திங்கள், 30 ஜனவரி, 2012

வெ ல் லி ங் ட ன்
மாட்சிமை பொருந்திய பிரித்தானிய மன்னரின் விசுவாச ஊழியனான தன்னுடைய வலதுகை ஆள்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் நடுவிலிருந்துதான் மலைப்பிரதேசத்தின் சரித்திரம் தொடங்குகிறது என்பதை ஜான் சல்லிவன் கொஞ்சம் கர்வத்துடனும் அதைவிட அதிகமான அடக்கத்து டனும் நினைத்துப் பார்த்தார். மலையில் வீசும் காற்றின் ஈரத்தில் தன்னுடைய வியர்வைப் பிசுபிசுப்பும் நிரந்தரமாகக் கலந்திருக்கும். கிழக்கிந்தியக் கம்பெனியின் நூற்றுக்கணக்கான குமாஸ்தாக்களில் ஒருவனாக மதராஸ் பட்டணத்தில் சலிப்பான நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தபோதோ செங்கல்பட் கலெக்டராகக் கொளுத்தும் வெயிலில் அல்லாடிக்கொண்டிருந்த போதோ தனது வாழ்க்கை அந்த மலைகளில் காத்திருப்பதை சல்லிவன் அறிந்திருக்கவில்லை. எல்லாம் கர்த்தரின் கிருபை.

கிழக்கிந்தியக் கம்பெனியார் ஒப்பந்தம் போட்டு திப்பு சுல்தானிடமிருந்து மலைப்பிரதேசத்தைச் சொந்தமாக்கிக் கொண்டது அதிகாரச் செருக்கை ஸ்தாபித்துக் கொள்ளத்தானே தவிர வசிப்பதற்காக அல்லவென்று சல்லிவன் நினைத்தார். கோயம்புத்தூர் ஜில்லா கலெக்டர் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு அதுதான் உண்மை என்று நம்பவும் செய்தார். இல்லை யென்றால் கப்பலை விரட்டி கண்காணாத சீமைகளுக்குப் படையெடுத்து அங்கே யெல்லாம் கால்களை ஊன்றிய வெள்ளைக்காரர்கள் இந்த வனத்தின் கன்னி நிலங்களை விட்டு வைத்திருக்க மாட்டார்கள் என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தார்.அதுவும் இரண்டு நூற்றாண்டுக் காலம் யாரும் தீண்டிக் களங்கப் படாமல் கிடக்குமா இந்த மலைமடிப்புகள்? மலைப் பிரதேசத்தை வசப்படுத்தி யிருந்தும் ஆள்வதற்குக் கணிசமான ஜனத்திரள் இல்லை என்பது காரணமாக இருக்கலாம். மலைக்காட்டின் சந்ததிகளான பூர்வகுடிகளையும் அவர்களின் தெய்வங்களையும் பிரித்தானிய மாமன்னரின் பிரஜைகளாக நினைக்க விருப்பமில்லாம லிருக்கலாம்.

ஏனெனில் அவர்கள் வென்று சொந்தமாக்கிய இடங்களெல்லாம் பெரும்பாலும் சமவெளிகள். அங்கிருந்தவர்களில் சாதாரண ஜனங்கள் அப்பாவிகளாகவும் அவர்களை ஆட்சி செய்தவர்கள் சுயநலமிகளாகவும் இருந்தனர். சுயநலம் முற்றி அடுத்தவனின் ராஜாங்கத்திலும் சம்பத்திலும் ஸ்திரீகள் மேலும் மோகங்கொண்டு ஓயாமல் சண்டை போடுபவர்களாக இருந்தனர்.என்றோ கலைந்துபோன பிரதாபங்களைப் பேசிக் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை மயக்குவது கம்பெனியாருக்கு சிரமமான செயலாக இருக்க வில்லை. கையை ஓங்கி உரக்கக் கத்தினால் காலடியில் விழுபவர்களாக இருந்தவர்களை மிரட்டினார்கள்.சபல சித்தர்களாக இருந்தவர்களை ஆசை காட்டி அடிமைகளாக்கினார்கள். அடிமைகள் தங்களுக்குரிய பூமியையும் காற்றையும் தாவரங்களையும் கம்பெனியாரின் காலடியில் சமர்ப்பித்து கைகட்டி வாய்பொத்தி நடந்தார்கள்.

மாநிறமுள்ள குட்டையான ஜனங்களின் கூட்டம் தலைகுனிந்து நிற்கும் சித்திரம் மனதுக்குள் வரும்போதெல்லாம் சல்லிவன் கேட்டுக்கொள்வார் - ''என்ன மாதிரியான ஜனங்கள் இவர்கள்? முட்டாள்களா? வெகுளிகளா?'' இரண்டுமாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் கம்பெனியாரின் உடைமைகளை மாட்சிமை தங்கிய மன்னரின் சாம்ராஜ்ஜியம் எடுத்துக் கொண்டபோது எங்களை எப்படி பண்டமாற்றுச் செய்யப் போயிற்று என்று முனகக்கூடத் தெரியவில்லையே இந்தக் கூட்டத்துக்கு.

