புதன், 29 ஆகஸ்ட், 2018

வெள்ளப் பெருக்கில்...



    தகழி சிவசங்கரப் பிள்ளையின்  புகழ்பெற்ற கதைகளில் ஒன்று வெள்ளப் பொக்கத்தில் 
( வெள்ளப் பெருக்கில் ) . முக்கால் நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட கதை. அந்தக் காலப் பகுதியில் குட்டநாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் அனுபவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. ஓர் ஆர்வத்தால் உந்தப்பட்டு கதையைத் தமிழாக்கம் செய்ய முயன்றேன். மொழிபெயர்க்கும் நோக்கத்துடன் கதையை மறுமுறை வாசித்தபோது ஆர்வம் குன்றிப் போனது. மிகப் பழைமையான மொழி. எதார்த்தமான கதைச் சூழலுக்குப் பொருந்தாத கற்பனாவாத நடை. மனிதாபிமான அக்கறை வெளிப்பட்டே ஆக வேண்டும் என்ற ஆசிரியரின் விருப்பம் காரணமாக உருவாகியிருக்கும் சன்மார்க்க போதனை - இவையெல்லாம் ஆர்வத்தைக் குறைத்து மொழி பெயர்ப்பைக் கைவிடச் செய்தன. பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் தகழியின் கதையாச்சே என்ற வாஞ்சையில் முழுவதுமாகத் தமிழாக்கி முடித்தேன். எனினும் மொழியாக்கம் நிறைவு தரவில்லை. அப்படியே கிடப்பில் போட்டேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் ராம்ராஜ் ( தமிழ்த்துறை, பூசாகோ கலைக் கல்லூரி, கோவை ) தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தகழியின் இந்தக் கதை பற்றிக் கேட்டார். கேரளத்தில் அண்மையில் நிகழ்ந்த பெருவெள்ளத்தைப் பின்புலமாக வைத்துத், தான் எழுதிக் கொண்டிருக்கும்  நாடகப் பிரதிக்காகக் கதையைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பினார். ஞாபகத்திலிருந்த கதையைத் தொட்டுக் காட்டுவதுபோலச் சொல்லிவிட்டுப்  பழைய குறிப்பேடுகளைத் தேடினேன். 94 ஆம் ஆண்டு வாக்கில் மொழியாக்கம் செய்து வைத்திருந்த கதையைக் கண்டுபிடித்து கணிணிப் பிரதியாக மாற்றினேன். அந்த வேளையில் முன்னர் நினைத்ததுபோலக் கதை சோடை போன பிரதியல்ல என்று தோன்றியது. சமீபத்திய வெள்ளக் கொடுமைக் காட்சிகளை விடாமல் பார்த்தது காரணமாக இருக்கலாம் - கதை இன்றைய சூழலுக்கும் கச்சிதமாகப் பொருந்துவதாகத் தெரிகிறது.

’வெள்ளப் பெருக்கில்...’ கதையை மறு வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளத் தூண்டிய நண்பர் ராம்ராஜுக்கு மிக்க நன்றி.




                                                                                   வெள்ளப் பெருக்கில்...


ஊருக்குள் உயரமான இடமே  கோவில்தான். அங்கே கடவுளும் கழுத்தளவு வெள்ளத்தில் நிற்கிறார். வெள்ளம். எங்கும் வெள்ளம். ஊர்க்காரர்கள் எல்லாரும் கரையைத் தேடிப் போனார்கள். வள்ளம் இருக்கும் வீட்டில் காவலாள் நிறுத்தப்பட்டான். கோவிலின் மூன்று அறைகள் கொண்ட மாளிகைத் தளத்தில்  67 குழந்தைகள் இருந்தார்கள். 356 ஆட்களும் நாய், பூனை, ஆடு, கோழி முதலான வளர்ப்பு மிருகங்களும் ஒன்றாகக் கழிந்தார்கள்.ஒரு சச்சரவு இல்லை.

சேன்னப்பறயன் ஒரு இரவும் ஒரு பகலும் வெள்ளத்திலேயே நின்றான். அவனுடைய தம்புரான் மூன்னாயி உயிரைப் பிடித்துக் கொண்டு கரையேறிவிட்டார். குடிசைக்குள் முதலில் வெள்ளம் வரத் தொடங்கியதுமே ஓலையையும் கம்புகளையும் வைத்துப் பரண்கட்டியிருந்தார்கள். வெள்ளம் சட்டென்று வடிந்து விடும் என்று நினைத்து இரண்டு நாட்களை அதன்மேல் உட்கார்ந்து ஓட்டினார்கள். போதாக் குறைக்கு கொல்லை வாழை மரத்தில் நான்கைந்து குலைகள் இருக்கின்றன.  வைக்கோல் போரும் கிடக்கிறது.  அங்கிருந்து வெளியேறினால்  ஆம்பிள்ளைகள் அவற்றையெல்லாம் அடித்துக்  கொண்டு போய்விடலாம். குடிசையை வெள்ளம் மூழ்கடிக்க முப்பது நாழிகை கூட ஆகாது என்றும் தனக்கும் தன்னுடைய  குடும்பத்துக்கும் முடிவும் வந்து விட்டது என்றும் அவன் முடிவு கட்டியிருந்தான். பயங்கர மழை விட்டு முன்று நாட்கள் ஆயின. சேன்னன் கூரையின் ஓலையைப் பிரித்து எப்படியோ வெளியேறி நான்கு பக்கமும் சுற்றிப் பார்த்தான். வடக்காக ஒரு கெட்டு வள்ளம் போகிறது. சேன்னப்பறயன்  உரக்கக் கூவி அவர்களை அழைத்தான். அதிர்ஷ்டவசமாக வள்ளக்காரர்களுக்கு காரியம் புரிந்த்து. வள்ளத்தை குடிசையை நோக்கித் திருப்பினார்கள். குழந்தைகளையும் பெண்டாட்டியையும் நாயையும் பூனையையும் குடிசையின் கூரை விட்டங்கள் வழியாக வெளியில் இழுத்துப் போட்டான். அதற்குள் வள்ளமும் அருகில் வந்த்து. பிள்ளைகள் வள்ளத்தில் ஏறிக் கொண்டிருந்தார்கள். ‘சேன்னச்சோ போறிங்களா?’ என்று மேற்கேயிருந்து யாரோ கேட்டார்கள். ‘இந்தப் பக்கம் வா’. அது
மடியத்தறை குஞ்ஞேப்பன். அவனும் கூரைமேல் நின்றுதான் கூப்பிடுகிறான். அவசரமாகப் பெண்டாட்டியை வள்ளத்தில் ஏற்றி விட்டான். அந்த இடைவெளியில் பூனையும் வள்ளத்தில் தாவி ஏறியது. நாயின் நிலைமையை யாரும் யோசிக்கக வில்லை. அது குடிசையின் மேற்குச் சரிவில் அங்குமிங்குமாக மோப்பம் பிடித்துக் கொண்டு நடந்தது.



இப்போது பரணுக்கு மேலே முழங்கால்வரையும் வெள்ளம்.
மேற்கூரையின் இரண்டு வரிசை ஓலைகளும் வெள்ளத்துக்கு அடியில் இருந்தன. சேன்னன் உள்ளேயிருந்து  அழைத்தான். அழைப்பை யார் கேட்க? பக்கத்தில் யார் இருக்கிறார்கள்? கர்ப்பிணியான ஒரு பறைச்சி, நாலு குழந்தைகள், ஒரு பூனை, ஒரு நாய் இவ்வளவு ஜீவன்கள் அவனை நம்பி இருக்கிறார்கள்.

வள்ளம் நகர்ந்து தொலைவுக்குப் போனது..

நாய் கூரையின் உச்சிக்கு வந்தது. சேன்னனின் வள்ளம் தொலைதூரம் கடந்திருந்தது. அது பறந்து போகிறது. அந்த ஜந்து மரணவேதனையுடன் ஊளையிடத் தொடங்கியது. ஆதரவற்ற மனிதனின் குரலுடன் ஒப்பிடக் கூடிய ஒலித் தொடர்களை எழுப்பியது. யார் கேட்க? குடிசையின் நான்கு சுவர்கள் மீதும் ஓடியது. சில இடங்களை முகர்ந்த்து. ஊளையிட்டது..

