செவ்வாய், 24 டிசம்பர், 2013

நாவல் பிறந்த களம்


வெல்லிங்டன் ரயில் நிலையம்


காவல்நிலையம்



நான் வாழ்ந்த வீடு




                                                                               படகர்களின் குல தெய்வமான
                                                                        ஹெத்தெயம்மா கோவில் - ஜகதளா  


படங்கள்: தத்தன் புனலூர்
                                                          

சென்ற காலத்தின் நிலப்படம்



"The memory of the heart eliminates the bad and magnifies the good; thanks to this artifice, we are able to bear the past."                                                                                                                                           Gabriel Garcia  Marquez




 பிறந்த ஒன்பதாம் மாதத்திலிருந்து ஒன்பது, பத்து வயதுவரை நிரந்தரமாகவும் கல்லூரிப் பருவம்வரை அவ்வப்போதும் நான் வசித்த ஊர் நீலகிரி மாவட்டத்திலுள்ள 'வெல்லிங்டன்' .  இந்திய ராணுவத்தின் மிகப் பழைமையான பிரிவும் பாதுகாப்புச் சேவைப் பணியாளர் கல்லூரியும் அமைந்துள்ள இடம் என்பதைத் தவிர இந்தச் சின்ன ஊருக்குக் குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்த  வேறு எந்தப் பெருமையும் இல்லை. சாதாரண மனிதர்களின் எளிய இடம். எனினும் எனது நினைவுகளில் இந்தக் குறுநிலமே துல்லிய மாகப் பதிந்திருக்கிறது. 'உங்கள் சொந்த ஊர் எது ? என்று யாராவது கேட்டால் 'வெல்லிங்டன்'  என்று பதில் சொல்லவே பெரும்பாலும் விரும்பியிருக்கிறேன். அப்படிச் சொன்ன பிறகு அதைப் பற்றிய புவியியல் விவரங்களையும் சொல்லி விளக்கநேரும் சங்கடங்களை எண்ணிச் சொல்லாமல் விட்டிருக்கிறேன். அந்தத் தருணங்களில் 'நான் பிறந்த இடம்தான் என் ஊரா? நான் மிக விரும்பும் நிலந்தானே சொந்த ஊர்? ' என்று மனதுக்குள் சொல்லிக் கொள்வேன். விவரம் தெரிந்த பருவம்வரை, நூற்றுக்கணக்கான முறை அந்த ஊருக்குப் போய் வந்திருக்கிறேன். ஒரு காலப் பகுதியில் அலுவல் நிமித்த மாக நீலகிரி மாவட்டத்தின் எல்லாத் திசைகளிலும் அலைந்து திரிந்திருக்கிறேன்.
சரணாலயத்துக்கு வரும் பறவை போல,  இந்த மலைநகரத்துக்குத் திரும்பத் திரும்ப வருகிறேன்' என்று ஏக்க உணர்வுடன் எழுதவும் செய்திருக்கிறேன். அதன் பின்னர் வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்திருக்கிறேன். அந்தப் புதிய சித்திரங்களின் அடுக்கில் வெல்லிங்டன் நிலப்படம் மனதின் அடித்தட்டுக்குச் சென்று விட்டது. ஆனால், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறு நிகழ்ச்சி, வெல்லிங்டன் இன்னும் எனக்குள் வாழ்கிறது என்ற உண்மையை உணர்த்தியது.

தமிழ் - மலையாளக் கவிஞர்களின் சந்திப்பு நிகழ்ச்சியொன்றைப் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் உதகமண்டலத்திலுள்ள ஸ்ரீநாராயண குரு குலத்தில் 2008 மே மாதம் முதல் வாரம் நடத்தினார். அந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன். முதல் நாள் மாலை, ஊட்டியைச் சுற்றிப் பார்க்க விரும்பிய மலையாளக் கவிஞர்களான கல்பற்றா நாராயணன், பி. ராமன் இருவருக்கும் ஊரைச் சுற்றிக் காட்டும் வேலையை வலிய ஏற்றுக் கொண்டேன். ஊட்டியின் பிரசித்தமான இடங்களை அவர்களுக்குக் காண்பித்து அவற்றை பற்றிய பின்னணி விவரங்களை உற்சாகமாகத் தெரிவித்தேன். இந்த இடங்கள் இன்னும் என் மனதுக்குள் இருக்கின்றன; இவை தொடர்பாக இத்தனைத் தகவல்கள் எனக்குள் மங்காமல் இருக்கின்றன என்பதை அப்போதுதான் கண்டு பிடித்தேன். உதகமண்டலம் உருவான வரலாற்றையும் அந்த நகரத்தை  உருவாக்கிய ஜான் சல்லிவனின் வாழ்க்கை பற்றியும் கவிஞ நண்பர் களிடம் ஆர்வத்துடன் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர்களுக்கு அது எந்த அளவுக்கு சுவாரசியமாக இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் நான் உள்ளுக்குள் சிலிர்ப்புடன் சொன்னேன் என்பதும் அதைக்  கொண்டாடிக் கொள்ளும் விதமாக உதகை கமர்சியல் சாலையில் இருந்த பழங்காலத் தேநீர் விடுதியான ஈரானீஸ் ரெஸ்டாரெண்டில் ஒரே இருப்பில் மூன்று குவளைத் தேநீரைப் பருகிய உற்சாகக் கொந்தளிப்பும் நினைவிலிருந்து விலகவில்லை. அந்த அற்புதப் பொழுதின் ஏதோ நொடியில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த  ஜான் சல்லிவன் எனது நிகழ்காலக் கதாபாத்திரமாக மாறியிருக்க வேண்டும்.

