வெள்ளி, 1 மே, 2020

மலையாள சினிமாவின் 75 ஆண்டுகள்




இந்த வீடடங்கு நாட்களில் புத்தக அடுக்குகளிலும் பத்திரிகைக் கட்டுகளிலும் கணினிக் கோப்புகளிலும் துளாவிக் கொண்டிருந்தேன். எழுதி வெளியானவற்றின் அளவில் பாதியளவுக்கு விட்ட குறையாக வெளியிடப்படாத நிறைய சரக்குகள் இருப்பது கவனத்துக்கு வந்தது. கணிசமான வரிகளை எழுதிய பின்பு கைவிட்ட கவிதைகள், ஆவேசமாகத் தொடங்கிப் பாதியில் முடங்கிய மொழிபெயர்ப்புகள், இன்னும் ஓரிரு பத்தியில் முடிந்து விடும் நிலையிலான கட்டுரைகள், வெளியிட்டால் பொல்லாப்பு என்று தயக்கமளித்த மதிப்புரைகள், கேட்ட இசை பற்றிய புளகாங்கிதக் குறிப்புகள், தன் அனுபவம் சார்ந்த பதிவுகள் என்று அரும் பொருட்கள் பல ஆச்சரியத்தைக் கொடுத்தன. இருப்புக் கணக்கைப் பட்டியலிட்டதில் சரக்குகள் சுய வியப்பைக் கொடுத்தன.

நூலாகத் தொகுத்தால்  இருநூறு பக்கங்களாவது வரும் அளவுக்கான சினிமா தொடர்பான கட்டுரைகளும் குறிப்புகளும் அவற்றில் இருந்தது மலைப்பை ஏற்படுத்தியது. மலையாள சினிமா எழுபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்ததை ஒட்டி எழுதிய நீளமான கட்டுரை அவற்றில் ஒன்று. 1928 இல்  திரையிடப்பட்ட மலையாளத்தின் முதல் படமான ‘விகதகுமாரன்’ முதல் 2004 இல் வெளியான ‘காழ்ச்ச’ வரையிலான திரைக் கலையின் வரலாறு. லீனா மணிமேகலையும் ஜெரால்டும் கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்கள் நடத்திய  ‘திரை’  இதழில் 2005 டிசம்பர் முதல் ஆறு தவணைகளில் எழுதப்பட்ட தொடர்.  2004க்குப் பிறகு மலையாள சினிமாவில் தென்பட்ட மாற்றங்களைச் சுட்டிக்காட்டி ஏழாவது தவணைக் கட்டுரையை எழுதினேன். அதற்குள் பத்திரிகையே நின்று போனது. கணினி பழுதாகியிருந்ததால் ஏழாவது கட்டுரையைக் கையால் எழுதி அனுப்பியது நினைவிருக்கிறது. அது மீட்க முடியாத வகையில் காணாமலும் போனது. முதற்பகுதி மட்டும் மோ. அருணின் இணைய இதழ் ‘பேசா மொழி’யில் மறுபிரசுரம் கண்டிருக்கிறது. தொடர்ந்து வெளியானதா என்றும் தெரியவில்லை.

மலையாள சினிமாவின் எழுபத்தைந்து ஆண்டுகள் கட்டுரையை எழுதியதில் கிடைத்த உற்சாகமே அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘ சினிமா அனுபவம்’ நூலை மொழியாக்கம் செய்யவும் தூண்டுதலாக அமைந்தது.

கட்டுரையை இங்கே பதிவேற்றுவது அதைப் பத்திரப்படுத்திக் கொள்ளவும் விருப்பமுள்ளவர்கள் வாசித்துப் பார்க்கவும்.




         மலையாள சினிமாவின் எழுபத்தைந்து  ஆண்டுகள்


ணிக  அடிப்படையில்  வெற்றியடைந்த மலையாளத்  திரைப்படங்களை வேட்கையுடன்  மொழிமாற்றும்  தமிழ்த்  திரையுலகின்  சமீபகால நடவடிக்கையை  கலைப் பரிமாற்றம்   என்று பாரட்டலாம்.  மலையாள சினிமாவின்  இனிமையான  பழிவாங்கல்   என்றும்  சொல்லலாம்ஏனெனில் மலையாள  சினிமாவின்  தோற்றமும்  வளர்ச்சியும்  தமிழ்  சினிமாவை அடியொற்றியும்  ஆதாரமாகக் கொண்டும்   நிகழ்ந்தவை.


ஏறத்தாழ  நாற்பதாண்டுக் காலம்  தமிழ்  சினிமாவின் பாதிப்பு  மலையாள சினிமா மீது கவிந்திருந்தது. கதையாடல்,பின்னணி இசை,பாடல்கள், தொழில்நுட்பம்  இவற்றிலெல்லாம் ஆரம்பகால மலையாளப்படங்கள் தமிழ் சினிமாவின் அம்சங்களையே கொண்டிருந்தன.'ஜீவித நௌகா' (1951) படம் வந்து வியாபாரத்துக்கு உதவும் வெகுசன ரசனைக்கூறுகளையும் 'நீலக்குயில்'(1954), 'நியூஸ்பேப்பர் பாய்' (1955) ஆகிய படங்கள் வெளிவந்து மலையாள  சினிமாவுக்கு உரிய அழகியலையும் உருவாக்கும்வரை தமிழ் சினிமாவின் துணைக் கோளாகவே மலையாளப் படவுலகம் இருந்தது.


உலக  சினிமாவின் முதல் பொதுக் காட்சி 1895இல் பாரீஸில் நடத்தப்பட்டது. லூமியர்  சகோதரர்கள் அதை நடத்தினார்கள். வெற்றிகரமான திரையிடலாக இருந்தது அது. அந்த வியாபார வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள உலகப் பயணம் செய்து  திரையிடல்களை நடத்தினர் லூமியர் சகோதரர்கள். பாரீஸில் முதல் திரைப்படக் காட்சி நடந்த மறு வருடமே பம்பாயிலும் லூமியர் காட்சி நடந்தது. லூமியரின்  ஏஜெண்டுகள் காட்சி நடத்தித் திரும்பிப் போனார்கள்.


அவர்கள் விட்டுச் சென்ற கேளிக்கை வணிகத்தில் தூண்டப்பட்ட இந்தியர்கள் பலர் புரொக்ஜடர்களை வெளிநாடுகளிலிருந்து தருவித்து உள்நாட்டில் திரைக் காட்சிகளை நடத்த ஆரம்பித்தார்கள். திருச்சியைச் சேர்ந்த சாமிக்கண்ணு வின்சென்ட்  அவர்களில் ஒருவர்.ரயில்வே ஊழியரான வின்சென்ட் ஒரு பிரெஞ்சுகாரரிடமிருந்து வாங்கிய 'எடிசன் பயாஸ்கோப்' என்ற படம்காட்டும் கருவியுடன் தென்னிந்தியா முழுவதும் அலைந்து திரையிடல்கள் நிகழ்த்தினார். சினிமா ஊடகத்தை மலையாளிகளுக்கு இந்தத் தமிழர்தான்அறிமுகப்படுத்தினார். 1906 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு வந்துசேர்ந்தார் வின்சென்ட். பூக்கள் மலர்வதும் பந்தயக் குதிரைகள் ஓடுவதும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைச் சம்பவங்களும் திரையில் காட்சியாக விரிந்த கலையை மலையாளிகள்  முதன்முறையாகப் பார்த்தார்கள்.










   வின்சென்ட்


அந்த ஆண்டு இறுதியில் திருச்சூர் நகரத்தில் வின்சென்டின் பயாஸ்கோப் காட்சிகள் நடந்தன.உள்ளூர்வாசிகள் அதில் அவ்வளவாக ஆர்வம் காட்ட வில்லை.வின்சென்டின் மனம் சோர்ந்துபோனது.திருச்சூரைச் சேர்ந்த வாறுண்ணி ஜோசப் அந்த காட்சிகளின் அற்புதத்தில் கிறங்கிப்போனார்.வின்சென்டிடமிருந்த படக் கருவிகளையும் பிலிம்களையும் விலைக்கு வாங்கிக்கொண்டார்.1907  திருச்சூர் பூரச் சந்தையில் கேரளத்தின் முதல் தற்காலிகத் திரையரங்கை ஜோசப் அமைத்தார்.வின்சென்டின் தோல்வி ஜோசப்பின் வெற்றியாக மாறியது.முதல் மலையாளப்படம் எடுக்கப்படுவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே முதலாவது  திரையரங்கு உருவானது. அங்கு திரையிடப்பட்ட வெளிநாட்டு பேசாப் படங்களைக் கண்டு ரசிக்க மலையாளிகள் திரண்டனர்.


ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெனரேட்டர் அறிமுகமானதும் காட்டுக்காரன் வாறுண்ணி ஜோசப் அதை பிரத்தியேகமாக அறிவிக்கும் வகையில் தனது கம்பெனிக்கு'ஜோஸ் எலக்ட்ரிகல் பயாஸ்கோப்'என்று பெயரிட்டார். விரைவிலேயே  கேரள நகரங்களில் திரையரங்குகள் பெருகின. அவற்றில் திரையிடப்பட்டவை  ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட படங்களாக இருந்தன.


மங்களூர் கடற்கரையில் திரைப்படக் காட்சிகளுக்காக முகாமிட்டிருந்தார் ஜோசப்.எதிர்பாராதவிதமாக அவரது சினிமா உபகரணங்கள் அனைத்தும் கடலில் மூழ்கிப் போயின.சற்றும் மனந்தளராத ஜோசப் புதிய இரண்டுபங்குதாரர்களைச்  சேர்த்துக்கொண்டு இன்னொரு கம்பெனியை உருவாக்கினார். 'ராயல் எக்ஸிபிட்டர்ஸ்' என்ற அந்தக் கம்பெனியை கேரளத்தின் முதலாவது திரைப்பட விநியோக நிறுவனம் என்று சொல்லலாம்மலையாளத்தில் படம் தயாரிப்பது கம்பெனியின் நோக்கமாக இருந்தது. ஆனால் அதற்கான தொழில்  நுட்பம் எளிதானதாக இருக்கவில்லை. முதலாவது மலையாளப்படம்  உருவாவதற்கு முன்பே ஜோசப் காட்டுக்காரன் மறைந்தார்.



இதற்குள் உலக சினிமாவில் கணிசமான எண்ணிக்கையில் மௌனப்படங்கள் தயாராகி வெளிவந்தன. தாதா சாகேப் பால்கே இந்தியாவின் முதல் சினிமாவை எடுத்திருந்தார். அவரைத் தொடர்ந்து மற்ற சிலரும் மௌனப் படங்களை எடுத்திருந்தனர். தமிழின் முதல் மௌனப்படம் 'கீசகவதம்' (1917) நடராஜ முதலியாரின் தயாரிப்பாக வெளிவந்திருந்ததுகேரளம் இவற்றுக்கெல்லாம் காட்சிசாலையாக இருந்தே தவிர உற்பத்திகேந்திரமாக இருக்கவில்லை. 'ஜாஸ் சிங்கர்'(1927) படத்துடன் உலக சினிமா பேசத் தொடங்கியதுஅப்போதுதான் மலையாளத்தின் முதல் மௌனப்படத்துக்கான முயற்சிகள் ஆரம்பித்தன.