குடிசைக் கூரைமேல் நிம்மதியாக உட்கார்ந்திருந்த ஒரு தவளை எதிர்பாராத இந்த ஆர்ப்பரிப்பைக் கேட்டு நாயின் முன்பாகவே ;தொபீர்’ என்று வெள்ளத்தில் குதித்தது. நாய் பயந்து திடுக்கிட்டுப் பின்னோக்கித் துள்ளி நீரில் ஏற்பட்ட அதிர்வைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த்து.

அந்த விலங்கு அங்கும் இங்குமாகப் போய் மோப்பம் பிடித்தது உணவைத் தேடியதாலாக இருக்கலாம். ஒரு தவளை அதன் நாசித்துவாரங்களுக்குள் மூத்திரம் பெய்துவிட்டு தண்ணீரில்  குதித்து ஓடியது. நாய் அசௌகரியமாகச் செருமியது தும்மியது தலையை உலுக்கிச் சீறியது முன்னங் கால்களில் ஒன்றால் முகத்தைத் துடைத்தது.

பயங்கரமான பேய் மழை மீண்டும் தொடங்கியது. ஒண்டி ஒடுங்கி உட்கார்ந்து அந்த நாய் அதைப் பொறுத்துக் கொண்ட்து.

அதன் எஜமானன் அம்பல்புழைக்குப் போய்ச் சேர்ந்திருந்தான்.

இரவு ஆனது. ஒரு மூர்க்கமான முதலை நீரில் பாதி மூழ்கிக் கிடக்கும் அந்தக் குடிசையை உரசிக் கொண்டு மெல்லமெல்ல நீந்திப் போனது. பயந்துபோய் வாலைத் தாழ்த்தியபடி நாய் குரைத்தது. எதுவும் தெரியாத பாவனையில் முதலை நீந்திப் போனது.

முகட்டில் உட்காந்திருந்த அந்த மிருகம், கார்மேகங்கள் திரண்ட, அந்தகாரத்தின் பீதிபடர்ந்த ஆகாயத்தைப் பார்த்து ஊளையிட்டது. நாயின் தீனக் குரல் வெகுதூரத்திலிருந்த இடங்களையும் எட்டியது. இரக்கமுள்ளவனான வாயு பகவான் அதைச் சுமந்து கொண்டு பாய்ந்தான். வீட்டைக் காவல் காக்க நின்றிருந்த சில இதயங்கள் ‘அய்யோ குடிசைமேல் உட்கார்ந்து நாய் ஊளையிடுகிறது’ என்று சொல்லியிருக்கலாம். அதன் எஜமான் இப்போது கடற்கரையில் இரவு உணவு அருந்திக் கொண்டிருக்கலாம். சாப்பிட்டு முடிக்கும்போது வழக்கம்போல இன்றும் அதற்கான ஒரு உருண்டைச் சோற்றை உருட்டிக் கொண்டிருக்கலாம்.


சிறிது நேரம் அதி உச்சமாக நாய் ஊளையிட்டது. பிறகு குரல் அடங்கி மௌனமானது. வடக்கே எங்கோ ஒரு வீட்டிலிருந்து காவலாளி ராமாயணம் வாசிக்கிறான்.அதைக் கவனிப்பதுபோல நாய் அமைதியாக வடக்குப் பார்த்து நின்றது. பின்னர் அந்த ஜீவன் தொண்டை கிழிவதுபோல மீண்டும் நெடுநேரம் ஊளையிட்டது.

அந்த இரவின் அமைதியில் செவிக்கினிய ராமாயண வாசிப்பு மீண்டும் எங்குப் பரவியது. நம்முடைய ஞமலியும் அந்த மனிதக் குரலுக்குச் செவிசாய்த்துச் சற்று நீண்ட நேரம் அசையாமலே நின்றது.

ஒரு குளிர் காற்றில் அந்த இனிய அமைதிப் பாடல் கரைந்தது.
காற்றின் ஓசையையும் அலைகளின் ’களக் களக்’ சத்தத்தையும் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை.

சேன்னனின் நாய் கூரை முகட்டில் படுத்திருந்தது. அது ஆழமாக மூச்சு விட்டது. இடையிடையே நிராசையுடன் எதையோ முணுமுணுத்த்து. அங்கே ஒரு மீன் துள்ளியது நாய் எழுந்து குரைத்தது. இன்னோரிட்த்தில் தவளை குதித்தது. நாய் அசௌகரியமாக முனகியது..


விடிந்த்து. அடங்கிய குரலில் அது ஊளையிட ஆரம்பித்த்து. இதயம் பிளந்த்துபோன்ற ஒரு ராகத்தை ஆலாபனை செய்ய ஆரம்பித்தது. தவளைகள் அதை உற்றுப் பார்த்தன. நீரில் குதித்து தாவித் தாவி அவை மூழ்குவதை நாய் அசையாமல் பார்த்து நின்றது.


நீர்ப்பரப்புக்கு மேலாகத் தெரிந்த ஓலைக் கூரைகளை அது ஆசையுடன் பார்த்த்து. எல்லாம் வெறிச்சோடியிருந்தன. ஒரு இடத்திலும் நெருப்புப் புகை இல்லை. உடம்பைக் கடித்து சுகமடையும் ஈக்களைக் கடித்துக் கொரித்தது நாய். பின்னங் கால்களால் தாடையை சொறிந்து ஈக்களை விரட்டியது.

சூரியன் சிறிது நேரம் பிரகாசித்த்து. அந்த இளம் வெயிலில் கிடந்து அது மயங்கியது. மந்தமாக அசையும் வாழை இலையின் நிழல் கூரைமேல் நகர்ந்து கொண்டிருந்தது. அது எழுந்து நின்று குரைத்த்து.

கருமேகம் படர்ந்து சூரியன் மறைந்தது. ஊர் இருண்டது. காற்று அலைகளை உலுக்கிவிட்ட்து. நீர்ப்பரப்பின் மீது ஜந்துக்களின் சடலங்கள் மிதந்து போகின்றன. அலைகளில் அசைந்து தாவி மிதக்கின்றன. அவற்றையெல்லாம் அது ஆசையுடன் பார்த்தது. முனகியது.


அதோ தொலைவில் ஒரு சிறு வள்ளம் வேகமாகப் போகிறது. அது எழுந்து நின்று வாலை ஆட்டியது. அந்தப் படகின் திசையைக் கவனித்தது. அது தென்னங் கன்றுகளிடையில் மறைந்தது.

மழை பெய்யத் தொடங்கியது, பின்னங்கால்களை மடக்கி முன்னங்கால்களை ஊன்றி உட்கார்ந்திருந்த நாய் நாலு பக்கமும் பார்த்த்து. அதன் கண்களில் யாரையும் அழவைக்கும் ஆதரவின்மை பிரதிபலித்த்து.


மழை விட்ட்து. வடக்கு வீட்டிலிருந்து ஒரு வள்ளம் வந்து தென்னை மரத்தடியை நெருங்கியது. நமது நாய் வாலை ஆட்டி வாய் விட்டு முனகியது. வள்ளக்காரன் தென்னை மரத்தில் ஏறி இளநீர்க் குலையைப் பறித்துக் கொண்டு இறங்கினான். வள்ளத்தில் உட்கார்ந்தே அதை ஓட்டை போட்டுக் குடித்து விட்டு துடுப்பால் துழாவிக் கொண்டு போனான்.


தூரத்து மரக் கிளையிலிருந்து ஒரு காகம் பறந்து வந்து மிதந்து செல்லும் எருமையின் அழுகிய உடல் மீது உட்கார்ந்தது. சேன்னனின் நாய் ஆசையுடன் குரைத்தபோது காகம் யாருக்கும் அஞ்சாமல் மாமிசத்தைக் கொத்தி இழுத்துத் தின்றது. திருப்தியானதும் அதுவும் பறந்து போனது.


ஒரு பச்சைக் கிளி குடிசையை ஒட்டி நிற்கும் வாழையின் இலைமேல் வந்து அமர்ந்து கீச்சிட்ட்து. நாய் பொறுமையிழந்து குரைத்தது. அந்தப் பறவையும் பறந்து போனது.

