாப்பாட்டையும் கண்ணீர் உகுத்துக் கொண்டே சாப்பிட்டேன்.

படம் தொடங்கிய ஐந்து நிமிடத்தில் அதன் முழுக் கதையும் புரிந்து விட்டது. தமிழ்க் 'கல்யாண பரி'சின் இந்தி வடிவம்.  ஜெமினி கணேசனுக்குப் பதில் ஜிதேந்திரா. சரோஜாதேவிக்கு ஸ்ரீதேவி. விஜய குமாரிக்கு ஜெயப்ரதா. 'தோஃபா' என்றால்  'பரிசு' .ஆனால் அது கல்யாணப் பரிசாக இருக்கும் என்று யூகிக்காமல் விட்டுவிட்டேன். ஜெயப்ரதா வந்த முதல் காட்சியில் பொறிதட்டியது. லாட்ஜில் நான் பார்த்த பெண் அந்தச் சாயலில்தான் இருந்தாள். ஜெயப்ரதாவின் கண்ணாடிப் பிம்பம்போல. ஜெயப்ரதாவுக்கு இடது நாசிக்குக் கீழே மேலுதட்டில் மச்சம். லாட்ஜில் பார்த்தவளுக்கு வலது நாசிக்குக் கீழே. தொழிலுக்காக செயற்கையாக வைத்த மைப் புள்ளியாகவும் இருக்கலாம். படத்தை விட, சொந்தக் கற்பனை சுவாரசியமாக இருந்தது. சினிமாக்களில் விலை மகளிர் பாத்திரங்களில் வரும்  பெண்களில் சிலர்  நளினமானவர்களாகக் காட்டப்படுவதைப் பார்க்கும்போது பொய்யென்று தோன்றும்.  நடைமுறை யில் பாலியல் தொழில் செய்யும்  பெண்கள் அப்படி இருக்க மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். அதைப் பொய்யாக்கியவள் அந்தப் பெண்.

விநியோகஸ்தரைப் பார்த்து நினைவூட்டுவதைத் தவிர மறுநாள் முக்கியமான வேலை இல்லை. அதை முடித்து விட்டு ரமேஸ் பரிந்துரைத்த மூன்று கொண்டாக்களைப் பார்க்கப் போனேன். மும்மதக் குன்றுகள். வெங்கடேஸ்வர கொண்டா. கன்னி மேரி தேவாலயம் இருக்கும் ராஸ் கொண்டா, பாபா இஷாக்கின் தர்கா இருக்கும் தர்கா கொண்டா. மூன்றிலும் மாலைவரை சுற்றித் திரிந்ததில் நாள் போயிற்று. திரும்பி வரும்போது மெயின் ரோடு பஸ் ஸ்டாப்பில் அந்தப் பெண்  நிற்பதைப் பார்த்தேன். பிற பெண் முகங்களில் அநேகமும் வாடிப் போயிருக்க அவள் முகம்மட்டும் பளிச்சென்று  தெரிந்தது. பஸ் ஸ்டாப்ப்பில் அவளைக் கடந்து வந்த போது பழக்கப் பட்டவளாகச் சிரித்தாள். அவளுக்கு நேர் முன்னால் நின்ற நொடியில் ''ஒஸ்தாரா மீரு?'' என்றாள். திரும்பிப் பார்க்காமல் வேகவேகமாக நடந்து லாட்ஜை அடைந்தேன்.

ரமேசின் தலைப்பக்கத் சாவிப் பலகையில் இன்னும் இரண்டு பெயர்ச் சீட்டுகள் இருந்தன. சாவியை வாங்கிக் கொண்டு அறைக்குப் போய் குளித்து உடைமாற்றிக் கீழே வந்தேன். தெலுங்கு தொலைக்காட்சியில் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியை  ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ரமேஸ். என்னைப் பார்த்ததும் தொலைக்காட்சியை ஆஃப் பண்ணினார்.'' இன்னாவ்து ஓணுமா சார்?'' என்று கேட்டார். ஒரே நாளில் நீண்ட காலம் தோழமையாக இருந்த உணர்வைத் தரும் தோற்றமும் பாந்தமும் ரமேசிடமிருந்தது. சுவாரசியமான பேச்சாளி. நீண்ட நேரம் பேசியதில் கிடைத்த சகஜ உணர்வில் அந்தப் பெண்¨ ணப் பற்றி விசாரித்தேன். ரமேஸ் நமட்டு சிரிப்புச் சிரித்தார். ''இன்னா சார், ஒம் மூஞ்சியப் பாத்தா அதுக்கெல்லாம் வலியுற ஆளாத் தெர்லேன்னு அதுங்கையில் காலேலதான் சொல்லிகினுருந்தேன். இப்டி கவுத்திட்டியே. ஆங்... அல்லா ருக்கும்தான் இது இருக்கே. அதென்ன ஊறுகா போட்றதுக்கா'' என்றார்.

பேச்சு அபாய கட்டத்தில் இருப்பதை உணர்ந்தேன். இல்லை. அந்த மாதிரி எண்ணமெதுவும் இல்லை. சும்மா தெரிந்து கொள்ளும் குறுகுறுப்புத்தான். சாமி, நீயாவது ஏதாவது சிக்கலில் மாட்டி வைத்து விடாதே என்று ரமேசிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டேன். ''இதிலென்னா சார் இருக்கு. ஓணும்னா அதுங்கையில சொல்லப் போறேன். அதுக்கும் புடிச்சிருந் தா சரிங்கப்போவுது. ஆனா அது மத்த தொழில் பண்றதுங்க மாறியெல்லாம் இல்ல சார். பக்கா டீசெண்ட்டு. நம்ம லாட்ஜு தான் அதோட எடம். ஆனா இதுவரிக்கும் ஒரு கரைச்சல் குடுத்ததில்ல. வர்றப்பல்லாம் மாமூல் வெட்றதுனால போலீசு  வந்து பாத்துட்டுப் போய்டும். அதுக்கா புடிச்சிதின்னா சரி. இல்லன்னா லச்ச ரூவா குடுத்தாலும் ஒத்துக்காது.ஒங்க கம்பெனீலேர்ந்து உனக்கு மிந்தி ஒரு பாய் வருவாரே சார். நல்ல பேரு சார்....'' நான் என்னுடைய பரிசுத்தத்தை நிரூபிப்ப தற்காக அவர் பெயரைச் சொன்னேன். ''ஆமா சார், அதான். அவரு என்கையில சொல்லிப் பாத்தாரு. அது வேணாம் ரமேசுன்னிடுச்சு'' என்று என் கண்களை வேவு பார்த்துக் கொண்டே சொன்னார். நான் தலை குனிந்தேன். அவமானமாக  இருந்தது. ஒரு மூன்றாந்தர விடுதித் தரகர்  மனதைத் துருவிப் பார்க்கிற அளவுக்குக் குன்றிப் போனதைப் பற்றிய  அருவருப்பு வாய்க்குள் ஊறியது. அங்கிருந்து தப்புவதற்காக வெளியே போக நகர்ந்தபோது ''தோ சார், நம்பாளு'' என்று  முகவாய்க் கட்டையை உயர்த்தி வாசலைக் காட்டினார் ரமேஸ். அந்தப் பெண்வந்து கொண்டிருந்தாள்.