இன்று தமிழகத்தின் பகுதியாகவுள்ள அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு  உட்பட்டிருந்த கன்யாகுமரி மாவட்டத்தினர்தாம் ஆரம்ப கால மலையாள திரைப்படங்களுக்குக் காரணமாக இருந்தனர்.


அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த ஜே.சி.டானியல்தான் மலையாள திரைப் படத்தின் தந்தை.பல்மருத்துவரான டானியல் சினிமா ரசிகர்.களரிப் பயற்றில் தேர்ந்தவர். அழகர்களரி வித்தையைப் பிரபலப்படுத்த சினிமாவைப் பயன் படுத்துவது என்பதுதான் அவரது பிரதான நோக்கம்.இரண்டாயிரம் அடி நீளத்தில் ஒரு படமெடுக்க என்ன செலவாகும் என்று விசாரித்து மதராசிலும் பம்பாயிலிலும் இருந்த ஸ்டுடியோக்களுக்கு  எழுதினார்.ஒன்றுக்கொன்று முரணான பதில்கள் வந்தனநேரில் போய் விசாரித்து அறிவது என்ற திட்டத்துடன் நான்கு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அடமானம் வைத்துக் காசு புரட்டினார். குடும்பத்தினர் எதிர்த்தார்கள். தடைசெய்ய நினைத்தார்கள். அதையெல்லாம் புறக்கணித்து மதராசுக்குப் புறப்பட்டார் டானியல். சினிமாவின் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வதும் படப் பிடிப்புக்கான கருவிகளை வாங்குவதும் அவருடைய இலட்சியமாக இருந்தது. மதராஸ் ஸ்டுடியோக்களின் வாசலில் காத்துக்கிடந்து அனுமதி மறுக்கப் பட்டார்பின்னர் பம்பாய் சென்றார்.தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்டார். படப்பிடிப்புக்குத் தேவையான எல்லாக் கருவிகளையும் வாங்கிக்கொண்டு வெற்றி வீரராகக் கேரளம் திரும்பினார்.











   ஜே சி டானியல்



திருவனந்தபுரத்தில் முதலாவது படப்பிடிப்பு நிலையத்தை அமைத்தார். 'விகதகுமாரன்' என்ற மலையாளத்தின் முதல் மௌனப்படத்தின் படப்பிடிப்பு அங்கே ஆரம்பமானது.கூரை இல்லாத அறையில் பகல் வெளிச்சத்தில் படப்பிடிப்பு நடக்கும்.ஒளிப்பதிவு செய்த காட்சிகளின் தொகுப்பும் முறைப் படுத்தலும் (processing) இரவில் நிறைவேறும்திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர்ஒளிப்பதிவாளர்தொகுப்பாளர் எல்லாம் டானியல் தான்பெற் றோரைப் பிரிந்த சிறுவனின் வாழ்க்கைச் சம்பவம்தான் விகத குமாரனின் கதை. கதையோட்டத்துடன் படம் முழுக்கக் களரிப் பயற்றுக் காட்சிகளும் நிறைந்திருந்தனஅந்தக் கட்சிகளில் டானியலே பங்கு பெற்றிருந்தார்அவர் மகன் சுந்தர் விகதகுமாரனாக நடித்திருந்தான். பலமுறை விளம்பரம் செய்தும் கதாநாயகியாக நடிக்கப் பெண்கள் யாரும் முன்வரவில்லை. கடைசியில் பம்பாயிலிருந்து லானா என்ற பெண்ணை வரவழைத்தார். டானியலுக்கும் லானாவுக்கும் ஒத்துப் போகவில்லை. லானா படத்தி லிருந்தே விலகிக் கொண்டார். பின்னர் ரோஸி என்ற  பெண் கதாநாயகியாக நடித்தார்.



1928 நவம்பர் 7 ஆம் தேதி திருவனந்தபுரம் காப்பிடல் தியேட்டரில் 'விகதகுமாரன்' திரையிடப்பட்டது.முதல் திரையிடல் சுமாரான  வெற்றியைப் பெற்றது. பொருளாதார ரீதியில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தாத படம் பண்பாட்டு அடிப்படையில் பார்வையாளர்களின் அதிருப்திக்கு உள்ளானது. ஒரு பெண் திரைப்படத்தில் தோன்றி நடிப்பதைப் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குறிப்பாகக் காதல் காட்சிகளை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ரோஸி புலையர் இனத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது சாதியப் பிரச்சனைக்கும் காரணமானது.  திரையரங்கில் கூச்சலிட்டுக் குழப்பம் செய்தார்கள்படம் விழும் திரைமீது கற்களை வீசினார்கள். ஒருகட்டத்தில் கல்வீச்சில் திரையே கிழிந்தது. தான் நடித்த படத்தைப் பார்க்க வந்த ரோஸி அவமதித்து விரட்டப்பட்டார். பின்னர் ஊரை விட்டே வெளியேறினார். மலையாளத்தின் முதல் திரை நாயகி தன்னை திரையில் பார்க்கவே இல்லை.


                                                                                                                                விகதகுமாரன்











   ரோஸி



முதல் படத்தின் மூலம் ஓரளவுக்கு வருமானமும் அதைவிடப் புகழும் டானியலுக்குக் கிடைத்ததுஎனினும் பொருளாதார நஷ்டத்திலிருந்து அவரால் மீளமுடியவில்லைபடத்தயாரிப்புக் கருவிகளை விற்றுக் கடன்களைச் சமாளித்தார்ஊரைவிட்டு வெளியேறினார்நீண்டகாலம் திருநெல்வேலியிலும் சென்னையிலும் வாழ்ந்தார்நோயாளியாக சொந்த ஊருக்குத் திரும்பினார். குடும்பச் சொத்தை விற்றுப் படமெடுத்த ஊதாரியை சொந்தக்காரர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர்பக்கவாத நோயால் தளர்ந்து பார்வையும் இழந்து ஊராலும் உறவாலும் புறக்கணிக்கப்பட்டு எழுபத்தைந்தாம் வயதில் டானியல் மறைந்தார்.



மலையாளத் திரையுலகில் வாழ்நாள் சாதனைக்காக கேரள அரசு வழங்கும் விருது மலையாள சினிமாவின் தந்தையான ஜே.சி.டானியலின் நினைவாகவே வழங்கப்படுகிறது.நிகழ்கால சினிமா உலகம் தனது முன்னோடியை நினைவு கூர்வது இந்த விருது மூலம்தான்ஆனால் டானியலின் இன்னொரு காரணத்துக்காகவும் நினைவுகூர வேண்டும்


சினிமாவின் ஆரம்ப காலத்தில் எல்லா இந்திய  மொழிகளிலும் முதலாவது படங்கள் புராணக்கதையை மையமாகவைத்தே எடுக்கப்பட்டன.( தாதா சாகேப் பால்கேவின் 'ராஜா ஹரிச்சந்திரா'வும் நடராஜ முதலியாரின் 'கீசகவதமும் உதாரணங்கள்).அந்தப் பொதுப்போக்கிலிருந்து மாறுபட்டு சமூக எதார்த்தத்தைச் சார்ந்த கதை மையத்தைப் படமாக்கிய துணிவுக்காக டானியல் திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறார்.


முதல் மலையாளப்படம் வெளிவந்து நான்காண்டுகளுக்குப் பிறகு 1932இல் இரண்டாவது மலையாளப் படம் தயாரிக்கப்பட்டது.'மார்த்தாண்டவர்மா'. அதற்குள் இந்தியாவிலும் சினிமா பேசத் தொடங்கியிருந்தது. இந்தியில் 'ஆலம் ஆரா'வும் தமிழில் 'காளிதாஸு'ம் (1931) திரையில் பேசியிருந்தன.


டானியலின் உறவினரான ஆர்.சுந்தர்ராஜ் என்பவர்தான் மலையாளத்தில் இரண்டாவது படத் தயாரிப்பாளர்ஆரம்பகால மலையாள நாவல்களில் ஒன்றான சி.வி.ராமன்பிள்ளையின் மார்த்தாண்டவர்மாவைப் படமாக்கினார். மக்கள் வாசித்து ரசித்த ஒரு கதையைக் காட்சிப்படுத்துதல் என்ற சாகசத்துக்கு அவர்  தயாராக இருந்தார். அவரே அறியாமல் மலையாள சினிமாவின் பிரத்தியேகமான போக்குக்கு காரணகர்த்தராக இருந்தார் சுந்தர்ராஜ்.


இலக்கியத்தை சினிமாவின் அடிப்படையாக ஏற்கும் முறைக்கு அவர் தொடக்கமிட்டார். இன்றளவும் மலையாள சினிமா இலக்கியத்துடன் ஆழமான உறவு கொண்டிருக்கிறது.அதனால் கதையம்சத்தில் வலுவானதாக இருக்கிறது. இந்த உறவின் தொடக்கப்புள்ளி மார்த்தாண்டவர்மா.


டானியலின் பணியிலிருந்து சுந்தர்ராஜ் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று- இயக்குநர் நாற்காலியில் அமரக்கூடாது என்பது. மார்த்தாண்டவர்மா படத்தை வி.வி.ராவ் என்பவர் இயக்கினார்.மலையாள நடிகர்கள் நடித்தனர்.சுந்தர்ராஜும் முக்கிய பாத்திரமொன்றில் நடித்தார்.



திருவிதாங்கூர் மன்னரான மார்த்தாண்டவர்மாவிடமிருந்து அரசுரிமையைப் பறிக்க அவரது எதிரிகளான எட்டு வீட்டுப் பிள்ளைமார்கள் நடத்தும் சதியும் ராஜாவின் விசுவாசியான அனந்தபத்மநாபன் அதை முறியடிக்க மேற்கொள்ளும் சாகசங்கள்எதிரிகளின் பிடியில் அகப்படாதிருக்க மார்த்தாண்ட வர்மா பின்பற்றும் தந்திரங்கள் என்று திருப்பங்கள் நிறைந்த நாவல்அதை அப்படியே  படமாக்கினார் சுந்தர்ராஜ். எழுத்து வடிவமல்ல திரைப்படம்; ஒரு நிகழ்ச்சியை காட்சிப்படுத்த திரைக்கதை என்ற இடை வடிவம் அவசியம் என்ற பட்டறிவை மலையாளத் திரையுலகத்துக்கு மார்த்தாண்டவர்மா கற்றுக் கொடுத்தது.