மலை வெள்ளத்தில் அகப்பட்டு மிதந்து வந்த எறும்புக் கூட்டமொன்று  குடிசையை ஒட்டி ஒதுங்கியது. உணவுப் பொருள் என்று நினைத்த நமது நாய் அதை முத்தமிட்ட்து. கமறித் தும்மி அதன் மென்மையான முகவாய் கன்றிச் சிவப்பானது.


நடுப் பகலுக்குப் பிறகு சிறு வள்ளத்தில் இரண்டு பேர் அந்த வழியாக வந்தார்கள், நாய் ந்ன்றியுடன் குரைத்தது. வாலாட்டியது. மனித மொழிக்கு நெருக்கமான மொழியில் என்னவெல்லாமோ சொன்னது. நீரில் இறங்கி வள்ளத்துக்குள் குதிக்கத் தயாராக நின்றது. ‘தோ, ஒரு நாய் நிக்கிது’ என்றான் ஒருவன். அவனுடைய இரக்கத்தைப் புரிந்து கொண்டு,  நன்றிக்கு அடையாளமாக அது முனகியது. ’அது இங்கியே கிடக்கட்டும்’ என்றான் இன்னொருவன். எதையோ மென்று விழுங்குவதுபோல அது வாயைப் பிளந்து ஒலியெழுப்பியது. பிராத்தனை செய்தது. இரண்டு முறை குதிக்க முற்பட்டது.


வள்ளம் தூரமாகப் போனது. நாய் மீண்டும் ஊளையிட்ட்து. வள்ளக்கார்ர்களின் ஒருவன் திரும்பிப் பார்த்தான்.

’அய்யோ’

அது வள்ளக்காரனின் கூப்பாடு அல்ல. அந்த நாயின் குரல்தான்.

‘அய்யோ’

சோர்வும் இதயத்தைத் தொடுவதுவுமான  தீனப் புலம்பலும் காற்றில் கரைந்தன. மீண்டும் அலைகளின் ஒடுங்காத ஓசை. அப்புறம் யாரும் அதைத் திரும்பிப் பார்க்கவில்லை. வள்ளம் மறையும்வரை நாய் நிலையாக நின்றது. உலகத்திடமிருந்து கடசியாக விடைபெற்றுக் கொள்வதுபோல முணுமுணுத்துக் கொண்டு கூரைமீது ஏறி நின்றது. இனி ஒருபோதும் மனிதர்களை நேசிப்பதில்லை என்று அது சொல்லுவதாக இருக்கலாம்.

நிறையத் தண்ணீரை நக்கிக் குடித்தது அந்த அப்பாவி விலங்கு. மேலே பறந்து செல்லும் பறவைகளைப் பார்த்தது. அலைகளுக்கு இடையில் நெளிந்து ஆடி ஒரு நீர்ப் பாம்பு நெருங்கியது. நாய் தாவி கூரை முகட்டுக்குப் போய் நின்றது. சேன்னனும் குடும்பமும் வெளியேறிய ஓட்டை வழியாக அந்த நீர்ப்பாம்பு குடிசைக்குள்ளே புகுந்தது.நாய் அந்த ஓட்டை வழியாக உள்ளே எட்டிப் பார்த்தது. கோபத்துடன் குரைக்கத் தொடங்கியது. பிறகு முணுமுணுத்த்து. உயிர்ப் பயமும் பசியும் அந்த முணுமுணுப்பில் இருந்தன. எந்த மொழிக்காரனுக்கும் எந்தச் செவ்வாய்க் கிரகவாசிக்கும் அதன் அர்த்தம்  புரியும். அந்த அளவுக்கு எங்கும் பரவிய மொழி அது.

இரவாயிற்று.பயங்கரமான சூறைக் காற்றும் மழையும் ஆரம்பித்தன.மேற்கூரை அலையின் மோதலில் ஆடிக் குலுங்கின. நாய் இரண்டு முறை வழுக்கி விழுந்தது. நீருக்கு மேலே ஒரு நீண்ட தலை உயர்ந்தது. அது ஒரு முதலை. நாய் பிராண வேதனையுடன் குரைக்கத் தொடங்கியது. அருகில் கோழிக் கூட்டம் கதறுவது கேட்டது.


’நாய் எங்கேருந்து குரைக்குது? இங்கேருந்து ஆளுங்க போகலியா?’ வைக்கோலும் தேங்காயும் வாழைக்குலையும் நிரம்பிய வள்ளம் வாழை மரத்தடியை நெருங்கியது.

நாய் வள்ளக்காரனை நோக்கித் திரும்பி நின்று குரைத்தது. கோபத்துடன் வாலைத் நிமிர்த்திக் கொண்டு வெள்ளத்தின் அருகில் நின்று குரைத்தது. வள்ளக்காரர்களில் ஒருவன் வாழை மடலில் ஏறினான்.


’கூவே, நாய் சாடும்போல இருக்கே’


நாய் முன்நோக்கித் தாவியது. வாழை மடலில் ஏறியவன் உருண்டு வெள்ளத்தில் விழுந்தான். மற்றவன் அவைப் பிடித்து வள்ளத்தில் ஏற்றினான். இந்தச் சமயத்துக்குள் நாய் நீந்தி கூரைமேல் ஏறி நின்று உடலை உதறிக் கொண்டு கோபமாகக் குரைத்தது.

திருடர்கள் எல்லாக் குலைகளையும் வெட்டினார்கள். ‘உனக்கு வெச்சிருக்கோம்’ என்று குரைத்துக் கொண்டிருந்த நாயிடம் சொன்னார்கள். பிறகு வைக்கோல் முழுவதையும் வள்ளத்தில் ஏற்றினார்கள். கடைசியாக ஒருவன் கூரைமேல் ஏறினான். நாய் அவன் காலைக் கடித்தது. வாய்கொள்ளாத சதை அதற்குக் கிடைத்த்து. அவன் அய்யோ என்று அலறிக்கொண்டு வள்ளத்தில் குதித்து ஏறினான். வள்ளத்தில் நின்றிருந்தவன் ஒரு துரட்டியால் நாயின் விலாவில் ஓங்கி அடித்தான். ங்ஙைங்ய் ங்ஙைங்ய் ங்ஙைங்ய். கத்தல் படிப்படியாக்க் குறைந்து வலுவில்லாத முனகலாக ஓய்ந்தது.நாய்க் கடிபட்டவன் வள்ளத்தில் கிடந்து அழுதான். ’சும்மாருடா யாராவது...’ என்று அடுத்தவன் அமைதிப்படுத்தினான். அவர்கள் போனார்கள்.

நீண்ட நேரத்துகுப் பிறகு வள்ளம் போன வழியைப் பார்த்து நாய் உக்கிரமாக்க் குரைத்த்து.

நடுநிசி நெருங்கியது. செத்துப் போன பெரிய பசுவொன்று மிதந்து வந்தது.குடிசையருகில் ஒதுங்கியது.நாய் மேலேயிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த்து. கீழே இறங்கவில்லை. அந்த இறந்த உடல் மெல்லமெல்ல விலகுகிறது.நாய் முணு முணுத்தது.ஓலையைப் பிராண்டிக் கிழித்தது. வாலாட்டியது. அகப்பட்டு விடாமல் விலகுவதுபோல சடலம் நகரத் தொடங்கியதும் நாய் மெதுவாகக் கீழேயிறங்கி வந்து அதைக் கடித்துத் தன் பக்கமாக இழுத்துத் திருப்தியுடன் தின்னத் தொடங்கியது. கொடும் பசிக்கு வேண்டுமளவுக்கு உணவு.

’படார்’ ஒரு அடி. நாயைக் காணவில்லை. ஒருமுறை எழும்பித் தாழ்ந்த பசு தொலைவில் மிதந்து போனது.

அப்போது முதல் புயல் காற்றின் அலறலையும் தவளைகளின்
கூச்சலையும் அலையின் ஓசையையும் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. அங்கே எல்லாம் நிசப்தம். இரக்கமுள்ள வீட்டுக் காவலாளிக்கு நாயின் ஆதவற்ற நிலையை வெளிப்படுத்திய விசும்பல் பிறகு கேட்கவில்லை. அந்த நீர்ப் பரப்பில் அங்கங்கே அழுகிய சடலங்கள் மிதந்து சென்றன. சிலவற்றின்மேல் காகம் உட்கார்ந்து கொத்தித் தின்றன. அதன் நிம்மதியான அமைதியை எந்த ஓசையும் குலைக்கவில்லை. திருடர்களுக்கும் அவர்களின் தொழிலுக்கும் எந்த்த் தொந்தரவும் நேரவில்லை. எல்லாம் சூனியம்.