இவ்வளவு யோசிக்கிற நானே கேட்டதில்லையே. கம்பெனிக் குமாஸ்தாவான என்னை ஏன் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அங்கத்தினன் ஆக்கினீர்கள்? மதராஸ் பட்டணத்திலிருந்த என்னை எதற்காக கோயம்புத்தூர் ஜில்லாவுக்கு வீசி யெறிந்தீர்கள்? எந்த எதிர்ப்பும் காட்டாமல்தானே நானும் இசைந்திருக்கிறேன். நானும் அடிமைதான். ஜான் சல்லிவன் எம்.சி.எஸ். ஜான் சல்லிவன் மதராஸ் சிவில் சர்வீஸ். ஜில்லா கலெக்டர் என்ற அதிகாரத்துக்கு ஆசைப்பட்ட அடிமை. அதனால்தானே இப்படி வசதியாக உட்கார்ந்து யோசிக்க முடிகிறது. இந்த யோசனைகளே கூட அடிமைத்தனம் தருகிற சௌகரியம். உண்மையில் இப்படி யோசிப்பது ராஜத் துரோகம். உதடுகள் இந்த வாசகத்தை உருவாக்கும் போது சல்லிவனின் வெளிர்சிவப்பு முகத்துக்குள் சிரிப்பின் அலை புரண்டது. 'பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் நீடூ வாழ்க. மாட்சிமை தங்கிய மன்னரைக் கர்த்தர் காப்பாற்றுவாராக' என்று உச்சரித்தார்.உச்சரிப்பில் கேலி தொனிக்கிறதா என்றும் சந்தேகப்பட்டார்.

ஜனங்களை அடக்கிய பிறகும் ஆட்சியை ஸ்தாபித்த பிறகும் இந்த மலைப் பிரதேசத்தில் வெள்ளைக்காரர்கள் கால்வைக்காதது ஏனென்பது சல்லிவனுக்குப் பிடிபடாமலேயே இருந்தது. மனிதர்களை ஜெயிப்பதுபோல இயற்கையை ஜெயிப்பது அவ்வளவு எளிதில்லையா? அதன் வசீகரம் புதிரானதா? விளங்கிக் கொள்ள நெருங்கும்போதெல்லாம் புதிர் இன்னும் அடர்த்தி யாகிறதா? இந்த மலையும் வனங்களும் அப்படியான மர்மங்களை ஒளித்து வைத்திருக் கின்றனவா? அந்த அகங்காரம்தான் மலைமடிப்புகளுக்குள் நுழைந்து பார்க்க முடியாமல் பயமுறுத்துகிறதா? இயற்கை அச்சமூட்டக் கூடியதுதானா? கருணையின் சொரூபமில்லையா? ஒருவேளை கருணையே அச்சமூட்டக் கூடியதுதானோ ,கடவுளைபோல. ஆனாலும் கடவுளை நெருங்கத்தானே விரும்புகிறோம். அப்படிக் கூட யாரும் இந்த மலைகளிலும் வனாந்தரங்க ளிலும் பிரவேசிக்கவில்லையா? அங்கே வேறு என்ன இருக்கும்? மனிதர்கள் இருப்பார்களா? ஜீவராசிகள் இருக்குமா?

இருக்கத்தான் வேண்டும். இல்லையென்றால் அதைத் தன்னுடைய சாம்ராஜ்ஜியக் கனவின் பாகமாகத் திப்பு நினைத்திருப்பானா? அந்த மலைகளைப் பற்றித் தெரிய வந்திருக்குமா? மனிதர்களைத் தவிர யாருக்கு விவரங்கள் தேவைப்படுகின்றன?

சல்லிவனின் மனதுக்குள் கேள்விகள் ஒன்றின் பின் ஒன்றாகப் புரண்டு கொண்டேயிருந்தன.

திப்பு சுல்தானிடமிருந்து பிரதேசத்தின் ஆட்சியதிகாரத்தை கம்பெனியார் கைச்சாத்துப்போட்டு வாங்கியது சும்மாவா? ஆட்சியோ அதிகாரமோ செய்ய வேண்டாம். ஒரு மர்மத்தைத் தெரிந்து கொள்ளும் ஆசை கூடவா இல்லாமற் போகும். அங்கே ஜன சஞ்சாரமிருக்கிறது என்பது நிச்சயம். அவர்களுக்கு இயற்கை கனிவு காட்டுகிறது என்பது நிச்சயம். அதை எப்படித் தெரிந்து கொள்வது? யாராவது போய்ப் பார்க்காமல் தெரியுமா? யார் போகக்கூடும்?யாரை அனுப்ப முடியும்?
@
சல்லிவன் இப்படி யோசித்துக்கொண்டிருந்த நாட்களிலும் மலைப் பிராந்தியத்தில் ஆள் போக்குவரத்து நடந்து கொண்டுதான் இருந்தது. ஜில்லா ரெவினியூ ரிக்கார்டுகளில் அதற்கு ஆதாரமிருந்தது. ஜில்லாவில் விளைகிற புகையிலையைக் கள்ளத்தனமாகச் சிலர் மலைகளுக்குள் கொண்டு போகிறார்கள் என்று பிரஸ்தாபிக்கப்பட்டிருப்பது கலெக்டரின் ஞாபகத்துக்கு வந்தது. புகையிலை அரசாங்கத்தின் குத்தகைப் பண்டம். அதை மலபார் ஜில்லாவுக்குக் கடத்துகிற கூட்டத்தைப் பற்றி ரிக்கார்டுகளில் எழுதி யிருந்தது.சல்லிவனின் ஜில்லாவில் புகையிலை சாகுபடி நடக்கும் வளமான ஊர்கள் இரண்டோ மூன்றோ இருந்தன. எல்லாம் வாயில் நுழையாத பெயர்கள். தாராபுரம், ஒட்டன்சத்திரம். பல்லடம். சோறு தின்னுகிற நாக்கு களுக்குத்தான் இந்தப் பெயர்களை தப்பில்லாமல் உச்சரிக்க முடியும் என்ற எண்ணத்தில் ஒருமுறை சொல்லிப் பார்த்தார் . பார்லியை விழுங்குகிற நாக்கில் ஒட்டாமல் விழுந்து சிதறின அந்த ஊர்கள்.

