|
அ ய் யா வி ன் மி தி வ ண் டி
முந்தின நாள் கிருஷ்ணா தியேட்டரில் இரண்டாம்
ஆட்டம் பார்க்கப் போயிருந்தேன். விளைவு? மறுநாள் காலை சீக்கிரம் எழுந்திருக்க
முடியவில்லை. வழக்கத்தைவிடப் பதினைந்து நிமிடம் தாமதமாகத் தான் நடவரசு அய்யா
வீட்டுக்குப் போய்ச் சேர முடிந்தது. அதற்குள் குட்டைக் கிருட்டிணன் முந்திக்கொண்டிருந்தான்.
வீட்டு வாசலில் அய்யாவின் சைக்கிளை நிறுத்தித் துடைத்துக்கொண்டிருந்தான்.
என்னைப் பார்த்ததும் அவன் முகத்தில் வெற்றிப் புன்னகை படர்ந்தது. முகத்தை
இறுக்கிப் ‘போடா குள்ளப் பண்ணி’ என்று அவனுக்குக் கேட்காத குரலில் முணுமுணுத்து உதடுகளைப் பிதுக்கிப்
பழிப்புக் காட்டி விட்டுத் திண்ணைமேல் ஏறினேன்.
குட்டைக் கிருட்டிணன் சைக்கிளின் பெடலை வேகமாகச் சுழற்றித் துடைத்துக்கொண்டிருந்த துணியைச் சுருட்டிப் பின் சக்கரத்தின் ரிம்மில் வைத்து அழுத்திப் பிடித்தான். பெடலை விட்டுவிட்டுப் பல்லைக் கடித்துக்கொண்டு துணியால் ரிம்மை விட்டுவிட்டு அழுத்தினான். சக்கரம் மெதுவாக வேகம் குறைந்து நின்றது. அய்யாவின் சைக்கிளைத் துடைக்கிற எல்லாரும் கடைசியாகச் செய்கிற சடங்கு. சைக்கிளைத் துடைத்து முடித்தாகிவிட்டது என்ற முத்தாய்ப்பு. சைக்கிள் தயாராகிவிட்டது என்று அய்யாவுக்குத் தெரிவிப்பதற்காக ஒரு தடவை மணியையும் அடிப்போம். மணியோசை தேய்வதற்குள் அய்யா புத்தகக் கட்டுடன் வாசல் நிலையில் தோன்றுவார் . . . ‘என்ன தோழர்களே, புறப்படலாமா?’ என்று கேட்பார். நிரந்தரமாக ஜலதோஷம் பிடித்திருப்பது போன்ற அந்தக் குரல் எங்கள் எல்லாருக்கும் பிடிக்கும். எல்லாரையும்விட எனக்கு அதன்மேல் அலாதியான மோகம் இருந்தது. அய்யா வகுப்புக்கு வரத் தாமதமாகும் நேரங்களில் - மிக அரிதாகத் தான் அவர் வகுப்புக்கு வரத் தாமதிப்பார் - அவரைப் போலவே அடிக்குரலில் ‘என்ன தோழர்களே, இது வகுப்பா? மாட்டுச் சந்தையா? உங்களால் அமைதியாக இருக்க முடியாதா?’ என்று ஆரம்பித்துக் கோபம் வரும்போது அவர் பயன்படுத்தும் ஒரே வசைச் சொல்லான ‘சாணிப் பயல்களா?’ என்பதையும் சொன்னால் போதும் வகுப்பு தற்காலிகமாக அடங்கும். ‘புறப்படலாம் அய்யா’ என்று கூட்டுக் குரலில் நாங்கள் பதில் சொன்னதும் அய்யா திண்ணையிலிருந்து இறங்குவார். நானோ குட்டைக் கிருட்டிணனோ அவர் கையிலிருக்கும் புத்தகக் கட்டை வாங்கி சைக்கிள் கேரியரில் வைப்போம். எங்கள் புத்தகக் கட்டுகளைக் கேரியருக்கும் சீட்டுக்கும் இடையில் கீழே விழாதபடி திணித்துவைப்போம். சாப்பாட்டுப் பாத்திரம் வைத்த பிளாஸ்டிக் ஒயர் கூடையை வலது ஹாண்டில் பார் வழியாக எடுத்து நடுவில் மாட்டுவோம். புத்தகத்தை வாங்கி வைக்காதவன் ஸ்டாண்டை எடுத்துவிடுவான். அய்யா வேட்டியின் நுனியைப் பிடித்து உயர்த்தியபடி காலை வீசிப் போட்டுச் சீட்டில் உட்கார்ந்து ஹாண்டில் பாரைப் பிடித்துக்கொள்ளுவார். எங்களில் எவனாவது ஒருவன் அய்யா உட்கார்ந்திருக்கும் சீட்டை வலதுகையாலும் ஹாண்டில் பாரை இடது கையாலும் பிடித்துக்கொள்ளுவோம். இன்னொருவன் பின்னாலிருந்து சைக்கிளைத் தள்ளத் தொடங்குவான்.பெரும்பாலும் ஸ்டாண்டை எடுத்துவிடுபவன்தான் சைக்கிளைத் தள்ள வேண்டியிருக்கும். அய்யாவின் ‘மெல்ல மெல்ல’ என்ற அடுக்குத் தொடருடன் எங்களுடைய பயணம் தொடங்கும். இரண்டு கால்களையும் சமமாகப் பெடலில் வைத்துக்கொள்வதைத் தவிர அய்யா வேறு எந்த அசைவையும் காட்டமாட்டார். சைக்கிள் நகர ஆரம்பித்ததும் அய்யா பேச ஆரம்பிப்பார். பேச்சு பெரும்பாலும் பாடப் புத்தகத்திலிருக்கும் செய்யுள் பகுதியைப் பற்றியோ புலவர்களின் சாதுரியத்தைப் பற்றியோதான் இருக்கும். வெகு அபூர்வமாக ரெயின்போ தியேட்டரில் பார்த்த ஆங்கிலப் படங்களின் கதையைச் சொல்லிக்கொண்டு வருவார். வீட்டில் பயணம் தொடங்கியவுடன் ஆரம்பிக்கும் கதை முடிவதற்கு இரண்டு மூன்று நாட்களாவது ஆகும். அந்த நாட்களில் சீட்டைப் பிடித்துக்கொண்டு நடப்பது யார் என்று எங்களுக்குள் சண்டை நடக்கும். அதைக் கண்டும் காணாதது போல அய்யா ரசிப்பார். முந்தின வாரம்வரைக்கும் நெட்டைக் கொக்கு டேவிட் இருந்தான். அவனுடன் சண்டை போட எனக்குப் பயமாக இருந்தது. நாங்கள் எட்டாம் வகுப்பில் தேறி ஒன்பதாம் வகுப்புக்கு வந்தபோது டேவிட் மூன்றாம் வருடமாக அதே வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். அதற்காக ஸ்பெஷல் பீசும் கட்டியிருந்தான். எனக்கிருந்த பூனைமயிர் மீசையுடன் மல்லுக் கட்டுவதுபோல அவனுக்கு அடர்த்தியான செம்பட்டைநிற மீசை இருந்தது. தாடியும் இருந்தது. இரண்டு வருட சீனியாரிட்டி காரணமாக அவனுடன் மோதுவது உடல் நலனுக்கு நல்லதல்ல எனத் தோன்றியது. டேவிட் இருந்தவரை அவன்தான் நடவரசு அய்யாவின் பள்ளிக்கூட விவகாரங்களைக் கவனித்துக்கொண்டிருந்தான். காலையில் சீக்கிரமாகவே அய்யா வீட்டுக்குப் போய் சைக்கிளைத் துடைத்து வைப்பது, காலை இடைவேளையின்போது காளியப்பன் கடைக்குப் போய் அய்யாவுக்காக எடுத்து வைத்திருக்கும் முரசொலி, தென்னகம், சமநீதி பத்திரிகை களை வாங்கி வருவது, பகல் உணவு இடைவேளையில் அதே காளியப்பன் கடையிலிருந்து வெற்றிலையும் அசோகா பாக்கும் வாங்கிவருவது, கட்டுரை ஏடுகளை ஸ்டாஃப் ரூமிலிருந்து எடுத்துவருவது, திரும்பக்கொண்டு வைப்பது, பள்ளி முடிந்ததும் அய்யாவின் சைக்கிளை ஸ்டாண்டிலிருந்து உருட்டிக்கொண்டு வந்து கேட் அருகில் நிறுத்துவது என எல்லா வேலைகளையும் அவன் மட்டுமே செய்தான். அவன் இருந்த வரை அய்யாவின் பயணத்தில் சைக்கிளைப் பின்னாலிருந்து தள்ளுகிற வேலை மட்டுமே எனக்குக் கிடைத்தது. அதை நினைத்துப் பள்ளிக்கூடக் கழிப்பறையில் நின்று பல நாட்கள் அழுதிருக்கிறேன். இத்தனைக்கும் டேவிட்டைவிட நான் சிறந்த மாணாக்கன் என்றும் அவர் சொல்லித் தருவதை முழுமையாகப் புரிந்துகொள்ளுவதில் கற்பூரமென்றும் வகுப்பிலிருக்கும் நல்ல பயல்களில் ஒருவன் என்றும் அய்யாவே சொல்லியிருந்தார். அப்படியும் சைக்கிள் சீட்டைப் பிடித்துக்கொண்டு நடக்கிற நல்லூழ் வாய்க்கவே இல்லை. இந்த வருடம் அரை ஆண்டுத் தேர்வு விடு முறைக்குப் பிறகு டேவிட் பள்ளிக் கூடத்துக்கு வராமல் போனான். கடைசியாக அவன் வந்தது வெள்ளிக் கிழமை. இனி வரவேமாட்டான் என்று ஏனோ நினைத்தேன். அவன் வந்துவிடக் கூடாது என்று விரும்பியதனாலேயே அப்படி நினைத்தேன். திங்கட்கிழமை காலை சீக்கிரமாகக் கிளம்பி அய்யா வீட்டுக்குப் போனேன். இனிமேல் சைக்கிளின் பின்சீட்டு என் கைப்பிடியில் இருக்கும் என்று உற்சாகமாகப் போனவன் திண்ணையில் குட்டைக் கிருட்டிணன் இளித்துக்கொண்டே நிற்பதைப் பார்த்ததும் அமுங்கிப் போனேன். அவன் கையில் சைக்கிள் சாவி இருந்ததைப் பார்த்ததும் ஆத்திரமாக வந்தது. துடைத்து முடித்த பின்னர் சைக்கிளை வாசலில் ஸ்டாண்டு போட்டு நிறுத்த வேண்டுமே தவிரப் பூட்டக் கூடாது. அதுதான் வழக்கம். குள்ளப் பன்றி வழக்கத்தை மீறியிருந்தான். போதாததற்கு இளிப்பு வேறு. எரிச்சலுடன் சைக்கிள் டியூப் வளையம் போட்ட புத்தகக் கட்டைத் திண்ணைமேல் வீசினேன். கிருட்டிணனை எட்டிப் பிடித்துச் சாவியிருந்த வலது கையைப் பின்பக்கமாக வளைத்து முறுக்கி அதை விழவைக்கப் பார்த்தேன். சாவி வளையத்தை விரலில் மாட்டிக் கையைச் சுருட்டி வைத்திருந்தான். ஒவ்வொரு விரலாகப் பிரிக்கப் பார்த்தேன். முடியவில்லை. எல்லா விரல்களையும் சேர்த்து அழுத்தினேன். கிருட்டிணன் கத்த ஆரம்பித்தான். ‘அய்யா, இங்க வாங்க இவன் என்னியப் போட்டு நொக்குறான்’ என்று ஒப்பாரிவைக்கத் தொடங்கினான். ‘குள்ளப் பண்ணி சாவியக் குட்றா?’ என்று அவன் கையை நெரித்தேன். ‘போடா, நாயி குடுக்கமாட்டன்’ வலியைப் பொறுத்துக்கொண்டு சொன்னான். ‘இத்தினி நாளு அந்த நெட்டக் கொக்கன் பண்ணாட்டுப் பண்ணுனான். இப்ப நீயாக்கும்? பண்ணி சாவியைக் குட்றா. பள்ளிக்கூடம் தொறந்த மொத நாளுலேர்ந்து அய்யாகூட நாங்க வருவோம். எங்கேருந்தோ பாதில வந்துட்டு நீங்க சைக்கிளைப் புடுங்குவீங்க ளாக்கும்?’ அவனுடைய கையை இன்னும் நெரித்துக்கொண்டே சொன்னேன். வலி பொறுக்க முடியாமல் அவன் விரல்கள் பிரிந்து சாவி கீழே விழுந்தது. அதே நேரத்தில் நடவரசு அய்யா உள்ளேயிருந்து ஓடிவந்து எங்களைப் பிடித்து விலக்கினார். ‘சாணிப் பயல்களா? என்ன செய்கிறீர்கள்? எதற்காக அடித்துக்கொள்ளுகிறீர்கள்?’ என்று இரண்டு கைகளாலும் எங்கள் இரண்டு பேரின் சட்டையையும் உலுக்கினார். தண்ணீர் தெளித்த பூமாலையை உலுக்குவது போன்ற மென்மையான உலுக்கல். இருந்தும் இருவரும் தலை கவிழ்ந்து நின்றோம். அய்யா பெண்டாட்டி கதவுப் பக்கமிருந்து எட்டிப் பார்த்தார். ‘புள்ளைங்களா இதுங்க? தெல்ல வாரிக் கூட்டமா இருக்கு. ரண்டு போடு போடாம நீ வேற கொஞ்சிகிட்டு நிக்கற.’ அய்யா திரும்பி அவரை ஏறிட்டார். ‘பயல்ககிட்ட நாம் பேசிக்கிறேன். நீ உள்ள போறியா?’ என்றார். அய்யா பெண்டாட்டி ‘எல்லா நீ குடுக்கிற எடந்தான். எல்லாம் தலைமேல ஏறிகிட்டு ஆடுது’ என்று முனகிக்கொண்டே உள்ளே மறைந்தார். ‘பயல்களா, இங்கே பாருங்கள். என்ன உங்களுக்குள் சண்டை?’ அய்யா கேட்டும் நாங்கள் பேசாமலிருந்தோம். கிருட்டிணன் என்ன நினைத்துக் கொண்டிருந்தான் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அய்யா எங்களிடம் பேசுகிற செந்தமிழையும் மனைவியிடம் பேசுகிற கொச்சை மொழியையும் பற்றி நான் யோசித்துக் கொண்டிருந்தேன். மொழி மாறும் அந்த வேகம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘என்னடா உங்களுக்குள்?’ மறுபடியும் அய்யா கேட்டார். ‘இவந்தாய்யா சைக்கிள் சாவியப் புடுங்கறதுக்காகச் சண்டைக்கு வந்தான்’ என்றான் குள்ளப் பன்றி. ‘எதற்காகத் திறவுகோலை அவனிடமிருந்து பிடுங்கப் பார்த்தாய்?’ வாயை இறுக்கிக்கொண்டு தலைகுனிந்து நின்றிருந்தேன். இவரிடம் கதை கேட்டுக்கொண்டு நடந்துவர எனக்குப் பிடிக்கும். அதற்காகவே போன வருடத்திலிருந்து காத்துக் கொண்டி
ருக்கிறேன் என்று இவருக்குத்
தெரியாதா? அப்படி நினைத்தபோதே எனக்கு அழுகை வந்தது. உதடுகளைக் கடித்து
அடக்கிக்கொண்டேன்.