உன்னைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம் என்று தெலுங்கில் சொன்னார் ரமேஸ். அவள் ''அவுனா சார்?'' என்று என்னைப் பார்த்துச் சிரித்தாள். என் முகம் இறுகியது. எதுவும் சொல்லாமல் வெளியேறினேன். நீண்ட தூரம் நடந்து கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்தேன். கடலின் மீது விழுந்து கொண்டிருந்த கப்பல்களின் வெளிச்சம் செய்யும் ஜால வித்தையில் மனதும் பிரகாசமானது. ஈரக் காற்றில் முகத்தின் இறுக்கம் தளர்ந்தது. கடற்கரையில் கூட்டம் கலைய ஆரம்பித்தபோது நானும் எழுந்தேன். வழியில் இரவுணவை முடித்துத் திரும்பி வந்தபோதும் லாட்ஜ் வரவேற்பறையில் அந்தப் பெண் இருந்தாள். கௌண்டருக்குப் பின்னால்  மானேஜர் இருக்கை காலியாக இருந்தது. தொலைக்காட்சிப் பெட்டிக்குள் கிருஷ்ணாவும் விஜயநிர்மலாவும் இனிமையான பாட்டுக்கு குரங்குத் தனமாகக் குதித்துக் கொண்டிருந்தார் கள். என்னைப் பார்த்ததும்  புன்னகையுடன் '' போஜனமாயிந்தா சார்?'' என்று விசாரித்தாள். சின்னதாக எழுந்த எரிச்சலை  மறைத்துக் கொண்டு தலையாட்டினேன். '' மதராஸா சார்?'' என்றாள். அதற்கும் தலையாட்டினேன். ரமேசிடம் விசாரித்தீர் களாமே வரவா? என்று தெலுங்கில் கேட்டது புரிந்தும் புரியாத பாவனையில் அ¨றைக்கு விரைந்து கதவை அடைத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லையென்றாலும் விளக்கை அணைத்துப் படுத்துக் கொண்டேன். வெகு தொலைவில் கடல் விடுகிற ஓயாத பெருமூச்சின் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது.

கதவு தடதடக்கிற ஓசை கேட்டு திடுக்கிட்டு விழித்தேன். '' லோப்பிலோ எவரு? தலுப்பு தெறவுண்டி'' என்ற முரட்டுக் குரலுக்குப் பணிந்து விளக்கைப் போட்டுக் கதவைத் திறந்தேன். இரண்டு போலீஸ்காரர்கள். யார்? எங்கிருந்து எதற்காக வந்திருக்கிறேன்? என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்து ஆராய்ந்தார்கள். விசிட்டிங்க்  கார்டைஎடுத்து நீட்டி விவரங்களைச் சொன்னேன். உள்ளூர் விநியோகஸ்தர் செல்வாக்குள்ள அரசியல் பிரமுகரும் கூட  என்பதால்மேற்கொண்டு பேசாமல் வெளியேறினார்கள். மறுபடியும் விளக்கை அணைத்து விட்டுப் படுத்த போது  இதயம் தாறுமாறாக இடித்துக் கொள்வதைக் கேட்க முடிந்தது. வெளியில் காலடி ஓசைகள் தேய்வது கேட்டது. சற்றுக் கழித்து ரமேசின் குரல் கேட்டது. கொஞ்சம் விட்டு அறைக் கதவு மறுபடியும் தட்டப்பட்டது. ''சார்... சார்'' என்ற ரமேசின் குரல். விளக்கைப் போட்டுக் கதவைத் திறந்தேன். ரமேஸ்தான் நின்றிருந்தார். ''சார், ஒரு ஒதவி பண்ணு சார். ஒரு முந்நூறு ருவா குடு சார். இன்னி கலெக்ஷனெ ஓனர் வாங்கினு பூட்டாரு. கல்லாலே துட்டு இல்ல. காலிலே திருப்பிக் குடுத்துட்றேன் சார். அர்ஜண்ட் சார்'' என்றார்.

மண்ணாந்தை மாதிரி விழித்தேன். அறைக்கு வாடகையை விநியோகஸ்தர் தருவதாக ஒப்புக் கொண்டதனால்தான் தங்கவே முடிவு செய்திருந்தேன். கையிலிருக்கிற காசை இவரிடம் கொடுத்து விட்டு எப்படித் திரும்ப வாங்குவது? அரைகுறைப் பழக்கமுள்ள ஆளுக்கு நான் எதற்காக ஒத்தாசை செய்ய வேண்டும்? அட்வான்சில் சரிக்கட்டலாம் என்று வைத்தாலும் இவர் கேட்கும் தொகை நாலு நாள் வாடகையை விட அதிகம். என்னுடைய அரை மாதச் சம்பளம். நம்பு சார், காலேல கரெக்டா குடுத்துர்றேன்'' என்ற ரமேசின் விடாப்பிடியான வேண்டுகோளுக்கு ஏன் பணிந்தேன் என்பது இன்றும் விளங்கவில்லை.

காசை வாங்கிக் கொண்டு படியிறங்கினார் ரமேஸ். தூக்கம் கலைந்த எரிச்சலில் மாடி வராந்தாவில் நின்று ஆரவாரமில்லாத தெருவைப் பார்த்தேன். லாட்ஜ் முனைச் சந்தில் இரண்டு போலீஸ்காரர்களும் அந்தப் பெண்ணும் கொஞ்சம் தள்ளி ரமேசும் நிற்பது தெரிந்தது. மிகவும் சுபாவமான குரலில் அந்தப் பெண் போலீசிடம் பேசிக் கொண்டே கையை நீட்டி எதையோ கொடுப்பதும் தெரிந்தது. என் பணம். பெட்டியைத் தூக்கிக் கொண்டு  கம்பெனி கம்பெனியாக அலைந்து வியர்வை சிந்துவதற்குக் கிடைக்கும் என் ஊதியம் நிகழாத குற்றத்துக்கான நியாயமற்ற அபராதமாகக் கை மாறுவதை வயிற்றெரிச்சலுடன் பார்த்தேன்.