ஜில்லா மேப்பில் குறித்திருக்கும் அந்த ஊர்களின் இடத்தை கவனத்துக்குக் கொண்டுவந்தார் கலெக்டர். மேஜைமேல் நனைந்த கடற்பஞ்சு வைத்திருந்த கண்ணாடிக் கிண்ணத்தில் காப்பியிங் பென்சிலின் முனையைச் செருகி ஈரப்படுத்திக்கொண்டார். ராஜமகுடம் அச்சிட்டிருந்த பழுப்புக் காகிதத்தை எடுத்துப் பென்சிலால் மானசீகமாகப் புள்ளிவைத்து அந்த ஊர்களைக் குறித்தார். டாராபுர்ம், வொட்டான்சட்ரம், பல்லாடம். மூன்று ஊர்களின் பெயர்களும் ஊதா நிறத்தில் எழுந்தன. பென்சிலால் மூன்று ஊர்களையும் இணைத்துக் கோடுபோட்டார். கிட்டத்தட்ட முக்கோணம். 'மை லார்ட்' என்ற ஆச்சரியப் பெருமூச்சு அவரிடமிருந்து வந்தது. 'டுபாக்கோ டைரயாங்கிள்'.

'இந்த முக்கோணத்திலிருந்துதான் புகையிலைச் சிப்பங்கள் ஜில்லாவுக்கு வருகின்றன. இங்கிருந்து மதராசுக்கு. அங்கேயிருந்து இங்கிலாந்துக்கு. சாம்ராஜ்ஜியம் கிழித்திருக்கும் கோட்டை யாரோ குறுக்கே வெட்டுகிறார்கள். வரிகொடாமல் புகையிலையை உள்ளுக் குள்ளேயே விநியோகம் செய்கிறார்கள். நமக்கு இது சட்ட விரோதம். ஆனால் அவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பாக இருக்கும். ஒருவேளை அரசாங்கத்தை எதிர்க்கிற வழியாக இருக்கும். புகையிலைக் கடத்தலைப் பற்றி கவர்னருக்கு தெரிவிப்பது கலெக்டரின் கடமை. அதைச் செய்வேன். பிரிட்டிஷ் போலீஸ்காரர்களும் ரெவின்யூ அதிகாரிகளும் அதைப் பார்த்துக் கொள்ளட்டும். என்னுடைய அக்கறையெல்லாம் கடத்தல்காரர்கள் எப்படி மலையேறுகிறார்கள்? பாதையே இல்லாத சரிவுகளிலும் செங்குத்தான பாறைகளிலும் அடர்ந்த கானகத்திலும் எப்படி ஊடுருவிப் போகிறார்கள்? மலைப்பாறைகளில் வசிக்கும் எலிகளைப் போல அவர்களுக்கும் மலைக்காட்டின் பூகோளப் படம் ஜென்ம சித்தியாக இருக்குமோ? இல்லை, இயற்கையே கனிந்து அவர்களுக்கு வழிகொடுப்பதாக இருக்குமா? ஆதி படுகர்களுக்கு வழிகொடுக்க நதி இளகியதுபோல மலைகளும் வனங்களும் கடத்தல்காரர்களுக்கு விலகிக் கொடுக்கிறதா?'

சம சீதோஷ்ணமான கோயம்புத்தூர் காற்றில் தாவரக் குளுமை அதிகமாக இருப்பதுபோலக் கலெக்டருக்குத் தோன்றியது. இந்தச் சீண்டல்தான் என்னை அமைதியில்லாதவனாக்குகிறது. கலெக்டர் ஜான் சல்லிவனைவிட தோட்டக் காரன் ஜான் சல்லிவன் தொந்தரவுக் குள்ளாகிறான். கலெக்டருக்கு இது ரெவின்யூ பூமிப் பிரச்சனை. நீதி நியாயப் பிரச்சனை. இயற்கைவாதியான சல்லிவனுக்கு இது ரத்தத்துக்குள்ளே துடிக்கும் வேட்கை.ஓயாமல் என்னைச் சீண்டித் தவிக்கவைக்கும் அந்தப் போக்கிரி மலைத்தொடர்களை அடையும் பாதைகள் எங்கிருக்கின்றன? எங்கேயிருந்து தொடங்குகின்றன?