சைக்கிளைத் துடைத்து வைப்பதற்காக நேரத்திலேயே வந்ததையும் அதைப் பொறுக்காத நான் அவனை அடித்துச் சாவியைப் பிடுங்கப் பார்த்ததையும் தர மறுத்த அவனைப் பாதியிலே வந்தவன் என்று திட்டியதையும் சிணுங்கிக்கொண்டே சொல்லித் தீர்த்தான் குட்டை. அதைச் சொன்னபோது அவனுடைய உடம்பு ஸ்பிரிங்குபோலத் துள்ளியதாகத் தோன்றியது. அதை நினைத்ததும் சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டேன் ஆனால் என் கண்ணுக்குள் தெரிந்த குறும்புத் துள்ளல் அய்யாவின் பார்வையில் பட்டுவிட்டது. என்னை உற்றுப் பார்த்தார். அவருக்கும் சிரிப்பு பொத்துக்கொண்டது. ‘சாணிப் பயல்களா, இதற்காகவா சண்டை? மாலவா, அவன் பக்கத்தில் நில். அடேய் நற்குமரா நெருங்கி நில்’ என்றார். அவர் சொன்னது எங்களைத்தான். என்னை நற்குமரனாகவும் கிருஷ்ணனை மாலவனாகவும் மாற்றியிருந்தார். அவர் பெயர்கூட அவராகவே மாற்றிவைத்துக்கொண்டது தான். தலைமை ஆசிரியர் அருட் தந்தை யூஜின் லாரன்ஸ் அடிகளார் மட்டுந்தான் அய்யாவை இன்னும் நடராஜன் என்று கூப்பிடுகிறார். கொஞ்சம் கூச்சத்துடன் நானும் அதே அளவு எரிச்சலுடன் குண்டுப் பன்றியும் நெருங்கினோம். இடைவெளி விட்டுத்தான் நின்றோம். ‘சேர்ந்து நில்லுங்களடா’ என்றார் அய்யா. விறைப்புடன் நகர்ந்தபோது இருவரும் இடித்துக்கொண்டோம். நான் பலமாக இடித்திருக்க வேண்டும். ‘உஸ் . . . அய்யா இவன் வேணும்னே இடிக்கிறான்யா’ என்று கத்தினான் கிருட்டிணன். ‘இல்லை அய்யா, தெரியாம இடிச்சுதுங்க’ என்றேன். அய்யா இருவரையும் பொருட்படுத்தவில்லை. இருவரும் அமைதியாகச் சேர்ந்து நின்றோம். கிருட்டிணன் எனக்கு இடது பக்கமாக நின்றிருந்தான். அவன் முகத்துக்குள்ளிருந்து எழுந்த ஏப்பத்தில் புளிச் சோற்றின் வாடை வீசியது. ‘அடே மாலவா, நீ உன்னுடைய வலது கையை நற்குமரனின் தோளில் போடு. நற்குமரா, நீயும் அதுபோல உன்னுடைய இடது கையை மாலவனின் தோள்மீது வை’ என்றார் அய்யா. அவர் சொன்னபடி செய்தோம். அய்யா கொஞ்சம் எட்டி நின்று மனப்பாடப் பகுதிச் செய்யுளைக் கரும் பலகையில் எழுதிப் போட்டு ரசிப்பதுபோல எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். ‘இப்படிப் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது, பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் போல. அதை விடுத்து இரண்டு பயல்களும் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறீர்களே? இனி உங்களுக்குள் சண்டை வந்தால் என்னிடம் பேச வேண்டாம் இந்த வீட்டுப் பக்கம் வரவும் வேண்டாம்’ என்று திடமான குரலில் சொன்னார். அய்யா சொன்னால் சொன்னது போலவே செய்வார் என்று எங்களுக்குத் தெரியும். அவ்வளவு உறுதியானவர். இரு நிறக் கரைபோட்ட மேல் துண்டை அணிந்து வரக் கூடாது என்று பள்ளி நிர்வாகம் சொன்னது. அய்யா அப்படி வருவது தன்னுடைய உரிமை என்றார். அப்படித்தான் வர முடியும். நிர்வாகத்துக்கு விருப்பமில்லையென்றால் அதை எழுத்துமூலம் தெரிவிக்கலாம். அதுவே முறை. ஆனால் தன்னுடைய விருப்பம்போலத்தான் உடுத்த முடியும் என்று பதில் சொன்னார். எனினும் கீழ்ப்படிதலுள்ள ஊழியனாக மறுநாள் முதல் மேல்துண்டில்லாமல் வருவதாக வாக்களித்தார். எங்கள் எல்லாருக்கும் அய்யா மேலிருந்த மரியாதை ஆட்டங்கண்டது. இப்படி ஏமாற்றிவிட்டாரே என்று அங்கலாய்ப்பாக இருந்தது. அடுத்த நாள் புறநானூற்றுப் புத்தகத்திலிருந்து இறங்கி வந்தவர்போல எங்கள் கண்ணுக்குத் தெரிந்தார் அய்யா. ஒன்றரை அங்குல அகலத்துக்கு இரட்டைக்கரை போட்ட புதுவேட்டி கட்டியிருந்தார். அய்யா மிகவும் பிடிவாதமானவர் என்று நாங்கள் தெரிந்துகொண்டது அன்றைக்குத்தான். ‘இனிப் பேசமாட்டேன்’ என்று அவர் சொன்னதும் எனக்கு வயிறு வலித்தது. ஆறுதலுக்காகக் கிருட்டிணன் தோள்மேல் போட்டிருந்த கையை இறுக்கினேன். அவனுக்கும் அப்படியே இருந்திருக்கும்போல. அவன் தோள்மேலிருந்த என் இடது கையைத் தன் இடது கையால் பாசமாக இழுத்துப் பொத்தினாற்போலப் பிடித்துக்கொண்டான். அய்யாவின் முகத்தில் நிறைவான சிரிப்பு புரண்டது. சிரிப்பு மங்கியதும் அய்யாவே ஒரு உடன்படிக்கையைச் சொன்னார். திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் நானும் செவ்வாய், வியாழன் கிழமைகளில் கிருட்டிணனும் சைக்கிளைத் துடைக்கலாம். சீட்டைப் பிடித்தபடி வரலாம். ஆனால் கிருட்டிணனுக்கு அதில் சம்மதமில்லை. ‘அவனுக்கு மூன்று நாட்கள், எனக்கு மட்டும் இரண்டு நாட்களா?’ என்று சிணுங்கினான். வகுப்புகள் நடைபெறும் எல்லாச் சனிக்கிழமைகளும் அவனுக்கே என்று திருத்தம் சொன்னார். அவனுக்கு மனம் ஒப்பவில்லை. அது முகத்தில் தெரிந்தது. நான் பள்ளிக்கூடம் வராத நாட்களும் அவனுக்கே என்றார். குண்டன் மெல்லச் சிரித்தான். ‘நேரமாகிவிட்டது, புறப்படுவோம்’ அய்யா சொன்னதும் நான் சைக்கிளை ஸ்டாண்டிலிருந்து விடுவித்தேன். அய்யா காலை வீசி ஏறி உட்கார்ந்தார். நகர ஆரம்பித்தோம். அய்யா வீட்டு மதில் சுவரைத் தாண்டும் முன்பு மனதுக்குள்ளேயே சில தீர்மானங்களை எடுத்துக்கொண்டேன். அதில் ஒன்று இந்த வருடத்தில் மிச்சமிருக்கும் நாட்களில் ஒரு நாள்கூட விடுப்பு எடுக்கக் கூடாது. கூடவே எங்கள் தெரு சித்தி விநாயகரிடம் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தாமலிருக்கும் நல்ல புத்தியை எங்கள் தலைமை ஆசிரியர் அருட் தந்தை யூஜின் லாரன்ஸ் அடிகளாருக்குக் கொடுத்தால் அருகம்புல் மாலை சார்த்தி நாலணா கோபால் கற்பூரம் ஏற்றிவைப்பதாகவும் வேண்டிக்கொண்டேன். பொங்கல் விடுமுறைக்கு இரண்டு நாட்கள் இருந்தன. புதன்கிழமை போகி தொடங்கி ஐந்து நாட்கள் விடுமுறை என்பதை நினைக்கவே கொண்டாட்டமாக இருந்தது. போகி அன்றைக்குக் காலையில் வெல்லிங்டனுக்குப் பஸ் ஏறினால் பத்தரை பதினோரு மணிக்கு முன்பாக அத்தை வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம். ஞாயிற்றுக்கிழமை மத்தியானத்துக்குப் பிறகு பஸ் பிடித்தால் மாலைக்குள் வீட்டுக்கு வந்துவிடலாம். மனதுக்குள் திட்டம்போட்டு அம்மாவிடம் சொல்லிக் காசையும் வாங்கி வைத்திருந்தேன். செவ்வாய்க்கிழமை மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பிச் சட்டை, துணிகளையெல்லாம் எடுத்துவைத்துவிட்டு அய்யாவிடம் சொல்லிக்கொள்ள ஓடினேன். அவர் வெளியே போயிருக்கக் கூடாது என்று மனம் அடித்துக்கொண்டது. பொதுவாக மாலை நேரங்களில் எங்கும் போகமாட்டார். படித்துக்கொண்டிருப்பார் அல்லது எழுதிக்கொண்டிருப்பார். அவர் எழுதும் துணை நூல்களுக்குப் பெரிய வரவேற்பு இருந்தது. சில நாட்கள் மைய நூலகத்துக்கோ ரெயின்போ தியேட்டருக்கோ போவார். பேருந்தில்தான் போவார். சைக்கிளை எடுக்கமாட்டார். அய்யாவின் வீட்டை நெருங்கியபோது வீட்டுக்குள்ளிருந்து அய்யா பெண்டாட்டியின் கத்தல் கேட்டது. எட்டு ஊருக்குக் கேட்கிற குரல். கேட்டைத் திறந்து உள்ளே போகலாமா வேண்டாமா என்று யோசித்தேன். அய்யா பெண்டாட்டியின் கத்தலில் அதுவரைக்கும் கேட்டிராத ரகத்தில் தினுசு தினுசான கெட்ட வார்த்தைகள் இருந்தன. அந்த வார்த்தைகள் உள்ளே போகிற எண்ணத்தை முறியடித்துச் சுவரோடு ஒண்டி நிற்கச் செய்தன. அய்யா வீட்டுக் காம்பவுண்டுச் சுவர் என்னைவிட ஒரு முழம் அதிக உயரம். முன்னங்கால்களில் நின்று எக்கிப் பார்த்தாலோ செங்கல்லையோ கட்டையையோ போட்டு ஏறி நின்று பார்த்தாலோதான் உள்ளே தெரியும். எட்டிப் பார்க்கக்கால் விரல்களை ஊன்றினேன். ‘தாயோளி, பலபட்டற சாதிதான நீ? வாத்தியாருன்னு சொல்லிப் போட்டு வெள்ளையுஞ் சொள்ளையுமா மாட்டிகிட்டுத் திரிஞ்சாலும் புத்தி மாறிப் போகுமாக்கும்?’ என்ற அய்யா பெண்டாட்டியின் வார்த்தைகள் மண்டைமேல் வந்து விழுந்ததில் தடுமாறிச் சுவரை யொட்டி ஒடுங்கினேன். எங்கள் தெருவில் பெண்கள் சண்டைபோடுவதைப் பார்த்திருக்கிறேன். உக்கிரமான சண்டையில்கூட இந்த வார்த்தைகளை அதுவரை கேட்டதில்லை. அதுவும் ஆண் பிள்ளைகள் திட்டுகிற வார்த்தைகளைப் பொம்பிளைகள் சொல்லிக் கேட்டதில்லை. அய்யா பெண்டாட்டியின் வாயிலிருந்து திட்டுகள் மம்மானியமாகக் கொட்டிக் கொண்டிருந்தன. அய்யா உள்ளேதான் இருந்தார். அவரைத்தான் பெண்டாட்டி திட்டிக்கொண்டிருந்தார். புரிந்தது. ஆனால் அய்யா ஏன் மறுபேச்சுப் பேசாமல் சொல்லாமல் இருந்தார் என்றுதான் புரியவில்லை. மறுபடியும் கால்களால் எக்கி மதில் சுவரில் தாடை உராய எட்டிப் பார்த்தேன். திண்ணைச் சன்னலுக்கு மறுபக்கம் வெள்ளைச் சட்டை தெரிந்தது. அய்யாதான். உட்கார்ந்திருந்தார். கண்களை இன்னும் இடுக்கிப் பார்த்தபோது தலை குனிந்திருப்பதுபோலவோ புத்தகம் வாசிப்பதுபோலவோ தெரிந்தது. அய்யா பெண்டாட்டி தென்படவில்லை. ஆனால் அவருடைய ஆங்காரக் கூச்சல் மட்டும் விட்டுவிட்டுக் கேட்டது. சுவரின் சொரசொரப்பில் உராய்ந்து தாவாங்கட்டை எரிந்தது. ‘ஆருடாது, ஒடக்கான் மாரி செவுத்துல தொத்திகிட்டு’ என்ற விரட்டல் முதுகை அறைந்தது. சன்னல் பக்கம் அய்யா தலைநிமிர்ந்ததும் நான் தரையில் விழுந்ததும் ஒரே விநாடியில் நடந்தன. அய்யா பெண்டாட்டியின் அப்பாதான் விரட்டியவர் என்பதை மல்லாந்து கிடந்து பார்த்தேன். ‘இங்கென்றா எட்டிப் பாத்துட்டுடிருக்கே? என்று கேட்டுக்கொண்டே கையை நீட்டினார். அதைப் பற்றிக்கொண்டு எழுந்து நின்றேன். கறுப்புநிறக் கார் எனக்குக் கொஞ்ச தூரம் தள்ளி நின்றிருந்தது. யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே ‘அய்யாவப் பாக்க வந்தனுங்க’ என்றேன். ‘பாக்க வந்தவன் எட்டிப் பாத்து கிட்டா நிப்ப. உள்ற போக வேண்டியதுதான?’ என்றார். ‘இல்லீங்க, உள்ள என்னமோ சண்டையாட்டம் இருக்குதுங்க. அதான்’ ‘சண்டையா?’ என்று கேட்டவர் என் கையை உதறிவிட்டு வேகமாக உள்ளே போனார். அவருடைய கோபத்தில் இரும்பு கேட் கிறீச் சிட்டுக்கொண்டு சுவரில் மோதிய சத்தம் பெரிதாகக் கேட்டது. நான் காதைப் பொத்திக்கொண்டு நின்றேன். காதுக்குள் இரும்புக் குரல் ‘ஙொய்’ என்று விம்மி அடங்கியது. கதவைத் திறந்து நகரத் தொடங்கியபோது அய்யா பெண்டாட்டியின் அப்பா பெருங்குரலில் கத்தியது சுவருக்கு இந்தப் பக்கமாகக் கேட்டது. மறுநாள் பேருந்தில் ஏறி ஊருக்குப் போய்ச் சேரும்வரை அய்யாவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். யோசிக்க யோசிக்க ஆத்திரமும் வருத்தமுமாக முட்டிக்கொண்டு வந்தது. அய்யாவுக்கு ஊர் தஞ்சாவூர்ப் பக்கமாம். அப்படியென்றால் சோழநாட்டுக்காரர். இருந்தாலும் அய்யாவைத் தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனாகத்தான் கற்பனை செய்து வைத்திருந்தேன். செய்யுள் பாடத்தில் புறநானூற்றுப் பாடலை அய்யா நடத்திய விதம் அப்படிக் கற்பனை செய்யத் தூண்டியிருந்தது. பதினாறு வயசுப் பொடியன் என்று இளக்காரமாக நினைத்துச் சேர, சோழ மன்னர்களும் குறுநில மன்னர்கள் ஐந்து பேரும் கூட்டணி அமைத்துப் பாண்டியன்மீது போர் தொடுக்கத் தயாராகிறார்கள். அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்வதாகவும் அப்படி நடவாது போனால் தன்னுடைய குடிமக்கள் தன்னைக் கொடுங்கோலன் என்று பழிக்கட்டும். புலவர்கள் தன்னைப் புகழ்ந்து பாடாமல் போகட்டும் என்று சபதம் செய்கிறான். இந்தப் பாடலை அய்யா நடத்தியபோது வகுப்பே தூசு விழுந்தால் கேட்குமளவு அமைதியாக இருந்தது. அய்யா பதினாறு வயதுப் பாண்டியனாகவே மாறியிருந்தார். முகம் உப்பியிருந்தது. கன்னத்துச் சதை இறுகியிருந்தது. கண்களில் சிவப்பு கலங்கியிருந்தது. வகுப்பிலிருந்த எங்கள் ஐம்பத்தி இரண்டு பேரையும் ‘சிறுசொல் சொல்லிய சினம்கெழு வேந்தர்க’ளின் கூட்டணியாக நினைத்துப் பற்களை நறநறத்து அறைகூவல் விடுத்தார். எல்லாருக்குமே பள்ளியில் இருக்கிறோமா தலையானங்கானத்தில் கைகள் நடுங்க வாளையும் வேலையும் பிடித்துக்கொண்டு நிற்கிறோமா என்று சந்தேகமாகவே இருந்தது. அய்யா எவ்வளவு வீரமானவர் என்று மெய்சிலிர்த்தது எனக்கு. மூன்றாவது வரிசையில் உட்கார்ந்திருந்த டேவிட்டைச் சாடையால் அழைத்துக் குண்டூசித் தலைகள்போலச் சருமம் பொரிந்திருந்த கைகளையும் சிலுப்பி நின்ற ரோமங்களையும் காட்டினேன். அவன் முகம் சிரித்து விரிந்தது. அவ்வளவு வீரரான அய்யா ஏன் ஒரு பொட்டச்சியின் வார்த்தை களுக்குப் பதில் பேசாமலிருந்தார். இல்லை நான் வந்த பிறகு பேசியிருப்பாரோ என யோசித்துக் குழம்பினேன். அந்த அசதியிலேயே தூங்கியிருந்தேன். ‘வெல்லிங்டன் எறங்குறது இருக்கா?’ என்ற நடத்து நரின் குரல் கேட்டு விழித்துத்தான் பேருந்திலிருந்து இறங்கினேன். தைல வாசனையுடன் முகத்தில் அடித்த காற்றில் அய்யாவை மறந்து போனேன். விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறந்த நாள் காலையில் வழக்கம் போல அய்யா வீட்டுக்கு ஓடினேன். குட்டைக் கிருட்டிணன் வந்திருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டு தான் ஓடினேன். அய்யா வீட்டு இரும்பு கேட் மூடியிருந்தது. உள்ளே சைக்கிள் அதன் வழக்கமான இடத்தில் இல்லாமல் பெரிய திண்ணையில் சன்னலையொட்டி நிறுத்தப்பட்டிருந்தது. அய்யா இன்று விடுப்பு எடுத்திருப்பாரோ? கேட்டைத் திறந்து உள்ளே போனேன். வாசல் சாத்தியிருந்தது. குழப்பத்துடன் திண்ணையேறிக் கதவைத் தட்டினேன். உள்ளேயிருந்து அய்யா பெண்டாட்டியின் குரல் கேட்டது ‘ஆரு?’ ‘அய்யா இல்லீங்களா?’ என்று எச்சிலை விழுங்கிக்கொண்டே கேட்டேன். கதவு திறந்து அய்யா பெண்டாட்டி நிலைப்படியில் வந்து நின்றார். ‘நீயா? அது நேரத்துலயே பள்ளிக்கோடம் போயிருச்சு’ என்றார். நம்பிக்கை வராமல் ‘அய்யாவோட சைக்கிளு இங்க நிக்குதுங்களே? என்றேன். ‘அது அங்கதான நிக்கிது. ஒன்ற தலமேல நிக்கிறமாரிச் சொல்றே? ஏன் ஒங்க அய்யா சைக்கிளு இல்லாமப் பள்ளிக் கோடத்துக்குப் போகாதாக்கும்? இனிமே அது அதோட பேருக்கேத்தமாரிதான்’ என்றார். அவர் சொன்னது முதலில் புரியவில்லை. புரிந்ததும் மனசுக்குள் குமட்டியது. அய்யா இனி நடராஜா சர்வீசில்தான் பள்ளிக்கு வருவாரா? சைக்கிள் கிடையாதா? கதைகள் கிடையாதா? என யோசித்துக்கொண்டிருந்தபோது அய்யா பெண்டாட்டி ‘வந்தது வந்தே இந்த சோத்துப் போசியக் கொண்டுட்டுப் போ’ என்றார். சொல்லிவிட்டு உள்ளே போனார். நான் சைக்கிளைப் பார்த்தேன். பூட்டியிருந்தது. அதுமட்டுமல்ல. ஹாரிசாண்டல்பாரைச் சுற்றிச் சங்கிலி போட்டுத் திண்ணைச் சன்னல் கம்பியில் கோர்த்து ஒரு பூட்டு தொங்கியது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் போர்ப் புரவி சிறைப்படுத்தப்பட்டதுபோலத் தோன்றியது. ஹாண்டில் பாரைத் தொட்டேன். அது என் பக்கமாகத் தலையைத் திருப்பியது. மேற்கொண்டு யோசிப்பதற்குள் ‘இந்தா இதக் கொண்டு போ’ என்று அய்யா பெண்டாட்டி சாப்பாட்டுப் பாத்திரம் வைத்த பிளாஸ்டிக் ஒயர்க் கூடையை நீட்டினார். வாங்கினேன். இறங்கி நடந்தேன். அய்யா உட்கார்ந்திருக்க சைக்கிளைத் தள்ளிக் கொண்டுபோனபோது கொஞ்சமாகத் தெரிந்த தூரம் தனியாக நடந்தபோது மிகத் தொலைவாகப் பட்டது. மணியடித்து வகுப்புகள் தொடங்கிப் பத்து நிமிடங்களுக்குப் பிறகுதான் பள்ளிக்கூடம் போய்ச் சேர முடிந்தது. அய்யாவின் சாப்பாட்டை ஸ்டாஃப் ரூமில் வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு வகுப்புக்கு வந்தேன். ஆங்கில ஆசிரியர் ஸ்டீபன்சார் ‘பொங்கல் தின்ன மதமதப்பு இன்னும் தீரலையா கவிஞரய்யா? வாங்க வந்து உக்காருங்க’ என்று கேலியாகச் சொல்லி வரவேற்றார். என் இடத்தில் உட்கார்ந்தேன். ஆனால் நான்காவது பீரியட்டுக்கு அய்யா வரும்வரைக்கும் எதிலும் மனம் ஒட்டவில்லை. அய்யாவின் பிரிவேளையில் நடத்தப்பட்ட இலக்கணமும் காதில் ஏறவில்லை. உணவு இடைவேளை மணியடித்தது. அய்யா புத்தகங்களை எடுத்துக்கொண்டு வகுப்பைவிட்டு வெளியேறத் தொடங்கியபோது பக்கத்தில் போய்ச் சாப்பாடு எடுத்து வந்ததைச் சொன்னேன். ‘வீட்டுக்குப் போயிருந்தாயா?’ என்றார். தலையாட்டினேன். குட்டைக் கிருட்டிணன் எங்கள் அருகில் வந்து நின்று ‘இவன் இன்னிக்கு லேட்டாத்தான் வந்தாங்யா’ என்றான். நான் அவனை முறைத்தேன். அய்யா நடந்தார். கூடவே நாங்களும் நடந்தோம். படியிறங்கி வராந்தாவுக்கு வந்ததும் ‘சரி, போய்ச் சாப்பிடப் பாருங்கள்’ என்று நடந்தார். ஆனால் அவர் ஸ்டாஃப் ரூம் பக்கமாகப் போகாமல் மெயின் கேட்டை நோக்கிப் போனதை இருவரும் கவனித்தோம். ‘அய்யா இனுமே சைக்கிள்ல வர மாட்டாராண்டா. காலேல கூட நடந்துதான் வந்தம்’ என்றான் கிருட்டிணன். இந்தக் குள்ளப் பன்றி எனக்கு முன்பே அய்யா வீட்டுக்குப் போயிருந்தான் என்பது எரிச்சலைக் கொடுத்தாலும் காட்டிக்கொள்ளாமல் ‘ஏண்டா, சைக்கிள் நல்லாத்தான இருக்கு. நாம் பாத்தனே, பஞ்ச ரொண்ணுமில்லியே?’ என்றேன். ‘அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. என்னமோ அய்யாதான் இனுமே சைக்கிள எடுக்க வேண்டா முன்னாரு’ என்றான். அந்த நாளுக்குப் பிறகு அய்யாவுடனான எங்கள் உறவு பள்ளி வளாகத்துக்குள் மட்டுமாகச் சுருங்கிப்போனது. அய்யா நடந்தே வந்தார். நடந்தே போனார். சைக்கிள் காலத்தில் பள்ளி ஆரம்பிக்கப் பத்து மணித் துளிகளுக்கு முன்பாக வருவது, பள்ளி முடிந்து பதினைந்து மணித்துளிகளுக்குப் பின் புறப்படுவது என்றிருந்த அய்யாவின் நிகழ்ச்சி நிரல் சட்டென்று மாறியது. எல்லாருக்கும் முன்னால் வந்து எல்லாரும் போன பின்னும் இருந்தார். நூலகத்தில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்துவிட்டுப் பொழுது இருட்டத் தொடங்கியதும் புறப்பட்டுப் போனார். அந்த ஆண்டு முழுத் தேர்வுக்கு முன்பு அய்யா விடுப்பில் போனார். நாங்கள் பத்தாம் வகுப்புக்கு தேர்ச்சிபெற்ற பிறகு அவரை ஒரே ஒரு நாள்தான் பள்ளியில் பார்த்தேன். வராந்தாவில் ஆசையுடன் ஓடிப் போய் அவர் பக்கத்தில் நின்றேன். அவரும் இதமாகத் தோளில் கைவத்து ‘எப்படி இருக்கிறாய்? நன்றாகப் படி’ என்றார். அதைச் சொன்னபோது அவர் விரல்கள் தோளில் வலுவாக அழுந்தின. அந்த அழுத்தம் எதையோ சொல்வதுபோல இருந்தது. அது என்னவென்று யோசிப்பதற்குள் மணி ஒலித்து வகுப்புக்கு விரட்டியது. அய்யா முதுகில் தட்டி அனுப்பி விட்டுத் தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்தார். அன்றுதான் அவரைக் கடைசியாகப் பார்த்தேன். கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நிர்வாகத்தில் இருக்கும் பள்ளி எங்களுடையது. அதே நிர்வாகத்தின் கீழ்அதே மறைமாவட்டத்தைச் சேர்ந்த முப்பத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பள்ளிக்கு நடவரசு அய்யா இடமாறுதல் வாங்கிப் போனார் என்று சொன்னார்கள். அது சரிதானா என்று தெரிந்துகொள்வதற்காகக் குட்டைக் கிருட்டிணனும் நானும் அய்யா வீட்டைத் தேடிப் போனோம். மூடிய இரும்பு கேட்டில் ‘விடு வாடகைகு விட படும்’ என்று மேலே தமிழிலும் கீழே ‘TO LET’ என்று ஆங்கிலத்திலும் எழுதிய அட்டை தொங்கியதைப் பார்த்தோம். ‘அய்யா இருந்தா வருத்தப்படுவாருடா’ என்றேன். ‘எதுக்குடா?’ என்றான் கிருட்டிணன். ‘தமிழ இப்டித் தப்பா எழுதியிருக்காங்களே, அதப் பாத்து.’ இரண்டு பேரும் வேறுசந்தர்ப்பமாக இருந்திருந்தால் சிரித்திருப்போம். ஆனால் அப்போது சிரிக்கவில்லை. கிருட்டிணன் கேட் அருகில் போய் நின்று பேனாவை எடுத்து ‘ஓ’ வுக்கும் ‘எல்’லுக்கும் நடுவில் ஒரு கோட்டைப் போட்டுவிட்டு வந்தான். படித்தேன். அப்போதும் சிரிப்பு வரவில்லை. கல்லூரி விடுமுறை நாளில் எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த கிருஷ்ணா திரையங்கில் மாலைக் காட்சிப் படம் பார்க்கப் போயிருந்தேன். கடைசி இருக்கைக்கு முந்தின வரிசையில் உட்கார்ந்திருந்தேன். ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே சொத்தையான படம் என்று புரிந்தது. இருப்பு கொள்ளாமல் சுற்றிலும் பார்த்தேன். சேர் போட்டிருந்த அந்த முதல் வகுப்பில் என்னைச் சேர்த்துப் பத்துப்பேர்கூட இல்லை. அரை மணிநேரத்துக்குப் பின்பு வெளியே போய்விடத் தீர்மானித்து எழுந்தேன். இருட்டில் தடுமாறி வெளியில் வந்து நின்றதும் முதுகில் ஒரு கை பதிந்தது. திரும்பிப் பார்த்தேன். டேவிட். நெட்டைக் கொக்கு டேவிட். ‘நீ வந்து ஒக்காந்ததுமே பாத்தேண்டா. ஒனக்குப் பின்னாடி சீட்டுலதான் ஒக்காந்திருந்தேன். செரி இண்டர்வெல்லுல பேசிக்கலாம்னு இருந்தேன். ஏன் எந்திரிச்சு வந்திட்ட, படம் புடிக்கலியா?’ என்றான். புன்னகையுடன் ஒத்துக்கொண்டேன். நீ நல்லாருக்கியா நான் நல்லாருக்கேன் என்ற விசாரிப்புகளுக்கு அப்புறம் பேச எதுவுமில்லாதது போலப் பட்டது.கொஞ்ச நேரம் பேசாமலேயே இருந்தோம். இரண்டு பேரும் ஒரே ஞாபகத்தின் இரு கரைகளில் நின்றிருந்தது போலத் தோன்றியது. இருவருக்கும் இடையில் நேற்றைய நதி ஓடியது. அதில் பழைய காட்சிகள் மினுங்கி நகர்ந்தன. பள்ளிக்கூடம். வழிகள். நடவரசு அய்யா. அவர் சொன்ன கதைகளின் காட்சிகள். அவருடையராலே சைக்கிள். எல்லாம் மினுங்கின. நான் கரைந்துபோய்க் கடைசியாக அய்யாவைப் பார்த்த நாளின் சம்பவத்தைச் சொல்லிக்கொண்டிருந்தேன். டேவிட் ‘உம்’ கொட்டிக்கொண்டிருந்தான். அந்தச் சண்டைக்கு அப்புறம் அய்யா நடந்தே வந்து போனதைச் சொன்னேன். ‘நடக்காம என்ன பண்ணுவாரு, அந்த ராங்கிக்காரி சொன்னதக் கேட்டா சூடு சொரண இருக்குறவங்க அதத்தான் பண்ணுவாங்க. “இது எங்க அப்பாரு வாங்கிக் குடுத்த வண்டி. அதயேன் தொடறே? சின்ன சாதிப் பொச்சுக்கு சைக்கிளு கேக்குதாமில்ல சைக்கிளு”ன்னு அதப் பூட்டி வெச்சிட்டா. அதான் நடந்தாரு’ என்றான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அய்யா ஏன் அப்படி இருந்தார்? அந்தப் பெண் பிள்ளையை ரெண்டு சாத்துச் சாத்தவில்லை? அய்யா வீரமானவரா? அப்பிராணியா? அவ்வளவு சம்பளம் வாங்கியவர், வசதி இல்லாத பையன்களுக்குக் கணக்குப் பார்க்காமல் செலவு செய்தவர். அவரால் புதிதாக ஒரு சைக்கிளை வாங்கியிருக்க முடியாதா? ‘செரிதான். நீ சொல்றாப்புல புது சைக்கிளு வாங்கறதொண்ணும் அவருக்குக் கஷ்டமில்ல. வாங்கி என்ன பண்றது? ஓட்டத் தெரியோணுமே?’ என்றான் டேவிட்.
