வெள்ளி, 10 நவம்பர், 2017

பிழை பொறுக்க மாட்டாதவர்

'தி இந்து' - இன்றைய இதழில் கலைஞர் கருணாநிதி குறித்து எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது.  ’தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ என்று தமிழ்த் திசை வெளியிட்டிருக்கும் மலருக்காக எழுதப்பட்டது. மலரிலும் நாளிதழிலும் எடிட் செய்யப்பட்ட வடிவமே வெளியாகி உள்ளது. எழுதப்பட்ட முழுக் கட்டுரையை இங்கே பகிர்கிறேன்.




1992 ஜனவரி 22 முதல் 1998 ஜனவரி 18 வரையிலான காலப் பகுதியில் முரசொலி வளாகத்தில் பத்திரிகையாளனாகப் பணியாற்றியிருக்கிறேன். முதலில் 'தமிழன்நாளிதழ் ஆசிரியர் குழுவில் ஒருவனாக. 92 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று தொடங்கப்பட்ட நாளிதழ் அதே ஆண்டு செப்டம்பர் 15 அன்று திமுகவின்  முப்பெரும் விழாச் சிறப்பிதழுடன் மூடுவிழாக் கண்டது. அதே வளாகத்திலிருந்து, அதே நிர்வாகத்தின் கீழ் வெளியாகி வந்த குங்குமம் வார இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவனாக ஆரம்பத்திலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் பொறுப்பாசிரியனாகவும் - ஆசிரியர், பதிப்பாளர் பெயர்கள் தவிர மற்றவர்கள் பெயரை அச்சேற்றும்  வழக்கம் அன்று இல்லை – பணி புரிந்தேன். இடையில் சில மாதங்கள் அன்று 'முரசொலி'யின் ஆசிரியப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்த ஏ.எம்.பஷீர் சொல்லி அதன்  வார இணைப்புக்காகவும் பணியாற்றியிருக்கிறேன். இந்த ஆறாண்டுப் பணிக் காலத்தில் கலைஞரைப் பலமுறை சந்தித்திருக்கிறேன். பாராட்டுக் களைப் பெற்றிருக்கிறேன்.அதற்குச் சமமாகவே திட்டுகளையும் வாங்கி யிருக்கிறேன். இரண்டிலும் பத்திரிகையாளனாகக் கற்றுக் கொள்வதற் கான பாடங்கள் இருந்தன.

திமுக அரசியலுக்கும் கருணாநிதிக்கும் எதிரான இடதுசாரிச் சிந்தனைகளால் பேணப்பட்டு வளர்ந்தவன். எனவே கலைஞரின் அரசியல், கலை இலக்கியப் பங்களிப்புகள் பற்றி உயர்வான எண்ணம் இல்லாமல் இருந்தது.அடிக்கடி அணுக்கத்தில் அவரைப் பார்க்கக் கிடைத்த ஆண்டுகளில் கருத்து மாற்றமடைந்தது. ஆதாரமான  விமர்சனங்கள் மறைந்து விடவில்லை. எனினும் அவரது பங்களிப்புகள் பற்றித் தற்சார்பு இல்லாத மதிப்பீடுகள் உருவாயின. அவரது செயல் பாடுகள் பற்றி வியப்பு உருவானது. இன்று அவரது நிலைப்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனாலும் வியப்புக் கலைந்து விடவில்லை. பங்கேற்ற எல்லாத் துறைகளிலும் கலைஞர் தன்னுடையதான அடையாளத்தை நிலைநிறுத்தவே விரும்பி யிருக்கிறார். அந்தத் துறைகளில் செயல்படத் தேவையான கருவி களையும் செயல்முறைகளையும் பயன்பாட்டையும் அவராகவே கண்டடைந்திருக்கிறார்.அதற்காக அவர் மேற்கொண்டிருந்த அயராத உழைப்பும் இடைவிடாத பயிற்சியும் கற்றுக்கொள்ளத் தக்கவை. தனது சரிகளிலிருந்து மேலும் சரியானவற்றை நோக்கியும் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு சரியை நோக்கியும் நகர்ந்திருக்கிறார் என்பதையும் நேரிடையாகக் காண வாய்த்தது. இதழியலுக்கும் இது பொருந்தும்.

பத்திரிகையாளனாகக் கலைஞரின் இதழியல் செயல்பாடுகளிலிருந்து அவதானித்தவற்றில் மூன்று அம்சங்களை முக்கியமானவையாகக் கருதுகிறேன்.ஒன்று: ஓர் இதழாளனுக்குத் தேவையான எல்லாவற் றையும் பற்றிய பொது அறிவு.பத்திரிகையில் இடம்பெறும் சின்னச் செய்திகளும் கவனத்துக்குரியவை. அவையும் முக்கியமானவையே என்ற பார்வை.

நாளிதழில் இரண்டு பத்தி அளவிலான செய்தியொன்று வெளியாகி யிருந்தது. ராஜீவ் காந்தி மரணத்தைத் தொடர்ந்து சென்னையில் நிலவிய பதற்றமான சூழலில் நடந்த  விபத்தில் அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவர் சிக்கினார்.கவனிப்பார் யாருமில்லாத நிலையில் அண்ணா மேம்பாலத்தில் கிடந்த அவர் பல மணி நேரங்களுக்குப்  பிறகே மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நினைவிழந்த நிலையிலேயே இரண்டு  ஆண்டுகள் இருந்தார். அரசு அவரது விஷயத்தில் பாராமுகமாக நடந்து கொண்ட்தைப் பற்றி அவரது மனைவி அளித்த நேர்காணல் வெளிவந்திருந்தது.மிகச் சிறிய செய்தியாகவே அது நாளிதழில் இடம் பிடித்திருந்தது. அந்தச் செய்தி முரசொலியிலும்  வெளியிடப்பட்டது. அதை ஆதாரமாக வைத்து முழுமையான புலனாய்வுக் கட்டுரையொன்றை குங்குமம் இதழில் எழுதினேன்.ஈ. எஸ். ஐ. மருத்துவரான டாக்டர்.  ரவீந்திரகுமாரின் அவலநிலை பற்றி விரிவாகவே எழுதியிருந்தேன். ரவீந்திர குமாரின் மனைவி ரத்னா அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளித் தோழி என்பதும்  கோவை நகரை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவரான ரத்தினசபாபதி முதலியாரின் சந்ததியில் வந்தவர் என்பதும் ரத்னாவை நேரில் சந்தித்தபோது கிடைத்த விவரங்கள். கட்டுரையில் இந்த விவரங்களையும் சேர்த்திருந்தேன். அது கட்டுரைக்கு மேலும் வலுவைக் கொடுத்தது. 

வார இதழில் வெளிவந்த கட்டுரையைப் படித்துவிட்டு முரசொலி யின் கலைஞர் கடிதம் பகுதியில் மறு பிரசுரம் செய்திருந்தார் கலைஞர்.பொருளாதார நெருக்கடியில் கைபிசைந்து நின்றிருந்த ரத்னாவுக்கு  திமுக சார்பில் நிதிஉதவியும் செய்தார். ஒரு பத்திரிகையாளனாக எனக்குக் கிடைத்த முதல் பெரும் கவனஈர்ப்பு கலைஞர் அந்தக் கட்டுரையை முன்னெடுத்தது. அதற்கு  நன்றி தெரிவிப்பதற்காக அனுமதி பெற்று  முரசொலி அலுவலகத்தில் அவரது தனி அறையில் சென்று பார்த்தேன். கட்டுரையில் சிறப்பு நிருபர் என்று என்னைக்  குறிப்பிட்டதற்கு நன்றி தெரிவித்தேன்.' நல்லா எழுதியிருக்கே, சின்ன விஷயத்துக்கு பின்னால் பெரிய செய்தி இருக்குமென்று கண்டுபிடித்தாயே அதுதான் பத்திரிகைக்காரனுக்கு வேண்டியது' என்றார். 'அதையும் உங்க கிட்டயிருந்துதான் கத்து கிட்டேன் அய்யா' என்று பதில் சொன்னேன். அவர் நெற்றியில் கேள்வி சுருங்கியது. சம்பவத்தைச் சொன்னேன்.

'தமிழன்' நாளிதழில் வார ராசிபலன்கள் பகுதி வெளிவந்து கொண்டிருந்தது. மயிலாப்பூரைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் எழுதி வந்தார். அவர் எழுதிக் கொடுக்காமற்போகும் நாட்களில் முந்தைய வார ராசிபலன் பகுதியில் மேஷ ராசிக்கான பலனை  விருச்சிக ராசிக்கும் துலாம் ராசிக்கானதை கும்பராசிக்குமாக மாற்றி பக்கத்தை ஒப்பேற்றுவது வழக்கம். அந்தப் பகுதி என் பொறுப்பில் இருந்தது. ஒருமுறை வார ராசிபலன் வந்து சேரவில்லை. பக்கம் அச்சுக்குப் போக வேண்டும். எனவே பழைய ராசிபலனைப் பழுது நீக்கிச் சேர்த்து விட்டோம்.மறுநாள் கலைஞர் அழைத்தார். 'ஏன்யா, விருச்சிக ராசிக்கான பலன்ல சித்திரை நட்சத்திரம் எப்படி வரும்? அது  துலாம் ராசியிலதான வரும்? என்னா ஜோசியமோ?' என்று கடிந்து கொண்டார்.அப்போதுதான் குளறுபடி புரிந்தது.கூடவே ஒன்றும் புரிந்தது. பத்திரிகையின் ஒவ்வொரு  எழுத்தையும் அவர் வாசிக்கிறார். கவனிக்கிறார். கொஞ்சமும் உடன்பாடில்லாத சோதிடப் பகுதியையும் விட்டுவைக்கவில்லை.ஒரு நாளிதழின் எல்லா அம்சங்களையும் பற்றியப் பொதுப் பார்வை தேவை என்பதைக் கலைஞரின் சுட்டிக் காட்டல் கற்பித்தது. சம்பவத்தைச் சொன்னதும் அவர் முகத்தில் சின்னச் சிரிப்பு ஓடியது.