   மார்த்தாண்டவர்மா 


முதல் மலையாள சினிமா திரையிடப்பட்ட அதே அரங்கில் இரண்டாவது படமும் திரையிடப்பட்டது. அரங்கு நிறைந்த காட்சிகளாப் படம் சில தினங்கள் ஓடியது. மார்த்தாண்டவர்மா  நாவலின்  பதிப்புரிமையை  வைத்திருந்த  திருவனந்தபுரம் கமலாலயம் புக் டிப்போ அனுமதியின்றி நாவலைப் படமாக்கியதாக வழக்குத் தொடர்ந்தது.நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் படப்பெட்டி பறிமுதல் செய்யப் பட்டது.சுந்தர்ராஜ் எதிர்வழக்காடினார்.ஆனால் தீர்ப்பு அவருக்கு சாதகமாக  அவையவில்லை. கடனாளியானார்.படப்பிடிப்பு உபகரணங்களை விற்றுக் கடனை அடைத்தார்.மார்த்தாண்ட வர்மா படத்தில் தனக்கு ஜோடியாக சுலேகா என்ற பாத்திரத்தில் நடித்த தேவகிபாயை திருமணம் செய்துகொண்டதுமட்டும் தான் சுந்தர்ராஜுக்கு வாய்த்த ஒரே ஆறுதல்.


டானியலுக்கு நேர்ந்த அதே கொடுமை சுந்தர்ராஜுக்கும் நிகழ்ந்தது.சொந்த பந்தங்கள் கைவிட்டன.கடன்காரர்கள் விரட்டினர்.மனைவியுடன் இலங்கைக்கு சென்றார்.சிறிது காலம் கஷ்ட ஜீவனம் நடத்திய பின்னர் தாயகம் திரும்பினர். 1965இல் சுந்தர்ராஜ் மறைந்தார்.


எழுபதுகளின் நடுப்பகுதியில் புனாவிலுள்ள திரைப்பட ஆவணக்காப்பகத்தின் இயக்குநராக அன்று பொறுப்பிலிருந்த பி.கே.நாயர் கமலாலயம் புக் டிப்போ கிடங்கிலிருந்து மார்த்தாண்டவர்மாவை மீட்டார்.


பின்னர் வந்த ஐந்தாண்டுகள் மலையாளச் சூழலில் குறிப்பிடத்தகுந்த சினிமா முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை.கேரளத் திரையரங்குகளில் இந்தி, தமிழ் திரைப்படங்கள் ஓடின. தமிழ்ப்படங்களுக்கு வெகுவான வரவேற்பு இருந்தது. இரு மொழிகளுக்கும் இருந்த ஒற்றுமை,கலாச்சார நெருக்கம் ஆகியவை காரணமாக மலையாளிகள் தமிழ்ப் படங்களை ரசித்துப் பார்த்தனர். இந்த வரவேற்பைப் புரிந்து கொண்ட தமிழர் ஒருவர்தான் மலையாளத்தின் முதல் பேசும் படத்தைத் தயாரித்தார்.1938 இல் வெளியான 'பாலன்'. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்சார்பில் டி.ஆர்.சுந்தரம் தயாரித்த படத்தை நொட்டானி என்பவர் இயக்கினார். மெலோ டிராமா நிறைந்த படம். மாற்றாந்தாய் கொடுமையால் அநாதைகளாக்கப்பட்ட பாலன் என்ற சிறுவனும் அவன் தங்கையும் கருணையாளரான ஒரு வக்கீலால் காப்பாற்றப்படுவதாகக் கதை.
பாத்திரங்கள் பேசிய வசனங்களைத் தவிர மலையாள வாழ்க்கையுடன்  வேறு எந்த வகையிலும் தொடர்பில்லாத படமாக இருந்தது 'பாலன்'.ஆனால் வெற்றிப் படமாக மாறியதுஎடுத்துக்காட்டக் கூடிய கலையம்சங்களோ தொழில்நுட்ப  மேன்மையோ எதுவும் இல்லாமலிருந்த இந்தப் படம்தான் மலையாளத்தில் சினிமாத் தொழிலின் சாத்தியங்களை உருவாக்கியது. அடுத்த சுமார்  பதினைந்தாண்டுக் காலம் வெளியான படங்கள் தொழிற்சாலை உற்பத்திச் சரக்குகளாகவே இருந்தன.கேரள வாழ்க்கையின் எதார்த்தைச் சித்தரிக்கும் படங்களாக 'நீலக்குயில்' 1954 இலிலும் 'நியூஸ்பேப்பர் பாய்' 1955இலிலும் வெளிவரும்வரை மலையாள சினிமா தமிழ்த் திரைப்படங்களின்  சோகை பிடித்த உருவத்தையே  கொண்டிருந்தது.


[ இன்னும் ]




வெள்ளி, 24 ஏப்ரல், 2020

அந்த நாட்களில் ஒன்று









   நான் மிக மிக மகிழ்ந்த நாட்களில்
       அதுவும் ஒன்று

கானகத்தின் அமர வாழ்வுக்குச்
சாவா நெல்லி பறிக்க மலையேறிய யானை
சறுக்கி விழுந்து காலைச் சிராய்த்துக்கொண்டது
பொந்திடை அணில் பதறி வந்து
பச்சிலைகளைக் கொறித்துப்போட்டது
நான் அதை விழுதாக அரைத்தேன்
அணில் காயத்துக்குப் பற்றுப்போட்டது


அப்போது
வானம் ஆதுரமாகப் புன்னகை செய்தது
நூற்றாண்டுக் கடம்பமரம் மலர்மாரி பெய்தது

   மிக மிக மிக மகிழ்ச்சியாக
   நானிருந்த நாட்களில் ஒன்று அது.









செவ்வாய், 21 ஏப்ரல், 2020

இந்த இரவு


              

னிதப் புழக்கமற்ற இந்த இரவுக்குத்தான்
எத்தனை அமைதி

காற்றில் அசையும் தளிர்
மரத்தின்மீது சிறகுகுடையும் பறவை
நடைபழகும் பூனை
இருளை மெல்லும் சிள்வண்டு

எல்லாவற்றின்
ஓசையும் ஒலியும் அரவமும்
எத்தனை தெளிவு

என் உள் வெளி மூச்சுகளின் பேரோசைக்கு
எத்தனை துல்லியம்

தாங்க முடிவதில்லை
இந்த மௌனத்தின் அமைதியை


இதோ
இரவை நடுக்கிவரும் மரணத்தின்
ஓசையில்லாக் காலடிகளுக்கு
எத்தனை இடிகளின் முழக்கம்

எனக்காக பூமியே
ஒரே ஒரு நொடிமட்டும்
அதிர் 
உடை
பிளர்
ஓலமிடு

வீறிட்டழும் மழலையின்
அழுகுரலேனும் கேட்க உதவு

இந்த அமைதியின் மௌனத்தைத்
தாங்க முடியவில்லை.




 ஓவியம்: எட்வர்ட் மன்ச்




வியாழன், 16 ஜனவரி, 2020

காற்றில் எழுதல் ( காற்றில் எழுதுதல் )






                                           சேரன் கவிதைகள் - மலையாளத்தில்


2017 இல் மறைந்த கவிஞர் ஓ என் வி குரூப்பின் பெயரில் துபாய் மலையாளிகள் கவிதைக்கான சர்வதேச விருது ஒன்றை ஏற்படுத்தியிருந்தார்கள். முதல் விருது பெறும் கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நண்பர் சேரன். அதையொட்டி விழாவில் வாசிக்கவும் அறிமுகக் குறி்ப்பில் இடம் பெறவும் எனச் சேரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவருடைய கவிதைகள் சிலவற்றை மலையாளத்தில்  மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டேன். நான்கோ ஐந்தோ கவிதைகளை மொழியாக்கம் செய்தேன். அவற்றுள் விருது விழா மேடையில் வாசிக்கப்பட்ட கேள்வி என்ற கவிதைக்கான மொழிபெயர்ப்பு எல்லார் கவனத்தையும் ஈர்த்தது. அதைக் கருத்தில் கொண்டு மேலும் சில கவிதைகளை மொழிபெயர்த்து மலையாளத்தில் ஒரு தொகுப்புக் கொண்டுவருவது சாத்தியமா என்று சேரன் கேட்டிருந்தார். அன்றைய  மனநிலையில் சாத்தியம் என்று ஒப்புக்கொண்டேன்.


ஆனால் அது நடைமுறையில் எளிதாக இருக்கவில்லை. முன்பே ஏற்றுக் கொண்டிருந்த பணிகள், ‘பெருவலி’ நாவலுக்கான தரவுச் சேகரிப்பு, களப்பயணம்,  கொரியாவில் எழுத்தாளர்  உறைவிட வாசம், நாவல் எழுத்து என்று தொடர்ந்த வேலைகளால் மலையாள மொழியாக்கம் பின்னுக்குச் சென்றது.  இது தொடர்பாகச் சேரன் விசாரித்த சந்தர்ப்பங்களிலெல்லாம் குற்ற உணர்வு மேலிட்டது. அதை மறைத்துக் கொண்டு இந்த மாத இறுதிக்குள் முடித்து விடலாம்,. இந்த ஆண்டு முடிவதற்குள் முடித்து விடலாம் என்று சாக்குச் சொல்லிக்கொண்டிருந்தேன். எனினும் திட்டம் ஓர் அங்குலம் கூட முன்னேறவில்லை. சேரன், அம்புலிமாமாக் கதையில் வரும் விக்கிரமாதித்தியனைப்போல மனம் தளராமல் காத்திருந்தார்.


இதற்கிடையில் கோழிக்கோடு கடற்கரையில் நடைபெற்ற கேரள இலக்கிய விழாவில் பங்கேற்க வந்து நட்புவலை வீசிக் கணிசமான மலையாளக் கவிஞர்களைப் பிடித்து வைத்திருந்தார் சேரன். அனிதா தம்பி, ஓ பி சுரேஷ், டி அனில்குமார் போன்ற கவித் தோழர்களின் ஒத்துழைப்புடன் சில கவிதைகளுக்கு மலையாள உருமாற்றம் பெற்றிருந்தார். அவை உதிரி எண்ணிக்கையிலானவை; ஒரு தொகுப்பாகத் தேறும் அளவு இல்லாதவை. எனவே மீண்டும் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட நேர்ந்தது. இந்த முறை அனிதா தம்பி துணைக்கு வந்தார். ‘கவிதைகளை ஒருவரே மொழியாக்கம் செய்வது விரைவான பலனைத் தராது. தோழமைக் கவிஞர்கள் சிலரைத் துணைக்கு அழைப்போம். கவிதைகளைப் பங்கிட்டு அளிப்போம். மலையாள மொழிபெயர்ப்புக் கைக்குக் கிடைத்ததும் இருவரும் மேற்பார்வை யிட்டுச் செம்மைப்படுத்தி இறுதி வடிவத்தை உருவாக்கலாம்’. இப்படித் திட்டமிட்டதும் காரியம் சீக்கிரம் கைகூடி விடும் என்று தோன்றியது. அனிதா தம்பி ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இருப்பவர். பிற கவிஞர்களும் அவரவர் நிலையில் பணி நெருக்கடி மிகுந்தவர்கள். திட்டம் மீண்டும் சண்டிக் குதிரையானது. இரண்டு ஆண்டுகள் பாய்ந்து ஓடின.  பதிப்பாளரான டி சி புக்ஸிடம் தொகுப்பைத் தருவதாக வாக்குக் கொடுத்திருந்த சேரன் இருதலைக் கொள்ளி எறும்பானார்.  