நிகழ்ச்சி முடிந்து திருவனந்தபுரம் திரும்பியதும் நாவலின் முதல் அத்தியாயத்தை எழுதினேன். எழுதத் தொடங்கியபோது இருந்த திட்டத்தின்படி ஜான் சல்லிவன் ஒரு அத்தியாயத்தில் மட்டுமே வரக் கூடிய பாத்திரம்.ஆனால் எண்ணப் போக்கில் அவர் வளர்ந்து  பல அத்தியாயங் களிலும் நடமாகக் கூடும் என்ற யூகம் வலுத்தபோது எழுத்து வேலையைக் கைவிட்டேன். நான் எழுத விரும்புவது சல்லிவனைப் பற்றிய நாவலோ உதகமண்டலத்தைப் பற்றிய ஆவணப்பதிவோ அல்ல. நான் செய்ய விரும்புவது ஒரு பகிர்வை.வெல்லிங்டன் வாழ்க்கை பற்றிய எனது உணர்வுகளை. எனவே நாவல் எழுதும் எண்ணத்தை விட்டேன். நான்கு  மாதங்கள் கடந்தன. இந்த நான்கு மாதக் காலமும் நாவலைப்பற்றிய கனவும் வெல்லிங்டன்பற்றிய ஏக்க உணர்வும் என்னைப் பின் தொடர்ந்தன. மீண்டும் தொடங்குவதற்கு முன்பு சில தீர்மானங்களைச் செய்து கொண்டேன். எந்தத் திட்டமும் இல்லாமல் எழுதிச் செல்வது. நான் கண்டதையும் கேட்டதையும் உணர்ந்தையும் உணராமல் விட்டதையும் இயல்பான போக்கில் பதிவு செய்வது. நானாகக் கதையின் போக்கில் குறுக்கிடுவதில்லை. தானாக உருவாகும் கதையையே முன்வைப்பது. இவை தீர்மானங்கள். இந்தத் தீர்மானங்கள்  தந்த சுதந்திரத்தில்  எழுத்து  தன்னிச்சை யாகவே வளர்ந்தது. சல்லிவனின் கண்டுபிடிப்பும் நீலகிரியில் படகர் குடியேற்றமும்  வெல்லிங்டன் உருவான விதமும்  பின்புலமாக இயல்பாகவே எழும்பின. குறுக்கீடு கூடாது என்ற சுயக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தபோதும் எழுதத் தூண்டிய உள் நோக்கத்தைத் தவிர்க்கவில்லை. அது, நான் வாழ்ந்த வாழ்க்கையை, நான் கண்ட மனிதர்களை மீட்டெடுப்பது என்பதே.

இந்த ஆயுளில்   அடைந்த அனுபவங்களில் மிக அணுக்கமான வாழ்வும் கண்ட மிக மேலான மனிதர்களும் வெல்லிங்டனில் வாய்த்தவையே என்று நம்பினேன். அந்த வாழ்வை மறுபடியும் வாழ்ந்து பார்க்கவும் அந்த மனிதர் களுடன் மீண்டும் உறவு கொள்ளவும் விரும்பினேன். காலம் பின்னகர்த்திய வாழ்வையும் மனிதர்களையும் நடைமுறையில்  திரும்பப் பெற இயலாது. ஆனால் எழுத்தின் மூலம் முடியும். அதற்காக எத்தனித்ததன் விளைவே இந்த நாவல். இதை நான் எழுதினேன் என்பது மிகை. என்னால் எழுதப்பட்டது என்பதே பொருத்தமானது.

( சென்னை புக் பாயிண்ட் அரங்கில் 2014 ஜனவரி 4 ஆம் தேதி வெளியிடப்படவிருக்கும்
என்னுடைய நாவல் ‘வெல்லிங்ட’னுக்கு எழுதிய பின்னுரையின் பகுதி இது. நாவல் காலச்சுவடு பதிப்பக வெளியீடு)


நிழற்படம்: தத்தன் புனலூர்

சனி, 19 அக்டோபர், 2013

ஒரு கவிதை



என்னிடம் சொல்லு, எப்போதாவது 
உன்னைப் நெருங்கப் பிடித்து உன் பாத வளைவில் 
நான் முத்தமிட்டிருந்தால்
பிறகு கொஞ்ச நேரம் 
என் முத்தம் நசுங்கி விடக் கூடாதென்ற அச்சத்தில்
நொண்டித்தானே நடந்திருப்பாய். 