ஒரு மனைவியின் போராட்டம் என்ற ரவீந்திரகுமார் கட்டுரையை மெச்சி சிறுதொகையை அன்பளிப்பாகக் கொடுக்கச் செய்தார் கலைஞர். அந்தத் தொகை அன்று நான்  பெற்று வந்த மாத ஊதியத்தின் கால் பங்கு. அந்தக் கட்டுரையில் சிறப்பு நிருபர் என்று எனக்குத் தகுதி வழங்கியது அந்த அன்பளிப்பை விடப் பெரியது. அதைவிட மதிப்பு  மிக்கது அவர் சொல்லாமல் கற்றுத் தந்த பாடம்.அது பின்னாளில் மிகவும் துணையாக இருந்தது.

ஒரு பத்திரிகையாளராக வாசகர்களை மதித்தவர் கலைஞர் என்பது இரண்டாவது அவதானிப்பு. தனது கருத்துக்கள் வாசகர்களிடம் சரியாகச் சென்று சேர வேண்டும் என்று அக்கறை கொண்டவர்.அதேசமயம் வாசகனுக்குப் புரிய வேண்டும் என்பதற்காகத் தன்னுடையது என்று உருவாக்கி வைத்திருக்கும் நிலையிலிருந்து கீழிறங்கிச் செல்ல விரும்பாதவர். முரசொலியில் அவர் எழுதும் கடிதங்களும் கேள்வி பதில்களும் அதற்கு உதாரணங்கள். முரசொலியின் வாசகர்களாகக் கருதப்படும் பெரும்பான்மையான கட்சிக்காரர்கள் அதை முழுமையாக வாசிக்கும் பழக்கமில்லாதவர்கள். கருப்பு சிவப்புத் துண்டைப்போலவே பத்திரிகையையும் கட்சியின் அடையாளமாக நினைப்பவர்களே அதிகம். ஆனால அவர்களின் வாசிப்புத் தரத்துக்குக் கீழிறங்கும் விதத்தில் கலைஞர் எழுதியதில்லை.தொடர்ந்து வாசிப்பதன் மூலம் அவர்களாகவே தனது கருத்துக்களை வந்தடைவார்கள் என்று நம்பியவர். வாசகனிடம் கீழறங்கிச் செல்வதல்ல; வாசகனை மேலே உயர்த்துவதுதான் பத்திரிகையாளனின் வேலை என்பது அவரிடமிருந்து தெரிந்து கொண்ட பாடம்.

பத்திரிகைகளில் பிழைகள் நேர்வது இயல்பு. எவ்வளவு கவனமாகப் பார்த்துக் கொண்டாலும் அச்சுப் பிசாசு குடியேறுவதைத் தவிர்க்க முடியாது. பத்திரிகையில் பிழை  ஏற்படுவதைக் கலைஞர் பொறுத்துக் கொள்ள மாட்டார். அந்த வகையில் அவர் ஒரு முழுமைவாதி ( பெர்ஃபெக்ஷனிஸ்ட் ). இது அவரிடம் கண்ட மூன்றாவது குணம்.அவரது ஆக்கங்கள் கைப்பட எழுதப்படுபவை. அதில் ஒரு பிழையும் காண முடியாது. அரைத் தாள்களில் எழுதுவார். அவரே அறியாமல் பிழை நேர்ந்து விடுமானால் அந்தப் பக்கமே கைவிடப்படும்.  மீண்டும் எழுதப்படும். அடித்தலோ திருத்தலோ பிழையோ இல்லாமல் தனது கைப்பிரதி இருக்க வேண்டுமென்று எச்சரிக்கையாக இருப்பவர். அவரளவுக்கு எச்சரிக்கை  வளாகப் பணியாளர்களிடம் கிடையாது என்பதால் ஆசிரியர் குழு உறுப்பினர் எவரோ ஒருவருக்கு அன்றாடம் மண்டகப்படி நடக்கும். இதழியல் பணி அவசர கதியில் நிறைவேற்றப் படுவது. அதில் பிழைகள் தவிர்க்க முடியாதது. பிழை நேர்ந்தால்  திருத்தம் வெளியிடவோ, தவறான தகவலாக இருந்தால் வருத்தம் தெரிவிக்கவோ வாய்ப்பு உண்டு. இவர் ஏன் அலட்டிக் கொள்கிறார் என்று தோன்றியதுண்டு. பிழைகள் மனித சகஜமான தவறுகள்தானே தவிர, குற்றங்கள்  அல்லவே என்றும் நினைத்திருக் கிறேன். ஆனால் சிறு பிழை கூடப் பெரிய ஊனத்தை ஏற்படுத்தி விடும் என்பதையும் முரசொலி வளாக நாட்களில்தான் உணர்ந்தேன்.

கலைஞர் பிறந்த நாளையொட்டி மலர் ஒன்று வெளியிட முடிவானது. டிசம்பர் மாதம் 25 தேதி கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்தவர்களுக்கு மனப்பதிவாக இருப்பதுபோல  ஜூன் 3 ஆம் தேதி கலைஞர் பிறந்த நாள் என்பது திமுகவினருக்கு ரத்தத்தில் ஊறிய ஒன்று. எனினும் முரசொலி வளாகத்தில் மட்டும் மே மாதக் கடைசி ஓரிரு நாட்க ளில்தான் அது நினைவுக்கு வரும். நினைவு வந்ததும் பரபரப்பு சூழ்ந்து கொள்ளும். ஆஸ்தானச் சான்றோர்களான வைரமுத்து, அப்துல் ரகுமான், ஏ.கே.வில்வம் போன்றவர்களிடமிருந்தும் கட்சிப் பிரபலங் களிடமிருந்தும் கட்சிக்கு அப்பாற்பட்ட பிரபலங்களிடமிருந்தும் - இது அன்றைய அரசியல் தட்பவெப்ப நிலையைப் பொறுத்து அமையும் - கட்டுரைகள் பெறப்படும். எல்லாம் தொகுக்கப்பட்டு 3ஆம் தேதி அதிகாலை மலர் தயாராகி விடும். ஒருமுறை மலர் தயாரிப்புப் பணியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. 3 ஆம் தேதி அதிகாலை யில் மலர் முடியும் நிலைக்கு வந்திருந்தது. ஆரம்பத்தில் அச்சான பிரதிகள் கலைஞர் பார்வைக்காகக் கொடுத்தனுப்பப் பட்டன. பணி முடிந்த களைப்பில் மலர்ப் பொறுப்பாளராக இருந்த பஷீர் மேஜைமீது தலைசாய்த்துக் கண்ணயர்ந்திருந்தார்.அவரருகில் கிடந்த மலர்ப் பிரதியை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். கட்சிக்காரர் ஒருவர் கொடுத்திருந்த முழுப்பக்க விளம்பரத்தில் கண்ட பிழை என்னை அலற வைத்தது.  திடுக்கிட்டு எழுந்த பஷீர் என்ன என்றார்? ' சார், இதைப் பாருங்க என்றேன். 'ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி' என்ற பழமொழி சருகுபோல் வேரோடி என்று அச்சாகியிருந்தது. ' தொலைஞ்சோம்'  என்று பஷீர் பதறினார். அதற்குள் மலரைப் பார்த்து விட்ட கலைஞர் தொலைபேசியில் அழைத்தார்.' ஏன்யா, பிறந்தநாள் அன்றைக்கும் நிம்மதியா விடமாட்டீங்களா?' என்று தொலைபேசியை சாத்தினார். அச்சான பிரதிகள் அனைத்திலும் 'அருகுபோல்' என்ற வார்த்தையை மட்டும் தனியாக அச்சிட்டு ஒட்டி மலர் விநியோகத் துக்குப் போனது. 'இது என்ன மூட நம்பிக்கை' என்று அப்போது தோன்றினாலும் பிழை பொறுக்காத கலைஞரின் அக்கறை ஓர் இதழாளனுக்கு மிக முக்கியம் என்ற படிப்பினையைக் கற்றுக் கொண்டேன்.மலரில் மட்டுமல்ல; அவரது சொற்பொழிவுகள் அச்சிடப் படும்போதும் கேள்வி பதில்கள் அச்சாகும்போதும் அவற்றில் பிழை இல்லாமல் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் அவருக்கு உண்டு. அவர் சம காலத்துக்குரியதாக ஒன்றை எழுதினாலும் அது எதிர் காலத்துக்கும் பொருந்தக் கூடியதாகவே நினைத்தார். முரசொலிக்கு அவர் உருவாக்கிய தலைப்பு வாசகம். இன்றைய செய்தி நாளைய வரலாறு. அதை இம்மியும் விலகாமல் கடைப்பிடிக்கவும் செய்தார். ஒரு பத்திரிகையாளனின் தீர்க்கமான எண்ணத்தின் விளைவாகவே இதைக் காண்கிறேன். பத்திரிகையாளர் சந்திப்புக்களில் சில சமயம் காரியார்த்தமாகவும் சில சமயம் தோழமையாகவும் கலைஞர் சொல்லுவார்: 'நானும் பத்திரிகைக்காரன் தான்'. அது மிகையோ தற்புகழ்ச்சியோ அல்ல. தொட்டு உணர்ந்த உண்மை.