மறுநாள் எங்கும் போவதற்கான உற்சாகமில்லாமல் அறையில் தங்கவும் பிடிக்காமல்  விநியோகஸ்தரின் அலுவலகத்தில்  போய் பகல் முழுவதும் உட்கார்ந்து கொண்டேன். மாலையில் திரும்பி வந்தபோதும் ரமேசின் இருக்கை காலியாகவே இருந்தது. அறைக்குப் போய் கைகால் கழுவித் திரும்பி வந்து முந்தின நாள் போன வழியிலேயே நடந்து கடலைப் பார்த்து நேரம் கடத்தினேன். திரும்ப வந்தபோது ரமேஸ் இருந்தார். '' வா, சார், இன்னிக்கு ஓனரோட கேஸ் சார். அதான் வந்துகினும் போய்க்கினு மாருந்தேன்'' என்றார். நீ என்னவோ செய்து தொலை என்று மனதுக்குள் திட்டிவிட்டு '' என் பணம் ரமேஸ்?'' என்று இழுத்தேன். ''இப்ப கையில இல்ல சார், நாளக்கிக் குடுத்துட்றேன். நீ நாளக்கித்தான காலிபண்ற''  என்றார். திக்கென்றது. என் காசு போனதுதான் என்று தெரிந்து விட்டது. ''இல்ல ரமேஸ், காலேல சீக்கிரம் காலி பண்ணிருவேன். மத்தியானம் வண்டி. எனக்கு என் காசு இப்போ வேணும்?'' என்றேன். ''காலேலதான சார். நீ எந்திரிக்க றதுக்குள்ள கைல குடுத்துர்றேன்.பேஜாராவாம இரு சார்'' என்று சாவதான மாகச் சொன்னார். எனக்குப் பதற்றம் அதிகமா னது. '' அய்ய, இன்னார் சார் ஒன்னிய மாரி கம்பெனி ஆளுக்கு இதெல்லாம் இன்னா துட்டு சார்? அதுக்கோசரம் ஒன் துட்ட தராமேர்ந்துரமாட்டேன். நீ தில்லா இரு சார்'' என்று என்னை விரட்டினார். மாடி வராந்தாவிலேயே நொந்து கொண்டு உலாவினேன். சாலை பரபரப்பாக இயங்குவதையும் அடங்குவதையும் வேடிக்கை பார்த்தேன். வயிறு  நிறைய ஏமாற்றம் இருந்ததால் சாப்பிடவும் போகவில்லை. பின்னிரவில் படுக்கையில் விழுந்து சீக்கிரம் எழுந்தேன். தயாராகி லக்கேஜைச் சுமந்து கொண்டு வரவேற்பறைக்கு வந்தேன். விநியோகஸ்தரின் அலுவலகம் ஒன்பது மணிக்குத்த ¡ன் திறக்கும். இப்போது மணி ஏழு. பரவாயில்லை. இங்கே இல்லாமல் வேறு எங்காவது போயிருக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். ரமேஸ் இருந்தார். லெட்ஜரில் கையெழுத்துப் போடச் சொன்னபோது காசைத் திருப்பிக் கொ டுத்து விடுவார் என்று தோன்றியது.'' சார், வைசாக் ஏஜென்சீலதான் இருப்பே, துட்டு வந்ததும் கொணாந்து குட்துட்றேன்'' என்று இடியைப் போட்டார். கெஞ்சிப் பார்த்தேன். மரியாதைக் குறைவாகவும் திட்டிப் பார்த்தேன். எதுவும் அவரிடம் பலிக்கவில்லை. ''சார், ஒன்னிய ஏமாத்தணும்னு இல்ல. தோ, பாரு கல்லால அம்பதும் பத்து அறுவது ரூவாதான் இருக்கு. கொஞ்சம் பொறு சார். நாந்தான் கொணாந்து குடுக்குறேங்கறனே. இல்ல ஒனக்கு நம்பிக்கயில் லேன்னா டிரெயினுக்குப் போறதுக்கு மிந்தி  வந்து வாங்கினு போ'' அவருடைய குளிர் பதில் என்னை அவமானப்படுத்தியது. விநியோ கஸ்தர் அலுவலகத்தில் சொல்லி மிரட்டி வாங்கி விடலாம் என்று திட்ட மிட்டு வேகமாக வெளியேறினேன்.

அங்கங்கே அலைந்து திரிந்து விட்டு சரியாக ஒன்பது மணிக்கு விநியோகஸ் தரின் அலுவலகத்தை அடைந்தென். என்னை சர்தாம் லாட்ஜுக்கு அழைத்துப் போன படுபாவிப் பணியாளரை அழைத்து விவரம் சொன்னேன். அதெல்லாம் வாங்கிடலாம் சார். நம்முடைய பழக்கதி லிருக்கிற லாட்ஜ்தான். ஏமாற்ற மாட்டார்கள். அந்த ஓனரும் நமது முதலாளியும் நண்பர்கள். அதனால் உங்கள் பணம் எங்கேயும் போகாது, நான் உத்தரவாதம் என்றார். கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனால் அவநமபிக்கையாகவும் இருந்தது. எவ்வள்வு ஏமாளியாக இருக்கிறேன் என்ற சுய பரிதாபத்தை விட அது அப்பட்டமாகத் தெரிந்து விட்ட அவமானம் பிடுங்கித் தின்றது. சரி, இவர்கள் பில்லை இன்று அடைக் கிறார்கள். அதில் வரும் பணத்தில் உடனடிச் செலவைப் பார்த்துக் கொள்ளலாம். அந்த முந்நூறு ரூபாயைப் பற்றிக் கவலைப் படாமலிருப்போம் என்று அமைதியானேன். வங்கியில் போய் காசைக் கொண்டு வந்து கொடுத்தார் விநியோகஸ்தர். அவரது ஆட்களுடன் பார்சல் அலுவலகம் போய் சரக்கை எடுத்துக் கொடுத்தேன். மணி பதினொன்று ஆகியிருந்தது. திரும்ப வைசாக் ஏஜென்சிக்கு வந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது பணியாளர் வந்து வெளியே வரச்சொன்னார். வந்தேன். ஏஜென்சி அலுவலகத்துக்கு நாலு கடைகள் தள்ளி அந்தப் பெண் நின்றிருந்தாள். பணியாளருடன் நடந்து  அவளை நெருங்கும்போது உள்ளங்கை வியப்பதையும் கால்கள் தள்ளாடியதையும் ரத்தம் கொந்தளிப்பதையும் உணர முடிந்தது. யாராவது பார்த்து விடப் போகிறார்கள் என்ற தயக்கத்துடன் அவள் அருகில் போய் நின்றோம். களைத்த புன்னகையுடன் ’’சாரு’’ என்றவள் கையிலிருந்த நோட்டுகளைப் பணியாளரிடம் கொடுத்தாள். அவர் வாங்கி என்னிடம் கொடுத்த நோட்டுகளைப் பிச்சைக்கார வேகத்துடன் எண்ணிப் பார்த்தேன். ஆறு ஐம்பது ரூபாய் நோட்டுகள். கணக்குச் சரி. பணியாளரிடம் அவள் சொன்னது எதுவும் என் காதில் விழவில்லை. நிம்மதியில் காது அடைத்தி ருந்தது. ''ஒஸ்தானு சார்''  என்று படியிறங்கிப் போனள். திரும்ப அலுவலகம் வந்தமர்ந்தேன். கொஞ்ச நேரம் போனது. ஒலித்த தொலைபேசியை எடுத்துப் பேசிய ஏஜென்சி மானேஜர் '' தோ இஸ்தானு'' என்று பதில் சொல்லி விட்டு என்னைப் பார்த்து ''சார் மீக்கு போன்'' என்று நீட்டினார். '' மெட்ராசிலிருந்தா?'' என்று வாங்கினேன். ''லேது சார் லோக்கல் கால்''

விசாகப்பட்டினத்தில் என்னைத் தொலைபேசியில் அழைக்கக் கூடியவர்கள் யாருமில்லை. காதருகே ரிசீவரைக் கொண்டு சென்றேன். ''சார், நான் ரமேஸ் பேசறேன்'' என்றது மறுமுனை.

@

’அந்திமழை’ மாத இதழின் ‘மனக் கணக்கு’ பத்திக் கட்டுரையாக வெளியானது. ஓவியம் - பி ஆர் ராஜன்.