நிகிதா ஸ்டானஸ்கியூ (1933 - 1983) ரொமானியா

மதத்தின் கூண்டுகள்




                                                                                எம்.டி.

            
மலையாள எழுத்தாளரான  எம்.டி. வாசுதேவன் நாயரின்  நாவல் 'அசுர வித்து' 1962 இல் வெளி வந்தது. சென்ற ஆண்டு நாவலின் பொன் விழா ஆண்டு. அதையொட்டி நாவலின் புதிய பதிப்பும் வெளியிடப் பட்டது. ஒரு புதிய நாவலுக்குக் கிடைக்கும் வாசக வரவேற்புடன் பொன்விழாப் பதிப்பும் விற்றுத் தீர்ந்தது. ஒரு நாவல் ஐம்பது ஆண்டுகளாக வாசக கவனத்தில் நீங்காமல் இருக்கிறது என்பதும் இன்றும் வாசிக்கப்படுகிறது என்பதும் எந்த இலக்கிய ஆர்வலனுக்கும் மகிழ்ச்சியளிக்கும். அதே சமயம், நாவல் கையாண்டிருக்கும் மையப் பிரச்சனை நிகழ்காலத்துக்கும் பொருந்துவதாக இருப்பது அவ்வளவு உற்சாகமூட்டக் கூடியதல்ல.'அசுர வித்து' நாவல் முன் வைக்கும் மானுடச் சிக்கல் இன்றும் தீராத ஒன்றாக இருப்பது துயரத்தையே தருகிறது.

'அசுர வித்து' நாவலின் மையப் பாத்திரம் கோவிந்தன் குட்டி. ஒரு நாயர் குடும்பத்தின் இரண்டாவது வாரிசு. அண்ணன் குமாரன் தன்னுடைய திருமணத்துக்குப் பிறகு மனைவி வீட்டோடு போய்ச் சேர்ந்ததோடு அல்லாமல் குடும்ப நிலத்தை அடகு வைத்துக் கடன்படச் செய்வதில்குடும்பம் வீழ்ச்சி யடையத் தொடங்குகிறது. விதவையான மூத்த சகோதரிதிருமணத்துக்குக் காத்திருக்கும் இன்னொரு சகோதரி, தங்களது அவல நிலையை ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கும் அம்மா - இவர்களுக்கிடையில் அன்றாட வாழ்க்கையை நகர்த்திச் செல்லத் திணறுகிறான் கோவிந்தன் குட்டி. அந்தத் திணறலுக்கு இடையில் அவனுக்கு வாய்க்கும் ஒரே ஆறுதல் அவனுடைய நண்பன் குஞ்ஞரைக்கார் மட்டுமே. முஸ்லிம்களைக் கண்டாலே வெறுப்பில் பிதுங்கும் சேகரன் நாயர் கோவிந்த  குட்டியின் இளைய சகோதரியை மணந்து கொள்கிறார். தன்னுடைய செல்வத்தையும் செல்வாக்கையும் பாதுகாக்க அவர் கடைப்பிடிக்கும் உபாயங்களில் ஒன்று சொந்த  சாதிக்காரர்களைத் தன்னுடன் அணிவகுத்து நிறுத்திக் கொள்வது. அதன் மூலம் கிராமத்தில் முளைவிடும் முஸ்லிம் செல்வாக்கைக் கிள்ளி எறிவது. கோவிந்தன் குட்டி இதை எதிர்க்கிறான். இந்த எதிர்ப்பு சேகரன் நாயரிடம்  அவன் மீதான பகையாக வடிவெடுக்கிறது. சேகரன் நாயர் வீட்டில் குற்றேவல்கள் செய்யும் மீனாட்சியை மணந்து கொள்கிறான் கோவிந்தன் குட்டி. மண நாள் இரவில் அவள் கர்ப்பிணியாக இருப்பது தெரியவருகிறது. சேகரன் நாயரின் மகனே அதற்குக் காரணம் என்று தெரிந்து கொள்ளும் கோவிந்தன் குட்டி அவனைத் தாக்குகிறான். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்லாம் மதத்தைத் தழுவுகிறான்.சேகரன் நாயர் பதிலுக்கு ஆட்களை வைத்து அவனைப் பழி வாங்குகிறார். ஒரு இந்து நாயரை அடிக்கத் தயங்கிய சேகரன் நாயருக்கு இப்போது முஸ்லிமை அடித்து  விரட்டுவது நியாயமானதாகப் படுகிறது. நண்பனாக குஞ்ஞரைக்காரும் ஒரு புதிய முஸல்மானைக் காப்பாற்றத் தயங்குகிறார்.உயிர் தப்ப ஓடும் கோவிந்தன் குட்டி கரை  புரண்டு ஓடும் ஆற்றில் குதிக்கிறான். பெரு வெள்ளத்தில் விழுந்தவன் இறந்து விட்டதாக ஊர் முடிவு கட்டுகிறது.