ஆனாலும்  இருவருக்குமான தொலைபேசி உரையாடல்களில் ‘சுகு, அவசரமொண்டும் இல்லை. எப்போ முடியுமோ அப்போ வரட்டும்.ரவி டி சி, சச்சிதானந்தன் ரெண்டு பேரிடையும் நான் சொல்லிக் கொள்ளுகிறேன்’ என்று சொல்வது குற்ற உணர்ச்சியைக் கிளப்பும்; சேரனின் ராஜதந்திரமும் விளங்கும். ஒரு தேசத்தின் ராஜ தந்திர நிபுணர் ஆக இருக்க வேண்டியவர் பேராசிரியராக இருக்கும்  துரதிர்ஷ்டத்தை யோசித்து வருத்தமும் ஏற்படும். இதை முடித்து விட்டுத்தான் அடுத்த ஜோலி என்று சபதம் மேற்கொள்ளத் தூண்டும். அதுவும் எதிர்பார்த்த விளைவைத் தரவில்லை. எனக்கு வேலைப்பளு இல்லாதபோது அனிதா அகப்பட மாட்டார். அவர் தேடும்போது நான் சிக்க மாட்டேன். இந்த இழுபறி நிலையை இருவரும் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில்  சந்தித்துப் பேசி முடிவுக்குக் கொண்டு வந்தோம். முன்பே மொழியாக்கம் செய்யச் சொல்லிக் கேட்டிருந்த கவிஞர்களிடமும் புதிதாகச் சிலரிடமும் பொறுப்பை ஒப்படைத்தோம். விளைவு உற்சாகம்
அளிப்பதாக அமைந்தது. ஒரு மாதத்துக்குள்ளாக ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் மலையாள வடிவம் பெற்றன.


ஒரு தொகுப்புக்கு ஐம்பது கவிதை தாராளம் என்று எண்ணியிருந்த நிலையில் மேலும் கவிதைகள் மொழியாக்கம் பெற்றன. பி.ராமனும் வி என் கிரிஜாவும் அன்வர் அலியும் அபார வேகத்தில் புதிய மொழியாக்கங்களை அளித்தனர். ஏறத்தாழ எழுபத்தைந்து கவிதைகள் மலையாளத்தில் பெயர்க்கப்பட்டன. அது தொகுப்புப் பணியை மேலும் சிக்கலாக்கியது. ஒருவர் தேர்ந்தெடுத்திருந்த கவிதையையே ஒன்றுக்கு மேற்பட்டவர்களும் மொழியாக்கம் செய்திருந்தார்கள்.  யாருடைய மொழிபெயர்ப்பைச் சேர்ப்பது, யாருடையதை நீக்குவது? கவிஞர்களின் சாபத்துக்கு ஆளாகாமல் எப்படி இதைச் சமாளிப்பது? எண்ணிக்கையை எப்படிச் சீராக்குவது?  இந்தக் கேள்விகள் குழப்பத்துக்குள்ளாக்கின? மூத்த கவிஞர்களான ஆற்றூர் ரவிவர்மாவும் சச்சிதானந்தனும் ஏற்கனவே சேரனின் கவிதைகளை மலையாளத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருந்தார்கள். தமிழ்க் கவிதைகளின் மொழிமாற்றத் தொகுப்பான புது நானூறுக்காக சேரனின் நான்கு கவிதைகளை ஆற்றூர் மலையாளப் படுத்தியிருந்தார்.’ பல லோக கவிதை’ திரட்டில் சச்சிதானந்தன் 22 கவிதைகளை மொழிபெயர்த்திருந்தார். இந்தக் கவிதைகளைத் தொகுப்பில் சேர்க்க வேண்டுமா? என்ற யோசனை முளைத்தது.


ஆற்றூரும் சச்சி மாஷும் மூத்த கவிஞர்கள். மற்றவர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்வந்த இரண்டு தலைமுறையைச் சேர்ந்தவர்கள். சச்சிமாஷின் கவிதையில் சம்ஸ்கிருதச் சொற்களின் ஆதிக்கம் இருந்தது. ஆற்றூரின் கவிதையில் தமிழுக்கு இணையான மலையாளச் சொற்கள் இருந்தன. சச்சிதானந்தன் மொழியாக்கத்தில் சேரன் பறக்கவிட்ட வண்ணத்துப் பூச்சி ‘சித்ர சலப’மாக வளைய வந்தபோது ஆற்றூர் ரவிவர்மாவின்  மொழிமாற்றத்தில் அது ‘பூம்பாற்ற’யாகச் சிறகடித்தது. இவற்றில் மொழிச் சீர்மையைக் கொண்டு வருவது இயலுமா? என்ற சந்தேகமும் எழுந்தது.


எனினும் ஆற்றூர் ரவிவர்மா, சச்சிதானந்தன் இருவரின் மலையாள மொழிபெயர்ப்புகள் இல்லாமல் சேரன் தொகுப்பைக் கொண்டு வருதல் கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டோம்.சேரனை மலையாள வாசகர்களிடம் முதலில் அறிமுகப்படுத்தியவர் ஆற்றூர் ரவிவர்மா. அவரைச் சர்வதேசக் கவிஞராக முன்வைத்தவர் சச்சி மாஷ். அவர்களது பங்களிப்பு அவசியம் சேர்க்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு அனிதாவும் நானும் வந்தோம். இதிலும் சிக்கல் இருந்தது. மாத்ருபூமி பதிப்பகம் வெளியிட்டிருக்கும்  சச்சிதானந்தனின் பல லோக கவிதை தொகுப்பில் இருபத்திரண்டு கவிதைகள் உள்ளன. அவற்றில் இரண்டு கவிதைகள் வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறாகவே மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. அதாவது இரண்டு கவிதைகளுக்கு நான்கு மொழிபெயர்ப்பு வடிவங்கள். அவற்றில் இரண்டை மட்டும் தேர்ந்தெடுத்தோம். சச்சிதானந்தன் சில கவிதைகளைச் சேரனுடன் கலந்து பேசியும் சிலவற்றை ஆங்கிலத்திலிருந்து அப்படியேயும் மொழிபெயர்த்திருந்தார். அவற்றைத் தமிழ் மூலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது பொருட் பேதங்கள் தெரியவந்தன. அதை அவரிடம் சொல்லத் தயக்கமாக இருந்தது. மொழிபெயர்ப்பின் சீரமைப்புக்கு அதை எடுத்துச் சொல்வது தவிர்க்க இயலாததாகவும் இருந்தது. நேர்ச் சந்திப்பில் இதைச் சுட்டிக் காட்டியதும் சச்சி மாஷ் வெளிப்படுத்திய பெருந்தன்மை நெகிழச் செய்தது. தமிழ் மூலத்தை வாசித்துக் காட்டச் செய்தார். பொருளை உள் வாங்கினார். ஆங்கிலம் வழி மேற்கொண்டதால் புகுந்து விட்டிருந்த மொழிக்குறைகளைத் திருத்திக் கொடுத்தார். அவ்வாறு ஒன்பது கவிதைகள் இறுதி வடிவம் பெற்றன. இந்த மொழியாக்கப் பணியின்போது அனிதாவுக்கு எனக்கும் கிடைத்த மறக்க முடியாத அனுபவம் சச்சி மாஷின் இந்த வாத்சல்யம் நிறைந்த ஒத்துழைப்பு.


சச்சிதானந்தனின் செயல், மொழியாக்கத்தின் சீரமைப்புக்குத் துணை செய்தது. ஆற்றூர் ரவிவர்மா தமிழ் மூலத்திலிருந்தே சேரன் கவிதைகளை மலையாளத்துக்கு மாற்றியிருக்கிறார். இப்போது சச்சிதானந்தனின் திருத்தப்பட்ட மொழியாக்கங்களும் தமிழ் மூலத்தை ஒட்டியே மாற்றப்பட்டிருக்கின்றன. எனவே சேரனின் இதர கவிதைகளையும் தமிழ் மூலத்தை ஒட்டியே சீரமைப்பது என்று முடிவு செய்தோம். மலையாளக் கவிஞர்களான அன்வர் அலி, பி.ராமன், வி.எம், கிரிஜா, பி.பி.ராமச்சந்திரன் ஆகியோருடன் தொடர்ந்து நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களும் மின் அஞ்சல், வாட்ஸ் ஆப் பரிமாற்றங்களும் கவிதைகளைச் செம்மைப் படுத்த உதவின. இந்தக் கவிஞர்களின் ஆர்வத்தையும் வேகத்தையும் பார்த்தபோது அடுத்த கவிதையைத் தமிழில் எழுதுவார்களோ என்று எனக்குச் சந்தேகம் வந்தது.


ஏற்கனவே மலையாளத்தில் மொழிபெயர்த்து வைத்திருந்த ஐந்து கவிதைகளில் நான்கை என்னால் மீட்க முடியவில்லை. முன்சொன்ன கேள்வி என்ற கவிதை மட்டும் கணினிச் சேமிப்பில் கிடந்தது. அத்துடன் அனிதாவுடன் அமர்ந்து உரையாடி இருவருமாகச் சேர்ந்து 8 கவிதைகளை மலையாளத்துக்கு மாற்றினோம். இதில் பெரும் பங்கு அனிதாவுடையது. இருவரும் ஏழெட்டு முறைகளுக்கு மேல் பல மணி நேரங்கள் ஒன்றாக அமர்ந்து பேசி 63 கவிதைகளைத் தேர்ந்தேடுத்துத் தொகுத்தோம். அவற்றை மொழிபெயர்ப்பாளர்களின் மொழி நடை சிதையாமல் செம்மைப் படுத்தினோம். அவற்றின் இறுதிப் படியைப் பார்வையிட்ட சச்சிதானந்தன் ‘ பலர் மொழிபெயர்த்தவை என்று சொல்ல முடியாதவகையில் மலையாள மொழியாக்கம் அமைந்திருக்கிறது’ என்று மின் அஞ்சலில் பாராட்டியது மகிழ்ச்சி அளித்தது.


சேரன் கவிதைகள் மலையாளத் தொகுப்புப் பணி, மொழிபெயர்ப்ப தொடர்பாகச் சில அம்சங்களை, மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் கவனத்துக்குக் கொண்டு வந்தன. மொழியாக்கம், மொழிபெயர்ப்பு என்பவறை விடவும் மொழிமாற்றம் என்ற வினைப்பெயரே பொருத்தமாகப் பட்டது. தமிழிலும் மலையாளத்திலும் இன்றும் புழக்கத்திலிருக்கும் சொற்களை அப்படியே வைத்துக் கொண்டோம். மலையாளத்தில் வாசித்தாலும் தமிழ் வாசிப்பின் பொருளைத் தரும் சொற்களைத் தமிழாகவே பயன்படுத்தினோம். சம்ஸ்கிருத வார்த்தைகளைக் கூடுமானவரை தவிர்த்தோம். கவிதை வரிகளையும் தமிழில் உள்ளவைபோலவே எடுத்தாண்டோம். இந்தச் செயல்கள் மூலத்திலிருந்து அதிகம் விலகி விடாத மொழியாக்கப் பிரதியை அளித்தன.