சற்று நேரம் கழிந்தபோது அந்தக் குடிசை நிலத்தில் விழுந்தது. நீருக்குள் மூழ்கியது. முடிவில்லாத நீர்மட்டத்தை விட  உயரமாக எதுவும் தென்படவில்லை. எஜமானனின் வீட்டை அந்த விசுவாசமான விலங்கு சாகும்வரை காப்பாற்றியது. அதற்காகவே முதலை அதைக் கவ்வும்வரை  குடிசையும் நீர் மட்டதுக்கு மேலாக உயர்ந்து நின்றது. அதுவும் விழுந்தது. முழுவதுமாக நீரில் மூழ்கியது. 

நீரிறக்கம் தொடங்கியது, சேன்னன் தன்னுடைய நாயைத் தேடி நீந்தி வருகிறான். ஒரு தென்னை மரத்தின் அடியில் நாயின் இறந்த உடல் ஒதுங்கிக் கிடக்கிறது. அலைகள் அதை மெல்ல அசைக்கின்றன. கட்டை விரலால் அதைத் திருப்பியும் புரட்டியும் பார்த்தான். அவனுடைய நாய்தானா என்ற சந்தேகமும் தோன்றியது. ஒரு காது கிழிந்திருக்கிறது. தோல் அழுகிப் போயிருந்ததால் என்ன நிறம் என்றும் தெரியவில்லை.

@



செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

தேவி மகாத்மியம்


தெய்வமானாலும் பெண் என்பதால்
செங்ஙன்னூர் பகவதி
எல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்

ஈரேழு உலகங்களையும் அடக்கும்
அவள் அடிவயிறு
வலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறது

விடாய்த் தினங்களில் விடும் பெருமூச்சு
யுகங்களாக வேரூன்றிய
விருட்சங்களை உலுக்குகிறது.

தொடைபிளக்கும் வேதனையில்
அவள் எழுப்பும் தீனக்குரலில்
திசைகள் எட்டும் அதிர்கின்றன

எரிமலைக் குழம்புபோலப் பொங்கி
யோனியிலிருந்து வழியும் குருதித் தாரையில்
நதிகள் சிவந்து புரள்கின்றன.

விலக்கப்பட்ட உதிரத்தை ஒற்றிய வெண்பட்டு
புனிதச் செம்பட்டாகிறது
அண்டமெங்கும் தெறித்த செந்நீர்த் துளிகள்
உலர்ந்து குங்குமமாகிறது

எந்தத் தேவி இந்தப் பூமியைப் புரக்கிறாளோ
அவளே ஆற்றல் என்று
விண் முழங்குகிறது. மண் எதிரொலிக்கிறது.

செங்ஙன்னூர் பகவதி தேவியானது
தெய்வம் என்பதால் அல்ல
பெண்ணாக இருந்ததால்.






திங்கள், 6 ஆகஸ்ட், 2018





திருவனந்தபுரம் நீலகண்ட சிவன் சங்கீத சபையில் நேற்று ( 5.08.2019 ) சஞ்சய் சுப்ரமணியனின் இசை நிகழ்ச்சி. சஞ்சயின் கச்சேரி அற்புதமாக இருந்தது என்பது.செம்பரிதி ஒளி பெற்றது; பைந்நறவு சுவை பெற்றது என்று சொல்வதுபோல பொருளற்றது. பொதுவாக அவர் அற்புத சித்தர்.  சமயங்களில் அதி அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுபவர். நேற்றைய நிகழ்ச்சியில்  என்னைப் பரவசப்படுத்திய இரண்டு அற்புதங்கள்  சஞ்சய் பாடிய மைசூர் வாசுதேவாச்சாரி யாவின் பஹூதாரி உருப்படியும்  கீரவாணி ராகம் தானம் பல்லவியும். சஞ்சயின் பஹுதாரி இதுவரை இந்த ராகத்தில் இதுவரை கேட்ட எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிய குதிரைப் பாய்ச்சல். அதுவும் சிறகுள்ள பறக்கும் குதிரையின் அபாரப் பாய்ச்சல். சிம்மேந்திர மத்திமம் என்று மனதுக்குள் நினைத்த ( நம்முடைய சங்கீத ஞானத்தின் லட்சணம் அப்படி ) ராகம் தானம் பல்லவி கீரவாணி என்று அப்புறந்தான் பிடி பட்ட து. ராகம் தானம் பல்லவியின் பல இடங்களில் உயிர் உருகித் திரளும் ஆனந்தத்தைக் கொடுத்தார் சஞ்சய். 


                                                                           கேரளகௌமுதி    நாளிதழ்    6. 08.2018


கவிஞரும் நண்பருமான ரவிகுமாரின் 'எம். டி. ராம்நாதன்' நீள்கவிதையின்  ஆங்கில மொழி பெயர்ப்பு நூலை சஞ்சய் வெளியிட நீலகண்ட சிவன் சங்கீத சபையின் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணமூர்த்தியும் நானும் பெற்றுக் கொண்டோம். மிகவும் பெருமையாக உணர்ந்த தருணம் அது. என் காலத்தின் பெரும் இசைக் கலைஞரின் கையால் ஒரு நூலைப் பெறுவது பெருமை மட்டுமல்ல; பெரும் பேறும் கூட.




செவ்வாய், 27 மார்ச், 2018

பெருவலி குறித்து...







பெருவலி ’ நாவல் பற்றி சிவபிரசாத் எழுதியிருக்கிறார். இந்த நாவல் குறித்த முதல் பதிவு இதுவே. சிவபிரசாத்துக்கு மிக்க நன்றி. 

அவரது வலைப் பக்கம் இது:https://sivaprasadpaarvaikal.blogspot.in/?m=1


       ஜஹனாரா பேகம் : ராம்ராஜியத்தின் பெருவலி




என்னுடைய பள்ளி நாட்களில்  தமிழுக்கு அடுத்து நான் விரும்பி வாசித்தது வரலாற்று பாடம். குறிப்பாக முகலாய சாம்ராஜ்யத்தைப் பற்றிய பாடப்பகுதிகள்.வெற்று தகவல்களை வறட்டு மொழியில் சொல்லும் பாடநூலை மதிப்பெண்ணைத்தாண்டி புதிய உலகத்தை தெரிந்து கொள்ளும் உத்வேகத்தோடு வாசித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை. கல்லூரி காலத்தில் மதனின் "வந்தார்கள் வென்றார்கள்" வாசித்த போதும் அதே குதுகலம். 

முகலாயர்கள் வரலாற்றில் அப்படி என்ன இருக்கிறது. எது வசீகரிக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் பாபரில் தொடங்கி அவுரங்கசீப் வரையான மாபெரும் சாம் ராஜ்ஜியத்தின் தொடர்ச்சி, அதிகாரத்தை கைப்பற்ற நடத்திய பெரும்யுத்தங்கள், தலைமுறை தோறும் வரும் பேரழகிகள், தங்கள் புகழை நிலைபெறவைக்க ஸ்தாபித்த நகரங்கள், அரண்மனைகள், மசூதிகள், கல்லரைகள் என்று பிரமாண்டங்களின் கவர்ச்சியும், அரியணை ஆசையில் நிகழ்ந்த போட்டிகளும்,சூழ்ச்சிகளும், சகோதர யுத்தங்களும் புனைக்கதைகளுக்கு நிகரான சுவாரசியம்மிக்கவை. அந்த  வகையில் " பெருவலி" முகலாயர்கள் பற்றிய புனைவு என்பதால்வாசிக்கத் துவங்கினேன்.