கோயம்புத்தூரிலிருந்து மேட்டுப்பாளையம்வரை கப்பிபோட்ட மண்சாலைகள் இருக்கின்றன. கலெக்டர் ஜான் சல்லிவன் உத்தியோக நிமித்தம் பலமுறை அந்தச் சாலைகளில் யாத்திரை செய்துமிருக்கிறார். அடிவாரத்திலிருந்து பார்த்தால் பூமியின் விளிம்புபோல நிற்கும் மலைத் தொடர்கள். பகல் பொழுதுகளில் வெயிலின் காங்கையால் நீல நிறமாகத் தெரியும். இரவில் காட்டுத் தீயின் வெளிச்சத்தில் நடமாட்டங்கள் தெரியும். மேட்டுப்பாளையத் திலிருந்து மலையேறுவதற்கான பாதைகள் இல்லை என்று ரெவின்யூ ரிக்கார்டுகள் குறிப்பிடுகின்றன. கொஞ்சம் தொலைவிலிருக்கும் சிறுமுகையி லிருந்துசோலைகளுக்குள்ளாக எங்கோ ஒரு வழி மலையேறுகிறது. அதுதான் கடத்தல்காரர்களை இட்டுச் செல்லும் பாதையாக இருக்க வேண்டும். அது எங்கே முடிகிறது என்பது ரிக்கார்டுகளிலும் இல்லை. எங்காவது முடியும்.முடிகிற இடத்தில் ஜன சஞ்சாரம் இருக்கும். அந்த வழியில் புகையிலைக் கடத்தல்காரர்களைத் தவிர யாராவது பயணம் செய்திருக் கிறார்களா?

ஜில்லா கலெக்டராக நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து தன்னை உலுக்கும் இந்தக் கேள்விகள் இன்று ஏன் இவ்வளவு தீவிரமாகத் துளைக்கின்றன? சல்லிவன் யோசித்தார் . எல்லாம் விசேஷ தூதன் மூலம் கவர்னர் அனுப்பிய கடிதத்தின் விளைவு.ஜில்லா அபிவிருத்திக்காக என்னென்ன புதிய திட்டங்களை வகுக்க போகிறாய் என்று கேட்கும் கவர்னரின் கடிதத்திலிருந்து தொடங்கிய உளைச்சல்.

பாளையக்காரர்களும் குட்டி ஜமீன்தார்களும் செலுத்துகிற வரிப்பணம் ஜில்லாவை நிர்வாகம் பண்ணக் காணாது.' உபரி வருவாய்க்கு என்ன செய்யப்போகிறாய்?'என்று கவர்னர் கேட்டிருக்கிறார். விவசாயத்தையும் நெசவையும் கைத்தொழிலையும் செய்து நிம்மதியாகப் பிழைத்துக் கொண்டிருக்கும் அப்பாவி ஜனங்கள் மீது இனியும் வரி சுமத்த முடியாது. அவர்கள் முதுகு ஒடிந்து போகும். வேண்டுமென்றால் நெல்லையும் கரும்பையும் இதர தானியங் களையும் பயிர் செய்பவர்களை வேறு நாணயப் பயிர்களை சாகுபடி செய்ய நிர்ப்பந்திக்கலாம். ஆனால் அதற்கு அவர்கள் சம்மதிப்பார்களா? தவிர முட்டைக்கோஸும் டர்னிப்பும் உருளைக் கிழங்கும் காரட்டும் முள்ளங்கியும் பீட் ரூட்டும் இந்த மண்ணில் முளைக்குமா? வெயிலில் காய்ந்தாலும் ஈரப்பசை விடாத மண்வாகு ஜில்லாவிலேயே கிடையாது. இங்கிருக்கும் பூமியெல்லாம் ஆற்றின் ஓட்டத்தில் உயிர் பெறுபவை. ஆறு இல்லாத இடங்களில் கிணறுகள். அந்த ஜீவரகசியம் இந்தக் கறுப்பு மனிதர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஏனென்றால் அவர்களுடைய ஜீவனம் மண்ணிலிருக்கிறது. அதை மாற்றமுடியாது.

மாற்ற முடியாதா அல்லது எனக்கு மாற்ற விருப்பமில்லையா? பிரிட்டிஷ் கலெக்டர் சல்லிவனுக்கு விருப்பமிருந்தாலும் இயற்கையின் ஆராதகனான சல்லிவனுக்கு விருப்ப மில்லைதான். 'நான் யாருக்கு ஊழியன்? பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் மன்னருக்கா?பரமண்டலத்திலிருக்கிற பிதாவுக்கா? 'குழப்பமாக இருந்தது சல்லிவனுக்கு.