காலச்சுவடு மார்ச் 2013
|
ஞாயிறு, 27 ஜூலை, 2014
அய்யாவின் மிதிவண்டி
சனி, 26 ஜூலை, 2014
கண் மறந்த புதையல்
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் அபிமானத்துக்குரிய எழுத்தாளராக மாறிய எழுபதுகளின் இறுதி, எண்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் அவர் எழுதிய எல்லாப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளையும் அவரைப் பற்றி எழுதப் பட்டவற்றையும் அவரது நேர்காணல்கள் இடம் பெற்ற இதழ்களையும் தேடித் தேடிச் சேர்த்து வைத்தேன். புத்தகங்களில் இரவல் போன எதுவும் திரும்பக் கைக்குக் கிடைக்கவில்லை. நேர்காணல்கள் வெளிவந்த இதழ்களும் காணாமற் போயின. காபோ அளித்தவற்றில் குறிப்பாக இரண்டு நேர்காணல் கள் அந்த நாளில் மிகவும் முக்கியமானவையாகத் தோன்றின. இன்றும் தோன்றுகின்றன. சில இதழ்கள் மட்டுமே வந்து நின்று போன 'பாயிண்ட் கவுண்டர் பாயிண்ட்' என்ற இதழில் வெளியானது ஒன்று. ' ஜேர்னல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் ஐடியாஸ்' காலாண்டு இதழில் வெளிவந்த நேர்காணல் மற்றொன்று. தொண்ணூறுகளில் மார்க்கேஸ் சிறப்பிதழ் வெளியிடுவதில் ஈடுபட்டிருந்த நண்பர் கோணங்கியிடம் நேர்காணல்கள் வெளியான அந்த இதழ்களைக் கொடுத்தது நினைவில் இருக்கிறது. ஆனால் இவற்றுக்கு நகல் எடுத்து வைத்துக் கொண்டதாக ஞாபகமில்லை. அப்படியே இருந்தாலும் இடமாற்றங்கள் காரணமாகக் காணாமல் போயிருக்கலாமென்றும் திருவனந்தபுரத்துக்கு இடம்மாறி வந்து பதினான்கு ஆண்டுகளான பின்னும் பிரிக்கப் படாமல் கட்டிக் கிடந்த பெட்டிகளுக்குள்ளே இருக்கலாமென்றும் எண்ணியிருந்தேன்.
ஏதோ புத்தகத்தை எடுப்பதற்காக அண்மையில் அந்தப் பெட்டிகளைப் பிரித்துப் பார்த்தபோது காணாமற் போனவை என்று நம்பியிருந்த பல பொக்கிஷங்கள் மீண்டும் தென்பட்டன. புத்தகங்கள், சிற்றிதழ்கள், பத்திரிகை நறுக்குகள் , அரைகுறையாக விட்ட கவிதை, கட்டுரைப் பிரதிகள், ஒளிநகல்கள் இவற்றுக்கிடையில் ' ஜேர்னல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் ஐடியாஸ்' இதழ் மார்க்கேஸ் பேட்டியின் நகலும் கிடைத்தது. அந்த இதழின் ஜனவரி - மார்ச் 1983 காலாண்டு எண்ணில் 'எழுத்தாளரின் சமையலறை' (Writer's Kitchen) என்ற
தலைப்பில் அமைந்த நேர்காணல். ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குச் செய்யப்பட்ட மொழியாக்கம். மொழிபெயர்ப்பாளர் கல்பனா சாஹ்னி.
டாக்டர் கல்பனா சாஹ்னி
கண் மறந்த புதையல் கைவசமான மகிழ்ச்சியில் கல்பனா சாஹ்னி யார்? இணையம் வாயிலாகத்து துப்புத் துலக்கினேன். அது இன்னுமொரு ஆச்சரியத்தை அளித்தது. கல்பனா சாஹ்னி ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மாஸ்கோவில் வசித்து ரஷ்ய மொழியைக் கற்றுப் பட்டம் பெற்றவர். ரஷ்ய மொழியிலிருந்து குறிப்பிடத் தகுந்த மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். சிங்கிஸ் ஐத்மாத்தவுடனும் நேர்காணல் நடத்தியிருக்கிறார். ரஷ்ய மொழியில் வெளிவந்திருக்கும் பேட்டியை கல்பனா சாஹ்னியே எடுத்திருக்க வேண்டும். இதை விடவும் ஆச்சரியமாகத் தென்பட்டது அவரது பின்னணி. இந்திய சினிமாவின் நடிப்பாளுமைகளில் ஒருவரான பால்ராஜ் சாஹ்னியின் சகோதரரின் மகள். அதாவது நடிகரும் இந்தி எழுத்தாளர்களில் மிக முக்கியமானவருமான பீஷம் சாஹ்னியின் மகள். (பீஷம் சாஹ்னியின் நாவல் 'தமஸ்' வெங்கட் சாமிநாதன் மொழி பெயர்ப்பில் தமிழில் வெளி வந்திருக்கிறது ).
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் இருபது பக்க நேர்காணல் மிகச் சுவாரசிய மானது. எழுத்தின் அக உலகைப் பகிரங்கப்படுத்துவது. முதல் பதிலிலேயே படிப்பவனை ஈர்த்து விடுகிறார் காபோ.
ஒருமுறை ஜெனீவாவுக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். பன்னிரண்டு மணி நேரப் பயணம். நண்பர்கள் சிலருக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த ' தனிமையின் நூறு ஆண்டுகள்' ( One Hundred Years of Solitude ) நாவலின் பிரதி ஒன்றைத் தவிர வாசிப்பதற்கு என்னிடம் வேறு எதுவும் இருக்கவில்லை. எனவே என்னுடைய நாவலையே நான் வாசிக்கத் தொடங்கினேன். என்னால் மூன்று நான்கு அத்தியாயங்களைத் தவிர முழுவதும் படித்து முடிக்க முடியவில்லை.
அது உங்களுக்குப் பிடித்திருந்ததா?
வெளிப்படையாகச் சொல்வதானால் இல்லை. அதை எழுதிக் கொண்டிருந்த போது உலகத்திலேயே சிறந்த புத்தகம் என்று நிச்சயம் கொண்டிருந்தேன். ஜெனீவாவுக்குப் போகும் வழியில் படித்ததும் மிகவும் வெட்கமடைந்தேன். அதை ஒழுங்காக எழுத எனக்குப் போதுமான கால அவகாசம் கிடைத்திருக்க வில்லை என்பதை உணர்ந்தேன். அதில் நான் செய்திருப்பது கேட்ட கதை களைத் திரும்பச் சொன்னதுதான்.
இலட்சக் கணக்கான வாசகர்களைப் பித்துப் பிடிக்க வைத்த நாவலைப் பற்றி அதன் ஆசிரியர் இப்படியா சொல்லுவார்? ஆனால் வேறு எப்படி சொல்லுவார், காபோ?
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் அபிமானத்துக்குரிய எழுத்தாளராக மாறிய எழுபதுகளின் இறுதி, எண்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் அவர் எழுதிய எல்லாப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளையும் அவரைப் பற்றி எழுதப் பட்டவற்றையும் அவரது நேர்காணல்கள் இடம் பெற்ற இதழ்களையும் தேடித் தேடிச் சேர்த்து வைத்தேன். புத்தகங்களில் இரவல் போன எதுவும் திரும்பக் கைக்குக் கிடைக்கவில்லை. நேர்காணல்கள் வெளிவந்த இதழ்களும் காணாமற் போயின. காபோ அளித்தவற்றில் குறிப்பாக இரண்டு நேர்காணல் கள் அந்த நாளில் மிகவும் முக்கியமானவையாகத் தோன்றின. இன்றும் தோன்றுகின்றன. சில இதழ்கள் மட்டுமே வந்து நின்று போன 'பாயிண்ட் கவுண்டர் பாயிண்ட்' என்ற இதழில் வெளியானது ஒன்று. ' ஜேர்னல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் ஐடியாஸ்' காலாண்டு இதழில் வெளிவந்த நேர்காணல் மற்றொன்று. தொண்ணூறுகளில் மார்க்கேஸ் சிறப்பிதழ் வெளியிடுவதில் ஈடுபட்டிருந்த நண்பர் கோணங்கியிடம் நேர்காணல்கள் வெளியான அந்த இதழ்களைக் கொடுத்தது நினைவில் இருக்கிறது. ஆனால் இவற்றுக்கு நகல் எடுத்து வைத்துக் கொண்டதாக ஞாபகமில்லை. அப்படியே இருந்தாலும் இடமாற்றங்கள் காரணமாகக் காணாமல் போயிருக்கலாமென்றும் திருவனந்தபுரத்துக்கு இடம்மாறி வந்து பதினான்கு ஆண்டுகளான பின்னும் பிரிக்கப் படாமல் கட்டிக் கிடந்த பெட்டிகளுக்குள்ளே இருக்கலாமென்றும் எண்ணியிருந்தேன்.
ஏதோ புத்தகத்தை எடுப்பதற்காக அண்மையில் அந்தப் பெட்டிகளைப் பிரித்துப் பார்த்தபோது காணாமற் போனவை என்று நம்பியிருந்த பல பொக்கிஷங்கள் மீண்டும் தென்பட்டன. புத்தகங்கள், சிற்றிதழ்கள், பத்திரிகை நறுக்குகள் , அரைகுறையாக விட்ட கவிதை, கட்டுரைப் பிரதிகள், ஒளிநகல்கள் இவற்றுக்கிடையில் ' ஜேர்னல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் ஐடியாஸ்' இதழ் மார்க்கேஸ் பேட்டியின் நகலும் கிடைத்தது. அந்த இதழின் ஜனவரி - மார்ச் 1983 காலாண்டு எண்ணில் 'எழுத்தாளரின் சமையலறை' (Writer's Kitchen) என்ற
தலைப்பில் அமைந்த நேர்காணல். ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குச் செய்யப்பட்ட மொழியாக்கம். மொழிபெயர்ப்பாளர் கல்பனா சாஹ்னி.
டாக்டர் கல்பனா சாஹ்னி
கண் மறந்த புதையல் கைவசமான மகிழ்ச்சியில் கல்பனா சாஹ்னி யார்? இணையம் வாயிலாகத்து துப்புத் துலக்கினேன். அது இன்னுமொரு ஆச்சரியத்தை அளித்தது. கல்பனா சாஹ்னி ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மாஸ்கோவில் வசித்து ரஷ்ய மொழியைக் கற்றுப் பட்டம் பெற்றவர். ரஷ்ய மொழியிலிருந்து குறிப்பிடத் தகுந்த மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். சிங்கிஸ் ஐத்மாத்தவுடனும் நேர்காணல் நடத்தியிருக்கிறார். ரஷ்ய மொழியில் வெளிவந்திருக்கும் பேட்டியை கல்பனா சாஹ்னியே எடுத்திருக்க வேண்டும். இதை விடவும் ஆச்சரியமாகத் தென்பட்டது அவரது பின்னணி. இந்திய சினிமாவின் நடிப்பாளுமைகளில் ஒருவரான பால்ராஜ் சாஹ்னியின் சகோதரரின் மகள். அதாவது நடிகரும் இந்தி எழுத்தாளர்களில் மிக முக்கியமானவருமான பீஷம் சாஹ்னியின் மகள். (பீஷம் சாஹ்னியின் நாவல் 'தமஸ்' வெங்கட் சாமிநாதன் மொழி பெயர்ப்பில் தமிழில் வெளி வந்திருக்கிறது ).
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் இருபது பக்க நேர்காணல் மிகச் சுவாரசிய மானது. எழுத்தின் அக உலகைப் பகிரங்கப்படுத்துவது. முதல் பதிலிலேயே படிப்பவனை ஈர்த்து விடுகிறார் காபோ.
ஒருமுறை ஜெனீவாவுக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். பன்னிரண்டு மணி நேரப் பயணம். நண்பர்கள் சிலருக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த ' தனிமையின் நூறு ஆண்டுகள்' ( One Hundred Years of Solitude ) நாவலின் பிரதி ஒன்றைத் தவிர வாசிப்பதற்கு என்னிடம் வேறு எதுவும் இருக்கவில்லை. எனவே என்னுடைய நாவலையே நான் வாசிக்கத் தொடங்கினேன். என்னால் மூன்று நான்கு அத்தியாயங்களைத் தவிர முழுவதும் படித்து முடிக்க முடியவில்லை.
அது உங்களுக்குப் பிடித்திருந்ததா?
வெளிப்படையாகச் சொல்வதானால் இல்லை. அதை எழுதிக் கொண்டிருந்த போது உலகத்திலேயே சிறந்த புத்தகம் என்று நிச்சயம் கொண்டிருந்தேன். ஜெனீவாவுக்குப் போகும் வழியில் படித்ததும் மிகவும் வெட்கமடைந்தேன். அதை ஒழுங்காக எழுத எனக்குப் போதுமான கால அவகாசம் கிடைத்திருக்க வில்லை என்பதை உணர்ந்தேன். அதில் நான் செய்திருப்பது கேட்ட கதை களைத் திரும்பச் சொன்னதுதான்.
இலட்சக் கணக்கான வாசகர்களைப் பித்துப் பிடிக்க வைத்த நாவலைப் பற்றி அதன் ஆசிரியர் இப்படியா சொல்லுவார்? ஆனால் வேறு எப்படி சொல்லுவார், காபோ?
சனி, 7 ஜூன், 2014
எல்லா நாவல்களும் யாரோ சிலரது வரலாறுகள்தான்
புதிய புத்தகம் பேசுது இதழின் ‘ஒரு புத்தகம் - 10 கேள்விகள்’ பகுதிக்காக ’வெல்லிங்டன் ‘ நாவலை முன்வைத்துக் கேட்கப் பட்ட கேள்விகளும் அளித்த பதில்களும் இவை. நன்றி: ’புதிய புத்தகம் பேசுது’ ஜூன் 2014 இதழ், கீரனூர் ஜாகீர்ராஜா.
1. தமிழில் பெரிதும் அறியப்பட்ட
கவிஞராகிய நீங்கள் எழுதிய ‘வேழாம்பல் குறிப்புகள்' வாசித்த போது உங்கள் உரைநடையின்
செறிவையும் சிறப்பையும் உணர முடிந்தது.
இப்போது வெல்லிங்டன் நாவலில் நீலகிரி மலையின் ஒரு காலகட்ட வரலாற்றை
எழுதியிருக்கிறீர்கள். ஒரு கவிஞராக இந்த உரைநடை அனுபவத்தை எவ்வாறு உணர்கிறீர்கள்?
கவிஞனாக அறியப்படவே விரும்பியிருக்கிறேன்; விரும்புகிறேன். கவிதைச்
செயல்பாட்டின் விரிவாக்கமாகவே உரைநடையையும் பார்க்கிறேன். எழுத வந்த காலம் முதலே
கவிதையையும் உரைநடையையும் இணையாகவே கையாண்டிருக்கிறேன்.
நவீன யுகம், உரைநடையின் யுகம் என்பது என் எண்ணம். புதிய கவிதைகள் உரைநடையில்
எழுதப்படுபவைதாம் என்பதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள். உரைநடைக்குப் புறக்
கருவிகளும் தெளிவும் துலக்கமும் தேவைப்படுகின்றன.
கவிதைக்கு அகத் தகவல்களும்
நுட்பமும் பூடமும் அவசியமாக இருக்கின்றன. இந்த இரண்டு இயல்புகள்தாம் அவற்றைப் பிரித்துக் காட்டு கின்றன.