  

சனி, 4 நவம்பர், 2017

மலையாள அரசியல் படங்கள்

                                     

தென்னிந்திய சினிமாவில் கணிசமான அளவு அரசியல் படங்கள் மலையாளத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம். இது ஒரு ஊகம் மட்டுமே. இந்த ஊகத்தை ஒட்டியே கட்டுரையைத் தொடரலாம். எண்பதுகளில் தெலுங்கில் தொடங்கிய அரசியல் மசாலப் படங்களை விலக்கிப் பார்த்தால் ஊகம் சரிதானென்றே தோன்றுகிறது. 

எல்லாச் செயல்களிலும் ஓர் அரசியல் மறைந்திருகிறது என்ற பிரபலமான வாசகம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ மலையாளிகளுக்குப் பொருந்தும். எங்கும் எதிலும் அரசியல் வாடையை மோப்பம் பிடித்து விடும் அசாதாரணமான நுகர் புலன் மலையாளிகளுக்கு இருக்கிறது. எனவே இதுவரை மலையாளத்தில் வெளிவந்திருக்கும் ஆயிரக் கணக்கான வற்றில்   அரசியல் படங்கள் அதிகம் இருப்பது இயல்பானதுதான். வெகு ஜன சினிமாவில் சுவாரசியமான கதையோட்டத்துக்காகவும் மாற்று சினிமாவில் நிகழ்காலத்தின் மீதான எதிர்வினையாகவும் அரசியல் இடம் பெற்றிருக்கிறது.

கேரளத்தில் ஆட்சி அதிகாரம் இரண்டு துருவங்களுக்கு இடையில்தான். இடதுசாரி ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய இரண்டில் ஒன்றே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகாரத்தைப் பிடிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியும் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியுமே  நிரந்தரப் போட்டியாளர்கள். பிற கட்சிகள் எல்லாமும் இந்த இரு அணிகளில் ஒன்றுக்குள் அடக்கம். எனவே காங்கிரஸ் அரசியலையும் கம்யூனிஸ்ட் அரசியலையும் மையமாக வைத்தே படங்கள் எடுக்கப்படுகின்றன.

அரசியல் சினிமாக்களை மூன்று வகையாகப் பிரித்துப் பேசலாம். ஒன்று: நேரடியான கட்சி அரசியலைப் பேசும் படங்கள். அவை கட்சிக்கு அல்லது இயக்கத்துக்கு ஆதரவாக அமைந்தவை. அல்லது அதன் மீது விமர்சனத்தை வைப்பவை. 1970 இல் வெளிவந்த 'நிங்ஙள் என்னெ கம்யூனிஸ்டாக்கி'  ( இயக்கம்; தோப்பில் பாஸி ) யையும்  1984 இல் வெளியான 'முகாமுகம் ( இயக்கம்: அடூர் கோபாலகிருஷ்ணன் ) படத்தையும் இந்த வகைக்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.  பாஸியின் பிரபலமான நாடகத்தின் திரைவடிவமே முதலில் குறிப்பிட்ட படம். மூலதனத்தைப் படித்துக் கம்யூனிஸ்டுகளோ கம்யூனிச அனுதாபிகளோ ஆனவர்களை விட இந்த நாடகத்தைப் பார்த்துக் கம்யூனிஸ்ட் ஆனவர்களே அதிகம் என்று கேரளத்தில் சொல்லப்படுவது உண்டு. அது ஓரளவு உண்மையும் கூட. தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் வளர்ச்சி அடைந்ததற்கு நாடகங்களும் திரைப் படங்களும் ஒரு காரணம். அதைப் போன்று கேரளத்தில் இடது சாரிச் சிந்தனைகள் பரவ நாடகங்களும் சினிமாக்களும் உதவின. அதில் முதன்மையான பங்கு 'நிங்ஙள் என்னெ கம்யூனிஸ்டாக்கி' நாடகத்தையும்  திரைப்படத்தையும் சேரும். அதே இடதுசாரி இயக்கத்தைக் கடுமையாக விமர்சனம் செய்த படம் அடூரின் 'முகாமுகம்'. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நேர்ந்த பிளவின் காரணமாக எப்படி அந்தக் கோட்பாடே செயலற்றதாக மாறியது என்பதைச் சொன்னது. சமூக அரசியல் சினிமா என்று இவற்றைச் சொல்லலாம்.

                                                                                                     முகாமுகம் 

                                                                                            
                                               நிங்ஙள் என்னே 
                                               கம்யூனிஸ்டாக்கி

இரண்டு : அரசியலை நையாண்டி செய்யும் வகையிலானவையும் மேம்போக்கான குற்றச் சாட்டுகளை அடுக்குபவையாகவும் எடுக்கப் பட்டவை. எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளிலும் ஐ.வி.சசி இயக்கத்தில் வெளியான 'ஈநாடு'  ( 1982 ) முதலான படங்கள் 'மொத்த சிஸ்டமே சரியைல்லை' என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சமகால அரசியலை அலசியவை. இதன் இன்னொரு பக்கமாக அரசியலை கேலிப் பொருளாக்கிய  வரவேல்பு ( 1989 ) போன்ற படங்கள்.  இந்த இரு படங்களிலும் சமகால சம்பவங்களின் அடிப்படை யிலேயே கதையோட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. எர்ணாகுளம் மாவட்டம் வைப்பினில்  அரசு சாராயத்தைக் குடித்த பலர் உயிரிழந்தனர். அது காங்கிரஸ் அரசு நடைபெற்ற காலம். எனவே கம்யூனிஸ்ட் ஆதரவாளரான திரைக்கதை ஆசிரியரான டி. தாமோதரன் காட்சிகளில் கருணாகரன் அரசை விளாசித் தள்ளினார். அதை பரபரப்பான படமாக ஐ.வி சசி மாற்றினார். நடிகர் சீனிவாசன் எழுதி சத்தியன் அந்திக்காடு இயக்கிய படம் 'வரவேல்பு'. வளைகுடா நாடுகளில் வேலை செய்து ஈட்டிய பணத்தை வைத்துப் பிறந்த மண்ணில் சொந்தமாகத் தொழில் தொடங்கும் ஒருவனுக்கு அரசியல்வாதிகளாலும் தொழிற்சங்க வாதிகளாலும் நேரும் கசப்பான அனுபவங் களைக் கேலித் தொனியில் சித்தரித்தது. இந்த இரண்டு படங்களும் வியாபார ரீதியிலும் விமர்சனக் கண்ணோட்டத்திலும் பெரு வெற்றி பெற்றவை. இந்த ஒற்றுமை ஆச்சரியமானதல்ல. மலையாள சினிமா ரசிகளின் பார்வையும் பொது மக்களின் பார்வையும் அந்தந்தக் கட்டத்தில் என்னவாக இருந்தன என்பதையே அது காட்டுகிறது. இந்தப் படங்களை அரசியல் கேளிக்கைப் படங்கள் எனலாம்.

                                                      ஈநாடு

இயக்க அரசியலையோ கட்சி அரசியலையோ வெளிப்படையாக பேசாமல் கேரள வாழ்க்கைக்குள்ளிருக்கும் கலாச்சார அரசியலைப் பேசும் படங்களை மூன்றாவது வகையாகப் பார்க்கலாம். சமகால வாழ்க்கைச் செயல்பாடுகளில் மறைமுகமாக இயங்கும் அரசியலை உள்ளடக்கமாகக் கொண்டவை இவை. அரசியலின் நன்மைகளையும் தீமை களையும் அலசும் நோக்கில் எடுக்கப்பட்ட சீரிய படங்களும் பொழுதுபோக்குப் படங்களும் இவற்றில் அடங்கும். சாதி அரசியலையும் மத அரசியலையும் இந்தப் படங்கள் விவாதித்தன.

லோகிததாஸ் எழுதி சத்தியன் அந்திக் காடு இயக்கிய 'சஸ்நேஹம் ( 1990 ) கிறிஸ்தவ இந்து மத அரசியலை மையமாகக் கொண்டது. கிறிஸ்தவனான தாமஸ்குட்டி இந்து பிராமணப் பெண்ணான சரஸ்வதியைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறான். மதத்தை ஒட்டி இரு குடும்பங்களுக்குள் நடக்கும் சிக்கல்களைப் படம் சித்தரிக்கிறது. இரு தரப்பும் ஒப்புக் கொள்ளும் வகையில், சரியாகச் சொன்னால் வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொள்ளும் நிலையில், கலப்பு மணத் தம்பதிகளுக்குப் பிறந்த பிள்ளை மதமற்ற பிரஜையாக வாழும் என்ற சமரச முடிவைப் படம் காட்டுகிறது. ஒருவிதத்தில் இது கேளிக்கை சினிமாவுக்கு உரிய சுப முடிவு. 

ஆனால் எதார்த்தம் அப்படியல்ல என்பதை அண்மையில் வெளிவந்த கிஸ்மத்  ( 2016 ) படம் எடுத்துக் காட்டியது.  28 வயது அனிதாவுக்கும் 23 வயது இர்பானுக்கும் காதல். வயது ஒரு சிக்கல். அதை விடப் பெரிய சிக்கல் இருவரின் மதம். அதை விடவும் பெரிய தடை அனிதா, தலித் என்பது. இருவரும் அடைக்கலம் தேடுவது போலிஸ் ஸ்டேஷனில். காவல் துறை அதிகாரி சமூக அத்துமீறலை அனுமதிக்க விரும்பாமல் காதலனையும் காதலி யையும் அவரவர் குடும்பத்தினரிடம் திரும்ப ஒப்படைக்கிறார். மதப் பற்று மிகுந்தவர் களான இர்ஃபானின் பெற்றோர் அவனையே இல்லாமல் ஆக்குகிறார்கள். காதலில் தோல்வியடைந்த அனிதா சிறிது காலத் துக்கத்துக்குப் பிறகு வெளிநாட்டில் பணியாற்று கிறாள். ஷாநவாஸ் கே. பாவக்குட்டி எழுதி இயக்கிய இந்தப் படம் எதார்த்ததை அப்படியே பிரதிபலித்தது.