வேறொரு கிராமத்தில் கரை மீளும் கோவிந்தன் குட்டி அங்கே அகதியாக வாழ்கிறான். சொந்த துக்கங்கள் அவனைக் குடிகாரனாக்குகிறது. இரண்டு மதப் பிரிவுகளாலும்  கைவிடப்பட்ட அப்துல்லா என்ற கோவிந்தன் குட்டி மீண்டும் தனது சொந்த கிராமமான கிழக்கேமுறிக்கே திரும்புகிறான். பிளேக் பரவி கிராமம் முழுவதும் ஆட்கள் பலியாகிறார்கள். இறுதிச் சடங்கு செய்யக் கூட ஆளில்லாமல் குவிந்து கிடக்கும் சடலங்களை அப்புறப்படுத்த உதவுகிறான். பிணக் குவியலில் அவன் கண்டெடுக்கும் ஒரு சடலம் மனைவி மீனாட்சியுடையது. அருகில் அநாதையாக அழுது நிற்கும் குழந்தை. தான் கோவிந்தன் குட்டி நாயரா இல்லை அப்துல்லாவா என்று குழம்புகிறான் அவன்.தான் இந்துவா முஸ்லிமா என்று தடுமாறுகிறான். இரண்டும் இல்லாத இடத்துக்குப் போக அந்த ஊரை விட்டுப் புறப்படுகிறான். '' திரும்ப வருதற்கான யாத்திரை'' என்று  மனதுக்குள் சொல்லிக் கொள்கிறான்.

தாகூரின் காதலி





சென்ற ஆண்டு இதே அக்டோபர் மாதம் சுனில் கங்கோபாத்தியாய் மறைந்தார். 'நவீன வங்காள மொழியின் புதிய சுரணையுணர்வை முன் வைத்தவர் என்று பாராட்டப் பட்டவர் சுனில். அவரது வாழ்க்கையும் படைப்புகளுகளும் எப்போதும் சர்ச்சைகளின் மையப் புள்ளிகளாக இருந்தன. உயிருடன் இருந்தபோது உடன் தொடர்ந்த சர்ச்சைகள் அவரது இறப்பிலும் தொடர்ந்தன. தனது இறப்புக்குப் பின்னர் எந்தச் சடங்குகளும் கூடாது என்று முன்னர் அறிவித்திருந்தபடியே அவரது உடல் எரியூட்டப்பட்டது. வெளித் தோற்றத்தில் புதுமை விரும்பிகளும் அடிமனத்தில் மரபுக் காவலர்களாகவும் இருக்கும் பெரும்பான்மை வங்காளிகள் நடுவே அதுவும் சர்ச்சைக்கிடமானது. அவரது எழுதப்பட்ட நாவல்கள் தொடர்ந்து விவாதப் பொருளாக இருந்தன. 'பாதி வாழ்க்கை'( அர்த்தக் ஜீபன்) நாவலில் பெண் கடவுளான சரஸ்வதியைப் பற்றிப் பதின் பருவச் சிறுவன் காணும் கனவுகளைப் பற்றி எழுதியது விவாதப் புழுதியை எழுப்பியது. எழுதப் படாத நாவலும் சர்ச்சைக்குத்  தப்பவில்லை. பதினான்கு ஆண்டுகள் வனவாசம் நடத்திய ராமன் - சீதை வாழ்வில் என்ன நடந்தது என்பதைப் பற்றிப் புதிய நாவலில் எழுதவிருப்பதாக சுனில் கங்கோபாத்தியாய் சொன்னது பரபரப்பை மூட்டியது.


சுனில் கங்கோபாத்தியாவைக் கடுமையாக விமர்சிக்கக் காரணமாக இருந்த நாவல் ' ரானு ஓ பானு' . கடவுளரை விமர்சனம் செய்யும் நாவலைப் பொறுத்துக் கொள்ளத் தயாராக இருந்த வங்காளிகள் கடவுளை விட மிகுந்த பக்தியுடன் ஆராதனை செய்யும் தங்கள் மகா கவியைப் பற்றிய நாவலுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார்கள்.
'ரானு ஓ பானு' என்ற நாவலின் மையப் பாத்திரம் மகா கவி ரவீந்திர நாத தாகூர். தலைப்பே தாகூர் பக்தர்களுக்குக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தங்கள் மகா கவியை மையப் பாத்திரமாகக் கொண்ட நாவலின் தலைப்பு ' பானு ஓ ரானு' என்றுதான் இருக்க வேண்டும். சுனில் கங்கோபாத்தியாய் வேண்டுமென்றே ஒரு சாதாரணப் பெண்ணின் பெயரை முதலில் வைத்திருக்கிறார். இது குருதேவரை அவமதிப்பது என்று சீறினார்கள்.
ஆனால், ரானு என்பது ஒரு சாதாரணப் பெண்ணின் பெயர் அல்ல. 

தாகூருக்கிருந்த எண்ணிறந்த தோழிகளில் ஒருவரின் பெயர். பிற பெண்களின் அடையாளத்தையும் பூர்வ கதையையும் கவிஞரின் எழுத்துகளிலிருந்து ஊகிக்க முடியும். நிரூபிக்கவும் முடியும். ரானுவின் பெயரை ஊகிப்பது சிரமம். ரானு தனது பத்தாவது வயதில் அறுபது வயதான தாகூரை முதல் முதலாகச் சந்திக்கிறாள். கவிதை ஆர்வம் ததும்ப நடமாடும் அந்த வெகுளிச் சிறுமி  அவரைக் கவர்கிறாள். அந்தச் சந்திப்புக்குச் சிறிது காலம் முன்பு காலமான தனது மகள் மாதுரிலதாவின் பிரதிபலிப்பாகவே ரானுவைக் காண்கிறார். தொடர்ந்து தனது அன்புக் குரியவர்கள் மறைந்து போனதாலும்  விலகிப் போனதாலும் மனதுக்குள் காயங்களைத் தாங்கிக் கொண்டு தாகூர் வாழ்ந்த நாட்கள் அவை. பகிரங்கப் படுத்த முடியாத தனிமை உணர்வில் திணறிக் கொண்டிருந்த வரை அவளுடைய அண்மை அவரை ஆறுதல் படுத்துகிறது. அவளுடைய இலக்கிய ஆர்வம் வியப்படையச்  செய்கிறது. அவள் தன்மீது கொண்டி ருக்கும் மரியாதை பரவசமளிக்கிறது. பெரும் பான்மையான நாட்கள் சாந்தி நிகேதனில் தன்னுடன் வசிக்கும் ரானு சொந்த ஊரான பெனாரசுக்குத் திரும்பி எழுதும் கடிதங்கள் அவரை குதூகலப் படுத்து கின்றன. தான் இழந்த இளமையை அவள் மூலம் திரும்ப அடைகிறார். சிறுமியாக அவளிடம் தோன்றிய வாஞ்சை அவள் பருவமடைந்த பின்னர் ஏதோ ஒரு கணத்தில் காதலாக மாறுகிறது. ரானுவுக்கும் அப்படியே. உலகம் போற்றும் மகா கவிஞன் தனது புன்னகையில் மெல்லிய ஒளியில் பிறர் கண்ணுக்குத் தென்படாத சுடர் விடுவதைப் புரிந்து கொள்கிறாள். ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் 'கவிஞனுக்கும் தேவதை'க்கும் இடையிலான நெருக்கம் நீள்கிறது. மிகப் பெரும் செல்வந்தரும் தாகூரின் புரவலருமான சர். பிரேன் முகர்ஜியின் மனைவியாகிறாள் ரானு. இருவரிடையே நிலவிய நெருக்கம் மறைகிறது. அந்த மறைவுடன் நாவல் முற்றுப் பெறுகிறது.

தனது நாடகமொன்றில் மையப் பாத்திரத்துக்குத் தாகூர் சூட்டிய பெயர் 'பானு சிம்மன்'. அந்தப் பெயரின் சுருக்கமான 'பானு'தான் தலைப்பில் தாகூரின் பெயராகக் குறிப்பிடப் படுகிறது. ' ரானு, தயவு செய்து இனிமேல் என்னை பானு தாதா என்று அழைக்காதே. பானு சிம்மன் என்றென்றைக் குமாகத் தொலைந்து போனான். இனி ஒருபோதும் அவன் திரும்பி வர முடியாது'' என்பது இறுதி வாக்கியம்.

சுனில் கங்கோபாத்யாயா தாகூரின் அறியப்படாத காதலைக் கண்டெடுத் திருப்பது கற்பனையிலிருந்தல்ல; உண்மையிலிருந்து. சீமாட்டி ரானு முகர்ஜியின் சுய சரிதையிலிருந்துதான். கையெழுத்துப் பிரதியாகத் திருமதி. ரானு முகர்ஜி வைத்திருந்த தன் வரலாற்றிலிருந்துதான். அந்த வரலாற்றில் இரண்டு மனங்களின் காதல் மட்டுமல்ல; அவர்கள் வாழ்ந்த காலத்தின் நிகழ்விகளும் பதிவாகியிருக்கின்றன. சுனில் கங்கோபாத்தியாய் நாவலின் கதையோட்டத்துக்குக் கொடுத்திருக்கும் அதே முக்கியத்து வத்தை உண்மை நிகழ்வுகளை இணைப்பதில் அளித்திருக்கிறார். தாகூர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்வது, காந்தியுடன் உரையாடு வது போன்ற சம்பவங்கள் நாவலை உண்மைசார்ந்த கற்பனையாக மாற்று கிறது. உணர்ச்சிகரமான வாசிப்புக்குரிய நாவலைப் படித்து முடித்து மூடும் போது உலகிலுள்ள எல்லா உயிர்களின் துடிப்பு களையும் தன் வாயிலாக வெளிப்படுத்திய பெருங் கவிஞர் மாற்ற முடியாத தனிமையில் அமர்ந்தி ருப்பதையும்  அவரைத் தழுவிக் கொள்ள வாசகனின் கை நீளுவதையும் பார்க்கலாம்.

'ரானு ஓ பானு' ( வங்க நாவல் ) 2004
சுனில் கங்கோபாத்யாயா
ஆங்கிலத்தில் : ஷீலா சென்குப்தா

வெளியீடு; ஸ்ருஷ்டி பப்ளிஷர்ஸ் அண்ட் டிஸ்டிரிபியூட்டர்ஸ், நியூ டெல்லி

நன்றி: தி இந்து ( 19 அக்டோபர் 2013 )



சனி, 28 செப்டம்பர், 2013

உறவின் நீளம் மூன்று கஜம்





ன்னுடைய சம வயதுப் பெண்கள் எல்லாரையும் போலவே ரானுவுக்கும் கனவு இருந்தது. கொஞ்சம் வசதியான வாழ்க்கை; தன்னைப் புரிந்து கொண்டாடுகிற கணவன். இவைதாம் அவளுடைய தேவைகள். ஆனால் நடைமுறையில் அது நிறைவேறவே இல்லை. பெற்றோரின் வற்புறுத்தலும் சமூகக் கட்டுப்பாடுகளும் தான் அவளுடைய வாழ்க்கையைத் தீர்மானித்தன. ஏக்கா (ஒற்றைக் குதிரை பூட்டிய வண்டி) ஓட்டியான திலோக்காவை மணந்து கொள்ள நேர்கிறது.  குதிரைக்குக் கொள்ளுக்கும் குடும்பத்தினருக்குக்கு ரொட்டிக்கும் வருவாய் ஈட்டவே திணறுகிற குடும்பத்தில் புகுந்த பின்னர் பிறந்த வீட்டுத் தரித்திரம் இதை விடக் குறைவானது என்று படுகிறது. கணவனாக வந்த திலோக்காவோ குடிகாரன்; போதையேறினால் உதையப்பனாகிறவன். அவனாகச் சும்மா இருந்தாலும் அவனுடைய தாய் மருமகளைப் பற்றிப் புகார் சொல்லி அவனை உசுப்பி விடுகிறாள். திருமணமாகி போதைக்கும் சச்சரவுகளுக்கும் இடையில் இரண்டு குழந்தைகளைப் பெற்ற பின்னும் கொண்டு வராத சீதனத்தைப் பற்றிச் சொல்லிக் குத்திக் காட்டுகிறாள். தன்னுடைய எளிய கனவுகள் கூட நிறைவேறாத வாழ்க்கையை ரானு குல தெய்வமான வைஷ்ணோ தேவி யின் தீர்மானம் என்று ஏற்றுக் கொள்கிறாள். இந்த ஏற்றுக் கொள்ளும் உணர்வுதான் அவளைத் தொடர்ந்து வாழ வைக்கிறது. அவளும் எல்லாப் பெண்களையும் போல வம்பு பேசியும் திருவிழாக்களில் பங்கேற்றும் தனது சமரசத்தை நியாயப்படுத்திக் கொள்கிறாள்.

''நான் பிறந்து வளர்ந்த பஞ்சாபி கிராமப் புறங்களில் பார்த்த பெரும் பான்மை யான பெண்கள் அப்படித்தான் இருந்தார்கள். ஒருவேளை இன்னும் இருக்கிறார்கள். தங்களுடைய சங்கடங்களையே தங்களுக்குக் கிடைத்த வாழ்க்கையாகப் பார்க்கிறார். அவர்கள் எல்லாரின் ஒட்டு மொத்த வடிவம்தான் ரானு.'' என்று நாவலாசிரியர் ரஜீந்தர் சிங் பேடி (1915 – 1984)குறிப்பிடுகிறார். அவர் எழுதிய 'ஏக் சதர் மாலி சி' நாவலின் இழைதான் மேலே குறிப்பிடப் பட்டது.

ரஜீந்தர் சிங் பேடி உருது மொழியில் எழுதிய நவீன எழுத்தாளர்களில் முக்கியமானவர். அஞ்சல்துறை எழுத்தராகப் பணி புரிந்தவர் இலக்கிய ஆர்வத்தால் வேலையைத்  துறந்து எழுத்தாளரானார். உருது மொழியில் சதாத் ஹசன் மண்டோவுக்கு நிகராகக் கதைகள் எழுதியவர். மண்டோவைப் போலவே திரையுலகிலும் நுழைந்து பொருட்படுத்தக் கூடிய படங்களில் பணியாற்றினார். 'ஏக் சதர் மாலி சி' நாவலுக்காக 1967 இல் சாகித்திய அக்காதெமிப் பரிசும் பெற்றார். பஞ்சாபிக் கிராம வாழ்க்கையின் நுட்பமான இழைகளைக் கோர்த்து அந்த மண்ணின் மனிதர்களைப் பற்றிய கதைகளை உருவாக்கியவர் பேடி. கீழ்த் தட்டு, நடுத்தர மக்களின் வாழ்க்கையை கரிசனத்துடன் பதிவு செய்தவர். முதன்மையாகப் பெண்களின் வாழ்வை.

இந்திய சமூக அமைப்பில் தேர்ந்து எடுக்கும் சுதந்திரம் இல்லா பிறவிகள் பெண்கள். குடும்பத்தின் வற்புறுத்தலுக்கும்  சமூகத்தின் விதிகளுக்கும் அடிபணிவதாகவே அவர்கள் வாழ்க்கை அமைகிறது. அதை இயல்பான ஒன்றாக அவர்கள் நம்புகிறார்கள்; அல்லது நம்பவைக்கப்படுகிறார்கள். ரானுவும் அப்படித்தான் இருக்கிறாள். ஆனால் இக்கட்டான சூழ்நிலையை அவள் சமாளிக்கும் பக்குவம்தான் அவளைக் கதாநாயகியாக மாற்றுகிறது.

ஒருநாள், ஊர்ப் பிரமுகருக்காக ஒரு பெண்ணைத் தனது ஏக்காவில் அழைத்து வந்து சேர்க்கிறான் திலோக்கா. மறு நாள் வல்லுறவுக்கு ஆளாக்கப் பட்டு இறந்து கிடக்கிறாள். அவளுடைய சகோதரர்கள் அந்தப் பாதகத்துக்குக் காரணம் திலோக்கா என்று பழி சுமத்தி அவனைக் கொன்று விடுகிறார்கள். ஆதரவற்ற குடும்பம் மேலும் வறுமையில்  ஆழ்கிறது. ஊர்ப் பஞ்சாயத்து - ஐந்து பேர் கொண்ட சபை ஒரு நிவாரணத்தை முன்வைத்து அதை ஏற்றுக் கொள்ளக் கட்டாயப் படுத்துகிறது. திலோக்காவின் தம்பி மங்களை, ரானு திருமணம் செய்து கொள்ள வேண்டும். ரானுவுக்கு அந்தத் தீர்மானம் அதிர்ச்சியை தருகிறது. மங்கள் அவளை விடப் பதினான்கு வயது இளையவன். கிட்டத்தட்ட மகனைப் போலவே அவளால் வளர்க்கப்பட்டவன். ஆனால் பஞ்சாயத்தின் தீர்ப்பு மாற்ற முடியாதது. எனவே 'மாலி சி சிதர்' என்ற சடங்குக்கு உடன்படுகிறாள். திருமணமல்லாத திருமணச் சடங்கு அது. மூன்று கஜம் நீளமுள்ள துணியை பெண்ணின் மேல் மைத்துனன் போர்த்தி விட்டால் அவள் அவனுக்கு மனைவியாகி விடுவாள். இந்தச் சடங்குக்குப் பிறகு மங்களுடனான தன் உறவை எப்படி ரானு கையாளுகிறாள் என்பது அவளை வழக்கமல்லாத பாத்திரமாக்கும் ஒரு செயல்.

ரானுவின் ஒரே எண்ணம் மகள் சன்னூவுக்கு பணக்காரனும் அழகனுமான மாப்பிள்ளையைப் பார்த்து மணமுடித்து வைக்க வேண்டும் என்பதே. அதுவும் கைகெட்டும் தூரத்தில் வருகிறது. திருவிழாவில் சன்னூவைப் பார்த்து வசமிழந்த ஒரு பணக்கார இளைஞன் சீதனமில்லாமல் அவளை மணந்து கொள்ள முன் வருகிறான். ஊர்த் திருவிழாவில் எட்ட நின்று அவனைப் பார்க்கும் ரானு மகள் வறுமையிலிருந்து தப்பித்தாள் என்று ஆறுதல் அடைகிறாள். ஆனால் பக்கத்தில் வந்த மாப்பிள்ளையைப் பார்த்ததும் நிலை குலைகிறாள்.  கணவன் திலோக்காவைக் கொன்றவன் அவன் என்று அடையாளம் கண்டு கொள்கிறாள். அவனை மகளின் கணவனாக ஏற்றுக் கொள்வதா, இல்லையா என்ற இக்கட்டான நிலைமையில் அகப்பட்டுக் கொள்கிறாள் ரானு. அதிலிருந்து மீண்டு  எடுக்கும் முடிவே அவளைக் கதையிலிருந்து பிரித்து நிஜத்தின் வடிவமாக மாற்றுகிறது.