புதிய தொழில்களைத் தொடங்கினால் தைரியமாகப் புதிய வரிகளைப் போடலாம். ஜில்லா முழுக்க அதிகமான பருத்தி சாகுபடிக்கான திட்டங்களை ரேகைப்படுத்தி காகிதங்களை கவர்னர் அவர்களின் சமூகத்துக்குச் சமர்ப் பித்திருக்கிறார். சாத்தியமானால் ஜின்னிங் மில்களும் ஸ்பின்னிங் மில்களும் கட்டலாம். மான்செஸ்டரின் சீதோஷ்ணமிருக்கிற பூமி. அந்தச் சீதோஷ்ணத்துக்குக் காரணமும் மலைத்தொடர்கள். முடியுமானால் மலைகளிலிருந்து துள்ளி இறங்கியோடும் நதிகளை அணைபோட்டுத் தடுக்கலாம். பாசனமும் நடக்கும். மன்னர்மனது வைத்தால் மின்சார உற்பத்தியும் நடக்கும். கவர்னர் வேண்டியபடி உபரி வருவாயைக் காட்டலாம். காகிதங்கள் இங்கிலாந்துக்குப் போய் பார்லிமெண்டில் விவாதிக்கப்பட்டு காரியமாகத் தொடங்க எவ்வளவு அவகாசம் தேவைப்படுமோ? உடனடியாக வருவாயைப் பெருக்க ஒரு யோசனை யிருக்கிறது. அதை அரசாங்கம் அமல்படுத்துமா என்பது சந்தேகம். மாமன்னரின் சிரசு பதித்த பவுண்டு நாணயத்தாள்களை இரட்டிப்பாக அச்சடிக்கலாம்.

@

இரவு முழுவதும் சல்லிவன் தஸ்தாவேஜுகளைப் புரட்டிக்கொண்டிருந்தார். இலக்கங்களும் எழுத்துக்களும் விவரணக் குறிப்புகளும் அலுப்பூட்டின. சர்வே நம்பர்கள், ரெவின்யூ வசூல் கணக்குகள், நிலுவையிலிருக்கும் பாக்கிகள், ஜில்லாவுக்கு வந்துபோன ராஜாங்கப் பிரதிநிதிகள் பற்றிய விவரங்கள், அவர்களுக்காக ஜில்லா நிர்வாகம் செய்த செலவினங்கள் எல்லாம் எண்களாகவும் தகவல்களாகவும் காகிதங்களில் இறைந்து கிடந்தன. கண்கள் அயரவிருந்த நொடியில் பார்வையில் பதிந்த தகவல் சல்லிவனை வியப்புக்குள்ளாக்கியது.

ஆறு வருடங்களுக்கு முன்னால் இரண்டுபேர் சல்லிவனின் கற்பனையில் இருக்கும் பாதை வழியாக மலையேறிருக்கிறார்கள். இதே ஜில்லாவின் பழைய கலெக்டர் காரோ மதராசி லிருக்கும் ரெவின்யூ போர்டுக்குச் சிபாரிசு செய்து சர்வேயர் கேய்ஸையும் அப்ரண்டிஸ் மக்மஹோனையும் அனுப்பிவைத்திருக்கிறார்.

'இத்தனை நாட்கள் இதே தஸ்தாவேஜுகளைப் எத்தனைமுறை புரட்டி யிருப்போம். இந்தத் தகவல் ஏன் கண்ணில் படவில்லை. இன்று மட்டும் எதற்காகப் பார்வையில் படவேண்டும்? என் பிரபுவே, உமக்குத் தோத்திரம். இந்த மலைப்பிராந்தியத்தின் சரித்திரத்தை சிருஷ்டிக்க என்னை நியமித் திருக்கிறீரே அந்தக் கருணைக்காக. மாட்சிமை தங்கிய மன்னரே ,தங்களுக்கு என் வந்தனம். என்னுடைய ஜீவிதத்தின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்கும் சந்தர்ப்பத்தை தங்களுடைய செங்கோல் கொடுத்திருக்கிறது. கர்த்தருடைய நாணயத்தையும் சீசருடைய நாணயத்தையும் ஒன்றாகச் செலவுசெய்யும் பாக்கியம் என்னையல்லாமல் யாருக்கு வாய்த்தி ருக்கிறது? '.