தமிழ் மலையாள மொழிபெயர்ப்பில் இந்த முயற்சியை முன்னெடுத்தவர் ஆற்றூர் ரவிவர்மா. மொழியாக்கம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றுக்குப் பதிலாக மொழிமாற்றம் என்பதை முன் மொழிந்தவரும் அவரே. எனவே அவருக்கு மறைமுகமான அஞ்சலியாகவும் இந்த முயற்சி அமைந்தது. இந்நூலுக்கு சச்சிதானந்தன் எழுதிய முன்னுரைக் குறிப்பு ஆற்றூரின் கவிதை – மறுவிளி – உடன் தொடங்குகிறது. அந்தத் தற்செயல் ஒற்றுமை மகிழ்ச்சியளித்தது. அந்த மகிழ்ச்சியின் விளைவாகவே நூலுக்கான தலைப்பையும்  சேரன் கவிதை ஒன்றுக்கு அளித்த மொழிமாற்றத்திலிருந்து எடுத்துக் கொண்டோம். ‘காற்றில் எழுதல் ( காற்றில் எழுதுதல் ). இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக அமைந்தது நண்பர் சேரனின் சமர்ப்பணம். தனது கவிதைகளின் மலையாள மொழியாக்கத் தொகுப்பை அவர் ஆற்றூர் ரவிவர்மாவின்  நினைவுக்கே காணிக்கையாக்கியிருக்கிறார். அது மிகவும் பொருத்தமானது. ஈழத்தின் மானுட அவலம் பற்றி மலையாளத்தில் எழுதிய முதல் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா. அந்த வகையில் இது ஒரு கைம்மாறு காட்டலும்தான்.


ஆற்றூர் ரவிவர்மா, சச்சிதானந்தன், சி.எஸ்.வெங்கிடேசுவரன், வி.எம்.கிரிஜா, அன்வர் அலி, பி.பி.ராமச்சந்திரன், பி.ராமன், அனிதா தம்பி, ஓ.பி.சுரேஷ், டி.அனில்குமார், சுகுமாரன் ஆகிய பதினொரு மொழிபெயர்ப்பாளர்களின் உற்சாகக் கூட்டுறவுடன் சேரனின் அறுபத்து நான்கு கவிதைகள் ‘காற்றில் எழுதல்’ மலையாளத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. தமிழ் மூலத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த மலையாள ஆக்கங்கள் உருவாயின. இந்த நூலாக்கத்தில் ஒவ்வொருவருடைய பங்கும் முக்கியமானது. நூலை டி சி புக்ஸ் வெளியிடுகிறது. தமிழ்க் கவிஞர் ஒருவர் மலையாளத்தில் இத்தனை இயல்பாகவும் மதிப்புடனும் வரவேற்கப்படுவது இது முதன்முறை என்று எண்ணுகிறேன். மொழியைக் கடந்தது கவிதை என்பதற்கு இது அசலான எடுத்துக் காட்டு.

@






திங்கள், 13 ஜனவரி, 2020

பாப்லோ நெரூதா கவிதைகள் --- இரண்டாம் பதிப்பின் முன்னுரை



பாப்லோ நெரூதாவின் மறைவுக்கு பின்பு எழுதிய நினைவுக் குறிப்பில் கவிஞரும் நெரூதாவின் மாணவரும் நண்பரும் அண்டை வீட்டவருமான நிக்கனார் பாரா இவ்வாறு எழுதினார்: ‘ நான் நெரூதாவின் திடீர் வாசகன் அல்லன். பகுத்தறியக் கற்றுக்கொண்டது முதலே நெரூதா என்னை ஈர்த்திருந்தார். ஒருமுறையாவது அவரைப் பற்றிச் சிந்திக்காமல் ஒருநாளும் கடந்து சென்றதில்லை’.



பாராவின் தகுதியோ நெரூதாவுடன் அவருக்கிருந்த அணுக்கமோ எனக்கு இல்லை. எனினும் மேற்கோள் வாசகங்களை என்னுடையவையாகவும் சொல்லிக் கொள்ளும் உரிமை இருப்பதாக நம்புகிறேன். இந்த நூலின் முதல் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் ‘கவிஞனாக எனது ஆதார அக்கறைகளைப் பக்குவப்படுத்தியதிலும் மனிதனாக எனது தார்மீக உணர்வுகளைக் கூர்மைப்படுத்தியதிலும் செல்வாக்குச் செலுத்திய ஆளுமைகளில் நெரூதாவும் ஒருவர்’ என்று உரிமை பாராட்டிக் கொண்டதும் அந்த நமபிக்கையில்தான். பாராவைப்போல ஒரு நாளைக்கு ஒருமுறை நினைக்கிறேனோ இல்லையோ கவிதையெழுத்தின் தருணங்களிலும் கவிதை பற்றிச் சிந்திக்கும் வேளைகளிலும் கவிதை மீதான உரையாடல் பொழுதுகளிலும் நெரூதா நினைவு எழாமல் இருந்ததில்லை.



இந்த நூலின் முதல் பதிப்பு 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதுவரை நெரூதா மீதும் அவர் கவிதைகள் மீதும் கொண்டிருந்த மோகம் மொழியாக்கப் பணிக்குப் பின்னர் முன்னை விடவும் அதிகமாயிற்று. எப்போதும் தொடர்ந்து வாசிக்கும் ஆசைக்குரிய கவிஞராக  நிலைபெற்றார். இது என் தனியனுபவம் மட்டுமல்ல. உலகெங்குமுள்ள கவிதை வாசகர்களின் பொது அனுபவம்.



2004 இல் நெரூதாவின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவரது பெயர் இலக்கிய முக்கியத்துவம் பெற்றது. அவரது கவிதைகள் புதிய பதிப்புகளைக் கண்டன. புதிய மொழிபெயர்ப்புகளும் மேற்கொள்ளப்பட்டன. மறைவுக்குப் பின்னான கவிதைகள் தொகுக்கப்பட்டன. அதுவரை வெளியாகியிராத கவிதைகள் கண்டுபிடிக்கப் பட்டன. நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாறு ‘பாப்லோ நெரூதா – வாழ்வுக்கான வாஞ்சை’  ஆடம் ஃபெயின்ஸ்டீனால் எழுதி வெளியிடப்பட்டது. நெரூதாவின் மனைவி மெட்டில்டே உருஷியா எழுதிய ‘பாப்லோ நெரூதாவுடன் என் வாழ்க்கை’ என்ற தன் வரலாற்று நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளிவந்தது. நெரூதாவின் மரணத்தைத் துப்பறியும் கதையோட்டமாக விவரிக்கும் ராபர்ட்டோ அம்புயேரோவின் நாவல் – ‘தி நெரூதா கேஸ்’ – வெளியிடப் பட்டது. 2004 - 2019 ஆண்டுகளின் இடைவெளியில் எனக்கு வாசிக்கக் கிடைத்தவை இந்த நூல்கள். இவற்றின் உள்ளடக்கங்கள் நெரூதா மீதான என் பித்தை முற்றச் செய்தன.



மானுடப் பெருவாழ்வின் ஒவ்வொரு அணுவையும் உயிர்ப்புடன் சித்தரித்த, முடிவற்ற காலத்தின் ஒவ்வொரு நொடியையும் கவிதையின் ஓயாத் துடிப்பாக்கிய, பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவையும் தனது அசைவாக மாற்றிக் காட்டிய பேராளுமையின் பிடிக்குள் சிக்குண்டு கிடப்பது பேறல்லவா? அந்தப் பேறு வாழ்நாள் முழுவதும் தொடரவேண்டும் என்பதே என் பேராசை. இந்த இரண்டாம் பதிப்புக்கான தூண்டுதல் அந்தப் பேராசையே.



‘எந்த மொழியாக இருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கவிஞர்’ என்று பாப்லோ நெரூதாவை மதிப்பிட்டார் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். இருபதாம் நூற்றாண்டில் மட்டுமல்ல;  இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் அவரே மகத்தான கவிஞர். நெரூதா மறைந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டு ஆகிறது. இந்தக் கால அளவில் அவர் அளவுக்கு உலகளாவிய செல்வாக்குப் பெற்ற ஒரு கவிஞரின் பெயரைக் கேள்விப்படவில்லை. அவரை விடவும் தேர்ந்த மொழியிலும் நுண்ணிய தளங்களிலும் புதுமை நோக்கிலும் எழுதிய  கவிஞர்களும் எழுதும் கவிஞர்களும்  வெவ்வேறு மொழிகளில் இருக்கிறார்கள். ஆனால் உலகம் முழுவதும் கொண்டாடும் கவிஞராக ஒருவரும் இல்லை. இது அவரைக் காலத்தின் கொடையாகப் போற்றச் செய்கிறது.

பைபிள் தொகுப்பாசிரியர்களுக்குப் பின்னர் மிக அதிகமான மொழிகளிலும் மிக அதிகமான முறையும் மொழிபெயர்க்கப்பட்ட படைப்பாளி நெருதாவாகத்தான் இருக்க முடியும். இன்று கிடைக்கும் ஆங்கில மொழிபெயர்ப்புகளை மேலோட்டமாகப் பார்த்தாலேயே இது விளங்கும். குறைந்தது நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் நெரூதாவின் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்கள். இலான் ஸ்டாவன்ஸ் தொகுத்துப் பதிப்பித்திருக்கும் ‘பாப்லோ நெரூதாவின் கவிதை’ பெருந்திரட்டில் முப்பத்தேழு மொழிபெயர்ப்பாளர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்களில் தொண்ணூற் றொன்பது வீதமானவர்களும் கவிஞர்கள். கவிஞர்கள் என்ற தகுதியால் புகழ்பெற்றவர் கள். கவிஞர்களால் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட கவிஞர் பாப்லோ நெரூதாவாக  இருக்கலாம். இது அவரது கவியிருப்புக்கு மதிப்பைக் கூட்டுகிறது. கூடவே கவிதை களுக்குப் பல வண்ணங்களையும் அளிக்கிறது. தனது கவிதைகளுக்குப் பலருடையதும் பலவகையுமான  மொழியாக்கங்கள் வருவதை நெரூதாவும் மனமுவந்து அனுமதித்திருக்கிறார். சில கவிதைகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆங்கில ஆக்கங்கள் உருவாகியுள்ளன. அவை ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டிருப்பதும் கவனத்துக்குரியது.



