வியாழன், 12 ஜனவரி, 2012

ஏழு கவிதை நூல்கள் - காலச்சுவடு வெளியீடு

நண்பர்கள் எல்லாருக்கும் வணக்கம். இன்று இங்கே காலச்சுவடு பதிப்பகம் ஏழு கவிதை நூல்களை வெளியிடுகிறது. இது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. குறிப்பிடத்தகுந்த நிகழ்வு. நானும் கவிதை எழுதுகிறவன் என்பதால் இந்த நிகழ்ச்சி எனக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் கொடுக்கிறது. ஏனென்றால் இதன் மூலம் கவிதை மீது கவனம் செலுத்தப் படுகிறது. கவிதைக்கான இடம் உறுதி செய்யப்படுகிறது. பொதுவாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு 'இப்போதெல்லாம் யாரும் கவிதைகளை வாசிப்பதில்லை' என்பது. பதிப்பாளர்கள் சொல்லும் குறை 'கவிதை நூல்கள் விற்பனையே ஆவதில்லை' என்பது. இந்தக் குற்றச் சாட்டிலும் குறை கூறலிலும் உண்மை இருக்கலாம்.

இருந்தாலும் கவிதை நூல்கள் தொடர்ந்து வெளியாகின்றன. காலச்சுவடு பதிப்பகம் இந்த நிகழ்ச்சியில் வெளியிடும் ஏழு நூல்கள் உட்பட மொத்தம் பதினோரு நூல்களை இந்தப் பருவத்தில் வெளியிடுகிறது. இது ஒரு பதிப்பகத்தின் கணக்கு. இதே போல பிற பதிப்பகங்களும் குறைந்த பட்சம் ஐந்து அதிக பட்சம் பத்து என்ற எண்ணிக்கையில் கவிதை நூல்களை வெளியிடுகின்றன. கவிதை நூல்களை வெளியிடுவது தவிர்க்க முடியாதது என்றோ அல்லது அப்படி வெளியிடுவது அந்தப் பதிப்பகத்தை மதிப்புக் குரியதாக்குகிறது என்றோ நாம் எடுத்துக் கொள்ளலாம். காரணம் எதுவானாலும் இவ்வளவு கவிதைப் புத்தகங்கள் வெளியிடப்படுவது கவிதைக்கான இடம் பத்திரமாக இருக்கிறது என்பதை, கவிதை வாசிப்ப வர்கள் என்ற இனம் அழிந்து விடவில்லை என்பதைக் காட்டுகிறது.

இங்கே ஏழு கவிஞர்களின் தொகுப்புகள் வெளியிடப்படுகின்றன. இளங்கோ கிருஷ்ணனின் 'பட்சியன் சரிதம்', பூமா ஈஸ்வரமூர்த்தியின் 'நீள்தினம்' இசையின் 'சிவாஜி கணேசனின் முத்தங்கள்', குவளைக்கண்ணனின் 'கண்ணுக்குத் தெரியாததன் காதலன்', தேவேந்திர பூபதியின் 'ஆகவே நானும்' , லாவண்யா சுந்தரராஜனின் 'இரவைப் பருகும் பறவை' மண்குதிரையின் ' புதிய அறையின் சித்திரம்' - ஆக ஏழு தொகுப்புகள். இந்த தொகுப்புகளையும் முதல் வாசகனாக ஒருமுறை வாசித்திருக்கிறேன். அவை ஒவ்வொன்றைப் பற்றியும் நண்பர்கள் பேச இருக்கிறார்கள். எனவே ஒட்டு மொத்தமாகப் பார்த்தபோது இந்தத் தொகுப்புகள் ஏற்படுத்திய சில எண்ணங்களை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். இவை இந்தக் கவிதைகளைப் பற்றிய என்னுடைய பார்வையோ விமர்சனமோ அல்ல. வாசிப்பின்போது தென்பட்ட சில சுவாரசியமான செய்திகள், ஒப்பிட்டுப் பார்த்தபோது கண்டுபிடித்த சில விஷயங்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழு தொகுப்புகளில் ஒன்று மட்டுமே பெண் எழுதியது. 'இரவைப் பருகும் பறவை'யை எழுதிய லாவண்யா சுந்தரராஜன்.ஆறு பேருக்கு இது அவர்களுடைய முதல் தொகுப்பல்ல. லாவண்யா, இளங்கோ கிருஷ்ணன் ஆகியவர்களுக்கு இது இரண்டாவது தொகுப்பு. இசைக்கும் குவளைக் கண்ணனுக்கும் மூன்றாவது தொகுப்பு. தேவேந்திர பூபதியின் ஐந்தாவதும் பூமா ஈஸ்வர மூர்த்தியின் ஆறாவதும் தொகுப்புகள் இங்கே வெளியிடப்படுபவை. இந்த அறிமுகங்களுக்கு இடையில் புது முகம் மண்குதிரை. 'புதிய அறையின் சித்திரம்' அவருடைய முதல் தொகுப்பு.