                                                  கிஸ்மத்

மலையாள அரசியல் சினிமாவை மேற்சொன்ன மூன்று வகைகளில் அடக்கி விடலாம். இந்த வகைகளிலேயே சிறு வித்தியாசங்களுடன்தான் மாற்றுப் படங்களும் வணிகப் படங்களும் உருவாகியிருக்கின்றன. அறுபது எழுபதுகளில் பின்பற்றத் தக்கதாகத் தோன்றிய கம்யூனிஸ லட்சியங்கள் எண்பதுகளுக்குப் பின்னர் விமர்சனத்துக்குரியவையாகப் பார்க்கப் பட்டன. அவற்றை படங்கள் காட்டின. அடூரின் முகாமுகம், லெனின் ராஜேந்திரனின் 'மீன மாசத்திலே சூர்யன்', டி.வி.சந்திரனின் 'ஓர்மகள் உண்டாயிரிக்கணம்', ஜான் ஆப்ரஹாமின் 'அம்ம அறியான்', பிரிய நந்தனின் நெய்த்துகாரன் போன்ற படங்கள் இடதுசாரி இயக்கத்தை அனுதாபத்துடன் சித்தரித்தவை. இவற்றில் துணைப் பிரிவாகச் சொல்லப்பட வேண்டிய படங்கள் தலைவர்களின் வாழ்க்கையைக் கதைப் பொருளாகக் கொண்டவை. நெய்த்துகாரன் படம் மறைமுகமாக தோழர் இ.எம்.எஸ்ஸின் வாழ்க்கையைப் பேசியது.ஏழைகளின் தோழரான ஏ,கே.கோபாலனின் வாழ்க்கையும் வரலாற்றுப் படமாக வெளி வந்தது.  முதல் அமைச்சரவையில் பதவி வகித்த ஒரே பெண் அமைச்சரான கே.ஆர். கௌரியம்மாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இரண்டு படங்கள் வெளிவந்தன. 'லால் சலாம்' ( 1990 இயக்கம் வேணு நாகவள்ளி )  என்ற படம் கௌரி அம்மாவுக்கும் அவரது கணவரான  டி.வி. தாமசுக்குமான உறவையும் கட்சிப் பிளவால் நேர்ந்த முறிவையும் காரசாரமான மசாலாவுடன் சொன்னது. 1994 இல் கௌரி அம்மா மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதே ஆண்டு இந்தப் பிரச்சனையை மையமாக வைத்து 'சீஃப் மினிஸ்டர் கே. ஆர். கௌதமி என்ற படம் வெளியானது. காங்கிரஸின் மூத்த தலைவர் கே.கருணா கரனின் புகழைப் பேசும் படமாக 'லீடர்'  வெளிவந்தது. கௌதமிக்கு நேர்ந்த தோல்வியே லீடருக்கும் நேர்ந்தது.

                                                லால் சலாம்

இடதுசாரி ஆதரவும் எதிர்ப்புமான படங்களே அதிகம். காங்கிரஸ்   ஆதரவுப்  படங்கள் அநேகமாக இல்லை. இடதுசாரிகளுக்கு இருப்பது போன்ற கலை இலக்கிய உணர்வு காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு இல்லாததே காரணம். மிக அண்மையில்தான் காங்கிரஸ் சார்ந்த சில படங்களைப் பார்க்கக் கிடைத்தது. 'ஒரு இந்தியன் ப்ரணய கதை'யும், 'வெள்ளி மூங்க'வும். காங்கிரஸ் அணியிலிருக்கும் பிரதான பிராந்தியக் கட்சியான கேரள காங்கிரஸ்  - இதுவே நாலு பிரிவுகள் - பற்றி அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமான படங்கள் வெளிவந்திருக்கின்றன. திலீப் நடித்து வெளிவந்த 'லயன்' என்ற படம் கேரள காங்கிரஸ் - பி. பிரிவின்  தலைவர் ஆர்.பால கிருஷ்ண பிள்ளைக்கும்  மகன் கணேஷ் குமாருக்கும் இடையிலான அதிகாரக் கயிறு இழுக்கும் போட்டியை சொன்னது. கேரள காங்கிரஸின் தாய்ப் பிரிவான மாணி அணி கோட்டயம் மாவட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட எல்லாப் படங்களிலும் இடம் பெற்றது.

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வெளியான படங்களில் அரசியல் வாதிகள் இலட்சியவாதிகள் என்ற இடத்திலிருந்து நீக்கப்பட்டு மாஃபியா கும்பலின் புரவலர்களாகவும் கேங்க்ஸ்டர்களின் மறைமுகத் தலைவர் களாகவும் மாறினார்கள். அவர்கள் அனைவரும் காங்கிரஸ் காரர்களாகச் சித்தரிக்கப்பட்டது தற்செயலானதல்ல. நடுநிலையாளர்கள் என்ற கோணத்தில் சில இயக்குநர்கள் உருவாக்கிய படங்கள் இடதுசாரி அமைப்பை நையாண்டி செய்தன. சத்யன் அந்திக்காடின் சந்தேசம் (திரைக் கதை : சீனிவாசன் ), லால் ஜோசின் 'அரபிக் கத' , அருண்குமார் அரவிந்தின் 'ரைட் லெஃப்ட் ரைட்' , போன்றவை இவற்றுக்கு உதாரணங்கள்.

                                லெஃப்ட் ரைட் லெஃப்ட்

இவை தவிர தேசபக்தியை முன்வைத்த படங்களையும் அரசியல் படங்களாகச் சேர்த்துக் கொள்ளலாம். ஐ.வி சசியின் 1921 மலபார் போராட்டத்தை மையமாகக் கொண்ட கற்பனையிலிருந்து உருவானது. தொடர்ந்து வீர ஜவான்களின் தியாகத்தையும் தீவிரவாதிகளின் அட்டூழியத்தையும் சொல்லும் பல தேச பக்திப் படங்கள் வெளிவந்தன. இவற்றின் மூவண்ணத்தில் காவியின் நிறம் சற்று அடர்த்தியாக இருப்பதை இப்போது பார்க்கும்போது அறிய முடிகிறது. ப்ரியதர்சனின் ' காலாபானி ( 1996 ; தமிழில் சிறைச் சாலை ) தேசபக்தியை மட்டுமல்ல; இந்துவாக இருப்பதன் மேன்மையையும் சொல்லுகிறது என்பதை இப்போது காண முடிகிறது. இதன் நீட்சியாகவே ஷாஜி கைலாசின் படங்களை மேல் சாதிப் பெருமையைப் போற்றிப் பாடும் படங்களாகப் பார்க்கலாம். இந்தப் படங்களின் நாயக பாத்திரங்கள் அநேகமாக பிராமணத் தந்தைக்குப் பிறந்தவர்கள் என்பது இந்த ஊகத்தை வலுப்படுத்துகிறது. 'ஆறாம் தம்புரான் படம் ஓர் உதாரணம்.

அரசியல் என்ற வெளி நடவடிக்கைப் படங்கள் போலவே வாழ்க்கையில் அரசியல் ஒளிந்திருக்கும் விதத்தைச் சொல்லும் படங்களும் முக்கிய மானவை. இன்று பரவலாகப் பேசப் படும் சாதியம், பெண் உரிமை, சுற்றுச் சூழல் ஆகியவையும் நம்மை பாதிக்கும் அரசியல்தன்மை கொண்டவை தானே. மிகச் சமீபத்தில் வெளியான ' தொண்டி முதலும் திருக்சாக்ஷியும்( 2017  இயக்கம்: திலீஷ் போத்தன் ) படம் பொதுவான பார்வையில் நையாண்டியான கதை அமைப்புக் கொண்டது. ஆனால் அதில் நுட்பமான சாதிய அரசியலின் இருள் சுட்டப்படுகிறது. ஆலப்புழையைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். சொந்த ஊரில் வசிக்க முடியாமல் கேரளத்தின் வட மாவட்டத்துக்குப் பிழைப்புத் தேடிப் போகிறார்கள். பஸ்ஸில் பெண்ணின் தாலிச் சங்கிலியைத் திருடன் ஒருவன் பறிக்கிறான். போலீசுக்கு சென்று புகார் கொடுக்கிறார்கள். இதைத் தொடந்த விசாரணைகளும் சிக்கல்களுமே படத்தில் மிக விரிவாகவும் கேலியுடனும் சித்தரிக்கப்படுகின்றன. ஆனால் மையமான சிக்கல் சாதி அரசியலைச் சார்ந்தது என்பது படத்தைக் கவனமாகப் பார்க்கும்போது வெளிப்படுகிறது. காதலன் பிரசாத் ஈழவ வகுப்பைச் சேர்ந்தவன். காதலி ஸ்ரீஜா நாயர் சமூகத்தைச் சேர்ந்தவள். இந்த 'சாதிகெட்ட உறவு' ஊரில் ஏற்றுக் கொள்ளப் படாததே அவர்களை விரட்டுகிறது என்பதைப் படம் அழுத்தமாகவே காட்டுகிறது. டி.வி.சந்திரனின் சூசன்னா என்ற படம் பெண் நிலையிலிருந்து உறவுகளைப் பேசுகிறது. விபச்சாரியான சூசன்னாவை ஆத்மசரீர சுகமளிக்கும் பண்டமாகவே ஆண் உலகம் பார்க்கிறது. ஒழுக்கத்தைத் தாண்டிய பார்வையில் அவளும் ஒரு பெண் என்பதைப் பார்ப்பதில்லை என்ற புகாரைப் படம் அடிக் கோடிடுகிறது. ஆனால் பெண் அப்படியொன்றும் முடங்கிப் போகிறவள் அல்ல; தன்னை விழச் செய்தவனைத் தண்டிக்கும் பலம் கொண்டவள் என்பதை 22 ஃபீமேல் கோட்டயம் ( 2012 ) படம் சித்தரிக்கிறது.