‘நான் சில விஷயங்களை விளக்குகிறேன்’ என்ற நெரூதாவின் பரந்த கவனம் பெற்ற கவிதையை ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ஸ்பானிய உள்நாட்டுப் போரின் கொடூர விளைவைச் சித்தரிக்கும் இந்தக் கவிதையை அவர் 1947 இல் எழுதினார். அதே ஆண்டு மூல மொழியில் வெளியான ‘மூன்றாவது வசிப்பிடம்’ ( டெர்ஸெரா ரெசிடென்சியா ) தொகுப்பில் இடம் பெற்றது. இதன் முதலாவது ஆங்கில மொழியாக்கம் நதானியேல் தார்னால் மேற்கொள்ளப்பட்டது. நெரூதாவின் சரிபார்ப்புக்குப் பின்னர் 1970 இல் வெளிவந்த பென்குவின் கவிதை வரிசை – ‘பாப்லோ நெரூதா கவிதைகள்’ நூலில் சேர்க்கப்பட்டது. ‘நான் சில விஷயங்களை விளக்குகிறேன்’  ( I am explaining a few things ) என்று தலைப்பிட்ட கவிதையின் தொடக்க வரிகள் இவ்வாறு:

‘நீங்கள் கேட்கப் போகிறீர்கள்
எங்கே போயின லைலாக் மலர்கள்?
எங்கே பாப்பி மலரின் இதழ்கள் கொண்ட ஆன்மீகம்?
எங்கே மீண்டும் மீண்டும் சொற்களைச் சிதறடித்து
அவற்றில் துளையிட்ட மழை?
எங்கே பறவைகள்?

பாப்லோ நெரூதா அறக்கட்டளையுடன் இணைந்து, 2004 ஆம் ஆண்டு, மார்க் எய்ஸ்னெர் வெளியிட்ட தேர்ந்தெடுத்த கவிதைகள் தொகுப்பிலும் இதே கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் மொழிபெயர்ப்பு புதிது. தலைப்பும்  ‘நான் சிலவற்றை விளக்குகிறேன்’ ( I explain some things ) என்று மாற்றம் கண்டது. முன்னர் குறிப்பிட்ட அதே வரிகள் புதிய மொழிபெயர்ப்பில் பின்வருமாறு அமைந்திருக்கின்றன.


நீங்கள் கேட்பீர்கள்: லைலாக் மலர்கள் எங்கே?
பாப்பி மலர்களால் நகாசு செய்யப்பட்ட ஆன்மீகம் எங்கே?
எப்போதும் வீசியடிக்கும் மழை
துளைகளாலும் பறவைகளாலும் நிரப்பும்
அவனது சொற்கள் எங்கே?

இந்த எடுத்துக்காட்டு ஒரே கவிதைக்கு வாய்த்திருக்கும் இரண்டு மொழியாக்கங்களைச் சுட்டிக்காட்டுகிறது. இரண்டு மொழிபெயர்ப்பாளர்களும் ஒரே ஸ்பானிய மூலத்திலிருந்து ஆங்கிலத்துக்குப் பெயர்த்தபோதும் கவிதை ஒன்றுக்கொன்று மாறுபட்டதாக அமைந்தி ருப்பதை அலசிப் பார்ப்பது சுவாரசியமாக இருந்தது.



இந்த அலசல் சில சிந்தனைகளைத் தூண்டின. எந்த மொழிபெயர்ப்பும் இறுதியானது அல்ல; மூலப் பிரதிக்கு ஈடுநிற்பதும் அல்ல. நெரூதாவின் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான அலெய்ஸ்டர் ரெய்ட் குறிப்பிடுவதுபோல ‘மொழிபெயர்ப்பு மூலப் படைப்பை நெருங்குவதற்கான நடைமுறை; ஒருபோதும் மூலத்தை நெருங்கிவிட முடியாது என்று தெரிந்தே மேற்கொள்ளப்படும் நடைமுறை’ என்பதை நெரூதா மொழிபெயர்ப்பு எனக்குக் கற்றுக் கொடுத்தது. கூடவே இத்தனை மொழிபெயர்ப்பு களுக்குப் பின்னரும் அடியும் முடியும் துலக்கமாகக் காட்டாத கவிதையின் புதிரான அழகை வியக்கவைத்தது. ஒவ்வொரு மொழியாக்கமும் இன்னொரு தனிப் படைப்பாக மாறும் உயிர்வினையைப் புரிந்துகொள்ளச் செய்தது. ஒவ்வொரு கவிஞரின் மொழியாக்கத்திலும், கண்ணாடிப் பேழை மீது அதைப் பற்றியிருக்கும் விரல்களின் ரேகை பதிவதுபோல, அந்தக் கவிஞரின் அடையாளம் பதியும் விந்தை இயல்பை உணர்த்தியது.



எனது மொழியாக்க நூல் – பாப்லோ நெரூதா கவிதைகள் – வெளிவந்த வேளையில் சிறிதும் பெரிதுமாகப் பலரது மொழிபெயர்ப்புகளும் வெளிவந்தன. அவற்றுடன் ஒப்பிட்டு எனது மொழிபெயர்ப்பும் பேசப்பட்டது. கணிசமாக விமர்சிக்கப்பட்டது. அதே சமயம் வெகுவான பாராட்டுக்கும் வரவேற்புக்கும் உள்ளானது. நான் தொழில்முறை மொழிபெயர்ப்பாளன் அல்லன். என்னைக் கவர்ந்த படைப்பை மேலதிகமாகப் புரிந்துகொள்ள முயல்கிறேன். அதன் இலக்கிய மேன்மை காரணமாக  சக வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முற்படுகிறேன். சுயநலம் நிறைந்த பொதுச் செயல்பாடு இது.  எனவே முன்சொன்ன விமர்சனங்களுக்கும் பாராட்டுகளுக்கும் சுணங்கவோ பூரிக்கவோ இல்லை. ஆனால் உறுதியான ஆசை இந்த மொழியாக்கத்தில் எனக்கு இருந்தது. அழுக்குப் படிந்ததோ சீரற்றதோ ஆக இருந்தாலும் என்னுடைய விரலடையாளமும் அந்தக் கண்ணாடிப் பேழையில் பதிய வேண்டும் என்ற வேட்கை இருந்தது. அதற்குக் காரணம் பாப்லோ நெரூதா மீதான எனது குறையாக் காதல்.



நூலின் முதல் பதிப்பை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது.மனுஷ்யபுத்திரன் அளித்த உற்சாகமும் ஊக்கமுமே நெரூதா கவிதைகள் மொழிபெயர்ப்பு நூல் வடிவம் பெற உதவியவை. அவரது தூண்டுதல் இல்லாமலிருந்தால் இவை என் தனி வாசிப்புக்கான கைப்பிரதியாகவே எஞ்சியிருக்கும். முதல் பதிப்புக்கு மெய்ப்புப் பார்த்துச் செம்மையாக்கம் செய்தவர் நண்பர் யுவன் சந்திரசேகர். மொழியாக்க வேளையில் கடலுக்கு அப்பாலிருந்து இருவர் உதவினார்கள். முதலாமவர் - ‘ தி எசென்ஷியல் நெரூதா: செலக்டட் போயம்ஸ்’ நூலைத் தொகுத்துப் பதிப்பித்த மார்க் எய்ஸ்னெர். அந்த நூலை இந்தியாவுக்கு அனுப்பபடும் முதல் பிரதி என்று குறிப்பிட்டு அனுப்பினார். சில சந்தேகங்களுக்கு மின் அஞ்சல் வழியாக உடனுக்குடன் பதில் அளித்தார். பாப்லோ நெரூதா நினைவாகத் தொடங்கிய ரெட் பாப்பி ஆர்ட் ஹௌஸின் சுற்றிதழில் தமிழ் மொழிபெயர்ப்புப் பற்றிக் குறிப்பையும் வெளியிட்டார். இரண்டாமவர் – பிரசீலைச் சேர்ந்த ஜாஸ் இசையமைப்பாளரும் பாடகியுமான லூசியானா சோஸா. நெரூதா கவிதைகளுக்கு இசையமைத்துப் பாடியிருப்பவர். அவர் அனுப்பி உதவிய ஒலிவட்டு கவிதையின் புதிர் அமைப்பை விளங்கிக் கொள்ள உதவியது. இரண்டாம் பதிப்பு வெளிவரும் தருணத்தில் இவர்கள் அனைவரையும் மிக்க நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.






முதல் பதிப்பு வெளிவந்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. அச்சில் இல்லாமலும் ஏறத்தாழ அதே அளவு காலம் ஆகியிருக்க வேண்டும். தொடர்ந்து பலரும் நூல் கிடைக்கவில்லை என்று குறையாகவும் கிடைக்குமா என்று சந்தேகத்துடனும் விசாரித்து வந்தார்கள். இரண்டாம் பதிப்புக்காகப் புதிய பதிப்பாளரை அணுகவும் தயக்கமாக இருந்தது. குறையைத் தீர்க்கவும் சந்தேகத்தைப் போக்கவும் தாமாக முன்வந்தவர் பரிசல் செந்தில்நாதன். புத்தகங்களின் அருங்காதலரான அவரை விட இந்தப் பதிப்பை வெளியிடத் தகுதியானவர் இல்லை. என்னிடமே இல்லாமற் போன நூலை ‘மீட்டெடுத்து’ வெளியிடுகிறார். மெய்ப்புப் பார்த்து உதவியவர்கள் தி. பரமேசுவரியும் கிருஷ்ண பிரபுவும். அண்மைக் காலமாக எனது புத்தகங்கள் அனைத்தையும் மேற்பார்வையிட்டுச் பிழை நீக்கி அளிப்பவர் செல்வராஜ் ஜெகதீசன். இந்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

திருவனந்தபுரம்
31 டிசம்பர் 2019                                                    சுகுமாரன்



மேற்கோள் நூல்கள்:
1.        Pablo Neruda – A Passion for Life, Adam Feinstein,  Bloosbury, Great Britain, 2004
2.        My Life with Pablo Neruda – Matlde Urrutia ( Alexandra Giardino Tr ), Stansford University Press, California, 2004
3.        The Neruda Case – Roberto Ampuero, Riverbend Books, New York, 2012
4.        Pablo Neruda: Selected Poems – Nathaniel Tarn Ed., Penguin Books, Great Britain, 1975
The Essential Neruda – Mark Eisner Ed., City Lights Books, San Francisco, 2005

செவ்வாய், 24 டிசம்பர், 2019





மிக நெருக்கமானவர் அல்லர்; முற்றிலும் அந்நியரும் அல்லர். இந்த இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட ஒன்றாகவே ஜி.நஞ்சுண்டனுடன் நிலவிய  நட்பைச் சொல்ல முடியும். அடிக்கடியான சந்திப்புகள் நேர்ந்ததில்லை. தற்செயல்  சந்திப்புக்களில் சொல்லும் கருத்தோ, பகிர்ந்துகொள்ளும் அனுபவமோ ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டும். தொடர்ச்சியான தொலைபேசி உரையாடல்களும் மேற்கொண்டதில்லை. ஒன்றோ இரண்டோ மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் குறுகிய உரையாடல்களிலும் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கும். இதை நஞ்சுண்டனுடனான என்னுடைய நட்பின் தனி அனுபவம் என்று எண்ணியிருந்தேன். தன்னுடன் தொடர்பு கொண்டிருந்த எல்லாருடனும் இப்படித்தான் பழகியிருக்கிறார் என்பதை அவரது மறைவை ஒட்டிப் பலரும் எழுதியிருக்கும் முகநூல் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. நஞ்சுண்டனின் இலக்கிய ஆளுமையின் இயல்பாக இந்த இணக்கத்தைக் காண விரும்புகிறேன். இந்த இயல்பின் காரணமாகவே பல இளம் எழுத்தாளர்களுக்கு தூண்டுதல் அளிப்பவராக இருந்தார்; தமிழில் மட்டுமல்ல கன்னடத்தில் எழுதும் புதிய தலைமுறையினர் சிலரும் அவரது ஈர்ப்பு வட்டத்தில் இருந்தார்கள்.