சனி, 13 ஜூலை, 2013

நல்வரவு, மார்க்கேஸ்





அனைவருக்கும் வணக்கம். இந்த அரங்கில் இருக்கும் கூட்டத்தை தமிழ் வாசகர்களின் பிரதிநிதிகளாக எடுத்துக் கொண்டே பேச விரும்புகிறேன். முதலில் இரண்டு விஷயங்களுக்காக மன்னிப்புத் தெரிவித்து விட்டுப் பேச்சைத் தொடரலாம் என்று நினைக்கிறேன்.

காப்ரியேல் கார்சியா மார்க்கேசின் நாவல் 'தனிமையின் நூறு ஆண்டுகள்' நாவலின் தமிழாக்கம் ஏப்ரல் மாதம் இறுதியில் வெளியாகும் என்று காலச் சுவடு பதிப்பகம் அறிவித்திருந்தது. கிட்டத்தட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட வாசகர்கள் முன்பதிவு செய்திருந்தார்கள்.  ஆனால் கொஞ்சம் தாமதமாக  ஜூன் இறுதியில் இன்றுதான் வெளியிடப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணங்கள் நூலைத் தயாரித்து முடிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தின.  அதில் முக்கியமான காரணம் நான். மொழிபெயர்ப்பை முடிக்கக் கொடுக்கப்பட்ட அவகாசத்தை விட மிக மிக அதிகமாகவே எடுத்துக் கொண்டேன். அதுவே தொடர்ச்சியாகக் கால தாமதத்தை ஏற்படுத்தியது. அதற்காக எல்லா வாசகர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருகிறேன். 

ஒரு மொழிபெயர்ப்பு  நாவலுக்காக இத்தனை வாசகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இந்த வாசக வரவேற்பு இந்த நாவலுக்கு ஆரம்பத்திலிருந்தே கிடைத்து வந்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு புத்தகம் வெளியாக இருந்தது. அது குளிர்காலம். இருந்தும் மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் நடுங்க வைக்கிற குளிரில் புத்தகக் கடை முன்னால் நீண்ட வரிசையில் நின்றிருந்தார்கள். கடைக்கு வந்த சில மணிநேரங்களில் புத்தகம் விற்றுத்தீர்ந்தது. வரிசையிலிருந்த பலரும் புத்தகம் கிடைக்காத ஏமாற்றத்துடன் திரும்பிப் போனர்கள். அந்தப் புத்தகம் ஒரு நாவல். சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ‘கிறிஸ்துமஸ் கரோல்’.
இருபதாம் நூற்றாண்டிலும் அதே போல ஒரு புத்தகத்துக்காக மக்கள் காத்து நின்றார்கள் என்பது காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் ‘ஒன் ஹன்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிட்டியூடு’க்காகத்தான். டிக்கன்சின் நாவலை வாங்க லண்டன்வாசிகள் மட்டுமே காத்திருந்தார்கள். மார்க்கேஸின் நாவலுக்காக ஸ்பானிய மொழி பேசுகிற எல்லா நகரங்களிலும் வாசகர்கள் காத்திருந்தார்கள் என்பது மட்டுமே வித்தியாசம்.

1967இல் வெளிவந்த நாவல் மூல மொழியான ஸ்பானிஷில் மூன்று கோடிப் பிரதிகள் விற்பனை ஆனது. இன்றுவரையும் அதிகம் விற்பனை யாகும் நாவல்களின் பட்டியலிலும்  இருந்து கொண்டே இருக்கிறது. 1970 ஆங்கில மொழி பெயர்ப்பு வெளிவந்தது. 1982இல் இலக்கியத்துக்கான நோபெல் பரிசு மார்க்கேஸுக்கு வழங்கப்பட்டது.  தொடர்ந்து உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இன்றைய கணக்குப் படி இந்த நாவல் 37 மொழிகளில் வெளிவந்திருக்கிறது. தமிழ் 38 ஆவது மொழி. நாவல் அதிகாரபூர்வமாக மொழியாக்கம் பெற்றிருக்கும் மூன்றாவது மொழி. மலையாளம், இந்தி இப்போது தமிழ். பதிப்புரிமை பெறாமல் பல மொழிகளில் பெயர்க்கப் பட்டிருப்பதன் கணக்குத் தெரியவில்லை. எனவே தமிழிலும் இந்த நாவல் வாசகர்களின் எதிர்பார்ப்பைப் பெற்றிருக்கிறது என்பது ஆச்சரியமாகவும் அதே சமயம் இயல்பானதாகவும் தோன்றுகிறது. இந்த எதிர்பார்ப்பை நான் கவனத்தில் கொள்ளவில்லை என்பதும் தாமதத்துக்குக் காரணம் என்று இப்போது தோன்றுகிறது. அதற்காகவும் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இனி நான் பேசப் போவதில் கொஞ்சம் சுய தம்பட்டம் ஒலிக்கலாம். அதற்காக முன்கூட்டியே உங்களிடம் மன்ன்னிப்புக் கோருகிறேன்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நண்பர் காலச்சுவடு கண்ணன் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலின் மொழிபெயர்ப்பு உரிமையை வாங்கியிருந்தார். மொழிபெயர்ப்பதற்குப் பொருத்தமான நபரைத் தேடிக் கொண்டுமிருந்தார். அந்தச் சமயத்தில் பெரியவர் ஞாலன் சுப்ரமணியன் எனக்கு அறிமுகமானர். அந்த அறிமுகமே சுவாரசியமானது. பாப்லோ நெரூதாவின் கவிதைகளை மொழிபெயர்த்து ஒரு தொகுப்பை வெளியிட்டிருந்தேன். உயிர்மை வெளியீடு. புத்தகம் வெளியாகி சில மாதங்கள் கழிந்த பிறகு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. பேசியவர் ஞாலன் சுப்ரமணியன்.கவிதை மொழி பெயர்ப்பு சிறப்பானதாக இருக்கிறது என்று பாராட்டினார். நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்றார். நான் இருப்பது திருவனந்தபுரத்தில். அவர் சென்னையில். எனவே சென்னை வரும்போது சந்திக்கலாம் என்று தெரிவித்தேன். இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து ஒரு மாலை நேரம் மீண்டும் தொலைபேசியில் அழைத்தார். பார்க்க வேண்டும்என்று சொன்னார்.

‘’நான் சென்னையில் இல்லையே சார் எப்படிப் பார்க்க?’’ என்று மரமண்டைத்தனமாகப் பதிலையும் சொன்னேன்.

‘’இல்ல தோழர் நான் இங்கே திருவனந்தபுரத்துலதான், ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல ஒரு லாட்ஜுல இருக்கேன். எங்கே வந்தா உங்களைப் பார்க்கலாம்’’என்று கேட்டார்.

’’இல்லை நானே வருகிறேன்’’ என்று அவர் குறிப்பிட்ட லாட்ஜுக்குப் போனேன்.

‘’திருவனந்தபுரத்தில் ஏதாவது வேலையா வந்தீங்களா சார்?’’ என்று கேட்டேன்.

‘’ உங்களைப் பார்க்கிறது மட்டும்தான் ஒரே வேலை. அதுக்காகத்தான் வந்தேன்’’ என்றார்.