பரவசத்தில் ஜான் சல்லிவனின் சருமத்துக்குள்ளே ரத்தம் கொப்பளித்துப் பரவியது. அரைத்தூக்கத்தில் பங்கா இழுத்துக்கொண்டிருந்த சிப்பாய் கலெக்டர் துரை கூப்பிடுவதைக் கேட்டு மலங்க விழித்தான். அவனுடைய கோலத்தைப் பார்த்துக் கலெக்டருக்குச் சிரிப்பு வந்தது.பாவம், ஓய்ந்து விட்டான். சைகை காட்டி அவனைப் போகச் சொன்னார். நடந்து போகும்போது அவனுடைய நிழல் வழக்கத்தை விட நீண்டு அலைவதைக் கவனித்தார். கூரையிலிருந்து தொங்கி எரியும் கண்ணாடி விளக்கின் சுடர் அணையப்போவதுபோல குதித்துக் கொண்டிருந்தது. ஆசனத்திலிருந்து எழுந்து அறைக்குள்ளேயே நடந்தார். மரப்பலகைகள் பாவிய தரையில் அவருடைய காலடிகள் தாளமெழுப்பின. நடந்து வாசல் கதவு வரை போனார். வெளியே உட்கார்ந்திருந்த பாராக்காரன் பதறி எழுந்து நின்றான். அவனிடம் விளக்குக்கு எண்ணெய் எடுத்துவரும்படி பணித்தார். நகரத் தொடங்கிய அவனை நிறுத்தி குசினியில் ஆளிருந்தால் ஒரு கோப்பைத் தேநீரும் தயாரித்து வாங்கிவரச் சொன்னார். இரண்டையும் ஒரே இடத்திருந்து கொண்டு வரலாம். பாராக்காரன் அகன்றதும் மறுபடியும் அறைக்குள் நடந்து ஆசனத்தில் உட்கார்ந்தார். கூரைவிளக்கு மினுக்கிமினுக்கி பிரகாசிப்பதைச் சட்டை செய்யாமல் தஸ்தாவேஜில் கடைசியாகப் பார்த்துக்கொண்டிருந்த பக்கத்தில் பார்வையைப் படர விட்டார்.

மலைப்பிரயாணத்துக்கு முந்தின நாட்கள் வரைக்கும் கேய்ஸும் மக்மஹோனும் சர்வே நடத்துவதற்காக மதுரா ஜில்லாவில் இருந்திருக் கிறார்கள்.அதற்கு முன்பு இருவரும் கோயம்புத்தூர் ஜில்லாவில்தான் உத்தியோகம் பார்த்திருக்கிறார்கள். சாமர்த்தியசாலிகள். காரியத்தை பிசகில்லாமல் செய்து முடிப்பதில் வல்லவர்கள். அதனால் இரண்டு ஊழியர்களின் சேவையை மலைபிரதேச சர்வேக்காகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று கலெக்டர் காரோ குறிப்பெழுதியிருக்கிறார். இரண்டு ஊழியர்களும் மறுபடியும் கோயம்புத் தூருக்கு வரவழைக்கப் பட்டார்கள். பிரயாணம் என்றைக்குத் தொடங்கியதென்று பதியப்ப டவில்லை. தேவநாய்க்கன் கோட்டையிலிருந்து புறப்பட்டிருக்கிறார்கள். அப்படியானால் சிறுமுகை வழியாகத்தான் புறப்பட்டிருப்பார்கள். யூகித்தார் சல்லிவன். திப்புவின் மேல்கோட்டைப் படை அந்தப் பாதையைத்தான் போக்குவரத்துக்கு உபயோகித்திருந்தது என்பதும் மனதில் ஓடியது.

கலெக்டருக்கு முகமன் செய்து கேய்ஸ் ஜில்லா நிர்வாகத்துக்கு எழுதிய முதல் கடிதம் டேநாட்டிலிருந்து எழுதப்பட்டிருந்தது. கோத்தகிரிக்குக் கிழக்கே டேநாடு. அடுத்த கடிதம் மேல்கோட்டையிலிருந்து. கல்லட்டிக்கு அப்பால் சீகுர் மலைப்பாதையின் தொடக்கம். சல்லிவனின் தேகத்தில் பரபரப்பு ஏறியது. இன்னும் நாலே முக்கால் மைல் ஏறினால் வோட்டகமண்ட். சபாஷ், பரவாயில்லையே பையன்கள். சாதித்து விட்டார்களே.

ஆனால் அடுத்துப் பதிந்திருந்த குறிப்புகளில் கேய்ஸும் சகாவும் வழிமாறிப் போயிருந்தார்கள். கல்லட்டியிலிருந்து கிளைபிரியும் பாதைகளில் பெரியதை விட்டுவிட்டு குறுக்குப் பாதையில் முன்னேறியிருக்கிறார்கள். 'முட்டாள்களே, பெரிய பாதையை விட்டு அதில் ஏன் போனீர்கள்? அது தண்டாநாட்டுக்குப் போகிற பாதையாயிற்றே? அங்கிருந்து வோட்டகமண்டுக்குப் போவது முடியாதே'.

முடியவில்லை தான். கேய்ஸின் பிரயாண அறிக்கைக் குறிப்புகள் அத்தோடு முடிந்திருந்தன. அவர்கள் ஜில்லா தலைநகரத்துக்குத் திரும்பிய தினத்தைக் குறித்து அதன் அருகில் கையொப்ப மிட்டு தஸ்தாவேஜை மூடியிருந்தார் காரோ.

ஜான் சல்லிவனுக்கு வியர்த்தது. ஏமாற்றம் முகத்தில் அறைந்தது. மனது கோபத்திலும் பச்சாத்தாபத்திலும் பொங்கியது. எத்தனை பொன்னான சந்தர்ப்பம். கன்னிப் பெண்ணின் சரீரத்தில் ஒற்றை விரலால் அழுத்தமாக வருடிய அடையாளம் மறைவதற்குள் பார்த்துவிடத் துடிக்கும் பரவச விநாடிகளையல்லவா பாழாக்கி இருக்கிறார்கள். முட்டாள்கள்.