உரைநடை உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில்லை; கவிதை புறமொன்று வைத்து உள்ளே
வேறொன்றைப் பேசுகிறது. ஆனால் சாரத்தில் இரண்டும் மொழியின் இரண்டு சாத்தியங்களைச்
சொல்பவை. உரைநடையைக் கொஞ்சம் இறுக்கினால் கவிதையின் சாயலைக் கொண்டுவர முடியும்
என்று முயன்றதன் விளைவுதான் 'வேழாம்பல் குறிப்புகள்' உள்ளிட்ட எனது உரைநடை ஆக்கங்கள்.
அது ஒரு பயிற்சி. பயிற்சி முழுமையாகப் பயன் கண்டது இந்த நாவலில்தான். இதுவரையிலான
எனது உரைநடையில் , மனம் விரும்பியதைக் கை செய்து முடித்தது என்று மிகவும் உணர்ந்தது இந்த நாவலின்
ஆக்கத்தில்தான். குறுகிய தூர ஓட்ட நிபுணன் நெடுந்தூரப் பந்தயத்திலும் ஓடிய அனுபவம்.
இந்த நாவலில் ஒரு உரைநடையல்ல மூன்று உரைநடைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
சல்லிவனின் கதையையும் வெல்லிங்டன் உருவாக்கத்தையும் பற்றிச் சொல்லும் பகுதியில் நூற்றாண்டுகளுக்கு முந்தையதாகத் தெரியும்
பழைய உரைநடை. கதையின் மையப் பாத்திரமான
பாபுவின் நுழைவுக்கு முந்தைய காலகட்டத்தைச் சொல்லும் பகுதியில் ஐம்பது அறுபதுகளின் நடை. பாபுவின்
பார்வையில் விரியும் மீதிப் பகுதியில் சமகால நடை. இந்தப் பகுப்பு திட்டமிட்டுச்
செய்யப்பட்டதல்ல; படைப்பின் போக்கு முன்வைத்த கோரிக்கை அது. அதற்கு உடன்பட்டிருக்கிறேன்.
2. தனது ஆட்சியதிகாரத்தின் கீழிருந்தபோதும் திப்பு சுல்தானால்
நீலமலையின் மகிமையை உணர்ந்து கொள்ள முடியாமல் போனதன் காரணம் என்னவாக இருக்கும்?
நீங்கள்
நாவலில் குறிப்பிடுவது போல மனிதர்களை வெல்வது சுலபமாகவும் இயற்கையை வெல்வது
கடினமாகவும் இருக்குமென திப்பு நினைத்திருக்க கூடுமா?
ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்புக்கு முன்னரே நீலகிரிப் பகுதி திப்பு சுல்தானின்
ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்றும் மைசூர், கேரளம் வழியாகப் படை நடத்தி
சென்றிருக்கிறார் என்றும் வரலாற்றுத்
தகவல்கள் கூறுகின்றன. பவானி ஆற்றின் வட கரையில் கட்டப்பட்ட தேவநாய்க்கன் கோட்டை
திப்புவின் படைத்தளமாக இருந்ததாகவும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. நீலமலையை வெல்வது திப்புவின் திட்டங்களில்
இருந்ததா இல்லையா என்று வரலாறு திட்டவட்டமாகச் சொல்வதில்லை. இயற்கையை வெல்வது அவர்
நோக்கமாக இருந்திருக்குமா என்பதும் சொல்லப்படவில்லை. அதை ஊகிப்பதில் படைப்பாளனாக எனக்கு ஆர்வமுமில்லை. 'மனிதர்களை வெல்வது
சுலபமாகவும் இயற்கையை வெல்வது கடினமாகவும் இருக்குமென திப்பு நினைத்திருக்க கூடுமா?'
என்ற வாசகம் ஒரு
படைப்புக் கற்பனை மட்டுமே.
3. 2008ல் மலையாளக்
கவிஞர்களுக்கு ஊர்சுற்றிக் காண்பித்தபோது வெல்லிங்டன் நாவல் கருக்கொண்டதாக
குறிப்பிட்டிருந்தீர்கள். வாழ்ந்து பழகிய ஊரை எழுத்தில் முன்வைக்கையில் உருவாகும்
பதற்றம் கலந்த பரவசத்தை எழுதும் போது அனுபவித்திருப்பீர்கள்.
நாவல் எழுத்தில் ஈடுவேன் என்றெல்லாம் ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனால் என்றாவது
அப்படி ஒன்றைச் செய்ய நேர்ந்தால் அதன்
களம் வெல்லிங்டனாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயமாக இருந்தது. நண்பர்களை
அழைத்துச் சென்றது ஒரு தூண்டுதல் மட்டுமே. நாவலின் பின்னுரையில்
குறிப்பிட்டிருப்பதுபோல மனதில் இளம்
பருவத்திலேயே பதிந்த நிலப்படம் அந்த
ஊரினுடையது. எப்போதும் நினைவிலேயே
இருந்த ஊர் அது. மறக்கவியலாதவர்களாக இருந்தவர்களும் அந்த ஊரின் மனிதர்களே.
திரும்பத் திரும்ப யோசித்ததும் அந்த இடத்தையும் அங்கே வாழ்ந்த மனிதர்களையும்
குறித்த கதைகளையே. மனதுக்குள் சுரந்து
ததும்பிக் கொண்டிருந்த அந்த ஞாபக
ஊற்று நண்பர்களுக்கு ஊரைச் சுற்றிக் காண்பித்தபோது தன்னிச்சையாகத் திறந்து
கொண்டது. அவ்வளவே.
எல்லா எழுத்துகளும் ஏதோ ஒருவகையில் பதற்றத்தையும் பரவசத்தையும் தருகின்றன.
சரியாகச் சொன்னால் அந்தப் பதற்றத்தையும் பரவசத்தையும் மீண்டும் மீண்டும்
அனுபவிக்கவே ஒரு படைப்பாளி படைப்பாக்கத்தில் ஈடுபடுகிறான். இந்த நாவலில் இந்த
இரண்டு உணர்வுகளும் மற்ற தருணங்களை விட அதிகமாக இருந்தன. நாவலின் பரப்பும்
விரிவும் வெவ்வேறு பாத்திரங்களின் மனநிலைக்கு ஆட்பட வேண்டியிருந்ததும் அதற்குக்
காரணமாக இருக்கலாம். நினைவுகளில் மட்டுமே இருக்கும் இடத்தையும் காலத்தையும்
மனிதர்களையும் மீண்டும் உயிரும் ஒளியுமாக உருவாக்க முடிந்ததே பேரனுபவம்.
4. ஜான்சலிவன் நாவலிலிருந்து
மறைந்ததும் ஒரு வெற்றிடம் உருவானதாக உணர்ந்தேன். இது அந்த கதாபாத்திரம் உருவாக்கிய
தாக்கம். மற்ற எல்லா பாத்திரங்களைவிடவும் ஜான் சலிவன் தன் மொத்த ஆகிருதியுடன்
வெளிப்பட்டிருப்பதாகக் கருதுகிறேன்.
’வெல்லிங்டன்’ நாவலில் கிட்டத்தட்ட நானூறு
பாத்திரங்கள் வருவதாக நூலை வெளியிட்டுப் பேசிய நண்பர் பார்த்திபன் கணக்குச்
சொல்லியிருந்தார். நான் கணக்கிட்டுப் பார்க்கவில்லை. சிறிதும் பெரிதுமான எந்தப்
பாத்திரமும் அதற்குரிய ஆகிருதியுடன் உருவாகியிருப்பதாகவே தோன்றுகிறது. உண்மையில்
இதில் வரும் பாத்திரங்களில் மிகப் பருமனான இரண்டு பாத்திரங்களில்
ஒன்று சர்.ஜான் சல்லிவன். ( மற்றது பெயர் குறிப்பிடப்படாமல் இடம் பெறும் மத்திய
பாதுகாப்புத் துறை அமைச்சர் - ஜெகஜீவன்ராம் ). அதனால் மொத்த ஆகிருதியுடன்
வெளிப்பட்டிருப்பதாக உங்களுக்குத் தென்பட்டிருக்கலாம்.
உண்மையில் ஜான் சல்லிவனுக்கு நாவலில் அளிக்க விரும்பிய இடம் மிகச்
சிறியது. ஒரு பத்தி, ஒரு பக்கம், ஒரு அத்தியாயத்தில்
முடிக்கவேண்டும் என்று தீர்மானம். ஆனால் எழுத்தின் போக்கில் அவர் முதன்மையான
பாத்திரமாக பேருருவம் கொண்டு விட்டார். அதை அப்படியே ஏற்றுக் கொண்டேன். சல்லிவன்
இல்லாமல் உதகமண்டலமோ உதகமண்டலம் இல்லாமல் வெல்லிங்டனோ உருவாக வாய்ப்பில்லை. எனவே நீண்ட யோசனைக்குப்
பிறகு, அவரது
வரலாற்றுப் பங்குக்கு மதிப்பளிப்பதாக இருக்கட்டுமே என்று அந்தப் பகுதிகளை
நீக்காமல் விட்டேன். அந்தப் பகுதிகளை நாவலை எழுதத் தொடங்கிய 2008 ஆம் ஆண்டு வாக்கிலேயே முடித்திருந்தேன்.
அவற்றை வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்ற
குழப்பம் இருந்தது. 2012 ஜனவரி 14 நாளின் 'தினமணி' தலையங்கம் மறை முகமாக வைத்துக் கொள்ளலாம் என்ற தெளிவான
முடிவை எடுக்கச் செய்தது. 'தேசியத் தலைகுனிவு'
என்ற தலைப்பில்
எழுதப்பட்ட அந்தத் தலையங்கத்தில் ' இன்றைய உதகையை நிர்மாணிக்க, இருநூறு ஆண்டு களுக்கு முன்பு
கோவை மாவட்ட ஆட்சியர் சலைவன் (ஏதோ புலி, சிங்கங் களை வேட்டையாடியதைப்போல) எத்தனை பழங்குடி
மக்களைக் கொன்றார் என்ற விவரங்கள் பதிவுகளாக உள்ளன' என்ற வரிகள் இருந்தன.
நாவலை எழுதுவதற்காக நான் நடத்திய ஆய்வில் அப்படியான எந்தப் பதிவையும்
பார்க்கவில்லை. மாறாக சல்லிவன் 'உள்ளூர் அடிமைக'ளுக்கு ஆதரவாக இருந்தார் என்றுதான் ஆதாரங்களுடன்
நிரூபிக்கப்பட்டிருந்தது. தினமணி தலையங்க வாசகங்கள் மேம்போக்கானவை என்று அறிய
முடிந்தது.
சல்லிவன் ஆங்கிலேய அரசின் அதிகாரத்தைச் செயல்படுத்த அனுப்பப்பட்டவர்தான்.
ஆங்கில ஆட்சியின் சுரண்டல்களுக்குத் துணை நின்றவர்தான். ஆனால் அதையும் மீறி ஒரு
புரோட்டஸ்டெண்ட் கிறித்துவ எதிர்ப்புணர்வும் தோட்டக் கலையில் ஆர்வமும்
கொண்டிருந்தவர். சுதேசிப் பிரஜைகளின் மீது கரிசனம் கொண்டிருந்தவர். அவர்களுக்காகத்
தனது வரையறைக்குள் நின்று வாதாடியவர் என்ற தகவல்கள் எல்லாம் இன்றும் வாசிக்கக்
கிடைப்பவை. அதை ஆராய்ந்து வாசிக்கும் எவருக்கும் தினமணி தலையங்க வாசகங்கள் அபத்தமாகப்படும். உண்மைக்கு மாறானவை என்று விளங்கும்.
வெள்ளையர் என்றாலே கொடியவர்கள் என்று கற்பிதம் செய்யும் பாமர தேசபக்தி புலப்படும்.
எனவே ஜான் சல்லிவனைப் பற்றிய சரியான சித்திரம் என்று ஆய்வுகளின்
வலுவில் கண்ட ஒன்றை அந்த விமர்சனத் துக்கு
எதிராக முன்னிருத்த ஆசைப்பட்டிருக்கலாம். நாவலாக்கத்தின் போதோ அதற்குப் பிந்தைய
தருணங்களிலோ இந்த எண்ணம் உருவாகவில்லை. உங்கள் கேள்வியைத் தொடர்ந்து யோசிக்கும்போது
இந்தக் காரணமும் ஆழ்மனதில் இருந்திருக்கலாம் என்று படுகிறது. படைப்பாளனாக எனது
சாய்வு ‘அஜண்டா நாட்டுப்பற்றின் மீது அல்ல; உண்மையின் மீது.
5. ஹெத்தே மனையின் பரம்பரைப்
பூசாரி மாதேகவுடர் சொல்வதாக விரியும் கதை நீங்கள் குறிப்பிட்ட ஸ்ரீ ஹெத்தயம்மாள்
சரித்திரம் நூலின் தாக்கத்தில் உருவானதா?
ஹெத்தெயம்மன் ஆலயம் - ஜகதளா
முற்றிலும் அந்த நூலின் தாக்கத்தில் உருவானதல்ல. அதையும் சார்ந்து கற்பனை
கலந்து உருவாக்கப்பட்டது. சிறு வயதில் படக இனத்தைச் சேர்ந்தவர் சொல்லிக் கேட்ட பல
கதைகளில் ஒன்றையே பயன் படுத்தியிருக்கிறேன்.
ஹெத்தே என்ற பெண் தெய்வத்தை மையமாக வைத்து படகர்களுக்கு மத்தியிலேயே
ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகள் நிலவுகின்றன. படகர்களைப் பற்றி ஆய்வு நடத்திய
மானுடவியல் ஆய்வாளர் பால் ஹாக்கிங்க்ஸ், குறைந்த பட்சம் பதினோரு படக கிராமங்களில் ஹெத்தெ
வழிபாடு நடைபெறுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பதினோரு கிராமங்களிலும்
பதினோரு வித்தியாசமான ஹெத்தெ கதைகள் புழக்கத்திலிருந்தன என்றும் பதிவு செய்திருக்கிறார்.
பதினொன்றும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கதைகள். அவை அனைத்திலும் பொதுவாக உள்ள மையம்
ஒரு மானுடப் பெண், கடவுள் நிலைக்கு உயர்த்தப்படுகிறாள் என்பதே. ஒரு கதையில் கணவனின் சாவில்
பரிதவித்துப்போன பெண் அவனுடன் உடன் கட்டை ஏறுகிறாள். இன்னொரு கதையில் வய்ல் வெளி
தீப்பிடித்து எரியும் போது கணவன் ஒரு செட்டிப் பெண்ணுடன் சல்லாபத்தில்
ஈடுபட்டிருப்பதைப் பார்த்து மனமுடைந்த பெண் தன்னை தீக்கிரையாக்கிக் கொள்கிறாள்.
பொருந்தாத் திருமணம் செய்து மகன் கொண்டு வந்த மருமகள் மாமிசம் உண்பவள் என்று
தெரியவந்ததும் தாய் ஹெத்தே தற்கொலை செய்து கொள்கிறாள். இன்னொரு கதையில்
பருவமடைந்தால் உடலுறவுக்கு வற்புறுத்தப்படுவோம் என்று அஞ்சிய பெண் பூப்பெய்தியதும்
உயிரை மாத்துக் கொள்கிறாள். இப்படிப் பல ஹெத்தெ கதைகள் சொல்லப்படுகின்றன. இவை
பற்றி மானுடவியல் அடிப்படையிலும் சமூகவியல் அடிப்படையிலும் வழிபாட்டு ரீதியிலும்
விளக்கங்களும் அளிக்கப் படுகின்றன. நாவலாசிரியனாக என் தேர்வு அவை சார்ந்ததல்ல. ஒரு
பழங் கதையை நினைவு படுத்துவது மட்டுமே. நான் கேட்டு மனதில் பதிந்திருந்த கதையை என்
மொழியில் சொல்லியிருப்பது மட்டுமே.