அவருக்கு ஒரு எழுபது எண்பது வயதாவது இருக்கும். ஆனால் என்னை விட உற்சாகவானாகவும் பரபரப்பானவராகவும் இருந்தார். யாரோ ஒருவன் அவனுடைய தனிப்பட்ட ஆர்வத்தின் பேரில் செய்த மொழிபெயர்ப்பை வாசித்து விட்டு அவனைப் பார்க்கக் கைக்காசை செலவு செய்து ஆயிரம் கிலோமீட்டர் தாண்டிவந்திருக்கிறாரே,  கிறுக்கு முற்றிய கிழவராக இருப்பார் என்றுதான் முதலில் பட்டது. அவரைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டபோது அது கிறுக்கல்ல; பேரார்வம் என்பது புரிந்தது. அவர் தோழர் ஜீவாவால் இடது சாரி இயக்கத்துக்குள் அழைத்து வரப்பட்டவர். முதலில் ரஷ்யாவிலும் பின்னர் லத்தீன் அமெரிக்க நாடுகள் ஏதோ ஒன்றிலும் இருந்தவர். ஸ்பானிய மொழியில் எழுதவும் வாசிக்கவும் தெரிந்தவர். அந்த மொழியின் நவீன இலக்கியங்களுடன் ஓரளவு அறிமுகம் உள்ளவர். எல்லாவற்றுக்கும் மேலாகச் சென்னையில் பாப்லோ நெரூதாவின் பெயரால் ஸ்பானிய மொழி கற்பிக்கும் பள்ளி ஒன்றையும் நடத்திக் கொண்டிருப்பவர். இந்தப் பின்னணியில் தான் மார்க்கேஸின் நாவலை அவரால் மொழிபெயர்க்க முடியும் என்று நினைத்தேன். அவரை நண்பர் கண்ணனுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

 நாவல் மொழிபெயர்ப்புத் தொடங்கியது. நாவலின் முதல் அத்தியாயம் காலச் சுவடு இதழிலும் வெளியானது. சரியாக ஆறு அத்தியாயங்கள் மொழியாக்கம் செய்யப்பட்ட பின்பு அதை வாசித்துப் பார்க்கும் பணி எனக்குத் தரப்பட்டது. அதை செம்மைப்படுத்தி வெளியிட முடிவு செய்தோம். ஆனால் ஏதோ காரணங்களால் ஞாலன் சுப்ரமணியத்தால் ஆறு அத்தியாயங்களைத் தாண்ட முடியவில்லை. அதற்குள் காலக்கெடு நெருங்கிக் கொண்டிருந்தது. எனவே மாற்று ஏற்பாடாகப் புதிய மொழிபெயர்ப்பாளரைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வெவ்வேறு ஆட்களை அணுகினோம். தில்லியில் வாழும் ஸ்பானிய மொழி தெரிந்த தமிழ்ப் பெண் ஒருவரை அணுகிப் பார்த்தோம். அவருக்கு நவீனத் தமிழ் இலக்கியத்துடன் எந்தப் பரிச்சயமும் இல்லை. நவீன தமிழ் இலக்கியத் திலும் லத்தீன் அமெரிக்க இலக்கியத்திலும் பரிச்சயமுள்ள ஒருவரும் வாய்ப்பை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார். இதையெல்லாம் காதலிக்கு மாப்பிள்ளை பார்க்கிற மனநிலையில்தான் செய்து கொண்டிருந்தேன். அதைத் தெரிந்து கொண்டோ அல்லது தெரியாமலோ நண்பர் கண்ணன் பெருந்தன்மையாக “நீங்களே பண்ணிடுங்க” என்றார். அந்த வார்த்தை காதில் விழுந்த விநாடி நான் அடைந்த சிலிர்ப்பை விளக்கிச் சொல்வது கடினம். முப்பது வருடங்களாகச், சரியாகச் சொன்னால் 1982ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கண்ணன் சொல்லும்வரை மனதுக்குள் இருந்த கனவு அது.

வாசிப்பு தீவிரமாக மாறிய காலகட்டத்தில் தமிழில் கவனமாக வாசித்ததைப் போலவே ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் வாசித்துக் கொண்டிருந்தேன். அந்த நாட்களில் எனக்கு அறிமுகமான பெயர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். மலையாளத்தில் சிறந்த நாவல்களில் ஒன்றான  ஓ.வி. விஜயனின் ‘கசாக்கின்டெ இதிகாசம்’ லத்தீன் அமெரிக்க நாவலான ‘One Hundred Years of Solitude’இன் சாயலில் எழுதப்பட்டது என்ற புரளி இலக்கிய வட்டங்களில் நிலவியது. அது அன்றைய இலக்கிய வாதிகள் நடுவே  விவாதமாக இருந்தது. அதில் மார்க்கேஸ் நாவலின் பகுதிகள் மேற்கோள் காட்டப்பட்டிருந்தன. மாஜிக்கல் ரியலிசம் என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டிருந்தது. இவை எல்லாம் உருவாக்கிய வாசகக் குறுகுறுப்பு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேட வைத்தது. அன்று - 70களின் இறுதியில் அல்லது 80களின் ஆரம்பத்தில் ஆங்கிலப் புத்தகங்கள் கிடைப்பது அரிது. அதுவும் இதுபோன்ற நவீன நூல்கள் எங்கள் ஊரான கோயம்புத்தூரில் உடனடியாகக் கிடைப்பது சிரமம். அன்றைக்கு எனக்குத் தெரிந்த ஒரே பதிப்பாளரான க்ரியா ராமகிருஷ்ணன் மூலம் அந்தப் புத்தகத்தின் பெங்குவின் பதிப்பு கிடைத்தது. தன்னுடைய நண்பரான பத்மநாப ஐயர் லண்டலிருந்து வாங்கி அனுப்பியதாகக் கொடுத்தார். அது ஒரு டிசம்பர் மாதக் கடைசி நாட்கள் என்பதும் சென்னைப் புத்தகக் கண்காட்சி முடிவடைய இருந்த நேரம் என்பதும் ஞாபகமிருக்கிறது. ஊருக்குப் போய் வாசிக்க ஆரம்பித்தேன். முதல் நாலு பக்கங்களைப் படித்துப் புரிந்துகொள்ளவே நாற்பது முறை அகராதியைப் புரட்ட வேண்டியிருந்தது. அது ஒரு தொல்லை. ஆனால் கதையின் சுவாரசியம் அதைப் பொறுத்துக்கொள்ளச் செய்தது. இருந்த போதும் மூன்று அத்தியாயங்களுக்கு மேல் - அதுவே அறுபது பக்கங்களுக்கு மேல் வரும் - வாசிப்பைத் தொடர முடியவில்லை. அந்த ஆண்டு அக்டோபரில் மார்க்கேஸுக்கு நோபெல் இலக்கியப் பரிசு அளிக்கப்பட்டது. நோபெல் பரிசுகளின் வரலாற்றில் மிக அதிகம் இலக்கியப் பரபரப்பை ஏற்படுத்திய விருதுகளில் அதுவும் ஒன்று. 82க்கும் 84க்கும் இடையே கிட்டத்தட்ட மார்க்கேஸின் அதுவரையிலான படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் எல்லாம் பிக்கடோர் பதிப்புகளாகக் கிடைக்க ஆரம்பித்திருந்தன. நானும் அறுபத்தியோராவது பக்கத்திலிருந்து மீண்டும் தொடங்கி ‘‘One Hundred Years of Solitude’ஐ வாசித்து முடித்தே விட்டேன். கிறிஸ்டோபர் கொலம்பஸுக்குப் பிறகு மனிதர்கள் நிரம்பிய புதிய உலகத்தைக் கண்டு பிடித்த அடுத்த ஆள் நான் தான் என்று கொஞ்சம் பெருமிதமாக உணர்ந்தேன். உண்மையில் நாவலின் பல பகுதிகள் அப்போது புரியவில்லை.

