வியாழன், 12 ஜனவரி, 2012

லீலை - 12 மலையாளக் கதைகள்

எழுத்தின் கடைசி இலக்கிய வடிவம் சிறுகதைதான்.

1985இல் வெளியான ஆ.மாதவன் கதைகள் தொகுப்பில் முன்னுரையாகச் சேர்க்கப்பட்டிருந்த 'கலைகள், கதைகள்,சிறுகதைகள்' என்ற கட்டுரையில் 'சிறுகதையே படைப்புச் சக்தியின் கடைசிக் குழந்தை. படைப்புச் சக்தி அதற்குப் பின் இன்றுவரை கருத்தரிக்கவில்லை' என்று சுந்தர ராமசாமி குறிப்பிட்டிருந்தார். ஒருவேளை படைப்புச் சக்தி கருத்தரித்திருந்தாலும் பேர் சொல்லும் சந்ததிகள் பிறக்கவில்லை. எழுதப்படும் மொழிகள் எல்லா வற்றிலும் இதுவே நிலைமை.

சிறுகதையைத் தாண்டிய ஓர் இலக்கிய வடிவத்தைக் கண்டுபிடிக்க எழுத்தாளர்கள் முயற்சி செய்யாமலில்லை.தமிழில் அதுபோன்ற முயற்சியை மேற்கொண்டவர் மு.தளையசிங்கம். பெரும் கனவுடன் மெய்யுள் என்ற வடிவத்தை அறிமுகப்படுத்தினார். அவரைத் தவிர வேறு யாரும் அந்த வடிவத்தைப் பொருட்படுத்தவில்லை. மலையாள எழுத்தாளரான எஸ்.கே.பொற்றேக்காடு நாவலையும் நாடகத்தையும் இணைத்து நாவடகம் என்ற வடிவத்தை முன்வைத்தார். அதுவும் பின் தொடரப்படவில்லை. மினிக் கதைகள் என்ற பெயரில் ஒரு சோதனையை மலையாள எழுத்தாளர்கள் செய்து பார்த்தார்கள். பி.கே.பாறக்கடவு என்ற ஓர் எழுத்தாளர் மட்டுமே தொடர்ந்து இந்த வடிவத்தைப் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார். இந்த முயற்சிகள் எதுவும் 'சிறுகதையே படைப்புச் சக்தியின் கடைசிக் குழந்தை' என்ற இலக்கியத் தகுதியைக் கேள்விக்குட்படுத்தவில்லை.

ஆக நூற்றாண்டைக் கடந்த சிறுகதையே இலக்கியத்தில் இன்றைக்கும் இளமை மாறாத வடிவம்.ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குக் கொண்டு செல்ல முதலில் பரிந்துரைக் கப்படுவது சிறுகதைகள்தாம் என்று தோன்றுகிறது.ஓர் எளிய மொழிபெயர்ப்பாளனின் தேர்விலும் சிறுகதையே முதன்மையாக இருக்கும். நாவல் அதன் நீளம் காரணமாக மொழியாக்கத்தில் சுணக்கத்தை ஏற்படுத்துகிறது. கவிதை அதன் மொழி நுட்பம், பண்பாட்டுக் குறிப்பீடுகள் ஆகியவை காரணமாகத் தயக்கத்தைக் கொடுக்கிறது. ஆனால் ஆர்வமுள்ள மொழிபெயர்ப்பாளன் எந்தத் தடையும் இல்லாமல் ஒரு சிறுகதையை மொழியாக்கம் செய்யக் கூடுமென்று என்ணுகிறேன். மொழிபெயர்ப்பில் வெற்றி பெறாத கவிதைகள் இருக்கலாம். புனை கதைகள் இருக்க முடியாது. குறிப்பாகச் சிறுகதைகள். உலக மொழிகளிருந்தும் இந்திய மொழிகளிருந்தும் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டுத் தொகுக்கப்படும் கதைகள் இதற்கு எடுத்துக் காட்டுகள். எளிதில் மொழியாக்கம் செய்யப்பட இசைவானது என்பது மட்டுமல்ல; பிற மொழி வாசகர்களை உடனடியாக நெருங்க உதவும் வடிவம் என்பதும் காரணம். கவிதையின் ஆழத்தையும் நாவலின் விரிந்த காட்சியையும் சிறுகதைகள் சாத்தியப்படுத்துகின்றன என்று சொல்லப்படும் கருத்தும் ஒருவேளை அவற்றின் மொழியாக்கத்துக்குத் தூண்டுதலாக இருக்கலாம்.