6. கதை கோயமுத்தூரில் நிகழும்போது
அப்போதைய சென்ட்ரல் ஸ்டூடியோ, நடிகர் ராம்சந்தர், நடுவகிட்டுக்கார தட்சிணாமூர்த்தி,
ஐயரின்
ரப்பர் கம்பெனி, வேலாண்டிபாளையம் எல்லாம் இடம் பெறுகின்றன. பெருமளவு கோவை
நகரப் பரிச்சயமும் உள்ள நீங்கள் எதிர்காலத்தில் கோவையைக் களமாகக் கொண்டும் ஒரு
நாவல் எழுதுவீர்களா?
அப்படியான திட்டங்கள் எதுவும் தற்போது இல்லை. வெல்லிங்டன் நாவலில்
சித்தரிக்கப்படும் காலத்துக்கு ஏதுவாகவே கோவை நகரத்தின் இடங்களும்
குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அது தேவையானதாகவும் நாவலுக்கு உண்மையின் சாயலைக்
கொடுப்பதாகவும் அமைந்தது. கோவை நகரத்துடன் எனக்குப் பரிச்சயம் இருப்பது உண்மை.
அந்தப் பரிச்சயத்தைப் பின்புலமாகக் கொள்ளக் கூடிய கதை எதுவும் இப்போது மனதில்
இல்லை. உங்கள் கேள்வி அப்படி ஏதாவது கதையை மனதின் களஞ்சியத்திலிருந்து தேடிக்
கண்டு பிடிக்க முடியுமா என்ற குறுகுறுப்பைக் கொடுக்கிறது. பார்க்கலாம். இந்தக்
குறுகுறுப்பைக் கிளறி விட்டதற்காக நன்றி.
7. பொதுவாக இதுபோன்ற ஊர்வரலாற்றை
நாவலாக எழுதுகிறவர்கள் ஊரின் வரைபடத்தையும், ஜான்சலிவன் போன்றோரின்
நிழற்படங்களையும் நாவலில் இணைத்திருப்பார்கள். நீங்கள் அந்த சம்பிரதாயத்தை தவிர்த்திருக்கிறீர்கள்.
அதை சம்பிரதாயம் என்று நீங்களே சொல்கிறீர்களே, அதனால்தான் தவிர்த்திருக்கிறேன்.
எழுத்தில் சம்பிரதாயங்களுக்கு இடமளிப்பதில் எனக்கு விருப்பமில்லை. அது தவிர இது வரலாற்று ஆய்வேடு அல்ல; ஆய்வுத் தகவல்களுக்கு ஆதாரமாக
வரைபடத்தையோ உருவப் படத்தையோ கொடுக்க. இது ஒரு புனைவு. உண்மையின் மீது
உருவாக்கப்பட்ட புனைவு. இங்கே தகவல்களின் துல்லியத்துக்கு அல்ல; அவை தரக்கூடிய உணர்வு களுக்கே
முதன்மை. வெல்லிங்டனின் வரைபடம் என்று நான் கொடுக்கும் வரைபடத்தை மீறிய ஒன்றையே, சல்லிவனின் புகைப்படம்
என்று நான் காட்டும் படத்தை மீறிய ஒன்றையே வாசிப்பு வேளையில் வாசகன் தனது
கற்பனையில் உருவாக்கிக் கொள்கிறான். நான் கொடுக்கும் படங்கள் அவனுடைய கற்பனையைக்
கலைக்கும் என்று தோன்றியது. அதுமட்டுமல்ல, நான் கொடுக்கும் சித்திரங்களே கூடக் கற்பனையை
முழுமையாக்கத்தானே? அதைவிடவும் அவனையே முழுமையாகக் கற்பனை செய்து கொள்ள விடுவதே நல்லது என்று
பட்டது.
8. நாவலுக்குள் நீங்கள்
பிரவேசிக்கையில் அது தன்வரலாறாக மாறிவிடுகிறது. பிறகு கடைசிவரை சுயசரிதைத்
தன்மையுடனேயே நகர்ந்து முடிகிறது. சலிவனை அல்லது படகர் இன மக்களின் தொன்மக் கதைகளை
அல்லது இரண்டையுமே ஆங்காங்கே இணைத்திருப்பின் சுயசரிதைத் தன்மை மிகுந்து
இழையோடுவதைத் தவிர்த்து இருக்கலாம் என்று தோன்றுகிறது...
உங்களுக்கு என்னைப் பற்றிய ஏதோ தகவல்கள் தெரிந்து இருக்கின்றன என்று
ஊகிக்கிறேன். அதனால் பாபுவின் பிரவேசத்தை என்னுடைய நுழைவாகவும் நாவல் தன்
வரலாறாகவும் உங்களுக்குத் தோன்றியிருக் கலாம். என்னைப் பற்றிய எந்த விவரமும்
தெரியாத ஒரு வாசகனுக்கு இது நாவலாக மட்டுமே தென்படும் என்று நம்புகிறேன். சல்லிவன்
பற்றிய வரலாறு அந்த இடத்தின் உருவாக்கத்தையும் படகர் இனத் தொன்மங்கள் அந்த
இடத்தில் வாழ்ந்தவர்களின் அல்லது வாழ்பவர்களின் இருப்பைச் சொல்லவுமே எடுத்தாளப்
பட்டவை. இது தன் வரலாற்று நாவல் அல்ல என்று
அடுத்த கேள்வியில் நீங்களே சான்றளிக்கிறீர்கள்.
இந்த நாவலில் சுய சரிதைத்தன்மை இழையோடக் காரணம் அதன் வடிவம். யாரும் அதிகம்
கவனிக்காத ஒரு ஊரைப் பற்றியும் அங்கிருந்த மனிதர் களைப் பற்றியும் சொல்லவே
விரும்பினேன். அதைச் சொல்வது ஒரு சிறுவனின் பார்வையில். சிறுவனின் ஆறு முதல்
பதினேழு வயது வரையிலான வாழ்க்கையிலிருந்து கதைக்கான சம்பவங்களைத்
தொகுத்திருக்கிறேன். சிறுவனின் மனப் பக்குவத்தை மீறிய எதையும் சொல்லி விட
முடியாது. அவனுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிப் பேச முடியாது. அவனுடைய அறிவை
மீறிய வர்ணனைகளையோ சித்திரிப்பு களையோ கையாள முடியாது. எனவேதான் அந்தப் பகுதிகள்
நீண்டு தெரிகின்றன. பாபுவின் நுழைவுக்குப் பிறகு கதையை அவனுடைய அனுபவ எல்லைக்கு
மீறியதாக எழுத விரும்பவில்லை. ஆசிரியர் கூற்றாகவும் கதையை முன் நடத்திச் செல்ல
விரும்பவில்லை. ஒரு ஊர் எவ்வாறு உருவாகிறது என்று சொல்லும் பகுதியிலும் - சல்லிவன்
வரலாறு, அந்த
ஊருக்கு மனிதர்கள் சென்று சேர்வதைப் பேசும் பகுதியிலும் - வெல்லிங்டனுக்குக்
கண்ணன் சென்று குடியேறுவது, ஆசிரியர் கூற்றாகச் சொல்லப்படும் நாவல் பாபுவின்
வருகைக்குப் பின்பு அவனுடைய கோணத்தில் மட்டுமே முன் நகர்கிறது. இது இயல்பாக
நிகழ்ந்தது. வலிந்து அதை மாற்ற விரும்பவில்லை. அலங்காரமாகச் சொன்னால் எல்லா
நாவல்களும் யாரோ சிலரது வரலாறுகள் தானே?
9. 'காலம் பின்நகர்த்திய வாழ்வையும்,
மனிதர்களையும்
நடைமுறையில் திரும்பப் பெறமுடியாது. ஆனால் எழுத்தின் மூலம் முடியும்' என்பதை
நிரூபித்திருக்கிறீர்கள். 300பக்கங்கள் கொண்ட நாவலை; ஊர்வரலாறு, தன்வரலாறு, ஒரு குறிப்பிட்ட இன
மக்களின் வாழ்வியல் பண்பாடு, கலாச்சாரம், தொன்மம் யாவும் பிணைந்த ஒரு
பிரதியாக மாற்றியிருக்கிறீர்கள். உங்கள் அளவில் இது திருப்தி அளித்திருக்கிறதா?
இல்லை. நான் எழுத நினைத்த நாவல் இது அல்ல. அந்த வகையில் இந்த நாவல் திருப்தி
அளிக்கவில்லை. ஆனால் நான் எழுத நினைத்த நாவலின் சகல கூறுகளும் இந்த நாவலில் எழுதப்பட்டு விட்டன . அந்த வகையில் ஓரளவுக்கு மனநிறைவைத்
தந்திருக்கிறது. நான் திட்டமிட்ட நாவலில் சல்லிவன் வரலாறு வெறும் குறிப்பு -
ரெஃப்ரன்ஸ் - மட்டுமே.படகர் தொன்மங்கள் வெறும் கதை மட்டுமே. ஆனால் இப்போதைய
நாவலில் இரண்டும் கதையின் உள்ளோட்டங்களாகவே மாறியிருக்கின்றன. பாபுவும் அவன்
நண்பர்களும் புழங்கும் உலகத்தை சல்லிவன் உருவாக்கிய ஊரின் உருவாக்கக் கதையுடன்
ஒப்பிட்டும் சக்குவின் கதையை ஹெத்தெ
கதையின் மறு படைப்பாகவும் பார்க்க முடியுமானால் நாவல் இன்னொரு பரிமாணத்தில்
புலப்படலாம். சல்லிவனும் ஒரு புதிய உலகைக்
கண்டு பிடிக்கிறார். பாபுவுக்கும் அவன் பார்க்கும் இடங்களிலிருந்து ஒரு புதிய
உலகம் எழுகிறது. சக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் மைதானத்து மாரியம்மனுடன்
ஒப்பிடப் படுகிறாள். ஒரு வாசகனாக இப்போது வாசிக்கும் போது இந்த இணைப்புகள்
தென்படுகின்றன. எழுத்தில் இது தற்செயலாக நிகழ்ந்தது. அதைத்தான் 'இது என்னால் எழுதப்பட்டது
என்பது மிகை; என்னால் எழுதப்பட்டது என்பதே சரி' என்று பின்னுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். ஒரு கதை
தன்னை எழுதிக் கொள்ள என்னைத் தேர்ந்தெடுத்தது என்பதும் திருப்தி அளிப்பதுதான்.
10. சுற்றுலாத் தலமாக மட்டுமே
மாறிவிட்ட இன்றைய நீலகிரியின் வெறுமை சூழ்ந்த நிலையை உங்கள் வார்த்தைகளில் ஒரு
குறுங்கவிதையாகச் சொல்லுங்கள்...
என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பில் 'உதக மண்டலம்' என்ற தலைப்பில் ஒரு கவிதை உள்ளது. அந்தக் கவிதையின்
விரிவாக்கமே இந்த நாவல் என்றும் சொல்லலாம். நாவலில்
கௌரி என்ற பெயரில் குறிப்பிடப்படும் பாத்திரத்தின் அசல் நபருக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் கவிதையின் இறுதி வரிகள் இவை:
'எளிமையானது உன் அன்பு
நடு ஆற்றில் அள்ளிய தண்ணீர்போல’.
நாவலை எழுதி முடிக்கும் தறுவாயில் மீண்டும் அந்த இடங்களை நேரில் சென்று
பார்த்தேன். பலவும் மாறியிருந்தன. சில மாறாமலே இருந்தன. அந்த மாற்றங்களுக்கும் மாற்றமின்மைகளுக்கும் நடுவில் நான் உணர்ந்தது மேற்சொன்ன
வரிகள் மாற வேண்டியவையாக இல்லை என்பதை. ஏனெனில் நீங்கள் சொல்லும் அதிகாரபூர்வமான
சுற்றுலாத்தலமல்ல நான் பார்க்கும் நீலகிரி. அது இன்றும் பசுமையானது; இன்றும் இளமையானது;
இன்றும் கற்பனையைத்
தூண்டுவது.
வியாழன், 29 மே, 2014
ரிதுபர்ணகோஷ்
ரிதுபர்ண கோஷை முதலில் சந்திததது 2005 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் சர்வதேசத் திரைப்பட விழாவில். அவருடைய அந்தர்மஹால் என்ற படம் அந்த விழாவில் திரையிடப்பட்டது. அதற்காக வந்திருந்தவரிடம் நான் பணியாற்றிய தொலைக் காட்சி சார்பாகச் சந்தித்தேன். தொழில் நிமித்தமான தாக அல்லாமல் அந்தச் சந்திப்பு ஒரு நட்பின் தொடக்கமாக இருந்தது என்பதை ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரே என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 2010 ஆம் ஆண்டு அதே திரைப்பட விழாவுக்கு அபோமன், நௌகாதோபி ஆகிய புதிய படங்களுடன் வந்திருந்தார். அப்போது நான் தொலைக் காட்சிப் பணியிலிருந்து விலகி விட்டிருந்தேன். அவரைச் சந்தித்த
முன்னாள் சக ஊழியரிடம் என்னைக் குறிப்பிட்டுச் சொல்லி விசாரித்திருக்கிறார். அதைத் தெரிந்து கொண்டு அவரை இரண்டாம் முறையாகச் சந்தித்தேன். அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் அமர்ந்து பேசினோம். முதல் அறிமுகத்துக்குப் பின்னர் அவருடன் எந்த விதமான தொடர்பும் எனக்கில்லை. இருந்தும் அவர் என்னை நினைவில் வைத்திருந்தது ஆச்சரியத்தை யும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. அந்த உணர்வுகளே அவரது எல்லாப் படங்களையும் பார்க்கும் உந்துதலை ஏற்படுத்தியது. அவரது திரைப் படங்களைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அதன் முன்னோட்டமாக இந்தக் குறிப்பு. ரிதுபர்ண கோஷின் முதல் ஆண்டு நினைவையொட்டி ஒரு நாளிதழில் வெளியிடும் நோக்கில் எழுதப் பட்டது இந்தக் குறிப்பு. தவிர்க்க முடியாத காரணத்தால் இதழில் வெளிவரவில்லை. அதை இங்கே பதிவேற்றுகிறேன் - நண்பர் ரிதுபர்ணோவுக்கு அஞ்சலியாக.
சென்ற ஆண்டு இதே மே மாதம் 30ஆம் நாள் வங்காளத் திரைப்பட இயக்குநர் ரிதுபர்ண கோஷ்
மறைந்தார். இறுதி விடை பெற்றுச் சென்றபோது
இந்த உலகுக்கு விட்டுச் சென்றது கலைநயம் மிகுந்த பங்களிப்புகளை. தானே
திரைக்கதை எழுதி இயக்கிய 21 படங்கள், நடித்த 5 படங்கள், திரைக்கதை மட்டும் எழுதிய ஒரு படம் - எனக் குறிப்பிடத் தக்க படைப்புகளை விட்டுச்
சென்றிருக்கிறார்.
வங்காளத் திரையுலகில் சத்யஜித் ராய்க்குப் பின் வந்த கலைச் சினிமாவின் பிரதிநிதிகளில் ரிதுபர்ண
கோஷும் ஒருவர். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கலைப்பட இயக்குநராகப் பரிசுகளும்
விருதுகளும் பெற்றவர். எனினும் அதற்குரிய அங்கீகாரம் அவருக்குக் குறைந்த அளவிலேயே
அளிக்கப்பட்டது. அதிகம் பேசப்படாத ஆளுமை யாகவே இருந்தார். இந்தியக் கலைச் சினிமா
இயக்குநர்கள் பற்றி மிக விரிவான ஆய்வு நூலான
'தி
எசென்ஷியல் மிஸ்டரி' யை எழுதிய ஜான் டபிள்யூ ஹூட் அந்த நூலில் சத்யஜித் ராய்க்குப் பின் வந்த
இயக்குநர் களைப் பற்றிச் சொல்லும் பகுதியில் கூட ரிதுபர்ண கோஷைக் குறிப்பிடவில்லை.