கவிஞர் சுகுமாரனின் முன்னுரைகளுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். தன் அனுபவப் பரப்பிலிருந்து மெல்ல துவங்கி தான் எழுத எடுத்துக் கொண்ட படைப்பின் மையத்தை மின்னல் வெட்டில் வெளிச்சம் பாயிச்சுவார். அது அந்த படைப்பை வாசிக்க பெரும்திறப்பாக இருக்கும். இப்படி சுகுமாரனின் முன்னுரையால்உந்தப் பட்டு நிறைய கிளாசிக் நாவல்களைப் படித்திருக்கிறேன். இன்று அவரேகிளாசிக் தன்மையுள்ள கதையை எடுத்துக் கொண்டு நாவல் படைத்துள்ளார்.

இந்த நாவல் இரண்டு பகுதியாக எழுதப்பட்டுள்ளது. முதல் பகுதி முகலாயபேரரசின்அக்பர் காலம் முதல் பேரரசர் ஷாஜகான் காலம் வரை மூன்றுதலைமுறை மன்னர்களிடம் பணி செய்த பானிபட் என்ற வயது முதிர்ந்த ஆணின் (நபும்சகம்) பார்வையில் சொல்லப்பட்டுள்ளது. இந்த பானிபட் இளவரசிஜஹனாராவின் நம்பிக்கைக்கு உரியவனாகவும், அரசியல் சதுரங்கத்தில் காய்கள் எவ்வாறு நகர்த்தப்படும் என்பதை தன் அனுபவங்களால் யூகிக்க தெரிந்தவனாகவும்இருக்கிறான்.இவன்கற்பனை பாத்திரம் என்றாலும் எனக்கு ராமாயணத்தில் வரும்கூனியை ஏதோ ஒருவிதத்தில்  ஞாபகப்படுத்துகிறான்.  இவன் பார்வையில்தான்
நாவல் துவங்குகிறது. 

பேரரசர் ஜஹாங்கீர் பெயரில் நூர் மஹல் ஆட்சி செய்து கொண்டிருக்கிறாள்.
அதிகாரம் தன் கைகளுக்குள்ளேயே இருக்க சூழ்ச்சி செய்து தக்காணத்தில் ஷாஜ கானையும் அவன் குடும்பத்தையும் சிறை பிடிக்கிறாள். அந்த சூழ்ச்சியைதகர்த்து வெற்றி வீரனாய் ஷாஜகான் ஆட்சியில் அமர்வதில் ஆரமித்து, அவரின்அன்பு நாயகிமும்தாஜ் பேகம் பதினான்காவது பிரசவத்தின் போது அதிக ரத்தபோக்கால் இறந்ததுவரையான கதையைச் சொல்கிறான். 

“அதிகாரத்துக்காக மனிதர்கள் என்னவெல்லாம் செய்யக் கூடுமென்பதை மூன்று தலைமுறைகளாகப் பார்த்திருக்கிறேனே! பணிவு காட்டுவார்கள். நயந்து பேசுவார்கள், பாசம் பொழிவார்கள், சதி செய்வார்கள், உறவுபாராட்டுவார்கள். உறவு பாராட்டியவர்களுக்கே பகையாவார்கள்.பகைவனுக்கு நட்பாவர்கள். வாளால் வெட்டிக் கொல்வார்கள். வெற்றிஈட்டுவார்கள். வெற்றி பெற்றதும் எல்லாம் மறப்பார்கள். எல்லாரையும்அடக்கி ஆள்வார்கள். தனது ஆட்சி முடியாதது என்று கனவு காண்பார்கள்.அந்த கனவிலேயே புதையுண்டுகிடப்பார்கள்”.

“துணிச்சல் தனியானதல்ல. ஒரு பகுதி நுண்ணறிவு, ஒரு பகுதி அடங்காமை,ஒரு பகுதி பயம் எல்லாம் சேர்ந்தது தான் துணிச்சல்”  என பானி பட் என்றஅடிமையின் மன ஓட்டமாக செல்லப்படும் விஷயங்கள் அனைத்திலும் 
சுகுமாரன் என்ற ஆளுமையின் நுண்ணுணர்வு  மற்றும்  கவித்துவத் தெறிப்பு களையும் உணரமுடிகிறது. அது நாவலை இன்னும் மனதிற்கு நெருக்கமான பிரதியாகமாற்றுகிறது. 

இரண்டாம் பகுதி ஜஹனாராவின் பார்வையில் சொல்லப்படுகிறது. பதினான்கு
வயதில் அரசியல் விவகாரங்களில் அலோசனை சொல்லும் நுண்ணறிவு. தர்பாரில்தனி ஆசனம். மூன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் தெரிந்திருந்தன. கவிதையும்
காவியமும் வேதங்களும் புராணங்களும்  அறிந்திருந்தாள். மதநூல்களைப் பயின்றிருந்தாள். பாடவும் ஆடவும் கற்றிருந்தாள். கட்டடக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தாள். கப்பல்களும் தனி மாளிகையும் ததும்பி வழியும் கஜானாவும் பணிவிடை செய்ய அடிமைகளையும் பெற்றிருந்தாள். அரச குடும்பத்துப் பெண்களில் யாரையும் விட செல்வமும் செல்வாக்கும் அவளுக்கு இருந்தன. எல்லாம் இருந்தன. ஆனால் எது இருந்தால் இவையெல்லாம் மேலானவை ஆகுமோ அந்த ஒன்று அவளுக்குக் கிடைக்கவில்லை. காரணம்அவள் பெண்ணாக இருந்தாள். துன்புறுத்தும் இந்த உண்மை போதாதாஜஹனாராவை மையமாக்கி 
எழுத? எனத் தன் பின்னுரையில் சுகுமாரன்குறிப்பிடுகிறார். 

அக்பர் காலத்தில் அரச குடும்பத்து பெண்கள் திருமணம் செய்ய தடைவிதித்திருந்தார். காரணம் தன் வாரிசுகளோடு, மருமகன்களும் அரியணைபோட்டியில் ஈடுபடக் கூடும் என்பதால் இந்த தடை நீடித்தது. எனவே அரண்மனைபெண்கள் தன் தந்தை, சகோதரன் என அதிகார மையங்களோடு அன்பு, விசுவாசம்,தியாகம் ஆகியவைகள் மூலமே தனக்கான முக்கியதூவத்தையும்,அதிகாரத்தையும் பெற முடிந்தது. 
ஜஹனாரா தன் தந்தையையும் சகோதரன்தாராவையும்  தன் சுயநலம் கடந்து நேசித்தாள்.

திருமணம் செய்யும் உரிமை மறக்கப்பட்டாலும் எதிர்பாலினத்தின் மேல் ஏற்படும்இச்சைகள் இல்லாமலாப் போய்விடும். ஜஹனாராவின் காதல் பற்றி வரலாற்றில் பல்வேறான யூகங்கள் நிழவுகிறது. இந்த யூகங்களிலிருந்து தனக்கு சரி எனத் தோன்றியதைத் தேர்வு செய்தது குறித்த சுகுமாரனின் பார்வை இவை.

 “ஜாஷஹானுக்கு அணுக்கமான தளபதி நவ்ஜத்கானை காதலனாகச் சித்தரிக்கிறார் இந்து சுந்தரேசன். ஆனால் ஜஹனாரா நவ்ஜத் கானை “காற்று வீசும் திசையில் சாயும் சிக்கமோர் மரம்” என்று துச்சமாகவே மதிப்பிடுகிறாள். தன் முப்பதாவது பிறந்த நாளில் தீ விபத்துக்கு உள்ளாகிறாள். அவளுக்கு மருத்துவம் பார்த்த காப்ரியேல் பெளட்டன் என்ற ஆங்கிலேயர் மீது காதல் கொண்டாள் என ருச்சிர் குப்தா சொல்கிறார். ஆனால் அவர் பதில் உதவியாக வங்காளத்தில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிலம் பெற்றுக் கொள்கிறார். ஷாஜஹானுக்கும் ஜஹனாராவுக்கும் இடையில் பிறழ் உறவு இருந்தது என்று எழுதுகிறார் இத்தாலி பயணியான நிக்கோலோ மனூச்சி. அதே காலக் கட்டத்தில் வந்த ஃபிரான்சைச் சேர்ந்த ஃப்ரான்ஸீவா பெர்னியர் மனூச்சியின் கருத்தை மறுக்கிறார்” என பல்வேறு கோணங்களைஉள்வாங்கி,துலேர் என்ற சிற்றரசன் மேல் ஜஹனாராவிற்கு காதல்
இருந்ததாக எழுதுகிறார். இருவரும் பேசிக் கொள்ளும் தருணங்கள் மிக குறைவாகஇருந்த போதிலும் அவனை நினைத்து ஜஹனாரா ஏங்கும்  காதல் தருணங்களைசுகுமாரன் கவிதை மொழியில் எழுதிச் செல்கிறார். 