கவிதைக்கும் நாவலுக்கும் கொஞ்சமும் மாற்றுக் குறையாத இலக்கிய வடிவம் சிறுகதை என்று நம்பும் இலக்கியவாதிகளில் ஒருவர் இந்தத் தொகுதியிலுள்ள 'கடையநல்லூரில் ஒரு பெண்' ணின் ஆசிரியர் டி.பத்மநாபன். சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணூரில் ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் சந்தித்தேன். அறிமுகப்படுத்தியவர் 'இவர் எழுத்தாளர் டி.பத்மநாபன்' என்றார். சற்றுக் கோபமான குரலில் பத்மநாபன் திருத்தினார்.'இல்லா,செறுகதா க்ருத்து டி.பத்மநாபன்'. அந்தத் திருத்தம் அவரளவில் சரியானது. கட்டுரைகள் சிலவற்றை எழுதி யிருக்கிறார் என்பதை விட்டுவிட்டால் அவரது முதன்மையான எழுத்துக்கள் சிறுகதைகள் மட்டுமே.அவரது சம காலத்தவர்களாக சிறுகதைகள் வாயிலாக அறிமுகமான எம்.டி.வாசுதேவன் நாயரும் மாதவிக் குட்டியும் நாவல் ஆக்கத்தில் நுழைந்தபோதும் பத்மநாபன் 'செறுகதாக்ருத்'தாகவே (சிறுகதைப் படைப்பாளியாகவே) தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அமெரிக்க இலக்கியத்தின் நவீனத் தலைமுறை எழுத்தாளரான ரேமண்ட் கார்வர் கவிதைகள் எழுதியிருந்தாலும் இலக்கியப் புகழ் பெற்றது சிறுகதைகளால் மட்டுமே.

இந்தத் தொகுப்பில் இடம் பெறும் கதைகளை மீண்டும் வாசித்துக் கொண்டிருந்தபோது எழுந்த எண்ணங்கள் இவை.எல்லா மொழிகளிலும் சிறுகதையில்தான் பெரும் சாதனைகள் நிகழ்ந் திருக்கின்றன என்ற மையக் கருத்தை நோக்கியே இந்த எண்ணங்கள் சுழன்றன. நூற்றாண்டைக் கடந்த மலையாளச் சிறுகதையும் இதற்கு விதிவிலக்கல்ல.

பகுத்துப் பேசும் வசதிக்காக மலையாளச் சிறுகதை வரலாற்றை ஆரம்பக் காலம், மறு மலர்ச்சிக் காலம், நவீனத்துவம், நவீனத்துவத்துக்குப் பின், தற்காலம் என்று வகைப் படுத்தலாம். சிறுகதைப் பிரக்ஞை உருவாகி வந்த ஆரம்பக் காலக் கதைகளைவிலக்கி வைத்தால் தகழி சிவசங்கரப் பிள்ளை, வைக்கம் முகம்மது பஷீர், பொன்குன்னம் வர்க்கி, பி.கேசவதேவ் ஆகியோர் கதைகள் எழுதிய மறுமலர்ச்சிக் கால முதற்கட்டம். காரூர் நீல கண்டப் பிள்ளை, எஸ்.கே.பொற்றேக்காடு, லலிதாம்பிகா அந்தர்ஜனம் போன்றவர்கள் எழுதிய இரண்டாம் கட்டம்,எம்.டி.வாசுதேவன் நாயர், மாதவிக்குட்டி, டி.பத்மநாபன், என்.மோகனன் முதலானவர்கள் செயல்பட்ட மூன்றாம் கட்டங்களில் சிறுகதை தனிக் கலையாகத் தன்னை அறிவித்தது. முதற்கட்ட கதைகள் வாழ்வின் புறச் செயல்பாடுகளில் ஊன்றிய பார்வையைக் கொண்டவை. இரண்டாம் கட்டம் வாழ்வின் உளவியலை உணர்ச்சி ததும்பும் நடையில் ஆராய்ந்தவை. மூன்றாம் கட்டக் கதைகள் வாழ்வின் மையமான மனிதனின் மன வோட்டங்களில் கவனம் செலுத்தியவை. இப்படி வகைப்படுத்துவது ஒரு வசதிக்காகத்தான். முற்போக்குக் கதைகளின் மிகச் சிறந்த முன் மாதிரிகள் என்று சொல்லப்படும் பஷீரின் கதைகள் எந்த நவீனப் போக்குக்கும் சவால் விடும் கலையழகு கொண்டவை என்பதை நினைவில் வைத்துக் கொண்டே இதைக் குறிப்பிடுகிறேன். இதேபோன்று எந்தக் போக்கிலும் வசப்படாத இன்னொரு எழுத்தாளர் வி.கே.என்.