இவ்வளவுக்கும் அந்த நூல் வெளிவந்த தருணத்தில் ரிதுபர்ண கோஷ் தனது முக்கியமான எட்டு
படங்களை இயக்கிப் புகழ் பெற்றிருந்தார். அதை விடவும் முக்கியம் சத்யஜித் ராயின்
மறைவுக்குப் பின்னரும் மிருணாள் சென்னின் ஓய்வுக்குப் பின்பும் சுணங்கிப்
போயிருந்த கலைச் சினிமா வகைக்குத் தனது படங்களால் புத்துயிர் அளித்தவர் அவர்தான்.
ஆனால் தனது கலைக்கு அங்கீகாரம் பெறுவதை அவ்வளவு முக்கியமானதாக அவர் கருதவில்லை. ''என் வேலை நல்ல படங்களை
உருவாக்குவது. அது மட்டுமே என் அக்கறை'' என்று குறிப்பிட்டார்.
சத்யஜித் ராயின் படங்களுக்குப்
பின்னர் கலைப் பட ரசிகர்களைத் தாண்டி பொது ரசிகர்களிடமும் பெரும் வரவேற்புப்
பெற்றவை ரிதுபர்ண கோஷின் படங்களே. அவரது படங்களைச் சத்யஜித் ராயின் அழகியலின்
தொடர்ச்சி யாகவே காணலாம். தனது கலை வாழ்க்கையையும் சத்யஜித் ராயின் மானசீக
வாரிசாகவே அமைத்துக் கொண்டவர் ரிதுபர்ண கோஷ். ராயைப் போலவே கோஷும் விளம்பர
நிறுவனமொன்றில் ஓவியராக வாழ்க்கை யைத் தொடங்கியவர். இருபத்தியோராவது வயதில் தனது
முதல் படமான 'ஹிரேர் அங்கதி' ( வைர மோதிரம் 1992
) யை இயக்கினார்.
பிரபல வங்காளி எழுத்தாளர் சீர்ஷேந்து முகோபாத்தியாயாவின் நாவலை அடிப்படையாகக்
கொண்ட படம். குரு சத்யஜித் ராயை
மானசீகமாகப் பின் தொடரும் செயலின் முதல் கட்டம் இது. ராயின் முதல் படமான பதேர்
பாஞ்சாலியும் நாவலின் திரையாக்கம் தான்.
இருவரையும் ஒப்பிட்டுப் பேச உதவும் இன்னொரு அம்சம் ரவீந்திர நாத தாகூர்
மீது இருவரும் கொண்டிருந்த பற்று. இருவரும் தாகூரின் தலா மூன்று கதைகளுக்குத் திரை
வடிவம் கொடுத்திருக்கிறார்கள்.இருவரும் தாகூரின் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்ட
ஆவணப்படங்களை இயக்கியிருக்கிறார்கள். படத்தின் கதை யமைப்பு, பாத்திரச் சித்தரிப்பு, காமிராக் கோணங்கள். இசை
ஆகிய அம்சங்களில் ராயின் வலுவான செல்வாக்கை ரிதுபர்ண கோஷ் படங்களில் பார்க்க
முடியும். ஒப்பீட்டு நோக்கில் ராய் விட்ட இடத்திலிருந்து கோஷ் தனது கலைப் பட முயற்சிகளைத் தொடர்ந்தார் என்றோ ராயின் மேதைமையை நெருங்க
முயன்றார் என்றோ நவீனப் படுத்தினார் என்றோ சொல்லலாம். ஆனால் அதையும் கடந்த
தனித்துவம் அவரது படைப்புகளில்
நிலவியது.
ரிதுபர்ண கோஷின் முதல் படம் குழந்தைகளுக்கான படமாக எடுக்கப் பட்டது. '' ஆனால் இந்தியக்
குழந்தைகளுக்கு அந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை'' என்று அவரே ஒப்புக்
கொள்ளவும் செய்தார். ரிதுபர்ண கோஷின் இரண்டாவது படம் 'உனிசே ஏப்ரல் '( ஏப்ரல் 19) . 1994 இல் வெளிவந்த இந்தப்
படம் அந்த ஆண்டுக்கான தேசிய அளவில் சிறந்த படத்துக்கான தங்கத் தாமரை விருதையும்
சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றது. கலைப்பட உலகில் ரிதுபர்ண கோஷின் வருகையை
உறுதி செய்தது.அன்று முதல் அவரது இறப்புக்குப் பின்னர் சென்ற ஆண்டு வெளியான 'சித்ராங்கதா' வரையிலான படங்கள் அவரது
இடத்தை நிர்ணயித்தன.
மனித உறவுச் சிக்கல்களே ரிதுபர்ண கோஷின் படங்களின் ஆதார இழை 'உனிசே ஏப்ரல்' நாட்டியமணியாகப் புகழ் பெற்ற தாய் சரோஜினிக்கும் மகள்
அதிதிக்கும் இடையிலான உறவை ஆராய்கிறது.
தனது கலை ஈடுபாடு காரணமாகத் தாய் தன்னைப் புறக்கணித்ததாக மகள் நினைக்கிறாள்.
சரோஜினிக்குக் கிடைக்கும் புகழ் கணவன் மனீஷை தொந்தரவுக்குள் ளாக்குகிறது. அதன்
காரணமாக நேரும் முரண்பாட்டில் இருவரும் விலகுகிறார்கள். மனீஷ் மகள் அதியைத் தனது
பராமரிப்பில் வளர்க்கிறான். அந்த வளர்ப்பு அவளைத் தாயிடம் இருந்து இன்னும்
அந்நியமாக்குகிறது. சரோஜினிக்கு நாட்டிய சாதனைக்கான விருது வழங்கப்படுகிறது அந்த
நாள் கணவன் மனீஷின் நினைவு நாள். அதைப் பற்றிய ஞாபகமே இல்லாதவள் என்று தாயைக்
குற்றம் சாட்டும் மகளுக்கு சரோஜினி தனது துயரங்களைச் சொல்லுகிறாள். தாயும் மகளும்
பரஸ்பரம் புரிந்து கொள்ளும் இடத்தில் படம் முடிகிறது. இருவரும் ஒரு விஷயத்தைப்
புரிந்து கொள்கிறார்கள். அது பெண்கள் என்பதனாலேயே ஆண்களால் வஞ்சிக்கப் படுகிறோம்
என்பது.
உனிசே ஏப்ரல் படத்தில் தொடங்கும் பெண்புலச் சார்புநிலைதான் ரிதுபர்ண கோஷின்
படைப்புகளின் மொத்தச் சூழல். அவர் இயக்கிய பெரும்பான்மை யான படங்களும் பெண்ணின் நிலையை மையமாகக்
கொண்டவை. பெண்ணின் தரப்பிலிருந்தே அல்லது பெண்ணின் சார்பாகவே வாழ்க்கையின்
சிக்கல்களைப் பார்ப்பவை. ஆங்கிலத்தில் அவர் இயக்கிய ' தி லாஸ்ட் லியர் ' ( 2007), கடைசிப் படமான 'சத்யான்வேஷி' இரண்டும் மட்டுமே இந்தச்
சார்பிலிருந்து கொஞ்சம் விலகியவை. எனினும் இரண்டிலும் மையப் பிரச்சனை பெண்ணை முன்னிருத்தியது தான். ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நிபுணரான ஹரிஷ்
மிஸ்ரா தனது கலை வாழ்க்கையின் உச்சநிலையில் ஏன் நடிப்பைத் துறந்தார் என்பதைச்
சொல்கிறது லாஸ்ட் லியர். ஒரு மர்மக் கொலையின் பின்னணிகளைத் துப்பறிகிறது
சத்யான்வேஷி. இரண்டிலும் மையக் காரணம் பெண்கள்.
நடுத்தர வயதைக் கடந்த மணமாகாத பெண் ஒரு திரைப்பட இயக்குநரால் எவ்வளவு
நாசூக்காக ஏமாற்றப் படுகிறாள் என்பதை பர்வாலி (
வீட்டு உரிமையாளி - 1999 ) என்ற படமும் பெரு நகரத்தில் வன்முறைக்கு ஆளாக்கப் பட்டப்
பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய கணவனும் அவன் குடும்பமும் அவளையே அந்த
அசம்பாவிதத்துக்குக் காரணமாகக் குற்றம் சாட்டுவதைப் பற்றிய கோபத்தை 'தஹன்' என்ற படமும் திருமண முதல்
நாளிலேயே கணவனை இழந்த நுண்ணறிவும் சுதந்திர வேட்கையும் கொண்ட பெண்ணின் நிலையை 'சோக்கர் பாலி' ( கண்ணில் விழுந்த துகள் - 2003 ) என்ற படமும் இணக்கமான குடும்ப வாழ்க்கை நடத்தி வரும்
தம்பதியரின் வாழ்வில் நிகழும் விபத்து, கணவனின் மறைக்கப்பட்ட காதலை மனைவிக்கு வெளிப்படுவதன்
மூலம் ஏற்படும் உறவுச் சிக்கல்களை 'தோஸார் ' ( தோழமை 2006 ) என்ற படமும்
சித்தரிக்கின்றன.
இந்திய சினிமாவில் பெண்களைச் சார்ந்து உருவாக்கப்பட்ட படங்களில் மிக அதிக
எண்ணிக்கையில் இருப்பவை ரிதுபர்ணகோஷின் படங்களாக இருக்கலாம். மிகைப்படுத்தலோ உரிமை முழக்கமோ செய்யாமல் பெண்நிலை சார்ந்தே அவை
உருவாகியிருக்கின்றன. அவரது மிகச் சிறந்த படங்களில் ஒன்றான 'அபோமன் ' ஓர் உதாரணம். கலைப்பட இயக்குநரான
அநிகேதுக்குத் தனது படத்தில் நடிக்க வந்த தன் மகனின் வயதையொத்த பெண்ணிடம் ஏற்படும்
ஈர்ப்பையும் அதன் மூலம் மனைவியுடன் நேரும் முரணையும் இந்தப் படம் சொல்லுகிறது.
அநிகேத்தின் வாழ்க்கைச் சம்பவங்களாகத் திரையில் காட்டப்படுபவை உண்மையில் சத்யஜித்
ராயின் நிஜ வாழ்க்கையுடன் ஒப்பிடக் கூடியவை. சத்யஜித் ராய்க்கும் அவரது 'சாருலதா' படத்தின் நாயகியான மாதவி முகர்ஜிக்கும் இடையிலிருந்த மென்
காதலையே ரிதுபர்ண கோஷ் திரைக் கதையில் கையாண்டிருந்தார். இது ராயை அவமதிக்கும்
செயல் என்று வங்காளிகள் மத்தியில் முணுமுணுப்பு எழுந்தது. ஆனால் படம் யாரையும்
குற்றம் சாட்டாமல் மனித மனத்தின் விசித்திரங்களையும் தடுமாற்றங்களையுமே பேசுகிறது. குறிப்பாக, பெண்களின் சார்பாக.
பெண்ணின் உலகைச் சித்தரித்த பல இயக்குநர்கள் சினிமாவில் இருக்கிறார்கள். பெண்
இயக்குநர்கள் பலரும் அதை எந்த ஆண் இயக்குநரை விடவும் மிக இயல்பாகவும் உண்மையாகவும்
செய்திருக் கிறார்கள். ஆனால் அத்தகைய சித்தரிப்புகாக, உடல்,உயிர் இரண்டையும் அர்ப்பணித்தவர்
ரிதுபர்ண கோஷ். இயற்கையாகவே பெண்ணியல்புகள் கொண்டவராகக் கருதப்பட்டவர் அவர். தானே
ஒரு பெண்ணாக வாழ்வதில் விருப்பம் கொண்டிருந்தார். 'மனித இனத்தில் உயர்வானது பெண்
இனம்தான்' என்று
நேர்காணலில் அதை அழுத்தமாகவும்
கூறியிருந்தார். இந்த விருப்ப உணர்வைத் தொடர்ந்து பேணினார். ஒரு கட்டத்தில்
பெண்மையின் சாயலில் வெளிப்படவும் செய்தார். பெண்கள் அணிவதுபோன்ற ஆடையில் பொது
அரங்குகளில் பங்கேற்றார். நண்பரும் இயக்குநருமான கௌசிக் கங்கூலியின் ' அவுர் ஏக்தி பிரேமேர்
கப்போ' ( இன்னொரு
காதல் கதை - 2011 ) படத்தில் தன்பால் விழையும் பாத்திரத்தில் – ஹோமோ செக்ஷுவல்- துணிந்து
நடித்தார். பண்பாட்டுக் காவலர்களின் கண்டனங்களைப் பொருட்படுத்தாமல் தனது
விருப்பங்களைத் தோற்றத்திலும் தனது படங்களிலும்
வெளிப் படுத்தினார். மாற்றுப் பாலினத்தவரின் உலகை அதன் சிக்கல்களுடனும்
நுட்பங்களுடனும் கவனித்தார். அதன் உச்ச கட்டம் அவரது கடைசிப் படமான ‘சித்ராங்கதா' . தாகூரின் பிரபலமான நாடகத்தின் திரையாக்கம் இந்தப்
படம். அதில் அவர் ஏற்று நடித்தது ஆணுடலில்
பெண் உணர்வு கொண்ட ருத்ரா என்ற பாத்திரத்தை. ஒரு திருநங்கையின் உடலியல், பாலியல், உளவியல் சமூகவியல் நெருக்கடிகளை
மிக எதார்த்தமாக நடித்துக் கலையாக்கினார். அதற்காக அவர் தனது மொத்த வாழ்க்கையையே
பலியிட்டார்.
’சித்ராங்கதா’ படத்தின் இறுதிக் கட்ட வேலைகள்
நடந்து கொண்டிருந்த போது கடந்த மே 20 ஆம் தேதி ரிதுபர்ண கோஷ் காலமானார். திடீர் மாரடைப்பே
மரணத்துக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.
ரிதுபர்ண கோஷ் பல நோய்களால் தாக்குண்டவராகவே இருந்தார். நீரிழிவு, கணையக் கோளாறு, இதய நோய் எல்லாம் அவரைத்
துன்புறுத்தி வந்தன. அதற்கான மருத்துவ சிகிச்சைகளையும் மேற்கொண்டிருந்தார். கூடவே
தன்னைப் பெண்பாலாக மாற்றிக் கொள்வதற்கான ஹார்மோன் சிகிச்சை களுக்கும்
உட்பட்டிருந்தார். ஒரு படத்தில் பெண் பாத்திரம் ஏற்பதற்காக மார்பக
வளர்ச்சிக்கான அறுவையையும் செய்திருந்தார். ஐம்பதைத் தொடும் வயதில் அவரை மரணம்
விரைந்து வந்து தீண்டியதற்கு அந்தச் சிகிச்சையும் ஒரு காரணம். 'எனது கலைக்காக எந்தத் தியாகத்தையும் செய்ய நான் தயார்'
என்று ஒரு
நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். அதை சாகசமாக நிரூபித்தும் காட்டினார்.