சகோதரர்கள் தாரா, அவுரங்கசீப் இடையேயான அதிகார யுத்தமும், வெற்றி பெற்றஅவுரங்கசீப் தன் தந்தையை ஆக்ரா கோட்டையில் சிறை வைப்பது, தன்பிரியத்துக்குரிய தந்தையுடன் ஜஹனாரா தங்குவது என நாவல் விரிந்து பேரரசர் ஷாஜ கானின் மரணத்தில் முடிகிறது.

யுத்த களத்தில் வகுக்கப்படும் வியூகம் தான் வெற்றியைத் தீர்மானிக்கிறதுஎன்பதைஇளவரசன் தாரா உணரவேல்லை. தன்னை முன்னிலைப்படுத்தி போர் செய் அப்போது தான் சக்ரவர்த்தி ஷாஜஹான் செயலிழந்து கிடக்கிறார் என்ற அவுரங்கசீப்பின் பொய்யை முடியடிக்கவும், சக்ரவர்த்தியே தங்களுடன் இருக்கிறார்என்ற நம்பிக்கை வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கவும் முடியும் என்கிறார் ஷாஜகான். ஆனால் தாரா மறுத்துவிடுகிறான். அதே போல் " நம்முடைய பீரங்கிகள்எதிரிப்படையின் பெரும்பான்மையை நாசமாக்கிவிட்டன. இதுதான் தக்கதருணம்.நாம் முன்னேறலாம்.வெற்றி நம் பக்கமே" என்ற தளபதி கலீலுல்லாவின்வார்த்தைகளுக்கும் செவிசாய்க்க மறுத்து,"  முதலில் அவர்கள ஆக்கிரமிப்பைத் தொடங்கட்டும்.அப்போதுதான் நாம் எதிராக போரை நடத்த முடியும். அதுதான்
பாதுகாப்பானது" என்ற தளபதி ருஸ்தும்கானின் பேச்சை ஏற்கிறான். அதுஅவுரங்க
சீப்பிற்கே சாதகமாக அமைகிறது. அவுரங்கசீப்பை விட பலவிதங்களில் உயர்ந்தவனாக இளவரசர் தாரா இருந்த போதும் நெருக்கடியான நிலையில் தீர்க்கமான முடிவை எடுப்பதில் குழப்பம் கொள்கிறான். அதுவே அவன் வீழ்ச்சிக்குகாரணமாக அமைந்து விடுகிறது.

யுத்தத்தில் தோற்றவனின் மனைவிகளை அபகரிக்கும் போது தாராவின் இரண்டுமனைவிகள் தங்கள் செய்கையால் கவனம் பெறுகிறார்கள். ஒருத்தி முதல்மனைவியான ராணா தில். கடைசி வரை அவுரங்கசீப்பின் ஆசைக்கு இணங்காமல் தன்உயிரையேமாய்த்துக்கொள்கிறாள்." ராணா தில்லும் கைதிதான். ஆனால்அவளால் அவுரங்கசீபைத் தோற்கடிக்க முடிந்தது. அவனுடைய அதிகாரத்தை அவமதிக்க முடிந்தது. இச்சையை ஏளனம் செய்ய முடிந்தது. அகந்தையை முறியடிக்க முடிந்தது" என ஜஹனாரா பெருமை கொள்கிறாள்.

மற்றொருத்தி இரண்டாம் மனைவியான உதய்பூர் பேகம். இவள் ஆணைக்குப் பணிந்து அவுரங்கசீப் காமதொழுவத்தில் தளைக்கப்பட ஒப்புக்கொள்கிறாள்.

" இளவரசர் தாராவின் மனைவிகளில் ஒருத்தி என்ற பெயர். ஆனால்ஆரம்பத்திலிருந்த மோகம் கலைந்த பின்பு ஜனானாவின் உதிரிக் கூட்டத்தில் ஒருத்தியாகத்தான் அவரும் வைத்திருந்தார். என்ன, உணவுக்கும் உடைக்கும் யாசிக்கத் தேவையில்லாத வசதியான அடிமை. இளவரசருக்கு பிற பெண்களின் சரீரம் அலுக்கும்போது வந்து மேய்வதற்கான புல்வெளியாகத்தான் என் உடல் இருந்தது. அந்த மேச்சல் நிலத்தை இப்போது ஆலம்கீர் அவுரங்கசீப் ஆர்ஜிதம் செய்திருக்கிறார். இதிலும் என்ன புதிய மதிப்பு வந்துவிடப் போகிறது? எல்லாம் பழையது போலத்தான். எங்கள் வேதத்தில் ஒரு வசனம் இருக்கிறது. ' மனுஷர்கள்மண்ணிலிருந்து பிறக்கிறார்கள். மண்ணுக்கே திரும்பிப் போகிறார்கள்'.நான்வெறும் மண்ணாகத் திரும்பக் கூடாது. ஒரு பிச்சைக்கார யத்தீமாக நான் மடிந்துபோக விரும்பவில்லை " என்று தன் தரப்பை ஜஹனாராவிடம்
சொல்கிறாள். 

உண்மையில்  உதய்பூர் பேகம் இவ்வாறு பேசியிருப்பாளா எனத் தெரியவில்லை.ஆனால் வரலாற்றில் தென்படும் மெளன இடைவெளிகளையும், அதிகாரத்தின்
ஆணைக்கு பணிந்து  தங்கள் தரப்பைச் சொல்ல வாய்ப்பளிக்கப்படாமல் குரலற்றவர்களாய் இருக்கும் உதிரி பாத்திரங்களின் உணர்வுகளையும் பேசமுற்படுவதால் தான் சுகுமாரனின் இந்த புனைவு மதிப்பு மிக்கதாய் மாறுகிறது. எனக்கு ராணா தில்லையும் உதய்பூர் பேகத்தையும் சமமாகவே பவிக்க முடிகிறது.அவரவர் பார்வையில் அவரவருக்கான நியதிகள் இருக்கவே செய்கிறது.



பேரரசர் அவுரங்கசீப் வரலாற்றில் மதிப்பு மிக்கவராக இருந்தாலும் கூட இந்தநாவல்அவரை வில்லன் கதாபத்திரமாகவே சித்தரிக்கிறது. காரணம் இது ஜஹனாராவின் பார்வையில் சொல்லப்படும் நாவல். அவளுக்கு தன் சகோதரன் தந்திரம் மிக்க வெள்ளைப் பாம்பு தான். அந்த பாம்பின் விஸ்வரூபத்தால் அவளின்நம்பிக்கைக்கும் அன்பிற்கும் உரியவர்கள் அனைவரும் நிர்மூலம் ஆகிவிடுகிறார்கள். 

அரசியல் அதிகாரத்திற்கானப் போட்டி என்பது எல்லா காலத்திலும் ஒரே மாதிரிதான்இருக்கிறது. மன்னராட்சி, மக்களாட்சி என்று பெயர்களும் அதிகாரத்தைகைப்பற்றும்முறைகளும் மாறியிருக்கிறதே தவிர அதிகாரத்தில் இருக்கும் தலைவனின் மனநிலையும், அவனை சுற்றி துதிபாடும் அதன் மூலம் தன் அதிகாரத்தை வெளிப்படுத்தும் மனிதர்களின் மனநிலை எக்காலத்திலும் மாறவில்லை. அது மாறவும் மாறாது என்ற நிதர்சனத்தைத் தான் இந்த நாவலின் வழியே சுகுமாரனும் சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இது சமகால அரசியலை பேசும் நாவல் தான் என்றால் அது மிகையில்லை.




புதன், 14 மார்ச், 2018

மது



கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த அட்டப்பாடி வனப்பகுதி யில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர் மது கொல்லப்பட்டார். கொல்லப் படக் காரணம் அவர்  திருட்டுச் செயலில் ஈடுபட்டார் என்பதே.