ஆதுனிகதா என்று அழைக்கப்பட்ட நவீனத்துவக் காலக் கதைகள் மலையாள இலக்கியத்தில் புதிய திசை மாற்றத்தை உருவாக்கியவை. நாலு கெட்டுத் தறவாடுகளிலிருந்தும் கிராமியப் புனிதங்களிருந்தும் விடுபட்டமலையாளியின் சமூக வாழ்க்கையைப் பல கோணங்களில் முன் வைத்தவை இந்தக் கதைகள். ஓ.வி.விஜயன், எம். முகுந்தன், காக்கநாடன், சேது, எம்.சுகுமாரன், பட்டத்துவிள சக்கரியா,புனத்தில் குஞ்ஞப்துல்லா, எம்.பி. நாராயணப் பிள்ளை, வி.பி.சிவகுமார், டி.ஆர். ஆனந்த்,என்.எஸ்.மாதவன் என்ற முதன்மையான போக்கும் அதற்கிணையாக யூ.பி.ஜெயராஜ், விக்டர் லீனஸ், டி.பி.கிஷோர் என்று தொடர்ந்த சமாந்தரப் போக்கும் நவீனத்துவக் காலம்தான் மலையாளச் சிறுகதையில் உச்ச பட்ச சாதனைகள் நிகழ்ந்த கட்டம் என்று சொல்லலாம். இடதுசாரிச் சிந்தனைகளை மையமாகக் கொண்டு எழுதிய எம்.சுகுமாரன், யூ.பி ஜெயராஜ் ஆகியவர்களை வேறுபடுத்திப் பார்க்கலாம். இந்தத் தொகுப்புக்கான கதைகளை வரிசைப்படுத்திக் கொண்டிருக்கும்போது நவீனத்துவத்தின் நடைமுறைக் காலம் பற்றிய ஒரு தகவல் கவனத்தில் துலங்கியது. அறுபதுகளின் மைய ஆண்டுகளில் தொடங்கி எண்பதுகளின் முற்பாதிவரை நீண்டிருந்த நவீனத்துவ காலத்தில் ஒரு பெண் கூட முதன்மையான போக்கில் சேர்க்கப்படவில்லை. பெண்நிலை அணுகுமுறையுடன் மானஸி சில கதைகளை எழுதினார். சாரா ஜோசப்பும் கிரேசியும் சந்திரமதியும் பெண்மையவாதம் சார்ந்த பார்வையுடன் கதைகளை எழுதினார்கள். அவை நவீனத்துவத்தின் பெரும் வீச்சில் கவனிக்கப் படாமற் போயின.

நவீனத்துவத்துக்குப் பிந்தைய காலப் பகுதியை மலையாளச் சிறுகதையின் தேக்க காலம் என்று சொல்லலாம். ஒரு புதியதலைமுறை சிறுகதை எழுத்தில் கவனம் செலுத்தியது. சதீஷ்பாபு பையன்னூர், எம்.ராஜீவ்குமார், அசோகன் சருவில், பாபு குழிமற்றம், பி.சுரேந்திரன், என். பிரபாகரன், கே.பி.ராமனுண்ணி, டி.வி.கொச்சுபாவா, வி.ஆர் சுதீஷ் என்று குறிப்பிடத் தகுந்த பெயர்கள் தென்பட்டாலும், சராசரிக்கு மேம்பட்ட கதைகளையே இவர்கள் எழுதியிருந்தாலும் அவை மறுமலர்ச்சிக் கால எழுத்துக்களைப் போலவோ, நவீனத்துவக் கால ஆக்கங்கள் போலவோ அழுத்தமான பாதிப்புகளை ஏனோ உருவாக்கவில்லை.

தொண்ணூறுகளுக்குப் பின்வந்த தலைமுறையின் பங்களிப்புத்தான் மலையாளச் சிறுகதையை மீண்டும் கவனத்துக்குரிய வடிவமாக நிறுவியது. சுபாஷ் சந்திரன், தாமஸ் ஜோசப், சந்தோஷ் எச்சிக்கானம், பி.முரளி, உண்ணி ஆர், பிரியா ஏ.எஸ்.சி.எஸ். சந்திரிகா, கே,ரேகா, ஈ.சந்தோஷ்குமார், எஸ்.சிதாரா, கே.ஆர்.மீரா, இந்து மேனோன் என்று அறிமுகமான தலைமுறை சிறுகதைக்குப் புதிய களங்களையும் புதிய நுட்பங்களையும் அளித்திருக்கிறது. தலித் வாழ்க்கையைச் சொல்லும் கதைகளை சி.அய்யப்பன் எழுதி இன்னொரு கிளைவழியை அமைத்தார். இந்த வரிசையில் இன்னும் சில பெயர்களையும் குறிப்பிட முடியும். .

தொகுப்புக்குள் நுழையும் வாசகனுக்கு உதவக் கூடும் என்று எண்ணத்தில் இந்தக் குறிப்புகள் முன்வைக்கப் படுகின்றன. இவை விமர்சனக் குறிப்புகள் அல்ல. கால் நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாக மலையாளச் சிறுகதை இலக்கியத்தை வாசிப்பில் பின் தொடரும் வாசகனின் குறிப்புகள். இது முற்றான பட்டியலும் அல்ல.