மிக எளிய கதை. ஆனால் பஞ்சாபி கிராம வாழ்வின் எல்லா நுட்பங்களையும் சேர்த்துக் கொண்டு அசாதாரமான ஒன்றாக இந்தக் கதையை மாற்றி யிருக்கிறார் ரஜீந்தர் சிங் பேடி.அண்ணிக்கும் மைத்துனனுக்குமான உறவின் கதையாகவோ  கணவனைக் கொன்ற பணக்காரனை ஏழைப் பெண் பழி வாங்கும் கதையாகவோ எழுதப்பட்டிருந்தால் ஏற்பட்டிருக்கக் கூடிய விரசத்தையும் பிரச்சாரத்தையும் பேடியின் மானுடக் கரிசனம் தவிர்த்திருப்பதே இதை முக்கியமான நாவலாக ஆக்குகிறது.

இந்த நாவலை ஆதாரமாக வைத்துத் தானே இயக்குவதற்கான ஒரு திரைக் கதையையும் பேடி உருவாக்கியிருந்தார். ரானுவாக நடிக்க வைக்க விரும்பிய நடிகை கீதா பாலி மரணமடைந்து விடவே திரைப்பட முயற்சி கைவிடப் பட்டது. 1984 இல் பேடி  மறைந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு சுக்வந்த் தாதா இயக்கத்தில் படமாக்கப்பட்டது. ஹேமமாலினி ரானுவாகவும் குல்பூஷண்கர்பாண்டா திலோக்காவாகவும்  ரிஷி கபூர் மங்களாகவும் நடித்த படத்தைப் பார்க்க முடிந்தது. பிரபல பத்திரிகையாளர் குஷ்வந்த சிங்கின் நேர்த்தியான ஆங்கில மொழியாக்கத்தில் - ஐ டேக் திஸ் உமன் ' என்ற தலைப்பில் ,நாவலையும் படிக்க முடிந்தது. ஒப்பிட்டுச் சொன்னால், நாவல் பஞ்சாபி கிராம வாழ்க்கையை மனதுக்குள் கொண்டு வருகிறது. சினிமா அசட்டுக் கேளிக்கையாகவே தேங்கி நிற்கிறது.

ஐ டேக் திஸ் உமன் (நாவல்) 2007

உருது மூலம்: ரஜீந்தர் சிங் பேடி
ஆங்கிலத்தில் : குஷ்வந்த் சிங்

ஓரியண்ட் பேப்பர் பேக்ஸ், நியூ டெல்லி.

’தி இந்து’ நாளிதழில் வெளியான புத்தக அறிமுகக் குறிப்பின் சுருக்கப்படாத வடிவம்.

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

கவிதைக் கலை

அனஸ்டாஸிஸ் விஸ்டோனிடிஸ் ( கிரேக்கம்)


விதை, தெருக்களில்
காற்றால் பெருக்கித் தள்ளப்படும் இலைகள் அல்ல
அது அசையாக் கடலோ
பாயும் படகோ அல்ல.
அது நீல வானமோ
தெளிந்த வெளியோ அல்ல.

கவிதை, பூமியின் இதயத்தில்
ஒரு ஊன்றிய கூர்முனை  ஈட்டி
நகரங்களுக்குள் விசையுடன்  
நேரடியாக இறங்கிய பளிச்சிடும் கத்தி.

கவிதை, ஒரு பதற்றம்,
பளபளப்பான உலோகத் துண்டு,
பனிக்கட்டி, உறைந்து கறுத்த காயம்.

கவிதை, பன்முக வைரம்போலக்
கடினமானது.
ஆசிய நதியில் விரைந்தோடும்
செதுக்கிய பளிங்குக் கல்போலத் திடமானது

கவிதை, கடந்து செல்லும்
பறவையின் குரல் அல்ல
அது தொடுவானையும் வரலாற்றையும்
துளைத்துப் போகும் துப்பாக்கி வெடி
கவிதை, தனது பாடம்செய்யப் பட்ட வலிக்குள்ளே
உதிர்ந்து விழும் மலர் அல்ல.




ANASTASSIS VISTONITIS
Anastassis Vistonitis was born in Komotini, Northern Greece, in 1952. He studied Political Sciences and Economics in Athens. From 1983 to 1988 he lived in the U.S.A. (New York and Chicago) and travelled extensively in Europe, North America, Africa, Australia and Asia. From 1996 to 2001 he was a member of the board of the E.W.C. (The Federation of European Writers) and
now he is its Vice-president. In addition to poems, essays, book
reviews and articles contributed to many leading quarterlies and
newspapers Anastassis Vistonitis has published nine books of
poetry, two volumes of essays, three travelogues, and a book of
short stories.
He was the General Editor of the candidature file of Athens
for the Olympic Games of 2004. His writings have been translated
into 14 languages and appeared in such journals as Lettre
International, P.E.N. International, Translation, Sodobnost, Helicon
and 2b (A Magazine of Ideas). He is a columnist of the leading
Greek newspaper To Vima and lives in Athens.