மேற்கு மலைத்தொடர் வனப்பகுதியில் பவானி ஆற்றங்கரையிலுள்ள புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஊர்களில் ஒன்றான  கடுகுமண்ணா பழங்குடிக் கிராமத்தைச் சேர்ந்த  மல்லியின் மகன் மது. அடுத்த ஊரான சிண்டக்கியி ல் உள்ள ஆதிவாசிகளுக்கான பள்ளியில் நான்காம் வகுப்புவரை படித்தவர். மனநலம் குன்றியவர். அதனாலேயே ஊருக்குள்  இருப்பதை விரும்பாமல் பாறை இடுக்குகளிலும் சிறு குகைகளிலுமாகப் பதுங்கி வாழ்ந்தார். கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மரணம்டையும் நாள்வரை ஒன்பது ஆண்டுகளாகத் தாயோ சகோதர சகோதரிகளோ அவரைப் பார்த்ததுமில்லை. பசிக்கும்போது குகையைவிட்டு வெளியேறும் மது கடைகளிலிருந்து பொருள்களைத் திருடிக் கொண்டு குகைக்குத் திரும்புவார். இந்தப் பட்டினிக் களவுதான் அவரது உயிரைப் போக்கியது. அப்படி அவர் திருடியது ஆடம்பரப் பொருளையோ, பணத்தையோ, நாட்டின் பாதுகாப்பு ரகசியத்தையோ,  வங்கிப் பணத்தையோ அல்ல.துச்ச விலைக்கு நம்மால் வாங்க முடிகிற அரிசியும் வெங்காயமும் மஞ்சள் தூளும் மல்லித் தூளும். பசியாற்றிக் கொள்வதற்காக மது திருடியதாகச் சொல்லப்படும்  இவற்றுக்காக அந்த இளைஞர் ஊர்க் காரர்களால் கட்டி வைத்து அடிக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தாக்குதலால்   மரணம் நிகழ்ந்திருக்கிறது. ஆக இது ஊர் கூடிச் செய்த கொலை.

சொற்பக் காசுக்கு நம்மால் வாங்கி விடக் கூடிய பொருள்களை வாங்கக் காசில்லாததாலேயே மது அவற்றைத் திருட நேர்ந்திருக்கிறது. பொருளாதார நிறைவு பெற்றதாகச்  சொல்லப்படும் நாட்டில் பசிக்காக ஒருவனைத் திருடத் தூண்டியது யார்?  திருடப்பட்டதாகச் சொல்லப்பட்ட பொருள்கள் திருடனின் கையிலிருந்து பறிமுதல் செய்யப்படவில்லை. மாறாக அவன் தங்கியிருந்த இடத்திலிருந்து எடுத்து வரப்பட்டன. அவை திருட்டுப் பொருள்கள்தான் என்பதற்கு என்ன ஆதாரம்? இவற்றையெல்லாம் விடக் கோரமானது மது என்ற ஆதிவாசி இளைஞனை நாகரீக சமூகத்தை நடத்திய விதம். அவர் தங்கியிருந்த குகைக்கு ஊர்வலமாகச் சென்ற கூட்டம் அவனிடமிருந்த களவுப் பொருள்களை மீட்டன.  குற்றவாளியான மதுவின் கைகளில் கற்களும் பாறைத் துண்டுகளும் நிரப்பிய பையைக் கொடுத்து  முக்காலி என்ற இடத்தின் நாற்சந்திவரை நடக்க வைத்தது. ஊர்கூடி  உடுத்திருந்த வேட்டியை உருவி அவர் கைகளைக் கட்டிவைத்து அடித்தது. மனநலம் குன்றிய அந்த அப்பாவியை விசாரணை செய்து அந்தப் பெரும் நிகழ்வை கைப்பேசியில் படம் பிடித்து சமூக  வலைத்தளத்தில் பதிவேற்றி வெற்றியைக் கொண்டாடியது. கையில் சுமையுடனும் சரமாரியாக விழுந்த அடியாலும் துவண்டு போன மது ஜீப்பில் காவல்நிலையத்துக் கொண்டு  செல்லும் வழியிலேயே உயிரை இழந்தார். இந்தப் பாதகச் செயலில் ஈடுபட்டவர்கள் என்று தெரிய வந்த பதினாறு பேர் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.

'' இதுபோன்ற மிருகத்தனமான செயல்கள் அறிவார்ந்த சமூகத்துக்குப் பொருத்தமானது அல்ல; நாம் நாகரீக சமுதாயமாக மேம்பட்டு விட்டோம் என்கிறொம். ஆனால் நடந்தி ருக்கும் நிகழ்ச்சி நம்மை நாகரீகமானவர்களாகக் காட்டவில்லை. இது கேரளத்துக்கு அவமானம்''  மது என்ற ஆதிவாசி இளைஞரின் படுகொலையைக் கண்டித்து கேரள முதல்வர்  பிணராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையின் வாசகங்கள் இவை.ஏறத்தாழ கேரளத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள்,பொதுமக் கள் உட்பட எல்லாத் தரப்பினரும் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக மதுவின் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்திருக் கிறார்கள்; முதல்வர் சொன்னதுபோலவே அவமானத்தை உணர்ந்திருக் கிறார்கள்; அதன் கசப்பைப் பகிர்ந்து விழுங்கியிருக்கிறார்கள். 

இத்தகைய செயல்கள் அவமானத்துக்குரியவை என்று தெரிந்தே  கேரளத்தின் நாகரிக சமூகம் அவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக ஆதிவாசிகள் மீதான பொதுச்  சமூகத்தின் பார்வை மனித இணக்கத்துக்கு முற்றிலும் எதிரானது. ஆதிவாசிகள் தொடர்ந்து எல்லா வகையிலும் துன்புறுத்தப்படுகிறார்கள். அவற்றில் வெளித்தெரிய வந்த  சம்பவங்களில் ஒன்றுதான் மதுவின் படுகொலை. நாகரிக சமூகத்தின் கௌரவச் சின்னமான கைப்பேசிப் பழக்கம் இங்கு அதன் அநாகரீகச் செயலுக்குச் சாட்சியானது என்பது கவனத்துக்குரிய முரண். அடுத்தவரின் துயரையும் அந்தரங்கத்தையும் கேளிக்கைப் பொருளாக்கும் நவீன மன்நிலையின் உதாரணமும் கூட.

கொல்லப்பட்ட மதுவல்ல ; பொது சமூகமே திருட்டில் ஈடுபட்டது. அட்டப்பாடி வனப் பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி ஊர்களின் மேம்பாட்டுக்காக அரசு ஒதுக்கிய தொகை ஒவ்வொரு ஆதிவாசிக்கும் பிரித்துக் கொடுக்கப் பட்டிருக்கு மானால் ஒவ்வொரு ஆதிவாசிக்கும் குறைந்தது ஒன்றரை லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும் என்று புள்ளி  விவரங்கள் சொல்கின்றன. அது நடைமுறைப் படுத்தப்பட்டிருக்குமானால் நூறு ரூபாய்க்கும் குறைவான அற்பத் தொகை வரும் பொருள்களுக்காக அந்த இளைஞன் திருட்டில்  ஈடுபட்டிருக்க மாட்டான். அவனுக்குக் கிடைத்திருக்க வேண்டிய பல நூறு ரூபாய்களை அபகரித்த பொதுச் சமூகம்தானே பெரும் கொள்ளைக் கூட்டம்? படிப்பறிவோ உலக ஞானமோ  இல்லாத அந்த மக்கள் இதைக் கேட்கவில்லை; கேட்க அனுமதிக்கப்படவில்லை என்பதும் தெளிவு. நாகரிகம் என்பது சக மனிதனையும் தன்னைப்போலக் கருதும் பரந்த  மனநிலை என்பது மாறிவிட்டிருக்கிறது. அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் இவற்றில் ஏதோ ஒன்றின் அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது; அதை வலுக்குறைந்தவர்கள் மீது  பிரயோகிப்பதே நாகரிகம் என்ற புதிய அர்த்தத்தை சமூகம் கடைப்பிடிக் கிறது. இந்தக் குற்றக் கலாச்சாரத்தின்  இரைதான் மது.