                                                                               தொண்டிமுதலும் திருக்சாக்ஷியும் 

                               22 ஃபீமேல் கோட்டயம்

அரசியல் சினிமா என்பது கட்சி சார்ந்த அரசியலை மட்டுமே குறிப்பிடுவது அல்ல என்ற சிந்தனை விரிவடைந்திருக்கும் காலத்தில் வாழ்கிறோம். நமது மிகப் பெரும் பொழுதுபோக்கும் கலைவடிவமும் ஆன சினிமாவும் ஒற்றைப் படையானது அல்ல என்பதும் நடைமுறையாகி இருக்கிறது. இந்த அர்த்தத்தில் மலையாள சினிமாவின் பார்வையாளன் என்ற தகுதியில் குறிப்பிடத் தகுந்த அரசியல் படங்கள்  என்று பத்துப் படங்களையாவது முன்னிருத்திப் பேச முடியும். இப்படிச் சொல்லும்போதே தமிழ் சினிமாவின் பார்வையாளனாக இப்படி எத்தனைப் படங்களைப் பட்டியலிட முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. இந்தக் கேள்வியும் அரசியல் சார்ந்ததுதான் இல்லையா?

* அந்திமழை அக்டோபர் 2017 இதழில் வெளிவந்த கட்டுரை.











சனி, 25 மார்ச், 2017

கரையாத நிழல்




நவீனத் தமிழ் உரைநடை இலக்கியத்தில் குறிப்பிடத் தகுந்தவை யாகவும் தவிர்க்கவே இயலாதவையாகவுமான ஆக்கங்களைப் பங்களிப்புச் செய்தவர் அசோகமித்திரன். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் இயங்கியவர். யோசித்துப் பார்த்தால் அவர் அளவுக்கு இவ்வளவு நீண்டகாலம் தொடர்ந்து இயங்கியவர்கள் மிகக் குறைவு. தொடர்ச்சியான செயல்பாட்டில் மிக விரிவாகவே தமது எழுத்துக்களை முன்வைத்திருக்கிறார் என்பதே அவரைக் குறிப்பிடத்தக்கதவிர்க்க இயலாத படைப்பாளியாக நிலை நிறுத்துகிறது. பத்து நாவல்கள், பத்துக்கும் மேற்பட்ட குறுநாவல்கள், ஏறத்தாழ இருநூற்று எழுபது சிறுகதைகள், நானுறுக்கும் அதிகமான கட்டுரைகள் என்று விரிவடைந் திருப்பது அவரது படைப்புச் செயல் விளைச்சல். இவற்றுடன் அவர் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் கதை, கட்டுரைகளைச் சேர்த்தால் புலனாகும் விஸ்தீரணம் வியப்பை அளிப்பதுதான்.

அசோகமித்திரனின் ஆக்கங்கள் அனைத்தையும் மேலோட்டமாக வாசிக்கும் ஒருவருக்கு உடனடியாகப் புலப்படும் ஓர் அம்சம் , அதன் எளிமை. அவர் கையாளும் சொற்கள் எளிமையானவை. அவரது நடை ஜோடனைகள் இல்லாதது. உரக்க ஒலிக்காத குரலே அவர் கதைகளில் வெளிப்படுவது. ஆனால் இந்த எளிமையின் ஆழத்தில் பொருள்படுவது வாழ்வின் அவிழ்க்க இயலாப் புதிர்கள். அறிய முடியாத மர்மங்கள். இதை ஒரு வாசகன் புரிந்து கொள்ள அவரது எழுத்துக்களையே மீண்டும் மீண்டும் வாசிக்க நேர்கிறது. இதை இப்படிச் சொல்லலாம். அசோக மித்திரனைப் புரிந்து கொள்ள எளிய வழி அசோகமித்திரனைத் தொடர்ந்து வாசிப்பதுதான். அப்படி வாசிக்கும் ஒரு வாசகனுக்கு அவர் ஒருபோதும் மறக்க முடியாதவராகவோ தவிர்க்க முடியாதவராகவோ  மாறுகிறார். இந்த படைப்பாக்க முறை முற்றிலும் அவருக்கே உரியது. நவீனப் புனைவிலக்கியத்துக்கு அவரது கொடை இதுவே.

எளிமையான எழுத்து முறைக்குத் தமிழில் முன்னோடிகள் இருக்கிறார்கள். கு.ப. ராஜகோபாலன், கு. அழகிரிசாமி போன்றவர்களை இந்தப் போக்கின் எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம். அசோகமித்திரனையும் அவர்கள் வரிசையில் வைத்துப் பார்க்க முடியும். ஆனால் அசோகமித்திரனின் எளிமைக்கு அப்பால் தெரியும் தீவிர உணர்வுகளே அவரைத் தனித்துக் காட்டுகின்றன. இது அவரது எழுத்தின் இயல்பு மட்டுமல்ல; அவர் வாழ்ந்த வாழ்க்கையின் குணமும் கூட. அவரது தோற்றம் எளிமையானது. எழுத்தாளன் என்ற நிலையில் சமூகம் சின்னதாகப் புருவம் உயர்த்தி லேசாக வியந்து  பார்க்கும் பார்வைக்கு முற்றிலும் மாறுபட்டவர்.  சாதாரணமானவர் . அவரை அணுகுவது சுலபம். அவரது எழுத்துக்கள் பெரும் பத்திரிகைகளிலும் பொதுப் பார்வைக்கே எட்டாத சிற்றிதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. 'யாரும் பார்க்கக் கூடச் செய்யாத பத்திரிகை களுக்கெல்லாம் எதற்காக உங்கள் படைப்புகளைக் கொடுக்கிறீர்கள்? ' என்று ஒருமுறை கேட்டபோது சொன்னார். 'என்னை நம்பிக் கேட்கிறார்களே, அவர்களை எப்படி ஏமாற்றம் அடையச் செய்வது? அதுதான் எழுதிக் கொடுத்து விடுகிறேன்'. 

எளிமையும் சாதாரணத்தன்மையும் அவருக்கு இயல்பாகவே அமைந்தவை. எனினும் அதிலும் சமரசம் மேற்கொள்ளாதவராகவே இருந்தார். பத்திரிகைகளின் தேவைக்காக  எழுத்தை மலினப்படுத்தாமல்  தனது தரத்திலேயே நின்றவர். வாழ்விலும் அதையே பின்பற்றினார் என்று சொல்ல முடியும்.

மலையாளக் கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஆலுவாயில் அனைத்திந்திய இலக்கியத் திருவிழா ஒன்றை நடத்தினார்.  அதற்கு அழைக்கப்பட்டிருந்த தமிழ் இலக்கியவாதிகளில் அசோகமித்திரனும் ஒருவர். அவரது எளிமையான தோற்றம் காரணமாக வட மாநிலங்களிலிருந்து வந்திருந்த இலக்கியவாதிகள் அவரை யாரோ ஒருவர் என்ற எண்ணத்தில் கடந்து போனார்கள். விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த நட்சத்திர எழுத்தாளர்களான யூ. ஆர். அனந்தமூர்த்தி. தகழி சிவசங்கர பிள்ளை, எம்.டி.வாசுதேவன் நாயர் போன்றோர் அசோக மித்திரனைத் தேடி வந்து நலம் விசாரித்தபோதுதான் அவர்களுக்கு அவரது அருமை புரிந்தது. அவரைக் கடந்து போன எழுத்தாளர்களிடம் தானும் எழுத்தாளனே என்று அவர் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கலாம். அவர்களது கண் மலர்வதையோ, இதழ் புன்னகையில் அரும்புவதையோ பார்த்திருக்கலாம். 'ஏன் சார் அதைச் செய்யவில்லை? ' என்று அசட்டுத் தனமாகக் கேட்டதும் ' எல்லாரும் எழுதுகிறார்கள். நானும் எழுதுகிறேன். அதில் எடுத்துச் சொல்லிக் கொள்ள என்ன இருக்கு? ரைட்டரும் சாதாரணமான ஆள்தானேப்பா? என்று சாதாரணமான பதிலைத்தான் சொன்னார். சாதாரணமாகச் சொல்லப்பட்ட அசாதாரணமான பதில் இது. இதுவே அவரது எழுத்துகளிலும் துலங்குகிறது.

புகழ் பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனமொன்றில் சுமாரானது என்றாலும் நிரந்தரமான வேலையில் இருந்தவர் அசோகமித்திரன். எழுத்தின் மீதுள்ள காதலால் முழு நேர எழுத்தாளர் ஆனவர்.  ஆங்கிலம் தவிர அவர் எழுதிய படைப்புகள் பெரும்பாலும் சிறிய அளவிலான இதழ்களிலேயே வெளிவந்தன. அதன் வாயிலாகக் கிடைத்திருக்கும் ஊதியம் முட்டில்லாத அன்றாட வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிப்பதாக நிச்சயம் இருந்திராது. எனினும் தனது வறுமையைக் குறித்தோ சொந்தத் துயரங்களைக் குறித்தோ அவர் ஒரு சொல் சொன்னதில்லை. எழுதியது மில்லை. எழுத்தாளனாகத் தன்னை சமூகம் கொண்டாவில்லை என்று குறைப்பட்டுக் கொள்ளவும் இல்லை. எல்லாத் தொழிலையும் போல எழுத்தும் ஒரு தொழில்; அதை நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செய்வதே தனது கடமை என்று வாழ்ந்து காட்டினார் . அவரது இயல்பில் மேன்மையானது இந்த சுயநிர்ணயம் எனலாம். அதுவே பின்னர் பெரும் விருதுகளையும் பாராட்டுகளையும் கொண்டு வந்து சேர்த்தது. அப்போதும் தன்னைத் தானாகவே வைத்துக் கொண்டார் என்பதே அவரது பெருமை.