இவ்வளவு கவிஞர்கள் தொடர்ந்து எழுத முடிகிறது என்றால் தமிழ்க் கவிதை முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தக் கவிஞர்கள் அந்த ஆரோக்கியத்தை மேலும் கூட்டுவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. அதற்காக இந்த என் சக கவிஞர்கள் எல்லாருக்கும் வாழ்த்துகள். இந்தப் பட்டியலில் கடைக் குட்டியான மண்குதிரைக்கு பிரத்தியேக வாழ்த்துகள்.

நூலில் உள்ள ஆசிரியர் பற்றிய குறிப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கவிஞர்களின் வயதை ஒட்டி ஒரு வரிசை உருவானது. பூமா ஈஸ்வரமூர்த்தி, குவளைக்கண்ணன், லாவண்யா சுந்தரராஜன், இசை, இளங்கோ கிருஷ்ணன், மண்குதிரை என்று வயது வாரியான வரிசை. இதில் வயதைச் சொல்லாத ஒரு கவிஞரும் இருக்கிறார். ஆக அவரே இந்தப் பட்டியலில் மிகவும் இளைஞர் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். நண்பர் தேவேந்திர பூபதிக்கு அவரது நித்திய யௌவனத்துக்குப் பாராட்டுகள்.

கவிதை வாசித்தால் போதாதா, கவிஞரின் வயதைத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டுமா என்று நீங்கள் கேட்டால் இல்லை என்றுதான் நானும் சொல்வேன். ஆனால் தெரிந்து வைத்திருப்பது ஒரு தூண்டுதலுக்கு உதவும் என்றும் சொல்வேன். என் வயது ஐம்பத்து நான்கு. இந்த மூப்பின் சலுகையில் சொல்லலாம் என்று தோன்றுகிறது. முப்பத்து ஒன்பது வயது கூட நிறைவடையாமல் மறைந்துபோன ஒரு ’சின்னப் பைய’னிடமிருந்துதான் நம்முடைய நவ கவிதை ஆரம்பமாகிறது. அவன் எழுதியது போன்ற நாலு வரியை எழுதி விட முடியாதா என்ற உந்துதல்தான் நமது கவிதை உலகத்தை சுழலச் செய்கிறது. அவன் மகா கவியா இல்லையா என்று இன்றும் விவாதம் நடக்கிறது. அது ஓர் இலக்கு. அதை நோக்கித்தான் தமிழ்க் கவிதை முன்னேறுகிறது. நாற்பது வயசுக்குள் ஒருவன் நிகழ்த்திய சாதனைக்கு எட்டவாவது நம்மால் ஐம்பது அறுபது எழுபது வயதிலாவது நெருங்க முடியுமா என்பதுதான் இந்த மொழியில் எழுதும் யாருக்கும் கனவாக இருக்கும். இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

இதைச் சொல்லும்போது அண்மையில் வாசித்த ஒரு புத்தகத்தின் பக்கங்கள் நினைவுக்கு வருகின்றன. பழைய புத்தகம்தான். 'மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சித்திரம்' என்ற தலைப்பில் தி.முத்துக் கிருஷ்ணன் எழுதியது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 1986 இல் வெளியிட்ட புத்தகம். பாரதியின் வாழ்க்கையை அவருடைய கவிதைகள் மூலமாகவும் கட்டுரைகள் மூலமாகவும் உருவாக்கும் முயற்சி இந்தப் புத்தகம். இதைப் பலமுறைப் புரட்டிப் பார்த்திருக்கிறேன். சிலமுறை வாசித்திருக்கிறேன். இப்போது வாசித்தபோது ஒரு நிகழ்ச்சி பற்றிய குறிப்பு மனதில் பதிந்தது. புதுச்சேரி வாழ்க்கைக் காலத்தில் பாரதியின் இருப்பில் 1916 மார்ச் மாதம் 29 ஆம் தேதி நடந்த உல்லாச சபையில் கவிதை பற்றிய விவாதம் அது.