வெள்ளி, 2 மே, 2014
கடலினும் பெரிது
விரும்பியதை அடைய
ஏழுகடல் கடக்க வேண்டும்
என்றார்கள்
காலடி மணலில் பிசுபிசுத்த
முதல் கடலைத் தாண்டினேன்
பாதத்தில் புரண்டு
கொண்டிருந்தது
இரண்டாம் கடல்
கணுக்காலைக் கரண்டிய
மூன்றாம் கடலை உதறித்
தள்ளியும்
முழங்காலில் மண்டியிட்டது
நான்காம் கடல்
இடுப்பைக் வருடிய ஐந்தாம்
கடலைப்
புறக்கணித்து நடந்தேன்
கழுத்தை நெரிக்க
அலைந்தது
ஆறாம் கடல்
தலையை ஆழ மூழ்கடித்து
உட்புகுந்து ஆர்ப்பரித்த
ஏழாம் கடலைக்
கொப்பளித்துத் துப்பியதும்
'வெற்றி உனதே, இனி
விரும்பியதை அடையலாம்' என்றார்கள்.
உப்பை ருசித்தபடிக்
கேட்டேன்
'ஏழினும் பெரிய கடல்
இல்லையா?'
வியாழன், 1 மே, 2014
விக்ரமாதித்தியனும் நானும்
இது ஒரு பழைய கட்டுரை. ஏறத்தாழ ஒரு வெள்ளி விழாக்காலத்துக்கு முன்பு எழுதப்பட்டது. கவிதை பற்றி நான் எழுதிய ஆரம்பக் காலக் கட்டுரைகளில் ஒன்று. கவிஞர்
விக்ரமாதித்தியனின் மூன்றாவது தொகுதியான 'உள் வாங்கும் உலகம்' வெளியீட்டுக் கூட்டத்தில் பேசுவதற்காக எழுதப் பட்ட கட்டுரை.
சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நிகழ்ச்சி
நடைபெற்றது. சிறிய
கூட்டம். நண்பர்கள் சி.மோகன், (தமிழினி) வசந்தகுமார் ,பஷீர் தவிர வேறு யார்
வந்தார்கள் என்பதோ கூட்டத்தில் வேறு யார் பேசினார்கள் என்பதோ நினைவில்லை.
கட்டுரையின் முடிவில் தேதியைக் குறித்து வைத்திருந்தேன் - 1.2.1988. எனவே அந்த நாள் நினைவுக்கு வருகிறது.
ராபர்ட் - ஆரோக்கியம் அறக்கட்டளையின் சார்பில் வழங்கப் படும் 'சாரல் விருது' இந்த ஆண்டு
விக்ரமாதித்தியனுக்கு வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் பேச ஒப்புக் கொண்ட
பின்னர் தற் செயலாக இந்தக் கட்டுரை கைக்குக் கிடைத்தது. நோட்டுப் புத்தகத் தாளில்
பென்சிலால் எட்டுப் பக்கங்களுக்கு எழுதிய இந்தக் கட்டுரையின் கருத்துகளில்
சிலவற்றுடன் இன்று அதிக உடன்பாடு இல்லை. ஆனால் அடிப்படையான பார்வை அதிகம்
மாறிவிடவும் இல்லை.
சாரல் விருது 2014
விக்ரமாதித்யனின் குரல்
எண்பதுகளை ஒட்டி வெளியான கவிதைகளில் ஒரு மாறுதலான அம்சத்தைக் காணலாம்.
அனுபவங்களை இறுக்கமான மொழியிலும் பின்னலான அமைப்பிலும் வெளிப்படுத்தி வந்த போக்கு,
தளர்ந்து கவிதை
எளிமையான வெளிப்பாட்டு முறைக்குத் திரும்பியது. இந்த மாறுதல் எழுபதுகளின்
இறுதியில் தொடங்கி எண்பதுகளில் தொடர்ந்தது. அதன் விளைவாக அதுவரை
பொருட்படுத்தப்படாமலிருந்த சில கவிக்குரல்கள் நமது கவனத்துக்கு இலக்காயின. அந்தக்
குரல்களில் ஒன்று விக்ரமாதித் தியனுடையது. நகலெடுப்புகளின் சந்தடிக்கும் அனுபவசாரமற்ற
வார்த்தைப் பந்தயத்துக்கும் நடுவே வாழும் காலத்தின் மீதான சகிப்பின்மையால் எழுந்த
வேதனையுடன் இவரது குரல் வெளிப்பட்டது. இந்தக் குரலில் அதிக பட்சமான உண்மையுணர்வு இருந்தது.
கவி மனத்தின் ரீங்காரம் இருந்தது. ஒரு தெளிவான குரலாகத் தன்னை அடையாளம் காட்டிக்
கொள்ள இந்த இயல்புகள் தகுதிகளாக அமைந்தன இவருக்கு.
இதுவரை வெளியான மூன்று கவிதைத் தொகுதிகளில் ஒலிக்கும் குரலில் சில
பொதுத்தன்மைகள் புலப்படுகின்றன. வெளிப்பாட்டில் நேரடித்தன்மை. எளிமை. அனுபவங்கள்
நேர்ந்த அதே தளத்தில் கவிதையாக உருவாக்கப்படுதல் ஆகியவை.
எளிமையை வரித்துக் கொண்ட கவிதைகள் வாசக உணர்வில் வேர் கொள்ள தொனியை இயல்பாகக்
கொள்கின்றன. இறுக்கமான கட்டமைப்புக் கொண்ட கவிதைகள் படிமத்தையும் காட்சிப்படுத்தலையும் சார்ந்திருந்தது போல. படிமம் சார்ந்த கவிதைகள் மொழியும் அனுபவமும்
இணைந்த தர்க்க இழையிலிருந்து விலகுவதன் மூலம் புரியாமல் போகின்றன. எளிமையான கவிதைகள்
படைப்பாளனின் அனுபவத்தை இடம் பெயர்க்கும் தொனியின் தெளிவின்மை மூலம் சாதாரண வாக்கு
மூலங்களாகச் சுருங்கி விடுகின்றன. அல்லது அவற்றை ஏதோ மகத்தான ஒன்றை
அர்த்தப்படுத்துவது போலத் தொற்றமளிக்கச் செய்கின்றன. இந்த வரிகளில் அனுப்வம்
வெற்றாகத் தேங்குகிறது. விக்ரமாதித்யனின் சில வரிக் கவிதைகள் இந்த உணர்வைத்
தருகின்றன.
விக்ரமாதித்யனின் கவி மனம் எளிமையானது. நிம்மதியையும் எளிய இன்பங்க¨ளையும் விரும்புவது.
வாழ்க்கையின் நிகழ்வுகள் இந்த மன இருப்பைக் குலைப்பதால் விளையும் துக்கமே இவற்றின்
அடியோட்டாம். உண்மையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மனித வாழ்க்கை பெரும்
சிக்கல்கள் கொண்டிருக்கிறது.இந்நிலையின் சாயல் மட்டுமே விக்ரமாதித் திய னிடம்
வெளிப்படுகிறது.ஏனெனில் அடிப்படையில் இந்த மனம் லௌகீக தளத்தில் வேரூன்றியது. லௌகீக
தளத்திலேயே சிக்கல்களை எதிர் கொள்கிறது. முரண்படுகிறது. வாழ்க்கை
பல தளங்களில் இயக்கத் தையும் புரிந்து கொள்ளப்படுவதன் தேவையையும்
கொண்டிருப்பது
போலவே கவிதையும் கலையும் வெவ்வேறு தளங்களிலான செயல் பாடுகளைக்
கோருபவை. விக்ரமாதித்தியன் தனது கவிதையாக்கத்தில் இவற்றைத் தவிர்த்துக்
கொள்கிறார். தனது மனதைப் பதிவு செய்தல் என்ற உணர்வுப்பூர்வமான செயலையே கவிதைகளில்
நிறைவேற்றுகிறார்.
புற உலகுடனான இவரது உறவு சுமுகமற்றது.புற எதார்த்தங்களீன் தோற்றத்திலும்
விகரமாதித்தியனுக்குத் தன் முகமே தென்படுகிறது. புற எதார்த்தத்தை உள் வாங்கித்
தனதாக வெளியேற்றுவதன் மூலமாக அமைந்ததல்ல இது; தனது அக உணர்வுகளுக்கு, சிக்கல்களுக்குச்
சாட்சியாகவே இவர் புற உலகை அங்கீகரிக்க்கிறார்.விக்ரமாதித்தியனின் கவிப் பிரதேசத்தில் இயங்கும் நபர் அவர் மட்டுமே.
வாழ்க்கை இவரை வாழ அனுமதிக்காமலும்ம்
துக்கங்களைதத் தந்தும் வதைக்கிற சலிப்பையே இந்தப் பிரதேசத்தில் பார்க்க முடிகிறது;
கேட்க முடிகிறது.
வாசகனுடனான இவரின் பரிமாற்றக் குரல் ஒன்று இந்தச் சோர்வைச் சொல்லுகிறது அல்லது தன்
நிலை பற்றிய பரிதாபத்தைச் சொல்லுகிறது.
தன்னிரக்க உணர்வினால் பீடிக்கப்பட்டது இஇவரது கவிமனம். இந்தச் சுய நிந்தனையும்
சுயபரிதாபமும் வாழ்க்கையின் வேறுதிசைகளைக் காணவோ கவிதைப் பொருளின் வேறு வகைகளைத்
தேர்ந்து கொள்ளவோ விக்ரமாதித்தியனுக்குத் த்டையாக அமைகின்றன. இது இவருக்கு
எதிர்மறையான மகிழ்வைத் தருகிறதோ என்றும் சந்தேகப்படத் தோன்றுகிறது. சமீப காலமாக
'என்ற கவிதை
இந்தச் சந்தேகத்தை எழுப்புகிறது (பக்: 52). தனது நிலை பற்றி விளக்கும் வரிகளால்
முன் நகர்கிறது கவிதை. இந்தத் தன்னிலை விளக்கங்கள் அனைத்தும் உடன்பாட்டு ரீதியில் அடுக்கப்படுகின்றன. ஓர்
ஆசுவாசத்தை அனுபவிக்கும் விடுபட்ட தொனி இந்த அடுக்குகளின் ஊடே செல்கிறது. ஆனால் கடைசி அடுக்கு இவற்றுக்கெல்லாம்
எதிர்மறையாகத் திரும்புகிறது. இது வலியப் புகுத்தப்பட்டது. இல்லையெனில் தன்
வாழ்க்கை, அமைதியின்
கணங்களைக் கொண்டிருக்கும்போதிலும் மனித வாழ்க்கையைப் பற்றிக் கவிமனம் விசாரம்
கொண்டு வருத்திக் கொள்வதை சுட்டும் ஏதுக்கள், காரணக்கள் சுட்டப்பட்டிருக்க
வேண்டும்.
அனுபவ உலகின் விரிவின்மை காரணமாக விக்ரமாதித்தியனின் பாடு பொருட்கள்
வரையறுக்கப்பட்டு விடுகின்றன. ஒரே அனுபவம் வேறுவேறு சொற்களைப் புனைந்து கொண்டு
அணிவகுக்கிறது. இவரது கவிதை மனம் மரபின் ஆரோக்கியமான கூறுகளைக் குறித்த ஏக்கம் கொண்டவையாகத் தோன்றுகிறது. அனுவங்கள் வறட்சி காணத்
தொடங்கும்போது இந்த மரபின் சில அம்சங்களை வரவேற்று உடனிருத்திக் கொள்ள இவரால்
முடிகிறது. நவீனத் தமிழ்க் கவிதையில் இது அபூர்வமானது. ஆனால் விக்ரமாதித்தி யனிடம்
இந்த மரபுணர்வு அவரது நிகழ்கால ஸ்திதி பற்றிய விசாரமாகவே முடிந்து விடுகிறது. இவரது கவிதைகளைப் பக்தி இலக்கிய உணர்வு
நிலையும் கவிதைக் கட்டமைப்பும் பாதித்திருக்கின்றன என்றும் தோன்றுகிறது. ஓர்
அனுபவம் அந்த அனுபவத்தைச் சொல்ல எத்தனிக்கும் படிமங்கள், உருவகங்கள், குறியீடுகள் ஆகியவை
இழைந்த உணர்வுத் தளங்கள் - இவற்றைப் பக்தி மரபுக் கவிதைகளின் இயல்பாகக் கருதலாம்.
இவை தன்னியக்கத்துடன், எழுச்சியுடன் நகர்ந்து வெளிப்
படுத்தப்பட வேண்டிய அனுபவ வட்டத்தில் கலக்கின்றன.
இந்தக் கட்டமைப்பை விக்ரமாதித்தியனின் பல கவிதைகளில் காணலாம். ( பக்: 36,
40, 41, 49, 53, 54,58 ). ஆனால் இந்த அம்சங்கள் தன்னெழுச்சியுடன் முன்னேறாமல் அனுவம் சார்ந்த வரிகளை
ஊன்றி நிறுத்த மட்டுமே இவரிடம் பயன்படுகின்றன என்றும் தோன்றுகிறது. அனுபவமும் அதன்
ரீங்காரமும்'மனசுக்குள் கடல்' என்ற தனி வரியில் அடங்கியிருக்க, பிற தட்டையான வரிகள் அதைக் காபந்து செய்து கவிதையாக
உயர்த்த வியர்த்தமாகப் பாடுபடுகின்றன.
புற உலக எதார்த்தங்கள் விக்ரமாதித்தியனுக்கு முகம் பார்க்கப் பயன் படுவது போல,
மனித உறவுகளும் ஒரே
கோணத்திலேயே பார்க்கப் படுகின்றன. உறவின் தள வேறுபாடுகளை இவரது கவிதை மனம்
கவனத்தில் கொள்வ தில்லை. ஒரு கலைஞனாகத் தன்னை வரித்துக் கொள்ளும், முன்னிலைப் படுத்திக் கொள்ளும் இவர் இதே முகத்துடன் மட்டுமே
அங்கீகரிக்கப்படவும் விரும்புகிறார். இந்த அங்கீகாரம் சிதைக்கப்படும் வேளையில்
பீறிடும் ஆங்காரமும் கசப்பும் கவிதையிலும் எதிரொலிக்கின்றன. கலைஞன் என்பதால்
கைவிடப் படுவதாகக் குமுறுகிறார். ஆனால் கலைஞன் என்பதால் ஒருவனுக்கு வாழ்க்கை
விசேஷச் சலுகைக்களை வழங்குகிறதா என்ன?
இதுவரை வெளிவந்திருக்கும் விக்ரமாதித்தியனின் மூன்று தொகுதி களிலுள்ள
கவிதைகளும் அடிப்படையில் ஒரே அனுபவத் தளத்தையும் ஒரே குரலையும் கொண்டவை என்று
தோன்றுகிறது. இந்த அனுபவத்தளம் மாற்றமில்லாதது. எனினும் உண்மையானது. இந்தக் குரல்
சுருதி பேதம் கூடாதது. எனினும் பாசாங்கற்றது. ஆனால் மகத்தான உண்மைகூட திரும்பத்
திரும்பத் திணிக்கப் பட்டால் எதிர்மறை விளைவுகளையே காண நேர்வது காலத்தின்
விசித்திர விதி. மந்தர ஸ்தாயியில் மீட்டப்படும் வீணையின் சுருதிக்க்கு மனதைக்
கவ்வும் ஈர்ப்பு உண்டுதான். ஆனால் வீணையில் அநேக ஸ்வர ஸ்தானங்களும் காற்றில் ஏராளமான
இசையும் இருக்கின்றனவே? விக்ரமாதித்தியனின் ஒர்றைப் பரிமாணமுள்ள குரல் அதன் சாதகமான
இயல்புகளைத் தாண்டி ஓர் ஆயாசத்தை வாசக உணர்வில் சரித்து விடுமோ என்ற கேள்வியை
அல்லது சந்தேகத்தை ' உள் வாங்கும் உலகம்' எனக்குள் உருவாக்கியிருக்கிறது.
1 பிப்ரவரி 1988.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