அசோகமித்திரனின் படைப்பு முன்வைக்கும் உலகம் சாதாரணமானது. அதில் நடமாடும் மனிதர்கள் எளியவர்கள். அவர்களது எளிய செயல்களே அவரது கதைகளுக்கு மையங்களாகின்றன. ஆனால் எளிய செயல்களில் உள்ளோடியிருக்கும் ஆழமான சிக்கல்களை, வியப்புகளை, மகிழ்ச்சிகளை, வலிகளை அசாதாரணமான வகையில் வெளிப்படுத்தினார். அவரது கதைமாந்தர் எல்லாரும் சலிப்பூட்டும் வாழ்க்கையைத் தொடர்பவர்கள். பெரும்பாலும் பெரும் கனவுகளோ பேராசைகளோ இல்லாதவர்கள். வயிற்றுக்காகவும் தன்மதிப்புக்காகவும் போராடுகிறவர்கள். அவர்களது அன்றாடச் செயல்களில் அவர்களே அறியாத நுண் ரகசியங்களையே அவர் கதையாக மாற்றினார். வெற்றி பெற்ற மனிதர்களின் கதைகளை அல்ல; தோல்வியில் துவண்டும் வாழ்க்கையை மீட்க விரும்புகிறவர்களே அவரது மனிதர்கள். பிழைப்புக்காக ஆந்திராவிலிருந்து மெட்ராசுக்கு வந்து கார் ஓட்டக் கற்றுக் கொள்ளும் சிறுவன் மல்லையாவின் செயலில் என்ன சுவாரசியமான கதை இருக்க முடியும்தட்டுத்தடுமாறி ஓட்டப்பழகிய கார் அவனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் அவன் பெறும் தன்னம்பிக்கை அசோக மித்திரனிடம் கதையாகிறது. அகில இந்தியப் புகழ் பெற்ற திரை நட்சத்திரமான சத்யன் குமாரின் பளபளப்பும் படாடோபமுமான வாழ்க்கையின் வெற்றிக் கதையை அசோகமித்திரன் நாவலாக்கவில்லை. அவனுடைய தார்மீகச் சறுக்கலையே, குற்ற உணர்வையே  'மானசரோவர்' நாவலில் சித்தரிக்கிறார். இவை மேலோட்டமான உதாரணங்களே. எளிமையை நுட்பமாகவும் சாதாரணத்தை அசாதாரணமாகவும் பாவனைகள் இல்லாமல் இலக்கியமாக்கியவர் என்பதே அசோகமித்திரனை இலக்கிய உலகம் மதிக்கவும் நினைவில் வைத்திருக்கவுமான காரணமாக இருக்கும். 'சிக்கனமும் நுட்பம் கொண்டதுமான உரைநடைக்காகவும் கீழ் மத்தியதர வர்க்க மானுடர்களின் சலிப்பாகத் தென்படும் வாழ்க்கைச் சிக்கலுக்குள் ஊடுருவிப் பார்க்கும் திறனுக்காகவும் அசோகமித்திரன் போற்றப்படுவார்' என்று எழுத்தாளர் அரவிந்த் அடிகா குறிப்பிடுவது இதற்குச் சான்று.

25 மார்ச் 2017 தி இந்து நாளிதழில் வெளிவந்த அஞ்சலிக் கட்டுரையின் சுருக்கப்படாத வடிவம்


வியாழன், 23 மார்ச், 2017

அசோகமித்திரன்





லையாள எழுத்தாளரும் நண்பருமான சக்கரியாவுடன் பேசிக் கொண்டிருந்த சந்தர்ப்பமொன்றில் பின்வருமாறு சொன்னார்.

''மலையாள எழுத்தாளர்களான நாங்கள் நவீனத்துவம் என்ற பெயரில் சிரமப்பட்டு எட்டிய இடங்களை உங்கள் ஆசாமி மிக எளிதாக அடைந்து விடுகிறார். முகத்தைப் பார்த்ததும்  முன்னால் இருக்கும் ஆளின் முழு ஜாதகத்தையும் சொல்லி விடுகிற தேர்ந்த ஜோதிடரைப் போன்றவர். ஒரு வரியில், ஒற்றைக் குறிப்பில் ஒரு கதாபாத்திரத் தையும் ஒரு பின்னணி யையும் உருவாக்கி விடுகிறார். அலங்காரங்கள் எதுவும் இல்லாத  வரிகள் மூலமே இடத்தையும் காலத்தையும் மனித மனங்களையும் சித்தரித்து விடுகிறார். அவர் எழுத்துக்களைத் தாமதமாகத்தான் படித்தேன்  என்பது நிஜமாகவே வெட்கத்தைத் தருகிறது. இன்னும் சிறிது காலத்துக்கு முன்னாலேயே படிக்கக் கிடைத்திருந்தால் நான் இன்னும்  மேலான  மனிதனாகவும் இன்னும் சிறந்த எழுத்தாளனாகவும் ஆகியிருக்கலாம்''.

சக்கரியா குறிப்பிட்ட ஆசாமி நவீனத் தமிழின் மகத்தான எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன். சக்கரியா குறிப்பிட்ட வாசகங்கள் மிகையல்ல. மிகவும் உணர்வுபூர்வமாகச் சொன்னவை. பொதுவாக மலையாள எழுத்தாளர்கள் பிற இந்திய மொழி எழுத்தாளர்களைப் பொருட் படுத்துவதோ அவர்கள் எழுத்துக்களைப் பற்றிப் பேசுவதோ அபூர்வம். வங்க மொழி எழுத்தாளர்கள் மட்டும் இதில் விதி விலக்கு. எனவே சக்கரியாவின் சொற்கள்  தமிழ் வாசகனாக என்னைப் பரவசமடையச் செய்தன. வாய்ப் பேச்சாக மட்டுமல்லாமல் அசோகமித்திரனின் 'தண்ணீர்' நாவலின் ஆங்கிலப் பதிப்புக்கு எழுதிய முன்னுரையிலும் தமிழில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றிலும் சக்கரியா  தனது கருத்தை அழுத்தமாகவே குறிப்பிட்டிருக்கிறார்.

காலச்சுவடு இதழுக்காக நண்பர் தேவிபாரதியும் நானும் அசோகமித்திர னுடன் நேர்காணல் மேற்கொண்டபோது  இதைச் சுட்டிக் காட்டினேன். உலகத்துச் சிறந்த எழுத்தாளர்களில்  ஒருவர் என்று நான் கருதும் சக்கரியா என் மொழியில் எழுதும் எழுத்தாளரைப் பாராட்டிச் சொன்ன வார்த்தைகள் முக்கியமானவை என்ற சிலாகிப்புடன் அதைத் தெரிவித்தேன். கேட்டுக் கொண்டிருந்த அசோகமித்திரனிடம் அதையொட்டி எந்தச் சலனமும் இல்லை. மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் சிறிய இடைவெளிக்குப் பிறகு மெல்லிய குரலில்  'சக்கரியா ரொம்ப மிகையாகச் சொல்கிறார் ' என்று சாதாரணமாகச் சொன்னார். அந்த எதிர்வினை உடனடியாக எனக்கு ஏமாற்றத்தையே அளித்தது. பின்னர் நிதானமாக யோசித்துப்  பார்த்தபோது புரிந்தது,  அசோகமித்திரன் அப்படியல்லாமல் வேறு எப்படிச் சொல்வார்? என்று.

அசோகமித்திரன்  சாதாரணமானவர்; எளிமையானவர் .அவரது இந்த இயல்புகளே அவரது எழுத்தின் இயல்புகளாகவும் அமைந்திருக்கின்றன. இது மிக அரியது என்று நம்புகிறேன்.

நான் இதுவரை பார்த்த எழுத்தாளர்களில் இந்த அரிய வகைக்கு இருவரை மட்டுமே உதாரணங்களாச் சொல்ல முடியும். மலையாள எழுத்தாளரான வைக்கம் முகம்மது பஷீரையும்  அசோகமித்திரனையும். இருவரும் முழுநேர எழுத்தாளர்களாக வாழ்க்கையை மேற்கொண்டதும் ஒருவேளை காரணமாக இருக்கலாம். பட்டினிக் கலைஞர்களாக வாழ்ந்தபோதும்  அந்த வாழ்க்கையைப் புகார்கள் இல்லாமல் ஏற்றுக் கொண்டிருந்ததும் துன்பக் கதைகளையும் நுட்பமான நகைச்சுவையுடன் வெளிப்படுத்தியதும் எளிய மனிதர்களின் செயல்களை  மிகுந்த கரிசனத்துடன் முன்வைத்ததும் இந்த ஒப்பீட்டுக்குக் காரணமாக இருக்கலாம்.

சாதாரணமான ஒன்றுக்குள் நாம் காணாமல் போகிற அசாதாரணமான ஒன்றைச் சுட்டிக் காட்டுவதுதான் அசோகமித்திரனின் கதைகளின் இயல்பு. எளிமையானது என்று நாம் மேம் போக்காக நினைப்பது அவ்வளவு எளிமையானதல்ல; கண்ணுக்குப் புலப்படாத சிக்கல்களைக் கொண்டது என்பதைக்  கதைகளை வாசிக்கும்போது உணர முடியும். அவருடைய  கதைகளில் ஒன்று 'விரிந்த வயல்வெளிக்கு அப்பால்'. ரயில் பாதையை ஒட்டிய ஒற்றையடிப் பாதையில் மாணிக்கம் சைக்கிளை ஓட்டிச் செல்கிறான். அந்த நேரத்தில் ஒரு ரயிலும்  வருகிறது. அதுவரை வெறுமனே சைக்கிள் ஓட்டி வந்தவன் இப்போது ரயிலுடன் போட்டி போட்டு ஓட்டுகிறான். ஒரு கட்டத்தில் ரயில் இஞ்சினை  நெருங்கி விடுகிறான். அந்த  கணத்துக்குப் பின்பு ரயிலை முந்த விடுகிறான். உண்மையில் மிக சாதாரணமான காட்சி இது. சைக்கிள் ஓட்டுவதில் விருப்பமுள்ள எந்தச் சிறுவனும் ஈடுபடும் செயல். ஆனால்  அதில் மறைந்திருக்கும் மன உணர்வை எளிமையான சொற்களில் கதை காட்டி விடுகிறது. எந்திரத்துக்கும் மனிதனுக்குமான போட்டி, தான் உருவாக்கிய பொருட்களை விடவும்  மனிதனே மேலானவன் என்ற நம்பிக்கை என்று வெவ்வெறு விளக்கங்களுடன் கதையை அணுகலாம்.

சாதாரணமாகத் தோற்றமளிக்கும் கதையின் உட்பிரதியாக அசாதாரண மான  இன்னொன்றைக் கொண்டிருப்பவையே அசோகமித்திரனின் பெரும்பான்மைக் கதைகள். அசாதாரணம் என்று நாம் நம்பும் ஒன்றின் சாதாரணத்துவத்தையும் அவர் கதைகள் சித்தரி க்கின்றன. பிரயாணம் என்ற கதையின் பின்னணியே வித்தியாசமானது. சாகும் தறுவாயி லிருக்கும் குருவை அவரது சீடன் ஒடு பலகை வண்டியில் வைத்து இழுத்து செல்கிறான்.பனிமலைப் பகுதியில் ஓநாய்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்கின்றன. இருதரப்பினருக்கும் இடையில் நடக்கும் ஆக்கிரமிப்பில் சீடனும் குருவும் தனித்தனியாகப் பிரிந்து போகி றார்கள். சீடன் ஓநாய்களை விரட்டி விடுகிறான். பொழுது விடிந்து பார்க்கும்போது தலையில்லாமல் கிடக்கும் குருவின் பிணம். அதன் கையில் ஒரு ஓநாயின் பிய்த்து எடுக்கப்  பட்ட முன்னங்கால் தென்படுகிறது. அசாதாரணமானவர் என்று கருதப்படும் துறவியின் மன ஆழத்தில் வாழ்க்கை மீதான வேட்கையே மிஞ்சி இருக்கிறது என்ற சாதாரண உண்¨ மயை கதை சொல்லாமல் சொல்லுகிறது. இவை மேலோட்டமான உதாரணங்கள் மட்டுமே.

அசாதாரணம் என்று நான் பயன்படுத்தியிருக்கும் சொல்லே அசோக மித்திரனுக்கு ஒவ்வாமயைத் தரக்கூடும். எளிமை , சாதாரணம் என்பவையே அவரது எழுத்தின் இயல்புகள். இதை அடைவது மிக அசாதாரணம் . பிரம்மாண்டம், ஆடம்பரம், வசதி போன்ற சொற்களுக்கும் செயல்களுக்கும் அவருடைய வாழ்க்கையிலும் எழுத்திலும் இடமில்லை என்றே தோன்றுகிறது. தஞ்சாவூர் பெரிய கோவிலின் முன்னால் அவரை நிற்க வைத்து 'எவ்வளவு பிரம்மாண்டம் இல்லையா சார்? ' என்றுகேட்டால் அவர் மௌனமாக இருப்பார். சிறிது  கழித்து ' சாமி கும்பிடறத்துக்கு சின்னக் கோவில் போதாதா? இவ்வளவு பெரிசா எதுக்கு? ' என்று கேட்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ' இப்போதெல்லாம் புதிய எழுத்தாளர்களே கூட ஆயிரம் பக்கங்களைத் தாண்டிய நாவல்களை எழுதி விடுகிறார்கள். நீங்கள் ஏன் அப்படி முயற்சிக்கக் கூடாது ? ' என்ற கேள்விக்கு சட்டென்று அசோகமித்திரனிடமிருந்து பதில் வந்தது. ' எனக்கு  ஒரு இருநூறு பக்கத்துக்கு அதிகமான நாவலை எடுத்தாலே கை வலிக்க ஆரம்பிச்சிடும். ஆயிரம் பக்க நாவலையெல்லாம் எப்படிப் படிக்கிறதுங்க இல்லை; எப்படிக் கையில தூக்கி வெச்சுக்க முடியும்கிறதே ஆச்சரியமா இருக்கு?'. இந்த பதிலையும் அவரைத் தவிர வேறு யாரும் யோசிக்க முடியுமா?

ஆனாலும் அவரது சமகாலத்தியவர்களுடன் ஒப்பிட்டால் அவரே நிறைய எழுதியிருப்பவர். அவரது இதுவரையான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு ஆயிரத்து அறுநூறு பக்கங்கள் கொண்டது. அவரது  எல்லா நாவல்களை யும் ஒரே புத்தகமாக்கினால் அதுவும் ஏறத்தாழ அதை விட ஒன்றரைப் பங்கு அதிகமாக வரலாம். கட்டுரைகள் சுமார் இரண்டாயிரம் பக்கங்களை எட்டும்.  எளிமையின் கலையின் பிரம்மாண்ட சாதனை என்று சொல்லத் தோன்றுகிறது. நிறைவளிக்கும் சாதனையும் கூட.



ன் இலக்கிய உலக நுழைவுக் கட்டங்களில் நான் ஆவேசமாக வாசித்த எழுத்தாளில் அசோகமித்திரனும் ஒருவர். மிக விரைவில் அபிமானத்துக்கு உரியவராக மாறினார். எங்களூர்  கோவையில் மார்க்சிய அறிஞர் ஞானி ஓவ்வொரு ஆண்டும் மே மாத வாக்கில் முக்கியமான சமகால எழுத்தாளர் ஒருவரை அழைத்துக் கூட்டம் நடத்துவார். 1976 இல் சுந்தர ராமசாமி. 77 இல் அசோகமித்திரன்.

பத்தொன்பது வயதுப் பையனான நான் முதன்முதலில் வாசிப்பைக் கடந்து கட்டுரை எழுதியது அசோகமித்திரனைப் பற்றித்தான். அவருக்காக நடத்தப் பட்ட சிறப்புக் கூட்டத்தில்  வாசிப்பதற்காக அதுவரை வெளிவந்திருந்த அவரது நாவல்களையும் சிறுகதைத் தொகுப்புகளையும் ஊன்றிப் படித்து நான் எழுதிய கட்டுரையே எனது முதல் இலக்கியக் கட்டுரை.  அதற்குக் கிடைத்த முதல் பாராட்டும் அசோகமித்திரனிடமிருந்துதான் . உபரியாக்க் கிடைத்த ஊக்கம்  - கட்டுரைப் பிரதியைப் பார்வையிட்டு அவர் சொன்ன வாசகம். ‘'உங்க கையெழுத்து அழகா இருக்கு'. 

சென்னை வாழ்க்கையில் அவரைப் பலமுறை கூட்டங்களில் சந்தித் திருக்கிறேன்.  நண்பர் விமலாதித்த மாமல்லனுடன்  ஊர் சுற்றித் திரிந்து விட்டு சும்மா அசோகமித்திரனை அவர்  வீட்டில் போய்ப் பார்த்த நாட்கள் அநேகம். பின்னர் குங்குமம் வார இதழில் பணியாற்றிய காலத்தில் ஒரு தீபாவளி இணைப்பிதழில் வெளியிட அசோகமித்திரனிடம் கட்டுரை § கட்டேன். தலைப்பு நான் சொன்னது. எழுத்தாளருக்குப் பிடித்த ஐந்து படங்கள்'. தலைப்புக்கு உதவியவர் அன்று என் சக ஊழியராக இருந்த எஸ்.ராம கிருஷ்ணன். கட்டுரையை வ ¡ங்கி வந்தவரும் அவரே. (பார்க்க: அசோக மித்திரன் கட்டுரைகள் – 2. கிழக்குப் பதிப்பகம் பக்: 859 ) அதற்கு முன்பே அசோகமித்திரனுடன் ஏற்பட்டிருந்த மானசீக நெருக்கமே  அவரைக் கட்டுரை எழுதச் செய்யலாம் என்று தூண்டியது. மலையாளக் கவிஞரும் நண்பருமான பாலசந்திரன் சுள்ளிக்காடின் முயற்சியில் கேரள மாநிலம் ஆலுவாயில் நடந்த மானசோத்ஸவம்' இலக்கியச் சந்திப்பில் அசோக மித்திரனுடன் ஒரே அறையில் தங்கியிருந்தேன். அன்று அவர் பேசியவை இன்றும் நினைவில் இருப்பவை. குறிப்பாக ஹெமிங்§ வயையும் நார்மன் மெய்லரையும் பற்றிய அகப் பார்வை மிளிரும் பேச்சு. 1999 இல் நண்பரும் வங்காளக் கவிஞருமான அஞ்சென் சென் கேட்டுக் கொண்ட்தற்கிணங்க சென்¨ னயில் வங்கக் கவிஞர் ஜீபனானந்த தாஸ் நூற்றாண்டு விழாவில் அவரை அழைத்து வந்து பேசவைத்தேன். நானும் கட்டுரை வாசித்தேன். அதில் சாகித்திய அக்காதெமி வெளியீடான ஜீபனானந்த தாஸ் வாழ்க்கை வரலாறு தமிழாக்கத்தைப் பற்றிச் சொன்னதை நவீன கவிதையின் முன்னோடியான ஜீபனானந்தா க. த. திருநாவுக்கரசின் மொழியாக்கத்தில்  புராதனக் கவிஞராகத் தென்படுகிறார் என்று நான் சொன்னதைச் சுட்டிக் காட்டிச் சொன்னார். '' திருநாவுக்கரசு அவர் துறையில பெரிய ஸ்காலர். நீங்க இப்படிக் கடுமையாச் சொல்லியிருக்க வேண்டாம்''. அது ஒரு பாடத்தின் பயிற்சியாக மனதில் பதிந்தது. என்றென்றும் பின்பற்ற வேண்டிய அறிவுரையாகவே அதைக் கருதுகிறேன்.