@

இனி இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் பற்றி.

கடந்த இருபதுக்கும் அதிகமான ஆண்டுகளில் வெவ்வேறு தருணங்களில் மலையாளத்திலிருந்து தமிழாக்கம் செய்த 12 கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. முன்னர் குறிப்பிட்ட வெவ்வேறு தலைமுறைகளைச் சார்ந்த படைப்பாளிகளின் படைப்புகள் இவை. வாசித்தபோது என்னைக் கவர்ந்தவை. அதனாலேயே மொழிபெயர்ப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவை. ஏதேனும் போக்கையோ காலத்தையோ பிரதிபலிப்பவையாகவோ அல்லது எழுதப்பட்ட மொழியின் மிகச் சிறந்த கதைகளாகவோ இவை அமையும் வாய்ப்பு இல்லை. அவ்வப்போது வெளியான கதைகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன என்பது மட்டுமெ இந்தத் தொகுப்பின் முறையியல். நான் படித்துச் சிறிதாவது சலனமடைந்தவை சக வாசகனையும் ஈர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இதிலுள்ள ஒவ்வொரு கதையும் அதை உருவாக்கிய படைப்பாளியின் எழுத்தாளுமையைச் சிறிதாவது வெளிக்காட்டும் என்ற நம்பிக்கையுமே இந்தத் தொகுப்பின் முறையியலாகக் கருதப்படலாம்.

இந்தக் கதைகள் முன்னரே அச்சிதழ்களிலும் இணையப் பத்திரிகைகளிலும் வெளியானவை. இவ்விரு ஊடகங்களின் தேவையையொட்டி வெளியானவை. எனினும் கதைத் தேர்வு என் விருப்பம் சார்ந்தே அமைந்தது. ஏற்கனவே செய்து வைத்திருந்த தமிழாக்கங்கள்தாம் பொருத்தமான தருணத்தில் ஊடகங்களில் வெளி வந்தன.வைக்கம் முகம்மது பஷீரின் கதை அவரது நூற்றாண்டையொட்டி 'காலச்சுவடு' இதழில் வெளியானது. டி.பத்மநாபனின் கதை 'இந்தியா டூடே' இலக்கிய மலரில் வெளியானது. எழுத்து முறையால் வாசிப்பில் இடம் பிடித்த கதை 'தூது'. கதையைப் புரிந்து கொள்வதற்காகத் தமிழாக்கம் செய்து வைத்துக் கொண்டேன். நண்பர் ராஜமார்த்தாண்டன் அதை ' தினமணி கதிர்' இதழில் வெளியிட்டார். சிவசங்கரியின் இலக்கியம் மூலம் இந்தியாவை இணைக்கும் திட்டத்தின் கீழ் கதிரில் வெளியான சேதுவின் நேர்காணலுக்கு உபரி மதிப்பாக அதே பத்திரிகையின் அடுத்த இதழில் கதையின் மொழிபெயர்ப்பும் வெளிவந்தது. அவருடைய 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - (முதல் தொகுப்பு: தென்னிந்திய மொழிகள்' நூலிலும் இடம் பெற்றுள்ளது. மாதவிக் குட்டி. சக்கரியா, பி.முரளி, உண்ணி ஆர். ஆகியவர்களின் கதைகள் 'உயிர்மை'யில் வெளிவந்தவை. கீதா ஹிரண்யன், கே.ஆர்.மீரா, சி.எஸ்.சந்திரிகா, தாமஸ் ஜோசப், இந்து மேனோன் கதைகள் 'தோழி' இணைய இதழில் பதிவேற்றம் செய்யப்பட்டன. திவாகர் ரங்கநாதனின் தூண்டுதல்தான் அதற்கு மூலகாரணம். மொழிபெயர்ப்புக்கு பத்துக் கதாசிரியர்களும் மனமுவந்து அனுமதியளித்தார்கள். அமரர்களாகிவிட்ட பஷீரிடமும் கீதாவிடமும் அனுமதி பெற முடியவில்லை. அவர்கள் சார்பாக குடும்பத்தினர் இசைவு தெரிவித்தார்கள். இந்தப் பன்னிரண்டு கதைகளையும் வாசித்துக் கருத்துகளையும் திருத்தங்களையும் சொன்னவர் கே.என்.செந்தில். உதிரியாக கிடந்த இந்தக் கதைகளைத் திரட்டித் தொகுக்கும் யோசனையைத் தெரிவித்ததுடன் அதை நூலாகவும் வெளியிடுகிறார் மனுஷ்யபுத்திரன். இவர்கள் அனைவரின் ஆதரவுக்கும் மனதை ஒற்றைச் சொல்லில் மொழிபெயர்த்து முன்வைக்கிறேன் -' நன்றி'.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக