திங்கள், 16 ஜனவரி, 2012

வாழும் கணங்கள்

திருவனந்தபுரம் பத்திரிகையாளர் சங்கத்தின் இதழியல் பட்டய வகுப்புக்கான தேர்வுத்தாளைத் தயாரிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மனோரமா நாளிதழின் ஊழியரும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளருமான நண்பர் ஜெயச்சந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கினேன். அச்சு, புகைப்படம், தொலைக்காட்சி ஆகிய எல்லா ஊடகங்களுக்குமான வினாத்தாளை உருவாக்க வேண்டும். ஜெயச்சந்திரன் புகைப்படக் கலைஞர். மனோரமாவின் தலைமைப் புகைப்படக்காரர். சுந்தர ராமசாமி சிறு வயதில் வாழ்ந்த கோட்டயம் வீட்டை - குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலின் களம் - படமெடுத்தவர். எனவே போட்டோகிராபி பற்றி ஏதாவது கேள்வி இருந்தால் நல்லது என்பது அவர் விருப்பம். சம்மந்தமே இல்லாத துறை பற்றி என்ன கேள்வி எழுதுவது என்று தயக்கமாக இருந்தது. கூடவே புகைப்பட இதழியலைப் பாடமாக எடுத்துக்கொண்ட மாணவர்கள் யாருமில்லை என்பதும் யோசனையை நடைமுறைப்படுத்தத் தடையாக இருந்தது. யோசனையைச் சொன்னவரே கேள்வியையும் உருவாக்கித் தந்தார்.

'உலகின் முதல் பெண் புகைப்படப் பத்திரிகையாளர் யார்? இந்தியாவின் முதல் பெண் புகைப்படப் பத்திரிகையாளர் யார்?'இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் தேர்வெழுதிய மாணவர்களில் யாருக்கும் தெரியவில்லை. பத்து மாதங்கள் பாடம் படித்த அவர்களுக்கே தெரியாதபோது இரண்டு மூன்று நாட்கள் பாடத்திட்டத்தைப் புரட்டிப் பார்த்த எனக்கு எப்படித் தெரியும்? ' இல்லை, நான் புகைப்படக் கலை பற்றி இந்த மாணவ்ர்களுக்கு நடத்திய முதல் வகுப்பிலேயே அந்தத் தகவலைச் சொல்லியிருக்கிறேன்' என்றார் ஜெயச்சந்திரன். மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதற்காகத் தயாரித்து வாசித்த கட்டுரையின் படியையும் காண்பித்தார்.

மார்கரெட் வைட் போர்க்கே என்ற அமெரிக்கப் பெண்தான் உலகின் முதலாவது புகைப்படப் பத்திரிகையாளர் என்று பரவலாக நம்பப்படுகிறது.ஃபார்ச்சூன் பத்திரிகையில் பணியாற்றியவர். தகப்பனார் அச்சுத்துறையில் பொறியியல் வடிவமைப்பாளராக இருந்தவர். தாயார் பதிப்புத் துறையில் ஈடுபட்டிருந்தார்.மார்கரெட் பயின்றது ஊர்வனவற்றையும் நீந்துவனவற்றையும் பற்றிய உயிரியல் பாடங்களை. ஆனால் விருப்பம் புகைப்படத்துறையில். அந்தக் கலை மீது இருந்த ஆர்வம் காரணமாக வெவ்வேறு கல்வி நிலையங்களில் பயின்றார். கல்லூரி மலருக்காக அவர் எடுத்த புகைப்படங்கள் அவரை புகைப்படக்காரராக அறிமுகப்படுத்தின. அதற்கிடையில் திருமணமும் ஓராண்டுக்குப் பின்னர் மணவிலக்கும் நிறைவேறியது. அந்தக் காயத்தை ஆற்றிக்கொள்வதற்காக பத்திரிகைப் புகைப்படக்காரராக ஆனார். பொதுவாகப் பெண்கள் காலூன்றாத துறை. ஆனால் மார்கரெட் அதை அறைகூவலாக எடுத்துக்கொண்டார். உலகப்போர் மூண்டிருந்த அந்தத் தருணத்தில் புகைப்படக் கலைஞராக சோவியத் யூனியனுக்குப் போனார்.போர்க்களத்தில் அனுமதிக்கப்பட்ட சொற்பமான புகைப்படக்காரர்களில் அவரும் ஒருவர். சோவியத் யூனியனுக்குள் அனுமதிக்கப்பட்ட முதல் ஐரோப்பியப் புகைப்படக்காரரும் அவர்தான்.

தொடர்ந்து போரில் ஈடுபட்டிருந்த எல்லா நாடுகளிலும் மார்கரெட் காமிராவுடன் அலைந்தார்.அந்த அலைச்சல் அவரை லைஃப் பத்திரிகையின் புகைப்படக் கலைஞராக்கியது. போர்க்களக் காட்சிகள், நாஜி வதைமுகாமில் எடுத்த படங்கள் இன்றும் பெரும் ஆவனங்களாகக் கருதப்படுகின்றன. போர்க்கள வன்முறையைப் படம் பிடிப்பதை விட அதனால் நேர்ந்த பாதிப்புகளையே தன்னுடைய காமிராவில் சுருட்டினார். உறவிழந்த பெண்கள், தவித்து அழும் சிறார்கள், சாவதற்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள், வதை முகாம்கள், யுத்த நாசங்கள், அழிவின் மிச்சங்கள் இவற்றை அவர் படமாக்கிய விதம் முன்னுதாரணமாக அமைந்தது. இந்தப் படங்களின் தொகுப்பை இரண்டு நூல்களாகவும் வெளியிட்டார். படங்களுக்கான குறிப்புகளை அவரது இரண்டாவது கணவரும் எழுத்தாளருமான எர்ஸ்கின் கால்டுவெல் எழுதினார். லைஃப் பத்திரிகையின் தலைமைப் புகைப்படக்காரராகப் பிரசித்தி பெற்றார் மார்கரெட். அந்தப் பிரசித்தியும் மார்கரெட்டின் சாகசக் குணமும் கால்டுவெல்லை அச்சுறுத்தியிருக்க வேண்டும். இருவரும் மணவிலக்குச் செய்துகொண்டார்கள். இரண்டாம் உலகப் போர் இறுதிக் கட்டத்தை எட்டிய காலப் பகுதியில் மார்கரெட் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். 1950 வாக்கில் பார்க்கின்சன் நோய் அவரைப் பீடித்தது.அதைப் பொருட்படுத்தாமல் ஆப்பிரிக்காவில் பணியாற்றச் சென்றார்.கொரியப் போர்முனைக்குப் போய் படங்களை எடுத்தார். 1971 ஆம் ஆண்டு தன்னுடைய அறுபத்தியேழாம் வயதில் மறைந்தார்.
இந்தத் தகவல்களை நண்பரின் கட்டுரையில் வாசித்தேன். கூடவே அவர் மார்கரெட் வைட்டின் தன்வரலாற்று நூலையும் கொடுத்தார் - 'என்னுடைய உருவப்படம்' (Portrait of Myself). அதிலிருந்த ஓர் உருவப்படம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. லைஃப் இதழில் வெளியான படம். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மிகப் பிரபலமான அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்திருக்கிறது. ஆனால் அதைப் படமாக்கியவர் யாரென்று கவனித்ததில்லை. அந்தப் புகழ் பெற்ற படத்தில் மகாத்மா காந்தி தியான மனோநிலையுடன் ராட்டை அருகில் அமர்ந்து சிரத்தையாக பத்திரிகை வாசிதுக் கொண்டிருக்கிறார் அந்த அபூர்வ கணத்தை நிரந்தமாக்கியவர் மார்கரெட் வைட்.

ஜெயச்சந்திரன் காண்பித்த இன்னொரு புகைப்படமும் அபூர்வமானது. லண்டனிலிருந்து இந்தியாவுக்கு வரும் பிரிட்டிஷ் விமானத்தின் உட்பகுதி. உதடுகளில் பற்றவைக்கப்படாத சிகரெட்டுடன் உட்கார்ந்திருக்கும் ஜவஹர்லால் நேரு பிரிட்டிஷ் ஹை கமிஷனரான சைமனின் மனைவி உதட்டில் பொருத்தியிருக்கும் சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டிருக்கிறார்.

'இது இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் எடுத்த படம்' என்று ஜெயச்சந்திரன் விளக்கம் சொன்னார். கண நேர அசிரத்தையில் அந்தப் பெயர் நினைவில் தங்காமல் நழுவிப் போனது. கடந்துபோன மகளிர் தினத்தன்று அந்தப் படம் நினைவுக்கு வந்தது. ஒரு வித்தியாசமான கட்டுரைக்கான சங்கதி என்று ஆயத்தமானேன்.பெயரை மறந்த காரணத்தால் யோசனையைச் செயல்படுத்த முடியாமலாயிற்று. ஜெயச்சந்திரனையே தொலைபேசியில் அழைத்து விசாரித்தேன். 'நேருவின் படத்தை எடுத்த அம்மணியின் பெயர் என்ன?' மறுநொடியே பதில் கிடைத்தது. 'ஹோமாய் வியாரவாலா - இந்தியாவின் முதல் பெண் புகைப்படப் பத்திரிகையாளர். அவரைப் பற்றிய புத்தகத்தைக் கூட உங்களிடம் காண்பித் திருக்கிறேன்.கேமரா கிரானிக்கிள்ஸ் என்று பெயர்'. ஜெயச்சந்திரன் சொடுக்கிய பதில் ஞாபகத்தின் இருட்டில் வெளிச்சத்தைப் பரப்பியது. பெயர் தெரியவந்ததும் அகழ்வாராய்ச்சியில் இறங்கினேன்.

புகைப்படக்கலை இந்தியாவுக்கு அறிமுகமானது 1840இல். இந்தியாவின் சர்வேயர் ஜெனரலாக இருந்த மெக்கென்சி நில அளவை நடத்திய இடங்களையும் புராதன இந்தியக்கலைச் செல்வங்க¨ளையும் பதிவு செய்வதற்கு ஓவியத்தையே நம்பியிருந்தார். அஜந்தா குகைச் சிற்பங்களையும் புடைப்போவியங்களையும் கிட்டத்தட்ட அதே அளவில்ஓவியங்களாகவே தீட்டச் செய்திருந்தார். 1850வரை இதுதான் நடைமுறை. மெட்ராஸ் மிலிட்டரி சர்வீசில் பணியாற்றிய கேப்டன் ராபர்ட் கில் ராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு முழுநேர ஓவியராக பாலங்களையும் சாலைகளையும் புராதனச் சின்னங்களையும் தீட்டித் தள்ளிக்கொண்டிருந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசால் அவருக்குஒரு காமிரா வழங்கப்பட்டது. அதை வைத்து அவர் எடுத்த முதல் படங்கள் எல்லோரா குகை ஓவியங்கள். ஆக அவர்தான் இந்தியாவின் முதல் புகைப்படக்காரர்.

சொற்ப காலத்துக்குள் கேமராக்கள் பரவலாயின. பிரிட்டிஷ்காரர்களும் மேல்தட்டு இந்தியர்களும் காமிராக்களுடன் திரிய ஆரம்பித்தார்கள். மேல்தட்டுப் பெண்களும் கேமராக்களுடன் உலாவினார்கள். அந்த வரிசையில் ஒருவர்தான் குஜராத்தி பார்சி வகுப்பைச் சேர்ந்த பெண்ணான ஹோமாய். தகப்பனார் பார்சி, குஜராத்தி நாடக நடிகர். வறிய குடும்பம்.எனினும் ஹோமாயின் கலை ஆர்வத்தைப் பெற்றோர் ஊக்குவித்தனர். பம்பாய்ப் பல்கலைக்கழகத்திலும் பின்னர் ஜேஜே ஓவியப் பள்ளியிலும் படிக்க அனுப்பினர். கல்லூரிக் காலத்தில் மானெக்ஷா என்ற புகைப்படக் கலைஞரைக் காதலித்து மணந்தார். அவர்தான் ஹோமாய்க்குப் படமெடுக்கக் கற்றுக் கொடுத்தார். முதலில் அவர் எடுத்தவைமிகச் சாதாரணக் காட்சிகள்தாம். பம்பாய்ச் சாலைகளில் ஓடும் வாகனங்கள். கிளப்பில் கூடியிருக்கும் பெண்கள். அவற்றிலேயே ஹோமாய் தன்னையறியாமல் காமிராவை கலைக்கருவியாக்கியிருந்தார். மானெக்ஷாவுக்கு ஹோமாய் தன்னை விட நேர்த்தியான புகைப்படக்காரர் என்று விளங்கியது. பாராட்டுதலுடன் ஒத்துழைத்தார். ஹோமாயின் படங்களைப் பிரிண்ட் போட்டவர் அவர்தான்.

சுதந்திரப் புகைப்படக்காரராக இல்லஸ்டிரேட்டட் வீக்லியில் சேர்ந்தார் ஹோமாய். முக்கிய நிகழ்வுகள் அனைத்திலும் அவருடைய காமிரா இருந்தது. பதவி உறுதி பெற்று டில்லிக்குக் குடிபெயர்ந்தார்கள் தம்பதியர். அது இந்திய வரலாற்றின் சாட்சியத்துக்கான தருணமாக மாறியது. உடுத்திய சேலையை சொருகிக் கொண்டு பெரிய ஸ்டாண்டுகளை ஒரு கையிலும் ஏரிபிளக்ஸ் காமிராவை இன்னொரு கையிலும் சுமந்து உலக வரலாற்றுச் சம்பவங்கள் அனைத்துக்கும் கண் கண்ட சாட்சியானார் ஹோமாய்.இருபதாம்நூற்றாண்டின் அரசியல் பிரபலங்களில் ஹோமாயின் விரல் சொடுக்கில் சிறைப்படாதவர்கள் அநேகமாக யாருமில்லை. மவுண்ட்பாட்டன் பிரபு, மார்ஷல் டிட்டோ, கென்னடி,குருசேவ், சூ யென்லாய். ஆனால் ஹோமாயின் காமிரா அதிகம் கண் சிமிட்டியது நேருவை நோக்கித்தான். நேருவின் தனிப்பட்ட நொடிகள் கூட ஹோமாயின் காமிராவிலிருந்து தப்பியதில்லை. முப்பத்தைந்து ஆண்டுக்காலம் புகைப்படப் பத்திரிகையாளராக புகழ் மிளிர இயங்கினார் ஹோமாய். 1969 ஆம் ஆண்டு மானெக்ஷா காலமானார். அதற்குப் பின்னர் யாருக்கும் தெரியாமல் போனது அவருடைய வாழ்க்கை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரைப் பற்றி எழுதப் பட்ட நூல் ( Camera Chronicles of Homai Vyarawalla by Sabeena Gadihoke ) வெளியீட்டின்போதுதான் அவர் உயிரோடிருப்பதே தெரியவந்தது. அந்த நூலும் கூட அவரது இனமான பார்சி இனத்தவரின் முயற்சியால் வெளியானது.

இன்றைய தேதிக்கு ஹோமாய் வியராவாலாவுக்கு தொண்ணூற்றி ஐந்து வயது. இருக்கிறாரா என்று விசாரிக்க வேண்டும்.

ஹோமாய் புகைப்படப் பத்திரிகையாளர் வேலையை விட்டதற்கு சொல்லப்படும் காரணம் இது. ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் அவரும் அவர் காமிராவும் ஒதுக்கப்பட்டனர்.ஆமாம், பெண்பிள்ளை போட்டோ எடுத்துத்தான் செய்தி வெளியாக வேண்டுமா?' என்ற கேலிக்குரல் அவர் காதில் விழுந்தது. அந்தக் கூட்டத்திலிருந்து காமிராவைத்தூக்கிக்கொண்டு வெளிநடப்புச் செய்தார் ஹோமாய். அதற்குப் பின்பு காமிராவுக்குப் பின்னால் அவரை யாரும் பார்க்கவில்லை. காமிராவுக்கு முன்னாலும்.

பின் குறிப்பு:
ஹோமாய் 15 ஜனவரி 2012 அன்று 98 ஆவது வயதில் வதோதராவிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

இந்தக் கட்டுரை உயிரோசை இணைய இதழில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது.
அண்மையில் வெளியாகியுள்ள ‘வாழிய நிலனே’ என்ற கட்டுரை நூலிலும் இடம் பெற்றிருக்கிறது.

2 கருத்துகள்:

  1. நேற்று தனது 98ம் வயதில் காலமான இந்தியாவின் முதல் புகைப்படக் கலைஞர் ஹோமாய் பற்றிய அறிய தந்ததற்கு நன்றி.

    அவர் ஆன்மா சாந்தியடைய ஆழ்ந்த அஞ்சலி.

    பதிலளிநீக்கு
  2. inru kaalai 'homai'ammayar irantha thagavazai veerkesaril partha pin avar patri ariyum aavazodu irukkaiz thangazudaya ikkatturai manathi aasuvasap-padutthiyathu,nantri.ammayar aathma santhiyadaya en anjzi.

    பதிலளிநீக்கு