காகிதத்தில் மிஞ்சியிருந்த குறிப்புகள் மங்குவதுபோலத் தோன்றியது. கண்களைக் கசக்கிப் பார்த்தார். ஒரு வரி மட்டும் தெளிவாகப்பட்டது. ''இந்த மலைக் காடுகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் இராக் காலங்களில் கண்ணாடிப் பாளமாகிறது. அவ்வளவு குளிர்.ஆனாலும் ஜனங்கள் வாசம் செய்கிறார்கள்''

பாராக்காரன் வாசலில் வந்து நின்றான். சல்லிவன் நிமிர்ந்து பார்த்துத் தலையசைப்பில் உள்ளே வரச்சொன்னார். அவனுடைய வலதுகையில் சீனப் பீங்கான் கோப்பை இருந்தது. கோப்பையின் விளிம்பிலிருந்து தேநீரின் ஆவி நெளிந்து உயருவது விநோதமாக இருந்தது. எண்ணெய்ப் பாத்திரத்தையும் எண்ணெயை முகந்து ஊற்றும் துரட்டிக் கிண்ணத்தையும் இடது கையில் ஒன்றுசேர்த்துப் பிடித்திருந்தான். தேநீர்க் கோப்பையை மேஜைமேல் வைத்து விட்டு விளக்குக்கு எண்ணெய்விட நகர்ந்தான். எண்ணெய் ஊற்றியதும் சுடர் பிரகாசித்து வெளிச்சம் விரிந்தது. பாராக்காரன் அவரை நோக்கித் தலை தாழ்த்தினான். தேநீர்க் கோப்பையை வாயருகே கொண்டு போவதற்கிடையில் தலையசைத்து சமிக்ஞை செய்தார் சல்லிவன். கதவைத் தாண்டிப் போகிறவனை பின்தொடர்ந்தது அவர் பார்வை. பாராக்காரன் மறைந்ததும் அவரது பார்வை கோப்பைக்குள் குவிந்தது.பொன்பழுப்பு நிறத்திரவத்திலிருந்து மெல்லிய ஆவி யெழுவதை ரசித்துக் கொண்டே முதல் மிடற்றுத் தேநீரை உறிஞ்சினார். புத்துணர்வு நாவில் ஊறி தேகத்தில் பரவியது.

''தேயிலைச் சாற்றில் உற்சாக ரசத்தை இயற்கை ஒளித்து வைத்திருக்கிறது, ஜான்'' என்று பிரெஞ்சுக்கார சிநேகிதர் லூயி சொல்லுவது சல்லிவனுக்கு நினைவு வந்தது. உண்மைதான். இந்த கசப்புச் சாற்றில் மனதை இளக்குகிற ஏதோ ஒன்று இருக்கிறது. பழகியவனை அடிமைப் படுத்தும் வசிய ரசாயனம். மாத ஆரம்பத்தில் கலெக்டர் பங்களாவின் குசினிக்கு எந்தெந்தச் சரக்கு வந்திருக்கிறது என்று அக்கறைகாட்டாத அவர் அசாமிலிருந்தும் டார்ஜீலிங் கிலிருந்தும் தருவிக்கப்படும் தேயிலை வந்திருக்கிறதா என்பதை மட்டும் தவறாமல் பரிசோதிப்பார். எல்லாம் இந்தச் சிறு போதைக்காக. எல்லாம் ஜீன் பாப்டிஸ்ட் லூயி அறிமுகப்படுத்திய ருசி.

சல்லிவனின் மண்டைக்குள் சட்டென்று மின்னல் ஓடியது. தேநீர்க் கோப்பையை மேஜைமேல் வைத்தார். எழுதுபலகையில் காகிதங்களை ஒழுங்குபடுத்தினார். சொருகு பேனாவை எடுத்து மைக்கூட்டில் முக்கினார். எழுத ஆரம்பித்தார்.

இரண்டு கடிதங்கள். முதல் கடிதம் மதராஸ் கவர்னர் சர். தாமஸ் மன்றோவுக்கு.

'இந்த மலைப்பகுதியைப் பணம் விளையும் பிரதேசமாக மாறச் செய்யும் திட்டத்தை மாட்சிமை தங்கிய கவர்னர் அவர்கள் சமூகத்தின் பார்வைக்கு கோயம்புத்தூர் ஜில்லா கலெக்டர் ஜான் சல்லிவன் எம்.சி.எஸ். சமர்ப்பிக்கிறார்.

மலைச்சரிவுகளில் ஜீவிதம் நடத்தும் படகர்களும் தோடர்களும் மலபாரிலி ருந்து வந்து குடியேறியிருக்கும் மலையாளத்தார்களும் மைசூரிலிருந்து வந்த கன்னடிகர்களும் சமவெளி யிலிருந்து புகையிலை கடத்தல் நிமித்தம் மலையேறி ஸ்திர ஜீவிதமாக்கியிருக்கும் கவுண்டர்களும் பறையர்களும் செய்யும் பாரம்பரிய விவசாயத்தை ஐரோப்பிய முறைக்கு மாற்றலாம். ஐரோப்பிய பூகண்டத்தில் பயிராகும் தாவரங்கள் சகலமும் இந்த மலைத்தொடரில் முளைக்கும்.