கடந்த முப்பதுக்கும் மேற்பட்ட வருடங்களில் பகுதிகளாகவும் முழுமையாக வும் நான்கைந்து முறையாவது இந்த நாவலை வாசித்திருப்பேன். அப்போதும் முழுமையாகப் புரிந்ததில்லை. உண்மையாகச் சொல்வதென்றால் வரிக்குவரி நாவலைப் புரிந்துகொண்டது அதை மொழிபெயர்க்கத் தொடங்கியபோதுதான். இது இரண்டுச் செய்திகளை எனக்கு உணர்த்தியது. ஒரு படைப்பை நெருக்க மாகப் புரிந்துகொள்வதற்குச் சிறந்தவழி அதை மொழிபெயர்ப்பதுதான் என்பதை அனுபவமாகத் தெரிந்துக்கொண்டேன். இன்னொன்று வெறும் வாசகனாக ஒரு படைப்பை அணுகுகிறபோது கிடைக்கும் சலுகை. ஒரு வாசகன் பல பக்கங்களைப் புரட்டி வாசித்தும் ஒரு நாவலைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் மொழிபெயர்ப்பாளனால், ஒரு வரியை ஒரு வார்த்தையைக் கூட விட்டுவிட முடியாது என்ற கட்டுப்பாட்டை அனுபவத்தில் உணர்ந்தேன்.

மார்க்கேஸின் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான கிரகோரி ரபாஸா, தன்னுடைய நினைவுக் குறிப்புகளில் -  'If This Be Treason: Translation and Its Dyscontents' என்ற குறிப்புகளில் சொல்லியிருப்பது நினைவுக்கு வருகிறது ‘ஒரு மொழி பெயர்ப்பாளனும் எழுத்தாளன்தான். அவன் முன்னால் கதைக்கான களன், பாத்திரங்கள், சம்பவம் எல்லாம் அப்படியப்படியே இருக்கின்றன. அவன் செய்ய வேண்டியது அடக்க ஒடுக்கமாக உட்கார்ந்து அதை எழுதி முடிப்பதுதான்.’ இந்த மொழிபெயர்ப்பை அப்படித்தான் செய்திருப்பதாக நம்புகிறேன்.

நாவலைப் புரியாமல் வாசித்த காலத்திலேயே ஒரு சாகசத்தையும் செய்தி ருக்கிறேன். மார்க்கேஸுக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது. அதையொட்டி கோவை வானொலி நிலையத்தின் இலக்கிய நிகழ்ச்சியொன்றில்
 'தனிமையின் நூறு ஆண்டுகள்' நாவலைப் பற்றி ஓர் உரை கூட நிகழ்த்தினேன்.  சென்னை வானொலி நிலைய இயக்குநராக இருந்து மிக அண்மையில் பணி ஓய்வு பெற்ற நண்பர் ஜே. கமலநாதன் தான் அந்தச் சாகசத்துக்குத் தூண்டுதலாக இருந்தார். எண்பதுகளிலும் தொண்ணூறு களிலும் எழுத, வாசிக்க வந்த எல்லாரிடமும் மார்க்கேஸ் எழுத்துகள் மீதான பிரியமும் பாதிப்பும் இருந்தன என்று சொல்ல முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்ப் புனைகதையை ஒவ்வொரு பிறமொழி எழுத்தாளர்கள் பாதித்திருக்கிறார்கள். புதுமைப்பித்தன் காலம் முதல் இன்றுவரை இந்தப் பாதிப்பின் சாயல்களைப் பார்க்கலாம். மாப்பசான், ஓஹென்றி, ஆன்டன் செகாவ், டால்ஸ்டாய், ஜேம்ஸ் ஜாய்ஸ், காஃப்கா என்று பலர். இந்த வரிசையில் பரவலாக வாசிக்கப்பட்ட, விவாதிக்கப்பட்ட, மொழி பெயர்க்கப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்தான் என்று தோன்றுகிறது. மார்க்கேஸின் சாயலையொட்டி அவர் முன்வைத்த ‘மாந்திரீக எதார்த்தவாதம்’ என்ற போக்கையொட்டித் தமிழில் நிறையவே  எழுதப் பட்டிருக்கின்றன. தமிழவனின் ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’  முதல் பா. வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’ வரையிலான நாவல்கள், ஜெயமோகனின் ‘டார்த்தீனியம்’ என்ற குறுநாவல், தமிழ்ச்செல்வனின் ‘வாளின் தனிமை’, விமலாதித்த மாமல்லனின் ‘சிறுமி கொண்டுவந்த மலர்’ ‘உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை’ முதல் கோணங்கி எழுதிவரும் கதைகள், நாவல்கள் வரை - இவை உடனடி உதாரணங்கள்-  மார்க்கேஸின் பாதிப்பு அல்லது மாஜிக்கல் ரியலிசத்தின் பாதிப்பு தென்படுகின்றன. இதன் பொருள் இவர்கள் எல்லாம் இடதுகையில் மார்க்கேஸின் புத்தகத்தைப் பிடித்துக் கொண்டு வலது கையால் தங்களது கதைகளை எழுதினார்கள் என்பது அல்ல. ஒட்டுமொத்தமாக உலக இலக்கியத்தைப் பாதித்த ஒரு போக்கின் விளைவை - அதிர்வை - வாசிப்பின் மூலமோ வாசித்தவர்கள் சொல்லக் கேட்டதன் மூலமோ பிரதிபலித்திருக்கிறார்கள் என்பதுதான். கொஞ்சம் விரிவாக யோசித்தால் மார்க்கேஸின் பாதிப்பு இல்லாமலிருந்தால் சல்மான் ரஷ்டியின் ‘Midnight’s Children’,  அருந்ததி ராயின் ‘‘God of small things’  போன்ற நாவல்களின் கதையாடலும் வடிவமும் வேறாக அமைந்திருக்கும் என்பது என் யூகம்.
‘மாஜிக்கல் ரியலிசம்’ என்பது மார்க்கேஸின் கண்டுபிடிப்பல்ல. லத்தீன் அமெரிக்கப் புனைகதையில் அவருக்கு முன்பே கையாளப்பட்டுவந்த போக்கு. அதைத் தனது அனுபவங்களால் மார்க்கேஸ் செழுமைப் படுத்தினார். அவரே ஒரு பேட்டியில் சொன்னார். “என்னுடைய எழுத்தில் மாந்திரீக எதார்த்தம் என்று ஒன்றைப் பற்றிச் சொல்கிறார்கள். அப்படி ஒன்றை நான் உணர்ந்ததே இல்லை. கரீபியப் பகுதியில் வாழ்க்கையில் தட்டுப்படும் அன்றாட எதார்த்தங்கள் வெளியில் இருப்பவர்களுக்கு மாயத்தன்மை கொண்டதாகத் தெரிகிறது.” மற்றவர்களின் மாய எழுத்தில் வாசகனை வசீகரிக்கும் மாயத் தன்மைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டபோது மார்க்கேஸ் தனது எழுத்துகளில் அந்த மாயத்தன்மையின் அடிப்படையான எதார்த்தத்தை மறைக்காமல் இருந்தார். இந்த நாவலின் ஒரு பாத்திரமான அழகி ரெமேதியோஸ் ஒரு பிற்பகல் நேரம் காயப்போட்டிருக்கும் படுக்கை விரிப்புகளுடன் அந்தரத்தில் எழும்பி உயிரோடும் உடலோடும் நேரடியாக சொர்க்கத்துக்குப் போகிறாள். அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் இன்னொரு பாத்திரமான பெர்னாண்டா கடவுளிடம் பிரார்த்திக்கிறாள். ‘விலை உயர்ந்த அந்த விரிப்புகளைத் திரும்பக் கொடுக்க வேண்டும்’ என்றுதான். இந்தத் தெளிவுநிலை -  lucidity தான் மார்க்கேஸை முக்கியமானவராக்கியது. தமிழில் எழுதப்பட்ட மாஜிக் ரியலிச எழுத்துகளில் பெரும்பான்மை யானவற்றில் புரிந்துக்கொள்ளப்படாமல் விடப்பட்ட அம்சம் இதுதான்.
இந்த மாயக்கூறுதான் மேற்கத்திய வாசகர்களையும் நம்மைப் போன்ற கீழைத்தேய வாசகர்களையும் கவர்ந்தது. மார்க்கேஸை அபிமான எழுத்தாளர் ஆக்கியது. மேற்கத்திய வாசகர்களுக்கு புதிய கதையைச் சொன்னதால். கிழக்கத்திய வாசகர்களுக்கு அவர்களது வாழ்க்கையில் பார்க்கும் காட்சி களைப் புனைவில் வெளிப்படுத்திய நெருக்கத்தினால். நாவலிலிருந்து ஒரு காட்சியை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். மகோந்தா நகரத்தை உருவாக்கிய ஹோஸே அர்க்காதியோ புயேந்தியா, தனது ஆராய்ச்சிகளால் பைத்தியம் முற்றி வீட்டு முற்றத்தில் மரத்தடியில் கட்டப்பட்டுக் கிடக்கிறார். இந்த உலக நினைவே இல்லாத அவர் இருந்த இடத்திலேயே கழித்த மலத்தை மனைவி உர்சுலா மண்ணைப்போட்டு மூடி மண்வெட்டியால் அள்ளி வீசுகிறாள். இப்படியான காட்சியை நாம் வியந்து பாராட்டும் எந்த மேற்கத்திய நாவலிலும் பார்ப்பது அரிது. ஆனால் ஓர் இந்திய நாவலில் - அல்லது தமிழ்நாவலில் - இதை மிக எதார்த் தமானதாக அடையாளம் கண்டு கொள்ளமுடியும். மேற்கத்திய Sophisticationக்குப் பதிலாக இயல்பான வெகுளித்தனம் மிளிர்வதுதான் மார்க்கேஸ் நமக்கு நெருக்கமானவராகத் தெரியக் காரணம். அண்மைக் காலத்தில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்துகளும் அவருடையதாக இருக்கக் காரணமும் இந்த நெருக்கம்தான். இத்தனை இணக்கமான ஓர் எழுத்து தமிழுக்கு அதிகாரபூர்வமாக இப்போது தான் வாய்த்திருக்கிறது என்பது விந்தையாகவே தோன்றுகிறது.