தொண்ணூறுகளில் வெளிவந்த ‘சிமெண்ட் பெஞ்சுகள்’ என்ற கவிதைத் தொகுப்பின் வாயிலாக நஞ்சுண்டன் அறிமுகமானார். அப்போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த வார இதழில் மதிப்புரைக்காகப் புத்தகத்தை அனுப்பியிருந்தார். அதிலிருந்த ஒரு கவிதையை இதழில் வெளியிட்டிருந்தேன். அதற்கு நன்றி சொல்லத் தொலை பேசியில் அழைத்ததுதான் நட்பின் தொடக்கம். தமிழ்க் கவிதை நூலுக்கு அந்தத் தலைப்பு அவ்வளவு பொருத்தமானதாக இல்லை என்ற கருத்தையும் தொடர்ந்து  கவிதைகள் எழுத வேண்டும் என்ற ஆலோசனையையும் அந்த உரையாடலில் தெரிவித்தேன். ‘எழுதி விட்டால் போயிற்று; நீங்களே சொல்லும்போது ஒரு கை பார்த்து விடுகிறேன்’ என்று  உற்சாகமாகச் சிரித்தார். ஆனால் அவரால் கவிதைக்குள் தொடர்ந்து செயல்பட இயலவில்லை. சொந்தமாகக் கவிதைகள் எழுதுவதைத் தொடரவில்லையே தவிர கவிதை மொழியாக்கங்களிலும் கவிதையின் நுட்பங்களை விரிவாகப் பேசும் கட்டுரைகள் எழுதுவதிலும் ஈடுபாட்டார். நவீன கவிதையியலுக்கு அவருடைய பங்களிப்பு அது.


ஆழமான வாசகனும் நுட்பமான ஆய்வாளனும் இணைந்த கலவை நஞ்சுண்டன். வாசகனாக ஒரு படைப்பின் உயிரை அவர் உணர்ந்திருந்தார். ஆய்வாளனாக அதன் உருவக் கூறுகளை அறிந்திருந்தார். இரண்டும் ஒன்றாகிச் செயல்படும் இயக்கப் புள்ளியையும் கணித்திருந்தார். இதுவே அவரை மொழிபெயர்ப்பாளராகவும் செம்மையாக்குநராகவும் மாற்றியது என்று எண்ணுகிறேன். ஒரு படைப்பின் உயிர், துடிப்புடனும்  உருவம் ஆரோக்கியத்துடனும்  இருப்பதே சிறப்பு என்ற சிந்தனையில் தான் அவரது மொழியாக்கங்களும் செம்மையாக்கங்களும் அமைந்தன. ஒரு மொழியில் எழுதப்பட்ட படைப்பு அந்த மொழியின் ஆதார இயல்புகளுடன் இருப்பது அவசியம் என்பது அவரது மொழியாக்கம், செம்மையாக்கம் ஆகிய இரு செயல் பாடுகளுக்கும் மையம். அவர் மொழியாக்கம் மேற்கொண்டது பெரும்பாலும் கன்னட மொழிப் படைப்புகளில்தான். யூ ஆர். அனந்தமூர்த்தியின் ‘பவ’ நாவலை  ‘பிறப்பு’ என்றும் ‘அவஸ்தை’  நாவலை அதே பெயரிலும் தமிழாக்கம் செய்தார். கன்னடப் பெண் எழுத்தாளர்களின் கதைகள் அடங்கிய ‘அக்கா’ என்ற தொகுப்பையும் கன்னட நவீன தலைமுறை எழுத்தாளர்களின் சிறுகதைகள் கொண்ட’ மரணம் மற்றும்’ தொகுப்பையும் கொண்டு வந்தார். இந்த மொழியாக்கங்களை வாசிக்கும் எளிய வாசகருக்கும் அவரது கன்னடமொழித் தேர்ச்சியும் தமிழ்ப்புலமையும் புலனாகும். அவை வெறும் மொழி பெயர்ப்பாக இல்லாமல் பண்பாட்டுப் பெயர்ப்பாக  இருப்பதும் தென்படும்.. மொழிபெயர்ப் பாளர்களுக்குச் சவாலாக அமையும் இந்தச் சிக்கலை நஞ்சுண்டனின் தமிழாக்கங்கள் எளிதாக வெற்றி கொள்கின்றன.


நஞ்சுண்டனின் முதன்மையான கவனமும் கனவும் ஒரு படைப்பின் செம்மையாக்கம் என்று சொல்லலாம். ஒரு படைப்பில் மொழி பிழையின்றிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில்  எச்சரிக்கை கொண்டிருந்தார். ‘பதினைந்து குதிரைகள் ஓடியது’ என்ற வாசகத்தை அவரால் ஏற்கவே முடியாது. ‘அவன் டில்லியில் கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்’ என்ற சித்தரிப்பை சகித்துக்கொள்ள இயலாது. ‘பெருமாள் கோவிலிலிருந்து குருக்கள் வெளியே வந்தார்’ என்ற குறிப்பு அவருக்கு மண்டையிடியைக் கொடுத்து விடும். ‘பதினைந்து குதிரைகள் ஓடின என்பது தானே பிழையற்ற வழக்கு’; டில்லியில் கடல் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளாமல் ஒருவன் ஏன் கதை எழுதுகிறான்? பட்டருக்கும் குருக்களுக்கும் வித்தியாசம் இல்லையா? என்று அவரது செம்மையாக்க மனம் திருத்தம் செய்து கொண்டிருக்கும். இதுபோன்ற செம்மையாக்கக் குணம் ஒரு கட்டத்தில் அவரிடம் ஆவேசமாகவே மாறியது. எழுத்தாளர்களிடையில் அவர் மதிக்கப்படவும் விமர்சிக்கப்படவும் இதுவே காரணமும் ஆனது. அவர் தொடர்ந்து கவிதைகள் எழுதாமற் போனதற்கும் இந்தச் செம்மை மனநிலையே காரணம் என்று கருதுகிறேன். அவரது இந்த மனநிலை முற்றிலும் தன்னலமில்லாதது என்று உறுதியாகச் சொல்லலாம். செம்மையாக்கம் தொடர்பாக மூன்றோ நான்கோ முகாம்களை நடத்தியிருக்கிறார். அவை அவரது சொந்தப் பணத்தில் நடத்தப் பட்டவை. அவற்றின் வாயிலாக தமிழைத் தமிழாக எழுத கணிசமான இளைஞர்கள் ஊக்கம் பெற்றார்கள். அவர் விரும்பியதும் அதைத்தான். அந்த அளவில் நவீனத் தமிழ் இலக்கிய உலகம் அவருக்குக் கடமைப்பட்டதுதான்.


தமிழில் எழுத்து, பதிப்பு, இதழியல், ஆகிய துறைகளில் இன்று ஒரு செம்மையாக்குநரின் – எடிட்டரின் - தேவை இன்றியமையாதது. மிக முக்கியமான படைப்புகள் கூட இன்னும் செம்மையாக்கப் பட்டிருக்கலாமோ என்ற ஏக்கத்தை வாசிப்பவரிடம் ஏற்படுத்துகின்றன. இந்தப் பின்னணியில் நஞ்சுண்டனின் பணி முக்கியமானது; அவரது இடையீடு அவசியமானது. படைப்புக்கும் வாசகருக்கும் இடையிலான உறவில், அந்த உறவை வலுப்படுத்தும் மூன்றாவது பார்வை எடிட்டருடையது. அது படைப்பை மேலும் காத்திரமானதாக்குகிறது. பெருமாள் முருகனின் முதல் நாவலான ‘ஏறு வெயி’லுக்குச் செய்யப்பட்ட செம்மையாக்கத்தை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். நான்கு பதிப்புகள் வெளிவந்த பின்பே நாவலை நஞ்சுண்டன் செம்மைப்படுத்தினார். நாவலின் காலக்குழப்பத்தைச் சரிசெய்து ஒரே காலநடையில் கொண்டுசெல்ல உதவினார். உரையாடல் தவிர்த்த பகுதிகளைப் பொது வாசகருக்கும் புரியும் மொழிக்குத் திருத்தினார் .தகவல் பிழைகளை நீக்கினார். இவ்வாறு நஞ்சுண்டன் மேற்கொண்ட  செம்மையாக்கம்  நாவலுக்கு மேலும் மெருகூட்டியது.


இந்தத் தன்னலமற்ற பணியில் ஈடுபடும் ஒருவருக்கு இருக்க வேண்டிய பிடிவாதம் நஞ்சுண்டனுக்கு இருந்தது. சற்று அதிகமாகவே இருந்தது என்றும் சொல்ல வேண்டும். தமிழைத் தவிரப் பிற மொழிகளில் வெளியாகும் புனைவுகளும் கவிதைகளும் பிற ஆக்கங்களும் செம்மையாக்கப்பட்டே வெளியாகின்றன. ஆக்கியவர்களின் அணுக்கமான நண்பர்களோ தொழில்முறை எடிட்டர்களோ அதைச் செய்கின்றனர். அதை எழுதியவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழில் அந்த நிலைமை அநேகமாக இல்லை. ‘நான் எழுதியதை இன்னொருவர் திருத்துவதாவது?’ என்ற இலக்கியத் தன்முனைப்பு செம்மையாக்கத்துக்குத் தடையாகிறது. நஞ்சுண்டனின் செம்மைப் பிடிவாதம் அந்த மனநிலையைக் கணக்கில் கொள்ள வில்லை என்றே சொல்லலாம். ‘நான் செய்வது அவர்களின் நன்மைக்குத்தானே, அது ஏன் அவர்களுக்குப் புரியவில்லை?’ என்று ஒருமுறை தொலைபேசி உரையாடலில் குறைப்பட்டுக் கொண்டார். ‘ நீங்கள் சொல்வது சரி. ஒரு படைப்பு மேலானதாகப் போற்றப்பட்டாலும் சரியில்லை என்று உதாசீனப்படுத்தப்பட்டாலும்  இரண்டும் அந்தப் படைப்பாளியைத்தானே சேரும். எடிட்டருக்கு அதில் எந்தப் பங்கும் கிடையாது. படைப்பாளியின் முழு இசைவு இல்லாமல் எடிட்டிங்க் சாத்தியமில்லை என்பதுதானே பொன் விதி’ என்று பதில் சொன்னேன். கூடவே சொன்னேன்: ‘ நான் ஒரு எடிட்டராக இருந்து இப்படிக் குறைப்பட்டுக் கொண்டால் நியாயம். நீங்கள் ஆதங்கப்படுவது சரியில்லை?’ பதற்றத்துடன் ‘ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?’ என்றார். ‘நஞ்சுண்டன் என்ற பேருக்குப் பொருத்தமாக இல்லை. எல்லாக் கசப்பையும் விழுங்கி விடும் கண்டமல்லவா உங்களிடம் இருப்பது’ என்றதும் அவர் சிரித்த சிரிப்பு அலாதியானது.