கவர்னர் அவர்களே, இங்குள்ள சீதோஷ்ணத்தை சுவிட்சர்லாந்து வெப்பமானியை வைத்து அளந்தால் இரண்டும் துல்லியமானதாக இருக்கக் காண்பீர்கள். இங்கிருக்கும் விவசாயிகள் ஏற்கனவே ஐரோப்பிய உணவுப் பயிர்களை சில இடங்களில் விளைவித்திருக்கிறார்கள். மலபாரிலிருந்து கள்ளிக்கோட்டை மார்க்கமாக வந்த சுவிசேஷகர்கள் மேற்படிப் பயிர்களை விளைவித்துப் பார்த்திருப்பதாக ரிக்கார்டுகளில் பதிவு செய்யப்பட்டிருப்பது கவர்னர் அவர்களுக்குத் தெரிந்த விஷயமே.

எல்லையற்று நீண்டிருக்கும் மலைத்தொடரின் விரிந்த மடிகள் இன்னும் கன்னி நிலங்களாவே காத்துக்கிடக்கின்றன. அவற்றில் நமது வித்துகள் செழித்து முளைவிடும். நமது மலர்கள் விரியும். மலையின் சரிவுகளில் தேயிலை வளர்வதற்கான சாத்தியங்களைக் காண்கிறேன். இவையெல்லாம் திட்டங்கள். ஆனால் எதிர்காலத்தின் வசமிருக்கின்றன. இன்றிருப்பவை கானகத்தின் மர்மம். அதை அறிய நாம் அந்த மர்மத்துக்குள் பிரவேசிப்பதைத் தவிர்த்து வேறு மார்க்கங்கள் இல்லை என்பதைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டுவருவது கடமையாகிறது. நமது அதிருஷ்டத்தை அடையும் வழிகளை உருவாக்குவதே இப்போது என் முன்னால் உள்ள பணி.

மலையில் பாதைகளை உண்டுபண்ணும் முஸ்தீபுக்காக ஜில்லா நிர்வாகத்தின் சேவையிலுள்ள இருவரை நியமிக்கிறேன். அசிஸ்டெண்ட் கலெக்டர்கள் மிஸ்டர். ஜே.சி.விஷ், மிஸ்டர். என்.டபிள்யூ. கிண்டர்ஸ்லே இருவரும் இந்தப் பணிநிமித்தம் மலைப்பயணம் மேற்கொள்ள அனுமதியளிக்குமாறு கவர்னர் அவர்களைக் கோருகிறேன். திட்டமிட்டபடி இவர்களின் சர்வே பூர்த்தியாகுமானால் நமது கஜானாவில் அதிருஷ்ட தேவதை வாசம் செய்யத் தயங்கமாட்டாள்.

மேற்படித் திட்டத்துக்கு கவர்னர் அவர்களின் அனுமதியையும் பொருளாதார சகாயத்தையும் கோருகிறேன். கர்த்தர் மாட்சிமை தங்கிய மன்னரையும் வந்தனத்துக்குரிய தங்களையும் ஆசீர்வதிப்பாராக.

தங்கள் விசுவாசமுள்ள
ஜான் சல்லிவன் எம்.சி.எஸ்.'

எழுதிய கடிதத்தை ஒருமுறை வாசித்துப் பார்த்தார் சல்லிவன். எல்லாம் கச்சிதம். வேகமாக எழுதியதில் கலங்கிப் போயிருந்த ஒன்றிரண்டு வார்த்தைகளில் எழுத்தைச் சரிசெய்தார்.மறுபடியும் வாசித்தார். எழுதிய காகிதத்தைத் தனியாக எடுத்தார். கையொப்பத்துக்குக் கீழே உத்தியோக முத்திரை பதித்து அதன் மேல் ஊதினார். நாசூக்காக மடித்தார். பழுப்பு நிற உறையொன்றை எடுத்துக் கடிதத்தை அதற்குள் வைத்தார்.'காலையில் அனுப்பச் செய்யவேண்டும்' என்று சொல்லிக்கொண்டே உறையை ஒதுக்கி வைத்தார். இன்னொரு காகிதத்தை எழுதுபலகையில் ஒழுங்காகப் பொருத்தினார்.
' மெசியே. ஜீன் பாப்டிஸ்ட் லூயி....'

இரண்டாவது கடிதத்தை எழுதத் தொடங்கினார் சல்லிவன்.


@

நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் முதல் அத்தியாயம்

8 கருத்துகள்:

 1. என் வாழ்த்துகளும்.
  எப்போ வருது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு நன்றி ஜெகதீசன். 2012 ஜூனில் வெளிவரலாம்.

   நீக்கு
 2. எனது ஆர்வத்துடன் வாழ்த்துகளும்

  பதிலளிநீக்கு
 3. ஏனைய பாளையக்காரகள் எல்லோரும் பணிந்த பின் கடைசியாக நாவலுக்கு சுகுமாரனும் பணிந்தார்.. வாழ்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. அதில் நமக்கெல்லாம் லாபம் தானே இசை அவர்களே?

  பதிலளிநீக்கு