இந்த மொழிபெயர்ப்பு தொடர்பாக சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

எந்த மொழிபெயர்ப்பும் முழுமையானதல்ல; நூறு விழுக்காடு பொருத்த மானதும் அல்ல. இதை அண்மையில் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். மலையாளக் கவிஞரான வினயசந்திரனின் மறைவையொட்டி நான் ஒரு அஞ்சலிக் குறிப்பை - மாத்ருபூமி வாரஇதழில் எழுதியிருந்தேன், மலையாளத்தில். திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் செயலாளரான தோழர் வானமாமலை அதைத் தமிழாக்கம் செய்து சங்கத்தின் இதழான ‘கேரளத் தமிழில்’ வெளியிட்டிருந்தார். அதே கட்டுரையை நானும் தமிழில் எழுதி காலச்சுவடு இதழிலும் வெளியிட்டேன். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்த போது வியப்பாக இருந்தது. இரண்டும் வெவ்வேறு தமிழ் வடிவங்களிலி ருந்தன. இரண்டிலும் குறிப்பிடப்படும் சம்பவங்களும் பெயர்களும் உரையாடல் களும் எல்லாமும் ஒன்றாகவே இருந்தபோதும் வேறுவேறாகவே தென்பட்டன. அது ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தியது. மொழிபெயர்ப்பில் மூலத்தைச் சார்ந்து வலுவான நம்பகத் தன்மையை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படை உண்மையை உணரவைத்தது. ‘தனிமையின் நூறு ஆண்டு’களில் நான் பின்பற்றி யிருக்கும் முதலாவது விதி இந்த நம்பகத் தன்மையை உருவாக்கியது தான். அதை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளை மார்க்கேஸே அவரது இதர படைப்புகள் மூலம் வழங்கினார். இந்த நாவலுடன் தொடர்பு டையவையாகவே, இந்த நாவலுக்கு முன்னும் பின்னுமாக எழுதிய கதைகளில் அதைச் செய்திருந்தார். ‘தனிமையின் நூறு ஆண்டுகளில்’ வரும் கர்னல் அவுரேலியானோ புயேந்தியா ‘கர்னலுக்கு யாரும் கடிதம் எழுதுவ தில்லை, குறுநாவலில் வருகிறார். ரியோஹாச்சா என்ற இடத்திலிருந்து வாடிகனுக்குப் போப் ஆண்டவரைப் பார்க்கச் செல்லும் பயணம்’ விநோத புனிதயாத்திரிகர்கள் தொகுப்பின் சிறுகதை ஒன்றில் இடம் பெறுகிறது. இந்த அம்சங்கள் மொழிபெயர்ப்பில் நம்பகத்தன்மையை உருவாக்க உதவின.

ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் ஒவ்வொரு நடையைக் கோருகின்றன. மூலத்துக்கு வரிவரியாக ஒத்துப்போகும் நடை, ஆசிரியனுக்கு விசுவசமாக இருக்கும் நடை, என்று. இந்த நாவல் வலியுறுத்தியது கதையாடலை மட்டும் முன்னிருந்தும் நடையை அல்ல; அதற்குள் இருக்கும் துணைப் பிரதிகளையும் மேªலுழுவதற்கு உதவும் நடையை. எனவே வரிக்கு வரியாள மொழிபெயர்ப்பு நடையோ கதையாடலே முன் நகர்த்தும் நடையோ இதில் பயன்படுத்த வில்லை. கருத்தையும், உணர்வுகளையும் முதன்மைப்படுத்தும் நடையையே பயன்படுத்த நேர்ந்தது. மார்க்கேஸை மார்க்கேஸாக அடையாளப்படுத்தும் நடையை.