குண்டுராவ் என்பவர் சொல்கிறார்.

'பெல்ஜியம் தேசத்திலே எமில் வெர்ஹேரன் என்ற கவி இருக்கிறார். அவருடைய கவிதை புது வழியாக இருக்கிறது என்று பத்திரிகையிலே வாசித்தேன். எப்படி என்றால் இதுவரை உலகத்துக் கவிதைகள் நமது நவீன நகரங்களிலுள்ள யந்திர ஆலைகள் மோட்டார் வண்டிகள் முதலிய வஸ்துக்களைக் கவிதையில் சேர்ப்பதில்லை.இந்த வஸ்துக்களில் அழகில்லையாதலால் கவிதையிலே சேர்க்கத் தகாதென நினைத்துக் கொண்டிருந்தார்கள். காற்று, வானம் நீர் மலை பெண் செல்வம் மது தெய்வம் தவம் குழந்தைகள் முதலிய அழகுடைய வஸ்துக்களையே கவிகள் வர்ணிப்பது வழக்கம். எமில் வெர்ஹேரனுடைய கொள்கை யாதென்றால் வலிமையே அழகு. ஒரு பொருளின் வெளி உருவத்தைப் பார்த்து அது அழகா இல்லையா என்று தீர்மானம் செய்யலாகாது. யந்திரங்களிலே வலிமை நிகழ்கின்றன. ஆதலால் அவை அழகுடையன. அவற்றைக் கவி புகழ்தல் தகும்.

இதற்குப் பாரதியின் பதில்.

வலிமை ஓர் அழகு. அழகு ஓர் வலிமை. யந்திர ஆலை.நீராவி வண்டி, நீராவிக் கப்பல், வானத்தேர், பெரிய பீரங்கி எல்லாம் அழகுதான். உயர்ந்த கவிகள் வலிமையுடைய பொருள்களை அவ்வக் காலத்தில் வழங்கிய வரையில் வர்ணித்தே இருக்கிறார்கள். இதிலே புதுமையொன்றுமில்லை. வலிமைக் கருவிகள் சில இப்போது புதுமையாகத் தோன்றுகின்றன. இவற்றை ஐரோப்பியக் கவிகள் விலக்கி வைத்தது பிழை. ஆனால் பழைய தெய்வத்தையும் இயற்கையையும் மறந்து யந்திரங்களைப் பாடத் தொடங்கினால் கவிதை செத்துப் போய்விடும்.

இந்தப் பகுதியைப் படித்தபோது இரண்டு நிலையில் வியப்பு ஏற்பட்டது. இன்றைக்கு நமக்கு இருக்கும் அறிவுத் தேடலுக்குரிய வசதிகள் எதுவும் இல்லாமலிருந்த காலத்தில் ஒரு தமிழ்க் கவிஞன் அயல்மொழிக் கவிதை பற்றிக் கொண்டிருந்த கருத்து முதலாவது ஆச்சரியம். தகவல் தொடர்புகள் எளிதானவையாக இருக்கும் இந்தக் காலம் வரைக்கும் கூட எமில் வெர்ஹேரன் என்ற கவிஞரைப் பற்றி என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை என்று வெட்கம் வந்தது.வெட்கத்திலிருந்து விடுபடுவதற்காக வெர்ஹேர்னைப் பற்றிய தகவல்களைத் தேடத் தொடங்கினேன்.

பாரதி பெல்ஜியத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்ட வெர்ஹேரன் பிரெஞ்சு மொழியில் கவிதைகள் எழுதியவர். சிம்பலிசத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர்.கிட்டத் தட்ட பாரதியின் சமகாலத்தவர். 1911இல் நோபெல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் படவிருந்து வாய்ப்பை இழந்தவர். புதுச்சேரி போன்ற உலகத்தின் இந்தக் கோடியில் இருந்த ஒரு கவிஞன் எட்டாத் தொலைவில் இருந்த இன்னொரு கவிஞனை அடையாளம் கண்டு கொண்டது வியப்பை அதிகமாக்கியது. பாரதியின் மழை, காற்று ஆகிய கவிதைகள் வெர்ஹேரனின் பாதிப்பில் எழுதப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எனக்குத் தோன்றியது. வெர்ஹேரனின் கவிதை இயல்பை இந்த உதாரணத்தை வைத்துச் சொல்லலாம். 'ஒரு பழைய ஆலை மெல்லிய வெளிறிய பாசியுடன் குன்றின் மேல் தெரிகிறது ஒரு திடீர் மருபோல'என்பது வெர்ஹேரனின் கவிதையில் ஒரு வரி. ஒரு தகவலுக்காக மட்டுமே இது.

பாரதியின் வாதத்தையொட்டி யோசித்தபோது இன்றைய கவிதைக்கும் அது பொருந்துவதாகவே பட்டது. இது இரண்டாவது நிலையில் ஏற்பட்ட வியப்பு. கவிதையின் உள் தளத்தில் எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது என்ற இரண்டு தன்மைகள் இருப்பதாக யோசிக்க முடிந்தது. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தன்மை கவிதையை நிர்ணயிக்கிறது. நேற்றைய கவிதையின் பிரச்சனை எதைச் சொல்வது என்பதாக இருந்திருக்கலாம். இயற்கையை,
வாழ்வின் சிக்கலை, அறம் சார்ந்த தடுமாற்றங்களைச் சொல்வதாக இருந்திருக்கலாம். அவற்றையெல்லாம் சொல்லியாகி விட்ட பின்னர் என்ன செய்வது? உதாரணத்துக்குப் பெண்களின் நிலையைக் கவிதையில் சொல்லலாம். சரி,சொல்லியாகி விட்டது. தொடர்ந்து அதையே சொல்லிக் கொண்டிருப்பதா கவிதையின் பணி? இந்தக் கேள்விக்கு விடை காண்பதுதான் இன்றைய கவிதையின் சிக்கல். எதைச் சொல்வது என்பதல்ல; எப்படிச் சொல்வது என்பதுதான். பெண்களின் நிலையை எப்படிச் சொல்வது என்பதில்தான் பல குரல்களும், பல நிறங்களும் பல கோணங்களும் உருவாகின்றன. இந்தத் தன்மைதான் கவிதையை என்றும் புத்துணர்வோடு வைத்திருக்கிறது. கவிதை எப்போதும் புதுமையை நாடி நிற்கும் இலக்கியத் துறை. புதிய மொழியை, புதிய உணர்வை, புதிய நடையைப் பிடிவாதமாகக் கோரும் துறை. முன்னோடிகளின் நடையிலோ அவர்கள் மொழியிலோ அவர்கள் உணர்வு சார்ந்தோ இன்றுள்ள கவிஞன் எழுத முடியாது. இது இயற்கையின் கட்டாயமும் கூட. எந்தச் செடியிலாவது நீங்கள் பழைய பூவைப் பார்த்திருக்கிறீர்களா?

எப்படிச் சொல்வது என்பதில் மேலும் சில சிக்கல்கள் ஒளிந்திருக்கின்றன. கவிதைக்கான ஒரு விஷயத்தை யோசிக்கும் போதே அதில் உங்கள் அனுபவம் என்ன? உங்கள் பார்வை என்ன? உங்கள் சார்பு என்ன? எவ்வளவு தூரம் உண்மையாக அந்த விஷயத்தைக் கவிதையாக்கப் போகிறீர்கள்? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகளைக் கடந்துதான் கவிதையாக்கம் நிகழ்கிறது. அதனால்தான் கவிதை இன்னும் கவிதையாக இருக்கிறது; அதன் இடம் பத்திரமாக இருக்கிறது. எப்படிச் சொல்வது என்பது முக்கியமானதாக இருப்பதனால்தான் இத்தனை கவிதைகள் எழுதப்படுகின்றன. இத்தனை கவிஞர்கள் எழுதுகிறார்கள். ஓர் உதாரணம் சொல்லலாம். ஈழப் பிரச்சனையை எழுத ஒரு கவிஞர் போதும். அதை எப்படிச் சொல்வது என்ற கேள்வி முளைக்கிறபோதுதான் இத்தனை கவிதைகள். இந்தப் புதுமைதான் மொழியை வளப்படுத்துகிறது.வாழ்க்கையை விளக்க முயற்சி செய்கிறது என்று நினைக்கிறேன்.

இதுவரைக்கும் பேசியதன் அடிப்படையில் இங்கே வெளியிடப்படும் நூல்களில் கவிதை எப்படிச் சொல்லப் பட்டிருக்கிறது என்று பார்க்க விரும்புகிறேன். இது இந்தக் கவிதைகள் பற்றிய திட்டவட்டமான கருத்து அல்ல. இவற்றை அறிமுகப்படுத்துகிற வாசகங்கள் மட்டுமே.

பூமா ஈஸ்வர மூர்த்தி அன்றாட நிகழ்வுகளில் மறைந்திருக்கும் எளிய ரகசியங்களைப் பிரபஞ்ச அளவில் விரித்துப் பார்க்கிறார்; 'சிறு துளி நீர் எறும்புக்குப் பெருமழையாகிறது' அவரிடம். குவளைக் கண்ணன், எளிய செயல்களில் அவை கொண்டிருப்பதைத் தாண்டிய பொருளைத் தேடுகிறார், 'நகரத்தில் மனிதர்களோடு மனிதர்களாக தெய்வங்களை வசிக்கச் செய்ய முடிகிறது' அவரால். லாவண்யா சுந்தரராஜன் எல்லாச் சொற்க¨ளையும் அன்பின் சுகந்த திரவியத்தால் துடைத்துத் தூய்மை செய்து முன்வைக்கிறார்; அவரது கவிதையில் 'பிரியங்களைப் பொழிவிக்கும் மழை பாறையென்றும் மண்ணென்றும் பார்ப்பதில்லை'. இளங்கோ கிருஷ்ணன் நேற்றைய வரலாற்றை இன்றைய சம்பவமாகவும் இன்றைய செயலை என்றைக்குமான தொன்மமாகவும் மாற்றுகிறார். கிரகோர் சம்சா என்ற விற்பனைப் பிரதி நிதியைக் கரப்பான் பூச்சியாக மாற்றினார் காஃப்கா. கரப்பான் பூச்சியை கிரகோர் சம்சாவாக அல்லல்பட வைக்கிறது இளங்கோ கிருஷ்ணன் கவிதை. கை நழுவிப் போன நற்கணங்களை மீண்டும் எதார்த்தமாக்க விரும்புகிறார் தேவேந்திர பூபதி. அவருடைய வயதைக் காலத்தின் குறுக்காகக் கடந்து போகும் உன்னில் அல்லது பெண்ணில் அளவிட்டுக் கொள்கிறார். கவிதையை ஆபத்தான கேளிக்கையாக மாற்றுகிறார் இசை. ஊழியை வாலில் கட்டி இழுத்து வரும் குரங்கு அவருடைய கவிதை. இடம் காலம் உணர்வு எல்லாவற்றையும் இயற்கையின் சாயலில் முன்வைக்கிறார் மண்குதிரை. அவர் கவிதைக்குள் புயல் அதிர்ச்சியிலிருந்து மீளாத மரங்கள் முணு முணுத்துக் கொண்டிருக்கின்றன' பறவைகள் கம்பளி அணிந்து பறக்கின்றன.

இந்த ஏழு தொகுப்புகளிலுமாக மொத்தம் 356 கவிதைகள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் ஒருமுறை வாசித்திருக்கிறேன். சில கவிதைகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாசித்திருக்கிறேன். அதிலிருந்து ஒரு உண்மை புலப்பட்டது. இந்த ஏழு கவிஞர்களும் இலக்காகக் கொண்டிருப்பது ஒரே வாசகனைத்தான். அவனிடம்தான் இவர்கள் சொல்லுவது வார்த்தையாகப் பொருள்பட்டு அவனுடைய புரிந்து கொள்ளலில் மீண்டும் கவிதையாக அனுபவமாகிறது. அந்த வாசகனுக்குப் பல்வேறு தோற்றங்கள். பல்வேறு இருப்புகள். இத்தனை கவிதைகளுக்கிடையில் அந்த வாசகன் கையை உயர்த்தி தானிருப்பதைக் காட்டுகிறான்.

4 கருத்துகள்:

 1. கவிஞர் மண்குதிரைக்கு இது முதல் தொகுப்பு என்பதால் அவருக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் மென்மையான குரலில் நேரில் கேட்ட பொழுதே ஒரு போதையாக இருந்தது இவ்வாசிப்பு. இப்போது மீண்டும் வாசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. பகிர்வுக்கு நன்றி,
  கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
  நண்பர் மண்குதிரைக்கு சிறப்பு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. உங்கள் கேள்விகளை இந்த நூல்களின் மீது வைத்து உங்களுக்கு கிடைத்த விடைகளை ஒரு அறிமுகமாக எங்களுக்கு தந்ததற்கு நன்றி..

  பதிலளிநீக்கு