மதுவின் மரணம் சமூக ஊடகங்களின் உபயத்தால் வெளியுலகுக்குத் தெரிய வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அனுதாபத்தைப் பெற்றது. ஆதிவாசிகள் மீதான அத்துமீறல் நடவடிக்கைகளில் முதன் முதலாகக் குற்றவாளிகளைச் சட்டப்படி தண்டிக்க உதவியது. நல்லது. ஆனால் இது தனித்த நிகழ்வு அல்ல. தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொடுமைகள்  அதிகம் தெரிவதில்லை. இன்று மதுவின் படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்கும் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இந்த அத்துமீறலில் பங்கு இருக்கிறது. அவர்களை உள்ளிட்ட்  பொதுச் சமூகத்தின் பார்வையை அவர்களே உருவாக்கினார்கள். ஆதிவாசி உதாசீனப்படுத்தப்படும் சூழலை அவர்களே உருவாக்கினார்கள். காரணம், அரசியல்.கேரளத்தின்  மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு பழங்குடிகளின் தொகை. அவர்கள் ஓட்டு வங்கிகள் அல்லர். எனவே அவர்கள் சார்பில் சிந்தப் படும் கண்ணீர் போலியானது. அவர்கள் மேம்பாட்டுக்காக பல் கோடி ரூபாய்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் இன்னும் ஆதிவாசிகள் வறுமைக் கோட்டுக்குக் கீழேயே இருக்கிறார்கள். அந்தத் தொகை என்ன  ஆயிற்று? அதை அந்த அப்பாவிகள் கேட்பதில்லை. வனவாசிகளான அவர்களின் நிலம் அவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்டது. நிலத்தை இழந்த அவர்கள் வாழ்வு தடுமாற்றத்துக்குள்ள்ளானது. அவர்களுக்கான நிலம் மீட்டெடுக்கப்படவே இல்லை. தொடர்ந்து போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டாலும் பலன் விளையவில்லை. வாழ்விடமும்  பறிபோய், ஜீவ ஆதாரமான கானக விளைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையும் இழந்தவர்கள் பசிக்காகத் திருடுவது எப்படிக் குற்றமாகும்?

சற்று விளக்கமாகவே பார்க்கலாம். 1975 ஆம் ஆண்டு பிறரால் கையகப் படுத்தப்பட்ட பழங்குடியினரின் நிலங்களைத் திரும்பப்பெற சட்ட முன்வரைவு உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்தே அரசியல் கட்சிகளும் அவ்வபோது அதிகாரத்தில் இருந்த அரசுகளும் பொது சமூகமும் ஆதிவாசிகளை ஏமாற்றத் தொடங்கின. வரைவு தயாரிக்கப்பட்டு பதினோரு  ஆண்டுகளுக்குப் பின்னரே அது சட்டமாக இயற்றப்பட்டது. அதன் படி 1960 - 82 ஆண்டுகளுக்கு இடையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்டு ஆதிவாசிகளுக்கு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் சட்டத்தை அமல்படுத்துவதில் நடை முறைச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி அரசு அதைக் கிடப்பில் போட்டது. பழங்குடித் தலைவர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். எவ்வளவு விரைவில் சட்டத்தை அமல்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவில் செய்ய வேண்டும் என்று நீதிமன்றமும் தெரிவித்தது. ஆனால் பொதுச் சமூகத்தின் நலன் கருதி 1992 சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆதிவாசிகளிமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டவற்றில் இரண்டு ஹெக்டேருக்கு அதிகமான பரப்புள்ள நிலத்தை மட்டுமே மீட்கலாம் என்று திருத்தப்பட்டது. இது ஆதிவாசிகளை ஏய்ப்பதற்கான தந்திரம். இரண்டு ஹெக்டேருக்கு அதிகமுள்ள நிலங்களைக் குடியேற்றக்காரர்கள் துண்டுபோட்டு உறவினர் களுக்கும் பினாமிகளுக்கும் பிரித்துக் கொடுத்தனர். பொதுச் சமூகம் சட்டத்தை மிகச் சாமர்த்தியமாக வளைத்த சம்பவம் இது. தொடர்ந்து வழக்குகளும் எதிர் வழக்குகளுமாகக் காலம் கடந்தது. கானக மண்ணே தங்களது வாழ்வும் வளமும் என்று நம்பும் பழங்குடியினர் கை பிசைந்து நின்றனர். 1999 இல் முன்னர் தீர்மானித்தபடியே இரண்டு ஹெக்டேருக்கும் அதிகமான நிலத்தை மீட்டு ஆதிவாசிகளுக்குப் பகிர்ந்து அளிப்பது என்ற அரசின் முடிவுக்கு வேறு வழியின்றி ஆதிவாசிகளும் ஒப்புக் கொண்டனர். ஆனால் அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. தங்கள் கோரிக்கைக் காக அதிவாசிகள் தொடர்ந்து  போராடினார்கள். வயநாட்டிலுள்ள முத்தங்ங, ஆரளம் , செங்ஙரா, அரிப்பா, பொ ட்டஞ்சிற என்று வனப் பகுதிகளில் தொடர்ந்த போராட்டங்கள் அவ்வப்போது இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அரசுகளால் முறியடிக்கப்பட்டன; புறக்கணிக்கப்பட்டன.

பழங்குடி மக்களுக்குரிய நிலத்தை அவர்களுக்கு அளிப்போம் என்று கேரளத்தின் இரு முன்னணிகளும் வாக்குறுதி அளித்துக் கொண்டே இருக்கின்றன. தங்களுக்கான குடிமைச்  சலுகைகள் பாதிக்கப்படும்போது ஓலமிடும் மலையாளிப் பொதுச் சமூகம் ஆதிவாசிகளுக்கான மண்¨ணை ஏன் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்புவதில்லை. அப்படிக் கேள்வி கேட்பது தங்களுக்குப் பாதகமாகும் என்ற சுயநலமே அந்தக் கபட மௌனத்துக்குக் காரணம். ஒருவேளை சிறிய அளவிலாவது ஆதிவாசி பூமி அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற எண்ணமே காரணம் என்று வைத்துக் கொண்டாலும் இன்னொரு கேள்வி எழுகிறது. அப்படி நிலத்தைப் பெற்ற பிறகும் ஆதிவாசிகள் ஏன்  இன்னும் வறுமையில் பிடியில் சிக்கியிருக்கிறார்கள்?  அந்த வறுமையின் அடையாளம்தானே கொல்லப்பட்ட மது என்ற ஆதிவாசி இளைஞர்? இந்தக் கேள்விகள் அபாயகரமானவை. அவற்றுக்குக் கிடைக்கும் பதில்கள் அப்பாவிப் பழங்குடிகளைப் பொதுச் சமூகம் சுரண்டி வாழ்கிறது என்ற உண்மையை அம்பலாமாக்கும். இது கேரளத்தின் ஆதிவாசிகளின்  நிலை மட்டுமல்ல. இந்தியா முழுவதிலும் ஆதிவாசிகள் எதிர்கொள்ளும் அவலம். இந்த நூற்றண்டிலும் நாகரீகமடைந்த பொதுச் சமூகம் அவர்களைக் கீழானவர்களாகவே கருதுகிறது. தனக்குச் சமமானவர்களாக அவர்கள் ஆகி விடக்  கூடாது என்று அஞ்சுகிறது. அதனாலேயே அவர்களிடமிருந்து மண்ணைப் பிடுங்குகிறது; உணவைப் பறிக்கிறது; உரிமைகளைக் களவாடுகிறது; உயிரையும் எடுக்கிறது. இந்தச் செயல்களுக்கெல்லாம் நாகரீகம் என்று பெயரும் சொல்லிக் கொள்கிறது. இந்த நாகரீக மேம்பாட்டின் இப்போதைய களப் பலி அட்டப்பாடி மது. நாளை இன்னொருவராக இருக்கலாம். ஏனெனில் அந்தக் காட்டுமிராண்டிகளை அழிப்பதுதானே நாகரீக வளர்ச்சி.

@

 அந்திமழை மார்ச் 2018 இதழில் வெளிவந்திருக்கும் கட்டுரை.
சிற்பம்: டாவின்சி சுரேஷ் , கொடுங்ஙல்லூர்.