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸே மூன்று தனித்தனி நடைகளில் இந்த நாவலை எழுதியிருக்கிறார். ஒன்று ‘டான்குவிக்ஸோட்’ எழுதிய செர்வான்டிஸின் செவ்வியல் நடை. ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலைப் பற்றிச் சொல்லப்பட்ட மிக உயர்வான மதிப்புரை பாப்லோ நெரூதா – ’செர்வான்டிஸூக்குப் பிறகு ஸ்பானிய மொழி தன் ஆற்றலை வெளிப்படுத்தியிருப்பது இந்த நாவலில்தான்’ - சொன்னதுதான். பைபிளின் சாயலுள்ள நடை, இரண்டாவது. நாவலில் இடம் பெறும் சமகாலத் தன்மையுள்ள நிகழ்வுகளில் பத்திரிகையாளனின் துல்லியமான நடை. இந்த மூன்றையும் தான் பிறந்து வளர்ந்த கொலம்பியக் கிராமமான அரக்காடாக்கா வட்டார வழக்குடன் இணைந்த தனது உணர்வுகளுடன் கலந்து உருவாக்கிய நடையில்தான் மார்க்கேஸ் எழுதியிருக்கிறார். ஓர் உதாரணத்தைச் சொல்லலாம். அமரந்தா உர்சுலா என்ற பாத்திரம் பிரஸ்ஸெல்லில் படிப்பு முடித்து கணவன் காஸ்ட்டனுடன் மகோந்தா திரும்புகிறாள். அவர் கொண்டுவந்திருக்கும் பொருட்களில் ஒன்றின் பெயர் Velocipede. வேறு எதுவும் இல்லை. சைக்கிள்தான். அரக்காடாகா வழக்குச் சொல் அது.

நாவலை நீங்களே வாசிக்கவிருப்பதால் அதன் கதைப் போக்கைப் பற்றியோ அதிலுள்ள வரலாற்றுப் பின்னணி இலக்கிய மேன்மைகள் பற்றியோ பேசத் தேவையில்லை என்று நினைக்கிறேன். ‘கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக மொழிகளில் எழுதப்பட்டவற்றில் மிகச் சிறந்த நாவல்’ என்று சல்மான் ரஷ்டி குறிப்பிட்டிருப்பது பொருத்தமான மதிப்பீடுதான்.
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸை விடவும் அவரது சமகாலத்தவரான ஜார்ஜ் லூயி போர்ஹேயின் எழுத்துகள் அறிவார்ந்த தர்க்கங்கள் நிரம்பியவை. மார்க்கேஸின் நாவல்களை விட கார்லோஸ் புயெந்திஸின் படைப்புகள் இன்னும் வசீகரமானவை. மார்க்கேஸின் கதையாடலை விட மரியா வர்கஸ் யோஸாவின் கதையாடலில் அரசியல் உள்ளோட்டங்கள் அதிகம். இவை அனைத்தையும் கடந்து எல்லா மொழிகளிலும் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் அந்தந்த மொழியின் எழுத்தாளராக சொந்தம் கொண்டாடப் படுவதன் காரணம்: அவர் எழுத்து இவை எல்லாவற்றையும் விட மானிடத் தன்மை மிகுந்தது more human என்பதுதான். மனிதச் சிக்கல்களை கலையின் வெகுளித்தனத்துடன் சொன்ன நாவல் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ என்பதுதான் மார்க்கேஸை நிகரற்ற நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.

மொழிபெயர்ப்புகளைப் பற்றி பீட்டர் ஹெச் ஸ்டோனுடன் நடத்திய நேர்காணலில் மார்க்கேஸ் இப்படிக் குறிப்பிடுகிறார். “நான் எனக்கு விருப்பமான புத்தகங்களை அந்நிய மொழியில் வாசிக்க விரும்பவில்லை. காரணம், நான் மிக நெருக்கமாக உணர்வது ஸ்பானிய மொழியில்தான்.” காப்ரியேல் கார்சியா மார்க்கேஸை ஒரு தமிழ் வாசகன் தனக்கு நெருக்கமாக உணர்ந்துகொள்ள இந்த மொழிபெயர்ப்பு துணை செய்யுமானால் முப்பது ஆண்டுகள் கனவுகண்ட இலக்கியக் காதல் பலித்துவிட்டதாகக் கருதுவேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. 


காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலின் தமிழாக்கத்தின் வெளியீட்டு விழா சென்னையில் ‘டிஸ்கவரி புக்பேலசில்’ கடந்த ஜூன் 30 அன்று மாலை நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை இது. புகைப்படத்தில் நூலை வெளியிட்ட ஃப்ரண்ட்லைன் இதழின் ஆசிரியர் விஜயசங்கர், பெற்றுக் கொண்ட ஜி.குப்புசாமி ஆகியோருடன் நானும்.

புதன், 10 ஜூலை, 2013

ஆப்பிள் தருணங்கள்


(இத்தாலிய நடிகை மோனிகா பெலூசிக்கு)


"Of all the girls who asked me to remember them, 
the only one I remembered is the one who did not ask."


ஆப்பிள் ஒரு சொல்
எச்சரிக்கையை மீறி ஏவாள் கடித்த ஆப்பிளின்
இரண்டாவது கடி என்னுடையது
அன்று 'விடுதலை' என்ற வார்த்தை உருவானது

ஆப்பிள் ஒரு பொருள்
நாணில் பொருந்தி விறைத்திருந்த
அம்பின் இலக்கான ஆப்பிள்
நம்பிக்கையுடன் கொந்தளித்த
என் தலைமீதுதான் இருந்தது
அப்போது துணிவச்சம் என்ற பொருள் திரண்டது

ஆப்பிள் ஒரு தாவரம்
தனக்குள் உறங்கும் விதைகளில்
ஒரு தோட்டத்தைக் கனவு காணும் தருணத்தில்
காற்றின் குறும்புக் கைகளால் உலுக்கப்பட்டு
என் மடியில்தான் வீழ்ந்தது
அதிலிருந்து ஞானம் துளிர்த்துக் கிளைத்தது.

ஆப்பிள் ஒரு பொய்
நோயாளிக்குச் சிகிச்சையளிக்க வரும்
மருத்துவரின் கைப்பையில் வதங்கிக் கிடந்தது
அங்கிருந்தே சரீரம் தன்னை ஆராய்ந்தது

ஆப்பிள் ஓர் உண்மை
பூமியின் முதல் பழமே
பூமியைப்போலிருப்பதை நானே கண்டடைந்தேன்
அந்தக் கணம் முதல்தான்  உலகம் சுழலத் தொடங்கியது


மலினா ஸ்கார்தியா
நீதிமன்ற பெஞ்சில் அமரும்போது
நிர்வாணப் பழம்
மெல்ல மெல்ல மிதந்து இறங்குவதையும்  பார்த்தேன்
அந்த நொடியில் புரிந்தது
ஆப்பிள் ஒரு பெண்.



இத்தாலிய இயக்குநர் கியூசெப்பே டோர்னடோரேயின் ' மலீனா' படத்தில் இடம் பெறும் உரையாடல். மலீனாவாக நடித்திருப்பவர் நடிகை மோனிகா பெலூசி.



புதன், 26 ஜூன், 2013