இலக்கியம் தவிர வேறு எதைப் பற்றியும் அவரிடம் பேசியதாக நினைவில்லை. அவரும் அப்படித்தான். ‘வீட்டிலே நல்லாருக்காங்களா?’ போன்ற சம்பிரதாயமான விசாரிப்புக்கு அப்பால் தனி வாழ்க்கை பற்றிய உரையாடல்கள் நிகழ்ந்ததில்லை. அவருடனான  கடைசி இரு தொலைபேசி உரையாடல்கள் மனதில் எதிரொலிக்கின்றன. கடந்த செப்டம்பர் மாத இறுதியில் தொலைபேசியில் அழைத்தார் ‘இப்போதே துண்டைப் போட்டு வைக்கிறேன். அடுத்த இதழில் மூன்று பக்கங்களை எனக்காக ஒதுக்கி விடுங்கள். காந்தியைப் பற்றிக் கன்னடத்தில் வெளியாகியிருக்கும் சிறந்த கவிதைகளின் தொகுப்பு ஒன்றைக் கொடுக்கிறேன்’ என்றார். அவரது அண்மைக் கால வாக்குறுதிகள் உத்தரவாதமற்றவை என்று அனுபவத்தில் தெரிந்து கொண்டிருந்தேன். எனினும் காத்திருந்தேன். எதிர்பார்த்தது போலவே கன்னட காந்தி வரவில்லை. டிசம்பர் முதல் வாரத்தில் நானே அவரை அழைத்தேன். பலமுறை முயன்ற பின்பு அழைப்புக்குச் செவி சாய்த்தார். ‘ உயிர்மை இதழில் உங்கள் மொழியாக்கத்தில் வந்திருக்கும் போளுவார் மகம்மது குஞ்ஞியின் கன்னடக் கதை இத்தத்தை வாசித்தேன். நல்ல கதை. சேதாரமில்லாத மொழிபெயர்ப்பு. காந்தி கவிதைகளைத் தராமல் ஏமாற்றியதற்குப் பதிலாக இதை எனக்குக் கொடுத்திருக்கலாம் ‘ என்றேன். குழறாலான  பதில் வந்தது.


’ கவலையே படாதீங்க, இப்ப கொஞ்சம் பணிச்சுமை குறைந்திருக்கிறது. ஜனவரி முதல் ஒவ்வொரு இதழுக்கும் எழுதுகிறேன்’ என்று சிரித்தார். ‘ இதை நான் எந்தத் தண்ணீரில் எழுதி வைக்கவேண்டும், நஞ்சுண்டன், காவிரித் தண்ணீரிலா, கரமனையாற்றுத் தண்ணீரிலா? ‘ என்றேன். அப்போது அவரிடமிருந்து வெளிப்பட்ட சிரிப்பில் கேட்டது நீரின் கடைசித் தளும்பல் என்பது இப்போதுதான் புரிகிறது.


டிசம்பர் 23, 2019 இந்து தமிழ் திசை நாளிதழின் கருதுப் பேழை பகுதியில் வெளியான கட்டுரையின் முழு வடிவம். எழுதக் கேட்டுக் கொண்ட த. ராஜனுக்கும் வெளியிட்ட நாளிதழுக்கும் நன்றி.



புதன், 9 அக்டோபர், 2019

திருப்பி வந்த நாட்களும் ஒரு நேர்காணலும்




காலம் 1981 – 82. கவிஞர் பிரம்மராஜன் திருமணமாகி இடமாற்றம் பெற்று மனைவி மீனாவுடன் உதகமண்டலம் வந்து வசிக்கத் தொடங்கி இருன் தார். னார். நவீன இலக்கியத்தலமாக உதகை மாறிய காலம். அவருடன் நட்பு ஏற்பட்டது. அவர் வாயிலாக இலக்கிய நண்பர்கள் பலர் அறிமுகம் ஆனார்கள். பிரம்மராஜனின் பள்ளி, கல்லூரி சகாக்களான ஆர்.சிவகுமார், அகிலன் எத்திராஜ், அவரது மாணவர்களான எம்.வி.சத்யன், அ. தமிழ்ஒளி, த.பார்த்திபன் ஆகியோர் பட்டியலில் இருந்தவர்கள். அந்த அறிமுகத்துக்குப் பிறகு சிலர் நண்பர்களும் சிலர் நெருங்கிய நண்பர்களும் ஆனார்கள். சுற்றுலாப் பயணிகளாகவோ பிரம்மராஜனைச் சந்திக்க வந்த இலக்கிய வாதிகளாகவோ மலையேறிய சிலரும் பழக்கமானார்கள். வண்ணதாசன், சாரு நிவேதிதா, பழமலய், ஆகியோரை முதலில் சந்தித்தது அப்போது தான். முன்னரே அறிமுகமாகியிருந்த ஆத்மாநாம் அவ்வப்போது வந்து சென்றதில் நெருக்கமானார். 

இவர்கள் தவிர அந்த மலைநகரத்தில் இலக்கியம் பேசி அலைந்து கொண்டிருந்த சிலருடன் நட்புக்கொள்ளவும் வாய்த்தது. இந்துஸ்தான் போட்டோபிலிம் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த கார்த்திகா ராஜ்குமார், தொலைபேசித்துறையில் பணியாற்றிய சுப்ரபாரதி மணியன், உதகை மார்க்கட்டில் மளிகைக்கடை வைத்திருந்த பு.வ. மணிக் கண்ணன், தேயிலை விற்பனை முகவாண்மை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த நிர்மால்யா மணி, மருந்தாளுநர் பட்டயத்துக்காகப் படித்துக் கொண்டிருந்த நந்தலாலா என்ற இளங்கோ அவரது மாமா ப்ரியதர்சன், தனியார் நிதிநிறுவனத்தில் வேலைபார்த்த ப்ரதிபா ஜெயச்சந்திரன் என்று இளமைக் கனவுகளும் துள்ளலும் துடிப்பும் நிறைந்த ஓர் இலக்கிய வட்டம் இயல்பாகவே உருவானது. ஓரிரு ஆண்டுகளில் மலையேறி வந்த ஜோசப் தயாளனும் விமலாதித்த மாமல்லனும் கொஞ்ச காலம் நீலகிரிவாசிகளாக இருந்தார்கள். எல்லாரும் இலக்கிய வேட்கையில் ஆளுக்கொரு காரியத்தைச் செய்து கொண்டிருந்தார்கள். காலம் முன்நகர ஆட்களும் நகர்ந்து மலையிறங்கி வேறு திசைகளுக்குப் போனார்கள். 

சிலருடன் தொடர்பு அறுபடாமல் தொடர்ந்தது. சிவகுமாரும், பார்த்திபனும், நிர்மால்யாவும் அன்றுமுதல் இன்றுவரை தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள். சுப்ரபாரதிமணியன், சாரு நிவேதிதா ஆகியவர்களை அவ்வப்போது சந்திக்கிறேன். பல வருடஇடைவெளிக்குப் பிறகு அகிலன் மீண்டும் கையெட்டும் நெருக்கத்துக்கு வந்தார். ஆத்மாநாமும் மணிக் கண்ணனும் அந்த எழுச்சியான நாட்களிலேயே கைவிட்டுப் போனார்கள். மற்றவர்கள், இன்று பார்த்தால் நினைவுகூர்ந்து புதிதாக அறிமுகப் படுத்திக்கொள்ள  வேண்டிய தொலைவில் இருக்கிறார்கள்.

அந்தப் பழைய உற்சவ காலத்தைச் சில நாட்களுக்கு முன்பு நினைவுகூரத் தொடங்கி இன்றும் திரும்ப மனதுள் ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியவர் ப்ரதிபா ஜெயச்சந்திரன். உதகையில் அறிமுகமான இலக்கிய நண்பர்களில் ஒருவர். மேற்சொன்னவர்களில் ஊரைவிட்டு முதலில் கிளம்பியவர் அவர்தான் என்று ஞாபகம்.தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்தவருக்கு நாட்டுடைமை வங்கியில் கிடைத்த பணி மலையை விட்டு இறங்கச் செய்தது. அபூர்வமாக சிற்றிதழ்களில் அவருடைய சில கவிதை களையும் கதைகளையும் பார்க்கவும் வாசிக்கவும் முடிந்தது. எனினும் அவரைத் தொடர்பு கொள்ள எண்ணியதில்லை. அவரும் ஒதுங்கிய நபராகவே இருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு நிர்மால்யா தொலைபேசியில் அழைத்து ப்ரதிபா ஜெயச்சந்திரன் பேச விரும்புவதாகச் சொன்னார். அறுந்தே போனது என்று நினைத்திருந்த இழை மீண்டும் வசப்பட்டது. பேசினார். பேசினேன். பேசினோம்.ஏறத்தாழ நாற்பது, சரியாகச் சொன்னால் முப்பத்தெட்டு, ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழ்ந்த உரையாடல்கள்.


இவற்றையெல்லாம் இங்கே பதிவுசெய்யக் காரணம் பின்வருமாறு: பாரதி புத்தகாலயம் வெளியிடும் புதிய புத்தகம் பேசுது மாத இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார் ப்ரதிபா. அவருடைய விருப்பமும் நிர்மால்யாவின் பரிந்துரையும் ஒரு நேர்காணலுக்கு வழியமைத்தன.  புத்தகம் பேசுது அக்டோபர் 2019 இதழில் நேர்காணல் வெளியாகியிருக்கிறது. அது வெளி வந்திருப்பதன் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது பழைய நண்பர் ஒருவர் திருப்பக் கிடைத்ததில் உருவாகும் இன்றைய  குதூகலம். சென்றுபோன தினங்களை மீண்டும் நினைவுகூரக் கிடைக்கும் தருணம் எப்போதும் வாய்ப்பதல்லவே. ப்ரதிபா ஜெயச்சந்திரன், நிர்மால்யா இருவருக்கும் நன்றி புதிய புத்தகம் பேசுது இதழுக்கு மிக்க நன்றி.