சோகமித்திரனைச் சந்தித்துப் பேசுவது எப்போதும் உற்சாகம் தரும் செயலாகவும் புதிதாக ஏதோ விஷயத்தைத் தரும் அனுபவமாகவும் இருந்திருக்கிறது. அவரது கதைகளில் போலவே பேச்சிலும் சொல்லாமல் விடப்படுபவை அதிகம். அதைப் பின்னர் யோசிக்கும்போது என்னையறியாமல் சிரித்ததும் வியந்ததும் உண்டு. அவருக்கு உடல்நலம் குன்றியிருப்பதாகக்  கேள்விப்பட்டு நண்பர்களுடன் பார்க்கச் சென்றிருந்தோம். அவர் வீட்டின் காவலாளி எங்களை அனுமதிக்க மறுத்து விவாதித்துக் கொண்டிருந்தபோது அவரே வெளியே வந்து  அழைத்துச் சென்றார். ஓரிரு மணிநேர உரையாடலுக்குப் பிறகு விடை பெற்றுக் கொண்டபோது உடன் வந்து வழியனுப்பினார். ' உடம்பு சரியில்லை என்று ஒருவரைப் பார்க்க  வந்தால் யாருக்கு உடம்பு சரியில்லையோ  அவரே ' வாங்கோ' என்று வரவேற்பது பார்க்க வந்தவர்களுக்கு ரொம்ப ஏமாற்றத்தைத் தரும் இல்லையா?' என்று கேட்டார். அந்த நாள்  முழுவதும் இதை யோசித்துச் சிரித்துக் கொண்டிருந்தேன். கவிஞர் ஞானக்கூத்தனின் இறுதி ஊர்வலத்தின்போது எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என்று பலரும்  வந்திருந்தார்கள். இறுதி அஞ்சலி செலுத்த வந்த அசோகமித்திரன் சொன்னது. ' அவருக்குத் தெரிந்த எல்லாரும் வந்திருக்கிறார்கள். இது அவருக்குத் தெரியாது இல்லையா?' அன்றைய தினம் முழுக்க இதையே யோசித்துக் கொண்டிருந்தேன்.

@


 எளிமையின் உன்னதம் - என்ற தலைப்பில் அந்திமழை , ஜனவரி 2017 இதழில் வெளியான கட்டுரை.

செவ்வாய், 14 மார்ச், 2017

க நா சு வின் மதிப்புரை


கோடை காலக் குறிப்புகள் என்ற என் முதல் கவிதைத் தொகுப்பு 1985 மார்ச்சில் வெளியானது.சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன்,வல்லிக் கண்ணன், தி.க.சி., ஆகியோர் சுருக்கமாகவும் விரிவாகவும் தங்கள் கருத்துக்களை எழுதி யிருந்தனர். ஓர் இளங்கவிஞனுக்கு பெரும் ஊக்கத்தை அளித்தவை அந்தக் கருத்துக்கள். தன்னம்பிக்கையையும் கொஞ்சூண்டு கர்வத்தையும் அவை அளித்தன. தொகுப்பு வெளியாகிச் சரியாக ஓராண்டுக்குப் பிறகு வெளியான மதிப்புரை மேலும் மகிழ்ச்சி அளித்தது. தில்லியிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்திருந்த க.நா.சுப்ரமண்யன் சிறப்பாசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்ட 'ஞானரதம்' இதழில்  அந்த மதிப்புரையை எழுதியிருந்தார். மதிப்புரை வெளியான இதழ் இட மாற்றங்களால் கைநழுவிப் போனது.க.நா.சு. நூற்றாண்டை ஒட்டி காலச்சுவடு வெளியிட்ட சிறப்பிதழில் ( ஜனவரி 2012 ) எழுதிய ‘ க. நா.சு.வின் எழுத்து மேஜை ‘ கட்டுரையிலும் இந்த இழப்புப் பற்றிப் பின்வருமாறு எழுதி யிருந்தேன்.

வர்  ( க.நா. சுப்ரமண்யன் ) பயன்படுத்திய மேஜை இன்னும் ( என்னிடம் ) இருக்கிறது. ஈட்டி மரத்தில் செய்த மேஜை. வலது பக்கம் மேலே இழுப்பறையும் அதற்குக் கீழே ஓர் அறையும் கொண்ட மேஜை. இடது பக்கம் கால்களை நுழைத்து உட்கார வசதியான அமைப்பு. அதைக் கொண்டு வந்தபோது இழுப்பறைக்குள் காலியாகத்தான் இருந்தது. ஏதோ ஒரு நாள் அந்த இழுப்பறையை முழுவதுமாகக் கழற்றி எடுத்தேன். இரண்டு அறைகளுக் கும் இடையில் பத்திரிகைத் தாள்களிலொன்று பதுங்கி ஒட்டியிருந்தது.எடுத்துப் பார்த்தேன். க. நா. சு. ஆசிரியராக இருந்து நடத்திய ஞானரதம் பத்திரிகைப் பின்னட்டைப் பக்கத்தின் கிழிசல். கீழே க. நா. சுவின் பெயர். தமிழ்நாடு மேப்பைப் போலிருந்த கிழிசலில் படிக்க முடிந்த சில அரை, கால் வரிகளில் என் பெயர். என் முதல் தொகுப்பான கோடைகாலக் குறிப்புகளுக்கு அவர் எழுதிய மதிப்புரை அது. முழுப்பிரதி எங்கோ காணாமற்போனதில் ஏற்கனவே துக்கப்பட்டுக்கொண்டிருந்தேன். கிழிசல் துக்கத்தை அதிகமாக்கியது.


சென்னையில் க. நா. சு.வைச் சந்திக்கப் போனதே அந்த மதிப்புரைக்கு நன்றி தெரிவிக்கத்தான். புத்தகம் வெளியான சமயத்தில் மூத்த எழுத்தாளர்களுக்கும் நண்பர் களுக்கும் பிரதிகளை அனுப்பியிருந்தேன். நான் அனுப்பாதவர்களில் ஒருவர் க. நா. சு. அனுப்பாத சிற்றிதழ் ஞானரதம். ஆனால் அதில்தான் மதிப்புரை வெளிவந்தது. அதற்கு நன்றி பாராட்டுவது நாகரிகம். ஆனால் க.நா.சுவை நேரில் சந்தித்தபோது சங்கோஜத்திலும் தயக்கத்திலும் அதைச் சொல்ல முடியவில்லை. பின்னர் வெகுகாலம் வரை அந்தத் துண்டுத்தாளைப் பாதுகாத்து வைத்திருந்தேன். வீடும் ஊரும் மாறியதில் அந்தப் பொக்கிஷம் காணாமற்போனது. அந்த ஞானரதம் இதழை இப்போதும் தேடிக் கொண்டிருக்கிறேன். எனக்கும் எல்லாத் தமிழ் எழுத்தாளர்களும் ஒரு காலத்தில் தவித்தது போன்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. நானும் தமிழ் இலக்கியக் காரனல்லவா? தேடிக் கண்டு பிடித்துப் பார்க்க வேண்டும்.

என்னைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார், க.நா.சு.?’


















                                                ஞானரதம் பிப்ரவரி 1986

வெவ்வேறு தேவைகளுக்காக கடந்த சில ஆண்டுகளில் ரோஜாமுத்தையா நினைவு நூலகம், கன்னிமரா பொது நூலகம் ஆகியவற்றில் தேடியபோது கூடவே 1986 பிப்ரவரி மாத ஞானரதம் இதழையும் தேடிக்கொண்டிருந்தேன். அகப்படவில்லை. சுந்தர ராமசாமி நூலகத்தில் ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ்களின் பைண்டு வால்யூம்கள்தாம் எப்போதும் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தன. க.நா.சுவின் ஞானரதம் தென்படவே இல்லை. இன்று தற்செயலாக சுரா நூலகத்தில் துளாவியபோது உதிரியாக வைத்திருப் பவற்றில் ஞானரதம் இதழ்களைப் பார்த்தேன். க நா சு சிறப்பாசிரியராக இருந்து கொண்டு வந்தவை எல்லா இதழ்களும். அவற்றுள் நான் தேடிய இதழும் கிடைத்தது.

















                                                    க நா சு  மதிப்புரை


மதிப்புரை வெளிவந்த ஞானரதம் இதழை சென்னை மயிலாப்பூர் லஸ் முனைக் கடையிலிருந்து வாங்கினேன். அதைப் பிரித்து மதிப்புரை வெளிவந்திருந்த கடைசிப் பக்கத்தை வாசித்தபோது மயிலாப்பூர் வான வீதியில் கந்தர்வர்கள் பாடிக் கொண்டும் கின்னரர்கள் இசைத்துக் கொண்டும் அரம்பையர்கள் ஆடிக் கொண்டும் போனார்கள். நாகர்கோவில் ஆகாயத்தில் இன்றும் அவர்களே போனதைப் பார்த்தேன். முப்பத்தியோரு ஆண்டுகளுக்குப் பிறகும் அதே இளமையுடன் இருந்தார்கள்.